பேருந்தில் நியெனக்கு ஜன்னலோரம்-2
அத்தியாயம்-2
லாவண்யா ஜன்னலோரம் அமர்ந்தபடி, வழியெங்கும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளுடைய கண்களில் அத்தனை ஆர்வம்.
"சென்னையையே புதுசா பார்க்கற மாதிரி பார்க்கற" என்று கேலி செய்து சிரித்தாள் தேவி.
லாவண்யாவோ ஜன்னலுக்கு வெளியே பார்வையைப் பதித்தபடியே, புன்னகைத்தாள்.
‘'இல்லையா பின்ன… கிராமத்துல இருந்து இங்க வந்து படிக்க வர்றேன். சென்னைக்கு இதுக்கு முன்னாடி டூருக்காக வந்திருக்கேன். எங்க சித்தப்பா வீட்டுக்கு வந்திருக்கேன். அதெல்லாம் அப்பா, அம்மா கூட.
இப்போ… நான் படிக்க தனியா அப்பா, அம்மாவை விட்டுட்டு சித்தப்பா வீட்டுல தங்கி காலேஜ்ல சேர்ந்து, இதோ… முதல் நாளே கிளம்பிட்டேன். இனிமேல் ஒவ்வொரு இடமும் தெரிஞ்சுக்கணும். அதனால தான் இவ்வளவு ஆர்வம்." என்று கூறினாள்.
"அதோட… ஊர்ல கூட பஸ்ல ஏறினா ஜன்னல் சீட்தான் என்னோட ஃபேவரைட்.
அப்படியே காத்து சில்லுனு வீசும். கூடவே இளையராஜா பாட்டு வேற போடுவாங்க பாரு. அதைக் கேட்டுக்கிட்டே வந்தா அலுப்பே தெரியாது." என்றாள்.
"ம்ம்… சரிதான். இங்க பாட்டெல்லாம் டிரைவர் போட மாட்டார்டி. அதெல்லாம் ஊரோட தான் பாட்டும் கூத்தும்." என்று தேவி கூற, "ம்கூம்" என்று மீண்டும் ஜன்னலுக்கு வெளியே திரும்பினாள் லாவண்யா.
ஒவ்வொரு நிறுத்தம் வரும்போதும், அது எந்த ஏரியா, அந்த ஸ்டாப்பின் பெயர் என்ன என்பதையெல்லாம் கவனமாகப் பார்த்துக் கொண்டாள். அதிலும் வழிநெடுக இருந்த கடைகளின் பெயர்களை மனதிற்குள் வாசித்துக் கொண்டே வந்தாள்.
"ஏய் தேவி" என்று தேவியை சுரண்டினாள்.
"என்னடி?" என்று கேட்க, "பெரிய பில்டிங்கா ஏதாவது லேண்ட்மார்க்கா வச்சுக்கலாம்னு பார்த்தா… எல்லாமே ஒன்னுக்கு ஒன்னு பெரிய பில்டிங்கா வருது! எதை தான் லேண்ட் மார்க்கா வச்சிக்கறது?" என்று லாவண்யா கூற தேவி சிரித்தாள்.
"இப்பதானே வர்ற. இனி தினமும் மூணு வருஷம் இந்த பஸ்லதானே போவோம், வருவோம். எல்லாம் பழகிடும். இங்க எல்லாமே பெரிய பில்டிங் இதெல்லாம் சின்னது தான் நீயே போக போக தெரிந்துப்ப பாரு" என்று கூற, அப்போது மீண்டும் சாரதியின் விசில் சத்தம் காதை கிழித்து கேட்டது.
லாவண்யாவோ ''எது பழகுதோ இல்லையோ… இந்த விசில் சத்தம் முதல்ல பழகிக்கணும். ஸப்பா… சும்மா காதுல கொய்ங்னு கேட்குது!" என்று சாரதியைப் பார்த்தாள்.
சுருட்டை முடி நெற்றியில் விழுந்திருக்க, மிகக் கவனமாக டிக்கெட் கிழித்து கொடுத்துக் கொண்டிருந்தான். பணப்பையையும் டிக்கெட் பையையும் தன் இடத்தில் ஒழுங்காக வைத்தபடியே, புதிதாக ஏறும் பயணிகளிடம் கேட்டுக் கொண்டிருந்தான்.
அவனை ஓரிரு நொடிகள் கவனித்த லாவண்யா, மீண்டும் ஜன்னலுக்கு வெளியே பார்வையைத் திருப்பிக் கொண்டாள்.
சில நிறுத்தங்கள் கடந்ததும் "கலெக்டர் நகர்… கலெக்டர் நகர் இறங்குங்க!" என்ற சாரதியின் குரல் பேருந்துக்குள் ஒலித்தது.
லாவண்யா சட்டென்று எழுந்தாள். தேவி அவளைப் பார்த்து புருவத்தைச் சுருக்கினாள். "எதுக்கு எந்திரிச்ச?" என்றாள்.
"நாம இறங்க வேண்டிய நகர் வந்துடுச்சு. உனக்கு கேட்கலை.. கலெக்டர் நகர் எல்லாம் இறங்க சொன்னாரே.?!." என்றாள் லாவண்யா.
"அய்யோ லாவண்யா!" தேவி அவசரமாக அவளுடைய கையைப் பிடித்து இழுத்து உட்கார கூறினாள்.
"நாம அண்ணா நகர்ல இறங்கணும். இது கலெக்டர் நகர். ‘நகர், நகர்’ன்னு முடியறதால குழம்பாத" என்று விவரிக்க, லாவண்யா நின்றபடியே இருக்கவும், அருகில் நின்றிருந்த பயணி ஒருவர் சலிப்புடன்,
"ஏம்மா… உட்காரப் போறியா, இறங்கப் போறியா? இப்படி நின்னுட்டு இருக்க?" என்று கேட்டார்.
அதே நேரத்தில் சாரதியும் அவளைப் பார்த்தான்.
"என்னம்மா… இறங்கப் போறியா?" என்று பரிவாய் கேட்டான்.
"இ… இல்லை." என்று பட்டென்று அமர்ந்தாள் லாவண்யா.
சாரதி விசிலை வாயில் வைத்து ஊத, பேருந்து மீண்டும் நகர்ந்தது. தேவி அவளைப் பார்த்து சிரித்தாள்.
"நான் தான் கூட வந்துட்டேனே. இறங்குறப்ப சொல்லறேன்."
"ம்ம்…" என்று சின்னதாக முகத்தைச் சுளித்தாள் லாவண்யா.
பேருந்து முகப்பேரைத் தாண்டிக் கொண்டிருக்க, மீண்டும் அவளுடைய கவனம் சாலையோரக் கடைகளுக்குச் சென்றது.
"துணிகடையெல்லாம் அழகா இருக்கு… ஏன் தேவி, இங்க துணியல்லாம் விலை அதிகமா இருக்குமா?" என்று இன்னோசெட்டாக கேட்டாள்.
"ஏரியாவுக்குத் தகுந்த மாதிரி விலை இருக்கும் லாவண்யா. உனக்கு ஏதாவது வாங்கணும்னா சொல்லு… புரசைவாக்கம் கூட்டிட்டுப் போறேன். நம்ம காலேஜ் தாண்டி இன்னும் கொஞ்சம் ஸ்டாபிங் இருக்கு.." என்றதும், "ம்… சொல்லறேன், சொல்லறேன்." என்று சொல்லிவிட்டு மீண்டும் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்தாள்.
"தாத்தா… நீங்க இறங்க வேண்டிய இடம் வந்துடுச்சு."
சாரதி பேருந்தில் ஏறியிருந்த வயதானவரின் கையை மெதுவாகப் பிடித்து, படிக்கட்டில் இறங்க உதவினான்.
"நீ நல்லா இருக்கணும்பா. ரொம்ப நன்றி" என்று அந்தத் தாத்தா மனதார வாழ்த்திவிட்டு இறங்கினார்.
"நன்றி எதுக்கு தாத்தா… பார்த்து போங்க." என்று சொல்லிவிட்டு சாரதி மீண்டும் பேருந்தில் ஏறினான்.
படிக்கட்டில் இருந்து சற்று மேலே ஏறியவன், ஒரு கையால் கம்பியைப் பிடித்தபடி,
"டிக்கெட் வாங்காதவங்க வாங்கிக்கோங்க…" என்று குரல் கொடுத்தான்.
அப்போது பள்ளிச் சிறுவன் ஒருவன் முதுகில் பெரிய புத்தகப் பையுடன் நின்று கொண்டிருந்தான்.
அவனைப் பார்த்த சாரதி, "டேய்… டேய்… பேக்கை ஏன்டா இவ்வளவு வெயிட்டா வச்சிட்டு வர்ற?" என்று கேட்டான்.
"எல்லா புக்கும் கொண்டுட்டு வரலைன்னா மேம் திட்டுவாங்கண்ணா. இன்னும் ஆறு புக் வீட்டுல வச்சிட்டுத்தான் வந்திருக்கேன்." என்றான் அந்தச் சிறுவன்.
அவனுடைய புத்தகப் பையைப் பார்த்த சாரதியின் கண்களில் ஒரு நொடி ஏக்கத்தின் சாயல் தோன்றியது. கையை நீட்டி அந்தப் பையை லேசாகத் தடவியவன், "சரி… வழியில நிக்காத. உள்ள போய் நில்."என்றான்.
"அண்ணா நகர்… அண்ணா நகர்!" என்று குரல் ஒலிக்கவும், "அச்சோ! வந்துடுச்சு. நான் வேற உன்னிடம் பேசிட்டா வரவும் நடுவுல வந்து போன ஸ்டாப் எதையும் கவனிக்கலை" என்ற தேவி அவசரமாக எழுந்தாள்.
"வா வா… இறங்கு." தேவி உரைத்திட, அவளுடன் இறங்கினாள். இருவரும் படிக்கட்டில் இறங்கிக் கொண்டிருக்க, லாவண்யாவின் துப்பட்டா ஒரு பக்கம் சரிந்து கீழே விழுந்தது.
அதை கவனித்த சாரதி உடனே, "துப்பட்டாவை ஒழுங்கா போட்டுக்கமா எதுலயாவது மாட்டிக்கப் போகுது." என்றான் கரிசனையாக.
லாவண்யா உடனே துப்பட்டாவைச் சரி செய்து கொண்டு, "தேங்க்ஸ்" என்று மெதுவாகச் சொன்னாள்.
அவளுடைய கண்கள் ஒரு நொடி நன்றியுடன் சாரதியைப் பார்த்தன.
சாரதி அதற்குள் விசிலை வாயில் வைத்து சத்தமாக ஊதினான். அவன் அந்த தேங்க்ஸ் எல்லாம் செவியில் கேட்டிருக்க கூட மாட்டான்.
பேருந்து நகர்ந்தும் லாவண்யா பார்வை பேருந்து செல்லும் திசையிலேயே பதிய, தேவி லாவண்யாவின் கையைப் பிடித்து இழுத்தாள்.
"அங்கேயே என்ன பார்த்துட்டு இருக்க? வா!" என்றாள்.
"ஒண்ணுமில்லைடி" என்று சொல்லியபடி லாவண்யா தேவியைப் பின்தொடர்ந்தாள்.
தேவியும் லாவண்யாவும் ஒரே கல்லூரி. ஒரே குரூப் B.Com. தேவி ஏற்கனவே தன் அக்கா சரிகாவுடன் அந்தக் கல்லூரிக்கு பலமுறை வந்திருந்ததால், சென்னையைப் பற்றி ஓரளவு தெரிந்திருந்தது.
அவளைப் பொறுத்தவரை சென்னை ஒன்றும் புதிதில்லை. ஆனால் லாவண்யாவுக்கு அப்படியில்லை.வேலூரில் இருந்து சென்னை வந்து, அப்பாவின் ஒன்று விட்ட தம்பியான சித்தப்பா வீட்டில் தங்கிப் படிக்கப் போகிறாள்.
புதிய ஊர், புதிய வீடு, புதிய மனிதர்கள், புதிய கல்லூரி, புதிய வாழ்க்கை. எல்லாமே அவளுக்குப் புதிது.
கல்லூரியில் அப்ளிகேஷன் போடும் நேரத்தில் மட்டும் அப்பா புருஷோத்தமனுடன் வந்திருந்ததால், அப்போது கல்லூரியைச் சுற்றிப் பார்த்திருந்தாள். அதற்கு பிறகு அன்னை அலமேலு சித்தி இலக்கியாவிடம் சில மளிகைப் பொருட்கள் வாங்கி தந்து மகளை பார்த்துக்க கூறி துணிமணியெல்லாம் பெட்டியில் எடுத்து வந்து மகளை பத்திரமாக பார்த்துக்க கூறி விட வந்திருந்தார். இலக்கியாவோ "என் பொண்ணு இஷிதா மாதிரி பார்த்துப்பேன் அக்கா" என்றார் பொறுப்புடன்.
என்ன இருந்தாலும் புருஷோத்தமனின் கூடபிறந்த தம்பி சுரேஷ் இல்லை. புருஷோத்தமனுக்கே, சித்தப்பா மகன் சுரேஷ். சின்ன தாத்தா.. ஆவுடையப்பன் அண்ணனின் பேத்தி வந்து படிக்க தங்கவும், அதெல்லாம் மறுக்காமல் ஏற்றுக் கொண்டார்.
என்ன லாவண்யாவின் அக்கா மாலதி தான் வேலை செய்வதால் லீவு கிடைக்கவில்லை. அன்னை தந்தை விட்டு சென்றப்பின இன்று தான் முதல் முறையாக தனியாக அந்தக் கல்லூரிக்குள் அடியெடுத்து வைத்தாள்.
தன்னுடைய வகுப்பறையைத் தேட வேண்டுமென்ற எண்ணமே அவளுக்குள் சிறு பதற்றத்தை ஏற்படுத்தியது.
இறைவனை மனதிற்குள் வேண்டியபடி, லாவண்யா தேவி இருவரும் கல்லூரி வளாகத்துக்குள் முதல் அடியை எடுத்து வைத்தாள்.
அதே நேரத்தில் சாரதி இன்னமும் பேருந்துப் பயணத்தில்தான் இருந்தான்.
காலை ஏழு மணிக்கு டிப்போவிலிருந்து புறப்பட்ட பேருந்து, சுமார் எட்டு மணியளவில் பிராட்வே வந்து சேர்ந்தது.
பயணிகள் இறங்கியதும், சாரதி தன் டிக்கெட் பையையும் பணப்பையையும் எடுத்துக்கொண்டு, அங்கிருந்த டிப்போ அலுவலகத்திற்குச் சென்றான்.
ஒரு நாள் முழுவதும் அதே பணப்பை, டிக்கெட் பை ஆகியவற்றைத் தன்னுடன் வைத்திருக்க வேண்டிய டியூட்டி என்பதால், அவற்றை ஒப்படைக்கும் நேரம் டியூட்டி முடிந்த பிறகுதான்.
அதுவரை அவற்றைத் தன் பொறுப்பில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியவன், அலுவலகத்தில் இருந்த பாதுகாப்புப் பெட்டகத்தில் அவற்றை முறையாக வைத்துவிட்டு, பதிவு செய்தான்.
காலை டிபன்கூட சாப்பிடாமல் வந்திருந்ததால், வயிறு வேறு தன் இருப்பை நினைவுபடுத்த ஆரம்பித்தது.
"வாங்கண்ணா" என்று முத்துவிடம் சொல்லிவிட்டு, அருகிலிருந்த கையேந்திபவன் கடையை நோக்கி நடந்தான்.
"அண்ணே… இரண்டு மசாலா தோசை." என்று ஆர்டர் கொடுத்துவிட்டு, அருகில் இருந்த இடத்தில் கைகளை அலம்பிக் கொண்டான்.
அதற்குள் முத்துவும் வந்து அவனருகில் அமர்ந்தார்.
"என்ன சாரதி… வீட்ல அம்மா சாப்பாடு கொடுத்து விடலையா?" என்று கேட்டார்.
"அம்மா இன்னைக்கு ஆப்டர்நூன் ஷிப்ட்னு நினைச்சுக்கிட்டாங்க. அதனால சாப்பாடு செய்யலை. நாளையில இருந்து சமைச்சுக் கொடுத்துடுவாங்க அண்ணா" என்றவன், எதிரே இருந்த முத்துவைப் பார்த்து,
"நீங்க ஏன் சாப்பாடு கட்டிட்டு வரல அண்ணா?" என்று கேட்டான்.
முத்துவின் முகத்தில் சின்னதாகச் சோர்வு.
"என் பொண்டாட்டிக்கு உடம்பு சரியில்லப்பா. காய்ச்சல்னு படுத்தே இருந்தா. அப்பறம் சமைக்கலைன்னு எப்படி கோபப்பட முடியும்? அதனால நானும் வீட்டுல இருந்து கிளம்பிட்டேன். அங்க கூடயிருந்து அவளுக்கு இரண்டு இட்லி வாங்கித் தரக்கூட நேரமில்லை. ஹாஸ்பிடலுக்கும் அழைச்சிட்டு போக முடியலை. அப்படியிருக்க, சாப்பாடு கட்டி தரலைனு சண்டையா போட முடியுமா. இருபது ரூபாய்க்கு டிபன் வாங்கிக்க வேண்டியது தான்" என்றார்.
அதற்குள் அவனுக்கு முன் வந்த மசாலா தோசையைப் பார்த்தவன், பசியோடு சாப்பிடத் தொடங்கினான். சில நிமிடங்களில் இருவரும் சாப்பிட்டு முடித்தனர்.
கைகளை அலம்பிவிட்டு எழுந்த சாரதி, மீண்டும் தன் பேருந்தை நோக்கி நடந்தான்.
அடுத்த பயணம் அவனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.
காலை ஏழு மணிக்கு தொடங்கிய அந்தப் பயணம் இன்னும் மாலை வரை தொடருமே.
அவசர அவசரமாய் டிக்கெட் பையையும், பணப்பையையும் எடுத்துக் கொண்டு, முத்து அண்ணனோடு புறப்பட்டான்.
பிராட்வேயில் பயணிகள் சிலர் சீட்டில் அமர்ந்திருக்க, டிக்கெட் கொடுத்தபடி இருந்தான். பஸ்ஸில் தேங்காய் மாங்காய் சுண்டல், அண்ணாச்சி பழம், கொய்யா பழம், வேர்கடலை மிட்டாய், அவிச்ச வேர்கடலை என்று மாற்றி மாற்றி அவன் டிக்கெட் கிழித்து தரும் முன் விற்றுவிட்டு சென்றார்கள்.
பூவிற்கும் பெண் கூட, கூடையுடன் ஒரு சுற்றி வந்துவிட்டு இறங்க, "ரைட் ரைட்" என்று சாரதி கூற முத்துவோ வண்டி இஞ்சினை ஆன்லயே வைத்தவர் கீர் போட்டு வண்டியை இயக்கினார்.
-பயணிப்போம்.
பிரவீணா தங்கராஜ்
கூடவே வாசிக்கும் அன்பர்களுக்கு நன்றி. 💜
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 2)
நினைச்சேன், லாவண்யா கிராமத்துல இருந்து வந்த பைங்கிளின்னு. போகப்போக
சென்னை பழகிடும்ன்னு நினைக்கிறேன். சாரதி கல்லூரி படிப்பு படிக்கலையோ...? அப்படின்னா இந்த கண்டக்டர் ஜாப் கூட அப்பா பணியிலிருந்தப் போதே இறந்ததால கிடைத்த வேலையோ..?
😐😐😐
CRVS (or) CRVS 2797
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-14
4 hours ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-13
1 day ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-12
2 days ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-11
2 days ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-10
2 days ago
- 25 Forums
- 330 Topics
- 1,588 Posts
- 2 Online
- 420 Members
