வெளிச்சம் - 25
அத்தியாயம் 25
இன்னும் இரண்டு நாட்களில் சிவன்யா துபாய் செல்ல இருக்கிறாள். சென்னைக்கு வந்த உடனேயே மகளை அவளது கணவனுடன் அனுப்பும் வேலையை தொடங்கி விட்டார் சிவநேசன்.
தேவ்வும் அங்கிருந்து தேவையானவற்றை அனுப்பி இருக்க, ஒரு மாதத்தில் சிவன்யாவிற்கு பாஸ்போர்ட்டும் விசாவும் கிடைத்துவிட்டது.
உடனே துபாய் செல்வதற்கான டிக்கெட் போட்டுவிட்டு, அவளது வீட்டிற்கும் சொல்லிவிட்டார் சிவநேசன்.
அதன்படி விஸ்வநாதன் பார்வதி மற்றும் நளினியை அழைத்துக் கொண்டு ஒரு வாரத்திற்கு முன்பு வந்து விட்டார். நளினியின் கணவன் சிவன்யா ஊருக்கு செல்லும் நாள் வந்து ஒருநாள் இருந்துவிட்டு அனைவரையும் திரும்ப அவர்கள் ஊருக்கு அழைத்துச் செல்வதாக சொல்லி இருந்தான்.
சென்னை வந்ததிலிருந்து நளினியை கையில் பிடிக்க முடியவில்லை. அண்ணி அண்ணி என்று சிவன்யாவின் பின்னாடியே அலைந்துகொண்டு இருந்தாள்.
"ஏன் நளினி என் பின்னாடியே நடந்து கொண்டு இருக்கிறாய்? ஓரிடத்தில் ஓய்வாக உட்காரலாமே!" என்ற சிவன்யாவும் ஒரு கட்டத்தில் சலித்துக் கொண்டாள்.
"போங்க அண்ணி, நாளைக்கு நீங்க ஊருக்கு போயிடுவீங்க, அதன் பிறகு எப்பொழுது பார்ப்பது" என்றாள் சோகமாக.
"நாளை காலை உன் கணவர் வந்து விடுவார். அதன் பிறகு நீ என்ன செய்கிறாய் என்று நானும் பார்க்கிறேன்" என்றாள் சிவன்யாவும் விளையாட்டாக.
"அவர் வந்தாலும் நான் உங்க கூட தான் இருப்பேன்" என்று அவளை அணைத்துக் கொண்டாள் நளினி.
அவளின் செயலில் சிரித்துக் கொண்ட சிவன்யா, "அதை நாளை பார்ப்போம்" என்று சொல்லிவிட்டு, "சரி, பக்கத்தில் உள்ள கோயிலுக்கு போயிட்டு வரலாமா?" என்றாள்.
உடனே சரி என்ற தலையாட்டிய நளினி தன் பெற்றோரிடம் சொல்லிவிட்டு சிவன்யாவுடன் கிளம்பினாள்.
கோயிலுக்கு வந்து சாமி கும்பிட்டு விட்டு ஓரிடத்தில் அமைதியாக அமர்ந்து நல்லபடியாக ஊருக்கு சென்று வர வேண்டும். அதற்கு உங்கள் அருள் வேண்டும் என்று வேண்டிக் கொண்டு இருந்தாள் சிவன்யா.
சிவன்யா கண் மூடி அமர்ந்திருந்ததால் நளினியுயும் அமைதியாக அமர்ந்திருக்க, ஆனால் அது அவளுக்கு மிகவும் கடினமாக இருந்தது. அங்கும் இங்கும் தலையைச் சுற்றி பார்த்துக் கொண்டு இருந்தவள், ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இல்லாமல் மெதுவாக எழுந்து, கோயிலின் தெப்பக்குளத்தின் அருகில் வந்து நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.
மீன்கள் துள்ளுவதும் வாத்துகள் நீந்துவதையும் பார்த்து நேரம் கடத்திக் கொண்டு இருக்க, சற்று நேரம் கழித்து அவள் அருகில் வந்த சிவன்யா, "ஏன் வெயிலில் நிற்கிறாய்?" என்று கேட்டு, "உனக்கு ரொம்ப போர் அடித்து விட்டதா? போகலாமா?" என்றாள்.
"அதெல்லாம் ஒன்றும் இல்லை அண்ணி. இந்த மீன் துள்ளுவதை பார்த்துக்கொண்டு இருக்கிறேன்" என்று கூற,
"வா கொஞ்ச நேரம் நிழலாக இருக்கும் அந்த படிக்கட்டில் அமரலாம்" என்று சிவன்யா கூற, இருவரும் தெப்பக்குளத்தின் படிக்கட்டில் அமர்ந்து அமைதியாக மீண்டும் வாழ்த்துக்களையும் மீன்களையும் பார்த்துக் கொண்டு இருந்தனர்.
சிறிது நேரம் கழித்து "சரி வா போகலாம் நளினி, நேரமாகிவிட்டது" என்று எழுந்தாள் சிவன்யா. நளினியும் எழ முயற்சிக்கும் பொழுது தலைசுற்ற சிவன்யாவை கெட்டியாக பிடித்துக் கொண்டாள். அவளின் இறுக்கமான பிடிப்பில் என்ன என்று பார்க்க, நளினியின் நிலை ஏதோ சரியில்லை என்று உணர்ந்து அப்படியே அமர வைத்து குடிப்பதற்கு தண்ணீர் கொடுத்து, முகத்தையும் கழுவ வைத்தாள்.
"என்ன ஆயிற்று நளினி? ஏன் சோர்வாக ஆகிவிட்டாய்? வெயிலில் இருக்க வேண்டாம் என்று சொன்னேன் கேட்டாயா?" என்று படபடப்பாக பேசி தன் புடவை முந்தானையால் அவள் முகத்தையும் துடைத்து விட்டாள்.
"என்னன்னு தெரியல அண்ணி. தலை சுற்றுவது போல் இருக்கிறது" என்று அவளின் தோளிலேயே சாய்ந்து கொண்டாள். சிறிது நேரம் அமைதிக்கு பிறகு "பரவாயில்லை என்றால் சொல், உடனே வீட்டிற்கு போகலாம்" என்று அவளை நிமிர்த்தி பார்த்தாள்.
நளினிக்கும் சற்று தெம்பாக இருக்க சரி என்ற தலையாட்டி எழுந்தாள். கோயிலை விட்டு வெளியே வரும்போது மீண்டும் சாமி கும்பிட்டு விட்டு, ஆட்டோ பிடித்த வீட்டிற்கு வந்தனர்.
வந்ததும் கோவிலில் நடந்ததை கூறினாள் சிவன்யா. உடனே பதறிய சிவகாமி "என்ன ஆயிற்று?" என்று நளினியின் கைபிடித்து அமர வைத்தபடியே கேட்டார்.
"தெரியல அத்தை" என்று அவரின் மடியில் படுத்துக்கொண்டாள் நளினி.
பார்வதிக்கு ஏதோ புரிவது போல் இருக்க, "இந்த மாதம் குளித்தாயா?" என்றார் சந்தேகமாக.
அவர் கேட்டதும் சிவகாமியின் முகமும் பிரகாசமாக நளினியை பார்த்துக் கொண்டிருக்க, 'அதான் தினமும் குளிக்கிறேனே. இந்த அம்மா கேட்கிற கேள்வியை பாரு' என்று நினைத்துக் கொண்டே தாயைப் பார்த்தாள் நளினி. அதன் பிறகு தான் தாய் என்ன கேட்கிறார் என்பதை புரிந்து கொண்டு யோசித்து இல்லை என்று மறுப்பாக தலையாட்டினாள்.
உடனே பெரியவர்கள் முகம் மலர்ந்தது. சிவகாமியோ "பக்கத்தில் இருக்கும் மருத்துவமனைக்குச் சென்று வந்து விடலாமா?" என்றார்.
"அய்யோ அத்தை, லேசான தலை சுற்றுதான். கொஞ்சம் சோர்வாக இருந்தது. அவ்வளவுதான். இதற்கு எதற்கு டாக்டர் கிட்ட போகணும்? ஏதாவது காரணம் சொல்லி மாத்திரையும் ஊசியும் தருவாங்கப்பா! எனக்கு வேண்டாம்" என்று அவர் மடியில் சட்டமாக படுத்துக் கொண்டாள்.
அவளின் செய்கையில் சிரித்த பார்வதி "விளையாடாமல் அத்தை சொல்வதை கேள். உடனே போயிட்டு வரலாம்" என்று அவளை அழைத்துக் கொண்ட அருகில் இருந்த கிளினிக்கிற்கு சென்றார்கள். அங்கிருந்த பெண் மருத்துவரிடம் அவளை பரிசோதிக்க அவர் கூறிய செய்தியில் அனைவருமே மகிழ்ந்தனர்.
சிவன்யா நளினியை அணைத்து நெற்றியில் முத்தம் கொடுத்து, "நீயே ஒரு குழந்தை போல் இன்னும் சேட்டை செய்து கொண்டு இருக்கிறாய்! இப்ப உனக்கே ஒரு குழந்தை வரப் போகிறது" என்றாள் புன்னகையாக.
சிவன்யா கூறியதை கேட்டதும் நளினிக்கு என்ன உணர்வு இது என்று சொல்ல முடியாத அளவிற்கு மகிழ்ச்சி தாண்டவம் ஆடியது. உடனே அவளுக்கு தன் கணவனை பார்க்கும் எண்ணமும் தோன்ற நளினியின் வயிற்றில் முகத்தை மறைத்து மூடிக்கொண்டாள்.
அனைவரும் மகிழ்ச்சியாக வீட்டிற்கு வந்தனர். விஸ்வநாதனிடம் பார்வதி விஷயத்தை கூற அவரும் மிகவும் மகிழ்ந்தார். சாயங்காலம் வேலை முடித்து வந்த சிவநேசனுக்கும் மேகநாதனுக்கும் செய்தி கூறப்பட்டதும். இருவரும் மகிழ்ந்தனர்.
சிவநேசன் அவளை தலையில் கை வைத்து ஆசீர்வதித்து "ரொம்ப சந்தோஷமான செய்தியை சொல்லி இருக்கிறாய்ம்மா!" என்று லேசாக அணைத்து விடுத்தார்.
"ஏய் வாலு, இனிமே உன் வால்த்தனத்தை எல்லாம் சுருட்டிகிட்டு அமைதியா இரு. உன் சேட்டையையும் சேர்த்து செய்வதற்கு உனக்கு ஒரு பிள்ளை வரப்போகிறான்" என்று கூறி அவள் தலையில் ஒரு கொட்டும் வைத்தான் மேகநாதன்.
"பாருங்க அத்தை இந்த அத்தானை, என் தலையில் கொட்டுறாங்க" என்று தனது வெட்கத்தை மறைக்க சிவகாமியின் பின்னால் மறைந்து கொண்டாள்.
நளினியின் குடும்பத்தினருக்கும் ஃபோன் செய்து சொல்லி இருக்க, அவளது கணவனுக்கு உடனே மனைவியை பார்க்கும் எண்ணம் தான். அவனும் ஃபோனிலேயே அவளிடம் "இப்பவே உன் பார்க்கணும் போல இருக்குடி" என்றான் ஆசையாக.
"அதுதான் நாளைக்கு காலையில வந்துருவீங்க இல்ல, அப்ப பாருங்க" என்று அவளும் தன் வெட்கத்தை மறைத்துக் கொண்டு மென்மையாக கூறி முடித்தாள்.
அன்றைய நாள் அனைவருக்குமே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நளினியை மூன்று பெண்களும் தாங்கு தாங்கு என்று தாங்கினார். வேகமாக நடக்காதே அமைதியாக ஒரு இடத்தில் உட்காரு என்று அவளை ஒரு வழியாக்கி விட்டார் பார்வதி.
- தொடரும்..
- அருள்மொழி மணவாளன்..
-
வெளிச்சம் - 24
14 minutes ago
-
வெளிச்சம் - 23
26 minutes ago
-
வெளிச்சம் - 22
3 hours ago
-
வெளிச்சம் - 21
3 hours ago
-
வெளிச்சம் - 20
5 hours ago
Currently viewing this topic 1 user ( Arulmozhi Manavalan ) and 17 guests.
- 25 Forums
- 225 Topics
- 804 Posts
- 19 Online
- 329 Members
