Forum

Notifications
Clear all

வெளிச்சம் - 19

1 Posts
1 Users
0 Reactions
1 Views
(@arulmozhi-manavalan)
Posts: 25
Trusted Member
Topic starter
 
[#236]

அத்தியாயம் 19

 

நளினியின் திருமணம் முடிந்து மறுவீடும் முடிந்ததும் சிவன்யாவின் குடும்பத்தினர் சென்னைக்கு கிளம்பி விட்டார்கள். அவர்கள் கிளம்பிய இரண்டு மூன்று நாட்களில் வந்திருந்த உறவினர்கள் அனைவருமே அவரவர் ஊருக்கு கிளம்பி விட, வீட்டில் விஸ்வநாதன் பார்வதியும் தேவ் மற்றும் சிவன்யா மட்டுமே இருந்தார்கள். 

 

அன்று இரவு உணவின் பொழுது "பத்து நாட்களாக உறவினர்களோடு வீடு ஜே ஜே என்று இருந்தது. இப்பொழுது நாம் மட்டும்தான் இருக்கிறோம்" என்று பார்வதி வருத்தமாக கூறினார். 

 

விஸ்வநாதனும் "ஆமாம், இத்தனை நாள் நம் கைக்குள்ளேயே இருந்த நளினி இங்கு இல்லாதது நமக்கு கவலையாகத்தான் இருக்கிறது" என்று கூறினார். "அன்று சம்பத்தி வீட்டினர் வருந்தும் பொழுது அவர்களுக்கு நான் சாதாரணமாக ஆறுதல் மட்டும் கூறினேன். இப்பொழுதுதான் அவர்கள் நிலையில் நான் உணர்கிறேன்" என்று சிவன்யாவை பார்த்தார். 

 

அவளும் மென்மையாக புன்னகைத்துக் கொண்டு "எல்லாம் சரியாகும் மாமா. உங்களுக்கு நளினியை பார்க்க வேண்டும் என்றால் நாளைக்கு ஒரு எட்டு போய் பார்த்துவிட்டு வாருங்கள், அவ்வளவுதானே!" என்று சொல்லிக்கொண்டே சாப்பிட்ட பாத்திரங்களை எல்லாம் எடுத்து சமையலறையை ஒதுங்க வைக்க சென்றாள். 

 

தேவ் எதை பற்றியும் கவலைப்படாமல் சாப்பிட்டதும் எழுந்து சென்று விட்டான். விஸ்வநாதனும் அவர்களது அறைக்குச் சென்று விட, சின்யாவிடம் வந்த பார்வதி, "வீட்டை நீ ரொம்ப பொறுப்பா பார்த்துக்கிறம்மா. இதே மாதிரி பொறுப்பா நளினியும் அவங்க வீட்ல இருந்தா நல்லா இருக்கும். அவ உன் கிட்ட பேசும்போது அவளுக்கு புரியவைமா!" என்று சொல்லிவிட்டு சிவன்யாவுடன் சேர்ந்து அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு அவரும் உறங்கச் சென்றனர். 

 

அவள் அறைக்கு வரும்பொழுது தேவ் லேப்டாப் சகிதமாக அவனது வேலை செய்யும் இடத்தில் உட்கார்ந்து இருந்தான். இரவு உடை எடுத்துக்கொண்டு குளியலறைக்கு சென்று விட்டாள் சிவன்யா. 

 

குளித்து முடித்து அவள் எப்பொழுதும் படுக்கும் இடத்தில் வந்து அமைதியாக படுத்து விட, 

"என்ன ரொம்ப அமைதியா இருக்க?" என்று அவனாகவே பேச்சை ஆரம்பித்தான் தேவ். 

 

"இல்லை நீங்கள் வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள் அல்லவா? தொந்தரவு செய்ய வேண்டாம் என்றுதான்!" என்று எழுந்து அமர்ந்து அவனுக்கு பதில் சொல்ல, 

"ஓகே படுத்துக்கிட்டே பேசு. தூக்கம் வந்தால் தூங்கு" என்று சொல்லி அதன் பிறகு அவன் அமைதியாகி விட்டான். 

 

அவன் ஏதாவது பேசுவான் என்று காத்திருந்த சிவன்யா, அவன் எதுவும் பேசாமல் இருந்ததும் அவளும் அமைதியாக அவனுக்கு முதுகு காண்பித்து படுத்துக்கொண்டாள். 

 

இத்தனை நாட்கள் கல்யாண வேலையில் தினமும் காலையிலேயே எழுந்த சுகன்யா நாளை அவ்வளவு சீக்கிரம் எழுந்திருக்க வேண்டாம் என்று நினைத்துக் கொண்டே படுத்து உறக்கத்தை தழுவினாள். 

 

அசந்து தூங்கிய சிவன்யா விழிப்பு வந்து எழும்பொழுது வெளிச்சமாக இருந்தது. பதில் எழுந்து மணியை பார்க்க மணி 8 என்று காண்பித்தது. அச்சோ ரொம்ப நேரம் ஆகிவிட்டதே! என்று வேகமாக எழுந்து மாற்றுடை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள். வேக வேகமாக தன் காலை வேலைகளை எல்லாம் முடித்து, குளித்து வர மணி எட்டரை ஆகிவிட்டது. 

 

வேகமாக சமையலறைக்குள் நுழைய, அங்கு காலை உணவுகள் அனைத்தும் தயாராக இருக்க, விஸ்வநாதனுக்கு காபி போட்டுக் கொண்டிருந்தார் பார்வதி. 

 

"சாரி அத்தை, அசந்து தூங்கிட்டேன். நீங்க எல்லா வேலையும் முடிச்சிட்டீங்களா?" என்று அவர் செய்து வைத்திருந்த காலை பதார்த்தங்களை ஒவ்வொன்றாக திறந்து பார்த்தாள். 

 

"ஆமாம்மா, மாமா இன்னைக்கி நளினியை போய் பார்த்துட்டு வரலாம்னு சொன்னாங்க. அதனால காலையிலேயே வேலையெல்லாம் முடிச்சிட்டேன். தேவ் கிட்டயும் போய் சொல்லும்மா. எல்லாரும் ஒரு எட்டு போயி பார்த்துட்டு வந்துடலாம்" என்றார். 

 

"சரிங்க அத்தை, ஆனால் அவர் அறையில் இல்லையே. நீங்க அவருக்கு காபி கொடுத்தீங்களா?" என்று தன் மாமியாரிடமே கேள்வியை கேட்டாள். 

 

"இல்லைம்மா, நான் காலையில் இருந்து அவனை பார்க்கவில்லையே!" என்று கூறி கணவனுக்கு காபியை கொடுத்துவிட்டு, அவரிடமும் தேவ்வை பற்றி கேட்டார். 

 

அவருக்கும் தெரியவில்லை என்று கூறி, ஃபோனை எடுத்து அவனுக்கு அழைக்க, அவன் அழைப்பை ஏற்கவில்லை. "நண்பர்கள் யாரையாவது பார்க்கப் போயிருப்பான், வந்துடுவான்" என்று பொதுவாக சொல்லிவிட்டு தினசரி படித்துக் கொண்டு மனைவி கொடுத்த காபியை குடித்தார் விஸ்வநாதன். 

 

அதன் பிறகு அவர்கள் குளித்து தயாராகி வரும் பொழுது கூட தேவ் வந்திருக்கவில்லை. காலை உணவு உண்ண உட்கார்ந்ததும், விஸ்வநாதன் பார்வதி இருவருக்கும் மட்டுமே பரிமாறினாள். "நீயும் உட்கார்ந்து சாப்பிடும்மா" என்ற பார்வதியிடம் "நான் அவர் வந்தவுடன் சாப்பிடுகிறேன் அத்தை" என்றாள் சிவன்யா. 

 

விஸ்வநாதன் தேவ்விற்கு தொடர்ந்து அழைத்துக் கொண்டே இருந்தார். ஆனால் அவனிடம் இருந்து பதில்தான் இல்லை. சிவன்யாவும் அழைத்துப் பார்த்து விட்டு 'அவர் ஃபோனை எடுக்க மாட்டேங்கிறார் அத்தை. நீங்களும் மாமாவும் நளினி வீட்டுக்கு போய் பார்த்துட்டு வாங்க. நான் வீட்டிலேயே இருக்கிறேன்" என்றாள். 

 

"இல்லைம்மா, நாலு பேருமே போய் பார்ப்போம். அவன் வரட்டும், அதுவரை காத்திருப்போம்" என்று விஸ்வநாதனும் மற்ற வேலையை பார்க்கச் சென்றார். 

 

ஒவ்வொருவரும் அவர்கள் ஒவ்வொரு வேலையை செய்து கொண்டே தேவ்வின் வரவிற்காக காத்துக் கொண்டிருக்க, ஒரு மணி அளவில் வீட்டிற்கு வந்தான் தேவ். 

 

"என்னடா? எங்கே போன? காலையில் கூட சாப்பிடாம போயிருக்க? மருமகள் கிட்டயும் எங்க போறன்னு சொல்லல?" என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார் விஸ்வநாதன். 

 

"அர்ஜெண்ட் வேலையா கம்பெனில இருந்து ஃபோன் வந்ததுபா. அதான் போனேன்" என்று சொல்லி சோபாவில் சாய்ந்து அமர்ந்தான். அவன் குடிப்பதற்கு தண்ணீரை எடுத்துக் கொடுத்தாள் சிவன்யா. 

 

"தேங்க்ஸ்" சொல்லி வாங்கி அருந்திவிட்டு, "அப்பா இன்று நான் துபாய்க்கு கிளம்புகிறேன்" என்றான். 

 

அதில் மூவருமே அதிர்ந்து விட்டார்கள். 

"என்ன சொல்ற? நீ துபாய்க்கு போறியா? இன்னும் பத்து நாள் லீவு இருக்குல்ல?" என்றார் பார்வதி அதிர்ச்சி குறையாமல். 

 

"என்ன? நீ போகிறேன் என்று சொல்கிறாய்? மருமகளையும் அழைத்துக் கொண்டுதானே போவதாக இருந்தது? அவளுக்கு தேவையான விசா வாங்கும் வேலையெல்லாம் இனி தான் செய்ய ஆரம்பிப்பாய் என்று நினைத்தேன்? இப்பொழுது நீ கிளம்புவதாக சொல்கிறாயே?" என்றார் விஸ்வநாதன். 

 

"அப்பா ஒரு அர்ஜென்ட் வேலையாம், கண்டிப்பாக என்னை வர சொல்லிட்டாங்க. முதலில் நான் போகிறேன், பின்னாடியே நீங்கள் அவளை அனுப்பி விடுங்கள்" என்று சொல்லிவிட்டு, அவர்களிடம் இருந்து வரும் பதிலை கூட கேட்காமல் எழுந்து அவனது அறைக்கு சென்று விட்டான். 

 

"என்னங்க இவன் இப்படி சொல்லுகிறான்?" என்று கணவனிடம் சொல்லிவிட்டு மகனின் அறைக்கு வேகமாகச் சென்றார் பார்வதி. 

 

"என்னப்பா? இப்படி பேசுற? உன்னை நம்பி தானே அவள் கல்யாணம் பண்ணி அவள் இங்கு வந்திருக்கிறாள். உன் கூடவே நீ அவளை அழைத்துச் சென்றால்தானே நன்றாக இருக்கும். உன் முதலாளி கிட்ட சொல்லி புரிய வை. இன்னும் பத்து நாள் தானே? அதுக்குள்ள அவளுக்கும் விசா வாங்கி அவளையும் உன் கூடவே கூட்டிட்டு போப்பா. முதல் முதல்ல கல்யாணம் பண்ணி ஊருக்கு போறாவங்க தனித்தனியாக போவாங்க" என்று தன் ஆதங்கத்தை மகனிடம் கொட்டினார் பார்வதி.  

 

"அம்மா இன்னும் எந்த காலத்துல இருக்கீங்க? அதெல்லாம் தனித்தனியாக போகலாம். நான் போயிட்டு அங்க இருந்து அவளுக்கு விசா வாங்குவதற்கு உதவி செய்கிறேன். எனக்கு டிக்கெட் எல்லாம் வந்துவிட்டது. நான் கிளம்பவில்லை என்றால் என்னை வேலையில் இருந்து தூக்கி விடுவார்கள்" என்று சொல்லிவிட்டு அவன் உடைமைகளை எல்லாம் பெட்டியில் எடுத்து வைக்க தொடங்கினான். 

 

வேகமாக வந்த பார்வதி கணவனிடம் "அவன் கண்டிப்பாக போகணும் என்று சொல்றாங்க. அங்க போன பிறகு விசாவுக்கு ஏற்பாடு பண்றானாம்" என்று கவலையாக சிவன்யாவை பார்த்துக் கொண்டே கூறினார். 

 

சிவன்யா இம்மையும் புரியாமல் மறுமையும் புரியாமல் அப்படியே சிலை போல நின்றிருந்தாள். 

 

அதிர்ந்து நிற்கும் மருமகளை கண்களால் காண்பித்தார் விஸ்வநாதன். அவள் நிலைக்கண்டு வருந்திய பார்வதியும் அவளின் கைகளை பிடித்துக் கொண்டார். மாமியாரின் ஸ்பரிசம் கையில் பட்டதும் கலங்கிய கண்ணுடன் பார்வதியை பார்த்தாள் சிவன்யா.  

 

"மன்னிச்சிடு மா, அவன் இப்படி திடீரென்று கிளம்புவான் என்று நினைக்கவில்லை. உன்னையும் அழைத்துக் கொண்டு தான் செல்வான் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன். நளினியின் திருமணம் முடிந்ததும் அதற்குரிய வேலைகளை பார்ப்பான் என்று நினைத்தேன்.

 

ஆனால் இப்படி திடுதிப்பென்று கிளம்புவான் என்று கொஞ்சம் கூட நினைக்கவில்லை. நீ எதற்கும் கவலைப்படாதே மா. நான் அவனிடம் பேசுகிறேன்" என்று தன் மருமகளுக்கு ஆறுதல் கூறினார் விஸ்வநாதன். 

 

- தொடரும்..

 

- அருள்மொழி மணவாளன்..


 
Posted : July 27, 2026 4:50 pm

Scroll to Top