வெளிச்சம் - 18
அத்தியாயம் 18
இன்று சாயங்காலம் சிவன்யாவின் குடும்பம் சென்னை செல்வதாக கூறியதால் சிவன்யாவுடன் அவர்கள் கொஞ்சம் தனியாக நேரம் செலவிடட்டும் என்று தன் மகளை அழைத்துக் கொண்டு வெளியே சென்றார் பார்வதி.
நளினியும் பார்வதியும் வெளியே சென்றதும் அங்கிருந்த கட்டிலில் சாய்ந்து அமர்ந்து கொண்டார் சிவகாமி. அவர் அமர்ந்ததும் அவரது மடியில் படுத்துக்கொண்டாள் சிவன்யா.
அவளின் தலையை மென்மையாக கோதியபடியே, மகள் புகுந்த வீட்டில் எப்படி இருக்கணும் எப்படி இருக்கக் கூடாது என்று அறிவுரை கூற ஆரம்பித்தார். முழுவதையும் கேட்ட சிவன்யா, "அம்மா, கல்யாணம்னு பேசுனதுல இருந்து இதைத்தானே திரும்பத் திரும்ப சொல்லிக்கிட்டே இருக்கீங்க" என்று சினுங்கினாள்.
மகளை தன்னுடன் லேசாக அணைத்து கொண்டு, "நீ சந்தோஷமாக இருக்கணும் சிவன்யா. அதுதான் அப்பா அம்மாவிற்கு வேண்டும்" என்று கூறி அவளது நெற்றியில் முத்தமிட்டார்.
தாயின் அன்பையும் அரவணைப்பையும் அமைதியாக அனுபவித்தாள் சிவன்யா. நேரம் கடக்க மதிய உணவிற்கு பிறகு மணமக்களை பார்க்க அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஒவ்வொருவராக வந்து கொண்டிருக்க, சிவன்யாவின் பெற்றோர் ஊருக்கு செல்லும் நேரம் நெருங்கியது.
தன் தாய் தந்தையரும் அண்ணனும் சற்று நேரத்தில் இங்கிருந்து கிளம்பி விடுவார்கள் என்று நினைக்கும் பொழுதே சிவன்யாவிற்கு மனதிற்குள் ஒரு அழுத்தம் தோன்றியது. தான் அழுதால் தன் பெற்றோருக்கு வருத்தமாக இருக்கும் என்பதால் அழுகையை அடக்கிக் கொண்டு புன்னகையுடன் அவர்கள் முன் நின்று இருந்தாள்.
மகளை விட்டு பிரிவது சிவநேசனுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அவளை தன் கைப்குள்ளேயே வைத்துக் கொண்டு அனைவரிடமும் கிளம்புவதாக சொல்லி விடைபெற்றுக் கொண்டு இருந்தார்.
அவரின் நிலையை உணர்ந்த விஸ்வநாதன், தேவ்விடம் "நீயும், சிவன்யாவும் சென்று ரயில் நிலையத்தில் விட்டு விட்டு வருகிறீர்களா?" என்றார்.
தேவ் பதில் சொல்லும் முன்பே 'அதெல்லாம் வேண்டாம் சம்மந்தி. நாங்கள் கிளம்புகிறோம். ரயில் கிளம்பும் நேரத்தில் சிவன்யா அங்கிருந்தால் எங்கள் அனைவருக்குமே அது வருத்தமாக தான் கவலையாக இருக்கும். அவள் இங்கேயே இருக்கட்டும்" என்று சொல்லும் பொழுதே அவர் கண்ணில் ஒரு துளி கண்ணீர் வந்துவிட்டது. தன் புறங்கையால் கண்ணீரை துடைத்துக் கொண்டு மகளை புன்னகையுடன் பார்த்தார்.
தந்தையின் மார்பில் சாய்ந்து கொண்ட சிவன்யாவிற்கும் கண்களில் கண்ணீர் வந்தது. அவர் சட்டையிலேயே அதை துடைத்து விட்டாள் சிவன்யா. புன்னகையுடன் நிமிர்ந்து பார்த்து, அனைவருக்கும் டாடா சொல்லி வழி அனுப்பினாள்.
தேவ் போகாததால் விஸ்வநாதன் அவர்களை சென்று ரயில் நிலையத்தில் வழி அனுப்பி விட்டு வந்தார். தன் பெற்றோர்கள் கிளம்பியதிலிருந்தே மிகவும் அமைதியாக விட்டாள் சிவன்யா. நளினி அவளின் அருகில் அமர்ந்து "என்னோட கல்யாணத்துக்கு அவங்க வந்துருவாங்க அண்ணி, கவலைப்படாதீர்கள்!" என்று ஆறுதல் படுத்திக் கொண்டு இருந்தாள்.
அரவணைக்க வேண்டியவனோ நண்பர்களை பார்க்க சென்றுவிட்டான்.
ரயில் கிளம்பியதும் தாயிடம் இருந்து ஃபோன் வந்தது. "கவலைப்படாமல் இருக்க வேண்டும்" என்று கூறிய சிவகாமி "நளினியின் கல்யாணத்திற்கு சீக்கிரம் வருவதாக" கூறினார். "உன் மாமனார் மாமியாருடன் சேர்ந்து, அவள் கல்யாணத்திற்கான வேலைகளை கவனமாக செய்தால், உனக்கு எங்கள் நினைப்பே வராது' என்று அறிவுரையும் கூறி, மகள் புன்னகையாக "சரி" என்று சொல்லும் வரை அவளிடம் பேசிவிட்டு ஃபோனை வைத்தார் சிவகாமி.
தாயிடம் பேசிய பிறகு சிவன்யாவின் மனது சற்று தெளிந்தது. இரவு உணவிற்குப் பிறகு அனைவரும் உறங்கச் செல்ல, வழக்கம்போல் தேவ் தனது லேப்டாப்பை எடுத்துக்கொண்டு வேலை என்று அமர்ந்து விட்டான்.
'இவர் ஏன் என்னிடம் சரியாக பேச மாட்டேங்கிறார்' என்று நினைத்துக் கொண்டே படுத்த சிவன்யா உறங்கியும் விட்டாள். மறுநாள் இனிமையாக விடிய, விஸ்வநாதனும் பார்வதியும் நளினியின் திருமணத்திற்கான வேலைகளை செய்ய ஆரம்பித்தார்கள்.
அவர்களுக்கு உறுதுணையாக சிவன்யாவும் வீட்டில் இருந்து செய்ய வேண்டிய வேலைகளை செய்ய, வெளி வேலைகளை பெரியவர்கள் பார்த்துக் கொண்டார்கள்.
பெரியவர்கள் திருமண வேலை செய்ய, தேவ் காலையில் கிளம்பி வெளியே சென்று விடுவான். நண்பர்கள் பார்க்க வேண்டும், அங்கு செல்ல வேண்டும், இங்கு செல்ல வேண்டும் என்று தினமும் ஏதாவது ஒரு கதை சொல்லி வெளியே சென்று விடுவான்.
இரவு வீட்டில் இருக்கும் பொழுது லேப்டாப்பை எடுத்துக் கொண்டு வேலை என்று அமர்ந்து விடுவான். பகல் பொழுதாவது வெளியில் எல்லோருடன் இருக்கும் பொழுது ஏதாவது பொதுவாக பேசுவான். ஆனால் அறைக்கு வந்த பிறகு அவளை நிமிர்ந்து கூட பார்க்க மாட்டான். அவள் ஏதாவது கேள்வி கேட்டால் கூட ஒற்றை வார்த்தையில் பதில் கூறிவிட்டு தன் வேலையை பார்க்க தொடங்கி விடுவான்.
அவன் தன்னை ஒதுக்குவதை புரிந்து கொண்ட சிவன்யா அதன் பிறகு அவனிடம் எதுவும் கேட்கக் கூடாது என்று முடிவு செய்து விட்டாள்.
ஒவ்வொரு வேலையாக முடிய கல்யாண நாளும் நெருங்கியது.
வீட்டிற்கு, தூரத்தில் இருந்த உறவினர்கள் எல்லாம் வர தொடங்கினர். திருமணத்திற்கு இன்னும் இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில் சிவன்யாவின் குடும்பத்தினர் மூவரும் வந்தார்கள்.
தாய் தந்தையரை கண்டதும் விரைந்து சென்ற சிவன்யா அவர்களை அணைத்துக் கொண்டாள். அவர்களை வரவேற்ற விஸ்வநாதனும், "ஒரு வாரத்திற்கு முன்பே வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன்" என்ற படியே வரவேற்றார்.
"எங்களுக்கும் ஆசைதான். சிவன்யா கல்யாணத்திற்கு நிறைய நாட்கள் விடுப்பு எடுத்ததால், இப்பொழுது விடுமுறை கிடைக்கவில்லை என்றான் மேகநாதன்.
அண்ணனையும் தன் பெற்றோரையும் புன்னகையோடு வரவேற்ற சிவன்யா, அப்படியே தன் நாத்தனாரின் திருமணத்திற்கு வந்திருந்த அனைத்து சொந்தங்களையும் புன்னகையுடனே வரவேற்று அவர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுத்தாள். மகள் புகுந்த வீட்டில் ஒன்றியதைக் கண்டு பெற்றோருக்கு மிகுந்த மகிழ்ச்சி.
வேலையின் நடுவே தனியாக நேரம் கிடைக்கும் பொழுது சிவகாமி தன்மகளிடம் "மகிழ்ச்சியாக இருக்கிறாயா?" என்று கேட்டார்.
தாய் கேட்பது புரிந்தாலும் தன் முகத்தில் எந்த மாறுதலையும் காட்டாமல் "மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் அம்மா" என்றாள். மகளின் பதிலில் மகிழ்ந்த சிவகாமி அவளை தன் தோளுடன் அணைத்துக் கொண்டார்.
அதன் பிறகு நளினியின் திருமணம் வேலைகள் சீரும் சிறப்புமாக நடந்தது.
திருமணம் முடிந்து நளினியை அவள் கணவனின் வீட்டில் சென்று விட்டு விட்ட பிறகு, மறுவீடு அனைத்தும் முடிந்ததும், சிவன்யாவின் பெற்றோர்கள் மகளிடம் ஆயிரம் புத்திமதி சொல்லி சென்னைக்கு கிளம்பினார்கள்.
- தொடரும்..
- அருள்மொழி மணவாளன்..
-
வெளிச்சம் - 20
2 hours ago
-
வெளிச்சம் - 19
2 hours ago
-
வெளிச்சம் - 16
6 hours ago
-
வெளிச்சம் - 15
7 hours ago
-
வெளிச்சம் - 14
7 hours ago
- 25 Forums
- 218 Topics
- 779 Posts
- 4 Online
- 329 Members
