அயலா… அயலா…-9

அத்தியாயம்-9

   இன்று பிரதாப்பின் முதலாமாண்டு நினைவு நாள்.
  பிரதாப்பிற்கும் தனக்கும் நெருங்கமான நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரை வரவழைத்து அஞ்சலி செலுத்த நினைத்தாள் ஆதினி.

   பெரும்பாலும் தலைகாட்டி விட்டு செல்வதற்காக வந்த நண்பர்களே அதிகம். அதனால் நேரத்திற்கு வந்து ஆஜரானார்கள். 

  அக்ஷயா அம்மா… இது அப்பாவுக்கு பிடிக்குமா? அப்பா சட்டையை வைக்கணுமா?” என்று தெள்ளதெளிவாக பேசவும் வந்தவர்களில் “பிரதாப் குழந்தைக்கு முன்ன சரியா பேசவே தெரியாது. இரண்டு மூனு ஹாஸ்பிடல்ல கூட பார்த்தாங்க. இப்ப நல்லா பேசறாளே” என்று நண்பர்கள் புகழ்ந்தார்கள்.

  சிலருக்கோ, “பிரதாப் இல்லை என்றாலும் ஆதினி குழந்தையை வச்சிட்டு சமாளிச்சிட்டா. படிச்ச படிப்புக்கு வேலை கிடைக்குது. சொந்த வீடுயில்லையா.” என்று கதிர் பேசவும் சரியாக இருந்தது.

  ஜமுனாவும் செல்வமும் “அம்மாடி இலையை விரிச்சிட்டா சாமி கும்பிடணும். ஆதினி கற்பூரம் காட்டு” என்று கூற, “அயலப்பா எங்க? அயலப்பா. அயலா” என்று சப்தமாய் கத்த, “டூமினிட்ஸ் வந்துடறேன் அக்ஷு” என்றான்.‌

  கையிலும் தோளிலும் இரண்டு பையை எடுத்தவன் படியில் லக்கேஜை வைத்துவிட்டு, பிரதாப்பிற்கு படையலிட வந்து சேர்ந்தான்.
  அங்கிருந்த நண்பர்கள் பட்டாளம் அயனை கண்டு புன்னகைத்தார்கள்.

  அவன் யாரையும் பார்த்து எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை.

  “இவர் பிரதாப் பாடியை எடுத்துட்டா வந்தவர் தானே” தோழி அனிதா ஒருத்தி கேட்க,

“ஆமா.. பிரதாப் கூட ஒன்னா வேலை பார்த்தவர்னு சொன்னார்” என்றான்  நண்பன் கதிர்.

“அயலா.. பேக் எல்லாம் எடுத்து வச்சியிருக்க. எதுக்கு?” என்று கேட்க, “நான் வேலைக்கு போகணும்ல. ஆபிஸ் பக்கமா இன்னொரு வீடு பார்த்திருக்கேன். இன்னிக்கு அங்க போகணும்.” என்றான்.

“நீ என்கூடவே இருப்பனு நினைச்சேன்.” என்று அமைதியான ஹாலில் அக்ஷயா குல் தெளிவாக கேட்டது.

“அதுக்கு வாய்ப்பில்லை. அமைதியா இரு” என்றான்.

  “இவ்ளோ நாள் என் கூட இங்கயே தானே இருந்த. இப்ப ஏன் போற. நீ எங்க வீட்ல மாடிலயே இரு. ப்ளீஸ்” என்றாள்.

  ஆதினியோ “அக்ஷயா.. அப்பாவுக்கு சாமி கும்பிடும் போது அமைதியா இரு.” என்று அடக்கினாள்.

“எனக்கு அயலா அப்பா தான் வேணும் பிரதாப் அப்பா வேண்டாம். அவர் தான் இனி வரமாட்டாரே. அயலா நீ என்னை விட்டு எங்கயும் போக கூடாது” என்று படியில் ஓடியவள் அவனது லக்கேஜை எடுத்துக் கொண்டு அறையில் வைத்தாள்.

ஆதினிக்கு மகளது செய்கை எரிச்சலை தர, “முதல்ல சாமி கும்பிடு” என்று அதட்டி பிரதாப் புகைப்படம் அருகே உட்கார வைத்தாள்.

அக்ஷயா பிரதாப் புகைப்படத்தை கண்டு, “நீங்க தான் செத்துட்டிங்க. எனக்கு அப்பா வேண்டும். அயலா அப்பாவை என் கூடவே இருக்க சொல்லுங்க ப்ளிஸ்” என்று தேம்பி அழுதபடி வேண்ட, ஆதினிக்கு நெற்றி சுருக்கி கோபம் துளிர்த்தது.

வந்தவர்கள் முன் எதுவும் கடியாமல் தவிர்க்க அமைதிக்காக்க, கிசுகிசு என்ற தீ கொழுந்துவிட்டு எரிந்தது.
 
  அதுவும் அயன் அக்ஷயாவுக்கு சாதம் ஊட்டவும் பலரின் பார்வை அவர்களை தான் மொய்த்தது.

  ஜமுனா ஆதினி பரிமாறி தேவையை கேட்டு வைத்தனர்.

பக்கத்து பக்கத்தில் அமர்ந்த மற்றவர்களோ, ‘பிரதாப் இறந்தப்ப வந்தவன். இங்கயே தங்கியிருக்கான். நான் கூட நம்மளை மாதிரி வந்து தங்கியதா தப்பா நினைச்சிட்டேன். அவன் பிரதாப் இறந்ததிலயிருந்து ஆதினி தனியா இருக்கவும் கூடவே இருக்கான்.” என்று அனிதா கூற,
   “தனியா இருந்தாங்கன்னா” என்று கதிர் கேள்வி முளைக்க, “ஒன் இயர் ஒரே வீட்ல இருந்திருக்காங்க.” என்று  அருவருப்பாய் கூற, பிரதாப் இதெல்லாம் பார்க்காம தான் செத்துட்டான் போல.’ என்று பேசவும் ஆதினி காதில் விழுந்தது.

  ஒரே ஹாலில் இருந்துக்கொண்டு கேட்காமல் போகுமா?

  அல்லது பிறர் மனம் நோகக்கூடாதென்று அமைதியாக தான் பேசுகின்றனரா. ஆதினி பிரதாப் நினைவு நாளுக்கு யாரையும் அழைக்காமல் தான் மட்டும் பிரதாப்பிற்கு பிடித்ததை சமைத்து படைத்து, எங்கயாவது பசியோடு இருப்பவருக்கா உணவை வாங்கி தந்திருக்கலாமோ? தானாக தலையில் சுமை ஏற்றும் விதமாக போட்டுக் கொண்டாளே.

  எல்லாரும் சாப்பிட்டு முடிக்க, பிரதாப்பின் இழப்பீடு தொகை வந்துவிட்டதா என்று விசாரித்தார்கள்.
 
  “என்னனு தெரியலை லேட் பண்ணாம அதெல்லாம் வந்துடுச்சு. எப்படி இறந்தார் என்னாச்சுனு கேட்டு விசாரிக்க கூட முடியலை‌. தேசிய பாதுகாப்பு சம்மந்தப்பட்ட விஷயம், அதனால விபத்து நிகழ்ந்ததை பெருசா வெளியே காமிக்கலை.
  இரண்டு மூன்று முறை போன்ல ட்ரை பண்ணினேன். “மேம்… செட்டில்மெண்ட் பண்ணியாச்சா.. தயவு செய்து காண்டெக் பண்ணாதிங்க. குழு வேறொரு ஆராய்ச்சில இருக்காங்க. தயவு செய்து தொந்தரவு பண்ணாதிங்கனு சொல்லிட்டாங்க.” என்றாள்.

  நண்பர்களில் அனிதா வந்து ‘அந்த அயன் இங்கயே இருப்பதா சொல்லறாங்க. ஒரே வீட்ல எப்படி? ஆச்சரியாம இருக்கு.” என்றாள்.‌

  “ஏய்… அதெல்லாம் காரணத்தோட தான் வச்சியிருக்கா. நீ வேற கேட்டு” என்று கிசுகிசுக்க, ஆதினிக்கு நெஞ்சடைத்தது.

  செல்வமோ இதை பார்த்தவர்.
  “எங்களுக்கு நண்பர்கள் மட்டும் தான் அங்கிள். அவர் பிரெண்ட்ஸ் என் பிரெண்ட்ஸ் எல்லாரும் ஒருத்தங்க தான். அவங்களை மட்டும் அழைச்சிக்கறேன்னு இந்த பொண்ணு சொன்னப்ப நல்ல தோழிகள் மனமாறுதலுக்கு இருப்பிங்கனு நினைச்சேன். ஆனா அஞ்சலி செலுத்தற இடத்துல வந்து வதந்தி பேசறிங்களேம்மா. இது நல்லாயிருக்கா?

ஆம்பளை இல்லாத வீட்ல இன்னொரு அம்பளை இருந்தாளே தப்புல்ல? நான் தான்மா இந்த பையனை இங்க தங்க சொன்னது.

  பிரதாப் உடலை எடுத்துட்டு போன இரண்டாவது நாளே, ஆதினி கத்தி  எடுத்து தற்கொலை பண்ணிக்க போயிட்டா. இந்த தம்பி அன்னிக்கு கூடயிருந்ததால, தட்டிவிட்டு காப்பாத்திடுச்சு. தனியா இருந்து ஒன்னுகிடக்க ஒன்னு செய்து குழந்தையை அனாதையா நிறுத்திட கூடாதுன்னு நான் தான் இந்த தம்பியை வாடகை கொடுத்து இங்க தங்க சொன்னது. நீங்க என்னம்மா உங்க பிரெண்டை பத்தி நீங்களே தப்பா பேசறிங்க?” என்றவர் ஆதினி பக்கம் திரும்பி, “இந்த மாதிரி நண்பர்கள் சமூகத்தினர் வச்சிட்டு தான் உனக்கு வந்த இரண்டாவது வாழ்க்கையை யோசிக்கறியாம்மா.

  இதுக்கு அயனை கல்யாணம் செய்துட்டு நிம்மதியா இந்த மாதிரி பேச்சை வாங்கிக்கலாம். அட்லீஸ்ட் அக்ஷயா பாப்பாவுக்கு அப்பாவாது கிடைக்கும்.” என்றதும் ஆதினி ஏன் அங்கிள் இப்படி பேசறிங்க’ என்பது போல நின்றாள்.

  நண்பர்களாக தோழிகளாக வந்தவர்கள் மறைவாக பேசி கிசுகிசுத்து சென்றுவிடுவார்கள். இன்று பகிரங்கமாக எடுத்து பேசி எப்பொழுதும் பேசும் பொருளாக மாற்றி விட்டாரே.

  ஜமுனாவுமே “இந்த மனுஷனுக்கு அறிவேயில்லை.” என்று அடக்க முற்பட, “சும்மாயிரு ஜமுனா. இன்னிக்கு நாம இருக்கோம். நாளைக்கு நம்ம பொண்ணுக்குன்னு வேற ஊரை பார்த்துட்டு போவோம். அப்பவும் இந்த பொண்ணுக்கு பாதுகாப்பும் அன்பும் தர யார் வருவா?

இந்த பையன் கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்லறான்ல. முடிவு ஏதாவது எடுக்கட்டும். இந்த மாதிரி தோழிகளுக்காகவா சமூகத்திற்காக ஆதினி யோசிப்பதை நினைச்சா சிரிப்பு வருது.” என்றார்.

ஒரு பெண் அனிதா வந்தாள். “அங்கிள்… நாங்க ஒன்னும் இல்லாததை பேசலை. குழந்தை அப்பா அப்பா என்று நெருக்கமா பேசினா நாங்க கிசுகிசுக்க தான் செய்தோம். அதுக்காக ஆதினிக்கு மறுமணம் செய்யற வாய்ப்பு வந்தா தட்டி கழிக்கற விதமா பேசலை. எங்களுக்கு என்ன தெரியும் இங்க நடப்பது.
  ஆதினி சம்மதிச்சா கட்டிக்கிடட்டும். பிரதாப் ஆத்மா சாந்தியடையுமே தவிர சஞ்சலமடையாது” என்றாள்.
 
   ஏதாவதுனா சொல்லு ஆதினி. நாங்க வர்றோம் ” என்று அனிதா கிளம்ப, ஒவ்வொருத்தராய் கிளம்பினார்கள்.

‌ஆதினிக்கு ஏதோ வலித்தது. அயன் எதுவும் நடுவில் வாதடவில்லை. ஏன் அவளுமே பேச்சை தடையிடவில்லை.

  ஜமுனா செல்வம் மட்டும் இருக்க, அயன் கிளம்புவதாக கூற, அக்ஷயாவோ “நோ… நோ.. அயலப்பா.. நீங்க இங்க தான் இருக்கணும். எனக்கு நீங்க வேண்டும்.” என்று காலை கட்டிக்கொண்டாள்.

  ஜமுனா குழந்தையை தூக்க முயல், முடியவில்லை.

ஆதினியோ சொன்னது போல தவணை முடிய கிளம்புகின்றான். என் எண்ணம் முடிவெடுப்பதில் சிக்கலில் தவிக்கின்றதே.

   அயனை ஏற்பதா? அவர் அக்ஷயாவுக்கு நல்ல தோழனாக தந்தையாக இருக்கின்றான். நல்ல கணவனாகவும் மாற சம்மதம் அளித்துவிட்டான். என்னிடம் பந்தை திருப்பி போட்டுவிட்டு பந்தை அடிக்கவா, பந்தை பிடிக்கவா என்று பதிலை கேட்கின்றானே! என்று சங்கடமாய் நின்றாள்.

  இன்று எந்த முடிவும் என்னால் எடுக்க இயலாதே! என்று பிரதாப் புகைப்படம் அருகே சரிந்தா நின்றாள்.
 
  அயனே முன் வந்து, “நான்… இரண்டு வாரத்தில குழந்தைக்கு நான் அப்பா இல்லை. ஜஸ்ட் கெஸ்ட் என்றதை சொல்லி புரிய வைக்கறேன். ஆனா அதை மீறி சாந்தப்படுத்த முடியுமா தெரியலை‌” என்று கைவிரித்தான்.

  குழந்தை ‘அயலப்பா என் கூட இருக்க போறார்’ என்று ஆனந்தப்பட்டாள்.‌

செல்வமோ “பார்த்து முடிவெடும்மா” என்று சென்றார்.

    நான்கு சுவரில் அடைப்பட்டு இருந்த அயனின் திருமண விருப்பம் தன்னிடம் கூறிய செய்தி, தற்போது வாசலை தாண்டி வைரஸை போல பரவிவிட்டது.

  இனி எந்த இடத்திலும் அயன் தன்னை மணக்க கேட்டு நின்றது பேசும் பொருளாக தன் காதுபட கேட்பார்கள். முன்பு மட்டும் செவியில் இல்லாத புரளி கேட்கவில்லையா?

ஏதோ பிரதாப் இறந்தப்பின், அயனுடன் கள்ளத்தனமாக வாழ்வதாக தானே பேச்சு கசிந்தது.

இன்று மட்டும் எல்லாம் நல்லதாகவா பேசப்படும்? எப்படியும் அயலா அப்பா’ என்ற வார்த்தைக்கே ஆயிரம் வதந்திகள் பரவும்.
  ஆனால் அக்ஷயாவுக்கு அந்த வார்த்தையில் உயிர் உறவாடுகின்றதே.
  குழந்தைக்காக ஏற்ற அந்த வார்த்தை இன்று தன்னையே துளைக்கின்றது.

இதில் அயன் வேறு செல்வதாக மூட்டை முடச்சியை கட்டினாரே.’ என்று வேகமாக அயனை தேடி மாடிக்கு சென்றாள்‌‌.

  அங்கே ‘பிரதாப்… உன் உடலை கொடுக்க நான் இங்க வந்திருக்க கூடாதுடா. உன் குழந்தை பேச தெரியாம தவிச்சி பாவமா நின்றப்ப, அவளை அரவணைச்சிருக்க கூடாது.
  ஆதினி கத்தி எடுத்து தற்கொலை செய்ய துணிந்தப்ப அவளை அவ போக்குல விட்டிருக்கணும். அவளை காப்பாத்தி, செல்வம் அங்கிள் சொன்னார்னு இங்கயே தங்கியிருக்க கூடாது.

எனக்குனு யாரும் இல்லை என்று வாழ்ந்தப்ப, சலிப்பு இருந்துச்சு. அக்ஷயா மாதிரி குழந்தையும், ஆதினியையும் பார்த்தப்ப ஏன் நாங்க மூன்று பேரும் குடும்பமா இருந்தா என்னனு விபரீதமா யோசித்திருக்க கூடாது.

  இதெல்லாம் விட, ஆதினியிடம் கல்யாணம் செய்ய விருப்பப்படுவதா தெரிவிச்சியிருக்க கூடாது.

  அயலப்பா என்று அக்ஷயா முதல் முறை கூப்பிட்டப்ப, அவளை அயலானு மட்டும் கூப்பிடுனு மறுத்திருக்கணும்.

  எனக்கு ஆதினியையும் அக்ஷயாவையும் விட்டு போக முடியலைடா.
  எனக்கு ஏதாவது முடிவை சொல்லு இல்லை… நாளை மறுநாள் குழந்தையிடம் கூட சொல்லாம யாருக்கும் தெரியாம கண்காணாத இடத்துக்கு போயிடணும்.’  என்று அங்கிருந்த பிரதாப் புகைப்படத்தை பார்த்து புலம்பினான்.

  ஆதினியோ சத்தமின்றி திகைத்தாள். அயன் யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் சென்றுவிட்டால்? மகளிடம் என்னவென்று கூறுவது? அவரை மணக்க என்‌ மனம் முடிவெடுத்தால் எப்படி மீண்டும் கூறுவது?’ என்று குழம்பினாள்.

-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top