அத்தியாயம்-8
அதிகாலை ஆதினி எழுந்து சிகையை அள்ளி முடித்து வரவும், அயன் அங்கில்லை.
நல்லவேளையாக அவன் இல்லை என்று கிச்சன் செல்ல, அங்கே சூடான டீயை போட்டு வைத்திருந்தான்.
”சாரி… நைட்டு இங்கயே தரையில தூங்கிட்டேன். எழுந்ததும் தலைவலி வந்த மாதிரி இருந்தது. அதனால டீ போட கிச்சனை உருட்டிட்டேன்.” என்றான்.
ஆதினி ‘இவனை அறைஞ்சியிருக்கேன். சலனமேயில்லாம இருக்கான்’ என்று பேசாமல் நிற்க, “நான் போட்ட டீ குடிப்பன்னா… இதை ட்ரை பண்ணு.” என்று கூறிவிட்டு, “நேத்து நைட் பேசியதுக்கு சாரி. நான் அப்படி பேசியிருக்க கூடாது.
எனிவே... அயலாப்பானு குழந்தை மனசுக்கு நெருக்கமா கூப்பிடவும், நானும் அதே நெருக்கத்தை எதிர்பார்த்துட்டேன். அவளுக்கு ஏன் ஒரு அப்பாவா மாற முடியாதுனு நினைச்சிட்டேன். அதுக்கு தான் உன்னிடம் பேசி அறையும் வாங்கிட்டேன்.
அம்மா அப்பா சிபிலிங் இப்படி யாராவது இருந்தா, மேபீ என்னோட உலகம் குடும்பம்னு மாறியிருப்பேன். வேலை தவிர்த்து நான் பார்த்தது பிரதாப். பிரதாப்பை அடுத்து பார்த்தது அக்ஷயா குட்டி.
அதான் மனசுல பட்டதை கேட்டேன். ஆக்சுவலி எனக்கு சமீபகாலமா உன்னை பிடிச்சிருந்தது.
தனியா குழந்தையை மேனேஜ் பண்ணிட்டு, நீ உண்டு உன் வேலை உண்டுனு இருக்க. உனக்குனு யாருமில்லை. பிரதாப் இருந்து அக்ஷயாவை எப்படி வளர்க்கணுமோ அப்படி வளர்க்க போராடுற.
மனசுல உன்னை பிடிச்சிருக்குன்ற போது, அதை மறைச்சி, உன்னிடம் பழக மனசில்லை. அதான் வெளிப்படையா சொல்லிட்டேன். மறுமணம் செய்துக்கறது தப்பில்லையே. அதுவும் 25 வயசான உனக்கு துணையா இருந்து, நல்லபடியா வாழ்வை அமைச்சிக்க நினைச்சேன்.
கல்யாண ஆசையை மனசுல போட்டு உழப்பறதை விட, நேர்ல மனசுல இருப்பதை சொன்னா தானே நீயும் ஏதாவது, உன் முடிவை சொல்ல முடியும். இரண்டு மாசத்துல உன் முடிவை சொல்லு.
அப்பறம்… அப்பவும் உனக்கு என்னை பிடிக்கலைன்னா, நான் வேற வீடு தேட ட்ரை பண்ணறேன். அக்ஷயாவுக்கு நான் கூடவேயிருக்க மாட்டேன் என்ற உண்மையை சொல்லிடு. நெருக்கமா பழகி அயலப்பானு கூப்பிட்ட குழந்தையிடம், இனி என்னை பத்தி பேசாதனு சொன்னா அது குழந்தைக்கு அபெக்ட் தரும். ஆனா நீ அக்ஷயாவை பார்த்துப்ப. ஐ நோ. நீ தைரியமான பொண்ணு. அதுவரை உன் கூட இருக்கேன்.” என்றான்.
ஆதினி தற்போது நிம்மதியாக அயன் தந்த டீயை வாங்கினாள்.
ஒரிரு முறை அவளை பார்த்து, “ஏன் ஆதினி… மறுமணம் செய்தா தப்பா? பிரதாப் உன்னை தூங்க விடமா கழுத்தை நெறிக்க வந்துடுவானா?” என்று நக்கல் தோணியில் கூறவும், ஆதினி இதென்ன வம்பு வளர்கின்றார் என்று அயர்ந்திட, “சாரி சாரி. ஜஸ்ட் கிட்டிங்.” என்றான்.
ஆதினியிடம் தன் காதலை கூறி மணக்க கேட்டாயிற்று, இனி அவளது முடிவுக்கு விட்டுவிட வேண்டும். அதுவரை இந்த இரண்டு மாதம் காத்திருக்க வேண்டும்.
ஆதினி அக்ஷயாவை எழுப்பி பள்ளிக்கு அழைத்து சென்றாள்.
மாலை அயன் வந்து மகளை அழைத்து சென்றதாக கூறவும், ஆதினி யோசனை வயப்பட்டாள்.
இரண்டு மாதம் தந்தை போன்றதொரு அன்பை மகள் அனுபவிக்கட்டும் என்று எண்ணிவிட்டு வீட்டுக்கு தாமதமாக வந்தாள்.
அங்கே அயன் சமையல் கரண்டியால் மேகியை வதக்கிவிட்டு, “அக்ஷயா குட்டி… முட்டை எடுங்க உடைச்சி ஊத்தி தர்றேன் குயிக் குயிக்” என்றான். அவளும் எடுத்து கொடுக்க, உடைத்து கிளறி, வெங்காயத்தாளை தூவி அயன் அக்ஷயாவிடம் நீட்ட, தந்தையும் மகளும் சமையல் அறையில் அட்டூழியம் செய்வதாக கண்டவளுக்கு, அத்தி பூத்தாற் போல சிரிப்பு வந்திருக்க வேண்டியது. அதை அடக்கியபடி கமுக்கமாக அறைக்குள் சென்று கதவடைத்து, உதடு விரித்து சிரிக்க, அயனோ மூடிய கதவை கண்டு புன்னகைத்தான்.
“அயலா.. கமான் வந்து சாப்பிடு” என்று அழைக்க, “இதை சாப்பிடணுமா? இதெல்லாம் எனக்கு செட்டாகாது அக்ஷயா. இட்ஸ் ஓகே… உனக்காக சாப்பிடறேன்” என்றா அமர்ந்தான்.
ஓரிரு நாட்கள் செல்ல, ஜமுனாவிடம், அயன் தன்னை காதலிப்பதாகவும் மணக்க கேட்டதாகவும் கூறினாள்.
“பார்த்தியா… நேத்து வந்தவனுக்கு குழந்தை மேல என்னவொரு அக்கறைனு நினைச்சேன். இது உன் மேல இருக்கற அக்கறை” என்று ஜமுனா கூற, செல்வமோ “வாயை மூடு ஜமுனா” என்றவர் ஆதினியிடம் “அந்த பையனுக்கு உன்னை பிடிச்சிருக்குனு சொல்லறான். பிடிச்சிருப்பதை உன்னிடமும் சொல்லி கல்யாணம் செய்ய தானே கேட்கறான்.
இதே மத்த மனுஷங்கன்னா என்ன செய்திருப்பாங்க? குழந்தை தூங்கிட்டு இருக்கறப்ப, இந்த இடைப்பட்ட நாளில் உன்னிடம் அத்துமீறி அடைய பார்த்திருக்கலாம். தாலியோ காதலோ கல்யாணமோ எதுவும் இல்லாம உன் உடலை மட்டும் அடைய துடிச்சிருப்பாங்க. அயன் அப்படி எதுவும் செய்த மாதிரி தெரியலை.
குழந்தையிடம் உண்மையான பாசத்தை பார்த்திருக்கேன். உன் சம்மதம் இருந்தா கல்யாணம் செய்ய நினைக்கறான். யாரும் இல்லாதவன், கட்டிக்க கேட்டதில் என்ன தப்பு?
இரண்டு மாசம் டைம் தந்திருக்கான். பிடிச்சிருந்தா பதிலை சொல்லு. இல்லையா… அதான் பிரதாப் நினைவு நாள் முடிந்து அவனே கிளம்பறதா சொல்லறானே. விட்டுடு.
என்னை கேட்டா… இமான் மாதிரி இருக்கற சமுகத்தில் தான் நீயும் உன் குழந்தையும் இருக்கிங்க. அயனை கல்யாணம் செய்துக்கிட்டா, உனக்கும் உன் குழந்தைக்கும் பாதுகாப்பு கிடைக்கும். பிரதாப் காட்டாத அன்பு பாசத்தையும் நீயும் குழந்தையும் அனுபவிக்கலாம்.
ஐந்து வயசு குழந்தை அப்பா இல்லாம காலம் முழுக்க கஷ்டப்படணுமா? அவளுக்கு பிடிச்ச மாதிரி அயன் அப்பா இருக்கான்.
முடிவை நீயே சொல்லும்மா நாங்களும் அடுத்து என் பையன் வேலை செய்யற இடத்துக்கே போகலாம்னு யோசித்திருக்கோம். அவங்களால் இப்ப அடிக்கடி இங்க வர முடியாதாம்.
இந்த வீட்டை வேற பெரிய குடும்பத்துக்கு வாடகைக்கு விடணும்.
பக்கத்துல நாங்களும் இருக்க மாட்டோம். எல்லா நேரத்திலும் இப்படியொரு பாதுகாப்பு அன்பு தானா கிடைக்காது ஆதினி. நல்லதா யோசி.
பிரதாப் குழந்தையை வச்சிட்டு இருந்தாலும், இன்னொரு பொண்ணை பார்த்து கல்யாணம் செய்ய இதே போல அட்வைஸ் பண்ணிருப்பேன். ஆனா அவனாயிருந்தா முட்டாள்தனமா யோசிச்சிட்டு இருக்க மாட்டான்.
குழந்தையை வளர்க்க முடியலைனு அப்பவே ஒரு பொண்ணை பார்த்து கட்டிக்க என்னிடமே பொண்ணு பார்க்க சொல்லிருப்பான்.” என்று கூறினார்.
ஜமுனாவோ இடைப்புகுந்து, “உங்க அங்கிள் இப்படி தான் அடிக்கடி அயனும் அந்த பொண்ணு ஆதினியும் நல்ல ஜோடியா தெரியறாங்க. குழந்தையோட சேர்த்தா ஒரு குடும்பமா தெரியுதுனு முன்னவே சொல்லிட்டு திரிந்தார்.
அவரை விடு… ஆதினி… உன் மனசுக்கு என்ன தோன்றுதோ அதை முடிவெடு. நான் சொல்லறேன்னோ இவர் சொல்லறேன்னோ, ஏன் அயன் இரண்டு மாசத்துல டைம் தந்து இக்கட்டை உருவாக்குறாரோனு நினைக்காத. உன் மனசுல அக்ஷயாவுக்கும் உனக்கும் இது நல்லதா? கெட்டதா? சரியா? தப்பா? நாலாப்பக்கமும் யோசித்து முடிவெடு.
ஆனா ஒன்னு… அயன் உன் மகளோட பழகறப்ப கள்ளமில்லை. மறுமணமும் தப்பில்லை. பிரதாப்பே இதை விரும்பலாம்.” என்று கூற, ஆதினி தயக்கமாய் இருவரையும் கண்டாள்.
“அதான் உங்க ஆன்ட்டியே சொல்லிட்டாங்களே. அயன் மேல நல்ல அபிப்ராயம் தான் இருக்கு” என்று கூறினார் செல்வம்.
“சரிங்க ஆன்ட்டி நான் யோசிக்கறேன். வர்றேன் அங்கிள்” என்று விடைப்பெற்றாள்.
அவள் முகத்தில் குழப்பமும், பல்வேறு விதமா எண்ணங்களும் ஓடியது.
அன்றிலிருந்து அயன் தூரத்தில் இருந்தால் அவனை கவனிப்பது ஆதினி வாடிக்கையாக இருந்தது.
புட்பால் பேஸ்கெட்பால் என்று அக்ஷயாவுக்கு சொல்லி தந்தவனை ரசித்தாள்.
அக்ஷயாவுக்கு வேர்த்து கொட்டிய பொழுது அவளுக்கு துடைத்து விட்டு ஒரு தந்தையாக சொல்லி தந்தான்.
ஆதினியாக ஜில்லென்ற ஐஸ் வாட்டார் கொண்டு வந்து நீட்டினாள்.
“வேர்த்து வழியவும் தண்ணி தேவைப்படும்னு கொண்டு வந்தேன்.” என்றாள்.
“எனக்கு ஸ்வெட் ஆகாதே” என்று அயன் கூற, “உங்களுக்கு இல்லை அக்ஷயா பாப்பாவுக்கு” என்றாள்.
“வாட்டர் பாட்டில் என்னிடம் நீட்டற. அக்ஷயா அங்கயிருக்கா” என்று சுட்டிக்காட்டினான்.
ஆதினியோ இமை தாழ்த்தி மகளுக்கு நீரை புகட்டினாள்.
மகளுக்கு வேர்த்து சொட்டவும் தான், அவனுக்கும் வேர்த்து வழிந்து நீர் தேவைப்படலாமென கொண்டு வந்தாள். இவனை சரியாக நிமிர்ந்து பார்த்திட மனமில்லையே.
தற்போது தான் கவனித்தாள். அவன் முகம் ப்ரஷ்ஷாகவே இருந்தது. வேர்வை துளியும் இல்லை.
“சிலருக்கு அவ்ளோ சீக்கிரம் வேர்க்காது சளி பிடிக்காது. எனக்கு அந்த மாதிரி உடல்.” என்று அவள் பார்வைக்கு பதில் தந்து பந்தை கூடையில் போட்டான்.
ஆதினியோ தண்ணீர் தந்ததும் தனது வேலை முடிந்தது என்பது போல நழுவினாள்.
ஆதினி மகளுடன் அயன் எந்தளவு பாசமாக இருக்கின்றனர் என்று உன்னிப்பாக கவனித்தாள். பிரதாப் குழந்தையை பார்க்கின்றதாக ஏதேனும் ஒரு சூழலில் தெரிகின்றதா என்று.
அயன் தன் குழந்தை போல தான் தன் மகளை காண்பதை உணர முடிந்தது.
இதெல்லாம் தான் இருப்பதாலா? என்று மறைந்து நின்று கூட கவனித்தாள். அயன் அப்படி நடிப்பதாக தெரியவில்லை.
ஒருபக்கம் பிரதாப்பிற்கு துரோகம் செய்துவிட்டு மறுமணம் செய்ய போகின்றாயா? என்று மனசாட்சி கேள்வி எழுப்பியது.
மறுபக்கம் அக்ஷயாவுக்கு நல்ல தகப்பனாக அயன் இருப்பான் அதை கெடுக்க பார்க்கின்றாய் என்றும் மூளை அதட்டியது.
மனதிற்கும் மூளைக்கும் நடுவே சிக்கி தவித்து இருந்தாள்.
இங்கு காதலிப்பதாக மணப்பதாக கூறியவனோ குழந்தையிடம் அதிக நேரம் செலவழித்தான்.
ஆதினி காதுப்படவே, “அக்ஷயா குட்டி ஒரு வேளை அயலா உன்னை விட்டு கொஞ்ச நாளில் போயிட்டா என்ன செய்வ” என்று கேட்க, குழந்தையோ “அயலா… நான் அப்பாவோட விளையாடியதா நினைவில்லை. உன் கூட தான் விளையாடியிருக்கேன். அப்பா பைக்ல உன் கூட ரவுண்ட்ஸ் அடிச்சிருக்கேன். எனக்கு அப்பான்னா உன் நினைவு தான் வருது. நீ போனா தான். எனக்கு வலிக்கும். ஏன் அயலா… என்னை நீயும் விட்டுட்டு போயிடுவியா. நான் பேட் சைல்டா? அதான் யாருக்கும் என்னை பிடிக்கலையா?” என்று கேட்டு தேம்பினாள்.
“ஏய்… அக்ஷயா குட்டி…. நான் அந்த அர்த்தத்தில் கேட்கலை.” என்று கட்டியணைத்து முத்தங்களை பொழிந்தான்.
“நான் சும்மா விளையாடினேன்.” என்று சமாதானமும் செய்தான். குழந்தை ஒரு வழியாக உறங்கியபின், ஆதினியிடம் “குழந்தையிடம் இப்பவே ஏதாவது சொல்லி மனசளவில் என்னை பிரிய தயார்படுத்த நினைச்சேன். குழந்தை மனசு பூமாதிரி இருக்கு. சட்டுனு வாடறா. குழந்தையை விட்டு நான் எப்படி இருக்க போறேன்னு தெரியலை.” என்று நெடுமூச்சை வெளியிட்டு நகர்ந்தான்.
-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்
