அத்தியாயம்-3
அயன் தனக்கு தேவையானதை வாங்கிட வெளியே சென்றிருந்தான். ஜமுனா அதுவரை ஆதினியிடம், “ஏன்டிம்மா சமைக்க வீட்டுக்கு போறேன். ஏடாகூடமா ஏதாவது பண்ணி தொலைக்காத, அக்ஷயாவுக்கு எல்லாம் நீ தான் பார்க்கணும்.” என்றதும் புரிந்தது போல இமை மூடினாள்.
அக்ஷயாவை செல்வம் கடைக்கு அழைத்து சென்றார்.
அந்த நேரம் ஹாலில் பிரதாப் புகைப்படத்தில், “இப்படி விட்டுட்டு போயிட்டியே பிரதாப். என்னால உன்னோடவே வரவும் முடியலை. ரொம்ப பெரிய தண்டனை பிரதாப்” என்று அழுதாள்.
“இனி எனக்குன்னு யார் இருக்கா பிரதாப்” என்றதும் அயன் கதவருகே வர, அவசரமாய் புலம்பலை நிறுத்தினாள்.
அயன் இரண்டு கையிலும் பைகளாக எடுத்து வந்தவன், மாடியை பார்வையிட்டு நடந்தான்.
செல்வம் ஜமுனா இருவரும் அயனை மாடியில் தங்க கூறியிட, ஆதினி அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. அதிலேயே அவன் அங்கே தங்கும் முடிவோடு நடந்தான்.
மெதுவாக படியேறி நடக்க, ஆதினிக்கு அந்த நேரம் மாடியறையை முதலிரவு அறை போல அலங்கரித்தது நினைவு வர, வேகவேகமாய் மாடிக்கு ஓடினாள்.
அதற்குள் அயன் கதவை திறந்து முடித்திட, ஆதினியும் மூச்சு வாங்க அங்கே வந்தாள்.
கதவு திறந்ததும் மனதை மயக்கும் வாசம், மெத்தையில் காய்ந்த உதிரிப்பூக்களின் அலங்காரம் பார்த்ததும் அயன் அவசரப்பட்டு கதவை திறந்து விட்டோமோ என்று முழித்தான்.
செல்வம் சார் தானே அறையில் தங்க கூறியது, இதில் உள்ள பொருட்களை ஆதினி எடுக்காமல் உள்ளே நுழைந்தது தவறு தானே?!
அவசரமாய் அந்த மெத்தை பூக்களை எடுத்து குப்பையில் கொட்டினாள். சத்தமில்லாமல் அழுது கரைந்து மெத்தை விரிப்பை அப்படியே கீழே போட்டுவிட்டு படியில் இறங்கி ஓடினாள்.
அயன் தனது உடைமையை ஓரமாய் வைத்து, மெத்தையை சரிப்படுத்தி விரித்தான். கதவை அடைத்து முடித்தான்.
அக்ஷயாவை செல்வம் அழைத்து வந்து சேரவும், ஆதினி குழந்தையை வாங்கினாள்.
“அங்கிள்… இவர் இங்க இருப்பது சரியா?” என்று கேட்க, “தப்பில்லைம்மா… இருக்கட்டும்” என்றார்.
ஜமுனா சோறாக்கி, கொண்டு வரவும், “சாரி ஆன்ட்டி உங்களுக்கு ஒரு வேலையாகுது” என்று கூறியதும், “தினமும் நானும் கொண்டு வர முடியாதும்மா. ஆனா இந்த சூழலில் செய்து தர்றேன். பாரு… என் சமையல் அக்ஷயாவுக்கு பிடிக்கலை. காலையிலேயே காரமா இருக்குனு சொன்னா. கொஞ்சம் கொஞ்சமா கடந்து வந்து தினசரி வேலையை கவனி. அக்ஷயாவை பார்க்கணும்ல.” என்றதும் “சரிங்க ஆன்ட்டி” என்று கூறினாள்.
அவரவர் வாழ்க்கையை அவரவர் பார்க்கும் நேரமாக மாறியது.
அயன் அக்ஷயாவுடன் நேரம் செலவிட்டான். அக்ஷயாவுக்காக சமைத்து முடித்து பிரதாப் புகைபடத்தை வைத்து ஆதினி அமர்ந்துக் கொள்வாள். இப்படியே சில நாள் கடந்தது.
பிரதாப் இறந்து இன்றோடு பதினாறாம் நாள் துவங்க, ஆதினி பிரதாப்பிற்கு பிடித்ததை எல்லாம் தலைவாழை இலையில் வைத்து பூஜித்தாள்.
அக்ஷயா தான் ‘என்னதும்மா இது? எதுக்கும்மா? என்று சுரண்டி சுரண்டி கேட்டாள்.
ஆதினியால் பதில் சொல்ல முடியாத சூழல். அக்ஷயா பேசினால் அவளிடம் பேச்சை தொடர்ந்து அவளை இயல்பாக பேச வைக்க போராடிய ஆதினியே, அக்ஷயா பிரதாப் பற்றி பேசாமல் இருந்தால் போதுமென்று எண்ணினாள்.
அயன் மட்டுமே அக்ஷயாவை தூக்கிக்கொண்டு விளக்குவான்.
அவன் என்ன சொல்வானோ? ஏது சொல்வானோ குழந்தை முகம் கேள்வியை களைந்து பூவாக மாறி சிரித்து, விளையாடுவாள். அக்ஷயாவுக்கு அதுபோதுமென்ற உணர்வு.
செல்வம் ஜமுனவும் இன்று ஆதினி வீட்டில் சாப்பிட, ஜமுனாவோ அடுத்து ஆதினி வேலைக்கு போவதை பற்றி கேட்டாள்.
எப்படியும் பிரதாப்பின் சம்பளம் இழப்பீடு தொகை, இன்சூரன்ஸ் தொகை, என்று எந்த பக்கமிருந்து பணம் வந்தாலும், வேலைக்கு சென்று வந்தால் மட்டுமே தங்களின் அத்தியாவசிய செலவுகளை பார்க்க வேண்டுமென்று புரிய, வேலை தேடுவதாக கூறினாள்.
நல்லவேளை வீடு மட்டும் சொந்த வீடாக போனதால் தங்குவதற்கு அல்லாட தேவையில்லை என்ற நிம்மதி ஜமுனா செல்வத்திற்கு.
ஆதினிக்கோ பிரதாப் அப்படியே விட்டு சென்றதில் தான் வருத்தம்.
இப்படியாக அக்ஷயாவை பள்ளிக்கு அனுப்ப சமைத்திருந்தாள்.
அயனோ ஆதினியிடம் வந்து, “இங்க ஹோட்டல் கடை ரொம்ப தூரமாயிருக்கு. உங்களுக்கு சிரமம் இல்லைன்னா எனக்கும் சமைச்சி தந்துடறிங்களா?” என்று கேட்டுவிட்டான்.
ஆதினியோ அக்ஷயாவுக்கு டிபன் பாக்ஸ் எடுத்து வைக்கும் விதமாக யோசித்தவள், “ஈவினிங் சொல்லறேங்க” என்று முடித்து விட்டாள்.
அயனுக்கு ‘இப்பவே கூட சரிங்கனு சொல்லிடலாம். உடனே எதையும் சொல்ல மாட்டேங்கறா.’ என்று மனதுக்குள் குறித்துக் கொண்டான்.
ஆதினியோ தனக்கும் குழந்தைக்கும் என்று சாதம் வடித்திருக்க, அயன் கேட்டதில் உடனே கூறமுடியவில்லை. அவன் பிரதாப்பின் நண்பன் என்பதால் பக்கத்து வீட்டு ஜமுனா செல்வம் இருவரும் ‘அயன் தங்கட்டும் மா’ என்று கூறிவிட்டார்கள்.
இதில் உணவும் தானே வழங்குவதாக தெரிந்தால் ஊரார் என்ன பேசுவார்களோ என்று அஞ்சினாள்.
ஆனால் மனம் கேளாமால், “நீங்க வேண்டுமின்னா இன்னிக்கு சாப்பிடுங்க.” என்று குழந்தை அக்ஷயாவை அழைத்து வந்தவன், குழந்தைக்கு ஊட்டுகையில் அவனுக்கு உணவை வைக்க முற்பட, “இல்லிங்க.. பரவாயில்லை. எப்படியும் உங்களுக்கும் குட்டி பாப்பாவுக்கும் சமைச்சிருப்பிங்க. நான் கேட்டதும் இப்ப உங்க உணவை தர முன்வந்திருக்கலாம். நீங்க நாளைக்கே சமைச்சி தாங்க. அதுக்கூட ஜமுனா ஆன்ட்டியிடம் கேட்டுட்டு செய்யுங்க.” என்று முடித்தான்.
“இல்லை… நீங்க சாப்பிடுங்க” என்று தர, மறுத்துவிட்டான் அயன்.
குழந்தைக்கு மட்டும் ஊட்டிவிட்டு, வாயை துடைத்து, அவளை தன்னுடனே அழைத்து செல்ல மட்டும் அனுமதி வாங்கினான்.
ஆதினி சரியென்று தலையாட்டிட, ஹோட்டலுக்கு சாப்பிட சென்ற அயன், அக்ஷயாவுக்கு வாட்டர்மெலன் ஜூஸ் வாங்கி தந்து சாப்பிட வைத்து அவனும் சாப்பிட்டான்.
தனியாக ஆதினி சாப்பிட மனம் குடைந்தது.
பிரதாப் இல்லாமல் சாப்பிட பிடிக்கவில்லை. ஆனால் அடிக்கடி மயங்கி விழுந்து, ஜமுனாவிடம் திட்டு வாங்கிவிட்டாள். ‘உன் பொண்ணு அக்ஷயாவை வளர்க்க நீ திடமா இருக்க வேண்டாமா?’ என்று கண்டித்திருந்தார். ஒருவகையில் ஆதினிக்கு அந்த காரணத்தில் தான் உணவை வயிற்றுக்கு தள்ளினாள்.
பிரதாப் இல்லாமல் சரியாக பேசதெரியாத குழந்தைக்கு தானும் இல்லாமல் போனால் கஷ்டமென்ற நிலைப்பாட்டில் யோசித்தாள்.
ஜமுனாவிடம் அயன் சொன்ன விஷயத்தை பகிர, “அந்த தம்பிக்கு என்ன தனியாவா சமைக்க போற. நீ செய்யறதில் இரண்டு கைப்பிடி கூட போடப்போற. சமைச்சி தந்துடு. இங்க பாரு… ஊர் என்ன பேசும்னு யோசிக்காத.” என்று கூறியதும், கேட்டுக் கொண்டாள்.
இதற்கிடையே சாப்பிட்டு வந்த அக்ஷயாவோ, “ம்மி.. அயலா ஜூஸ் வானி தன்துச்” என்றாள் அக்ஷயா.
அன்னைக்கு மகள் கூறவருவது ஓரளவு புரிந்துவிட்டது. அயலன் அவன் சாப்பிட சென்றயிடத்தில் மகளுக்கு ஜூஸ் வாங்கி தந்துள்ளதை புரிந்துக் கொண்டாள்.
“சரி கொஞ்ச நேரம் தூங்கு” என்று மகளை அழைத்து தனியறைக்கு சென்று தாழிட்டு கொண்டாள்.
அயனும் மாடிக்கு சென்று விட்டு கதவை தாழிட்டு கொண்டான். எப்படியும் அக்ஷயா எழுந்தால் இங்கே நேராக வந்து விடுவாள். அதுவரை.. தனிமையென்ற இனிமையை அனுபவித்தான்.
அக்ஷயா இந்த சில நாளில் அப்படி தான். ஆதினி ஏதாவது வேலையில் இருந்தால், அல்லது வெறித்த சிந்தனையில் இருந்தாலும், நேராக அயனை தேடிக்கொண்டு சென்றிடுவாள்.
அதுவும் மழலைக்குரலில் ‘அயலா அயலா’ என்று அவனது பெயரை உச்சரித்து அன்ன நடையிட்டு செல்வாள்.
அதை கேட்க அயனுக்கு பிடிக்கும்.
பிரதாப் இல்லாத இடத்தை அயன் மெனக்கெட்டு முழுமையாக்க முயற்சி செய்தான்.
குழந்தை மனம் என்பதால் விரைவில் அக்ஷயா மனம் அயன் மீது அன்புக்குரியவர் என்ற இடத்தில் பதிந்தான்.
காலையில் ஆதினி சமைக்கின்றாளெனில், அவனாக அறைக்கு செல்ல தயங்கி எட்டியெட்டி பார்ப்பான். அக்ஷயா கண்ணை கசக்கி ஹாலுக்கு வந்துவிட்டால் போதும். ஓடிச்சென்று அவளை அணைத்து தூக்கி அவளுக்கான உதவிகளை செய்து தந்தை ஸ்தானத்தில் மாறிடுவான்.
பல் விலக்குதல் முகம் கழுவி துடைத்து விட்டு, பாலை ஆத்தி ஆதினி வைத்தால் அதை எடுத்து மகளுக்கு ஊட்டுவது போல மடியில் வைத்து சூடாக இருப்பதை ஆற்றி பருக தருவான்.
ஆதினி எட்டிப்பார்த்து சமையலில் கவனம் செலுத்துவாள்.
சில நேரம் பிரதாப் மகளை இப்படி அக்கறையாக பார்ப்பது நினைவு வந்து சமையல் அறையிலேயே கண் கலங்குவாள்.
அக்ஷயாவை அயன் பார்த்துக் கொள்வதில், சமையலை முடித்து, உணவை கட்டி கொடுத்து ஆதினி அழைத்து செல்வாள்.
மாலை மீண்டும் அழைத்து வந்ததும், ஆதினி உடை மாற்றிவிடுவாள். படிக்க அழைப்பது எல்லாம் அயன் பார்த்துக் கொள்வான்.
இடைப்பட்ட நிலையில் நேரம் நகர ஆதினி அக்ஷயா படிக்கும் பள்ளியில் வேலையை பார்க்க ஆசைக்கொண்டாள்.
அதன் பொருட்டு கேட்க, பள்ளி நிர்வாகமோ அக்ஷயா படிக்கும் இடத்தில் வேலை இல்லை என்று கூறிவிட்டது. ஆனால் பக்கத்தில் அவர்கள் மற்றொரு பள்ளியில் சொல்லி தர ஆட்கள் வேண்டுமென்று அங்க செல்ல கூறினார்கள். பத்தாவது படிக்கும் மாணவர்களுக்கு வகுப்பெடுக்க செல்வதால் ஆதினிக்கு சம்பளம் நன்றாக தான் பேசப்பட்டது. ஆனால் அக்ஷயாவை பார்த்துக்கொள்ள சிரமமாக மாறுமென யோசித்தவள் அதை ஜமுனாவிடம் பகிர்ந்தாள்.
அந்த நேரம் அயன் அக்ஷாயாவுடன் விளையாடியபடி கேட்க நேர்ந்ததால், “உங்களுக்கு அப்ஜெக்ஷன் இல்லைன்னா, அக்ஷயாவை நான் அழைச்சிட்டு வந்து பார்த்துக்கறேன்.
என் மேல நம்பிக்கை வச்சா அக்ஷயாவை பார்த்துக்கற பொறுப்பை தர சொல்லுங்க ஆன்ட்டி.
எப்படியும் அக்ஷயாவை அழைச்சிட்டு வந்து, அவளை ரெப்பிரஷ் பண்ண வச்சி, பாலை குடிக்க வச்சிட்டு, கொஞ்ச நேரம் விளையாட விட்டு, பிறகு படிக்க வைக்கறது நான் பார்த்துப்பேன். அதுக்குள்ள அக்ஷயா அம்மா வந்துட்டா அவங்க பார்த்துக்க போறாங்க.” என்று ஜமுனாவிடம் பேசிவிட்டு ஆதினியை கண்டான்.
ஆதினியோ அயன் பேசி முடித்து அவளை காணவும், சற்று யோசனையுடன் தயங்கினாள்.
இப்பொழுது உள்ள காலத்தில் சொந்த தந்தையே மகளை பாலியல் சீண்டல் புரிவதாக செய்தி கேட்டறியும் அவலம் இருக்க, மகளை அயனுடன் அனுப்ப தயக்கம் வருவது நியாயம் தானே?!
ஆதினியோ, “ஸ்கூல் போகறப்ப சொல்லறேன் ஆன்ட்டி. அவரும் ஏதாவது வேலைக்கு போவார் தானே?” என்று பேச்சை முடித்துக் கொண்டாள்.
ஆதினி மகளை தூக்க செல்லவும், “யோசிக்கட்டும் ஆன்ட்டி. என்னிடம் தர யோசிப்பதில் நியாயம் தானே. நான் என்னயிருந்தாலும், ஒரு முகம் தெரியாத மனுஷன். பிரதாப் பிரெண்ட் என்ற ஒரே காரணத்தால நம்பிக்குரியவனா இருக்க முடியாதே. அவங்க என்ன முடிவெடுத்தாலும் கேட்டு சொல்லுங்க. இப்ப எல்லாம் சொந்தபந்தம் தெரிந்தவங்க கூட குழந்தையை அனுப்ப தயக்கம் இருக்கும்” என்று அயன் வெளியே கடைக்கு சென்றான்.
ஆதினிக்கு அயனின் மனதை நோகடித்ததாக தோன்றிது. ஆனாலும் கணவரை இழந்த இந்த நிலையில், பலவிதமாக சிந்தித்து முடிவெடுப்பதில் ஆதினி தாமதமாக்கினாள். அதுவும் குழந்தை விஷயத்தில் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அவசரப்படக்கூடாதே.
-தொடரும்.
Praveena Thangaraj
