அத்தியாயம்-2
இடுகாட்டிலிருந்து வீட்டிற்கு வரும் வழியில் அயனை பற்றிய விவரத்தை செல்வம் சிறுகுறிப்பாக கேட்டிருந்தார்.
பிரதாப்புடன் சேர்ந்து வேலை செய்ததாகவும், தீவிபத்துக்கு முன்னிருந்தே பிரதாப்பும் அவனும் வேலையிலிருந்து வெளிவந்து இயல்பான வாழ்வில் வாழ ஆசைக்கொண்டதாகவும், அதற்குள் இவ்வாறு நிகழ்ந்துவிட்டதென உரைத்தான்.
அயனுக்கு குடும்பமென்று யாருமில்லை என்று கூறியிருக்க, அடுத்து என்ன செய்வதாக கேட்டதற்கு, கையை விரித்தான்.
தற்போது தங்குவதற்கு இடமிருந்தால் போதும், கொஞ்ச நாள் கழித்து தான் வேலையை பற்றியே யோசிக்க வேண்டும் என்றுரைத்தான்.
நண்பனின் மரணம் அந்தளவு தன்னை வெகுவாய் பாதித்ததாக சொல்லவும் செல்வம் ஜமுனா இருவரும் கூடவே தான் இருந்தனர்.
அக்ஷயா தந்தை உடையை அயன் அணிந்ததாலோ அல்லது அன்னை தன்னை கவனிக்காமல் தந்தை புகைப்படத்தையே பார்வையிடவும், தன்னை அணைத்து அன்பாய் ஊட்டி விடும் அயனை கண்டு, அவனோடு ஒட்டிக்கொண்டாள்.
அக்ஷயாவுக்கு ஊட்டிவிட்டு வாயை துடைத்து, தண்ணீர் பருக வைத்தவன், “செல்வம் சார்… இங்க ஏதாவது தனி வீடு இருக்கா? சிங்கிள் பெட்ரூம், அட்டாச் பாத்ரூம் இருந்தா கூட போதும். பிரதாப் மரணத்தை நேர்ல பார்த்ததிலருந்து ஒரு மாதிரி இருக்கு. ஜஸ்ட் பிரதாப் மரணத்தை மறக்கற வரையாவது எனக்கான தனிமை வேண்டும்.” என்று கேட்டான்.
“எங்க வீட்டிலேயே கூட இரண்டு ரூம் இருக்கு. ஆனா வாரம் வாரம் பிள்ளைங்க வந்துட்டும் போயிட்டும் இருப்பாங்க. தனி வீடுன்னா.. ஒரு வாரத்துல தேடி பார்க்கலாம்.” என்றார்.
“அப்படியா… ஒரு வாரம் ஆகுமா? அப்ப… இங்க ஏதாவது பக்கத்துல ரூம் கிடைக்குமா? லாட்ஜ் ஹோட்டல் மாதிரி?” என்று கேட்டான்.
“இங்க சுற்றுவட்டாரத்துல இல்லை. அரை மணி நேர டிராவல் பண்ணினா உண்டு.” என்றார்.
“இல்லை… அக்ஷயாவை நினைச்சதும் பார்த்து பேசற அளவு பக்கத்துல இருந்தா போதும். ரொம்பவும் தூரம் வேண்டாம். இந்த ஏரியாவுல வீடு இல்லையா?” என்றான்.
“தேடணும்.. தேடினா கிடைக்கலாம்” என்றார் ஜமுனா.
“ஓ… இப்ப எங்க தங்கறதுனு தெரியலையே” என்று கூற, அக்ஷயாவோ அயன் தோளிலேயே உறங்கியிருந்தாள்.
“பாப்பாவை எங்க தூங்க வைக்க?” என்று கேட்டு மாடி அறையையும், கீழேயிருந்த அறையையும் பார்வையிட்டான்.
“அந்த ரூம்ல படுக்க வையுங்க தம்பி” என்று ஜமுனா சுட்டிக் காட்ட, உடை மாற்றிய அறைக்கே சென்றான்.
பிரதாப்-ஆதினி திருமண புகைப்படம் அவனை வரவேற்றது. அதில் மணநாள் போட்டு இருந்ததை கண்டான். ஏனோ இதயம் அழுத்த, அக்ஷயாவை அங்கிருந்த மெத்தையில் படுக்க வைத்துவிட்டு, நிமிர்ந்தான்.
காதலித்து மணந்ததால் அறையெங்கும் ஆதினி-பிரதாப் புகைப்படம் அதிகமாகவே ஆக்கிரமித்து இருந்தது.
அயன் மெதுவாக வெளிவர, “நைட்டு தூக்கமில்லை.” என்று செல்வம் கண் அசரவும், “எனக்கும் தூக்கமில்லை சார். கொஞ்ச நேரமாவது படுக்கணும்” என்றவன் தன் உடலை எங்காவது சாய்த்திட நினைத்தான்.
ஆனால் இதுவொன்றும் அவன் வீடு இல்லையே.
“தம்பி… நீங்களும் கூட ரூம்ல தூங்குங்க. எப்படியும் ஆதினியா உங்களிடம் எதுவும் கேட்க மாட்டா. அவளுக்கு சுயநினைவே இன்னமும் வரலை. பைத்தியக்காரி மாதிரி பிரதாப் போட்டோவை இமைக்காமா பார்த்திட்டு இருக்கா பாருங்க.
அவ வீட்ல வந்து நாம இருக்கோம் என்றது கூட அவளால் உணரமுடியலை.” என்றார் ஜமுனா.
செல்வமோ, “ஆமா தம்பி.. எவ்வளவோ உதவி செய்தும் உங்களை கவனிக்க முடியாத சூழலில் ஆதினி இருக்கலாம்.
நீங்க தூங்குங்க. இங்க யார் இருக்கா.” என்று கூற, “சொன்னாலும் சொல்லாட்டியும் என்னால நிற்க முடியலை சார். பிரதாப் இறப்பை நேர்ல பார்த்ததில் நடுக்கம் இன்னமும் இருக்கு. தனியா போனா நானுமே பைத்தியக்காரனா மாறிடுவேன். இங்க இருந்தாலாவது அக்ஷயா முகத்தை பார்த்தா என் நண்பன் இழப்பை ஈடுக்கட்ட முயற்சிப்பேன்” என்று பேசினான்.
ஜமுனாவிற்கும் செல்வத்திற்கும் பாவமாக இருந்தது.
அயன் உறங்கவும் செல்வமும் ஜமுனாவும் அவர்கள் வீட்டிற்கு வந்தார்கள். அவர்கள் வீடும் நேற்றிரவிலிருந்து போட்டது போட்டபடி உள்ளதே.
இரவெல்லாம் ஆதினி அருகேயிருந்ததால் கண்ணயர்ந்தார்கள்.
இருவருக்கும் இருந்த களைப்பில் அவர்களும் உறங்க முயன்றார்கள்.
சற்று இரண்டு மணி வரை நேரம் நகர்ந்திருக்க, “மம்மி மம்மி..” என்ற அலறல் அக்ஷயா கத்துவதை ஜமுனா வீட்டில் கேட்க, செல்வமும் ஜமுனாவும் பதறியடித்து ஓடி வரவும், ஆதினி கையில் கத்தியை வைத்து அவளை அவளே அழிக்க முயல, அதை அயன் தடுத்தவனாக பிடித்தபடி போராட்டம் நிகழ்ந்தது.
அதை கண்டு தான் அக்ஷயா கத்தி கூச்சலிட்டாள்.
செல்வம் ஜமுனா வரவும், அயன் இருந்த கோபத்தில் கத்தியை பிடுங்க முயல, கத்தி அவன் புறம் திரும்பி கையை பதம் பார்த்தது.
ரத்தம் சொட்டவும் ஆதினி பயத்தில் கத்தியை விடுவித்தாள்.
“என்ன ஆதினி பண்ணற? அய்யோ குழந்தை பயப்படுது பாரு. இப்படியா முடிவெடுப்பா? நீயும் பிரதாப்பை மாதிரி குழந்தையை அனாதையா விட்டுட்டு போக போறியா? அப்படியென்ன அவசரம்.
குழந்தை தந்தையில்லாம அடுத்து தாயும் இல்லாம பண்ணிடுவ போலயே?” என்று அதட்ட ஆதினி குலுங்கி குலுங்கி அழுதாள்.
அதற்குள் அயன் கத்தியோடு சமையல் அறைக்கு சென்று நீரை திறந்து கையை அளசினான். செல்வம் அயனுக்கு முதலுதவி செய்ய முனைய அவனிடம் உள்ள கைக்குட்டையால் மூடி சமாளித்தான். .
“தம்பி ஹாஸ்பிடலுக்கு வர்றிங்களா?” என்று கேட்டார்.
அயனோ, “இல்லை அங்கிள்.. பரவாயில்லை… கத்தி வெட்டு தானே பார்த்துக்கலாம்.” என்றவன் ஆதினியை தான் வினோதமாக கவனித்தான்.
“என்ன காரியம் பண்ண பார்த்தம்மா. ஐந்து வயசுல குழந்தை இருக்கு. அவளை பத்தி கொஞ்சமும் யோசிக்கலையா?” என்று கேட்க, “என்னால பிரதாப் இல்லாம இருக்க முடியாது அங்கிள்.” என்று அழுதாள்.
ஜமுனாவோ ஆதினி தலைக்கோதி, “குழந்தையை பாரு.. இரண்டே நாளுல அவ கண்ணுல எவ்வளோ மிரட்சி. ஏற்கனவே பேச்சு சரியா வராத குழந்தை. இப்ப தான் அம்மா அப்பானு உறவு முறை கூறி ஏதோ இரண்டு மூனு வார்த்தை தெளிவா பேசறா. இந்த நேரம் அவ கண்ணு எதிர்ல இதெல்லாம் நடந்தா அவ மனநிலை பாதிக்கும் ஆதினி.” என்று கூற, ஆதினி மகளை கண்டு கூடுதலாக துடித்தாள்.
”நேத்து எங்களுக்கு கல்யாண நாள் ஆன்ட்டி. என்னை நல்லா டிரஸ் பண்ணி ரெடியா இருக்க சொன்னார்.
ஊர் சுத்திட்டு டின்னர் ஹோட்டலில் முடிச்சிட்டு அங்கயே கேக் வெட்டி, வீட்டுக்கு வருவதா பிளான்.” என்று முகத்தை மூடி அழுதாள்.
அயன் ஆதினியை கண்டு கைக்கு கட்டு போட்டதும் அக்ஷயாவே அவனிடம் வந்து நின்றாள்.
தனது கை வலியை பொருட்படுத்தாது அக்ஷயாவை அணைத்து தூக்கி கொண்டான்.
செல்வமும் ஜமுனாவும் ஏகப்பட்ட அறிவுரையை அள்ளி வழங்க அயனோ அக்ஷயாவை தூக்கி கொண்டு பால்கனி வந்தான்.
“உன் பெயர் என்ன?” என்றான் குழந்தையிடம்.
“அ.. அக்ஷயா” என்றாள் மழலை.
“என்ன ஸ்டாண்டர் படிக்கறிங்க” என்றதற்கு “எல்.கே.ஜி.” என்றாள்.
“அப்பா பிடிக்குமா அம்மா பிடிக்குமா?” என்று கேள்வி கேட்டான்.
“அப்பா.” என்றாள்
“ஓ… அப்பாவா? பட் பிரதாப் சாமியை பார்க்க போயிருக்கானே. இனி அம்மாவை நீ பார்த்துக்கோ. அப்பா திரும்ப வர்றவரை அம்மாவை நீ தான் பார்த்துக்கணும்.” என்று கூற, குழந்தை ஆதினியை கண்டு அயனை கண்டாள்.
“அம்மா அப்படி தான்.. கொஞ்ச நாள்ல சரியாகிடுவாங்க. உன்னை பத்தி யோசிப்பாங்க.” என்று கூற, அயனை கண்டு என்ன நினைத்தாளோ அவன் நெஞ்சில் சாய்ந்து சோகமானாள்.
அயனிற்கு அந்த உணர்வு புதுவிதமாக இருந்தது.
“முகமலம்பிட்டு வாம்மா… பிரதாப்பை நினைச்சு பிஞ்சு குழந்தையை கவனிக்காம இருக்காத” என்று ஜமுனா எழுப்ப, முகமலம்ப குளியலறை சென்றாள்.
செல்வமும் ஜமுனாவும் அயனிடம் வந்து, “என்ன தம்பி இந்த பொண்ணு பொசுக்குன்னு குழந்தையை கூட யோசிக்காம கத்தியை எடுத்துட்டா? எந்நேரமும் கூடவே இருக்க முடியுமா? நீங்க இருந்திங்க காப்பாத்தினிங்க.” என்று புலம்பினார் ஜமுனா.
“ஏன் தம்பி நீங்க தனியா தங்கனும்னு சொன்னிங்க. இங்க ஆதினியும் சரியா இருக்கற மாதிரி தெரியலை. நீங்க ஏன் இந்த வீட்ல இருக்க கூடாது. மாடில ஒரு தனி ரூம் அட்டாச் பாத்ரூம் இருக்கும். நீங்க பிரதாப் பிரெண்ட் தானே. அந்த பொண்ணு ஆதினிக்கிட்ட தங்கறதை பத்தி பேசவா? நாங்க இரண்டு பேரும் பக்கத்து வீட்லயிருந்து வந்து அடிக்கடி பார்த்துக்கறோம். ஆனாலும் கூடவே உங்களை மாதிரி ஒருத்தர் இருந்தா ஆதினிக்கு எப்படியோ அக்ஷயாவுக்கு நல்லதா தோணுது. நீங்களும் குழந்தை முகத்தை பார்த்தா நண்பன் இறப்பை மறப்பிங்க” என்று கேட்டார் செல்வம்.
அயன் நெற்றியை கீறியபடி, “சார்.. நான் தங்கறது பெருசுயில்லை. அந்தப்பொண்ணு எப்படி எடுத்துக்கும்னு தெரியாது இல்லையா? அவங்களிடம் கேளுங்க. சம்மதிச்சா.. நான் இருக்கேன்.” என்றான் எதார்த்தமாக .
ஜமுனாவோ “ஆதினி தன்னை மறந்து இருக்கு. இந்த நேரம் இதெல்லாம் யோசிக்குமா?” என்றாலும், “இல்லம்மா ஆதினியிடம் கேட்டுட்டு முடிவு பண்ணுவோம்.” என்று செல்வம் முடிவெடுத்தார்.
முகம் அலம்பிய கண்ணாடியில் ஆதினிக்கு இதெல்லாம் செவியில் விழுந்தது.
‘என்ன காரியம் செய்ய பார்த்தாய்?! நான் இறந்தது விபத்து. நீ செய்ய முயல்வது தற்கொலை. குழந்தை அக்ஷயா உனக்கு பின் அனாதையாக நிற்க வைக்க பார்த்தாயா?’ என்று பிரதாப் உருவமெடுத்து வந்து கேள்வி எழுப்ப திடுக்கிட்டாள்.
ரோட்டில் பேச தெரியாமல் கிழிந்த உடையில் அக்ஷயா யாசகம் கேட்டு நிற்கும் அவலநிலையினை நினைத்து பார்த்து அஞ்சினாள்.
தனியாக இருந்தால் தற்கொலை எண்ணம் தூண்டுமோ? பிரதாப் நண்பரை தங்க கேட்டால் இருக்க கூறலாமா? அவரது கையை வேறு கத்தியால் கிழித்துவிட்டேனே! என்று முகத்தில் தண்ணீரை அடித்து சத்தமின்றி அழுதாள்.
பிரதாப்பின் நண்பனை கண்டால் கெட்டவராக தெரியவில்லை. பிரதாப் மரணத்தை வேறு நேரில் கண்டுள்ளதாக பேசியது செவியில் கேட்டதால், மகளும் அவனிடம் இயல்பாக பேசியதில் இருக்க கூறிடலாமென முடிவெடுத்தாள்.
வெளியே வந்ததும் துண்டில் முகம் துடைக்க, “அம்மா” என்று அக்ஷயா அழைக்க, கை நீட்டி மகளை வாங்கினாள்.
அக்ஷயாவை நெஞ்சோடு அணைத்து பிறை நெற்றியில் முத்தமிட்டாள் ஆதினி.
இனி எனக்கு இவள் மட்டுமே என்ற பிடிப்பு அதிகமானது.
செல்வம் வேறு அயலனை பற்றி கூறி தங்க வைக்க கேட்க, மகளை மடியில் வைத்தவள், குழந்தையின் தலைகோதியபடி “பிரதாப்காக வந்தவர், பிரதாப் இறப்பை நேர்ல பார்த்தவர், இருக்கட்டும் அங்கிள்.” என்று விரக்தியாக கூறிவிட்டாள்.
ஜமுனாவோ நிம்மதியாக உணர்ந்தவரோ “அப்பறம் என்ன தம்பி. உடைமைகள் இருந்தா எடுத்துட்டு வந்து ரூம்ல வச்சிக்கோங்க” என்று அறிவுறுத்த அயன் தலையாட்டினான்.
“நீங்க கூடயிருங்க அக்கா… நான் எனக்குன்னு சில திங்க்ஸ் வாங்கிட்டு வந்துடறேன்” என்று கூறியவன் ஆதினியிடம் எதுவும் பேசாமல் அகல, செல்வமோ “தம்பி எதுக்கும் திரும்பி வர்றப்ப டாக்டரிடம் கையை காட்டிடுங்க. கத்தியோட ஆழம் பார்த்து, மருந்து கொடுப்பார்ல” என்றதும் அதற்கும் தலையாட்டிக் கொண்டான்.
கத்தியால் தன்னை தாக்கிட முடிவெடுத்த ஆதினிக்கு அவனது கையை கிழித்ததற்கு மன்னிப்பு கேட்க நிமிரவும் அஞ்சினாள்.
அவளுக்கு அவள் செய்த தவறு விளங்கியது. முகம் தெரியாதவனிடம் மன்னிப்பும் கேட்க இயலாமல் மகளை தான் இறுக்கினாள்
-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்
