அத்தியாயம்-1
“அக்ஷயா அக்ஷயா… டிவி வால்யூமை குறைச்சி வையு” என்று ஆதினி தன் ஐந்து வயது மகளிடம், ஆணையிட்டு கொண்டிருந்தாள்.
அக்ஷயா செவிக்கு அன்னை ஆதினியின் குரல் கேட்கா தூரத்தில் கார்டூன் உலகத்தில் மூழ்கியிருந்தாள்.
ஆதினியோ தன் கண்களுக்கு ஐலைனர் காஜோலிட்டு லேசான உதட்டு சாயம் பூசிவிட்டு, “எத்தனை முறை கத்தறேன். டிவி சத்தத்தை குறைக்காம இருக்கா. இவளோட அப்பா என்னடானா, கல்யாண நாள் அதுவுமா வீட்டுக்கு வந்துடுவேன்னு சொன்னார். இன்னமும் ஆளைக்காணோம்.
இப்படி ஆறு மாசம் பத்து மாசம்னு வேலை வேலைனு இருப்பவருக்கு, வீடு எதுக்கு? பொண்டாட்டி எதுக்கு? அழகான குழந்தை எதுக்கு?” என்று பிரதாப்பை திட்டிக் கொண்டிருந்தாள்.
பிரதாப் ஆதினியின் கணவன். அக்ஷயாவின் தந்தை. பெங்களூரில் உள்ள இஸ்ரோவில், பராமரிப்பு பிரிவில் வேலையில் இருக்கின்றான். சமீபகாலமாக வேலையை விட்டுவிட்டு வரும் அளவிற்கு பணிசுமையால் மனழுத்தம் அதிகரித்துள்ளது.
சென்னையில் சொந்த வீட்டில் குழந்தையையும் மனைவியையும் விட்டுவிட்டு இங்கே பராமரிப்பு வேலையில் நல்ல சம்பளம் கிடைத்து என்ன புரோஜனம். மகளுக்கு ஐந்து வயதாகியும் இன்னமும் சரியாக பேசவில்லை. தாய் தந்தையற்ற தனக்கும் தன் மனைவிக்கும், தன் குழத்தை அக்ஷயா மட்டுமே உலகம். அப்படியிருக்க, எத்தனையோ டாக்டரிடம் அவளை காண்பித்தப்பின் அவர்கள் கூறியது, குழந்தைக்கு குரல் நாண்கள் எல்லாம் சரியா இருக்கு. குழந்தை பேசாததுக்கு மருத்துவக்காரணம் எதுவுமில்லை. அந்த குழந்தையோட பேரண்ட்ஸ் எப்பவும் அதிக கவனம் செலுத்தி கூடவே இருந்து பேச சொல்லித்தர கூறிவிட்டார்கள்.
குழந்தையும் ப்ரி.கே.ஜியில் சேர்ந்தப்பின் ஒன்றிரண்டு வார்த்தை கோர்த்து பேசுகின்றாள். ஆனால் மற்ற குழந்தைகளை போல சரளமான பேச்சு இன்னமும் வரவில்லை.
அதற்காகவாது குழந்தையோடு வந்து நேரத்தை செலவழிக்க எண்ணுவான் பிரதாப்.
அவன் நேரமோ என்னவோ பராமரிப்பாளனாக நல்ல சம்பளம் இருந்தும் லீவு இல்லாது தவிக்கின்றான்.
இன்று திருமண நாள் என்று கூறி, விடுமுறையை எடுத்து வந்துவிடுவதாக வாக்கு தந்திருந்தான் பிரதாப்.
அதற்கு தான் ஆதினி தன்னை அலங்காரம் செய்தவளாக, பிரதாப் இன்னும் வராததால் அவனை திட்டிக்கொண்டு புலம்புகின்றாள்.
‘பெங்களூரில் இருந்து சென்னை வந்துவிடுவேன். அம்மாவும் மகளும் அலங்கார பொம்மையாக இருங்கள். வீட்டுக்கு வந்ததும் அள்ளிக்கொண்டு ஹோட்டல் செல்வோம்’ என்று வாக்கு தந்து கூறியிருக்க, இன்னமும் காணவில்லை.
வானம் வேறு இடிஇடிக்க, “அய்யோ… கிளம்பற அவசரத்தில் மாடில காயற துணியை எடுக்கலை.” என்று அதை எடுக்க ஓடினாள் ஆதினி.
அவள் சென்று துணியில் மாட்டிய க்ளிப் எடுத்ததும், சடசடவென மழை பொழிய துவங்கியது.
“அச்சோ… உலர்ந்த துணியெல்லாம் நனைந்திடுச்சு.” என்று புலம்பியபடி ஈரமான உடையை எடுத்து படிக்கட்டில் நடந்தாள்.
அங்கே மொட்டை மாடிக்கு செல்லும் பொழுது தனியறை வித் அட்டாச் பாத்ரூம் இருக்கும். அந்த அறையையும் முதலிரவு அறை போல அலங்கரித்து வைக்க பிரதாப் கூறியிருக்க, கொஞ்சம் போல மல்லிப்பூவும் ரோஜா மலராலும் ஆதினி மெத்தையை அலங்கரித்து வாசனை திரவியம் அடித்து, ஆங்காங்கே கேன்டில் கூட பொறுத்தி வைக்க தயாராக இருந்தாள். ஹோட்டலில் சாப்பிட்டு ஊர்சுற்றி வந்தப்பிறகு அக்ஷயாவை கீழே தங்கள் அறையில் உறங்க வைத்து இங்கே கொஞ்ச நேரம் தனிமையில் பேசி கூடலில் கலந்திட வரலாமென்ற திட்டம்.
‘ஆசை ஆசையா கட்டில் அலங்காரம் பண்ணி எல்லாம் தயாரா இருக்கு. இந்த பிரதாப் ஏன் தான் லேட்டா வர்றானோ. கடைசி நேரம் வீட்லயே தோசை நூடுல்ஸுனு டின்னர் சாப்பிட வைக்க போறான்.’ என்று கணவரை நொடிக்கொருமுறை திட்டி கீழே வந்தாள். அவ்வறையை அக்ஷயா பார்த்திடாமல் இருக்க கவனமாய் பூட்டி வைத்தாள்.
அதேநேரம் ‘கார்டூன் நெட்வொர்க்’ போரடிக்கின்றதென ‘போகோ’ மாற்றியபடி இருந்த அக்ஷயாவின் கரம் செய்தி அலைவரிசையில் செல்ல, ‘இஸ்ரோவில் சிறு தீவிபத்து. பரமரிப்பிற்கான இடங்களில் வேலை செய்தவர்கள் ஐந்து பேர் மரணம்’ என்று ஓட, துணியை அப்படியே சோபாவில் போட்டுவிட்டு அக்ஷயாவிடமிருந்து ரிமோட்டை பறித்து சத்தத்தை கூட்டினாள்.
இறந்துப் போனவர்களின் பெயர்கள் ஶ்ரீதரன், சலீம், ரகுநாத், பெருமாள், பிரதாப்.’ என்று அவரவர் புகைப்படத்துடன் இறந்த சடலத்தை காட்டவும், ஆதினி தலையை மறுப்பாய் ஆட்டியபடி “நோ.. நோ… நோ…” என்று கத்தினாள்.
அக்ஷயா தன்னிடமிருந்து அன்னை ரிமோட் பிடுங்கி செய்தியை கேட்டு ஆதினியின் அலறலில் பயந்தவளாக மிரண்டாள்.
ஆதினி குரல் கேட்டு பக்கத்து வீட்டில் உள்ளவர்களான ஜமுனா செல்வம் ஓடி வந்தார்கள்.
ஆதினி தலையில் அடித்து தன்னிலை மறந்து அழ, அக்ஷயா அன்னையை கண்டு மிரண்டு சோபாவில் ஒதுங்கி விழித்திருந்தாள்.
டிவியில் இன்னமும் இஸ்ரோவில் ஏற்பட்ட தீவிபத்தை பற்றி செய்தி வெளியாகிக் கொண்டிருக்க, நிலைமையை யூகித்து கொண்டார்கள் ஜமுனாவும் செல்வமும்.
“ஆதினி” என்று அவளருகே செல்ல, “ஆன்ட்டி… ஆன்ட்டி பிரதாப்… பிரதாப்.. இறந்துட்டதா செய்தியில் சொல்லறாங்க. எனக்கு பயமாயிருக்கு ஆன்ட்டி” என்று கதறி அழுதாள்.
“என்னங்க அக்ஷயா மிரளுறா பாருங்க. அவளை என்னனு பாருங்க” என்று ஜமுனா தன் கணவர் செல்வத்திடம் கூற, அவரோ அக்ஷயாவை அணைத்து தூக்கினார்.
ஜமுனாவோ ஆதினியை சமாதானப்படுத்த முயன்று தோற்க, டிவியில் அதே செய்தியை மீண்டும் மீண்டும் ஒளிப்பரப்பினார்கள்.
செல்வம் தான் பிரதாப்பின் அலுவலக எண்ணிற்கு அழைத்து கேட்கின்றேன் என்று தொடர்பு கொண்டார்.
சில நொடிகளிலேயே, டிவியில் வந்த செய்தி உண்மை என்று ஊர்ஜிதமானது.
இறந்தவர் உடலை வாங்கிச்செல்ல அழைத்திருக்க, இங்கே பிரதாப்பிற்காகவும், ஆதினிகாகவும் யாருமில்லையே என்றுரைத்திட, அவர்களாகவே அலுவலகத்திலிருந்து பிரதாப்பின் நண்பரிடம் பிரதாப் உடலை அனுப்பி வைப்பதாக தெரிவித்தனர்.
சிற்சில பார்மாலிடிஸ் முடித்து இரவுக்குள் உடல் வந்து சேருமென்று தெரிவித்து போனை துண்டித்தனர். அங்கே மேற்படி விபத்து நேராமல் காத்திடவே ஓட்டமெடுத்தனர்.
ஆதினியோ ”இன்னிக்கு எங்களுக்கு கல்யாண நாள் ஆன்ட்டி. என்னை இந்த அலங்காரம் செய்து இருக்க சொன்னவர் அலங்கோலமா மாத்திட்டாரே. என்னையும் குழந்தையையும் தனியா தவிக்க விட்டுட்டு போக, இவருக்கு என்ன தைரியம்” என்று ஒப்பாரி வைத்தாள்.
ஜமுனாவோ என்ன சொல்லி சாந்தப்படுத்த என்று புரியாமல் கூடுதலாக அழுகையை வெடித்தது அவ்விடம். காலையில் தானே அவரும் மணநாளிற்கு வாழ்த்தினார்கள்.
அக்ஷயா மட்டும் செல்வம் அழைத்து சென்று தண்ணீர் குடிக்க வைத்து ‘அப்பா இனி வரமாட்டார். அம்மா இப்படி தான் அழுவாங்க. நீ பயப்படாத” என்று கூறி அழைத்து வந்தார்.
அதற்குள் பிரதாப்பிற்கும் ஆதினிக்கும் தெரிந்த நண்பர்கள் சிலருக்கு விஷயம் தெரிவிக்கப்பட, நட்புகள், தூரத்தில் சில உறவுகள் என்று வீட்டில் சூழ்ந்தனர்.
பெரும்பாலும் கல்லூரியிலும், பணியிடத்திலும் வேலை செய்தவராக கூடத்தில் நிறைந்தனர்.
செல்வம் ஜமுனாவுக்கும் ஒரு மகள் மகன் இருக்கின்றனர். அவர்களும் வேலை விஷயமாக வெவ்வேறு ஊரில் வசிப்பதால் மத்திய வயதான இவர்கள் ஆதினிக்கு பக்க பலமாக கூடவே இருந்தனர்.
நள்ளிரவு தாண்டி, நேரம் கழித்து பிரதாப் உடலை அமரர் ஊர்தியில் வந்திறங்கியது.
பிரதாப் உடலை இறக்கி வீட்டுக்குள் கொண்டு வந்து வைக்க, “மெதுவா.. மெதுவா.. இறக்குங்க. இறந்தப்பிறகும் ஒரு ஆன்மாவுக்கு மரியாதை தர தெரியாது.” என்ற அயனின் ஆண்மை ததும்பும் கட்டளை குரலில் கட்டுப்பட்டு, “சாரி சார்” என்று பிரதாப் உடலை பத்திரமாக இறக்கி வீட்டுக்குள் எடுத்து வந்தனர்.
ஆதினி வாசல் வரை ஓடிவந்து அழ, ஜமுனாவால் ஆதினியை கட்டுப்படுத்த முடியவில்லை.
பிரதாப் பத்திரமாக ஐஸ் பெட்டியில் வைத்திடும் வரை, அவளது கரம் மற்றவரை உதிர்த்து, பிரதாப்பை அணைக்கவே ஓடியது.
அயன் செல்வத்திடம், “சார் ஆல்ரெடி தீயில் பிரணவ் உடல் சேதமடைந்துடுச்சு அதனால அவங்களை ரொம்ப நெருங்க விடாதிங்க” என்று தகவல் கூறவும் ஆதினி அதைக்கேட்டு துடித்துவிட்டாள்.
”அய்யோ… அக்னியை சுத்தி வந்து என் கழுத்தில தாலி கட்டின இந்த நாளில், உன்னை அக்னியே சூழ்ந்துடுச்சா பிரதாப். நீ எப்படி துடிச்சியோ, ஏன்ட என்னை பத்தி யோசிக்கலையா. நம்ம குழந்தையும் நானும் நீ இல்லாம எப்படி இருப்போம்” என்று துடிதுடித்து அழுதாள்.
பிரதாப்பின் முகத்திலிருந்து துணி விலக, வெண்ணிறமான தேகம் கருமையாக காட்சியளிக்க ஆதினி அக்காட்சியை கண்டு மயங்கி சரிந்தாள்.
ஆதினி மீண்டும் கண் திறக்கும் நேரம் அதிகாலை நேரமாகியிருந்தது. பிரதாப்பின் நண்பனான ‘அயன்‘ உடலை அடக்கம் செய்ய தூரிதப்படுத்தினான்.
ஆதினியோ பேயறைந்தது போல ஸ்தம்பித்து விட்டாள். இனி அவளால் ஒப்பாரி வைக்கவும் பேச்சு வராது கற்சிலையாக நின்றாள்.
மணி எட்டு தாண்டும் வரை மயான அமைதியே. ஆனாலும் பிரதாப் உடலருகே கற்சிலையாக இருந்தாள்.
பிரதாப்பின் பணியிடத்தில் வேலை செய்யும் நண்பன் அயன் செல்வத்தோடு சேர்ந்து வீட்டின் ஆண்மகனாக மற்ற ஏற்பாட்டை கவனித்தான். ஏற்கனவே செதிலடைந்த உடலென்பதால், காலை ஒன்பது ஒன்பதரைக்கு உடலை எடுத்திட முடிவெடுத்தனர்.
பிரதாப்பை இடுகாடு வரை அழைத்து செல்ல ஏற்பாடுகள் நடக்க, உயிரும் உடலுமாய் தன்னோடு கலந்த, பிரதாப் இன்று உருமாறி போயிருக்க சித்த பிரம்மை பிடித்தவளாக மாறினாள் ஆதினி.
பிரதாப்பை எடுத்து செல்லவும் கதறி அழுதாலே தவிர தனக்கும் பிரதாப்பிற்கும் பிறந்த மகள் அக்ஷயாவை மறந்தே போனாள்.
ஜமுனா தான் இருவரையும் மாறி மாறி சமாளிக்க திறணின்றி தத்தளித்தார். இதில் பிரதாப்பின் நண்பர்கள் கதிர், அனிதா, ஆதினிக்கு ஆதரவாய் இருந்தார்கள்.
ஒருவழியாக அயன் பிரதாப்பை அடக்கம் செய்ய கதிரும் கூட சென்றியிருக்க, ஜமுனாவோ ஆதினிக்கு தலையில் எண்ணைய் வைத்து தலைமுழ்க வைத்தார். அனிதா உதவி புரிந்தாள்.
குழந்தையையும் அப்படியே உடைமாற்றிட வைத்தார். இரவு சாப்பிடாமல் இருந்த குழந்தையோ ஜமுனாவிடம் பசிக்குது என்று வயிற்றை காட்ட, பாலை ஆத்தி நீட்டினார்.
ஆதினியிடமும் கொடுக்க மறுத்துவிட்டாள்.
ஜமுனா தனக்கு பாலை ஆற்றி பருகியபடி வீட்டை தன்னால் இயன்ற வரை ஒழுங்குப்படுத்த முயன்றார். தோழி அனிதா ஆதினிக்கு பாலை கொடுக்க முயன்று தோற்று அவளும் அவளது வீட்டுக்கு சென்றாள். ஆதினி தான் நிலயற்ற பார்வையில் யாரையும் நிமிர்ந்து கூட பார்க்கவில்லையே!
பெரும்பாலும் வந்தவர்கள் எல்லாம் பிரதாப்பின் பாடியை எடுத்து செல்லவும் புறப்பட்டு விட்டார்கள். இங்கே தனித்து இருக்கும் அவலநிலை ஆதினிக்கு.
ஜமுனாவோ டீயை பருகிக் கொண்டே வீட்டை பெருக்கி முடித்து அக்ஷயாவையும் பார்த்துக்கொண்டார்.
ஆதினி பிரதாப்பை வைத்திருந்த இடத்தில் கூடத்தில் தான் சாய்ந்தமர்ந்திருந்தாள்.
எப்படியும் இன்று சமாதானம் செய்தாலும் மனம் முரண்டு பிடிக்குமென அக்ஷயாவை தான் கவனித்தார்.
இடுகாடு சென்ற செல்வமும் அயனும் திரும்பி வந்திருந்தனர். மற்றவர்களும் அங்கிருந்தவாறு விடைப்பெற்றிருந்தனர்.
அயனோ “நான் பிரதாப்போட அப்படியே வந்துட்டேன். டிரஸ் கூட எடுத்துட்டு வரலை” என்று செல்வத்திடம் கூறியிருக்க, செல்வமோ, “ஆதினி.. நம்ம பிரதாப்போட வேலை செய்யறவர். பிரதாப்பை இங்க அழைத்துவரவும் அப்படியே வந்துட்டார். அவருக்கு குளிக்கவும் மாற்றுடையும் பிரதாப்வுடையது தாம்மா” என்றதும் அவளோ ஜமுனாவை பார்வையிட, “வாங்க தம்பி.. இந்த ரூம்ல இருக்கும்னு நினைக்கறேன்” என்று கீழேயிருந்த அறையில் பிரதாப் உடையில் ஒன்றை எடுத்து நீட்டினார்.
அதை வாங்கி கதவை தாழிட்டு உடையை அணிந்து வெளியே வந்தான். குழந்தை அக்ஷயா தூங்கி எழுந்தவள் “அப்பா” என்று ஓட, அவளை அள்ளிக்கெண்டு தூக்கி கொண்டான் அயன்.
ஆதினியோ பிரதாப் புகைப்படத்திலிருந்து கண்ணை நகர்த்தவில்லை.
இப்படியே இருந்தால் சரிவருமா? ஆதினியை தவிர மற்றவர்களுக்கு பசிக்குமே. செல்வம் எல்லாம் சுகர் பேஷண்ட் என்பதால் ஜமுனா பக்கத்தில் உள்ள ஹோட்டலில் சாப்பாடு வாங்க கூறினார்.
செல்வமும் வாங்க செல்ல, கூடவே அயன் நடந்தான். அவன் கையில் அக்ஷயாவை பொக்கிஷமாக தூக்கிக் கொண்டுச் சென்றான்.
ஆதினி ஜமுனா மட்டும் இருக்க ஜமுனா ஆதினியிடம் ஏதோதோ சமாதானம் செய்தார்.
மண்ணில் பிறப்பு இருந்தால் இறப்பு உண்டு. என்ன நம்ம பிரதாப் தம்பிக்கு இந்த வயசுல சாவு வரக்கூடாது.’ என்று பேச பேச அதையெல்லாம் ஆதினி செவிக்கு ஏறவில்லை. மாறாக கண்ணீர் மட்டும் கன்னத்தை நனைத்தது.
இங்கே அயனோ, நண்பன் மரணத்தை ஏற்றவனாக, அக்ஷயாவுக்கு உணவை ஊட்டி விட்டான்.
-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்
