அயலா… அயலா…-4

அத்தியாயம்-4

ஆதினிக்கு பிரதாப் மூலமாக கிடைக்க வேண்டிய இழப்பீடு தொகை விரைவிலேயே கிடைத்தது.

ஆதினியோ தீவிரமாக சிந்தித்து, அயனிடம் பேச ப்ரியப்பட்டாள்.

அவனோ தன்னிடம் வந்து வந்து பேச தயங்கி, செல்லும் ஆதினியை கவனித்து, “என்னங்க… ஏதாவது சொல்லணுமா? இல்லை.. ரொம்ப நேரமா ஏதோ சொல்ல வர்ற மாதிரி எனக்கு தெரியுது‌” என்று அக்ஷயாவை அமரவைத்துவிட்டு, பேண்டில் ஒயிலாக ஆதினி அருகே நடந்து வந்தான்.‌

  “பிரதாப் இறந்ததும் அவருக்கு வரவேண்டிய இழப்பீடு தொகையெல்லாம் ரொம்ப குயிக்கா வந்துடுச்சு.” என்றாள்.

அயனோ “நல்லது தானே” என்றான்.

“இல்லை… பிரதாப் இதுக்கு முன்ன ஒருமுறை இதோ போல மத்தவங்களுக்கு விபத்து நடந்தப்ப இறந்தவங்களுக்கு சேர வேண்டிய தொகையை எல்லாம் சரிப்பார்த்து கொடுக்கவே இரண்டு மூனு மாசமாவது ஆகும்னு சொன்னார். ஆனா எனக்கு ஒரு மாசம் கூட ஆகலை… அதுக்குள்ள பணமாவே வந்துடுச்சு… எனக்கு பிரதாப் இறப்புல சந்தேகமா இருக்கு” என்று திக்கி திணறி உரைத்தாள்.

அயனோ மிகவும் இயல்பாக, “சின்னதா ஒரு கம்பெனில உயிரிழப்பு நடந்தாலே அதிகாரிகளுக்கு ஆயிரம் காரணம் சொல்லணும் ஆதினி. இங்க இஸ்ரோ சம்பந்தப்பட்ட இடத்துல பராமரிப்பு துறையில இருந்த பிரதாப் இறந்துயிருக்கான்.
   விபத்து தான்… ஆனா அது நல்லதா கெட்டதா எதுவும் வெளிப்படையா சொல்ல முடியாது‌. ஏன்னா… இது நாட்டுப் பாதுகாப்புக்காக ரகசியமானது.  அப்படியிருக்க..‌. நாம  பிரதாப் இறப்புல சந்தேகப்பட ஒன்னுமில்லை ஆதினி.
  இது அங்க ஏற்ப்பட்ட விபத்து. அதுல சில விஷயம் வெளியே போகக்கூடாது. அதோட..  பணம் முடிச்சி செட்டில் பண்ணுறாங்க. சந்தோஷப்பட்டுக்கோ. பிரதாப் இறப்பு சரியோ தவறோ எதுனாலும் நாம அங்க கேள்வி எழுப்ப முடியாது. ஏன்னா… டெர்ம்ஸ் ஆப் கண்டிஷன் அப்படி ஆதினி.
  அங்க வேலை செய்யறப்ப சில விஷயத்தால் உயிருக்கு ஆபத்து நேர்ந்தால் அரசாங்கம் பொறுப்பேற்காது.” என்று தெளிவாக்கினான்.

  ஆதினிக்கு இது எப்படி எடுத்துக் கொள்வதென்று புரியவில்லை.
ஆனால் பிரதாப் முன்பு, ஏதாவது ஆகி செத்துட்டா அவ்ளோ தான். காரணம் காரியம் கேட்டாலும் வேஸ்ட்’ என்று கூறியதும் காட்சியாக வந்து சென்றது.

“இதுக்கு மேலதிகாரியிடம் ஏதும் கேட்க வேண்டாமா?” என்று ஆதினி அயனிடம் கேட்க, “கேட்டாலும் நோ யூஸ் ஆதினி. பிரதாப் திரும்ப வரப்போறானா? இல்லையே… பணம் வந்தது அக்ஷயா வளர்வதுக்கு பேங்க்ல போடுங்க. அவ்ளோ தான். நீங்க சம்பாதிப்பது இப்ப உங்க மனசை பிரதாப் இறப்பிலுருந்து மீள்வதற்காக. மத்தபடி இதுல யோசிக்க ஒன்னுமில்லை. இந்த மாதிரி ஒரு நிலையை பிரதாப் வந்ததும் தான், நானே விரக்தியில அங்கிருந்து ரிஸைன் பண்ணிட்டு வந்தேன். மரண பயமில்லை… நாம வாழ்ந்த வாழ்க்கையில் என்ன வாழ்ந்தோம்னு திரும்பி பார்த்தப்ப ரொம்ப வெறுமையா இருக்கு.
பிரதாப்பாவது மனைவி குழந்தைன்னு வாழ்ந்து மடிந்திருக்கான். நான் இப்ப வரை என்ன வாழ்க்கை வாழறேன் எனக்கே தெரியலை. ஒருத்தங்க வாழ்ந்தா அதுல அர்த்தம் இருக்கணும். 
  ரொம்ப யோசிக்காத அக்ஷயாவை நல்லபடியா வளர்த்திடு ஆதினி.” என்றுரைத்து கடந்தான்.
 
  அவளை கடக்கும் நேரம் ”பிரதாப் திரும்ப வரமாட்டான் ஆதினி. அதனால உன் எதிர்காலத்தை, அக்ஷயா எதிர்காலத்தை மட்டும் யோசி.” என்று திரும்ப திரும்ப சொல்லவும், ஆதினி அயன் கூறியது போல தனக்கு வந்த தொகையை பேங்கில் டெபாசிட் செய்வதற்கான வழியை பார்த்தாள்.

   ஆதினி பள்ளிக்கு செல்லும் பொழுது அக்ஷயாவை விட்டுவிட்டு செல்வாள்.
  மாலை அயன் தான் அழைத்து செல்ல ஓடுவான்.

   இரண்டு மூன்று நாள் தூரயிருந்து அக்ஷயா அயனுடன் பழகுவதை கவனித்தாள். ஜமுனாவிடம் அடிக்கடி அக்ஷயாவை பார்த்துக் கொள்ள கூறுவாள். அவருமே “அதெல்லாம் சொல்லணுமா? பார்த்துக்கறேன் ஆதினி” என்பார்.

  ஓரளவு அயனும் மிகவும் சோர்ந்தவனாக தான் அக்ஷயாவுடன் விளையாடுவான், பேசுவான், ஆனால் அயர்ச்சியாக மாறுவான்.
   சில நேரம், பிரதாப் புகைப்படத்தை உற்று நோக்கி தொட்டு பார்த்து பெருமூச்சை வெளியிடவும் ஆதினி கவனிப்பாள்.

  நண்பனை பிரிந்த வலி அவனுக்கு இருக்க ஆதினி புரிந்துக் கொள்வாள்.

  அக்ஷயாவை நம்பிக்கை அயனுடன் பழகுவதில் மூன்று நான்கு மாதம் ஓடியது.

  இதில் ஆதினி பள்ளியில் வேலை பார்க்க, அயன் அக்ஷயாவுடன் ஒருங்கிணைந்து பாதுகாவலனாக மாற, முதலில் ஆதினிக்கு துணையாக ஒருவன் என்ற கண்ணோட்டத்தில் பார்த்த உலகம், பிரதாப் போனப்பின்னும் இன்னமும் அங்கயே சுத்தறேனே? இதுல அவ வீட்டுக்கு மாடில தான் குடியிருக்கான்.

‘ஒன்னு தெரியுமா? பிரதாப் இறந்தப்ப அவ வீட்டுக்கு போனோம்ல, அதுல அந்த மேல் வீட்டுக்கு போற வழிக்கூட இவ வீட்டுக்குள்ள போயி தான் போகணும். கிட்டதட்ட ஒரே வீட்ல தான் வாழறாங்க. இவளுக்கு புருஷன் இல்லை. அவன் ஏதோ தனியாளு. பஞ்சும் நெருப்பும் பத்தியிருக்கும்.
 
  அந்த குழந்தை கூட அவனை அயலானு கொஞ்சி கூப்பிடுது. அவன் ஏதோ பெத்த பொண்ணை பார்த்துக்கற மாதிரி பார்த்துக்கறான். இதெல்லாம் பார்க்கறப்ப ஆதினி நடத்தை மேல சந்தேகம் வருது‌.’ என்று காதுபட நான்கு பேர் நாலு விதமாக இதையே வெவ்வேறு விதமாக பேசினார்கள்.

    இதெல்லாம் ஆதினி காதிற்கு வந்து சேர, அன்று முழுவதும் அழுகையில் கரைந்தாள்.

அயன் அக்ஷயாவை அழைத்து வெளியே சென்ற நேரம், ஜமுனாவிடம் அதை பற்றி கூறி அழுதாள்.

“ஆன்ட்டி… எனக்கென்னவோ அவர் வீட்டோட தங்க வச்சது தப்போன்னு தோணுது. அவரை வேண்டுமின்னா வேற வீட்டை பார்த்துட்டு போக சொல்லிடலாமா?” என்று கேட்டு நின்றாள்.

கண்ணீரும் கவலையுமாக நின்று கேட்பளிடம், ஜமுனா பதில் தரும் முன், செல்வமோ “ஊர்ல வேலை வெட்டி இல்லாதவங்க ஆயிரம் பேர் ஆயிரம் விதமா பேசுவாங்க ஆதினி. அதெல்லாம் நீ காது கொடுத்து கேட்டு பதில் சொல்லிட்டு இருப்பியா? இன்னிக்கு அயன் உன் குழந்தையை பார்த்துக்க உதவறான், அவனையும் உன்னையும் வச்சி இந்த உலகம் பேசுது. நாளைக்கு அவனை வீட்டை விட்டு காலி பண்ண சொல்லி அனுப்பிட்டேன்னுவை.
  ஏதாவது உதவின்னு ஜமுனாவிடமும் என்னிடமும் வந்து நிற்ப. நான் அப்பா ஸ்தானத்துல உதவி செய்றேன். ஆனாலும் உலகமும் உன்னை சுத்தியிருக்கறவங்களும் அப்பவும் தப்பா தான் பேசுவாங்கம்மா. 

  அப்பறம் என் உதவியையும் ஜமுனா உதவியையும் கூட நீ மறுப்பியா?” என்று கேட்க ஆதினி சிந்தித்தாள்.

  ஜமுனா வீட்டை விட்டு அனுப்பிடலாமா?’ என்று தான் செல்வத்திடம் அபிப்பராயம் கேட்க வந்தார். ஆனால் செல்வம் பேசபேச அவர் சொல்வதும் சரியா இருக்கே.’ என்ற ரீதியில் அமைதியானார்.

   “உனக்குனு அயனா உதவி செய்ய வர்றப்ப, அவர் மனதை காயப்படுத்தா. உலகம் என்ன சொன்னாலும் உனக்குனு ஒரு உதவியும் செய்யாது.
  உன் மனசுக்கு நீ சரியா இருக்கியா? அதை மட்டும் பார்த்துக்கோ.” என்றார் செல்வம்.

ஆதினி லேசாக தெளிந்தவளாக, அழுகையை துடைத்தாள்.

   “தேங்க்ஸ் ஆன்ட்டி. நான் ஏதாவது முடிவெடுக்கறதுக்கு முன்ன உங்களிடம் அபிப்ராயம் கேட்பதே, நீங்க எனக்கு அம்மா அப்பா முறையில நல்லதா கையிட் பண்ணறிங்கனு நம்பறேன்.” என்று கூற ஜமுனா அணைத்து தட்டி கொடுத்தார்.

  அயனோ சற்று தள்ளி அக்ஷயாவுக்கு சைக்கிள் ஓட்ட கற்றுத்தந்து, அவள் ஓட்டி டயர்ட் ஆகவும் சைக்கிளை ஒரு கையிலும், அக்ஷயாவை ஒரு கையிலும் கொஞ்சியபடி, வந்தான்.‌

   இவர்களை நெருங்கும் நேரம், “என்னாச்சு? அழறிங்களா?” என்று கேட்டான்.

ஆதினி இல்லை என்று அவசரமாக மறுத்திட, “அக்ஷயா உங்க ம்மமி கண்ணை துடைச்சி விடுங்க” என்று கூற, “மம்மி… கீழ குனிங்க” என்றாள்.

  ஆதினி மண்டியிட்டு அமர, பிஞ்சு விரலால் கண்ணீரை துடைத்து விட்டு, குழந்தை முத்தமும் வைத்தாள்.

  “ஜமுனா பாட்டி… நான் சைக்கிள் ஓட்டினேன் பார்த்திங்களா?” என்று கேட்க, செல்வமோ “அட அக்ஷயா குட்டி கோர்வையா பேசறிங்க. ஆதினி இதை நீ கவனிச்சியா? அக்ஷயா கோர்வையா பேசறா. முன்ன இந்தளவு பேசமாட்டாளே” என்று கூற, ஜமுனாவும் “அதோட அழுத்தம் திருத்தமா பேசறா பாருங்களேன்.” என்று ஆச்சரியப்பட்டார்.‌

ஆதினியோ “ரொம்ப நல்லா தமிழ் உச்சரிப்போட பேச கத்துட்டு இருக்கா. எல்லாம்… இவரோட ட்ரைனிங்.” என்று அயனை பார்த்து உரைத்தாள்.

அயன் மிதமான புன்னகை உதிர்த்து, “அக்ஷயா… ஹாண்ட்வாஷ் பேஷ் வாஷ் பண்ணிட்டு வா. நட்ஸ் சாப்பிடலாம்” என்று கூறிடவும் அக்ஷயா வீட்டிற்குள் ஓட, அயனும் சைக்கிளை அதனிடத்தில் வைத்தான்.‌

   ஆதினி ஜமுனாவிடம் திரும்பி, “இவர் வந்தப்பிறகு அக்ஷயா நல்லா பேசறா ஆன்ட்டி. தடையில்லாம, அழகான உச்சரிப்போட, தெளிவா பேசறா. இதையெல்லாம் பிரதாப் கேட்டு மகிழ கொடுப்பினை இல்லை. பிரதாப் உயிரோட இருந்தப்ப எத்தனையோ டாக்டரிடம் போய் அக்ஷயா பேசறதுக்கு ட்ரீட்மென்ட் பார்த்தோம். இப்ப.. அவளே இயல்பா நம்மளை போல பேசிட்டா.” என்றாள்.

      ஜமுனா அதற்கு “பிரதாப் அயன்‌ மாதிரி நெருங்கி பழகி,
கூடயிருந்திருந்தா இந்நேரம் பேசியிருப்பா. பிரதாப்புக்கு தான் நேரமில்லாம போச்சு. கொடுப்பினையும் இல்லை.
   அக்ஷயாவுக்கு அப்பா மாதிரி ஒருத்தர் வந்து எல்லாவிதமான அன்பை பொழியவும், அயனிடம் நல்லா ஒட்டிக்கிட்டா” என்று கூறினார்.‌

ஆதினிக்கு அந்த வார்த்தையில் லேசாக தயக்கம், மகிழ்ச்சி இரண்டும் வந்தது. தயக்கத்திற்கு காரணம், அப்பா இடத்தை அயன் செய்வதா? என்று.

மகிழ்ச்சிக்கு காரணம், ஆதினிக்கு தற்போது அப்பா ஸ்தானத்தில் அயன் கூடவேயிருந்து நன்றாக பழகுவது.

இரண்டுமே ஒரே அர்த்தமாயினும், தயக்கம் மகிழ்ச்சி வேறு வேறு அர்த்த்ததை தருகின்றதே.

    “சரிம்மா… ஸ்கைப்ல என் பொண்ணும் பையனும் பேச வர்ற நேரம் நான் போறேன் டாட்டா” என்றார். செல்வமோ ‘மனசு எதையும் தப்பா போட்டு உழப்பாதம்மா. அயன் இருக்கறது உனக்கு நல்லதுக்கு தான்.” என்று கூறிவிட்டு சென்றார்.

ஆதினி தலையாட்டி வீட்டிற்குள் வரும் நேரம், அயன் அக்ஷாயவின் வீட்டுப்பாடத்தை எழுத வைத்திருந்தான்.

   செவிமடலில் பென்சிலை சொருகி, வண்ண க்ரையான்ஸை எடுத்து, அக்ஷயாவிடம் சேர்ந்து வண்ணம் தீட்டினான்.‌

மெதுவாக என்ன வரைகின்றார் என்று எட்டிப் பார்க்க, அதில் ஏலியன் போன்றதொரு மனுஷனை வரைந்து வைத்து அக்ஷயா சிரிக்க, அயனோ ‘இது நானா? ம்ம்ம். இது நானா? இப்படியா இருக்கேன்?” என்று அவளிடம் கிச்சுகிச்சு மூட்ட, “அயலா… கூசுது” என்று சிரிப்பொலி அவ்விடம் முழுதும் நிறைந்தது.

அக்ஷயாவுக்கு என்னதான் அயன் பெயரும் நன்றாக உச்சரிக்க தெரிந்தாலும், ‘அயலா’ செல்ல பெயராகவே மாறிவிட்டது.

பிரதாப் இருந்தால் இப்படி தான் அவனோடு முதுகில் ஏறி மகிழ்ந்திருப்பாள்’ என்று ஆதினி அவர்களை பார்த்து ரசித்தாள்.

-தொடரும்.

பிரவீணா தங்கராஜ்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top