பேருந்தில் நீயெனக்கு ஜன்லோரம்-22
அத்தியாயம்-22
கல்லூரி வாசலைக் கடந்து உள்ளே சென்றதும், லாவண்யா வழக்கம்போல தன் மொபைலை சைலன்ட்டில் போட்டுவிட்டு பரீட்சை ஹாலுக்குள் சென்றுவிட்டாள்.
அவள் உள்ளே சென்ற அந்த நொடியிலிருந்து சாரதிக்கு மட்டும் நேரம் நகரவே இல்லை.
பேருந்து நகர்ந்து கொண்டிருந்தது. பயணிகள் ஏறிக் கொண்டிருந்தார்கள். இறங்கிக் கொண்டிருந்தார்கள். டிக்கெட் கேட்பவர்களுக்கு டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்தான்.
எல்லாமே வழக்கம் போலத்தான் நடந்தது. ஆனால் சாரதியின் மனம் மட்டும் அந்தப் பேருந்தில் இல்லை.
லாவண்யாவின் பின்னால் பவன் சென்ற காட்சி மீண்டும் மீண்டும் அவன் கண்முன்னே வந்து கொண்டிருந்தது.
'அவன் என்ன பண்ணப் போறான்? லாவண்யா தனியா மாட்டிக்கிட்டாளா? அவகிட்ட ஏதாவது பிரச்சனை பண்ணிட்டானா?' என்று எண்ணங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து அவனைப் பதற வைத்துக் கொண்டிருந்தன.
கண்டக்டராக இருந்ததால் உடனே பேருந்தை விட்டு இறங்கி அவளுக்குப் பின்னால் செல்ல முடியாதது அவனுக்குள் இன்னும் பெரிய இயலாமையை ஏற்படுத்தியிருந்தது.
கண் முன்னாடியே அவள் இறங்கிப் போகிறாள்.
அவளுக்குப் பின்னால் அந்தப் பையனும் இறங்குகிறான். அதை லாவண்யா கவனிக்கவும் இல்லை. நேரம் கூட தன்னால் மட்டும் அங்கேயிருந்து அசைய முடியவில்லை. அந்த நினைவே அவனது நெஞ்சை இறுக்கிக் கொண்டிருந்தது.
ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் லாவண்யாவுக்கு அழைத்தான். அழைப்பு போகவில்லை. மீண்டும் அழைத்தான்.
அதுவும் எடுக்கப்படவில்லை.
மீண்டும் மீண்டும் என்று அழைத்துக் கொண்டே இருந்தான். பெரும்பாலும் போனை சைலண்டில் போட்டுவிட்டு கல்லூரியில் இருப்பாளென அறிந்தும் மனம் ஏற்காமல் டிக்கெட் கொடுக்கும் வேலையுடன் அழைத்தான். பவனால் எந்த பிரச்சனையும் இல்லாமல் கடந்தால், அவள் பரீட்சை எழுதிக் கொண்டிருப்பாள் என்று தெரிந்தும், மனம் மட்டும் கேட்கவில்லை.
'ஒரு தடவை போனை எடுக்கக் கூடாதா லயா... நீ நல்லா இருக்கேன்னு மட்டும் சொல்லு' என்று உள்ளுக்குள் கடவுளிடம் வேண்டிக் கொண்டிருந்தான்.
சில மணி நேரங்களுக்குப் பிறகே, பரீட்சை முடிந்து கல்லூரி வாசலை விட்டு வெளியே வந்த லாவண்யா, கைப்பையைத் தோளில் மாட்டிக் கொண்டு தேவியுடன் நடந்து வந்தாள்.
வெயில் அதிகமாக இல்லாமல் மென்மையான வெளிச்சம் சாலையில் படர்ந்திருந்தது.
கல்லூரி வாசலுக்கு வெளியே மாணவிகள் கூட்டம் கூட்டமாக நின்றிருந்தனர்.
யாரோ பரீட்சையைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.
யாரோ கேள்வித்தாளில் வந்த கேள்வியைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார்கள். லாவண்யாவின் கவனம் மட்டும் தன் மொபைல் மீதே இருந்தது.
சைலன்ட்டில் இருந்த போனை எடுத்துப் பார்த்தவளின் புருவம் உடனே உயர்ந்தது.
சாரதியிடமிருந்து வந்திருந்த அழைப்புகள் வரிசையாக இருந்தன. அவள் முகத்தில் தானாகவே ஒரு சிரிப்பு மலர்ந்தது.
''அடடா... இவ்வளவு கால் பண்ணியிருக்காரே? என்ன விஷயமா இருக்கும்" என்று தேவி எட்டிப் பார்த்ததும்,
"அதான் சொல்றேன்ல... உன்னைப் பத்தி நினைப்பு அண்ணாவை வேலை செய்ய விடறதில்லை" என்ற கிண்டலாகச் சொன்னாள்.
லாவண்யா எதுவும் சொல்லாமல் உடனே சாரதிக்கு அழைத்தாள். அழைப்பு இணைந்த அடுத்த நொடியே,
"லயா உனக்கொன்னும் பிரச்சனை இல்லையே" என்று அவசரமாக வந்த சாரதியின் குரல் கேட்டது.
அந்த ஒரு குரல் போதும்...
இத்தனை நேரம் அவன் நெஞ்சுக்குள் கட்டிப் போட்டிருந்த பதற்றம் கொஞ்சம் கொஞ்சமாக அவிழ்ந்தது.
"ஒரு பிரச்சனையும் இல்லையே.. என்னாச்சு சாரதி..." என்றாள்.
"நல்லா இருக்கியா?" என்றான் திரும்ப.
"ஆங்.. நல்லாத்தான் இருக்கேன். பரீட்சை எழுதிட்டு இப்பத்தான் வெளிய வந்தேன்." அவள் சொன்னதும் சாரதி நீண்ட மூச்சை விட்டான்.
அவனுக்கு அந்த நொடியில்தான் உயிரே திரும்பி வந்தது போல இருந்தது.
"என்னாச்சு உங்களுக்கு?" என்றாள்.
"நீ நல்லா இருக்கேன்னு தெரியணும்னுதான் இவ்வளவு நேரம் தவிச்சுட்டு இருந்தேன். போன உயிர் திரும்ப வந்துடுச்சு" என்றான்.
"எதுக்கு இவ்வளவு டென்ஷன்?" என்று புரியாமல் கேட்டாள்.
"அந்த பவன் உன் பின்னாடி இறங்கினானே..." என்றதும் "அட ஆமா." என்றாள்.
"அவன் ஏதாவது வம்பு செய்திருப்பானோனு பயந்துட்டேன்." என்றான்.
"ஏதாவது வம்பிழுக்க என் ஸ்டாப்ல இறங்கியிருக்கலாம். ஆனா நான் உங்களை திரும்பி பார்க்க முயன்றப்ப, அவன் பின்னால வந்ததை உனே கவனிச்சிட்டேன். என்னடா இவனானு பயந்தப்ப, பஸ் ஸ்டாப்புல பேட்ரோல் போலீஸ் அதுவும் பெண் போலீஸ் நின்னுட்டு இருந்தாங்க.
அவங்களைப் பார்த்ததும் அவன் அங்கிருந்து நழுவி போயிட்டான்." என்றவள் சிரித்தாள்.
சாரதிக்கு அந்த நொடியே உடம்பு முழுவதும் இருந்த பதற்றம் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கியது.
"சாரி லயா.. அவன் உன் பின்னாடி வரவும் பயந்துட்டேன். இவ்வளவு கால் வேற போட்டுட்டேன்." என்றவன் குரலில் இருந்த உண்மையான பயத்தை உணர்ந்தவளின் முகம் மென்மையாகியது.
''பயப்பட என்னயிருக்கு சாரதி?அவன் ஏதாவது பிரச்சனை செய்தா நான் பார்த்துக்கறேன். இதே போல எப்பவாது நடந்தா இனி பதறாத. என்ன பண்ணிவான்..? காம்பஸ்ல மட்டும் இல்ல... எப்பவும் கூட நிறைய பேரு இருக்காங்க. அதோட காலேஜ் பக்கத்துல நிறைய பிரெண்ட்ஸும் இருக்காங்க. வாட்ச்மேனும் செக்கியூரிட்டி இருக்காங்க. மேம் பிரின்சிபல்னு ஊரை கூட்டிடுவேன். அதுல யாராவது பார்த்துக்குவாங்க." என்றாள்.
"அதெல்லாம் இருந்தாலும்..." தான் இறங்கி செல்ல முடியாத வகையில் இருந்த நிலையில் சாரதி துடித்தான்.
"நீங்க பயப்படாதீங்க. ஏதாவது வரம்பு மீறி பேசினாலோ செய்கையை ஆரம்பிச்சாலே நான் என்னை பார்த்துப்பேன். அந்தளவு வீக்கான ஆள் இல்லை. எல்லா நேரமும் நீங்க கூடவேவா இருக்க முடியும்" என்றதும் தான் சாரதி அமைதியாக இருந்தான்.
"இருந்தாலும்... உடனே என்னால இறங்கி உன் கூட வரமுடியலையேன்னு ரொம்ப கஷ்டமாயிருந்துச்சு." அந்த வார்த்தையில் இருந்த வருத்தம் லாவண்யா புரிந்துக் கெண்டாள்.
"நீங்க எனக்காக பின்னாடி வர முடியாதுன்னு எனக்குத் தெரியும் சாரதி. நானே பார்த்துக்கறேன். பவன் தானே? அவனெல்லாம் பெரிய ஆளே இல்லை." என்றாள்.
"அதெல்லாம் சரி. இருந்தாலும் கவனமாயிரு." என்று துண்டித்து கொண்டான்.
அவளிடம் பேசிக் கொண்டிருந்த அந்த சில நிமிடங்களுக்குப் பிறகுதான் அவனுக்குள் இருந்த இறுக்கம் முழுவதுமாக தளர்ந்தது.
அடுத்த சில நாட்களில் பரீட்சை நாட்கள் வேகமாக நகர்ந்தன.
ஒவ்வொரு நாளும் பேருந்தில் அவர்கள் சந்தித்தாலும், அதிக நேரம் பேச முடியவில்லை.
பரீட்சை, படிப்பு, குடும்பம். என்று லாவண்யாவின் கவனம் முழுவதும் தேர்விலேயே இருந்தது. சாரதியும் அவளைத் தொந்தரவு செய்யாமல் தூரத்திலிருந்தே பார்த்துக் கொண்டிருந்தான்.
அவள் பேருந்தில் ஏறும்போது ஒரு பார்வை. இறங்கும்போது ஒரு பார்வை. நடுவில் அவள் சிரித்தால் அவனுக்கும் சிரிப்பு.
அவள் முகம் சோர்ந்திருந்தால் அவனுக்கும் ஏதோ கவலை.
காதல் அவர்களுக்குள் வந்து சில நாட்களே ஆனாலும், இருவருடைய நாளும் மற்றொருவரைச் சுற்றியே மெதுவாக நகர ஆரம்பித்திருந்தது.
கடைசி பரீட்சையும் நெருங்கிக் கொண்டிருந்தது. அந்த மாலை லாவண்யா சாரதியிடம் போனில் பேசிக் கொண்டிருந்தாள்.
"சாரதி.."
"ம்ம்ம்.."
"பரீட்சை முடிஞ்சதும் நான் ஊருக்குப் போறேன். அக்கா கல்யாணத்துக்கு"
"எப்ப?"
"கடைசி எக்ஸாம் முடிஞ்ச உடனே அடுத்த நாள்"
"எப்ப திரும்பி வருவ" என்றான்.
“அக்கா மாலதியோட கல்யாணத்துக்கே லீவுல வச்சிருக்காங்க இல்ல. அக்கா கல்யாணம் முடிந்து, பரீட்சை லீவும் முடிந்து தான் திரும்புவேன்." என்றாள்.
லாவண்யாவை இன்னும் சில நாட்கள் பார்க்க முடியாதென்ற எண்ணமே அவனுக்கு ஏதோ சோகமாக்கியது.
அந்த சோகம் எதிர்பார்த்ததை விடப் பெரியதாகத் தோன்றியது.
"அப்போ.. அப்ப உன்னை பார்க்க முடியாதா?" என்று கேட்டான்.
"முடியாதுப்பா.." அந்த ஒரு வார்த்தை அவனுக்குள் ஏதோ செய்தது.
சில நாட்கள் கூட அவளைப் பார்க்காமல் இருக்க வேண்டுமா? என்று நினைத்தவுடனே அவனுக்குள் ஒரு வெறுமை உருவானது.
அதே நேரத்தில் லாவண்யாவும் மொபைலைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
'கடைசி எக்ஸாமுக்கு முன்னாடி ஒருநாள் எங்கயாவது சந்திக்கலாமா?' என்று அவள் டைப் செய்து அனுப்பினால் என்ன? என்று நினைத்தாள். போனில் கேட்க தயங்கினாள்.
அதே நேரத்தில் சாரதியும், நாம எங்கயாவது சந்திக்கலாமா?" என்று வார்த்தையாகவே கேட்டான்.
"நிஜமா.. சந்திக்கலாம்.. எங்க?" என்று லாவண்யா உற்சாகமாய் கேட்டாள்.
"ம்ம்ம் சந்திக்கலாம். இதுவரை நம்ம ஏரியா பார்க்ல சந்திச்சது எல்லாம் யாரோ எவரோ ரீதியில பேசிட்டு போவோம். நிதானமா தனியா உட்கார்ந்து பேசலாம். நீ இடத்தை சொல்லு." என்றான்.
"வண்டலூர் ஜூ அங்க போகலாமா?" என்று கேட்டாள்
"சரி." என்றான்.
"தேவியும் வரட்டுமா?" என்று தயங்கி கேட்டாள்.
"அவளில்லாம நீ வர மாட்டியே." என்று சிரித்தான்.
"அப்போ தேவியையும் கூட்டிட்டு வர்றேன்" என்றாள்.
கடைசி பரீட்சைக்கு முன் மூன்று நாள் இருக்க, அதில் ஒரு நாள் கல்லூரி இருப்பதாக கூறிவிட்டு வண்டலூர் செல்ல திட்டமிட்டனர்.
தேவியிடமும் கூறி அதற்கு சம்மதமும் வாங்கினாள் லாவண்யா. 'நானே சரியா படிக்காத கேஸு. இதுல எக்ஸாம் அப்ப ஊர் சுத்த கூப்பிடறியே. ம்ம்ம்.' என்று யோசித்த தேவியோ மூன்று நாளில் ஒரு நாள் பார்த்துக்கலாம் என்று கூட வர சம்மதித்தாள்.
சந்திக்கப் போகும் நாளன்று காலையிலிருந்தே சாரதிக்கு ஒரு விதமான பரபரப்பு.
வேலைக்குப் போகும் நாட்களில் கூட அவனுக்கு இவ்வளவு பதற்றம் இருந்ததில்லை.
அன்று டிப்போவில் உடம்பு சரியில்லையென்று சொல்லி லீவு கேட்டுவிட்டான். அவனுக்கு பதில் மாற்று கண்டெக்டர் கூட பணியில் அமர்த்திவிட்டனர்.
வீட்டிலிருந்து கிளம்பும்போது கூட கண்ணாடியில் தன்னையே பார்த்துக் கொண்டான்.
கண்டெக்டர் உடை உடுத்தும் முன் உள்ளே வேறு சட்டையை அணிந்துக் கொண்டான். இல்லையென்றால் அன்னை காஞ்சனா ஏன் டூயூட்டி நேரத்தில் கண்டெக்டர் சீருடை அணியவில்லை என்று கேள்வி கேட்பாரென அப்படி கிளம்பினான்.
அந்த நாளுக்காக அவன் வழக்கத்தைவிட இரண்டு முறை கண்ணாடியை பார்த்திருந்தான்.
'இது ஓவரா இருக்கோ' என்று தனக்குத்தானே சமாதானப்படுத்திக் கொண்டு நடந்து சென்றான். காஞ்சனா கேட்டதற்கு பைக்ல பெட்ரோல் இல்லைம்மா. சைக்கிள் பஞ்சர். நடந்து போறேன் ஈவினிங் வந்து பார்த்துக்கறேன்" என்று ஓடினான்.
காஞ்சனா அதற்கு மேல் நின்று நிறுத்தி கேட்கவில்லை.
டிப்போவில் வண்டலூருக்கு செல்லும் பேருந்தில் மூவரும் ஏறினார்கள். டிப்போ நெருங்கும் போதே கண்டெக்டர் சீருடையை கழட்டி, அந்த சட்டையை மடித்து லாவண்யா பையில் வைத்துவிட்டான்.
அவனது இதயத்துடிப்பு வேகமாகிக் கொண்டே போனது.
தேவியுடன் லாவண்யாவும் சீட்டில் அமர அவளுக்கு முன்னால் ஆண்கள் இருக்கையில் சாரதி அமர்ந்திருந்தான்.
கடைசி இருக்கை என்பதால் ஜன்னலோரம் லாவண்யா தேவி அமர்ந்திருந்தனர்.
லாவண்யா-சாரதி முகத்தில் இருந்த பதற்றம் மெதுவாக ஒரு புன்னகையாக மாறியது.
அவளும் அவனைப் பார்த்ததும் சிரித்தாள். அந்தப் புன்னகையில் பயம் கலந்த ஒரு சந்தோஷம் இருந்தது.
'இவனுக்காகத் தானே இவ்வளவு தூரம் வந்திருக்கேன்.' என்று சொல்லாமல் சொல்லும் சந்தோஷம்.
இதான் முதல் முறை இப்படி வீட்டிற்கு சொல்லாமல் சாரதியுடன் தனிமையில் பேச ஆசைப்பட்டு வண்டலூர் வருவது. படம் பார்க்க போனப்பொழுது கூட வீட்டில் அப்பா அம்மாவிடம் சொல்லி விட்டு தான் அனுமதியுடன் வந்தாள். அதனாலோ என்னவோ கையெல்லாம் நடுக்கம் இன்னும் அகலவில்லை. தேவியுடன் பாடம் சம்பந்தமாக தான் லாவண்யா தேவி பேசி வந்தார்கள். சாரதி லேசாக கண் அயர்ந்தான் என்று கூட சொல்லலாம்.
ஒருவழியாக பேருந்து பயணம் செய்து வண்டலூர் வரவும் மூவரும் இறங்கினார்கள்.
சுற்றிலும் பசுமை. மரங்களின் இடையே புகுந்து வந்த மாலை நேரச் சூரிய ஒளி தரையில் பொன்னிறத் திட்டுகளாக விழுந்திருந்தது.
குழந்தைகள் ஓடிக் கொண்டிருந்தார்கள். குடும்பங்கள் ஆங்காங்கே அமர்ந்திருந்தன.
சில இளம் ஜோடிகள் இவர்களை போலவே மரங்களின் நிழலில் பேசிக் கொண்டிருந்தார்கள்.
அந்தக் கூட்டத்தில் சாரதியும் லாவண்யாவும் மட்டும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவே தயங்கிக் கொண்டிருந்தார்கள்.
தேவி இருவரையும் மாறி மாறிப் பார்த்தாள். தனிமையை தர விரும்புபவளாக, "சரி... நான் சைக்கிள் எடுத்துட்டு கொஞ்சம் ரவுண்ட் அடிக்கறேன்." என்று சைக்கிளை பேசி வாங்கினார்கள்.
"ஏய் தேவி.. எதுக்கு சைக்கிள். நடந்துட்டே பேசலாம்" என்று லாவண்யா கேட்க, "அட அறிவே.. நீங்க பேசணும்ல... நான் இருந்தா சரியா இருக்காது. நான் சைக்கிளில் ரவுண்ட்ஸ் அடிக்கறேன். தனியா உட்கார்ந்தா அதுவும் ட்ரபிள் தான்." என்று சொல்லிவிட்டு சிரித்தாள்.
தேவி அங்கிருந்து நழுவிச் சென்றாள். அவள் போனதும் இருவருக்கும் இன்னும் அதிகமாகத் தயக்கம் வந்தது. இருவரும் அருகருகே நடக்க ஆரம்பித்தார்கள்.
முதலில் ஒரு அடி இடைவெளி.பிறகு அரை அடி. பிறகு மீண்டும் தெரியாமல் இடைவெளி.
ஒருவரின் கை இன்னொருவரின் கையைத் தொட்டுவிடும் அளவுக்கு சில சமயம் அருகில் வந்தார்கள்.
தொட்டதும் இருவருமே உடனே கையை விலக்கிக் கொண்டார்கள்.
அந்தச் சிறிய தொடுதலே அவர்களுடைய இதயத்தை வேகமாகத் துடிக்க வைத்தது.
காதல் வந்த பிறகு முதன்முறையாக... பேருந்து இல்லாமல்... மற்றவர்கள் கூட்டத்தில் இருந்தாலும், தங்களுக்காக மட்டும் ஒதுக்கப்பட்ட சில நிமிடங்களோடு.
இருவரும் ஒன்றாக நடந்து கொண்டிருந்தார்கள்.
சாரதிக்கு அவள் அருகில் நடப்பதே ஒரு புதுமையான அனுபவமாக இருந்தது.
பேருந்தில் அவளைப் பார்த்திருக்கிறான். ஜன்னலோரத்தில் அமர்ந்திருப்பதை ரசித்திருக்கிறான். அவள் இறங்கிச் செல்லும் முதுகைப் பார்த்திருக்கிறான்.
ஆனால்... இப்படி அருகில் நடந்து செல்வது? அவளுடைய நடையின் சத்தம் கேட்பது?
அவள் அருகில் இருந்து வரும் மெல்லிய வாசனையை உணர்வது? இதெல்லாம் அவனுக்கு புதிது.
லாவண்யாவுக்கும் அதே நிலைதான். அவனுடைய தோளுக்கு அருகில் தன்னுடைய தோள் இருப்பதை உணர்ந்தவள், தெரியாமல் தன் நடை வேகத்தையே குறைத்துக் கொண்டாள்.
அவன் கையைப் பிடித்துக் கொண்டு நடக்க வேண்டும் என்ற ஆசை அவளுக்குள் மெதுவாக எழுந்தது.
ஆனால் 'கையை பிடிக்கலாமா? என்ற தயக்கம் அவளைத் தடுத்தது.
அதே ஆசை சாரதிக்கும் இருந்தது. 'அவளுக்கு சங்கடமா இருந்தா?' என்று அவன் தயங்கினான். அதனால் இருவரும் கைகளைத் தொடாமல் பார்த்துக் கொண்டு, மனதில் மட்டும் ஒருவருடைய கையை ஒருவர் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.
நேரங்கள் நகர "இங்க உட்காரலாம?" என்றான்.
லாவண்யா தலையாட்டி அமர்ந்தாள்.
"உன்னை பார்க்கணும், பேசணும்னு இங்க வரை வந்துட்டோம். ஆனா பேச முடியலை ஒரு மாதிரி படபடப்பா இருக்கு. உனக்கும் அப்படி தானா?" என்றான்.
லாவண்யா ஆமோதிப்பாய் தலையாட்ட, அந்த நேரம் ஒரு குழந்தையின் பந்து சாரதி கால் பக்கம் வந்தது.
அதை எடுத்து பார்த்தான். "அண்ணா பந்து" என்றான் சிறுவன்.
சாரதி சிரித்தபடி கையில் தரவும், "அப்பா கேட்ச் பிடிங்க" என்று இந்த சிறுவன் அவனது தந்தையிடம் பந்தை காலால் எட்டி உதைத்து போடவும், 'அப்பா.' என்று சத்தமின்றி உச்சரித்தவாறு தன் பேண்ட் பாக்கெட்டில் பர்ஸில், சாரதியின் தந்தை சண்முகம் புகைப்படத்தை கண்டான்.
"உ..உங்க அப்பாவா?" என்று கேட்டாள்.
"ம்ம்." என்றான்.
"அவர் எப்படி இறந்தார்" என்று கேட்க, சாரதி நினைவலைகள் பின்னோக்கி சென்றது.
-தொடரும்
-பிரவீணா தங்கராஜ்
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 22)
'காதல் வந்ததும் கன்னியின்
உள்ளம் காதலை யாருக்கும்
சொல்வதில்லை...
புத்தகம் மூடிய மயிலிறகா
புத்தியில் மறைப்பாள்
தெரிவதில்லை...'
சோ.. காதல் வந்ததும் பொய், புரட்டு, திருட்டுத்தனமா அவுட்டிங்...
இப்படி எல்லாத் தப்புக்களும் செய்யத் தோணும் போலயிருக்கு.
சாரதி லாவண்யாவும் இப்பத்தான்
எல்லாத் தப்பையும் செய்ய ஆரம்பிச்சிருக்காங்க. இதுல தேவி தான் பாவம், இவங்க ரெண்டு பேருக்காக அவள் தேவுடு காத்திட்டிருக்கா. அது சரி, அவளுக்கு யாரும் கிடைக்கலையோ...?
😐😐😐
CRVS (or) CRVS 2797
Parava ella thairiyamana ponna than erukka
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-24
1 hour ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-23
19 hours ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-19
2 days ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-21
3 days ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-20
4 days ago
Currently viewing this topic 1 guest.
- 25 Forums
- 340 Topics
- 1,645 Posts
- 2 Online
- 425 Members
