பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-10
அத்தியாயம்-10
போலீஸ் ஸ்டேஷனில் சாரதியின் சைக்கிளைத் திருடியவன், ஒரு குற்றவாளியைப் போல அல்லாமல், அங்கே வந்திருந்த விருந்தாளியைப் போல நாற்காலியில் அமர்ந்திருந்தான்.
அவனுடைய பெயர் கோவிந்தன். அந்த ஏரியாவில் அவனைத் தெரியாதவர்கள் குறைவு. ஆளுங்கட்சியிலும் சரி, எதிர்க்கட்சியிலும் சரி அவனுக்கு வேண்டிய ஆட்கள் இருந்தார்கள்.
அதனால் போலீஸ் ஸ்டேஷனுக்குள்ளேயே அவனுடைய குரல் ஓங்கிக் கேட்டுக் கொண்டிருந்தது.
"யோவ்... நான் எல்லாம் பலானதைத் திருடி பெரிய சம்பவம் பண்ணுவேன். எத்தனையோ கேஸ் என் மேல இருக்கு. இப்போ... ஒரு சைக்கிளுக்காக சிசிடிவி வச்சு என்னை இங்க வரவழைச்சிருக்கீங்க!" என்று கையை விரித்தான்.
"என்னை மாதிரி ஒரு ஆளுனு சொல்லிட்டா போயிட்டே இருப்பேனா? என்னய்யா பிரச்சனை? பணம் வேணுமா? எந்தக் கட்சி ஆளுகிட்ட வேணும்னாலும் வாங்கித் தர்றேன். இல்ல... வேற ஏதாவது வேணுமா? சொல்லுங்க."என்று திமிராகப் பேசிக்கொண்டிருந்தான்.
எதிரில் இருந்த போலீஸ் அதிகாரியோ அவனை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது ஒரு கான்ஸ்டபிள் உள்ளே வந்து, "சார்... அந்தப் பையன் வந்துட்டான்." என்றான்.
"வரச்சொல்லு." சில நொடிகளில் சாரதி உள்ளே வந்தான்.
அவனது பார்வை முதலில் போலீஸ் அதிகாரியிடம் சென்றது. பிறகு அங்கே இருந்த கோவிந்தனைப் பார்த்தது
கோவிந்தனோ அவனை மேலிருந்து கீழ்வரை பார்த்தான். "எவன் அவன்?" என்றான்.
"சைக்கிள் திருட்டுப் போச்சுன்னு கம்ப்ளைன்ட் கொடுத்த பையன்." என்றார் அதிகாரி.
கோவிந்தன் உதட்டைச் சுழித்தான். "ஏன்டா... பெருசா BMW காரையா திருடிட்டேன்? சிசிடிவி எல்லாம் வச்சு ஆதாரம் காட்டி என்னை இங்க கூட்டிட்டு வந்திருக்கீங்க. என்னடா வேணும்?" சாரதி ஒரு நொடி கூட யோசிக்கவில்லை.
அவன் நேராக கோவிந்தனருகில் சென்று, அடுத்த நொடி அவனது கால்களைப் பிடித்துக் கொண்டான்.
"அண்ணா.." என்றவனது குரலில் கோவிந்தனே அதிர்ந்து போனான்.
அங்கே இருந்த போலீஸ்காரர்களும் ஒரு நொடி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். "என் சைக்கிளை எனக்குத் தந்துடுங்க அண்ணா." என்றான்.
"டேய்... என்னடா இது? எழுந்திரு!"
"ப்ளீஸ் அண்ணா..." சாரதியின் குரல் உடைந்து போயிருந்தது. "அது எங்கப்பா பயன்படுத்தின சைக்கிள். அவர் இறந்ததுக்கப்புறம்... அவரோட கடைசி நினைவா நான் அதை மட்டும் தான் வச்சிருக்கேன். உங்ககிட்ட சண்டை போடவோ, பெரிய ஆளுன்னு காட்டிக்கிட்டு என் பொருளை வாங்கிக்கவோ நான் வரலை அண்ணா. அது எனக்கு வேணும். அவ்ளோதான்." என்று கேட்டான்.
கோவிந்தன் அவனை வெறித்துப் பார்த்தான். அவன் எதிர்பார்த்தது வேறு. 'என் பொருளைத் திருடிட்டியே... கொடு' என்று சத்தம் போட்டு, கழுத்தில் சட்டை காலரை பிடித்து சண்டை போடுவான். ஜம்பமாக என்ன செய்ய முடியுமோ போடா' என்றுதான் கூற நினைத்திருந்தான்.
ஆனால்... இவன் தன்னுடைய காலில் விழுந்து கெஞ்சிக் கொண்டிருக்கிறான் என்று ஆச்சரியமாய் பார்த்தான்.
"டேய்... என்னடா நெஞ்சை நக்கற?" என்று கேட்டாலும் அவன் குரலில் இருந்த திமிர் சற்றுக் குறைந்திருந்தது.
சாரதி எழுந்து நின்றான். "சென்டிமென்ட்டா பேசறேன்னு நினைக்காதீங்க அண்ணா. அதான் உண்மை. என்னிடம் வேற எதுவும் இல்லை. அதனாலதான் உங்களிடம் வந்து கேட்கிறேன்." என்று பணிவாக கேட்டான்.
கோவிந்தன் அவனை மீண்டும் உற்றுப் பார்த்தான். ஆள் வாட்டசாட்டமாகத்தான் இருந்தான் சாரதி.
வயதுக்கேற்ற உடற்கட்டும் இருந்தது. எப்படியும் அடிக்க வேண்டுமென்று நினைத்தால் நிச்சயம் மலையோடு கூட மோதும் வல்லமை இருக்கின்றவனாக தான் சாரதி தெரிந்தான். ஆனால்... இப்படி கெஞ்சிக் கொண்டிருப்பது அவனுடைய தோற்றத்துக்கே முரணாக இருந்தது.
"பேஜாரா இருக்கியேடா..." என்று முணுமுணுத்தவன், "சரி... உன் சைக்கிளை ஏன் திருடினேன்னு தெரியுமா?" சாரதி அமைதியாக நின்றான்.
"நீ வச்சிருந்த சைக்கிள் நல்லா இருந்துச்சு. எண்ணெய் போட்டு பளிச்சுனு வச்சிருந்த. புதுசு மாதிரி கண்ணுல பட்டுச்சு. அதான் தூக்கிட்டேன்."
சிறிது நேரம் அமைதியாக இருந்தவன், "ரொம்ப நாளாச்சு.. சின்னதா திருடி... அதான் திருடி விலைக்கு விற்க நினைச்சு வேற இடத்துக்கு அனுப்பிட்டேன். இப்ப அது எங்க இருக்குன்னு..." என்று சொல்லிக் கொண்டிருந்தபோதே 'ஒரு நிமிஷம்' என்று அவனது அலைபேசி எடுத்து விற்க கூறியவனிடம் பேசினான்.
"டேய் நேத்து விற்க சொல்லி தந்தேனே... ஆங்... அந்த சைக்கிளை எடுத்துட்டு நம்ம ஏரியா ஸ்டேஷனுக்கு வந்துடு. ஆமா... அந்த சைக்கிளை உடனே எடுத்துட்டு வா. விற்க வேண்டாம்... பணம் வாங்கிட்டியா.. இல்லை இல்லை கொண்டா.. ஆமா... காரணமாத்தான். சீக்கிரம்." என்று கூறி அழைப்பைத் துண்டித்தான் கோவிந்தன்.
சாரதியின் முகத்தில் முதல் முறையாக சிறிய நம்பிக்கை தெரிந்தது.
கோவிந்தன் அதை கவனித்தான். "உன்னைப் பார்த்தா பாவமா இருக்கு. என்னடா வேலை பார்க்க?" என்று கேட்டான்.
"கண்டெக்டரா இருக்கேன் அண்ணா." என்றான்
"கண்டெக்டராவா?"
"ஆமா."
"காக்கி டிரஸ் போட்டிருக்கியே..."
"அது கண்டெக்டர் யூனிஃபார்ம் அண்ணா."
"ஓ..." கோவிந்தன் தலையசைத்தான்.
"உங்கப்பா என்ன பண்ணாரு?"
"அவரும் கண்டெக்டர்தான். அவர் வேலை பார்த்த இடத்திலேயே எனக்கும் வேலை தந்தாங்க" என்றான் சாரதி.
"உங்கப்பா பெயர்?"
"சண்முகம்."
கோவிந்தன் சில நொடிகள் அமைதியாக இருந்தான்.
"சண்முகமா?"
"ஆமா அண்ணா."
"கூடப்பிறந்தவங்க இருக்காங்களா?"
"இல்ல. அம்மா மட்டும் அண்ணா."
"சொந்த வீடு இருக்கா" என்றார்.
"ஆமா அண்ணா... ஆனா பெருசா இல்லை. ஒரு பெட்ரூம், ஹால், கிச்சன் அவ்ளோதான்." என்று விவரித்தான்.
"அம்மா என்ன பண்றாங்க?"
"வீட்டுலேயே தையல் மெஷின்ல அக்கம் பக்கத்துல மட்டும் துணி தச்சி தருவாங்க. அப்பா இருந்தப்ப இருந்த வீட்டை கொஞ்சம் மாற்றி இருக்கு." என்றான்.
கோவிந்தன் அவனைப் பார்த்தபடி மெதுவாகத் தலையசைத்தான்.
"ம்ம்..." அப்போது வெளியே ஒரு ஆட்டோ வந்து நின்ற சத்தம் கேட்டது.
சில நொடிகளில் ஒரு ஆள் உள்ளே வந்து, ''அண்ணா... இதுதானே?" என்று சைக்கிளை நீட்டினான்.
சாரதி திரும்பிப் பார்த்தான். அவனது கண்கள் விரிந்தன.
"இதான் எங்கப்பா சைக்கிள்.." என்று முணுமுணுத்தவனின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.
இரண்டு நாட்கள் தூசி படிந்திருந்த அந்தச் சைக்கிளை பார்த்தவுடனேயே, அவன் ஓடிச் சென்று அதைத் தொட்டுப் பார்த்தான்.
ஹேண்டிலை வருடினான், சீட்டைத் தொட்டான், பிறகு சைக்கிளின் பெல்லை அழுத்திப் பார்த்தான். டிரிங்... அந்த ஓசை அவனுக்குள் 'அப்பா உன்னிடமே வந்துட்டேன் கண்ணா' என்று கூறி மனதை மீண்டும் உயிர்ப்பித்தது.
கண்களை மூடிக் கொண்டவன், சைக்கிளின் ஹேண்டிலைப் பிடித்தபடி சில நொடிகள் நின்றான்.
கோவிந்தன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
"என்னய்யா இது..." என்று அருகில் இருந்த போலீஸ்காரரிடம் மெதுவாகக் கேட்டான்.
"சைக்கிள் கிடைச்ச சந்தோஷத்துல அழறான் இவன் சண்டை போடுவான், கத்துவான், பேஜார் பண்ணுவான்னு நினைச்சா... இப்படி இருக்கான்." போலீஸ் அதிகாரி லேசாகச் சிரித்தார்
"ம்ம்... எல்லா நேரமும் இப்படித்தான் இருப்பான் போல." என்றார் அவர். சாரதி தன்னுடைய கண்ணீரைத் துடைத்துக் கொண்டான்.
பிறகு கோவிந்தனருகில் வந்து, "ரொம்ப தேங்க்ஸ் அண்ணா." என்று கூறி, தன்னுடைய கையில் இருந்த மோதிரத்தைக் கழற்றினான்.
"இதை வச்சுக்கோங்க." என்றான்
கோவிந்தன் அவனைப் பார்த்தான்.
"என்னாதிது?"
"சைக்கிள் வாங்கித் தந்ததுக்காக..." என்று கூறினான்
"ஏய்... என்னை என்ன பைத்தியக்காரன்னு நினைச்சியா?" என்று கோவிந்தன் கத்தினான்.
சாரதி திகைத்தான். "ஒன்னும் வேண்டாம். நான் திருடினதை திருப்பிக் கொடுத்தேன். அதுக்கு நீ எனக்கு பணமோ, பொருளோ தர்றது எனக்கு வேண்டாம். எதுனாலும் திருடி எடுத்துக்கறது தான் என் ஸ்டையில். நீயா தந்தா வாங்கமாட்டேன். புரிதா." என்றான்.
"அண்ணா..."
"மோதிரத்தை நீயே வச்சுக்கோ." என்று அவனது கையை மூடி வைத்தான்.
பிறகு அவனது தோளில் தட்டியபடி, "என்னமோ தெரியலடா... உன்னைப் பிடிச்சிருக்கு." சாரதி அமைதியாக அவனைப் பார்த்தான்.
"ஏதாவது உதவி வேணும்னா... கோவிந்தன்னு கேட்டு என்னை தேடி வா. என்னால முடிஞ்சதை பண்ணறேன்." என்றான்.
"தேங்க்ஸ் அண்ணா." சாரதி மனதாரக் கூறினான்.
பிறகு போலீஸ் அதிகாரியிடம் திரும்பி, "சார்..."
"என்ன?"
"உங்களுக்கும் ஏதாவது காசு தரணுமா சார்?" என்று தயக்கத்துடன் கேட்டான்.
"என்ன?" என்று அதிகாரிகள் கடுப்பானார்கள்.
"இப்ப என்கிட்ட பணம் இல்லை சார். இந்த மோதிரம் மட்டும் இருக்கு. இதை நீங்க வச்சுக்கோங்க." என்று மீண்டும் மோதிரத்தை நீட்டினான்.
போலீஸ்காரர் அவனைப் பார்த்து சிரித்தார். "ஏன்டா... திருடனே உன்னை பார்த்து மோதிரத்தை வாங்காம திருட்டு போன பொருளையும் தந்துட்டு போனா போகட்டும்னு விட்டுட்டுப் போறான். எங்களை களவாணியா மாத்தப் பார்க்கிறியா?" என்றார்.
சாரதி உடனே கையைப் பின்னால் இழுத்துக் கொண்டான்.
"சாரி சார்."
"போ... போ. இனிமே எதையும் தொலைக்காத."
"சரிங்க சார்."
"அப்புறம்... மோதிரம், காசு எதுவும் கழட்டிக் கொடுக்காத. உழைச்சு சம்பாதிச்சது. அதை நீயே வச்சுக்க." என்றார்.
"சரிங்க சார்." சாரதி மீண்டும் சைக்கிளை ஒருமுறை பார்த்தான்.
அவனது முகத்தில் இப்போது நிம்மதி மட்டுமே இருந்தது.
"தேங்க்ஸ் சார்." என்று கூறிவிட்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான். எப்படியும் ஏதாவது வாங்கிக்கொண்டு தான் சைக்கிளை எடுக்க முடியுமோ என்ற அர்த்தத்தில் தான் மோதிரத்தை நீட்டினான். நல்லவேளை யாரும் அப்படி ஏதும் கட்டளையிடவில்லை.
சைக்கிளை மிதித்தபடி, வீட்டின் வாசலுக்கு வந்ததும், 'டிரிங்... டிரிங்..' என்று சைக்கிளின் பெல்லை அழுத்தினான்.
அந்தச் சத்தத்தைக் கேட்டதும் வீட்டுக்குள் இருந்த காஞ்சனா அவசரமாக வெளியே ஓடி வந்தார்.
வாசலில் மகனுடன் நின்றிருந்த சைக்கிளைப் பார்த்ததும் அவரது முகம் மலர்ந்தது.
"அட.. சைக்கிள் கிடைச்சிடுச்சா?"
"ம்ம் ஆமா அம்மா."
"எனக்குத் தெரியும் சாரதி.. கஷ்டப்பட்டு தேடினது எதுவும் சும்மா போகாது. எப்படியாவது கிடைச்சிடும்னு எனக்கு நம்பிக்கை இருந்துச்சு. அதுவும் இல்லாம இது உங்கப்பாவோடது. நம்மை விட்டு அவர் தொலைய விரும்ப மாட்டார்" என்று சைக்கிளைத் தொட்டு பார்த்தார்.
சாரதி பெருமூச்சு விட்டான். "அம்மா... இப்பதான் நிம்மதியா இருக்கு."
அந்த நேரமே அவன் முத்து அண்ணாவுக்கு போன் செய்தான். "அண்ணா... சைக்கிள் கிடைச்சிடுச்சு."
அங்கிருந்து வந்த சந்தோஷக் குரலைக் கேட்டபடி சாரதியும் சிரித்தான். போனை வைத்ததும் காஞ்சனா அவனைப் பார்த்தார்.
"இனி இந்த சைக்கிளை எடுக்காதய்யா." என்றார் காஞ்சனா. சாரதி திடுக்கிட்டான்.
"ஏன்மா?" என்று பதறினான். ஒரு முறை தொலைத்ததால் இப்படி சொல்கின்றாரோ? என்று.
காஞ்சனா வீட்டுக்குள் சென்று கொஞ்சம் பணத்தை எடுத்துக் கொண்டு வந்தார்.
அதை மகனது கையில் வைத்தார். "இனி நீ எங்கயாவது போகணும்னா... பைக்குல போ. ரகுமான் பாயிடம் பேசி வச்சிருக்கேன். இந்த பண்ததை முன் பணமா தந்துட்டு சாவி வாங்கிட்டு உனக்கு பிடிச்ச வண்டியை வாங்கிக்கோ." என்றார்.
"என்ன பைக்கா?''
"ம்ம்ம பைக்குக்கு தான்" என்றார்.
அவன் அதிர்ச்சியுடன் அம்மாவைப் பார்த்தான்.
"என்னம்மா சொல்லற?" என்று விழித்தான்.
"நம்ம இன்ஸ்டால்மென்ட்ல பொருட்கள் வாங்கற ரகுமான் பாய்கிட்ட பைக் பத்தி சொல்லி வச்சிருக்கேன். இன்னைக்கு சாயங்காலம் போய் பார்த்துட்டு எடுத்துட்டு வாய்யா." என்றார்.
"ஏன்மா? எதுக்கும்மா? தேவையில்லாத செலவு" என்றான்.
காஞ்சனா மகனின் முகத்தைப் பார்த்தார். "எம்புள்ள இப்படிக் கலங்கி நிக்கறதை இனிமே நான் பார்க்கக்கூடாது. சைக்கிளும் உபயோகிச்சிக்கோ. பைக்கும் தேவைக்கு உபயோகிச்சிக்கோ.'' சாரதியின் கண்கள் கலங்கின.
"எல்லாம் உங்கப்பா இருந்தப்பவே நீ கேட்டது தான்யா." சிறிது நேரம் அமைதியாக இருந்தவர்,
"அப்போ உங்கப்பா இருந்தாரு. 'இப்ப முடியல... கொஞ்சம் நாள் கழிச்சு வாங்கித் தர்றேன்'ன்னு அவரும் சொல்லிட்டே இருந்தாரு. இப்ப..." அவரது குரல் உடைந்தது. "இப்ப அம்மா இருக்கேன்ல?" சாரதி தலையைக் குனிந்தான்.
"நம்மகிட்ட பெருசா எதுவும் இல்லன்னு எனக்குத் தெரியும். ஆனா... புள்ளைங்க சந்தோஷமா இருக்கணும்னு நினைக்கறது அம்மாவோட பெரிய ஆசை." என்றார்.
"அம்மா..."
"நீயும் இந்த நாலு வருஷமா வேலை பார்த்துட்டு இருக்க? உன் காசுலதான் இந்த வீட்டுக்கு எத்தனையோ நடந்திருக்குது. அதுல கொஞ்சம் உனக்காக செலவு பண்ணினா என்ன? இது நீ சம்பாரிச்சதுல தான் பணம் கட்டறேன். என்ன இன்ஸ்டால்மெண்ட்"
"ஆனா..."
"பத்து வருஷத்துக்கு லோன் கட்டணும்னு இருந்தாலும் பரவாயில்லை." என்று புன்னகைத்தார்.
"என் புள்ளை இனிமே சைக்கிள் திருட்டுப் போயிடுச்சுன்னு நெஞ்சைப் பிடிச்சிட்டு நிக்கக்கூடாது. பைக்குல போகணும். அதுதான்." சாரதியால் அதற்கு மேல் எதுவும் பேச முடியவில்லை.
அவன் பணத்தை கையில் இறுகப் பற்றிக் கொண்டு,
"அம்மா..." என்று அழைத்தபடியே தாயை அணைத்துக் கொண்டான்.
காஞ்சனாவும் மகனது தலையை வருடினார்.
"எம்புள்ள ராஜா கணக்கா இருக்கணும்னு சொல்ல மாட்டேன். நீ எனக்கு ராஜா தான்யா'' என்று கூறியபோது சாரதியின் கண்களில் மீண்டும் கண்ணீர் வழிந்தது.
ஆனால்... இந்த முறை அந்தக் கண்ணீரில் வலி இல்லை. அம்மாவின் அன்பு இருந்தது.
"சரி போய் நல்ல நேரத்தில பைக்கை வாங்கிட்டு வர்ற வழில கோவில்ல வச்சி ஒரு பூஜை முடிச்சிட்டு வந்துடுவோம்" என்றார்.
சரிம்மா.. இரண்டு நிமிஷத்துல வந்துடறேன்" என்று ஓடினான்.
ரகுமான் பாயிடம் பைக்கை வாங்கினான். சில பத்திரத்தில் கையெழுத்தும் போட்டான்.
பக்கத்திலேயே கோவில் என்பதால் அங்கு வண்டியை தள்ளிக் கொண்டு வந்து நிறுத்தினான்.
காஞ்சனா பூவை வாங்கி பைக்கில் போட்டு, அர்ச்சனை செய்ய அர்ச்சனை தட்டு வாங்கினார்.
அதே கோவிலில் தான் இலக்கியா இஷிதாவுடன் லாவண்யா வந்திருந்தாள். லாவண்யாவின் அக்கா மாலதிக்கு நல்லபடியாக இந்த பெண் பார்க்கும் நிகழ்வு நடந்தேறி, இதே வரன் திருமணத்தில் முடிய வேண்டுமென வேண்டிக்கொள்ள வந்திருந்தாள்.
சாரதியின் பெயரில் அர்ச்சை செய்ய காஞ்சனா கூறினார். சாரதி வாசலில் இருந்த பைக்கை கவனித்து புன்னகை பூக்க, அந்த நேரம் லாவண்யா கோவிலை முதல் சுற்று சுற்றிக் கொண்டிருந்தாள். கொடிமரத்தை தொட்டு கும்பிட்டு மேலே விழியை பார்வையிட்டாள்.
சாரதிக்கு லாவண்யாவை பார்த்ததும், ஏதோ ஒரு சிறு புன்னகை உதட்டில் வந்தது. அதே நேரம் கோவில் மணி அடித்திட, இளைஞருக்கே உரித்தான ரசனையான பார்வையை அவள் மீது பதித்தான்.
லாவண்யா மூன்றுமுறை சுற்றும் சிந்தனையில் சாரதியை கவனிக்கவில்லை.
தீபாராதனை காட்டி சாரதி முன் நீட்ட, அவசரமாய் தொட்டு கும்பிட்டவன், "அம்மா.. வெளிய பைக்கை பார்த்துக்கறேன். நீங்க எனக்காக கோவிலை சுற்றிட்டு வாங்க." என்று பறந்தான்.
காஞ்சனா சரியென்றிட, சாரதி அவசரமாய் லாவண்யா முன் வந்தான். இஷிதாவோ "அக்கா... நானும் அம்மாவோட பிரசாதம் வாங்க அவங்க கூட போறேன்" என்று கையை விடுத்து இலக்கியாவுடன் செல்லவும், லாவண்யா தனியாக நின்றாள்.
சாரதி முன்னே வரவும், இவரா' என்று தான் திகைத்தாள் சாரதியோ "ஸ்டேஷன்ல சைக்கிள் கிடைச்சிடுச்சுங்க. ஆனாலும் அம்மா பைக் வாங்கி தந்திருக்காங்க. பைக் வெளிய நிற்கு." என்றான்.
லாவண்யா பதட்டமாய் அங்கும் இங்கும் சித்தி பார்த்து விடுவாரோ என்று பயந்திட, "அடையாளம் தெரியலையாங்க. நான் சாரதி. பஸ் கன்டெக்டர்" என்று கூற, "அய்யோ.. தெரியும்ங்க. சித்தி கூட வந்தேன்.. அவங்க என்னை தப்பா" என்று கூற வருவதை விழுங்கி பயப்பட, "சாரிங்க." என்று நகர்ந்தான்.
"லாவண்யா.. இஷிதாவிடம் உனக்கு பிரசாதம் தந்திருக்கேன் அதை வாங்கிடு. இல்லைன்னா அவ டிரஸ்லே சிந்தி சாப்பிடுவா" என்று கூற, சாரதியோ 'லாவண்யா... பெயரை நினைவு வச்சிக்கணும்' என்று சாரதி தள்ளி சென்றிருந்தான்.
காலமோ தள்ளி செல்ல வைக்கலாமா?! அல்லது நெருக்கத்தை கூட்டுமா?! என்று கற்சிலையாக இருந்த கடவுள் அவர்களை கவனித்தார்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 10)
அட ராமா ! இதை நான் எதிர் பார்க்கலையே...? ஆனால், சாரதி செய்தது தான் சரி, ஏன்னா, நாமெல்லாம் சாதாரண மிடில் க்ளாஸ் தானே, அடி தடி அதிகாரமெல்லாம் நமக்கு உதவாது, ஒன்லி சரணடைதல்
தான்....கொடுத்துடுவானா ?
கொடுக்கலைன்னா அந்த திருடனுக்குத் தான் கேவலம்.
அச்சோ..! சாரதி மனசைத் தொட்டுட்டான். உயிரற்ற பொருள் தான் என்றாலும், இந்த மாதிரி சென்டிமென்ட்டல் ஃபீலிங்கால உயிரற்ற பொருளுக்கும், உயிர் வந்துடும் போல.
அட பரவாயில்லையே, முன்னாடி சைக்கிள் சாரதியா இருந்தவன், இப்ப பைக் சாரதியா.... கலக்குடா சாரதி.
😐😐😐
CRVS (or) CRVS 2797
Ellam neram um heroism ah tha kattanum nu avasiyam illa apadi katturathu ku ivan onnum cinema hero illa athu avan appa oda adaiyalam anga avanuku avan oda kobatha ah vida avan appa mela ulla emotions mattum than veliya vandhu iruku .
Sarathy oru curiosity la lavanya ah partha udanae pesa poitan but ava thayagavum ava situation purinchathoda sorry um ketutu poitan ithu than real genuineness.
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-13
11 hours ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-12
1 day ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-11
1 day ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-9
2 days ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-8
2 days ago
Currently viewing this topic 1 guest.
- 25 Forums
- 328 Topics
- 1,581 Posts
- 8 Online
- 420 Members
