தகிக்கும் நிலவொன்று-31
அத்தியாயம்–31
இரவு வீடு முழுவதும் அமைதியில் மூழ்கியிருந்தது. ஹாலில் இருந்த கடிகாரத்தின் டிக்... டிக்... என்ற சத்தம் மட்டுமே அந்த அமைதியை கலைத்துக் கொண்டிருந்தது.
ஒரே அறையில் ஷ்ரத்தா, ராயன், தியா மூவரும் உறங்கிக் கொண்டிருந்தனர்.
ராயன் வழக்கம்போல் ஷ்ரத்தாவின் இடது கை வளைவில் சுருண்டு படுத்திருந்தான்.
தியாவோ புதிய இடம் என்பதால், முதலில் சற்றுத் தயங்கியிருந்தாலும், ஷ்ரத்தாவின் அருகில் படுத்தவுடனே நிம்மதியாக உறங்கிவிட்டாள்.
பக்கத்து அறையில் யதுநந்தன் மட்டும் அரை தூக்கத்தில் இருந்தான். நடந்த எல்லா சம்பவங்களும் அவன் மனதை விட்டு அகலவில்லை. இதயத்தில் ஓரமாக 'ஷ்ரத்தாவை இப்ப தனியா விடக் கூடாது' என்ற எண்ணமே அவனுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.
அதே நேரம் வீட்டின் பின்பக்க சுவரை இரண்டு கருநிழல்கள் தாண்டின. முகம் முழுவதும் மெல்லிய கருப்பு துணியால் முகமூடி அணிந்து மறைத்திருந்தனர்.
ஒருவன் மெதுவாக ஜன்னலைத் திறக்க முயன்றான். மற்றொருவன் கையில் மின்னும் கத்தியை இறுகப் பற்றியிருந்தான்.
அடுத்த நொடி கதவு கைப்பிடி மெதுவாக அசைந்தது.
அந்த சிறிய சத்தமே. யதுநந்தனின் தூக்கத்தை கலைத்தது. அவன் கண்களைத் திறந்தான்.
வீட்டுக்குள் யாரோ நடக்கும் சத்தம். ஒரே நொடியில் எழுந்து கதவைத் திறந்தான்.
ஹாலில் இரண்டு நிழல்கள். யாரு?" என்று கத்தினான்.
அடுத்த கணமே ஒருவன் அவன் மீது கத்தியுடன் பாய்ந்தான்.
யதுநந்தன் அவன் கையைப் பிடித்து சுவரில் மோதி எறிந்தான்.
இன்னொருவன் நேராக ஷ்ரத்தா இருந்த அறையை நோக்கி ஓடினான்.
"ஷ்ரத்தா...!" என்று யதுநந்தன் கத்தியபடியே அவனைத் துரத்தினான்.
அந்த சத்தத்தில் ஷ்ரத்தா திடுக்கிட்டு விழித்தாள்.
"என்னாச்சு...?" என்று எழுந்தவள், கதவு திறக்கப்படுவதைக் கண்டு உறைந்தாள். தியாவும் கண்களைத் திறந்து பயத்தில் நடுங்கினாள்.
ராயன் மட்டும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான்.
கத்தியோ பளபளப்பாக மின்னியது. ஒருவன் நேராக குழந்தைகள் பக்கம் பாய்ந்தான்.
"தியா...!" என்று அலறிய ஷ்ரத்தா, ஒரே இழுப்பில் தியாவை மார்போடு அணைத்துக் கொண்டு கீழே சாய்ந்தாள்.
கத்தி அவளது தோளை உரசியபடி சுவரில் பாய்ந்தது.
யதுநந்தன் பின்னால் இருந்து வந்து அந்த மனிதனை பலமாகத் தள்ளினான்.
இருவருக்கும் இடையே கடுமையான சண்டை வெடித்தது.
மேசை கவிழ்ந்தது. நாற்காலி உடைந்தது. ஒருவன் வெளியே ஓட முயன்றான்.
"டேய்... நில்!" என்று யதுநந்தன் அவனைத் துரத்தினான்.
ஆனால் அவன் சுவரை ஏறிக் குதித்து இருளுக்குள் மறைந்தான். மற்றொருவனை மட்டும் கழுத்தைப் பிடித்து தரையில் அழுத்திப் பிடித்தான் யதுநந்தன்.
"உன்னை யாரு அனுப்பினது?" என்று வலுவுடன் தப்ப விடாமல் வலி ஏற்படுத்தி கேட்க, "சொல்லு டா" அவன் மீண்டும் கத்தினான்.
அந்த மனிதன் உதட்டை இறுகக் கடித்தான். யதுநந்தன் அவன் முகத்தில் ஒரு குத்து விட்டான்.
"யாரு?" அவன் இரத்தத்தைத் துப்பியபடி சிரித்தான்.
"ஷ்ரத்தாவை கொலை செய்தா, சத்ரியன் உயிரோட இருந்தா, எங்கிருந்தாலும் எங்களை தேடி வருவான்னு... எங்க பாஸ்.. ஸ்டீபன் சொன்னர்." என்று கூறவும் "ஸ்டீபனா?" யதுநந்தனின் புருவம் சுருங்கியது.
அவன் ஒரு நொடி யோசித்தான். அந்த ஒரு நொடியை பயன்படுத்தி அந்த மனிதன் யதுநந்தன் கையைத் தட்டி விட்டு வெளியே ஓடிவிட்டான்.
"டேய்...!" என்று துரத்திச் சென்றும் அவன் இருளில் மறைந்து விட்டான்.
"ஸ்டீபன்..." என்று ஷ்ரத்தா மெதுவாக முணுமுணுத்தாள்.
அவளது முகம் வெளிறி போனது. "உனக்கு அவன் யாருனு தெரியுமா?" என்று யதுநந்தன் கேட்டான்.
"அந்த பெயர்... அந்த பெயர்" அவளது குரல் நடுங்கியது.
"ஐரீனை கடத்தின கும்பலோட தலைவன். குழந்தைகளை பணத்துக்காக விற்கிறவன். அதுவும்... அதுவும்.." அவள் உதட்டை கடித்தாள்.
"பெரிய பெரிய செலிபிரிட்டிகளுக்கும், பணக்கார மிருகங்களுக்கும், குழந்தைகளை சப்ளை பண்ணுற நரக மனிதன். அவன் குழந்தை மாமிசம் கூட சப்ளை செய்த வீடியோவை நா.. நான்.. நான் பார்த்திருக்கேன்..." என்று சொன்னவள் நடுங்க ஆரம்பித்தாள்.
"அய்யோ.. அப்படின்னா... 126 குழந்தைகளையும் அவன் தேடறான்..." என்று தலையைப் பிடித்துக் கொண்டாள்.
யதுநந்தன் அவள் அருகில் மண்டியிட்டான். "காம் டவுன் ஷ்ரத்தா... சத்ரியன் உயிரோட இருந்தா... பார்த்துப்பார் தானே." என்று சத்ரியன் உயிரோடு இருப்பானா இல்லையா என்று இந்த சூழலில் அறிந்திட முனைந்து கூறினான். ஷ்ரத்தா உடனே மறுப்பாய் தலையசைத்தாள்.
"உயிரோட இல்லன்னா..." அவளது குரல் உடைந்தது. அதை சொல்லயியலாத வகையில் தான் வார்த்தையை விட்டாள்
"126 குழந்தைகளையும் கண்டுபிடிச்சு கூட்டிட்டு போயிடுவான்... சத்ரியன் உயிரை கொடுத்து காப்பாற்றிய உயிர்கள், அவர் போட்ட திட்டம்... நான் ஜெயில்ல இருந்த நாட்கள்... அவரோட தியாகம், எல்லாமே வீணாயிடும்..." என்று கதறினாள்.
யதுநந்தன் அவளது தோளில் கை வைத்தான்.
"ஒரு வேளை... சத்ரியன் வரலன்னா... அவன் குழந்தைகளை தேடிப் போவான்னு நினைக்கறிங்க ரைட்?" என்றான்.
ஷ்ரத்தா அழுதபடியே "ஆமா..." என்று தலையசைத்தாள்.
அவளது பயம்... சத்ரியனை இருப்பானா இல்லையா என்ற பயத்துடன், வேதனையை கூட்டி, அந்த 126 குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவும் இருந்தது.
"காம் டவுன் ஷ்ரத்தா." என்று மெதுவாகச் சொன்னான் யதுநந்தன்.
"அந்த 126 குழந்தை இருக்கற இடம் யார் யாருக்கு தெரியும். அவங்களை எல்லாமா அலார்டா இருக்க சொல்லுங்க" என்றதும், ஷ்ரத்தா விரக்தியாக, "யாரிடம் அலார்ட் செய்யறது யதுசார். சத்ரியனை தாண்டி யாருக்கும்.. யாருக்கும் தெரியாது. வினோத் அண்ணாவுக்கு தெரியும். ஆனா அவரும் எங்கனு தெரியாதே. ஹரிணிக்கும் நிஜமாவே தெரியாது. ஆனாலும் அவளும் இறந்துட்டா. சத்ரியனை தாண்டி 126 குழந்தைகள் எங்க இருக்காங்கனு யாருக்கும் தெரியாது." என்றதும், யதுநந்தனோ ''அப்பறம் ஏன் பயப்படறிங்க. 126 குழந்தைகள் இப்பவும் சேஃப். இப்ப நீங்களும் சேஃப்." என்றதும் அந்த ஒரு வார்த்தை ஷ்ரத்தாவுக்கு சிறிய ஆறுதலாக இருந்தது.
அந்த நேரம் தியா மெதுவாக யதுநந்தனின் சட்டையைப் பிடித்தாள்.
"சார்... பயமா இருக்கு..." என்று நடுங்கினாள்.
யதுநந்தன் சிரிக்க முயன்றான்.
"சார் எல்லாம் வேண்டாம். யது... யதுன்னு கூப்பிடு." என்றதும் தியா தயக்கத்துடன் பார்த்தாள்.
"நீங்க பெரியவங்க... பெயர் சொல்லி கூப்பிட்டா தப்பில்லையா?" என்றாள் குழந்தை.
"இல்ல.. யதுன்னு கூப்பிட்டா போதும்." என்றதும் தியா மெதுவாக தலையாட்டினாள்.
"ஓகே... யது சார்..." என்றதும், ஷ்ரத்தாவும்... யதுநந்தனும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
அந்த பயங்கரமான இரவிலும்... அந்தச் சிறிய மழலையின் பேச்சு, அவர்களுக்குள் ஒரு நொடி நிம்மதியை விதைத்தது.
வீடு முழுவதும் மீண்டும் அமைதியாக இருந்தாலும் இருவர் மனதிலும் அமைதியே இல்லை.
சில மணி நேரத்திற்கு முன்பு நடந்த தாக்குதல், இன்னும் ஷ்ரத்தா தியா மனதிலா அதிர்வை ஏற்படுத்தியிருந்தது.
யதுநந்தன், ஹாலில் கிடந்த உடைந்த பொருட்களை ஓரமாக நகர்த்திவிட்டு கதவுகள், ஜன்னல்கள் அனைத்தையும் மீண்டும் ஒருமுறை சரிபார்த்தான்.
பிறகு ஷ்ரத்தாவை நோக்கி திரும்பினான். "இன்னைக்கு நான் ஹாலிலேயே படுத்துக்கறேன்." என்று கூறினான். அது பாதுகாப்பின் பொருட்டு என்பதால் ஷ்ரத்தா தலையாட்டினாள்.
"நீ... ராயன், தியா மூணு பேரும் அப்ப மாதிரியே அந்த ரூம்ல படுத்துக்கோங்க." ஷ்ரத்தா எதுவும் பேசவில்லை.
ராயன் நடந்த களோபரத்தில் கூட எழவில்லை. விளையாடி களைத்ததால் அசதியில் ஆழ்ந்த உறக்கத்தில் தான் இருந்தான்.
ஆனால் தியாவுக்கு மட்டும் தூக்கம் வரவில்லை. சிறிது நேரத்திற்கு ஒருமுறை கதவைப் பார்த்தாள்.
ஜன்னலைப் பார்த்தாள். பிறகு ஷ்ரத்தாவை இறுகப் பற்றிக் கொண்டாள்.
"அம்மா..." என்று மெதுவாக அழைத்தாள். "என்னடா..." என்றாள்.
"எனக்கு பயமா இருக்கு..." அந்த வார்த்தை ஷ்ரத்தாவின் நெஞ்சையே பிசைந்தது. பயமென்றதையே அகராதியில் இருந்து அகற்றியவனின் மகளுக்கு பயமா? என்று தோன்றியது. ஆனால் ஹரிணியின் பயந்த சுபாவம் இருக்குமென "நான் இருக்கேன்ல..." என்று அவளை வருடிக் கொடுத்தாள்.
தியாவின் உடல் இன்னும் நடுங்கிக் கொண்டே இருந்தது.
கண்களை மூடினாலே அந்த முகமூடி அணிந்த மனிதர்கள் நினைவுக்கு வந்தனர். அதனால் "நான் யதுசார் கூட தூங்கவா?" என்று கேட்டாள் தியா.
ஷ்ரத்தாவோ கதவைத் திறந்து வெளியே வந்தாள். ஹாலில் சோபாவில் அமர்ந்திருந்த யதுநந்தன் உடனே எழுந்தான்.
"என்னாச்சு?" என்றான்.
"தியாவுக்கு ரொம்ப பயமா இருக்காம். உங்களோட இருப்பதா சொல்லறா." என்றதும் யதுநந்தன் மெதுவாக தன்பக்கம் அழைத்தான்.
தியாவின் அருகில் மண்டியிட்டு அமர்ந்தான். "தியா... என்னோட தூங்கறிங்களா?" என்று கேட்க தலையை ஆட்டினாள்.
"தியா தூங்குற வரைக்கும் என் கிட்ட இருக்கட்டும் ஷ்ரத்தா" என்றதும் ஷ்ரத்தா ஒரு நொடி தியாவைப் பார்த்தாள்.
பிறகு மெதுவாக தலையசைத்தாள். யதுநந்தன் தியாவை கவனமாக தூக்கிக் கொண்டான். அவளை தனது நெஞ்சில் சாய்த்தபடி சோபாவில் அமர்ந்தான்.
"ஒன்னுமில்லை... பயப்படாம தூங்கு..." என்று மெதுவாக அவள் முதுகைத் தட்டிக் கொடுத்தான்.
தியா முதலில் தயக்கமாக இருந்தாள். பிறகு மெதுவாக அவன் சட்டையைப் பிடித்துக் கொண்டாள்.
சில நிமிடங்களில் அவளது மூச்சு சீரானது. பயம் கொஞ்சம் கொஞ்சமாக விலகியது.
அந்த குட்டி முகம் அமைதியாக உறக்கத்தில் ஆழ்ந்தது. அதை பார்த்த யதுநந்தன் அறியாமலே புன்னகைத்தான்.
அறைக்குள் ஷ்ரத்தாவுக்கு மட்டும் தூக்கம் வரவில்லை.
கதவையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள். ஒவ்வொரு சத்தமும் அவளை பதற வைத்தது.
மெதுவாக அதிகாலையை நெருங்கியது. அப்பொழுது தான் உறங்கினாள். அதுக்கூட தன்னையறியாமல் உறக்கத்தில் இமை மூடியது.
இதில் ராயன் தான் ஐந்தரை மணிக்கு முதலில் விழித்தான்.
கண்களை கசக்கியபடி "மம்மி..." என்று அழைத்தான். ஷ்ரத்தா தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்தவன் அமைதியாக கட்டிலிலிருந்து இறங்கினான்.
ஹாலுக்குள் வந்தான், அங்கே யதுநந்தன் சோபாவில் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்தான்.
அவன் நெஞ்சில் தியா சுருண்டு படுத்திருந்தாள். அந்த காட்சியை ராயன் அமைதியாக பார்த்தான். அவன் குட்டி மனதில் தந்தையின் ஏக்கம் பிறந்தது.
தியாவுக்கு கிடைத்த அந்த அரவணைப்பு, தனக்கும் வேண்டும் போல தோன்றியது.
ஒரு நொடி தயங்கினான். பிறகு மெதுவாக சோபாவில் ஏறினான்.
யதுநந்தனின் மறுபுற தோளில் தலைவைத்து படுத்துக் கொண்டான்.
அரைத் தூக்கத்தில் இருந்த யதுநந்தன், என்னவென்று கூட உணராமல், இரு கைகளையும் விரித்து, இரண்டு குழந்தைகளையும் சேர்த்து அணைத்துக் கொண்டான்.
அவன் உதட்டில் ஒரு மெல்லிய புன்னகை மலர்ந்தது.
ஏழுமணி அளவில், ஷ்ரத்தா திடீரென்று விழித்தாள். அருகில் ராயன் இல்லை. அவளது இதயம் ஒரு நொடி நின்றது.
"ராயன்..." என்று பதறியபடி அறையை விட்டு வெளியே ஓடினாள். நேற்று நடந்ததை எண்ணி பயந்து யதுநந்தனை தேடி கதவை திறந்தாள்.
"யதுசார்...! யதுசார்...! ராயன் காணோம்." என்று கத்திக்கொண்டே ஹாலுக்குள் வந்தவள். அடுத்த நொடியே அப்படியே நின்றுவிட்டாள்.
சோபாவில் யதுநந்தன் உடலை சாய்ந்திருக்க அவன் நெஞ்சில், இருபுறமும் சாய்ந்து ஆழ்ந்த உறக்கத்தில் ராயனும், தியாவும் அழகாக தூங்கிக் கொண்டிருந்தனர்.
அந்த காட்சியை பார்த்த ஷ்ரத்தாவின் பதற்றம் மெதுவாக கரைந்தது. தன்னையறியாமல் நெஞ்சில் கை வைத்து ஆழமாக மூச்சை விட்டாள்.
அந்த நிம்மதிப் பெருமூச்சில், ஒரு பாதுகாப்பு இருந்தது.
ராயன் தந்தையின் தோளில் சாய்ந்து உறங்கிய அனுபவமே இல்லாத குழந்தை.
சத்ரியன் என்ற பெயரை ஷ்ரத்தா அவனுக்கு அப்பாவாக காட்டியிருந்தாலும், அந்த தந்தையின் அரவணைப்பை உணர்ந்து வாழும் வயது அவனுக்கு இன்னும் வரவில்லை. ஆனால் தியா அமைதியாக யதுநந்தனின் நெஞ்சில் சுருண்டு உறங்குவதை பார்த்த ராயனின் மனம் ஏங்கியிருக்குமோ என்று உணர முடிந்தது.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
தகிக்கும் நிலவொன்று.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 31)
அடப்பாவிங்களா ! இன்னும் எதுக்குத்தான் ஷ்ரத்தாவையும் குழந்தைகளையும் துரத்துறாங்களோ...? இன்னும் எங்கேன்னுத்தான் ஓடுவாள்...? எத்தனை நாளைக்குத்தான் யாராவது ஒருத்தர் காப்பாத்திட்டே இருப்பாங்கன்னு எதிர் பார்க்குறது. அப்படி எத்தனை நாள் காப்பாத்த முடியும் ?
இந்த நிமிஷம், யதுநந்தன் குழுந்தைகளை அரவணைச்சுக்கிறது பார்க்க க்யூட்டாத்தான் இருக்குது.
பட்... இது நிரந்தரமாகிடுமா
என்ன ?
😊😊😊
CRVS (or) CRVS 2797
Chathriyan Shardha ku endha aabathum vara koodathu nu than aval.ah jail la safe panni ivolo vum.pannan aana ippo marupadiyum andha stephen kuzhandhai ga luku kaga Chathriyan ah veliya vara vaikka ival ah target panran yae innum evolo nallaiku indha porattam avaluku.
Rayan oda yekkam yadhu ah va la konjam theerndhu iruku .
-
தகிக்கும் நிலவொன்று-50 (முடிவுற்றது)
2 weeks ago
-
தகிக்கும் நிலவொன்று-49
2 weeks ago
-
தகிக்கும் நிலவொன்று-48
2 weeks ago
-
தகிக்கும் நிலவொன்று-47
2 weeks ago
-
தகிக்கும் நிலவொன்று-46
2 weeks ago
- 25 Forums
- 330 Topics
- 1,588 Posts
- 1 Online
- 420 Members
