Forum

ரிட்டர்ன் கிஃப்ட்
 
Notifications
Clear all

ரிட்டர்ன் கிஃப்ட்

2 Posts
2 Users
1 Reactions
48 Views
(@praveena-thangaraj)
Posts: 178
Member Admin
Topic starter
 
[#172]

   ரிட்டர்ன் கிஃப்ட்

   கல்யாண மண்டபத்தில் ஆர்ப்பாட்டங்கள் இன்னும் முடிந்ததாக இல்லை. இங்கே சஞ்சய் தனது கைகடிக்காரத்தை கவனித்து, மனைவி தோளில் இடித்து "இனியா... கல்யாணத்துக்கு வந்தாச்சு.‌ போட்டோ எடுத்தாச்சு, சாப்பாடும் சாப்பிட்டாச்சு . கிளம்பலாமா? நான் ஆபீஸுக்கு அரைநாள் லீவு சொல்லியிருக்கேன்," என்று அவசரப்படுத்தினான்.‌

இனியாவே சஞ்சய் அலுவலகத்திற்கு செல்லும் நேரம் கந்த திருமணத்தில் கலந்துக்கொண்டதே ஆச்சர்யம். எங்கே தன்னை தனித்து போகச்சொல்லிவிடுவானோ என்றல்லவா பயந்தாள். இன்று வந்துவிட்டு அலுவலகம் செல்லவும் கேட்க, அவளும் "ஒரு நிமிஷம்... சொந்தக்காரங்களிடம் சொல்லிட்டு, ரிட்டர்ன் கிஃப்ட் வாங்கிட்டு வந்துடறேன்," என்று கூறிவிட்டு மணமக்கள் மேடையை நோக்கி நடந்தாள் இனியா.

அன்று வெள்ளி கிழமை என்றாலும், திருமண மண்டபமே உறவினர்களின் சிரிப்பால் களைகட்டியிருந்தது.

 ஒரு பக்கம் நாதஸ்வரம் இனிமையாக ஒலித்துக் கொண்டிருந்தது. மறுபக்கம் சிறுவர்கள் பலூனைப் பிடித்துக் கொண்டு ஓடினர்.

 வயதானவர்கள் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். "சாப்பிட்டாச்சா?' 'நீங்க எப்படியிருக்கிங்க?' இப்பவும் அங்க தான் இருக்கிங்களா?" என்ற கேள்வி ஒவ்வொரு மூலையிலும் ஒலித்துக் கொண்டே இருந்தது.

இனியாவோ, திருமணத்திற்கு வந்ததிலிருந்து நலன் விசாரித்த அனைவரிடமும் வீட்டுக்கு நுறப்படுவதாக கூறினாள். 

   அதில் ஒருவர், "வாசல் பக்கம் ரிட்டர்ன் கிஃப்ட் வாங்கிட்டு போ" என்றதும் வேகமாய் தலையாட்டினாள்.‌

 யாருக்கு தான் கிஃப்ட் என்றால் பிடிக்காமல் போகும். 

"இந்த தடவையாவது ரிட்டர்ன் கிஃப்ட் நல்லா இருக்கணும்.." என்றவள் ஆசையைப் புரிந்த சஞ்சய் சிரித்தான்.

"எங்கே போனாலும் உனக்கு இதே வேலைதான். டிபன் பாக்ஸா இருக்கும்... ஸ்டீல் டப்பாவா இருக்கும்... இல்ல தேங்காயா இருக்கும்... முதல் ஆளா போய் வாங்குற." என்று கிண்டலடித்தான். 

"அதுல என்ன தப்பு? வீட்டுக்கு யூஸ்ஃபுல் தானே!" என்று சிரித்தாள்.

"நாளைக்கு தோசைக்கு தேங்காய் சட்னி அரைக்க தேங்காய் கிடைக்கும்னு கணக்கு போட்டுட்டு போறியே.. வீட்ல டிபன் பாக்ஸுக்கா பஞ்சம்!" என்று அவன் மீண்டும் கிண்டலடிக்க, அருகில் இருந்த சித்தி சிரித்துவிட்டார்.

"உங்க பொண்டாட்டி ரொம்ப சிக்கனம்டா!" என்றார்.

"அதைச் சொல்லுங்க சித்தி..." என்று சஞ்சய் சிரிக்க, இனியா அவனை முறைத்தாள்.

"சரி... நான் பார்க்கிங்கிலிருந்து பைக் எடுத்துட்டு வர்றேன். நீ ரிட்டர்ன் கிஃப்ட் வாங்கிட்டு வா." என்றான்.‌

"சரி..." என்றவள் வரிசையில் நின்று கிஃப்ட்டை வாங்கிக் கொண்டு வெளியே வந்தவள், கையில் இருந்த பொருளைப் பார்த்ததும் முகமே சுருங்கியது.

அந்தப் பையில் இருந்தது ஒரு சிறிய கொய்யா மரக்கன்று!

அந்த நேரத்தில் பைக்குடன் வந்த சஞ்சய், அவள் முகத்தைப் பார்த்து சிரிப்பை அடக்க முடியவில்லை.

"என்னடி... டிபன் பாக்ஸ் கிடைக்கலையா?" என்று வாறினான்.

"என்ன கொடுத்திருக்காங்க பாருங்க." என்றாள். 

"செடி" என்று பார்வையிட்டு ஹெல்மெட்டை தலைக்கு போட்டான்.‌

"ஆமாம். இவ்வளவு செலவு பண்ணி கல்யாணம் நடத்துறாங்க. ரிட்டர்ன் கிஃப்ட்டா ஒரு டப்பாவோ, ஸ்டீல் பாத்திரமோ கொடுத்தா எவ்வளவு யூஸா இருக்கும்? இதைப் போய் கொடுத்திருக்காங்க." என்று இனியா அலுத்துக் கொண்டாள். 

"இப்போ இதுதான் டிரெண்டாம். பிளாஸ்டிக்குக்கு பதிலா மரக்கன்று." என்றான். 

"எனக்கு இந்த ட்ரெண்டெல்லாம் வேண்டாம். செடியெல்லாம் வீட்டுக்கு போறதுக்கா முன்னவே காய்ந்து போயிடும்" என்றாள்.‌

"அப்போ தூக்கி போட்டுட போறியா என்ன?" என்றான்.

"அதெல்லாம் வேண்டாம்.. வீட்டுக்குப் போய் பார்க்கலாம்." என்று கூறினாள். 

வீட்டிற்கு வரும் வழி முழுவதும் அவளது புலம்பல் தொடர்ந்தது.

"இந்தச் செடியை வச்சு என்ன பண்ணப் போறோம்? மோஸ்ட்லி இது போல வர்ற செடி எல்லாம் இரண்டே நாள்ல பட்டு போயிடும் தொரியுமா? வேஸ்ட் தான்" என்றாள்.

"அப்போ யாருக்காவது கொடுத்துடு." என்றான் சஞ்சய். 

"ஆமா.. வேலைக்கு நேரமாகுது. இதுல செடியை வாங்காம போகவும் முடியலை‌ உங்க சித்தி பார்த்துட்டே இருந்தாங்க. இப்ப வழில எங்கனு போட. வீட்டுகாகு போய் பார்த்துக்கறேன்." என்றாள்.

  "எங்கம்மாவுக்கு பயப்படக்ஷியோ இல்லையோ. எங்க சித்தியை பார்த்து நல்லா தான் மிரளுற." என்று சீண்டினான். 

சஞ்சய் சீண்டியபடி, சிரித்தபடியே வண்டியை ஓட்டினான்.

வீட்டிற்கு வந்ததும், இனியா வாசலருகே இருந்த மண்ணில் அந்தக் கன்றை சும்மா வைத்துவிட்டு உள்ளே சென்றாள்.

  உடனோ குழியை தோண்டி மண்ணை போட்டு மூடி தண்ணீர் ஊற்ற ஏது நேரம்? சஞ்சய் வேகமாக அலுவலகம் செல்ல வேண்டும். இதில் அணிந்திருந்த நகை சேலையை இனியா கழட்டி பத்திரப்படுத்த வேண்டும். நாளைக்கு பார்ப்போம். என்று நினைத்தாள்.

ஆனால் அந்த "நாளை" வரவே இல்லை.

வாழ்க்கை அதன் வேகத்தில் ஓட ஆரம்பித்தது. அலுவலக வேலை.. வீட்டு வேலை, உறவினர் விசேஷங்கள்,  என்று நாட்கள் நகர்ந்தன.

அந்தச் சிறிய மரக்கன்றோ இனியா போல யாரையும் குறல சொல்லாமல் மண்தரையில் கிடந்தது. 

மழை பெய்தபோது தண்ணீரைக் குடித்தது.

வெயில் அடித்தபோது வேரை ஆழமாகப் பதித்தது.

இயற்கையே அதற்கு தாயாக மாறியது. மாதங்கள் வருடங்களாக மாறின.

ஒருநாள் வீட்டின் முன் சிறிய நிழல் விழுந்தது. இனியா சஞ்சய்கு அவல கருத்தில் பதியவில்லை. 

அடுத்த வருடம் அந்த நிழல் பெரிதானது. கிளைகள் விரிந்தன. வெள்ளை நிற பூக்கள் பூத்தன. அப்பொழுது அட இந்த செடி லேசா பெருசாயிடுச்சு போல என்று சொல்ல வைத்தது.

சில நாட்களில் பச்சைப் பிஞ்சுகள் தோன்றின.

பின்னர் கிளை முழுவதும் கொய்யாப்பழங்கள் தொங்கின.

ஒரு மாலை வீட்டில் மின்சாரம் தடைபட்டிருந்தது. 

 வெளியே குளிர்ந்த காற்று வீசியதும், வீட்டுக்குள் வெப்பமாக இருந்ததால், சஞ்சயும் இனியாவும் வாசலில் நாற்காலியைப் போட்டு அமர்ந்திருந்தனர்.

பறவைகளின் கீச்சொலி மட்டும் கேட்டது. அப்பொழுது தான் சஞ்சய் எழுந்து மரத்தருகே சென்றான்.

ஒரு பழுத்த கொய்யாப் பழம் கண்ணில் தென்பட்டது. எத்தனையோ வேலைகள் யோசனைகளுக்கு நடுவே செடி வளர்ந்து, மரமாகி பூ பூத்து, காய் காய்த்ததை கவனிக்க தவறினர்கள். இன்று அந்த காயும் கனிந்திருக்க ஒன்றிரெண்டு கொய்யாப் பழத்தைப் பறித்து இனியாவிடம் நீட்டினான்.

இனியாவோ ஒரு கடி கடித்தவள் கண்களை விரித்தாள்.

"அட... ரொம்ப இனிப்பா இருக்குங்க! கடையில வாங்குறதுக்கும் இதுக்கும் வித்தியாசம் தெரியுது" என்றாள். 

அப்போதுதான் அவளது பார்வை அந்த மரத்தின் மீது நிலைத்தது.

சில நொடிகள் அமைதியாக நின்றாள். "அடடா... என்ன பழத்தோட சுவையில ஒன்னுவிடாம சாப்மிடுவனு பார்த்தா மரத்தையே பார்க்கற" என்றான்.‌

"இது... அந்தக் கல்யாணத்துல கொடுத்த ரிட்டர்ன் கிஃப்ட் தானே!" என்று இனியா நம்பாமல் பார்க்க சஞ்சய் சிரித்தான்.

"ஆமாம். அன்னைக்கு இதைப் போய் கொடுத்துட்டாங்கன்னு எவ்வளவு திட்டின? இப்ப பாரு ரொம்ப டேஸ்டியான பழத்தை தந்திருக்கு" என்றதும்

இனியா வெட்கத்துடன் சிரித்தாள்.

மெதுவாக மரத்தின் தண்டைத் தொட்டாள். "அன்னைக்கு எனக்கு இது பயனில்லாத பொருளா தெரிஞ்சதுங்க" என்றவள் மரத்தை கட்டியணைத்துக் கொண்டு சொன்னாள்.

"ஆனா... இன்னைக்கு பாருங்க... நிழலும் தருது... காற்றும் தருது... கனியும் தருது... பறவைகள் இளைப்பாற வீடாகவும் இருக்கு." என்று ஆச்சரியப்பட்டாள். 

சஞ்சய் அவளைப் பார்த்து மெதுவாகச் சொன்னான்.

"அதனால்தான் சொல்றாங்க... இயற்கைக்குக் கொடுக்கிற சிறிய அன்பு கூட, ஒருநாள் பல மடங்கு திரும்பி நம்ம கைக்குத்தான் வரும்." என்றதும்  இனியா தலைஅசைத்தாள்.

அன்று ஒரு சாதாரண ரிட்டர்ன் கிஃப்ட்டாக கிடைத்த அந்த மரக்கன்று, இன்று அவர்கள் வீட்டின் பெருமையாகவும், இயற்கை கற்றுக் கொடுத்த மிகப் பெரிய பாடமாகவும் மாறியிருந்தது.

 கூடவே குடும்பத்தில் ஒருவராகவும் இருந்தது. 

  -பிரவீணா தங்கராஜ்

     * ஒரு மரக்கன்று, பல தலைமுறைகளுக்கும் நிழல், காற்று, கனிகளை அள்ளித் தரும் உயிருள்ள ரிட்டர்ன் கிஃப்ட்.


 
Posted : July 14, 2026 10:43 am
(@crvs2797)
Posts: 101
Estimable Member
 

வாவ்..! அருமையான கதை, மரம் நமக்கு  என்னைக்குமே நல்லதையே திரும்ப கொடுத்திடும், ஆனால் இந்த மனுசங்க மட்டும் தான் நாம செய்ததுக்கும் மேல கை மேல் பலனை கொடுத்து நம்மளை கதற அடிச்சிடறாங்க.

CRVS (or) CRVS 2797

😔😔😔


 
Posted : July 14, 2026 11:04 am

Scroll to Top