தகிக்கும் நிலவொன்று-21
அத்தியாயம்-21
அடுத்த நாள் காலை தன் வீட்டின் பால்கனியில் நின்றபடி, கையில் காபி கோப்பையுடன் வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஷ்ரத்தா.
இரண்டரை வருடங்களுக்குப் பிறகு சிறைக் கம்பிகள் இல்லாத ஒரு காலை. காற்று கூட புதிதாக இருந்தது. அந்த நேரம் வாசல் மணி ஒலித்தது.
தீபா கதவைத் திறந்தாள்.
பக்கத்து வீட்டில் வசிக்கும் வயதான பெண்மணி உள்ளே வந்தார்.
"அடடே... ஷ்ரத்தாம்மா... வந்துட்டியாம்மா?" ஷ்ரத்தா மரியாதைகாக வந்து நின்றாள். அதன் காரணமாக தீபா தெரிந்தவர் என்ற வகையில் கூடவே நின்றாலே தவிர, வேறேதும் வினையாற்றவில்லை.
"வாங்க ஆன்ட்டி." என்றாள் ஷ்ரத்தா. இத்தனை காலம் இவரெல்லாம் மறந்திருப்பாரென்றே முடிவுக்கட்டியவள் நலம் விசாரித்ததும் லேசான மகிழ்ச்சி உருவாக பேச்சை தொடுத்தாள்.
"எப்படிம்மா இருக்க? நல்லாயிருக்கியா? கொஞ்ச நாளா வீடு சுத்தப்படுத்திட்டு இருக்கவும் ஏன்னு குழம்பிட்டேன். நீ வரவும் தான் சுத்தம் பண்ணிருக்காங்களா?" என்று கேட்டார்.
"நல்லா இருக்கேன் ஆன்ட்டி. ஆமா ஆன்ட்டி. நல்லொழுக்க அடிப்படையில ஆறு மாசம் முன்னதாகவே விட்டுட்டாங்க.." என்று கூறினாள்.
கொஞ்ச நேரம் சாதாரணமாக பேசியவர், வீட்டைச் சுற்றி பார்த்தார்.
பிறகு சுவரில் இருந்த திவாகரின் புகைப்படத்தையும், அருகில் இருந்த சத்ரியனின் புகைப்படத்தையும் பார்த்தார்.
"பாவம்... அந்த சத்ரியன் உன்னை பலவந்தமா அழைச்சிட்டு போனப்ப நான் கூட அவனோட ஆசை நாயகியா இருந்து காரியம் சாதிச்சிப்பனு நினைச்சேன். இப்படி கொன்னுட்டியே."
ஷ்ரத்தாவின் முகம் உடனே மாறியது.
"உனக்கு அவனை கொல்லறப்ப பயமா இல்லையா?" என்றதும் ஷ்ரத்தா பதில் சொல்லாமல் நடந்தாள்.
"இது உன் பையனா?" என்று ராயனை பார்த்து கேட்க,
"ஆமா. ஆன்ட்டி" என்றாள்.
"டாக்டர் படிக்கணும்னு ஆசைப்பட்ட பொண்ணு." என்று அவளை மேலிருந்து கீழ்வரை பார்த்தவர்,
"கடைசில ஹவுஸ் வொய்ஃப் ஆயிட்டியே. இதுக்கு உங்க அப்பா உன்னை மெடிக்கல் காலேஜ்ல படிக்க வைக்காம, ஏதாவது ஆர்ட்ஸ் காலேஜ்ல படிக்க வச்சிருந்தா போதாதா?" என்று ஆதங்கப்படுவது போல பொறும ஆரம்பித்தார்.
அவ்வளவு நேரம் பொறுமையாக இருந்த ஷ்ரத்தாவின் முகம் இறுகியது.
மெதுவாக எழுந்து நின்றாள்.
"ஆன்ட்டி.. நான் ஒரு கொலை பண்ணினதுக்குத்தான் ஜெயிலுக்கு போயிட்டு வந்திருக்கேன்." அந்த ஒரு வரியிலேயே அவர் முகம் மாறியது.
"மறுபடியும் இன்னொரு கொலை கேஸ் வாங்கி உள்ளே போக வைக்காதீங்க. உங்க வீட்டு வேலையை மட்டும் பார்த்துக்கிட்டு போங்க." என்றவளது குரலில் இருந்த அனல், வந்த பெண்மணியை மேலும் ஒரு வார்த்தை கூட பேச விடவில்லை.
"சரி... சரி..." என்று தடுமாறியபடி வெளியேறினார்.
கதவு மூடப்பட்டதும்...
தீபா, நந்திதா, லட்சுமி மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரிப்பை அடக்கிக் கொண்டனர்.
"எங்க மேம்கிட்டயே வந்து வாயைக் கொடுத்துட்டு போயிட்டாங்க." என்று தீபா முணுமுணுத்தாள்.
ஷ்ரத்தா மட்டும் அமைதியாக தன் அறைக்குள் சென்றிருந்தாள்.
அலைபேசியை எடுத்து யதுநந்தனுக்கு அழைத்தாள்.
"குட்மார்னிங் யது சார்"
"சொல்லுங்க ஷ்ரத்தா. குட் மார்னிங்" என்றான்.
"யது சார்... நான் பழைய காலேஜ்ல திரும்ப ஜாயின் பண்ண முடியுமா?" சில நொடிகள் அமைதியாக இருந்தான்.
"நேத்து நைட்டே இதைப் பற்றி விசாரிச்சேன்." என்றதும் ஷ்ரத்தா ஆர்வமாக நிமிர்ந்தாள்.
"நீங்க படிச்சது பிரைவேட் மெடிக்கெல் காலேஜ். நடுவில் தண்டனை காரணமா படிப்பு நின்னிருக்கு. அதனால நேரடியாக மூன்றாம் வருடத்துல ஜாயின் பண்ண முடியுமா இல்லையா என்பதை டீன் தான் முடிவு பண்ணணும். அதுக்காக ஒரு அப்ளிகேஷன் போடணும்.
சில அதிகாரப்பூர்வ அனுமதி வாங்கணும்.
தேவைப்பட்டா ஹெல்த் யுனிவர்சிட்டி வரைக்கும் போக வேண்டியிருக்கும்."
ஷ்ரத்தாவின் முகத்தில் மீண்டும் நம்பிக்கை பிறந்தது.
"நான் மறுபடியும் படிக்க முடியும் தானே" என்று கேட்டாள்.
"தாராளமா படிக்கலாம். நான் இருக்கேன்." அந்த ஒரு வார்த்தையில் அவளது மனம் லேசானது.
யதுநந்தன் அதற்கான ஏற்பாடு செய்வதாக சொல்லவும், தனது வீட்டில் நிதானமாக இளைப்பாரவே ஷ்ரத்தா விரும்பினாள். அதென்னவோ சிறைக்குள் இருந்து வந்ததால் தனது வீடே அவளுக்கு அந்நியமாக தெரிய முன்பு போல அவளது காலடி இல்லாத இடமே இல்லை என்னும் அளவிற்கு வட்டமிட்டாள். இதில் ராயன் அவன் தாத்தா வீட்டில் ஓடியாடி திரிந்தான்.
ஷ்ரத்தாவோ நேற்றைய கனவு என்றாலும் அது பகலிலும் இரவிலும் வராதா என்ற ஏக்கமாக சத்ரியன் போட்டோவையே வருடினாள். இப்படியாக அன்றைய தினம் கழிந்தது.
மறுநாள் தீபா, நந்திதா, லட்சுமி மூவரும் மாறி மாறி ராயனை பார்த்துக் கொள்வதாக முடிவு செய்தனர்.
ஷ்ரத்தா ஏற்கனவே படித்த கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு வரவே, ஷ்ரத்தா அதற்கு கிளம்ப தயாரானாள்.
"மேம்... நீங்க படிங்க.குட்டி பாஸ்ஸை நாங்க பார்த்துக்கறோம்." என்றனர்.
ராயனும் சந்தோஷமாக அவர்களோடு விளையாட ஆரம்பித்தான்.
ஷ்ரத்தா அலமாரியைத் திறந்தாள். சத்ரியன் அவளது விரலில் அணிவித்த மோதிரத்தை மட்டும் எடுத்தாள்.
அதை மெதுவாக அணிந்தாள்.
பிறகு... அவன் பரிசாக வாங்கிக் கொடுத்த ஸ்டெதஸ்கோப்பை கழுத்தில் மாட்டிக் கொண்டாள்.
கண்ணாடியில் தன்னையே பார்த்தாள்.
என்ன தான் குழந்தை பெற்றெடுத்தவளாக இருந்தாலும் அப்படியொன்றும் வயது தெரியாத காரணத்தால், மீண்டும் ஒரு மருத்துவ மாணவி போலத் தோன்றினாள். தந்தை திவாகரின் புகைப்படத்தின் முன் சென்று கைகூப்பினாள்.
"அப்பா... நான் திரும்ப படிக்கப் போறேன்." என்றவளின் கண்களில் நீர் வழிந்தது.
வாசலுக்கு வெளியே யதுநந்தனின் கார் வந்து நின்றது.
ஷ்ரத்தா வெளியே வந்தாள்.
அவன் கதவைத் திறந்து வைத்தான். ஏற்கனவே எல்லாம் தயாராக இருக்க, இருவரும் மருத்துவக் கல்லூரியை நோக்கி கிளம்பினர்.
அதே நேரம் ருத்ரன் ஸ்ரத்தாவை தேடி வர, அவள் யதுநந்தனோடு காலையிலேயே எங்கே சொல்வதை அறிந்து பின் தொடர்ந்தான்.
யதுநந்தனின் கார் கல்லூரிக்குள் நுழைவதைப் பார்த்ததும் அவன் முகம் இறுகியது.
"அவளால தனியா போக தெரியாதா?" என்று எரிச்சலோடு சத்தமாகக் கூறினான்.
அருகில் இருந்த டிரைவர் நாதன் திரும்பிப் பார்த்தார்.
"என்ன சார்?" என்று குழம்பினார்.
ருத்ரன் ஒரு நொடி திகைத்தான்.
சேகர் இருப்பதாக நினைத்தே பேசிவிட்டான்.
சேகர் ஆஷா இறந்த சில நாட்களிலேயே, ருத்ரனை வீட்டில் இறக்கிவிட்டு திரும்பும்போது, டிரான்ஸ்பார்மரில் மோதிய விபத்தில் இறந்துவிட்டான்.
அதன் பிறகுதான் நாதன் டிரைவராக பணிக்கு வந்திருந்தான். அதனால் ருத்ரனின் இந்த தடுமாற்றம் பின் தொடர்தல் எதுவும் புரியாது இருந்தான்.
"ஒன்னுமில்லை நாதன். சேகர் இருக்கான்னு நினைச்சுட்டேன். சில கேஸ் விஷயம் பேசணும்னு தோணிச்சு." நாதன் குழப்பமாக தலையாட்டினார்.
ருத்ரன் மட்டும் ஜன்னல் வழியாக வெறித்துப் பார்த்தான்.
யாரிடமும் சொல்ல முடியவில்லை. புலம்பவும் முடியவில்லை. அவளை மறக்கவும் முடியவில்லை.
ஒரு தோழன் இருந்திருக்கலாம்.' என்ற உணர்வு வரவும், ருத்ரன் ஷ்ரத்தாவின் தோழிகளை எண்ணினான். இவ ரிலிஸ் ஆனது அவங்களுங்கு தெரியுமா? என்று போன் எண்ணை சுழற்றினான். அவன் கணித்தது போல கனிமொழி மனிஷா இருவருக்கும் ஷ்ரத்தா ரிலீஸ் ஆனது தெரியாமல் இருக்க, ருத்ரன் விஷயத்தை கூறி, அவ ஜெயில்ல இருந்தா வெளிவந்து இப்ப காலேஜ் போக எடுத்து வச்சி மனதை மாத்திக்க ட்ரை பண்ணறா. உங்களோட அரவணைப்பு இருந்தா மச் பெட்டர். அவளா உங்களை கூப்பிடுவளானு தெரியலை. விருப்பமிருந்தா மீட் பண்ணி பாருங்க" என்று தெரிவித்து பேசி வைத்தான்.
முதலில் ஷ்ரத்தாவை பார்க்க போகலாமா வேண்டாமா என்று கனிமொழி மனிஷா பேசி முடிவெடுத்தனர். பின்னர் எதுவந்தாலும் பரவாயில்லை அவளை காணலாமென இருவரும் ஒன்றாக இணைந்து மாலை ஷ்ரத்தா வீட்டு கதவை தட்டினார்கள்.
திவாகர் வீட்டின் வாசல் மணி ஒலித்தது. இம்முறையும் தீபா கதவைத் திறந்தாள்.
வாசலில் நின்றிருந்த கனி, மனிஷாவை பார்த்ததும்,
"ஷ்ரத்தா மேம் வெளியே வாங்க. உங்களை பார்க்க உங்க பிரெண்ட்ஸ் வந்திருக்காங்க" என்று கத்தினாள்.
அந்த குரலைக் கேட்டதும் ஷ்ரத்தா அவசரமாக வெளியே வந்தாள்.
"கனி... மனிஷா..." என்று ஓடிவந்து இருவரையும் கட்டிக்கொண்டாள்.
மூன்று பேரின் கண்களிலும் கண்ணீர்.
"லூசு... அழாதடி..." என்று மனிஷா சிரித்தபடி அவள் கண்ணீரை துடைத்தாள்.
"ரெண்டு வருஷத்துக்கு மேலாச்சு... உன்னை இப்படி வெளியில பார்க்கறதே சந்தோஷமா இருக்கு."
கனியும் அவள் தோளை வருடினாள்.
"நீ ரிலீஸ் ஆனத கேட்டதிலிருந்து உடனே வரணும்னு நினைச்சோம்."
ஷ்ரத்தா சிரித்தாள்.
"உங்களுக்கு யார் நான் ரிலீஸ் ஆனதை சொன்னாங்க?" என்றதும், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்தனர்.
"வேற யாரு ருத்ரன் சார் தான். எங்களை தோண்டி துருவி கேள்வியா கேட்டு தொல்லை பண்ணினவர்." என்று அடையாளம் கூறினார்கள்.
ஷ்ரத்தாவின் சிரிப்பு ஒரு நொடி நின்றது "அவரா?" என்று ஷ்ரத்தா அதிர, "ஆமாடி." மனிஷா சிரித்தபடி,
"எங்களுக்கு போன் பண்ணி...
'ஷ்ரத்தா ரிலீஸ் ஆயிட்டா... நேரம் கிடைச்சா போய் பாருங்க.'ன்னு மட்டும் சொல்லிட்டு வச்சுட்டாரு." என்றார்கள்.
கனி உடனே, "நாங்க கூட நினைச்சோம்... இவர் எப்படி இதை எங்களுக்கு சொல்லணும்னு.."
மனிஷா குறும்பாக, "இல்ல அவர் நம்மளை பார்க்க ஆசைப்பட்டு வரவழைச்சிருப்பார். அப்படியே ஷ்ரத்தாவுக்கு உதவறார்." என்று சிரித்தாள்.
ஷ்ரத்தா அமைதியாக இருந்தாள். அவளது முகத்தை பார்த்த மனிஷா, "ஏய்... என்னடி?" என்று கேட்டாள்.
ஷ்ரத்தா மெதுவாக மூச்சை விட்டாள். "அவரெல்லாம் காரணமில்லாம உதவலை." என்றாள்.
"ஏன் என்னாச்சு?" என்றார்கள்.
"ருத்ரன் என்னிடம்.." என்று நடந்ததை முழுவதும் சொன்னாள். ருத்ரன் காதலை மறைமுகமாக சொன்னதும்,
தான் அறைந்ததும், அவன் அமைதியா வெளியே போனதும், எல்லாமே சொன்னாள்.
இருவரும் அமைதியாக கேட்டனர். சில நொடிகள் கழித்து. கனி பெருமூச்சு விட்டாள். "நீ செஞ்சது தப்பில்லை." மனிஷாவும் தலையசைத்தாள்.
"ஆமா. நீ அவனுக்கு நம்பிக்கை கொடுத்திருந்தா தான் தப்பு.
ஆனா... நேரடியாவே எல்லை காட்டிட்ட." ஷ்ரத்தா அமைதியாக ஜன்னல் வழியே பார்த்தாள்.
மனிஷா பேச்சை மாற்ற நினைத்தாள். "இந்த நேரம்...
திவாகர் அங்கிள் இருந்திருந்தா... நீ எம்பிபிஎஸ் முடிச்சிருப்ப." என்றாள் கனி.
"அதுவும் போதாதுனு
மேல படிக்க வெளிநாட்டுக்கே கூட அனுப்பிருப்பாரு." என்றாள்.
மனிஷா விடாமல், "இல்ல...
லாயர் யதுநந்தன் மாதிரி ஒரு நல்ல பையனா பார்த்து கட்டி வச்சிருப்பாரு." என்று சிரித்தாள்.
அந்த ஒரு வரியிலேயே...
ஷ்ரத்தாவின் முகம் மாறியது.
சிரிப்பு மறைந்தது. ஜன்னலுக்கு வெளியே பார்வையை திருப்பிக் கொண்டாள்.
அதை கவனித்த கனி, மனிஷாவின் கையை மெதுவாக கிள்ளினாள். அவர்கள் கல்லூரியில் சக பாணவியிடம் பேசுவது போல கேலி கிண்டலில் தான் பேசியது. ஆனால் காயம் கொண்ட ஷ்ரத்தாவிடம் இதெல்லாம் பேசினால் தகுமா?
மனிஷாவும் உடனே புரிந்து கொண்டு, "சாரி..." என்று மெதுவாக சொன்னாள்.
ஷ்ரத்தா எதுவும் பேசவில்லை.
அவள் மனதில் 'சத்ரியனை தாண்டி யாரையும் நினைக்க முடியாது.' என்ற ஒரே எண்ணம்தான் ஓடிக் கொண்டிருந்தது. இதில் உதவுபவனை எல்லாம் காதல் என்று தொடர்புபடுத்தி பேசினால் யார் தான் உதவுவார்கள்?
அதே நேரத்தில் வாசலுக்கு வெளியே... யதுநந்தன் கார் மீது சாய்ந்தபடி நின்றிருந்தான்.
அவர்களை அழைத்துச் செல்ல வந்திருந்தான். வீட்டுக்குள் சிரிப்புச் சத்தம் கேட்டாலும், அவனது பார்வை மட்டும் ஜன்னலருகே நின்றிருந்த ஷ்ரத்தாவின் மீதே நிலைத்திருந்தது. அவள் இன்னும் கடந்த காலத்திலிருந்தே வெளியே வரவில்லை என்பதை அறிந்தவனாக, காத்திருக்க இவர்கள் பேச்சை கேட்டவனாக, அமைதியாக உட்கார்ந்து கொண்டிருந்தவனுக்கு சிறு புன்னகை அரும்பியது.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
தகிக்கும் நிலவொன்று.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 21)
அதானே, அடுத்த வீட்டு கதைன்னா
வாயைத் பிளந்துட்டு வந்துடுவாங்களே. ஷ்ரத்தா சரியாத்தான் நோஸ் கட் பண்ணியிருக்காள்.
போச்சு போ.. இந்த கனி, மனிஷா கூட அதே காதல் பல்லவியைத் தான் பாடறாங்க. ஏன், இவங்களும் பொண்ணுங்கத்தானே, இவளுங்களுக்கு அதே காதல் எல்லாம் வராதோ...? அதென்ன ஷ்ரத்தாவுக்கு மட்டும் தான் எல்லார் மேல காதல் வரணுமா, இல்ல எல்லா ஆம்பிளைங்களுக்கும் ஷ்ரத்தா மேலத்தான் காதல் வரணுமோ ?
என்ன கண்றாவிடா இது. போறபோக்கைப் பார்த்தால், வர, வர காதல் மேலயே வெறுப்பு வந்திடுது போங்க.
😊😊😊
CRVS (or) CRVS 2797
-
தகிக்கும் நிலவொன்று-50 (முடிவுற்றது)
2 weeks ago
-
தகிக்கும் நிலவொன்று-49
2 weeks ago
-
தகிக்கும் நிலவொன்று-48
2 weeks ago
-
தகிக்கும் நிலவொன்று-47
2 weeks ago
-
தகிக்கும் நிலவொன்று-46
2 weeks ago
- 25 Forums
- 330 Topics
- 1,588 Posts
- 1 Online
- 420 Members
