Notifications
Clear all
தகிக்கும் நிலவொன்று-22
தகிக்கும் நிலவொன்று -Praveena Thangaraj
10
Posts
10
Users
3
Reactions
142
Views
அத்தியாயம்-22
மூன்றாம் ஆண்டு மருத்துவப் படிப்பிற்கான முதல் நாள். ஷ்ரத்தா மருத்துவக் கல்லூரி வளாகத்திற்குள் காலடி வைத்தாள்.
இரண்டரை வருட இடைவெளி...
சிறை வாழ்க்கை... ஒரு குழந்தைக்கு தாய்... எல்லாம் கடந்துவிட்டாலும், அந்த வெள்ளை கோட் கனவு மட்டும் இன்னும் அவளுக்குள் உயிரோடு இருந்தது.
அவள் வகுப்பறையை நோக்கி நடந்தபோது, சில மாணவர்கள் திரும்பிப் பார்த்தனர்.
"அவதான்டா..."
"இவதான் புதுசா தேர்ட் இயர்ல ஜாயின் பண்ணிருக்காங்களாம்."
"யாரு இவ?" என்று கிசுகிசுக்கத் தொடங்கினர்.
அதில் இறுதி ஆண்டு மாணவன் ஒருவன் அவள் வழியை மறித்தான்.
"ஹலோ..." ஷ்ரத்தா அமைதியாக அவனை பார்த்தாள்.
"யார் நீ? நேரடியா தேர்ட் இயர்ல ஜாயின் பண்ணிருக்கன்னு கேள்விப்பட்டோம்." என்றான்.
இவளது வரலாறு தெரியாத மாணவனாக இருக்க வேண்டும். இல்லையென்றால் நிறுத்தி நிற்க வைத்து கேட்பானா?
அவன் பேசி முடிப்பதற்குள் ஷ்ரத்தா ஒரு அடி முன்னே வந்தாள். "நான் யாரா?" அவளது குரல் மிகவும் அதிகார பூர்வமாக இருந்தது.
"ஏற்கனவே இந்த காலேஜ்ல இரண்டு வருஷம் படிச்சவ." அந்த மாணவன் புருவம் சுருக்கினான்.
ஷ்ரத்தாவோ ஜெயிலுக்கு சென்ற அனுபவமோ, அல்லது வயதில் பெறப்பட்ட வாழ்க்கை பாடங்களோ, அவளுக்கான முதிர்வையும் ஆளுமையும் தர, "ஒரு கொலை பண்ணினதுக்காக ஜெயிலுக்கு போனேன்." என்றதும் அங்கிருந்த எல்லோரும் அமைதியாகிவிட்டனர்.
"இப்ப நல்லொழுக்க அடிப்படையில ரிலீஸ் ஆகி வெளியே வந்திருக்கேன்." அவன் முகத்தை நேராக பார்த்தாள்.
"இப்ப சொல்லு... உனக்கு என்ன பிராப்ளம்?" அவன் அதிர்ச்சியில் வாயே திறக்கவில்லை.
"ஆங்... என்னடா பிராப்ளம்?" என்று மீண்டும் கேட்டாள். அவன் பின்னால் ஒரு அடி நகர்ந்தான். வாழ்க்கை மிக விசித்திரமாக அவளுக்கு அந்த மாணவன் இடத்தில் ஜான் இருப்பதாக தோன்றியது.
இதில் எங்கிருந்தாவது சத்ரியன் வரமாட்டானா என்ற எதிர்பார்ப்பு வேறு அவள் மனதை அர்ச்சித்தது.
அந்த நேரம் "என்ன நடக்குது இங்க?" என்ற குரலோடு கல்லூரி டீனே அங்கு வந்தார்.
அவரை பார்த்ததும் மாணவர்கள் ஒதுங்கினர். டீன் நேராக மாணவர்களை பார்த்தார். ஷ்ரத்தாவையும் ஏறிட்டு "மேம்..." என்று ஷ்ரத்தாவை மரியாதையாக அழைத்தார்.
"நீங்க கிளாஸ்க்கு போங்க." பிறகு மாணவர்களை திரும்பிப் பார்த்து, "இவங்களை யாராவது தொந்தரவு பண்ணினா... இமிடியட்டா காலேஜ்ல இருந்து சஸ்பெண்ட் பண்ணிடுவேன்." என்று கடுமையாக எச்சரித்தார்.
யாரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஷ்ரத்தா அமைதியாக வகுப்பறைக்குள் சென்றாள்.
அதன் பிறகு... ஷ்ரத்தாவின் உலகமே மாறியது.
கல்லூரியில்... படிப்பு, லேப், கிளினிக்கல், லைப்ரரி அவ்வளவுதான். தேவையில்லாமல் யாரிடமும் பேசுவதில்லை.
கேன்டீனில் அரட்டை அடிப்பதில்லை. குழுவாக சுற்றுவதில்லை. உணவெல்லாம் லட்சுமி தந்துவிடும் உணவை மட்டும் உண்பாள்
வகுப்பு முடிந்ததும் நேராக வீட்டிற்கே வந்து விடுவாள்.
வீட்டிற்கு வந்தவுடன்... ராயன் தான் அவன் உலகம். 'அவன் சாப்பிட்டானா... தூங்கினானா.. விளையாடினானா... எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வாள்.
தீபா, நந்திதா, லட்சுமி மூவரும் இருந்தாலும்... 'இவன் என் பையன்.' என்று ஒவ்வொரு வேலையையும் அவளே பார்த்து செய்வாள்.
இரவு... ராயனை மடியில் படுக்க வைத்து மெதுவாக தட்டிக் கொடுத்தபடியே மருத்துவ புத்தகங்களை படிப்பாள்.
அவள் படிப்பதை விட.. அவளை பார்த்துக் கொண்டிருப்பது ராயனின் வேலையாக இருந்தது.
இதில் அறை முழுவதும்... சத்ரியனின் புகைப்படங்களே ஆக்கிரமித்து இருந்தன.
சில நேரம் அந்த போட்டோவை பார்த்து, "அப்பா..." என்று ராயன் கையை அசைப்பான்.
சில நேரம்... "அம்மா... அப்பா எங்க?" என்று கேட்பான்.
ஆரம்பத்தில் ஷ்ரத்தா சிரித்தே சமாளித்தாள். ஆனால்... அவன் தினமும் அதே கேள்வியை கேட்க ஆரம்பித்தான்.
ஒரு நாள்... "அம்மா... எனக்கு அப்பாவை பார்க்கணும்." என்று அடம்பிடித்தான்.
ஷ்ரத்தாவின் இதயம் நொறுங்கியது. என்ன சொல்லி இந்த குழந்தையை சமாதானப்படுத்துவது என்று தெரியவில்லை.
உடனே பேச்சை மாற்றினாள்.
"ராயன்... உனக்கு அடுத்த வாரம் செகண்ட் பர்த்டே வருதே. நம்ம பெரிய பார்ட்டி வைக்கலாமா?" குழந்தையின் முகம் உடனே மலர்ந்தது.
"பலூன் வேணும். பெரிய கேக் வேணும். சைக்கிள் வேணும். கார் வேணும். ரிமோட் கார் வேணும்." என்று மூச்சுவிடாமல் மழலை குரலில் பட்டியல் சொல்ல ஆரம்பித்தான்.
ஷ்ரத்தாவும் சிரித்தாள். 'அப்பாடா... சத்ரியனை மறந்துட்டான்.' என்று மனதுக்குள் நினைத்தாள்.
ஆனால்... ராயனோ இவள் பெற்ற பிள்ளை என்னும் விதமாக அடுத்த நொடியே... "இதெல்லாம் சரி அம்மா.. பர்த்டே அன்னிக்கு... அப்பா கூட நின்னு கேக் கட் பண்ணணும்." என்று குழந்தை சொல்லி முடித்ததும், அவள் சிரிப்பு அப்படியே நின்றது.
எந்த பேச்சை மாற்றினாலும்... இவன் சத்ரியனின் மகன். அவனை மறக்கவே முடியவில்லை.
"பார்க்கலாம் ராயன்... இப்ப தூங்கு." என்று அவனை அணைத்துக் கொண்டாள்.
ராயன் தூங்கிய பிறகும்... அவளுக்கு மட்டும் தூக்கம் வரவில்லை.
ராயனின் பிறந்தநாளை எப்படி கொண்டாடுவது என்று யாரை அழைக்கலாமென யோசித்து மனதை மாற்ற முயன்றாள்.
அதில் ஒவ்வொருவரின் பெயரையும் நினைவுடன் எழுத ஆரம்பித்தாள்.
மனிஷா மற்றும் வீட்டில் அவள் பெற்றவர்கள், கனிமொழி, கார்த்திகா மேடம், யதுநந்தன் சார், ருத்ரன். என்றதும் அவள் யோசனை தடையானது.
கீர்த்தனா ஆன்ட்டியை அழைக்க வேண்டுமென யோசித்தாள்.
ஹரிணி. அக்கம் பக்கத்து வீட்டு மக்கள். ஒவ்வொருவரின் பெயரையும் எழுதி முடித்தவள்
'கீர்த்தனா ஆன்ட்டி...' என்ற இடத்தில் பேனாவை நிறுத்தினாள்.
அந்த ஆன்ட்டி தனக்கு வளைகாப்பு நிகழ்த்தி வளையல் போட்டவர்.
ராயன் பிறந்ததும்... முதலில் கையில் வாங்கியவர். வெளியே வந்த பிறகும்... ஒரு நன்றி கூட சொல்லவில்லை.
அவர்கள் வீடு தேடி போக வேண்டும், அழைக்க வேண்டும். ஆனால்... ருத்ரன் தன்னை காதலிப்பது பற்றி... கீர்த்தனா ஆன்ட்டிக்கு தெரிந்திருந்தால்... என்ன நினைப்பார்? ஏதாவது பேசிவிட்டால்? சில நிமிடங்கள் யோசித்தாள்.
பிறகு... 'என்ன ஆனாலும்... போய் பார்த்துட்டு வரணும்.' என்று முடிவு செய்தாள்.
ருத்ரன் இல்லாத நேரமாக பார்த்து வரசெல்ல வேண்டும் என்றும் மனதில் நினைத்துக் கொண்டாள்.
அடுத்த நாள் மாலை யதுநந்தனை அழைக்க வேண்டும் என்று நினைத்து அவன் வீட்டிற்கு கல்லூரி முடித்து கிளம்ப நினைத்தாள்.
பிறந்த நாள் திட்டமெல்லாம் தீட்டிவிட்டு ராயனோடு உறங்கிவிட்டாள்.
அடுத்த நாள் ஷ்ரத்தா ராயனின் பிறந்த நாளுக்கு சிலரை அழைத்து கொண்டாடுவதாக தீபா நந்திதா லட்சுமியிடம் தெரிவித்தாள்.
"நல்லது மேம். உணவுகள் எல்லாமே வீட்லயே தயாரிக்கறோம். வெளி புட் வேண்டாம் மேம்" என்றார்கள்.
ஷ்ரத்தாவும் ஆமோதிக்க, பிறகு எல்லாரிடமும் சொல்லிவிட்டு கல்லூரிக்குபுறப்பட்டாள்.
பாதி நாள் பாடம் கவனித்துவிட்டு, வெளியேறினாள். அவளை தடுத்து நிறுத்த அங்கே யாருக்கும் தைரியமும் இல்லை.
ஷ்ரத்தா அவளது காரில் ஏற தீபா தான் டிரைவர் வேலையில் இயக்கினாள். குழந்தையையும் அழைத்து வந்திருக்க, முத்தம் வைத்து மகனை மடியில் வைத்துக் கொண்டாள்.
யதுநந்தன் வீட்டுக்கு சென்று அவனை அழைக்க நினைத்து, அங்கே சென்றாள்.
தன் வீட்டின் முன் காரின் சத்தம் கேட்டு வெளியே வந்த யதுநந்தன்.
ஷ்ரத்தா உள்ளே வந்ததை பார்த்ததும், யதுநந்தனின் முகம் மலர்ந்தது.
"வாங்க ஷ்ரத்தா... சொல்லியிருந்தா நானே வந்திருப்பேனே."
"பரவாயில்லை சார். ஒரு விஷயமா வந்தேன்."
"சொல்லுங்க." என்று வரவேற்று அமர வைத்தான். கூடவே கைகள் பரபரக்க ஃப்ரிட்ஜில் இருத்து கூல் ட்ரிங்க்ஸ் எடுத்து ஊற்றி நீட்டினான். ராயனை வேறு தூக்கி கொண்டு 'ஹாய் சாம்ப்.. கூல் ட்ரிங்க்ஸ் என்று கொடுக்க வாங்கி கொண்டான்.
ஷ்ரத்தாவோ "அடுத்த வாரம் ராயனுக்கு செகண்ட் பர்த்டே யது சார்" என்றதும்
யதுநந்தன் "நினைவிருக்கு ஷ்ரத்தா" என்று மலர்ந்த முகமாய் சிரித்தான்.
"ராயன் குட்டிக்கு அட்வான்ஸ் விஷஸ், உங்களை சந்திக்க நானே நினைச்சேன்." என்றான்.
"நீங்க அன்னிக்கு கண்டிப்பா வரணும். ஏன்னா நான் இந்த முறை செலிபிரேட் பண்ணலாம்னு இருக்கேன். ரொம்ப பேர்லாம் இல்லை. மனசுக்கு நெருக்கமானவங்க... சமயத்துல உதவினவங்க. பிரெண்ட்ஸ் இவங்களை எல்லாம் அழைக்கலாம்னு இருக்கேன்" என்றாள்.
"நீங்க சொல்லவே வேண்டாம். நான் கண்டிப்பா வருவேன்." என்றான்.
சில நொடிகள் அமைதியாக இருந்த ஷ்ரத்தா, "ஒரு ஹெல்ப் பண்ணுவீங்களா யது சார்" என்றாள்.
"சொல்லுங்க. நீங்க எந்த உதவி கேட்டாலும் செய்ய நான் தயார்" என்றான்.
தந்தையோடு குழுவாக நின்றிருந்த வக்கீல்களில் யதுநந்தனும் இருக்க அதை எடுத்து பார்த்து சில நொடி ஸ்தம்பகத்து பிறகு நினைவு கலைந்து வைத்தாள். அதுவரை யதுநந்தன் அவளை உலுக்கவில்லை. அந்த புகைப்படத்தில் யதுநந்தனின் தோளில் திவாகர் செல்லமாய் அரவணைப்பது போல இருந்ததே.
ஷ்ரத்தா போட்டோவை வைத்துவிட்டு, "கீர்த்தனா ஆன்ட்டி வீட்டுக்கு போகணும் யதுசார்" யதுநந்தன் அவளை ஒரு நொடி பார்த்தான்.
அவள் ஏன் அப்படி கேட்டால் என்பது அவனுக்கு புரிந்தது.
ருத்ரன் தான் தனியாக செல்ல முடியாத வகையில் பேசி வைத்துவிட்டானே. அதனால் கீர்த்தனாவை பார்க்க கூட ஷ்ரத்தா யோசிப்பதை அறிந்து "வாங்க போகலாம்." என்று மட்டும் சொன்னான்.
தீபா காரோட்ட, ராயன் பாதுகாப்பை கவனித்து ஷ்ரத்தாவுக்கு பக்கத்தில் அமர்ந்திருக்க, யதுநந்தன் மறுபுறம் அமர்ந்தான்.
தீபா கீர்த்தனா வீட்டின் முன் கார் வந்து நிறுத்தினாள்.
காலிங் பெல் அடித்திருக்க, கதவை திறந்த கீர்த்தனா. வாசலில் நின்றிருந்த ஷ்ரத்தாவை பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்து நின்றார்.
"ஷ்ரத்தா...? வாம்மா... உள்ள வா." அன்போடு வரவேற்று அமர வைத்தார்.
ராயனை பார்த்ததும் முகம் மலர்ந்தது. "எவ்வளவு வளர்ந்துட்டான்.. பாட்டிக்கிட்ட வாங்க" என்று தூக்கி மடியில் வைத்துக் கொஞ்ச ஆரம்பித்தார்.
ராயனும் அவரிடம் நன்றாக ஒட்டிக் கொண்டான். ருத்ரனின் பர்சில் கீர்த்தனா முகத்தை பார்த்திருந்தான் அதனால் கூட நெருங்கியிருக்கலாம்.
ஷ்ரத்தா மெதுவாக பேச ஆரம்பித்தாள்.
"ஆன்ட்டி... நான் ரிலீஸ் ஆகி ஒன்றரை மாசமாச்சு. உடனே வந்து பார்க்கலைன்னு தப்பா நினைக்காதீங்க." கீர்த்தனா அமைதியாக அவளை பார்த்தார்.
"நிறைய வலியும்... வேதனையும் இன்னும் இருக்கு. அதோட படிப்பையும் மறுபடியும் தொடர வேண்டியிருந்தது.
இந்த சீட்டுக்காக..." தந்தை திவாகரின் நினைவு வந்ததும் குரல் உடைந்தது.
"என் அப்பா உயிரையே கொடுத்திருக்கார். நான் டாக்டர் படிப்பை முடிக்கணும் ஆன்ட்டி. இல்லன்னா... அப்பா உயிர் போனதுக்கான விலை வீணாயிடும்." கீர்த்தனாவின் கண்களும் கலங்கின.
"நல்லா படிச்சு பெரிய டாக்டரா ஆகணும்மா." என்று ஆசீர்வதித்தார். பிறகு ராயனை பார்த்து,
"நான் பார்த்தப்போ இருந்த குட்டிப்பாப்பா எங்க... இப்ப பெரிய பையனாயிட்டானே.'' என்று கன்னத்தில் முத்தமிட்டார்.
பிறந்தபோது கையில் வாங்கியது... பெயர் வைத்த நாளில் பார்த்தது... அதன்பிறகு இன்று தான் மீண்டும் பார்க்கிறார்கள். இருவருக்குள்ளும் ஒரு சங்கடம் இருந்தாலும், அதை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.
ஷ்ரத்தாவும் எதுவும் கேட்கவில்லை.
கீர்த்தனாவும் மகனின் விஷயத்தை தொடவில்லை. சில நிமிடங்கள் பேசியபின்... ஷ்ரத்தா "ராயனோட செகண்ட் பெர்த்டே வருது ஆன்ட்டி. நீங்க கண்டிப்பா வரணும் ஆன்ட்டி."
"கண்டிப்பா வர்றேன்ம்மா" என்று கூறினார்.
அந்த நேரமே வாசலுக்கு வெளியே புல்லட் வந்து நின்ற சத்தம் கேட்டது.
ஷ்ரத்தாவின் இதயம் ஒரு நொடி ஸ்தம்பித்து நின்றது.
'அச்சோ ருத்ரன் வந்துட்டானா' என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டவள்,
"யது சார்... கிளம்பலாமா?" என்று அவசரமாக எழுந்தாள். கீர்த்தனாவும் ருத்ரன் வரவும் அவசரமாய் ஷ்ரத்தா எழுவதிலேயே மகனை கண்டு ஓடுவதை புரிந்துக் கொண்டார். அதனால் இரு என்று எந்த வார்த்தையும் வற்புறுத்தவில்லை.
ஷ்ரத்தா யது எழுந்து நடக்கும் முன் ருத்ரன் உள்ளே வந்துவிட்டான்.
ஒரு நொடி.. ருத்ரன் ஷ்ரத்தா இருவரின் பார்வையும் ஒன்றோடு ஒன்று மோதியது.
அடுத்த நொடியே... "ஹாய் ருத்ரா..." என்று கத்திக் கொண்டு ராயன் ஓடி வந்து அவன் கால்களை கட்டிக் கொண்டான்.
ருத்ரனின் முகம் உடனே மலர்ந்தது.
"ஹாய் குட்டி..." என்று தூக்கிக் கொண்டான்.
"என்னடா... செகண்ட் பர்த்டே வருதே.. இன்வெயிட் பண்ண வந்தியா. ஹேய்.. ராயன்.. இது யார் வீடு சொல்லு" என்று கேட்க, ராயன் சுற்றி முற்றி பார்த்து, "ருத்ரா உன் வீடா" என்று கேட்டான்
"சோ ஸ்வீட் ப்ரிலியண்ட் பாய்.. ஆமாடா குட்டி ருத்ரா வீடு. சரி என்ன கிஃப்ட் வேணும்?" என்றான். ராயனை ருத்ரன் ஏந்தியிருக்க, கன்னத்தில் ஆள்காட்டி விரலால் யோசித்தான்.
பிறகு மழலைக்குரலில் "முன்னாடி... நான் எது கேட்டாலும்... நீங்க வாங்கிட்டு வந்துருவிங்க. இப்ப அம்மாவே எல்லாம் வாங்கித் தர்றாங்க." சிறிது நேரம் அமைதியாக இருந்த குழந்தை "ஆனா... அப்பாவை மட்டும்... என்னால பார்க்க முடியல. அம்மாவிடம் கேட்டா அழறாங்க. நீங்க... என் அப்பாவை கூட்டிட்டு வருவீங்களா? நீங்க தான் போலீஸாச்சே" என்று குழந்தைத்தனமாக கேட்டான்.
அந்த கேள்வியில் அங்கிருந்த அனைவரும் அமைதியாகி விட்டனர்.
ருத்ரன் மெதுவாக ஷ்ரத்தாவை பார்த்தான். பிறகு ராயனின் தலைமுடியை வருடினான்.
"அப்பாவா... ஒரு நாள்... உன் முன்னாடி நிறுத்தறேன். ஆனா... நீ கொஞ்சம் வளரணும். ஓகே?" என்றதும் ராயன் சந்தோஷமாக தலையாட்டினான்.
"ஓகே." என்றான் ராயன்.
அதை பார்த்த ஷ்ரத்தாவின் இதயம் வேகமாக துடித்தது.
"ராயன்... வா போகலாம்." என்று அவனை அழைத்தாள்.
ராயன் தயங்கினான். ருத்ராவிடம் பேசி விளையாட முடிவெடுத்தது குழந்தை.
ருத்ரனோ "ஏன் ஓடுற? அவன்... அப்பாவை தானே கூட்டிட்டு வர சொல்லறான். அப்பாவா... ருத்ரனே வேண்டும்னு இன்னும்
கேட்கலையே பயப்படாத." என்று அர்த்தமாக பேசினான்.
ஷ்ரத்தா சங்கடமாக கீர்த்தனாவை பார்த்தாள். இவர்களுக்குள் நடக்கும் போர் அவர்களும் அறிந்திருக்க, ஷ்ரத்தா பிரச்சனை வளர்க்காமல் "யது சார்... போகலாம்." என்று அவசரமாக கூறினாள்.
யதுநந்தன் வேறு எதுவும் பேசாமல், "வாங்க." என்று அவளை அழைத்துக் கொண்டு வெளியே நடந்தான்.
பின்னால் நின்ற ருத்ரன், "போ... நான் வீட்டில இல்லாத நேரமா வந்துட்டு போற. ஐ நோ தட். ஆனா... எப்பவும் என்னை தவிர்க்க முடியாது. மைண்ட் இட்." என்றான்.
"ருத்ரா!" என்று கீர்த்தனா அதட்டினார்.
"ஒரு விதவைக்கு வாழ்க்கை கொடுக்க ஆசைப்படுறது... அவ்வளவு பெரிய தப்பில்லை. என்னோட ஆசையும் தப்பில்லை அவ ஓட ஓட தான் அவளை நிறுத்தி தாலி கட்டணும்னு ஆழமா மனசுல எண்ணம் வலேக்கும்மா" என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று விட்டான்.
யதுநந்தன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஷ்ரத்தாவும் கீர்த்தனாவை கூட பாராமல் வெளியேறினாள்.
அமைதியாக காரை கிளப்பிட தீபாவுக்கு உத்தரவிட்டான்.
---
கார் நகர்ந்த சில நிமிடங்களிலேயே.. ஷ்ரத்தா கட்டுப்பாட்டை இழந்து அழ ஆரம்பித்தாள்.
ராயன் தான் பதறிப்போனான். "அம்மா... ஏம்மா அழற?" என்று அவளது முகத்தை தொட்டான்.
யதுநந்தன் மெதுவாக, "அம்மா அழுதா... அழட்டும் ராயன். மனசுல இருக்கறது கொட்டட்டும்." என்றான். உடனே ராயன் தலையசைத்தான்.
"யூ பேட். ருத்ரா அங்கிள் சொல்லியிருக்காரு. அம்மா அழுதா... கண்ணீர துடைச்சி விடணும்னு. அம்மாவை அழவைக்காம நடந்துக்கோனு சொல்லியிருக்கார் " என்று தன் குட்டிக் கைகளால் ஷ்ரத்தாவின் கண்ணீரை துடைத்தான்.
அதை பார்த்த ஷ்ரத்தா இன்னும் அதிகமாக அழுதாள்.
"ராயன்... இனிமே ருத்ரா அங்கிள்கிட்ட அதிகமா பேசாத." என்றார் யதுநந்தன்.
"அம்மா அழுகைக்கு காரணமே அவருதான்." என்றான்.
ராயன் உடனே மறுத்தான். "இல்ல... ருத்ரா குட் பாய். நான் பிறக்கறப்ப... அவர்தான் என்ன ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு வந்தாராம். அப்புறமும்... உன்னை நான் பார்த்துப்பேன்னு... பிராமிஸ் பண்ணிருக்கார்." என்று குழந்தைத்தனமாக சொன்னான்.
ஷ்ரத்தா கண்களை மூடிக் கொண்டாள்.
"குழந்தைக்கிட்ட... என்னென்னவோ பேசி வச்சிருக்கான். இடியட்" என்று மனதுக்குள் புலம்பினாள்.
அருகில் இருந்த யதுநந்தன் மட்டும்... அமைதியாக சாலையை வேடிக்கை பார்த்தபடி வந்தான்.
'ஷ்ரத்தாவிடமும் காதலை சொல்லிட்டான், ராயனிடமும் இந்தளவு நெருங்கி வச்சிருக்கான் இந்த ருத்ரன். நான் இப்ப ஷ்ரத்தாவிடம் என் காதலை சொன்னா அவ காரி துப்புவா.' என்று அவன் மனம் கணக்கிட்டது. ஏற்கனவே சத்ரியன் நினைவோடு மெழுகாக கரைபவளை கூடுதலாக கஷ்டம் தரக்கூடாதென தான் ஒரு பொறுப்பான நண்பனாக நெருங்குகிறான்.ஆனால் இந்த ருத்ரன் அதை எல்லாம் யோசிக்காமல், காதலை வெளிப்படுத்திவிட்டான்.
தன்னிலையை தான் ஷ்ரத்தாவிடம் தெரிவிக்கவும் இயலாத வகையில் யதுநந்தன் விழிபிதுங்கி நின்றான். என்னயிருந்தாலும் சத்ரியன் இல்லாத வெறுமையை ஷ்ரத்தா கடக்க நாட்கள் வேண்டுமென அவனது எண்ணம்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
Posted : August 1, 2026 9:44 am
Topic Tags
தகிக்கும் நிலவொன்று.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 22)
அட ராமா ! திரும்ப ஆரம்பிச்சிட்டானா இந்த ருத்ரன்.
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு, மாட்டுக்கே ஒரு சூடுன்னா, இவன் எதுக்கு திரும்ப, திரும்ப அரைச்ச மாவையே அரைச்சுக்கிட்டிருக்கான்னுத்
தெரியலையே ? வேண்டாம்ன்னா விட வேண்டியது தானே. ராயனுக்கும் இப்பவே அவனோட அப்பா யாருன்னு தெரியுது தானே.
இந்த லஷ்ணத்துல, இந்த ருத்ரன் வேற பழைய குட்டையையே ஏன் தான் குழப்பி விடுறானோ..?
இதுல யதுநந்தன் வேற ஜோடியா கை கோர்த்துக்கிட்டான் ருத்ரனோட... ஈஸ்வரா, இவங்க ரெண்டு பேர் கிட்டயிருந்து எங்களை காப்பாத்துப்பா.
😊😊😊
CRVS (or) CRVS 2797
Posted : August 1, 2026 1:54 pm
Forum Jump:
Related Topics
-
தகிக்கும் நிலவொன்று-50 (முடிவுற்றது)
2 weeks ago
-
தகிக்கும் நிலவொன்று-49
2 weeks ago
-
தகிக்கும் நிலவொன்று-48
2 weeks ago
-
தகிக்கும் நிலவொன்று-47
2 weeks ago
-
தகிக்கும் நிலவொன்று-46
2 weeks ago
Forum Information
- 25 Forums
- 330 Topics
- 1,588 Posts
- 0 Online
- 420 Members
Our newest member: Indu19
Latest Post: பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-14
Forum Icons:
Forum contains no unread posts
Forum contains unread posts
Topic Icons:
Not Replied
Replied
Active
Hot
Sticky
Unapproved
Solved
Private
Closed
