மௌஹபத் முதல் நிக்காஹ் வரை-21
அத்தியாயம்-21
இரவு உணவை முடித்துவிட்டு அறைக்கு வந்த தியானா, வழக்கம்போலத் தனது மொபைலை எடுத்துத் திறந்தாள். அன்று எழுதிய கதையின் அத்தியாயத்திற்குப் புதிய கருத்துகள் வந்திருந்தன. ஒவ்வொன்றாகப் படித்துக்கொண்டே வந்தவளின் பார்வை ஒரு குறிப்பிட்ட கருத்தில் நின்றது.
'தனக்காக ஒருத்தன் தன்னையே மாற்றிக்கொண்டு, காதலுக்காகப் போராடும்போது, அந்த உண்மையான காதலை ஹீரோயின் புரிந்துகொள்ள வேண்டும்!'
அந்த வரிகளைப் படித்தவளின் விரல்கள் அப்படியே நின்றுவிட்டன.
இதயத்திற்குள் ஏதோ ஒன்று மென்மையாக அசைந்தது. தொண்டையில் இனம் புரியாத உணர்வு ஒன்று வந்து அடைத்துக்கொள்ள, மீண்டும் ஒருமுறை அந்தக் கருத்தைப் படித்தாள்.
தனக்காக ஒருவன் தன்னையே மாற்றிக்கொண்டு இருக்கிறான்.
அந்த வாசகம் அவளுடைய மனதிற்குள் பிரணவின் முகத்தைக் கொண்டுவந்து நிறுத்தியது.
அவனுடைய காதலைத் தான் ஏற்றுக்கொள்ளவில்லை. தன்னுடைய மதம், குடும்பம், எதிர்காலம் எனப் பல காரணங்களைச் சொல்லி அவனை விலகிப்போகச் சொன்னாள். ஆனாலும் அவன் அவளிடம் கோபப்படவில்லை. அவளுடைய முடிவை மாற்றச் சொல்லி வற்புறுத்தவும் இல்லை.
ஆனால், அவளுக்காக அவன் செய்துகொண்டிருக்கும் மாற்றங்கள் மட்டும் நின்றபாடில்லை.
தான் விரும்பிய உணவுப் பழக்கத்திலிருந்து விலகி, இதுவரை செல்லவே மாட்டேன் என்று பிடிவாதமாக மறுத்த அசைவ உணவுப் பிரிவில் வேலை செய்கிறான். அதுமட்டுமா? அவளுடைய உலகத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத் தொழுகையையும் கற்றுக்கொள்கிறான்.
அவள் அவனைக் காதலிக்கிறாளா என்பதைக்கூட அறியாத நிலையில், அவளுடைய நம்பிக்கைகளைப் புரிந்துகொள்ள முயல்கிறான்.
அவன் செய்வதெல்லாம் அவளை அடைவதற்காக மட்டும்தானா? அல்லது அவளுடைய மனதிற்கு நெருக்கமான விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற உண்மையான விருப்பமா?
எது எப்படியோ, அவனுடைய முயற்சிகளில் அவளுக்கான காதல் நிறைந்திருந்தது.
தனக்காக அவனும் அவனுக்காக அவளும் மாறுவது காதலா?!
தன்னுடைய மனம் அவனுக்காக இத்தனை தூரம் உருகிக்கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்த தியானாவின் கண்கள் கலங்கின.
"பிரணவ்... என்னை இவ்வளவு நேசிக்கிறீங்களா?"
மெல்லிய குரலில் தனக்குத்தானே கேட்டுக்கொண்டாள்.
அவனுடைய காதலை மறுத்துவிட்டதால், அவன் விலகிச் சென்றுவிடுவானோ என்று ஒருபுறம் பயந்தாள். இப்போது அவன் விலகிச் செல்லத் தொடங்கியதும், ஏன் தன்னிடம் பேசாமல் போகிறான் என்று கோபப்பட்டாள்.
அவனுடைய மனதைப் புரிந்துகொள்ளாமல் அவனை மட்டும் குறை சொல்வது எவ்வளவு பெரிய தவறு!
தான் மட்டும் அவனுடைய காதலை ஏற்றுக்கொள்ளப் பயந்து கொண்டிருக்கிறாள். ஆனால் அவனோ, அவளுடைய உலகத்தைப் புரிந்துகொள்வதற்காகத் தன்னால் முடிந்ததைச் செய்து கொண்டிருக்கிறான்.
அவனுடைய காதலைப் புரிந்துகொள்ள வேண்டியவள் இனியும் தாமதிப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது?
மதம் வேறு, குடும்பப் பின்னணி வேறு என்பதெல்லாம் அவர்களுக்கிடையே இருக்கும் உண்மையான சவால்கள்தான். ஆனால் அவற்றை நினைத்து அஞ்சிக்கொண்டே இருந்தால், தன்னுடைய மனதில் இருக்கும் காதலை ஒருபோதும் அவனிடம் சொல்ல முடியாது.
அவளுடைய கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தவள், மொபைலை நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.
பிரணவிடம் தன்னுடைய காதலைச் சொல்லிவிட வேண்டும்!
எப்படியாவது இருவரும் சேர்ந்து, தங்களுடைய காதலுக்காகப் போராட வேண்டும். அதில் வெற்றி கிடைக்குமா என்பது பின்னால் தெரியட்டும். முதலில் தன்னுடைய மனதில் இருப்பதை அவனிடம் சொல்லிவிட வேண்டும் என்று முடிவெடுத்தாள்.
உடனே அவனுக்கு அழைத்துத் தன்னுடைய காதலைச் சொல்ல வேண்டும் என்று மனம் துடித்தது. அவனுடைய குரலைக் கேட்க வேண்டும் என்ற ஆவல் வேறு அவளைப் பாடாய்ப்படுத்தியது.
ஆனால், மறுகணமே அவளுடைய முகத்தில் வெட்கம் படர்ந்தது.
இத்தனை நாட்களாகத் தன்னுடைய காதலைச் சொல்லாமல் அவனைத் தவிக்க வைத்துவிட்டு, இப்போது போனில் சொல்லிவிடுவதா?
அவன் கண்களை நேருக்கு நேர் பார்த்து, அவனுடைய காதலைத் தான் ஏற்றுக்கொண்டுவிட்டதைச் சொல்ல வேண்டும். அந்த நொடியிலே அவனுடைய முகத்தில் மலரும் மகிழ்ச்சியைப் பார்க்க வேண்டும். இத்தனை நாட்களாக அவன் சுமந்த வலிக்கு, தன்னுடைய ஒற்றை வார்த்தையால் மருந்திட வேண்டும்.
அந்த அழகான தருணத்தைக் கற்பனை செய்தவளின் இதழ்களில் வெட்கப் புன்னகை அரும்பியது.
அவனைக் காணும் அந்த நொடியை நினைத்தபடியே, மறுநாள் விடியலுக்காகக் காத்திருந்தாள்.
விடிந்தும் விட்டது.
அன்றைய காலை தியானாவுக்கு வழக்கத்தைவிட நீண்டதாகத் தோன்றியது. பணிக்குச் சென்றதும் பிரணவைச் சந்திக்க வேண்டும் என்று மனம் துடித்தாலும், காலையில் அவனைப் பார்ப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்பது அவளுக்குத் தெரியும்.
அவன் சமையலறைப் பணிகளில் மூழ்கியிருப்பான். இடையில் அவனைத் தேடிச் சென்று பேசுவதும் சரியாக இருக்காது.
எனவே மாலையில் அவனைச் சந்தித்துப் பேசிவிட வேண்டும் என்று தீர்மானித்தாள்.
அன்று கடிகாரத்தின் ஒவ்வொரு நொடியையும் ஆவலுடன் கவனித்தாள். வழக்கமாகப் பணிநேரம் முடிவதற்காகக் காத்திருக்கும் அவள், அன்று மட்டும் மாலை சீக்கிரமாக வந்துவிடாதா என்று ஏங்கினாள்.
இன்று அவன் டாக்ஸிக்காக நிற்கும் நேரத்திற்குள் நான் போய்விட வேண்டும். அவன் என்னைப் பார்த்ததும் முகத்தைத் திருப்பிக்கொண்டு போகாமல், கொஞ்சம் பேச வேண்டும் என்று நானே கேட்க வேண்டும்.
நினைத்துப் பார்த்தபோதே அவளுக்குச் சிரிப்பு வந்தது.
இத்தனை நாட்களாக அவனிடம் பேசுவதைத் தவிர்த்தவள், இப்போது அவனிடம் பேசுவதற்காக இப்படி மனம் துடித்துக்கொண்டிருக்கிறாளே!
காதல் வந்துவிட்டால் மனிதர்களின் மனம் இப்படித்தான் மாறுமோ?
தன்னுடைய வேலைகளை முடித்துக்கொண்டவள், மாலை நேரத்தை எதிர்பார்த்தபடி இருந்தாள்.
ஒருவழியாக அவளுடைய பணி முடிவதற்கான நேரமும் வந்தது.
அவசரமாகத் தன்னுடைய பொருட்களை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள். அவளுடைய கண்கள் முதலில் தேடியது பிரணவைத்தான்.
இதோ... அவன் எதிரே வந்துகொண்டிருந்தான்!
அவளுடைய இதயம் படபடவென்று அடித்துக்கொண்டது. உதடுகளில் புன்னகை மலர்ந்தது.
பிரணவ்... நான் உங்களிடம் பேசத்தான் வந்திருக்கிறேன்.
மனதிற்குள் சொல்லிக்கொண்டே அவனை எதிர்பார்த்துப் பார்த்தாள்.
ஆனால், அவளைக் கடந்து சென்றவன் ஒருமுறைகூடத் திரும்பிப் பார்க்கவில்லை.
தியானாவின் புன்னகை மெல்ல மறைந்தது.
என்ன இது? நான் இங்கேதான் இருக்கிறேன். என்னைக் கவனிக்காமல் போகிறார்!
அவள் நின்ற இடத்திலிருந்து திரும்பிப் பார்த்தாள்.
பிரணவ் டாக்ஸிக்காக நிற்கும் இடத்தைக்கூடத் தாண்டி நடந்துக் கொண்டிருந்தான்.
அப்போதுதான் அவளுக்கு விஷயம் புரிந்தது.
அவன் இன்று டாக்ஸிக்காகக் காத்திருக்கக்கூட இல்லை!
அவளுடைய மனதில் இருந்த மகிழ்ச்சி சட்டென்று கோபமாக மாறியது.
"அடப்பாவி! இத்தனை நாளும் நான் உன்னைத் தவிர்த்ததற்காக இப்போது நீ என்னைத் தவிர்க்கிறாயா?"
முணுமுணுத்தவள், அவன் பின்னால் வேகமாக நடந்தாள்.
அவனை எப்படியாவது நிறுத்திப் பேசிவிட வேண்டும் என்று முடிவெடுத்திருந்தவள், அவனுடைய அருகில் சென்றதும்,
"ஏய் பிரணவ்!" என்று அழைத்தாள். அவன் திரும்பிப் பார்க்கவில்லை.
அவளுடைய கோபம் இன்னும் அதிகமானது.
"என்னடா நினைச்சிட்டு இருக்க உன் மனசுல? ஒருத்தி உன்னைக் காதலிக்கிறேன்னு தெரிஞ்சும், அவளே நோ சொன்னா... அதுக்காக அவ பின்னாடியே வரமாட்டியா? போன்ல லவ் பண்ணுன்னு டார்ச்சர் பண்ண மாட்டியா? நான் இங்கே நிக்கிறேன். அதுவும் உன்னோட பேசுறதுக்காக ஆசையா வந்திருக்கேன். நீ பாட்டுக்கு என்னைக் கண்டுக்காம போற!"
படபடவென்று பேசிக்கொண்டே அவனுக்கு முன்னால் வந்து வழியை மறித்தாள்.
"என்னைக் கொஞ்சமாவது கவனிக்கிறியா இல்லையா?"
அவளுடைய வார்த்தைகளைக் கேட்ட பிரணவ் மெல்லத் தலைநிமிர்ந்தான்.
அவனுடைய முகத்தைப் பார்த்த அடுத்த நொடியே தியானாவின் கோபம் அப்படியே உறைந்துபோனது.
அந்த முகத்தில் அவள் எதிர்பார்த்த புன்னகை இல்லை. அவளைப் பார்த்ததும் மலர வேண்டிய கண்களில் உயிர்ப்பில்லை. மாறாக, ஏதோவொரு பேரிழப்பைச் சுமந்துகொண்டு நிற்பவனைப் போல அவன் தோற்றமளித்தான்.
அவளுடைய வார்த்தைகளுக்குப் பதில் சொல்லக்கூட முடியாமல், உதடுகள் துடிக்க அவளைப் பார்த்தவன்,
"அ... அம்மா இறந்துட்டாங்க, தியா..." என்றான்.
அடுத்த நொடியே அவனுடைய குரல் உடைந்தது. அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.
"என்ன... என்ன சொல்றீங்க, பிரணவ்?" அவன் அவளைப் பார்த்தபடியே தளர்ந்து அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்தான். கைகளால் முகத்தை மூடிக்கொண்டவன், தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முயன்றும் முடியாமல் அழுதான்.
"ஆபரேஷன் பண்ணியும் அவங்களுக்கு யூஸ் ஆகல, தியா. என்ன பிரச்சினைன்னே தெரியலை... நேத்து நைட்டே இறந்துட்டாங்களாம்." அவன் சொன்னதைக் கேட்டதும் தியானாவின் இதயம் ஒரு கணம் நின்றுவிட்டதைப் போல இருந்தது.
"என்ன சொல்றீங்க? ஆனா... ஆபரேஷன் நல்லபடியா முடிஞ்சதுன்னு சொன்னீங்களே?"
"ஆமா... நல்லபடியாதான் முடிஞ்சதுன்னு சொன்னாங்க. அம்மா கொஞ்சம் தேறிட்டு இருக்காங்கன்னு நினைச்சேன். ஆனா..." அவனால் மேற்கொண்டு பேச முடியவில்லை.
கண்ணீர் கன்னங்களில் வழிந்தோடியது.
"அண்ணா காலையில போன் பண்ணியிருக்கான். நான் போனை லாக்கர்ல வச்சிருந்ததால தெரியலை. இப்போ லாக்கரைத் திறந்து போனை ஆன் பண்ணினதும் மிஸ்டு கால், மெசேஜ்னு வந்திருக்கு. அப்போதான் பார்த்தேன்... அம்மா... அம்மா இறந்துட்டாங்களாம், தியா!"
மீண்டும் ஒருமுறை அந்த வார்த்தைகளைச் சொன்னவன், தாங்கிக்கொள்ள முடியாத துயரத்தில் தலைகுனிந்தான்.
தியானாவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
ஒரு தாயை இழந்துவிட்ட மகனுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் தேவையில்லை. அந்தத் துயரத்தை உணர்ந்து கொள்ளும் ஒரு மனமும், அவன் தனியாக இல்லை என்பதை உணர்த்தும் ஒரு துணையும் போதும்.
ஆனால், அவனுக்கு ஆறுதலாக அருகில் நிற்கக்கூடத் தனக்கு உரிமை இருக்கிறதா என்று யோசித்துக் கொண்டிருந்தவள் அவள்.
இன்று அந்தக் கேள்விகளுக்கெல்லாம் இடமே இல்லை.
அவள் அவனுக்கு அருகில் மண்டியிட்டு அமர்ந்தாள்.
"பிரணவ்..." என்று மெதுவாக அழைத்தாள்.
அவன் நிமிர்ந்து அவளைப் பார்த்தான். அவனுடைய கண்களில் இருந்த வேதனை அவளுடைய இதயத்தைப் பிழிந்தது.
"என்னால அங்கே போகக்கூட முடியல, தியா. அம்மாவைப் பார்க்க முடியல... கடைசியா ஒருமுறை பேசக்கூட முடியல..."
அவனுடைய குரலில் இருந்த இயலாமை தியானாவைச் சுக்குநூறாக உடைத்தது.
வெளிநாட்டில் வேலைக்காக வந்தவன். குடும்பத்தின் நலனுக்காகத் தன்னுடைய விருப்பங்களைக்கூடத் தியாகம் செய்தவன். தாயின் உயிரைக் காப்பாற்றப் பணம் தேவைப்பட்டபோது, தான் வெறுத்த வேலையையும் ஏற்றுக்கொண்டவன். இப்போது தாயை இழந்துவிட்டுத் தனியாக அமர்ந்து அழுகிறான்.
அவனுடைய துயரத்தைக் காண முடியாமல் தியானாவின் கண்களும் கண்ணீரால் நிறைந்தன.
அவள் எதையும் யோசிக்கவில்லை. அவனுடைய மதம், தன்னுடைய மதம், தான் வேலை செய்யும் இடம், தன்னை யாராவது பார்த்துவிடுவார்களோ என்ற பயம்... எதுவுமே அந்த நொடியில் அவளுடைய நினைவுக்கு வரவில்லை.
அவனுடைய தோள்களைப் பற்றிக்கொண்டு, அவனைத் தன்னோடு அணைத்துக் கொண்டாள்.
"அழாதீங்க, பிரணவ்..." என்று அவளுடைய குரலும் உடைந்தது.
ஆனால், அந்த வார்த்தை அவனுடைய துயரத்தைக் குறைக்கவில்லை.
அவன் அவளுடைய தோளில் முகம் புதைத்துக்கொண்டு கதறினான். இத்தனை நாட்களாக மனதிற்குள் அடக்கி வைத்திருந்த வலியெல்லாம் கண்ணீராக வெளிப்பட்டது.
தியானா அவனை இறுக்கமாக அணைத்துக்கொண்டாள். அவனுடைய முதுகை மெதுவாகத் தடவிக்கொடுத்தாள்.
"நான் இருக்கேன்... உங்ககூட நான் இருக்கேன்..." என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தாள்.
அந்த வார்த்தைகளைச் சொல்லும்போது, அவள் எதைப் பற்றிச் சொல்கிறாள் என்பது அவளுக்கே முழுமையாகத் தெரியவில்லை. அவனுடைய துயரத்தில் துணையாக இருப்பதைப் பற்றியா? அல்லது இனி அவனுடைய வாழ்க்கையில் இருந்து விலகிச் செல்ல மாட்டேன் என்பதைப் பற்றியா?
ஆனால், அவளுடைய அணைப்பில் இருந்த உண்மையைப் பிரணவ் உணர்ந்தானோ இல்லையோ, அந்த நொடியில் அவனுக்குத் தேவைப்பட்ட ஆறுதலை அவள் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
அதே நேரத்தில்... தியானா வேலை செய்யும் ஹோட்டலுக்கு வெளியே ஒரு கார் பயணித்தது
அதிலிருந்து நசீர், மகள் வேலை செய்யும் இடத்தைப் பார்த்தபடி வர, அவளுடைய பணியிடத்தை ஒருமுறை பார்த்துவிட்டு சாலையில் கடக்கும் நேரம், தொலைவிலிருந்து மகளைத் ஒரு இருக்கைக்கு அருகில் நின்றிருந்த இருவர் மீது விழுந்தது.
அவர்களில் ஒருவர் தன்னுடைய மகள் என்பதை முதலில் அவரால் நம்ப முடியவில்லை.
அந்தப் பெண் அணிந்திருந்த கருப்பு பர்தா... தலையையும் முகத்தையும் மறைத்திருந்த ஹிஜாப்... அவளுடைய கையில் தெரிந்திருந்த வாட்ச்... கால்களில் அணிந்திருந்த செருப்பு...
ஒவ்வொன்றாக அவருடைய பார்வையில் பதிந்தபோது, அது தியானாதான் என்பதை உணர்ந்தார்.
ஆனால், அடுத்த நொடி அவர் கண்ட காட்சி அவரை அப்படியே உறைய வைத்தது.
தியானா ஓர் ஆணை அணைத்துக் கொண்டு நின்றிருந்தாள்!
அந்த ஆணின் முகம் அவருக்குத் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், அவனுடைய தோளில் முகம் புதைத்திருந்த மகளின் உடல்மொழி, அவனை ஆறுதல்படுத்திக் கொண்டிருந்த விதம்... எதுவுமே ஒரு தந்தையால் எளிதாகக் கடந்துசெல்லக்கூடிய காட்சியாக இல்லை.
நசீரின் முகம் இறுகியது. காரை ஓரமாய் நிறுத்த கூறினார்.
"தியானா... நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய்?
மகளின் வாழ்க்கையைப் பற்றி ஆயிரம் கனவுகளைக் கண்டிருந்த தந்தையின் மனதிற்குள், அடுத்தடுத்து பல கேள்விகள் எழுந்தன.
மகளிடம் சென்று என்னவென்று கேட்க வேண்டுமென்ற எண்ணம் எழுந்தாலும், அதே நேரத்தில் அவளை அப்படியே பார்த்துக்கொண்டிருந்தார்.
தன்னுடைய காதலுக்காகப் போராட முடிவெடுத்த தியானா, அந்த நொடியில் தன்னுடைய வாழ்
க்கை எந்தத் திசையில் திரும்பப்போகிறது என்பதை அறிந்திருக்கவில்லை.
அவளுடைய காதலுக்கான முதல் அடியாக இருந்த அந்த அணைப்பு...
அவளுடைய குடும்பத்தின் முன்னால் மிகப்பெரிய கேள்வியாக மாறியது.
-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்
மொஹபத் முதல், நிக்காஹ் வரை!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 21)
அச்சோ..! அத்தனை தூரம் ரிஸ்க்
எடுத்து அசைவ உணவை செய்ய ஒத்துக்கிட்டதே, ப்ரணவ் தன்னோட அம்மா ஆபரேசனுக்காகத்தான்.
அப்படியிருந்தும் திடிர்ன்னு இப்படியானால் யாரா இருந்தாலும் ரொம்ப பெரிய ஷாக்காத்தான் இருக்கும். பாவம் ப்ரணவ், இந்த நிலையில் ஊருக்கும் போக முடியாது.
அட ராமா ! இருந்திருந்து தியானா இப்பத்தான் ப்ரணவோட காதலையே ஏத்துக்க நினைச்சா, ஆனால் அதை சொல்ல க் கூட முடியாமல் அவனே கதறிட்டிருக்கிறான், இப்ப அவனுக்கு ஆறுதல் சொல்லிட்டிருக்கிறவளை தியானாவோட அப்பா வேற பார்த்துட்டாரா...? கிழிஞ்சது
கிருஷ்ணகிரி.
😴😴😴
CRVS (or) CRVS2797
-
மௌஹபத் முதல் நிக்காஹ் வரை-20
1 day ago
-
மௌஹபத் முதல் நிக்காஹ் வரை-19
2 days ago
-
மௌஹபத் முதல் நிக்காஹ் வரை-18
3 days ago
-
மௌஹபத் முதல் நிக்காஹ் வரை-17
3 days ago
-
மௌஹபத் முதல் நிக்காஹ் வரை-16
5 days ago
- 26 Forums
- 381 Topics
- 1,931 Posts
- 1 Online
- 442 Members
