Forum

நயனமே நான் தானடி-4
 
Notifications
Clear all

நயனமே நான் தானடி-4

4 Posts
4 Users
0 Reactions
18 Views
(@praveena-thangaraj)
Posts: 314
Member Admin
Topic starter
 
[#412]

அத்தியாயம்-4

சென்னை நகரத்தின் சத்தங்கள், ராஜ்குமாரின் மனதுக்குள் ஓர் காலப்பெட்டியைப் போலவே மீள மீள எழுந்தன. தேவா சந்திப்புகள், சசிகுமார் மாமாவின் வருகை, வருமான பரிமாற்றங்கள். சோனாலியின் காதல் துண்டிப்பு, வேலைக்காரர்களின் கரிசனை, தன் வாழ்வில் தலைகீழ் மாற்றம், இதற்கிடையே அவன் எண்ணங்களை உச்சரித்த பெயர் நேத்ரா

அவளுடைய குரல், அவளின் அமைதியான சிரிப்பு, அவளும் பார்வையற்றவளாக இருந்தாலும் வார்த்தையில் புத்துணர்வு. 

கண்கள் இல்லாமலே பார்க்கும் பயணத்தில் நேத்ராவை விசித்திரமாக எண்ணினான். 

  அதெப்படி பார்வையற்றவர்கள் இயல்பாக வாழ்கின்றார்கள். சில நாட்களிலேயே தனக்கு வாழ்க்கையே வெறுக்கும் அளவிற்கும், ஏன் தற்கொலை செய்து மரணித்திடும் அளவிற்கும் எண்ணங்கள் பயணம் செய்ய, பிறவியில் பார்வையற்றவர்களாக இருப்பவருக்கு வாழ்க்கையில் எப்படி இத்தனை சந்தோஷம்‌? அவர்களது வாழ்வியலை பற்றி அறிய வேண்டுமே என்ற பேராவல் உதித்தது.  

  தன் எண்ணத்தை பற்றி தேவாவிடம் உரைத்தான் ராஜ்குமார். 

   "பார்வையற்றவர்களா இருப்பது சிரமம் தான் சார். ஆனா அதையும் தன் வாழ்க்கையில் ஒரு சவாலா நினைச்சி வாழ்றவங்க இருக்காங்க. 

  அவங்களை பத்தி தெரிந்துக்கறப்ப அபூர்வமா தான் இருக்கும்." என்றான்.‌

"ஏன் தேவா.. எனக்கு அவங்களை பத்தி முழுசா தெரியணும். எப்படி இந்த கஷ்டத்தை எல்லாம் சமாளிக்கறாங்கன்னு தெரிந்துக்க ஆசைப்படறேன். அதோட நானும் எனக்கான வாழ்க்கையை எப்படி இனி பேஸ் பண்ணுவேன்னு ஒரு க்ளியர் ஸ்டேட்மெண்ட் கிடைக்கும்னு தோணுது." என்று ராஜ்குமார் முதல் தடவை பார்வை பறிப்போன பிறகு பாஸிடிவாக பேசவும், தேவாவோ ''அதற்கான விஷயத்தை நான் தேடி சொல்லறேன் சார்." என்று வாக்கு தந்தான். 

  அதற்கு முன் தெரிந்த சில விஷயத்தை கூறினான். 

"இல்லை தேவா... எனக்கு நீ சொல்வதை விட, என்னை போல பார்வையற்றவங்க சொன்னா தான் சரியா வரும்." என்று தெரிவிக்க, "இருக்காங்க சார்... நிறைய இது போல ஆட்களுக்குன்னு ஸ்கூல் இருக்கு. நான் கூட்டிட்டு போறேன் சார்" என்றான்.‌

  ராஜ்குமார் அடுத்த நாள் விடியலுக்காக காத்திருந்தான்.  

பார்வையற்றவருக்கான ஆசிரமத்திற்கு தேவா அழைத்து சென்றான்.‌

தரமணி பக்கத்தில் பிளைண்ட் அசோசியேஷன் என்ற இடத்திற்கு அழைத்து வந்தான். அவ்விடத்திற்குள் வந்தப்போதே ஏதோவொரு ரம்மியமான சூழலை ராஜ்குமாரால் உணர முடிந்தது. 

பார்வையற்றோருக்கான பிரெய்லி எழுத்து முறையை உருவாக்கியவர் லூயிஸ் பிரெய்லி ஆவார். பிரான்சைச் சேர்ந்த இவர், பார்வையற்றோர் தங்களின் விரல்களால் தொட்டுணர்ந்து வாசிக்கும் மற்றும் எழுதும் ஒரு முறையை உருவாக்கினார், இது உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது. இந்த எழுத்து முறையில், ஆறு புள்ளிகளைப் பயன்படுத்தி எழுத்துக்கள் குறிக்கப்படுகின்றன, இவற்றை விரல்களால் தொட்டுணர முடியும். இதெல்லாம் பிறவியில் பார்வையை இழந்தவருக்கு சரிவரும். 

  இங்கு நம் நாயகன் ஏற்கனவே எழுத தெரிந்தவன் படிக்க தெரிந்தவன், உலகத்தை பேச தெரிந்தவன். 

  அதனால் மற்றவரிடம் பேசவும் மற்றவர்கள் இவனிடம் பேசவும் அந்த எழுத்துமுறை தேவைப்படாது. ஆனால் அவனாக ஏதேனும் புது விஷயத்தை படிக்க விரும்பினால் கற்றுக் கொள்ளலாம். அதற்கு கூட தேவா போல ஒரு துணையிருக்க புத்தகத்தை வாசித்து கேட்டுக்கொள்வான். 

   ராஜ்குமாரை பொறுத்தவரை கஷ்டமாக இருப்பது, தன்னை சுற்றிய இடத்தை அவனால் கண்டறிய முடியவில்லை. தனியாக ரெஸ்ட்ரூம் செல்லும் பாதைக்கு கூட வழியறியாது தேவாவை உதவிக்கு அழைப்பது தான். 

  தன்னை சுற்றிய இடமும், தானாக செல்லும் பக்குவமும் எப்படி கையாள்வது. இனி காரை எடுக்க தேவாவின் உதவி தேவை அதை மறுக்க முடியாது. 

    இதையெல்லாம் நினைத்தபடி, சிந்தனையில் இருந்தவனை, கலைக்கும் விதமாக, "எக்ஸாமுக்கு யாராவது உதவுவாங்க கலை. நீ வேண்டுமின்னா நமக்கு இதுக்கு முன்ன பரீட்சைக்கு உதவியவங்களை தொடர்புகொண்டு பேசி பாரு." என்ற தேன் குரல். 

  பார்வை பறிப்போனதாலோ என்னவோ செவிதிறன் கூர்மையாக மாற, இந்த குரலை எங்கயோ கேட்டிருக்கேன்...  எங்க எங்க..' என்றவனுக்கு 'மறக்கக்கூடிய குரலா.. இது நேற்று பேசிய பெண்ணின் குரல் போல உள்ளதே?! என்று பரவசப்பட்டான்.‌

   அக்குரல் வந்த திசையில் செவியை கூர்த்தீட்ட, யாரோ ஒரு கண் தெரியாதவருக்கு பரீட்சை உள்ளது. அதற்காக எழுத ஆட்களை தேடுகின்றதை தெரிந்துக்கொண்டான்‌.

  "லாஸ்ட் டைம் நமக்கு உதவினவங்களுக்கு, இன்னிக்கு பார்த்து  வேலை இருக்கு. முன்னாடியே சொல்லியிருக்கலாம்ல" என்று நேத்ரா கடிந்தாள். 

ராஜ்குமாரோ தானாக முன்வந்து, "உங்களுக்கு ஓகேன்னா... என் கேர்டேக்கரிடம் உதவி செய்ய சொல்லறேன். அவர் உங்களுக்கு எக்ஸாம் எழுதி தருவார்" என்றதும் "யாரு?" "யார் அது?" என்ற குரல்கள் கேட்டது. 

  எதிர்தரப்பில் உள்ளவர்கள் பார்வையற்றவராக இருப்பதால், "என் பெயர் ராஜ்குமார்." என்று கூறினான்

  "எங்க.. எங்க இருக்கிங்க?" என்று நேத்ரா கைகளை தட்டுப்பட்டு கேட்க, "நான் இங்க தான் இருக்கேன். நானும் ஆக்சிடெண்ட்ல பார்வை இழந்தவன்... தே..தேவா" என்றதும் சற்று தொலைவில் "சார்.. ஒரு நிமிஷம் வந்துடறேன்" என்று கூறி சில நொடியில் நடந்துவரும் ஓசை கேட்டது. 

"என்ன சார்?" என்று நின்றான் தேவா. 

"தேவா... இவங்களுக்கு எக்ஸாமாம். அதுக்கு யாராவது எழுதி தர உதவி செய்யேன்" என்றதும், "யாரு சார்" என்று திரும்ப, நேத்ராவும், "எங்க பிரெண்ட் சங்கவிவுக்கு சார். நான் கூட மட்டும் வருவேன்." என்றாள்.

  தேவா விவரம் கேட்க, "சார் அவங்க எக்ஸாம் ஹாலுக்கு போகணும். நீங்க அவங்களுக்கு உதவி செய்ய சொன்னிங்க. அப்ப நீங்க சார்" என்றதும், ராஜ்குமாரோ "நான் அவங்களோட பேசி அவங்க வாழ்க்கை முறையோட அனுபவத்தை கேட்டுக்கறேன் தேவா." என்றதும் ராஜ்குமார் காரிலேயே நேத்ரா சங்கவி ஏறினார்கள். 

''பரீட்சைக்கு எல்லாம் படிச்சிட்டியா சங்கவி." என்று கேட்க "படிச்சிட்டேன் நேத்ரா." என்றாள். 

"சார் உங்களுக்கு சிரமம் இல்லையே. நீங்க இங்க என்ன காரணத்துக்காக வந்திங்களோ சாரி... நாங்க ஒரு வேலை வச்சிட்டோம்" என்று கூறவும் பார்வையற்றப்பின் லேசான முறுவல் ராஜ்குமார் இதழில் பூத்தது. 

"சொன்னேனே... எனக்கு பார்வை பறிப்போனதும் இப்ப என்னால என் வேலையை கூட செய்ய முடியலை. தேவா தான் துணைக்கு வச்சியிருக்கேன்.‌ தட்டுதடுமாறுற வாழ்க்கை. என்னோட வாழ்க்கை இனி இப்படி தான் என்றதும் வாழ பழகணும்ல. அதை விட, மனசு இயல்பான மனிதரை தவிர்த்து பார்வையற்றவர்களோட பழகணும்னு தான் விரும்புது. ஒருவேளை நான் பரிதாபத்துக்குரிய ஆள் என்பதால் எதிர்தரப்பிலும் பரிதாபத்தை எதிர்பார்க்கின்றேனோ என்னவோ'' என்று பேசினான். 

   இப்படி பேசினால் நேத்ராவுக்கு பிடிக்காது. ஆனால் உதவுவதற்கு கூட வரும் பொழுது வாதம் செய்ய முடியுமா என்ன? 

  தேவா காரை நிறுத்தி, "சார் அவங்க சொன்ன எக்ஸாம் ஹால் வந்துட்டுச்சு. நான் எழுதி தந்துட்டு வந்துடறேன். நீங்க அதுவரை இங்கயே இருங்க" என்றான்.‌

ராஜ்குமாரும் நேத்ராவும் தனித்து அமர்ந்திருந்தார்கள். 

   "இருக்கிங்களா?" என்று ராஜ்குமார் கேட்க, "இங்க தான் சார் இருக்கேன்.'' என்றாள் நேத்ரா.

  "எதுவும் பேசாம இருப்பதால் எங்கயாவது கிளம்பிட்டிங்களானு பயந்தேன்." என்றார்.

  இம்முறை நேத்ராவே "ஏன் சார் பயம்?" என்றாள். 

  "தெரியலைங்க... எனக்கெல்லாமா முன்ன பயம் என்றதே பார்த்ததில்லை. இப்பலாம் என் வாழ்க்கையில பெரிசான என் உணர்வில் இருப்பது இந்த பயம் தான்" என்றான்.

   "ரொம்ப விரக்தியா பேசறிங்களே சார். ஏன் என்னாச்சு.? உங்களுக்கு ஆக்சிடெண்ட்ல பார்வை பறிப்போயிருக்குன்னு உங்க பேச்சு மூலமா தெரியுது. 

  நீங்க ஏன் அதனால விரக்தி ஆகறிங்க. ஆக்சிடெண்ட்ல உயிர் போகலையேனு கடவுளுக்கு நன்றி சொல்லுங்க" என்றாள்.‌

ராஜ்குமாரோ, "உயிர் போகலை கண்ணு தான் போச்சுனு சந்தோஷப்படணுமா? என் லவ்வர் என்னை விட்டு போயிட்டா. பாத்ரூமுக்கு கூட தட்டி தட்டி தடவி தடவி நடந்து போறேன். என்னால என் இடத்துலயிருந்து பக்கத்துல கூட தனியா நடந்து போக முடியலை. 

  பிறவியிலேயே கண்ணு தெரியாம போறதுக்கும், நடுவுல போறதுக்கும் வித்தியாசம் இருக்கு." என்று எரிந்து விழாத குறையாக பேசவும், நேத்ரா நிதானமாக "இப்பவும் சொல்லறேன் சார். நீங்க கொடுத்து வச்சவர். பாருங்க உங்களை ஒரு கேர்டேக்கர் வந்து கூடவே இருந்து பார்த்துக்கறார். தேவா.. அப்படின்னு நீங்க கூப்பிட்டதும் ஓடிவர்றார். நிச்சயம் கேர்டேக்கர்லாம் வச்சியுருக்கிங்கன்னா பணக்காரரா இருப்பிங்க. சோ... அடுத்த வேளை சாப்பாட்டுக்கு யாரிடமும் கையேந்தற நிலை இல்லை. 

  இதே எங்களில் சிலரை பாருங்க. இப்பவும் தாம்பரம் ஸ்டேஷனில் கண்ணு தெரியாம பிச்சை எடுப்பாங்க. இல்லைன்னா கமரக்கட்டு, பர்ஃப்பி, கர்ச்சீப்பை விற்கறவங்களா இருப்பாங்க. ஏன்னா... அவங்களோட தேவைக்கு கூட அவங்க உழைக்கணும். 

  அதுக்காக அந்த விஷயம் மட்டும் தான் பண்ணுவாங்கனு சொல்ல மாட்டேன். அது கௌரவ குறைச்சலான வாழ்க்கையும் இல்லை. அத்தியாவசிய வாழ்க்கை முறைக்கு உழைக்கறாங்கன்னு சொல்ல வந்தேன். அதோட தொலைபேசி ஆபரேட்டர்கள், மசாஜ் செய்யறவங்க, இசையமைப்பாளரா, பாடகரா, கைவினைப் பொருட்கள் செய்யறவங்களா, கணினி புரோகிராமரா, ஆசிரியரா, எழுத்தாளரா, சட்ட வல்லுநரா, ஏன் தகவல் தொழில்நுட்ப வல்லுநரா வேலைகளைச செய்யறாங்க. என்ன கொஞ்சம் பணவுதவி பெற்றவங்களாகவோ இல்லை... குடும்ப சப்போர்ட் மற்றும் ஓரளவு பணக்காரர்களாக இருக்கலாம்.

அதோட சில நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நார்மல் பீப்பிள் போல அனைத்து வேலையும் எங்களால் செய்ய முடியும். 

   ஆனாலும் உங்க லெவல் இருக்குமானு தெரியலை. நீங்க கேர்டேக்கர் வச்சியிருக்கிங்க... தப்பா நினைக்காதிங்க. என்ன தொழில் பண்ணறிங்க?" என்று நேத்ரா கேட்டதும் "கொடைக்கானல்ல லாட்ஜ் இருக்கு. வாடகை பணம் வரும். அதுக்கூட என்னோட தாய்மாமா நடத்தறார்." என்றதும் நேத்ரா லேசாக சிரித்திருக்க வேண்டும் முத்துக்கள் சிதறியது போல சிறு சத்தம். 

   "யா... நீ சொன்ன மாதிரி நான் அதிர்ஷ்டசாலி தான். விபத்துல சாகலை. பார்வை மட்டும் போயிடுச்சு. பணத்துக்காக யாரிடமும் கையேந்துற நிலை எனக்கில்லை. 

   ஒரு கேர்டேக்கரை வச்சிக்கற அளவுக்கு எனக்கு வசதியிருக்கு. 

   ஆனா என் காதலி சோனாலி... என்னை விட்டுட்டு போயிட்டா. ஒரு வேளை அவ என் பக்கத்துல இருந்து ஆறுதலா பேசியிருந்தா... நான் இந்தளவு துவள மாட்டேன்." என்றவன் பார்வையற்ற கண்ணிலிருந்து வந்த கண்ணீரை துடைக்காமல் லேசாக அழது குலுங்கினான். 

  நேத்ராவுக்கு ராஜ்குமாரின் விசும்பல் சப்தம் கேட்டதும், "சார்.. சார்... அழறிங்களா?" என்று கையை தட்டு தடுமாறி பக்கத்தில் இருந்தவன் சட்டையில் கைப்பட கண்ணீர் துளிகள் நேத்ரா கையில் படவும் அவசரமாய் கன்னத்தில் வழிந்த நீரை தொட்டு பார்த்து, "சார் அழாதிங்க. ஏன் இப்படி. அச்சோ.. சார்... இது பொது இடம்." என்று கூறி அவனை சாந்தப்படுத்துவதற்குள் போதும் போதுமென ஆனது. 

  தேவாவும் அதற்குள் வர, "சார் என்னாச்சு?" என்று கேட்டு முடிக்க, "தேவா.. வந்துட்டியா... என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போயிடு." என்று கூற, "ஓகே சார் ஓகே சார். மேம்... நீங்க.." என்று யாருக்காக பரீட்சை எழுத வந்தானோ அந்த பெண்ணிடம் தெரிவிக்க, அந்த பொண்ணும், "இனி நாங்க பார்த்துக்கறோம் சார். ஆட்டோ பிடிச்சி நாங்க இருக்கற ஹாஸ்டலுக்கு போயிடுவோம்." என்று கூறியதும் நன்றி தெரிவித்து தேவா ராஜ்குமாரை கைப்பிடித்து அழைத்து சென்றான். நேத்ராவோ

தோழி வந்ததும் சப்தமில்லாமல் அவள் கையை பிடித்தாள். 

-தொடரும். 

பிரவீணா தங்கராஜ்

 


 
Posted : October 23, 2026 7:22 am
(@guna-sundari)
Posts: 183
Estimable Member
 

Yes really Rajkumar gifted. He lived with carw taker. He has sufficient money to lead his life. But in real world many people don't habe this standard to lead their life. Raj is in love failure. Very intresting sis. Awesome narration sis. Very emotional sis.


 
Posted : October 23, 2026 9:27 am
(@kavi-bharathi-arunkumar)
Posts: 165
Estimable Member
 

Rajkumar oru vagai la gifted than aana sudden ah ipadi avanuku parvai poga vum atha avan manasu accept panna vum avanuku time thevai padumae 


 
Posted : October 23, 2026 12:11 pm
(@crvs2797)
Posts: 237
Reputable Member
 

நயனமே நான் தானடி..!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 4)

பாவம் தான் ராஜ்குமாரோட நிலைமை, பிறவியிலயே பார்வை இல்லாமல் போவதற்கும், விபத்தில் போவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது தான், ஆனாலும் இதையும் பழகிக்கொள்ள வேண்டியது தான்.

ஆனால், இந்த வீணாப்போன சோனாலியை நினைச்சு அழறச்ச தான் எனக்கே அவன் மேல
டன் டன்னா கோபம் வருது.
சோனாலிக்கு அந்தளவுக்கு வர்த் கிடையாதுன்னு புரியறச்ச தான் இந்த தவிப்பே வீண் என்று தெரியும்.

😴😴😴
CRVS (or) CRVS2797


 
Posted : October 23, 2026 1:59 pm

Scroll to Top