Forum

மௌஹபத் முதல் நிக்கா...
 
Notifications
Clear all

மௌஹபத் முதல் நிக்காஹ் வரை-17

3 Posts
3 Users
0 Reactions
15 Views
(@praveena-thangaraj)
Posts: 315
Member Admin
Topic starter
 
[#408]

அத்தியாயம்-17

இரவு முழுவதும் பிரணவின் மனம் அனலில் இட்ட புழுவாகத் துடித்துக் கொண்டிருந்தது.

இன்றைக்கு மட்டும்தான் யோசிப்பதற்கான நேரம். அதுவும் சம்மதிக்கலாமா, வேண்டாமா என்று முடிவெடுக்கும் நிலை இல்லை. சம்மதித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தான்

அவன் மனம் முழுவதும் அம்மாவின் உடல்நிலை பற்றிய கவலை மட்டுமே நிறைந்திருந்தது.

அம்மா நலமாக இருக்க வேண்டும். அதற்காக எதையும் செய்யலாம்... செய்ய வேண்டும்!

இந்த எண்ணம் மீண்டும் மீண்டும் அவனுக்குள் மோதியது.

அசைவ உணவு சமைக்கும் கிச்சனுக்குச் சென்றால் ஏற்படப்போகும் அசௌகரியங்களை லேசாக நினைத்துப் பார்த்தான். அங்கே வேலை செய்வதை நினைத்துப் பார்த்ததற்கே அவனுக்குக் குமட்டல் எழுந்தது. அடுத்த கணமே எழுந்து ஓடிச்சென்று வாந்தி எடுத்தான்.

அப்போது அறையில் இருந்த சூர்யா பதறியபடி அவனருகில் வந்தான்.

"என்னடா ஆச்சு? சாப்பிட்டது ஒத்துக்கலையா?" என்று பரிவாகக் கேட்டான்.

பிரணவ் முகத்தைக் கழுவிக்கொண்டு வந்து அமர்ந்தான். பிறகு, தான் சைவ உணவுப் பிரிவிலிருந்து அசைவ உணவுப் பிரிவுக்கு மாற்றப்படவிருப்பதையும், அதற்குப் பின்னால் இருக்கும் அம்மாவின் உடல்நிலை பற்றிய கவலையையும் சூர்யாவிடம் தெரிவித்தான்.

அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த சூர்யா பெருமூச்சு விட்டான்.

"நம்ம நிலைமையே இதுதான்டா. ஏதேதோ காரணங்களுக்காக நம்மளை மாதிரி பசங்க பணம் தேடி நாடு விட்டு நாடு வந்து உழைக்க வேண்டியிருக்கு. பிடிக்குதோ, இல்லையோ... சில நேரம் வேற வழியில்லாம ஒரு வேலையைச் செஞ்சுதான் ஆகணும்.

துபாய்க்குப் போனா நல்லா சம்பாதிச்சு வீடு வாங்கிடலாம், பிள்ளைகளை நல்லா படிக்க வைக்கலாம்னு நினைக்கிறவங்க நிறைய பேர். வெளிநாட்டு வாழ்க்கைன்னா அது ஒரு சுகம்னு நினைக்கிறவங்களுக்கு எல்லாம் நாம உள்ளுக்குள்ள அழற கண்ணீர் தெரியாது.

எனக்கெல்லாம் சொந்த ஊர்ல ஏதாவது சின்ன வேலை செஞ்சா கூடப் போதும். என் தம்பி தங்கச்சி, பொண்டாட்டின்னு குடும்பத்தோட இருக்கணும்னு தான் ஆசை. ஆனா, என் தலைவிதி என்னை இங்கே கொண்டுவந்து நிறுத்தியிருக்கு." சூர்யா சிறிது நேரம் மௌனமாக இருந்துவிட்டுத் தொடர்ந்தான்.

"நான் என்ன வேலை பார்க்கிறேன்னு உனக்குத் தெரியும்ல? ரூம் கிளீன் பண்றது, செட் பண்றது, ஃப்ரெஷ்னர் அடிச்சு வாசனையா மாத்துறதுன்னு நாள் முழுக்க ஓடிக்கிட்டே இருக்கணும்.

யாரோ சாப்பிட்டுப் போட்ட பேப்பர், டிரஸ், கவர், சிகரெட் துண்டுகள்... சில நேரங்கள்ல காண்டம் கூடக் குப்பையில கிடக்கும். அதையெல்லாம் சுத்தம் பண்ணணும். பாத்ரூமைச் சுத்தம் பண்ணணும். யாரோ படுத்துப் புரண்ட பெட்ஷீட்டை எடுத்துட்டுப் புதுசா ரூமைத் தயார் லக்சரியா அழகுப்படத்திடணும். இதெல்லாம் முடிச்சுட்டு அடுத்த ரூமுக்குப் போகணும்.

எனக்கு இந்த வேலை பிடிக்கலன்னு சொல்லி என்ன செய்ய முடியும்? இரண்டு தம்பி, தங்கச்சி. தங்கச்சிக்குக் கல்யாணம் பண்ணி வைக்கக் கடன் வாங்கினேன். அதை அடைக்கணும்னு துபாய்க்கு வந்தேன். அப்படியே தம்பிங்களோட படிப்புச் செலவும் சேர்ந்துச்சு.

கடைசியா லீவுல ஊருக்குப் போனப்போ, கண்ணுக்கு லட்சணமா ஒருத்தியைப் பார்த்துக் கல்யாணமும் பண்ணி வச்சாங்க. கல்யாணம் பண்ணினா வீடு வேணும்னு வீட்டுக் கடன் வேற. இப்போ கல்யாணக் கடன், வீட்டுக் கடன்னு எல்லாத்தையும் அடைக்கிறதுக்காக மறுபடியும் துபாய்க்கு வந்துட்டேன். இன்னும் ஊருக்குப் போய் நிம்மதியா இருக்க முடியலை.

நீயோ உனக்குப் பிடிச்ச வேலையைத்தான் தேடி வந்த. கொஞ்சம் கடனை அடைச்சிட்டு நிம்மதியா இருக்கலாம்னு நினைச்ச. இப்போ உனக்குப் பிடிக்காத அசைவ உணவுக் கிச்சனுக்குப் போக வேண்டிய நிலைமை.

வேற வழியில்லை பிரணவ் ஆண்டவன் மேல பாரத்தைப் போட்டுட்டுச் சம்மதிச்சு பணத்தை வாங்கி ஊருக்கு அனுப்பு. முதல்ல உங்கம்மாவுக்கு ஆபரேஷன் நடக்கட்டும்.

இந்தப் பணக்காரங்க மனசு எப்போ மாறும்னு சொல்ல முடியாது. இப்போ சம்மதம்னு சொல்லிட்டு, நாளைக்கு ஏதாவது காரணம் சொல்லிப் பணம் கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டா என்ன செய்வ? அப்புறம் உங்கம்மாவோட ஆபரேஷனுக்கு என்ன பண்ணுவ?

அசைவ உணவோட வாசனை பிடிக்கலையா? வேலை முடிஞ்சதும் நல்லா குளிச்சுடு. உனக்குத்தான் குளிக்க அலுக்காதே" என்று சொல்லி அவன் தோளைத் தட்டிக் கொடுத்தான்.

அவனுடைய பேச்சில் இருந்த யதார்த்தம் பிரணவின் மனதைச் சற்றே இலகுவாக்கியது.

தன்னைவிட அதிகமான சுமைகளைச் சுமந்துகொண்டு சூர்யா வாழ்வதைக் கேட்டதால் தான் அவனுக்குள் அந்தச் சிறு புன்னகை அரும்பியதோ என்னவோ!

சிறிது நேரம் யோசித்தவன், மனதில் ஒரு முடிவுக்கு வந்தான். உடனே அண்ணன் நிர்மலுக்கு அழைத்தான்.

"அண்ணா, பணம் நாளைக்குத் தயாராகிடும். அம்மாவோட ஆபரேஷனுக்கு ஏற்பாடு பண்ணு. டாக்டர்கிட்ட பேசி எல்லா விவரத்தையும் விசாரிச்சுக்கோ."

மறுமுனையில் நிர்மல் பெருமூச்சுடன் பேசினான்.

"அம்மா பேசினாங்கடா. அவங்களுக்கு அவங்களைப் பத்திக் கவலை இல்லையாம். உன்னைத் தனியா விட்டுட்டுப் போயிடுவேனோன்னுதான் பயப்படுறாங்க. உனக்கு ஒரு கல்யாணமாவது பண்ணி வச்சிருக்கணும்னு சொல்லி அழுதாங்க. டாக்டர் பார்த்துத் திட்டினதுக்குப் பிறகுதான் அமைதியானாங்க.

உன்கிட்ட பேசணும்னு சொன்னாங்க. ஆனா, பகல்ல நீ போனை லாக்கர்ல வச்சிடுவேன்னு சொன்னதால அமைதியா இருந்தாங்க. இப்போ தூங்குறாங்க. நீ ஒரு ஆடியோ மெசேஜ் அனுப்பி வை. அம்மாகிட்டக் காட்டுறேன்."

"சரிண்ணா" என்றவன், அழைப்பைத் துண்டித்துவிட்டு அம்மாவுக்காக ஒரு குரல் செய்தியைப் பதிவு செய்தான்.

"அம்மா, நல்லா மனசைத் தைரியமா வச்சுக்கோங்க. ஆபரேஷனுக்கு வேண்டிய பணம் ரெடியாகிடும். எதுவும் யோசிக்காதீங்க. நான் இருக்கேன்மா.

எனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கலையேன்னு கவலைப்படாதீங்க. அதுக்கெல்லாம் இப்போ அவசரமில்லை. நீங்க நல்லபடியா குணமாகி வீட்டுக்கு வந்ததும், நாம அதைப் பத்திப் பேசலாம். இப்போ உங்க உடம்பைப் பார்த்துக்கோங்க. எல்லாம் நல்லபடியா நடக்கும்!"

அந்தச் செய்தியை நிர்மலுக்கு அனுப்பிவிட்டு, பிரணவ் கண்களை மூடி அமர்ந்தான்.

அம்மாவுக்கான பணத்தை ஏற்பாடு செய்வதற்கு ஒரு வழி கிடைத்திருந்தது. ஆனால், அதற்காக அவன் கொடுக்க வேண்டிய விலைதான் அவனுக்குள் இன்னமும் உறுத்திக் கொண்டிருந்தது.

அடுத்த நாள் காலையில் வேலைக்குக் கிளம்பும்போது இறைவனை வேண்டிக் கொண்டான். 'என்னால் முடிந்ததைச் செய்கிறேன். அம்மாவைக் காப்பாற்றிவிடு இறைவா.'

புறப்படுவதற்கு முன்பு அவன் மனம் தியானாவைத் தேடியது.

அவளிடம் பேச வேண்டும் என்ற ஆசை எழுந்தது. ஆனால், உடனே அந்த எண்ணத்தை அடக்கிக்கொண்டான்.

அவளாகவே வரட்டும். தன்னைப் போலவே அவளும் காதலில் விழுந்துவிட்டாள் என்பது அவனுடைய நம்பிக்கை. ஆனால், மதம் என்ற தடையைக் காரணம் காட்டி விலகி நிற்கும் அவள், தானாக முன்வந்து தன் காதலை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தான்.

அவளாக வந்தால்தான், அவளுடைய முடிவில் உறுதியிருக்கிறது என்று நம்பி அடுத்த அடியை எடுத்து வைக்க முடியும் என்று நினைத்தான்.

அந்த நம்பிக்கையுடன் ஹோட்டலுக்குக் கிளம்பினான்.

ஜிஃப்ரான் ஹோட்டலுக்குச் சென்றதும் முதலில் மாதவன் செஃப்பைச் சந்தித்தான் பிரணவ்.

"செஃப், நான் அசைவ உணவுப் பிரிவுக்குப் போகச் சம்மதிக்கிறேன்,” என்றான்.

அவனுடைய முகத்தில் இருந்த தயக்கத்தைப் பார்த்த மாதவன், அவன் எவ்வளவு போராடி அந்த முடிவுக்கு வந்திருப்பான் என்பதைப் புரிந்துக் கொண்டார்.

“சரிப்பா. வா, முதல்ல அன்வர் சாரைப் பார்த்துட்டு வரலாம்.”

இருவரும் அன்வரின் அறைக்குச் சென்றனர்.

பிரணவ் சம்மதித்ததை அறிந்த அன்வர், தாமதிக்காமல் பணத்தை நிர்மலின் வங்கிக் கணக்கிற்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.

ஐந்து வருட ஒப்பந்தத்தில் எந்த மாற்றமும் இல்லை. வழக்கமான வேலையுடன் கூடுதல் பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதால், பிரணவுக்குக் கூடுதல் சம்பளமும் கிடைக்கவிருந்தது.

இதே வாய்ப்பு வேறு ஒருவருக்குக் கிடைத்திருந்தால், அதை ஒரு ஜாக்பாட்டாகவே நினைத்திருப்பார். ஆனால், பிரணவுக்கோ வேண்டாத தெய்வத்தைக் கண்டதுபோல இருந்தது.

அவன் மனதுக்குப் பிடிக்காத வேலையை ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. அதுவும் அம்மாவின் உயிரைக் காப்பாற்றுவதற்காக!

மாதவன் பிரணவை அழைத்துக்கொண்டு அசைவ உணவுப் பிரிவை நோக்கிச் சென்றார்.

முதல் நாள் பள்ளிக்குச் செல்லும் குழந்தையை அழைத்துச் செல்வதைப் போல, அவனை அங்கே அழைத்துச் சென்றார்.

அந்தப் பிரிவின் பொறுப்பில் இருந்த தலைமைச் சமையல்காரர் சலீமிடம் பிரணவை அறிமுகப்படுத்தினார்.

"அஸ்ஸலாமு அலைக்கும், பாய்!" என்று மாதவன் வாழ்த்த, சலீமும் புன்னகையுடன் பதிலளித்தார்.

"வஅலைக்கும் அஸ்ஸலாம், பாய்! சொல்லுங்க." மாதவன் பிரணவைக் காட்டினார்.

"பாய், நான் சொன்னேனே... நம்ம பையன். கொஞ்சம் பார்த்துக்கோங்க. இதுக்கு முன்னாடி இவன் அசைவம் சமைக்கிற கிச்சனுக்குப் போனதே இல்லை. இப்போ அன்வர் சார், இங்க ஆள் பற்றாக்குறை இருக்குன்னு உதவிக்கு அனுப்பியிருக்கார்.

எது சொன்னாலும் பொறுமையா சொல்லிக் கொடுங்க. பிரணவ் புரிஞ்சுக்குவான்." சலீம் பிரணவின் முகத்தைப் பார்த்துப் புன்னகைத்தார்.

"அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன், மாதவன். நீங்க கவலைப்படாதீங்க." என்ற பிறகு மாதவன் பிரணவின் தோளைத் தட்டிக் கொடுத்தார்.

"இதுக்கு மேல நீ தான் சகிச்சுக்கணும், பிரணவ். வேலைக்குப் போ. உங்கம்மாவுக்கு ஆபரேஷன் முடிஞ்சதும் நிர்மல் எனக்குப் போன் பண்ணச் சொல்லியிருக்கேன். எனக்குக் கால் பண்ணினதும் உன்கிட்டச் சொல்றேன்.

ஏதாவது அவசரம்னா பர்மிஷன் வாங்கிட்டு லாக்கருக்குப் போய் போனைப் பார்த்துக்கோ. சரியா?" என்றார் 

"சரிங்க, செஃப்."

மாதவன் அங்கிருந்து சென்றதும், பிரணவ் சலீமைப் பின் தொடர்ந்தான்.

அசைவ உணவுக் கிச்சனுக்குள் நுழைந்ததுமே அவனுடைய முகம் மாறியது.

அங்கே பலவிதமான இறைச்சிகள் தனித்தனியாக வைக்கப்பட்டிருந்தன. ஒரு பக்கம் இறைச்சியை வெட்டும் சத்தம், இன்னொரு பக்கம் பாத்திரங்கள் உருளும் ஓசை. அடுப்புகளில் கொதித்துக் கொண்டிருந்த உணவுகளிலிருந்து எழுந்த வாசனையோ அவனுடைய வயிற்றைப் புரட்டிப் போட்டது.

அந்த வாசனையைத் தாங்க முடியாமல் மூக்கைச் சுருக்கினான். உதடுகளை இறுக்கிக் கொண்டான். தொண்டைக்குள் குமட்டல் எழ, அதை அடக்குவதற்காகப் பெருமூச்சு விட்டான்.

எப்படிடா இங்கே வேலை செய்யப் போற? அவனுடைய மனமே அவனைக் கேள்வி கேட்டது.

“என்ன தம்பி, அப்படியே நின்னுட்ட? என்ன செய்யணும்னு தெரியலையா?” என்று சலீம் கேட்டார்.

பிரணவ் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழித்தான்.

அவன் முகத்தைப் பார்த்த சலீம் சிரித்தார். "மாதவன் பாய் உன்னைப் பத்திச் சொன்னார். ஆனா, தம்பி... அசைவ உணவுப் பிரிவுக்கு வந்துட்டு எட்டு மணி நேரமும் மூக்கைப் பொத்திக்கிட்டு நிக்க முடியாது. இங்க கழுவுறது, வெட்டுறது, சுத்தம் பண்றது எல்லாமே ரொம்ப முக்கியம்.

சமையலைப் பொறுத்தவரைக்கும், சில உணவுகளைச் செய்வது சைவத்தைவிட அசைவத்துல எளிதா இருக்கலாம். ஆனா, செய்முறையில ஒரு சின்ன தவறு நடந்தால்கூட மொத்த உணவோட சுவையும் மாறிடும். அதனால முதல்ல சின்னச் சின்ன வேலைகளில் ஆரம்பிச்சு உனக்குச் சொல்லிக் கொடுக்கிறேன்.

"எதுவா இருந்தாலும் சுத்தம், சுறுசுறுப்பு, கவனம்... இந்த மூணும் முக்கியம். புரியுதா?"

"புரியுது, செஃப்" என்றான் பிரணவ்.

சலீம் உடனே அவனைத் திருத்தினார்.

"செஃப்பா. என்னை பாய்னு கூப்பிடு"

"சரிங்க... பாய்" என்று அவசரமாகத் திருத்திக் கொண்டான் பிரணவ்.

அவனுடைய முகத்தில் இன்னமும் தயக்கம் மிச்சமிருந்தது.

அம்மாவைக் காப்பாற்றுவதற்காக அவன் எடுத்த முடிவு சரியானதுதானா என்று மனம் கேட்டுக்கொண்டே இருந்தது. ஆனால், இப்போது பின்வாங்க முடியாது.

அவன் ஆழமாக ஒரு மூச்சை இழுத்துவிட்டு, சலீம் காட்டிய வேலையைக் கவனிக்கத் தொடங்கினான்.

அந்தக் கிச்சனில் அவனுடைய முதல் நாள் தொடங்கியது.

அது வெறும் புதிய வேலைக்கான முதல் நாளா? இல்லை, தன்னுடைய போராட்டத்தின் முதல் நாளே ஒட்டமெடுக்க கூடியதா அவனுக்கே தெரியவில்லை.

-தொடரும்.

-பிரவீணா தங்கராஜ் 


 
Posted : October 21, 2026 7:38 am
(@guna-sundari)
Posts: 183
Estimable Member
 

Omg Pranav u did a big decision foe ur mother. But if u survive here u will get diya love also. Very intresting sis 


 
Posted : October 21, 2026 9:39 am
(@crvs2797)
Posts: 235
Reputable Member
 

மொஹபத் முதல், நிக்காஹ் வரை!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 17)

ரொம்பவே பாவம் தான் பிரணவோட நிலைமை. அசைவம் பக்கமே போகாதவன், அதையே வெட்டணும், சுத்தப்படுத்தணும், கழுவணும், சமைக்கணும்ன்னா..
ரொம்பவே சகிப்புத்தன்மை வேணும் தான். சமைக்க கூட செஞ்சிடலாம். மத்ததெல்லாம் தான் சகிச்சுக்கணும். ம்.. பணம் பத்தும் செய்ய வைக்கும் என்கிற மாதிரி, குடும்ப நிலைமை எப்படிப்பட்ட வேலையையும் செய்ய வைக்கும் போல.

ஆனால், இந்த புது முயற்சி எல்லாமே ப்ரணவை தியானாவை நோக்கி ஒரு அடி முன்னெடுத்து வைக்க விதி வலி நடத்துதோ என்னவோ ? காரண காரியம் எதுவும் நடக்காதாம்.

😴😴😴
CRVS (or) CRVS2797


 
Posted : October 22, 2026 6:31 pm

Scroll to Top