Forum

மௌஹபத் முதல் நிக்கா...
 
Notifications
Clear all

மௌஹபத் முதல் நிக்காஹ் வரை-16

3 Posts
3 Users
0 Reactions
15 Views
(@praveena-thangaraj)
Posts: 315
Member Admin
Topic starter
 
[#406]

அத்தியாயம்-16

மறுநாள் வேலைக்கு வந்த பிரணவின் மனம் முழுவதும் அம்மாவின் நினைவிலேயே இருந்தது.

ஜிப்ரான் சைவ உணவு தயாரிக்கும் இடத்தில் வழக்கம்போல் வேலைகள் பரபரப்பாக நடந்துக் கொண்டிருந்தன. ஆனால், அவனுடைய கவனம் மட்டும் அவ்வப்போது கைப்பேசியை நோக்கிச் சென்றது. வீட்டிலிருந்து ஏதாவது அழைப்பு வந்துவிடுமோ, அம்மாவின் உடல்நிலை குறித்துப் புதிய தகவல் கிடைக்குமோ என்ற தவிப்பு அவனை நிம்மதியாக இருக்கவிடவில்லை. அப்படியே வந்தாலும் போன் லாக்கரில் உள்ளதால் இத்தோடு மாலை தான் திறக்க வேண்டுமே அதுவரை மனம் அடித்துக் கொண்டது.

பிரேக் நேரம் வந்ததும், தன்னுடைய மேலதிகாரியான மாஸ்டர் செஃப் மாதவனைச் சந்திக்கச் சென்றான்.

"சார், உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்." பிரணவின் முகத்தில் தெரிந்த கவலையைப் பார்த்த மாதவன் அவனை நிமிர்ந்து நோக்கினார்.

"சொல்லு பிரணவ். என்ன விஷயம்?" என்றவர் பிரேக் டைம் முடிவதற்கு இன்னும் எத்தனை மணி நேரம் எஞ்சியது என்றதையும் கவனித்தில் கொண்டார்.

"சார், எங்க அம்மாவுக்கு உடம்பு ரொம்ப மோசமாகிடுச்சு. ஹார்ட் அட்டாக் வந்திருக்கு. இதயத்துல ரெண்டு மூணு இடத்துல அடைப்பு இருக்குன்னு டாக்டர் சொல்லியிருக்காங்க. ஆபரேஷன் செய்யணும்னு சொல்லியிருக்காங்க சார்." அவன் குரல் தழுதழுத்தது.

"அதுக்கு நிறையப் பணம் தேவைப்படுது. இப்போதைக்கு என்னால அவ்வளவு பணத்தை ஏற்பாடு செய்ய முடியலை. அதான் உங்ககிட்ட என் சேலரியோட முன்பணம் கேட்கலாம்னு வந்தேன் சார். என்னோட சம்பளத்துல இருந்து கொஞ்சம் கொஞ்சமா பிடிச்சுக்கோங்க. ப்ளீஸ் சார்!" என்றான்.

மாதவன் சற்று யோசித்துவிட்டு அவனைப் பார்த்தார். "நீ வேலைக்குச் சேர்ந்து ஆறு மாசம் கூட முடியலையே, பிரணவ்?"
 
"ஏழாவது மாசம் ஆரம்பிச்சிருச்சு சார்."

"அதைத்தான் சொல்றேன். இன்னும் ஒரு வருஷம் கூட முடியலை. அதுக்குள்ள சம்பளத்தோட முன்பணம் கேட்கிறியே. எல்லாருக்கும் இங்க சில விதிமுறைகள் இருக்கு. நீ கேட்கிற மாதிரி உடனே பணம் கொடுத்துட முடியுமா? இதென்ன நம்ம ஊரா?"‌ பிரணவின் முகம் வாடியது.

"சார், நான் புரிஞ்சுக்கிறேன். ஆனா, இது சாதாரணச் செலவு இல்லை சார். அம்மாவோட உடல்நிலை மோசமாகியிருக்கு. ஹார்ட் அட்டாக்னு சொன்னதும் எங்க குடும்பமே நிலைகுலைஞ்சு போயிடுச்சு. இப்போ கையில காசு இல்லாம என்ன பண்றதுன்னு தெரியலை." அவன் குரலில் இருந்த வேதனை மாதவனையும் சற்று அசைத்தது.

"வேலைக்குச் சேர்ந்து ஒரு வருஷம் முடியட்டும், அப்புறம் பார்த்துக்கலாம்னு சொல்ல முடியாத நிலைமை சார். கஷ்டப்படுற நேரத்துலதான் இப்படி எல்லாம் வருது. ப்ளீஸ் சார்... எனக்கு உதவி பண்ணுங்க. நீங்க கொடுக்கிற பணத்தை என் சம்பளத்துல இருந்து பிடிச்சுக்கோங்க. இனிமேல் இன்னும் அதிகமா உழைச்சு வேலை செய்வேன்." மாதவன் பெருமூச்சு விட்டார்.

"சரி, பிரணவ். நான் மேனேஜர் அன்வர்கிட்ட பேசிப் பார்க்கிறேன். அவர்தான் முடிவு எடுக்கணும்." சிறிது நேரம் தயங்கியவர், பின்னர் அவனுடைய தோளில் தட்டினார்.

"நீ நம்ம ஊர்க்காரன். அதனால உனக்கு என்னால முடிஞ்ச உதவியைச் செய்யணும்னு நினைக்கிறேன். ஆனா, இங்கே சில முடிவுகளை நான் மட்டும் எடுக்க முடியாது. என்னால முடிஞ்சதைச் செய்கிறேன்."
அவருடைய வார்த்தைகள் பிரணவுக்குச் சிறிய நம்பிக்கையைக் கொடுத்தன.

"ரொம்ப நன்றி சார்"  அவன் நன்றியுடன் தலையசைத்துவிட்டு அங்கிருந்து சென்றான்.

மாதவன் மேனேஜர் அன்வரை உடனடியாக சந்தித்தார். "சார், ஒரு விஷயம் பேசணும்."

"சொல்லுங்க மாதவன்." என்று பணியை கவனித்தவாரு "நம்ம வெஜிடேரியன் கிச்சன்ல வேலை பார்க்கிற பிரணவ், அவங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லாததால முன்பணம் கேட்டிருக்கான். ஹார்ட் அட்டாக் வந்திருக்காம். ஆபரேஷன் செய்யணும்னு டாக்டர் சொல்லியிருக்காராம்." அன்வர் உடனே சம்மதிக்கவில்லை.

"மாதவன், அவன் வேலைக்குச் சேர்ந்து எத்தனை மாசம் ஆகுது? அதுக்குள்ள எந்த நம்பிக்கையில நான் தருவேன். அதுவுமில்லாம இந்த மாதிரி பழக்கமெல்லாம் எனக்கு கிடையாது. அது உங்களுக்கு தெரியாதா? இந்த ஜிப்ரான் ஹோட்டல்ல இந்த விஷயம் என்‌ காதுக்கே வந்திருக்க கூடாது." என்றார்.

"சார்.. எங்க ஊர் பையன். வந்து ஏழு மாசம் தான் ஆகுது. ஆனா சம்பளத்துல பிடிக்க சொல்லறான் சார். அவன் இங்க தான் ஐந்து வருடம் வேலை பார்க்க அக்ரிமெண்ட் இருக்கு. அதனால பயப்பட வேண்டியதில்லை." என்றார்.

"இப்போ முன்பணம் கொடுத்தா, அதுக்குப் பிறகு என்ன உத்தரவாதம்? அவன் தொடர்ந்து வேலையை ஒழுங்கா செய்வானா? வேலையில் சொதப்பினா நான் வேலை விட்டு தூக்கவும் முடியாது. எதை நம்பி எப்படிப் பணம் கொடுக்கிறது?'  மாதவன் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.

அன்வர் மீண்டும் பேசத் தொடங்கினார். "அதுவும் இப்போ நம்ம அசைவ உணவுப் பிரிவுல ஆட்கள் பற்றாக்குறை. கூடுதலா ஆள் எடுக்கச் சொன்னாலும் இன்னும் ஏற்பாடு செய்ய முடியலை. அதனால ஆர்டர்கள் டெலிவரி ஆகிறதுல தாமதம் ஏற்படுது. கஸ்டமர்கள் புகார் சொல்றாங்க. ரேட்டிங்ஸும் குறையுது. இந்த நிலைமையை முதல்ல சரிசெய்யணும்." சற்று நிறுத்தியவர், மாதவனை நேராகப் பார்த்தார். வியாபார யுக்தி கண்டவர் சட்டென கணக்கிட்டு கொண்டார்.

"சரி, அவசரத்துக்குப் பணம் கேட்கிறான்னு சொல்றீங்க. எவ்வளவு தேவைப்படுதாம்?"

"அவனுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு உதவி கிடைச்சாலும் பெரிய விஷயம், சார்." அன்வர் சில நொடிகள் யோசித்தார்.

"சரி. அவனுக்குப் பணம் கொடுக்கலாம்."  மாதவனின் முகத்தில் நிம்மதி தோன்றியது.

ஆனால், அடுத்ததாக அன்வர் சொன்ன வார்த்தைகள் அந்த நிம்மதியை நீடிக்கவிடவில்லை.

"ஆனா, அது முன்பணம் கிடையாது. அவனுக்குக் கொடுக்கிற சம்பளம்தான். கூடுதல் வேலை செய்வதற்கான சம்பளமாகக் கணக்கிட்டுக்கலாம். அதற்குப் பதிலா அவனை வெஜிடேரியன் கிச்சன்ல இருந்து அசைவ உணவுப் பிரிவுக்கு மாற்றுங்க. அங்கே உதவியாளரா வேலை பார்க்கட்டும்." மாதவன் அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்தார்.

"சார்... பிரணவ் அசைவ உணவு சமைக்க மாட்டேன்னு ஏற்கெனவே சொல்லியிருக்கான். அவன் ப்யூர் வெஜிட்டேரியன் சமைக்கறவன். ஆச்சாரமா வளர்ந்தவன்." என்று புரிய வைக்க முயன்றார்.

"அவன் இந்து சமூகம் அசைவத்தை சாப்பிடாதவன்னு எனக்குத் தெரியும். ஆனா, நம்ம ஹோட்டலுக்கு வர்ற கஸ்டமர்களுக்குச் சரியான நேரத்துல உணவு கிடைக்கணும். அதுதான் நமக்கு முக்கியம். அவனுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கிறோம். அவனும் இதை ஒரு வாய்ப்பா எடுத்துக்கணும்.
   இங்க பாருங்க... மாதவன் பிசினஸ் என்று வந்துட்டா. எதையும் பார்க்க கூடாது. அதுவும் பணம் தேவைப்படற இடத்துல இருந்து கொள்கையையோ கோட்பாட்டையோ தளர்த்தறது தான் புத்திசாலித்தனம். நான் ஒன்னும் அவனை சாப்பிட வச்சி பாவம் சேர்த்துக்க சொல்லலையே. கட் மண்ணவோ க்ளீன் பண்ணவோ உதவியாளரா தானே வேலை பார்க்க நியமிக்க சொல்லறேன்.
  ஏன் மாதவன் ஆக்டர் மாதவன் சினிமாவுக்காக நான்வெஜ் சாப்பிடற மாதிரி சீன் வைக்கலையா? இல்லை நீங்க தான் விஸ்கிக்கு சைட் டிஷ்ஷா என்வியை எடுத்துக்கலையா. எல்லாம் சூழ்நிலைக்கு அவனுக்கு வேலை தானே" என்றார்.

"ஆனா.., அவன் இதுக்கு ஒத்துக்குவானான்னு தெரியலையே, சார்." மாதவன் கூடுமானளவு கையை பிசைந்து நின்றார்.

அன்வரோ "அதை அவன்கிட்ட நீங்க பேசுங்க. அவனுடைய குடும்பச் சூழ்நிலையை நினைச்சுப் பார்த்து முடிவெடுக்கச் சொல்லுங்க. பணம் அவனுக்குக் கிடைக்கும். அதே நேரத்துல நம்ம பிரச்சனையும் தீரும்." அன்வர் தன்னுடைய முடிவைத் தெளிவாகச் சொல்லிவிட்டு அடுத்த வேலையைக் கவனிக்கச் சென்றார்.

மாதவன் மட்டும் அங்கேயே நின்றார். பிரணவின் நிலைமை அவருக்குப் புரிந்தது. அம்மாவின் மருத்துவச் செலவுக்காகப் பணம் தேவைப்படும் நேரத்தில், அவனுடைய கொள்கைக்கு எதிரான ஒரு வேலையை ஏற்றுக்கொள்ளச் சொல்வது எளிதான விஷயமல்ல.

ஆனால், நிர்வாகத்தின் முடிவையும் அவரால் மீற முடியாது. இந்தளவு அன்வர் பேசியதும் முன்பணம் தருவதாக கூறியதுமே பெரிய விஷயம். இந்த ஜிப்ரானில் இது போன்ற பிரச்சனை இதற்கு முன் வந்ததில்லை. இதுவே முதல்முறை. பிரணவ் போன்றவன் பணம் கேட்பதும், நான்வெஜ் உணவு முறை செய்யும் இடத்தில் ஆட்கள் குறைவதால் வேலை பாதிப்பு ஏற்படுவதும்.

பிரணவ் மீண்டும் மதிய உணவு நேரத்தில் சோகமாய் அமர்ந்திருக்க, மாதவனே  சந்திக்க வந்தார்.

அவரை கண்டதும் வேகமாய் எழுந்தான்.

"சார், மேனேஜர் என்ன சொன்னார்?" மாதவன் அவனைப் பார்த்துவிட்டு ஒரு கணம் அமைதியாக இருந்தார்.

''இது போல இதுக்கு முன்ன நடவ்ததில்லை பிரணவ். அன்வர் சார் உனக்கு பணம் கொடுக்கச் சம்மதிச்சிருக்கார், பிரணவ்." பிரணவின் முகம் மலர்ந்தது.

"நிஜமாவா சார்? ரொம்ப நன்றி. எவ்வளவு நன்றியோட இருப்பேன்னு எனக்கே தெரியலை. அம்மாவுக்கு உடனே பணம் அனுப்பிடலாம்." அவனுடைய மகிழ்ச்சியைப் பார்த்த மாதவனுக்குத் தொடர்ந்து பேசவே தயக்கமாக இருந்தது.

"ஆனா, அதுக்கு ஒரு நிபந்தனை இருக்கு." பிரணவின் புன்னகை மெல்ல மறைந்தது.

"என்ன சார் நிபந்தனை?" என்று கேட்டான்.

'உன்னை வெஜிடேரியன் கிச்சன்ல இருந்து அசைவ உணவுப் பிரிவுக்கு மாற்றச் சொல்லியிருக்கார். அங்கே இப்போ ஆட்கள் பற்றாக்குறை. கூடுதல் வேலை செய்வதற்கான சம்பளமா உனக்குப் பணம் கொடுக்க ஏற்பாடு செய்யலாம் என்பது தான் அவருடைய முடிவு." அந்த வார்த்தைகளைக் கேட்டதும் பிரணவ் உறைந்து போனான்.

அவன் எதிர்பார்த்தது பணம் கிடைக்கும் என்ற செய்தியை மட்டும்தான். ஆனால், அந்தப் பணத்துக்குப் பின்னால் இப்படி ஒரு நிபந்தனை இருக்கும் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.

"சார்... நான் அசைவ உணவு சமைக்க மாட்டேன்னு உங்களுக்குத் தெரியுமே. நான் அசைவம் சாப்பிடறதும் இல்லை.. செய்யறதும் இல்லை. நான்..நானும் உங்களை மாதிரி தான் சார்" என்று மாதவன் இனமென இலைமறையாக சுட்டிக்காட்டினான்.

"அடேய்.. அதெல்லாம் தெரியும், பிரணவ். அதனாலதான் உன்கிட்ட இதை எப்படிச் சொல்றதுன்னு யோசிச்சேன். ஆனா, மேனேஜர் எடுத்த முடிவு இதுதான்." என்றார்.

"வேற ஏதாவது வழி இல்லையா, சார்? நான் கூடுதல் நேரம் வேலை பார்க்கிறேன். வெஜிடேரியன் கிச்சன்ல வேற ஏதாவது பொறுப்பு கொடுத்தாலும் செய்யத் தயாரா இருக்கேன்."

"நான் உன்னுடைய நிலைமையை அவர்கிட்ட சொல்லிப் பார்த்தேன். ஆனா, அவருக்கு இப்போ அசைவ உணவுப் பிரிவுல ஆள் தேவைப்படுது. அதனாலதான் இந்த நிபந்தனையை வச்சிருக்கார்." பிரணவ் எதுவும் பேசவில்லை.

அம்மாவின் முகம் அவன் கண்களுக்கு முன்னால் வந்தது.

மருத்துவமனையில் சிகிச்சைக்காகக் காத்திருக்கும் அம்மா. பணத்தை எப்படி ஏற்பாடு செய்வது என்று தவித்துக்கொண்டிருக்கும் அண்ணன். தன்னுடைய உதவிக்காக எதிர்பார்த்திருக்கும் குடும்பம். அவர்களுக்காக அவன் ஏதாவது செய்தாக வேண்டும். ஆனால், அதற்காகத் தன்னுடைய கொள்கையை விட்டுக்கொடுக்க முடியுமா? அவனும் இந்த பழக்கவழக்கமெல்லாம் செய்யாத விதிமுறைக்குள் தான் சொல்லி வளர்த்தார்கள்.

அசைவ உணவு சமைக்கக் கூடாது என்ற முடிவை அவன் சாதாரணமாக எடுத்திருக்கவில்லை. அது அவனுடைய தனிப்பட்ட நம்பிக்கையோடும் மனசாட்சியோடும் தொடர்புடையது.

இப்போது அதே முடிவு அவனுடைய குடும்பத்துக்கு உதவுவதற்குத் தடையாக நிற்கிறது.

'அம்மாவா... என் கொள்கையா?'
அந்தக் கேள்வி அவனுடைய மனதை இரண்டாகப் பிளந்தது.

அம்மாவின் உயிரைவிடத் தனக்குக் கொள்கை முக்கியமா? என்ற குற்றவுணர்வு ஒருபுறம் அவனை வாட்டியது.

அதே நேரத்தில், மனசாட்சிக்கு எதிராகச் செய்யும் ஒரு காரியத்தைப் பணத்துக்காக ஏற்றுக்கொள்வது சரியா என்ற கேள்வியும் அவனை விடவில்லை. மாதவன் அவனுடைய முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்.

“பிரணவ், அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காதே. நல்லா யோசிச்சுப் பாரு. உன்னுடைய சூழ்நிலையை நான் புரிஞ்சுக்கிறேன். ஆனா, முடிவு உன்னுடையதுதான்.”

பிரணவ் மெதுவாகத் தலையசைத்தான்.

"கொஞ்சம் யோசிக்கணும் சார்" என்றான்.
மாதவனோ "நீ யோசிக்கற இடத்துல இல்லை பிரணவ். அன்வர் சார் மனசு மாறுறதுக்கு முன்ன வேலைக்கு ஓகே சொல்லிட்டு பணத்தை வாங்கி ஊருக்கு அனுப்பு. அதான் நல்லது. நேரம் கடத்தினா, வேலைக்கு யாராவது வந்துட்டா, இந்த ஆஃபரும் கிடைக்காது.
   நீ நம்ம பையன் என்பதால சொல்லறேன். நம்மாளுங்க எல்லாம் முட்டை சிக்கன் மீன்னு சாப்பிட ஆரம்பிச்சு பல காலம் ஆகுது. வீட்ல வேண்டுமின்னா ஆச்சாரமா இருந்துக்கலாம். அதுவும் இந்த மாதிரி ஹோட்டலில் சிலதை தகர்த்தி வேலை பார்க்கலாம். என்னையே எடுத்துக்கோ.. பிசினஸ் மீட்டிங்னு சுறா சிக்கன் மீன் எல்லாம் சாப்பிட்டுயிருக்கேன். ஏன் ஒட்டக்கறியே சாப்பிட்டதுண்டு. எல்லாம் பழகிடும்" என்றார்.

அவன் தயங்கி நிற்க, மாதவனோ நாளை காலை வரை டைம்" என்று வேலைக்கான நேரம் வந்துவிட்டதென சுட்டிக் காட்டினார். பிரணவும் தலையாட்டினான்.
அவனுடைய கால்கள் சமையலறையை நோக்கி நடந்தாலும், மனம் மட்டும் வீட்டை நோக்கிப் பறந்துக் கொண்டிருந்தது.

அம்மாவைக் காப்பாற்றுவதற்காக அவன் என்ன செய்யப் போகிறான்?

தன்னுடைய கொள்கையை மாற்றிக்கொள்வதா? அல்லது வேறு வழி தேடுவதா? முதலில் வேறு வழி இங்கே எங்குள்ளது?

அவனுக்கே தெரியவில்லை. ஆனால், இந்த முறை அவன் எடுக்கும் முடிவு அவனுடைய வாழ்க்கையை மட்டுமல்ல... அவனுடைய குடும்பத்தின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கப் போகிறது. இதில் தியானாவை பற்றி அவன் முற்றிலும் மறந்திருந்தான். அந்தளவு அன்னையின் ஆட்சி அவனிடத்தில் சிக்கியிருந்தது.

-தொடரும்.


 
Posted : October 20, 2026 10:58 am
(@guna-sundari)
Posts: 183
Estimable Member
 

Very tuff situation for piranav. What will he decide? Very intresting sis 


 
Posted : October 20, 2026 11:43 am
(@crvs2797)
Posts: 235
Reputable Member
 

மொஹபத் முதல், நிக்காஹ் வரை!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 16)

கரெக்ட்டா செக் வைச்சாங்க பாரு. இப்ப அம்மாவோட உயிரா, இல்ல இவனோட வீணாப்போன கொள்கையான்னு கேட்டால், நிச்சயம் அம்மா பக்கம் தான் சாயும் மனசாட்சி.

எல்லாருமே சந்தர்ப்பம் கிடைத்தால் வாய்ப்புகளை பயன்படுத்திகொள்வது தானே புத்திச்சாலித்தனம். கொன்றால் பாவம் தின்றால் போச்சு அவ்வளவு தானே...?

😴😴😴
CRVS (or) CRVS2797


 
Posted : October 20, 2026 1:45 pm

Scroll to Top