பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-7
அத்தியாயம்-7
சாரதி சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு, வேகமாக அவர்களை நோக்கி ஓடி வந்தான்.
அவனை அப்படி திடீரென ஓடி வருவதைக் கண்ட லாவண்யா பகீரென்று ஒரு அடி பின்னால் நகர்ந்தாள்.
ஆனால் சாரதியின் பார்வை அவளைத் தாண்டி பின்னால் சென்றது.
அங்கே இஷிதா தரையில் சரிந்து கிடந்தாள். "பாப்பா.. பாப்பா" என்று பதறியவன் உடனே அவளருகில் மண்டியிட்டான்.
"என்னம்மா பண்ணுது? பாப்பா... கண்ணைத் திறம்மா." என்று இஷிதாவை மெதுவாக உலுக்கிய போதுதான் லாவண்யாவுக்கும் பின்னால் விழுந்து கிடந்த இஷிதாவே கண்ணில் பட்டாள்.
"இஷிதா... ஏய்... என்னாச்சு?" என்று பதறியவள் அவளருகில் குனிந்தாள்.
இஷிதாவின் முகத்தில் சோர்வு தெரிந்தது. கண்களைத் திறக்கவே அவளால் சிரமப்பட முடிந்தது. "த... தண்ணி இருக்கா?" என்று சாரதி அவசரமாகக் கேட்டான்.
லாவண்யா உடனே தன்னுடைய பையைத் தேடினாள். இல்லை.
"இல்ல..." என்று தலையசைத்தாள்.
"சைக்கிள் கெரியர்ல வாட்டர் பாட்டில் வச்சிருக்கேன். அந்த பாட்டிலை எடுங்க." என்று சாரதி கையால் சைக்கிளை சுட்டிக் காட்ட, தேவி ஓடிச்சென்று பாட்டிலை எடுத்துக் கொண்டு வந்தாள்.
"இந்தாங்க." என்றதும் சாரதி பாட்டிலை வாங்கி, சிறிது தண்ணீரை இஷிதாவின் முகத்தில் தெளித்தான்.
"பாப்பா... கண்ணை நல்லா திற." இஷிதா மெல்லக் கண்களைத் திறக்க முயன்றாள்.
"தண்ணி குடு." பாட்டிலை அவளது வாயருகே வைத்ததும், இஷிதா மடக் மடக்கென்று சப்பி தண்ணீர் குடித்தாள்.
"மெதுவா குடி... அவசரப்படாத.". சில மடக்குகள் குடித்த பிறகு அவளது முகத்தில் சற்று தெளிவு வந்தது.
"இப்ப எப்படிம்மா இருக்கு?" என்றான் கருணையோடு.
"அப்பவே தாகமெடுத்தது அண்ணா..." என்று மெதுவாகச் சொன்னாள் இஷிதா. "வாட்டர் பாட்டில் கொண்டு வரலை. வீடு கிட்டதானே இருக்கு... வீட்டுக்குப் போய் தண்ணி குடிக்கலாம்னு நினைச்சேன். ஆனா... மயக்கம் மாதிரி வந்து கீழ விழுந்துட்டேன்." என்றாள்.
"என்கிட்ட கேட்டிருந்தா நான் கடையிலயாவது தண்ணி, ஜூஸ் வாங்கித் தந்திருப்பேன்ல." என்று லாவண்யா வருத்தத்துடன் சொன்னாள்.
"வீடுகிட்ட இருக்குனு தண்ணி கேட்கலை அக்கா." என்றாள் இஷிதா.
"இப்ப பாரு... நடுரோட்ல மயங்கி விழுந்திருக்க. சித்தி சித்தாப்பாவுக்கு தெரிந்து இதை பார்த்தா என்னைத் திட்டுவாங்க." என்றாள். இல்லையா பின்னே லாவண்யாவை நம்பி அல்லவா இஷிதாவை இலக்கியா அனுப்பியது. அந்த பொறுப்பில் இந்த தவறு நிகழ்ந்த கோபம்.
"குழந்தையை ஏன் திட்டறீங்க?" என்று சாரதி மெதுவாகக் கேட்டான்.
அவன் குரலில் இருந்த கண்டிப்பு லாவண்யாவை அமைதியாக்கியது.
"வீடு கிட்ட இருக்குன்னு நினைச்சு தண்ணி கேட்காம இருந்திருப்பா. சின்ன குழந்தைதானே." என்று பரிவாய் இஷிதாவை பார்த்தவன், "இப்ப பரவாயில்லையாமா?" என்றான்.
"ம்ம்..." என்று தலையசைத்தாள் இஷிதா.
"சரி. கொஞ்சம் நிதானமா போ. உடம்பு முடியலன்னா கூட வந்த பெரியவங்களிடம் சொல்லணும். சரியா?" என்றதும் இஷிதா தலையாட்டினாள்.
"சரி... பார்த்துப் போ பாப்பா." என்று சாரதி எழுந்து நின்றான். அப்போதுதான் அவன் சுற்றிலும் பார்த்தான்.
அவன் சைக்கிள் நிறுத்தியிருந்த இடம் வெறுமையாக இருந்தது. ஒரு நொடி அவனுக்கு எதுவுமே புரியவில்லை.
"அச்சோ..." அவனது முகம் மாறியது. "எ.. என்னாச்சு?" என்று லாவண்யா கேட்டாள்.
"சைக்கிளை காணோம்ங்க." என்றவன் சுற்றிலும் பார்த்தான்.
"பச் யாரோ திருடியிருக்காங்க" சைக்கிளைக் காணோம்." என்றாள்.
தேவி உடனே, "இங்கதானே வச்சிருந்தீங்க?"
"ஆமா... தண்ணி எடுக்கறப்ப இங்கதான் இருந்தது." என்றான்.
சாரதி நான்கு பக்கமும் பார்த்தான்.
சாலை பெரும்பாலும் வெறிச்சோடியிருந்தது.
"நாலு தெருவும் காலியா இருக்கு... அதுக்குள்ள யார் களவாடியது?" என்று தேவி அதிர்ச்சியுடன் கேட்டாள்.
சாரதி பதில் சொல்லவில்லை. அவன் பார்வை அந்த வெற்றிடத்திலேயே நிலைத்திருந்தது.
"சாரி..." என்று லாவண்யா மெதுவாகச் சொன்னாள். "எங்களால தானே நீங்க சைக்கிளை தொலைச்சுட்டு நிற்கிறீங்க." சாரதியின் காதில் அந்த வார்த்தை விழுந்ததா இல்லையா என்பதே தெரியவில்லை.
அவன் அப்படியே துவண்டு நின்றான். அது வெறும் சைக்கிள் இல்லை. அது அவனுடைய அப்பா சண்முகம் பயன்படுத்திய சைக்கிள்.
ஒரு காலத்தில் அந்தச் சைக்கிளை அவன் வெறுத்திருக்கிறான்.
சாரதிக்கு பதினெட்டு வயது ஆனதும், "அப்பா... எனக்கு ஒரு பைக் வாங்கித் தாங்க." என்று எத்தனை முறை கேட்டிருப்பான்.
ஒவ்வொரு முறையும் சண்முகம் சிரித்தபடி, "அடப்போடா... இப்ப அதான் குறை. நானே சைக்கிள்லதான் போறேன். நீ சம்பாதிச்சு பைக் வாங்கு. அவ்ளோதான் உங்கப்பா வசதி." என்று சொல்லிவிடுவார்.
அந்த வயதில் அது அவனுக்கு கோபமாக இருக்கும். அப்பாவின் சைக்கிளை கடந்து செல்லும் போதெல்லாம் வேண்டுமென்றே சைக்கிளை எட்டி உதைத்து, தன்னுடைய கோபத்தை தீர்த்துக் கொண்ட நாட்களும் உண்டு.
ஆனால்... அப்பா இறந்த பிறகு?
அதே சைக்கிள் அவனுக்கு அப்பாவைப் போலவே நெருக்கமானதாகி விட்டது.
அதைப் பார்த்தாலே தந்தை சண்முகம் நினைவுக்கு வருவார். சைக்கிளில் தந்தையின் நெருக்கத்தை கண்டவன்.
அந்த சைக்கிளை இழந்துவிட்டால், அப்பாவின் கடைசி நினைவுகளில் ஒன்றையும் இழந்துவிடுவது போல இருந்தது.
சாரதியின் கண்கள் கலங்கின. அவன் மெதுவாக மண்டியிட்டு ஓரமாக அமர்ந்தான்.
சுற்றியிருந்த சாலை, கடைகள், மனிதர்கள்... எல்லாமே அவனுக்கு வெறுமையாகத் தெரிந்தது. போவோர் வருவோர் வேடிக்கை பார்த்தவர்களும் கிளம்பியிருந்தனர். புதிதாக அவனை காண்போர் என்ன இது' நடுரோட்டில் இப்படி அமர்ந்திருக்கின்றான் என்று சாடும் அளவிற்கு அவன் நிலையின்றி அமர்ந்திருந்தான்.
"கடவுளே..." அவனது உதடுகள் நடுங்கின.
"முதல்ல எங்கப்பாவை என்னிடமிருந்து பிரிச்ச... இப்ப அவர் நினைவையும் என்னிடமிருந்து பிரிக்கப் பார்க்கறியா?" என்று மனதிற்குள் கண்ணை மூடி கதறினான்.
"எனக்கு அந்த சைக்கிள் வேணும்.. எங்கிருந்தாலும் கொண்டுட்டு வா.." அது ஒரு வேண்டுதலாக மாறியது.
ஆனால் வேண்டிக் கொண்டால் மட்டும் தொலைந்த சைக்கிள் திரும்பி வந்துவிடுமா?
இல்லையே...
பத்து... பதினைந்து நிமிடங்கள் மனதுக்குள் போராடியவன், இறுதியில் கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்தான்.
"எங்காவது இருக்கணும்..." என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டவன், அக்கம் பக்கமாகத் தேட ஆரம்பித்தான்.
அவனுடைய நிலையைப் பார்த்த லாவண்யாவின் மனம் மேலும் கனத்தது.
தேவி அவளது கையைப் பிடித்தாள்.
"நாம போகலாம் லாவண்யா." லாவண்யா கையை உதறினாள்.
"இல்லைடி. அவர்." என்று சாரதியை சுட்டிக்காட்ட "என்ன இல்லை? அவர் லைப் அவர் பார்த்துப்பார்' என்று அழைத்தாள்.
"அவர் இஷிதாவுக்காக சைக்கிளை நிறுத்திட்டு தண்ணி எடுக்கப் போனாரு. இஷிதாவை கவனிச்சதும் தான் சைக்கிள் காணோம்னு பார்த்தாரு. இப்ப நாம ஒரு தேங்க்ஸ் கூட சொல்லாம போயிட்டா... அவர் என்ன நினைப்பாரு?"
"அதுக்கு நாம என்ன செய்ய முடியும்? சைக்கிளை நாம எடுக்கலையே." என்றாள்.
"அது தெரியும். ஆனா... அவர் உதவி செய்தாரே." என்றாள் லாவண்யா.
"லாவண்யா... அங்க பாரு. அவர் பாட்டுக்கு தலையைப் பிடிச்சிட்டு உட்கார்ந்துட்டாரு. இதுக்கு மேல நாம என்ன செய்ய? உங்க சித்தி வேற பூங்கா மூடறதுக்கு முன்ன இஷிதாவைக் கூட்டிட்டு வரச் சொன்னாங்க. ஏற்கனவே லேட்." என்றாள்.
இஷிதாவும் மெதுவாக லாவண்யாவின் கையைப் பிடித்தாள்.
"அக்கா... வீட்டுக்குப் போகலாமா? படுக்கணும் போல இருக்கு." என்று லாவண்யா அவளைப் பார்த்தாள்.
மனம் போக மறுத்தது. உதவி செய்தவரை விட்டு இப்படி தனியாகத் தவிக்கும் ஒருவரை விட்டுவிட்டுச் செல்வது சரியாகத் தோன்றவில்லை.
ஆனால் தேவி இஷிதாவையும் அழைத்துக் கொண்டு அவளை இழுத்துச் சென்றாள்.
சாரதியோ அவர்கள் சென்றதையே கவனிக்கவில்லை.
அவன் இன்னும் சைக்கிளைத் தேடிக் கொண்டிருந்தான்.
---
வீட்டிற்கு வந்ததும் இஷிதாவை கவனித்த இலக்கியா, அவளுக்கு சோர்வாக இருப்பதையும் உடலில் தண்ணீர் சத்து குறைந்திருப்பதையும் புரிந்து கொண்டார்.
முகம் அலம்பச் சொல்லி, கொஞ்ச நேரம் படுத்திருக்க வைத்தார்.
பிறகு எலுமிச்சைப் பழத்தில் உப்பும் சர்க்கரையும் கலந்து கொடுத்தார்.
இஷிதா அதை மெதுவாகக் குடித்துக் கொண்டிருக்க, லாவண்யா மட்டும் அமைதியாக இருந்தாள்.
"என்னம்மா லாவண்யா ஏன் இப்படி இருக்க. எல்லாம் ஒழுங்கா சாப்பிடாம இருந்து இழுத்து வைக்கறா." இலக்கியாவின் கேள்விக்கு அவள் நடந்ததை எல்லாம் சொல்லி முடித்தாள்.
கேட்டுக் கொண்டிருந்த இலக்கியாவின் முகமும் மாறியது.
"தப்பு தானேம்மா" என்றார் இலக்கியா
"என்ன சித்தி?"
"அந்த பையன் உதவி பண்ணியிருக்கான். இஷிதாவை கவனிச்சிருக்கான். நம்மளால அவன் சைக்கிள் வேற போயிருக்கு. ஒரு தேங்க்ஸ் கூட சொல்லாம வந்துட்டீங்கன்னா... நன்றி கெட்ட மனுஷங்கன்னு அவன் நினைக்க மாட்டானா?" என்றார்.
லாவண்யா தலை குனிந்தாள். "அதான் எனக்கும் மனசு கஷ்டமா இருக்கு சித்தி. தேவி நேரமாகுதுனு இழுத்துட்டு வந்துட்டா" என்றாள் லாவண்யா.
"அவர் இந்த ஏரியாதான்னு தேவி சொன்னாளே?" என்று இலக்கியா கேட்க,
"ஆமா சித்தி."
"அப்ப மறுபடியும் பார்த்தா மன்னிப்பு கேட்டு, சைக்கிள் போனதுக்கும் வருத்தம் தெரிவிச்சுக்கோ." என்றார் மாற்று யோசனையாக.
"ம்ம்..."
"நீங்க தினமும் போற பஸ் கன்டெக்டர்னு சொல்னியே" லாவண்யா சற்றுத் தயங்கினாள்.
"ஆமா..."
"அப்ப நன்றி சொல்லி சைக்கிளை பற்றி கேட்டு விசாரிச்சுக்கலாம். அவ்ளோதான்" என்றார்.
"அதெல்லாம்..." என்று ஆரம்பித்தவள் அப்படியே நிறுத்திக் கொண்டாள்.
'தவிக்கிற நேரத்துக்குத்தான் கூட இருக்கணும். எல்லாம் முடிஞ்சதும் கூட இருந்தா என்ன அர்த்தம்?' என்ற எண்ணம் அவளது மனதை உறுத்தியது.
"நாளைக்கு காலையில பேசிக்கலாம்..." என்று தனக்குத்தானே முடிவு செய்தாள்.
ஆனாலும் மனம் மட்டும் அமைதியாகவில்லை.
--
அன்றிரவு படுக்கச் சென்ற பிறகும் லாவண்யாவின் மனம் அமைதியாகவில்லை.
கண்களை மூடினாலும், மயங்கி விழுந்த இஷிதாவின் முகம்தான் முதலில் நினைவுக்கு வந்தது. அதற்குப் பிறகு அவளை பதறிப் போய் கவனித்த சாரதியின் முகம்.
தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு அவசரமாக ஓடி வந்தது.
"குழந்தையை ஏன் திட்டறீங்க?" என்று தன்னைப் பார்த்துக் கண்டித்தது. அதையெல்லாம் தாண்டி...
சைக்கிளைக் காணாமல் போனபோது அவன் முகத்தில் தெரிந்த அந்த வெறுமை.
அந்த முகத்தை நினைத்ததும் லாவண்யாவின் நெஞ்சுக்குள் ஏதோ வலித்தது.
'எங்களால தானே அவருக்கு இப்படி ஆகிடுச்சு...'
என்று நினைத்தவள் புரண்டு படுத்தாள்.
அவனை விட்டுவிட்டு வந்தது சரியா? தேவி சொன்னது போல, 'அவர் பார்த்துப்பார்' என்று விட்டுவிட வேண்டிய விஷயம் என்றாலும் மனம் ஒத்துக்கொள்ளவில்லை.
சட்டென்று கண்களைத் திறந்தவள், மேலே பார்த்தபடி படுத்திருந்தாள்.
அடுத்த நொடி, அவளுக்கே தெரியாமல் உதடுகள் அசைந்தன.
'கடவுளே... அந்த கன்டெக்டருக்கு சைக்கிள் கிடைச்சிடணும்.' சில நொடிகள் அமைதியாக இருந்தவள் மீண்டும் கண்களை மூடினாள்.
'அது அவரோட அப்பாவோட சைக்கிளாம்... அவருக்கு ரொம்ப முக்கியமா இருக்கும்னு தோணுது. எப்படியாவது அவருக்குத் திரும்பக் கிடைக்கணும்.'
அவளுக்குத் தெரிந்தவரை, அது ஒரு சைக்கிள்தான். ஆனால்... அந்த சைக்கிள் சாரதிக்கு எவ்வளவு முக்கியமானது என்று அவள் அறியவில்லை. அவள் அறியாத அந்த வலிக்காகத்தான் அன்று இரவு, பெயர்கூட சரியாகத் தெரியாத ஒரு மனிதனுக்காக மனதார வேண்டிக் கொண்டாள். அதன்பிறகுதான் அவளது மனம் சற்று அமைதியடைந்தது.
ஆனால் தூக்கம் வருவதற்கு முன்பும் கடைசியாக அவள் நினைத்தது... 'நாளைக்கு அவரைப் பார்த்ததும் முதல்ல சைக்கிளைப் பற்றி கேட்கணும்.' என்பதைத்தான்.
இன்னொரு முறை நினைத்தவள், ஏனோ அந்த இரவு முழுவதும் அவளால் அந்த எண்ணத்தைத் தள்ளிவிட முடியவில்லை. தன்னால் அவருக்கு கஷ்டமானதா என்று வருந்தினாள். பெயருக்கு இரண்டு தேசை சுட்டு சாப்பிட்டு விட்டு தனக்கான அறையில் லாவண்யா படுக்கும் முன் கண்டெக்டர் நினைவுடன் தான் உறங்கினாள். அவளுக்கு அவனது பெயரும் தெரியாதே.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 7)
அடிப்பாவிங்களா ! ரெண்டு பேரும் பேசிட்டே அரட்டை அடிக்கிற ஜோர்ல பின்னாடி வந்தச சின்னப் பெண்ணையும் கோட்டை விட்டாங்க, இப்ப இவங்களோட அஜாக்கிரதையால சாரதியோட சைக்கிளையும் களவுப் போக விட்டுட்டாங்க. யாருக்கும் சுற்றுப்புற சூழ்நிலையை கவனிச்சுப் பார்க்கிற எண்ணமும் இல்லை. இதனால சாரதி அப்பாவோட நினைவுச் சின்னமா இருந்த சைக்கிள் களவுப் போனது தான் மிச்சம் போல.
அடிப் போங்கடி.. நீங்களும் உங்க நன்றிக்கெட்டத் தனமும்.
😐😐😐
CRVS (or) CRVS 2797
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-13
11 hours ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-12
1 day ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-11
1 day ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-10
1 day ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-9
2 days ago
Currently viewing this topic 1 guest.
- 25 Forums
- 328 Topics
- 1,581 Posts
- 8 Online
- 420 Members
