மதுர ஜில்லா... மச்சானே!-62
அத்தியாயம்-62
இனியனோ மதுராவைப் பார்த்து, "மதுரா... மாம்பழம் கட் பண்ணி கொண்டா. என்ன மசமசன்னு பார்த்துட்டு இருக்க?" என்றான்.
இதுவரை காவ்யாவையே பார்த்துக் கொண்டிருந்த மதுரா, சட்டென்று சுயநினைவுக்கு வந்து, "இ... இதோ..." என்று அவசரமாக சமையலறைக்குள் ஓடினாள்.
சிறிது நேரத்தில் மாம்பழத்தை அழகாக நறுக்கி, கூடவே ஆப்பிளையும் சேர்த்து ஒரு தட்டில் அடுக்கி எடுத்து வந்து அனைவரின் முன்னும் வைத்தாள்.
திரும்பிச் செல்ல முயன்றவளின் கையை மெதுவாகப் பிடித்த இனியன், "எங்க போற?" என்று கேட்டபடி தன் அருகிலேயே அமர வைத்தான்.
எதிர்பாராத அந்த நெருக்கத்தில் மதுரா சங்கடமாக நெளிந்தாள். அவளது பார்வை தன்னிச்சையாக காவ்யாவைத் தேடிச் சென்றது.
ஆனால் காவ்யாவோ மாம்பழத் துண்டை வாயில் போட்டதும் கண்களை விரித்தாள்.
"ஹம்மி...! செம டேஸ்ட்."
மதுரா உடனே சிரித்தாள்.
"அம்மா வீட்ல காய்ச்ச மாங்காய் ஊறுகாய் போடறேன். ஆனா இந்த மாம்பழம் மட்டும் எப்பவுமே இவ்வளவு இனிப்பாதான் இருக்கும்."
"ஓஹோ..." என்று இன்னொரு துண்டை எடுத்துக் கொண்ட காவ்யா, "சூப்பரா இருக்கு."
சில நொடிகள் அமைதியாக இருந்தவள், மதுராவை ஆர்வமாகப் பார்த்தாள்.
"எப்பவுமே சேலைதான் கட்டுவீங்களா?" தன் சேலையை ஒரு முறை குனிந்து பார்த்த மதுரா, "ம்ம்ம்..." என்று வெட்கத்துடன் தலையாட்டினாள்.
அதைக் கவனித்த வேல்விழி சிரித்தபடி, "ஏம்மா... உனக்கு சேலை பிடிக்காதா?" என்று காவ்யாவிடம் கேட்டார்.
"பிடிக்கும் அத்தை... ஆனா கட்டத் தெரியாது. எல்லாம் இவரோட தங்கச்சிதான் கட்டிவிடுவாங்க. எனக்கு ஜீன்ஸ், டாப்ஸ்தான் கம்ஃபர்டபிள். இவரைக் கட்டிக்கப் போறேன்னு அப்பா தான், 'கொஞ்ச நாளைக்கு குர்த்தி, சுடிதார் மாதிரி போடு'ன்னு ஆர்டர் போட்டுட்டாரு." என்றாள் சிரித்தபடி.
"எங்க அகிலன் எதுவும் சொல்ல மாட்டாரே?" என்று வேல்விழி கேட்டார்.
"ம்கூம்... அதட்டிப் பேசவே வராது அத்தை. அநியாயத்துக்கு சாஃப்ட். பட்..." என்று அகிலனைப் பார்த்தவள் குறும்பாக சிரித்தாள். "ஐ லைக் ஹிம்." என்று காவ்யாவின் பார்வையை உணர்ந்த அகிலன், "என்ன?" என்பது போல புருவம் உயர்த்திப் பார்த்தான்.
அதைப் பார்த்த வேல்விழி சிரித்தார். "என்னப்பா அகிலா... காவ்யா இருந்தா பேசவே மாட்ட போல."
"இனியன் இருந்தா, இவங்க..." என்று மதுராவைக் காட்டி "...இவங்களும் சைலண்ட் ஆயிடுறாங்க." அனைவரின் பார்வையும் தன் மீது விழுந்ததும் மதுரா சங்கடமாகச் சிரிக்க முயன்றாள்.
அகிலனும் அவளை ஒரு நொடி பார்த்தான். ஆனால் மதுரா சட்டென்று தலைகுனிந்து விட்டாள். அந்த ஒரு செயல் அகிலனின் மனதை எதையோ குத்தி சென்றது.
சூழ்நிலையை மாற்ற நினைத்தவள், "ப... பஜ்ஜி ஏதாவது போட்டுட்டு வர்றேன்." என்று எழ முயன்றாள்.
இனியன் மெதுவாக அவள் கையை அழுத்திப் பிடித்தான். 'நீ என் பக்கத்துல இரு' என்ற உரிமை இருந்தது.
"அய்யோ.. இதுவே வயிறு நிரம்பிடுச்சு. இன்னொரு நாள் சாப்பிடவே வர்றேன்" என்று காவ்யா கூற மதுராவும் மீண்டும் அமைதியாக அமர்ந்தாள்.
சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பிறகு காவ்யா எழுந்தாள்.
"சரிங்க அத்தை... ஓகே மாமா... கிளம்பறோம்." பிறகு இனியனைப் பார்த்து குறும்பாக கையை நீட்டினாள்.
"ஹலோ... பெரிய மச்சான். ஏதாவது வேலை பேலன்ஸ் இருந்தா சொல்லுங்க." அகிலனும் எழுந்து,
"பெரியப்பா... போயிட்டு வர்றேன். பெரியம்மா... வர்றேன். இனியா... கம்பெனி ரெஜிஸ்ட்ரேஷன், டாக்குமெண்ட்ஸ் ஏதாவது இருந்தா சொல்லு. தெரிஞ்சவங்க இருக்காங்க. ஹெல்ப் பண்ணுவாங்க." என்றான்.
இனியன் மெதுவாகப் புன்னகைத்தான்.
"ம்ம்... இப்போ பார்ட்னராச்சே. தேவைப்பட்டா கண்டிப்பா ஹெல்ப் கேப்பேன்." என்றான் அவனும்.
"சரி." காவ்யாவோ எல்லாரையும் பார்த்து கையை அசைத்தாள்.
"பை அத்தை... பை மாமா... பை பார்ட்னர்... பை மதுரா..." என்றாள்.
"பை..." என்று மதுராவும் புன்னகையுடன் கையசைத்தாள்.
வீட்டை விட்டு வெளியே வந்த இருவரும் புல்லட்டில் ஏறினார்கள்.
சில நிமிடங்கள் அமைதியாகவே பயணம் சென்றது. பிறகு காவ்யா மெதுவாகக் கேட்டாள்.
"ஏன் அகில்... இனியன்கிட்ட நான் நார்மலா பேசுறது ஓகே. நீயும் மதுராகிட்ட நார்மலா பேசலாமே. ஏன் இவ்வளவு தயங்குற?" என்றாள். அகிலன் ஒரு பெருமூச்சு விட்டான்.
"தெரியல காவ்யா... அவ கண்ணைப் பார்த்து நேரா பேச முடியல." சிறிது இடைவெளிக்குப் பிறகு மெதுவாகத் தொடர்ந்தான்.
"அவளுமே முன்ன மாதிரி பேச மாட்டேங்கறா. முன்னாடி 'மச்சான்... மச்சான்...'ன்னு வாய்நிறைய கூப்பிடுவா. இப்போ முகத்தைப் பார்க்கவே தயங்குறா." அவன் சிரிக்க முயன்றாலும், அந்தச் சிரிப்புக்குள் வருத்தம் இருந்தது.
"என்னோட வேண்டுதலெல்லாம் ஒண்ணுதான். இனியனும்... மதுராவும் நல்லபடியா வாழணும். சந்தோஷமா இருக்கணும். அது மட்டும் போதும்." காவ்யா அமைதியாக அவன் தோளில் சாய்ந்தாள்.
"ஏய்... உனக்கு ஓகே தானே? இனியன் கூட பார்ட்னர்ஷிப்..."
"ம்ம்..."
"வேலையில மட்டும் பார்ட்னரா இரு. என்கிட்ட கத்துற மாதிரி அவன்கிட்ட கத்திடாத."
அதைக் கேட்ட காவ்யா சிரித்தாள்.
"அகி..."
"ம்ம்ம்..."
"நிஜமாவே உனக்கு கோபம் வரலையா?" அவள் இன்னும் கொஞ்சம் அவன் தோளில் சாய்ந்தாள். உடனே அகிலன் பதறினான்.
"அம்மா தாயே... தோள்ல சாயாம ஒழுங்கா உட்காரு. ரோட்ல போறவங்க பார்த்தா, நான் எடுத்துவச்ச நல்ல பேரு கெட்டுடும்." என்றான்.
"அகி..." என்று குழந்தை போல உதட்டைச் சுழித்தாள்.
"என்ன?"
"ஐ லவ் யூ." புல்லட்டை ஓட்டிக் கொண்டிருந்த அகிலனின் உதட்டோரம் தானாக ஒரு புன்னகை மலர்ந்தது.
"அதை வீட்டுக்குப் போயும் சொல்லலாம்." என்றான்.
"இப்ப சொல்லணும் போல இருந்துச்சு." அகிலன் சிரித்தபடியே தலையசைத்தான்.
தோளை விட்டு விலகி, இடுப்பைச் சுற்றி மெதுவாகக் கையை கோர்த்துக் கொண்டாள். அகிலனும் சிரித்தபடியே புல்லட்டின் வேகத்தை வீட்டை நோக்கி விரைந்திட சற்றுக் கூட்டினான்.
வீட்டு வாசலிலேயே அதியமானும் மீனாட்சியும் காத்திருந்தனர்.
கேட் திறக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்த மீனாட்சி,
"என்னம்மா... என்னாச்சு? எங்க போயிருந்தீங்க?" என்று ஆவலாகக் கேட்டார்.
அகிலன் புன்னகையுடன் காவ்யாவைப் பார்த்துவிட்டு,
"இனியன்கிட்ட பேசிட்டு வந்தோம்மா. காவ்யாவோட பிசினஸை இனியனோட பார்ட்னர்ஷிப்ல ஆரம்பிக்க முடிவு பண்ணிட்டோம்." என்றவன் தொடர்ந்தான்.
"கம்பெனி பேரு கூட வச்சாச்சு... மகா அக்ரோ பிரைவேட் லிமிடெட்." என்றான்.
"அப்படியா!" என்று மீனாட்சியின் முகம் மலர்ந்தது.
அதியமான் மட்டும் மகனை ஆழமாகப் பார்த்தார்.
"ஏதும் பிரச்சனை ஆகலையேப்பா?" அகிலன் மெதுவாகச் சிரித்தான்.
"இல்லப்பா... ஆனா இனியன் பேசுறத பார்த்தா... இன்னும் அவனுக்குள்ள பயம் இருக்கு. மறுபடியும் எந்தப் பிரச்சனையும் வரக்கூடாதுன்னு ரொம்ப கவனமா இருக்கான்." சிறிது இடைவெளி விட்டவன்,
"இந்த பார்ட்னர்ஷிப்... சொந்தம்னு இல்லப்பா. நண்பர்களா சேர்ந்து வேலை பாக்குற மாதிரிதான் ஆரம்பிக்கப் போற. அது சரியா வரும்." என்று கூறிவிட்டு, அருகில் நின்ற காவ்யாவைப் பார்த்து சிரித்தான்.
"அதோட உங்க மருமக கேடி. பேசிப் பேசியே கவுத்துட்டா." என்றான்.
"ஹலோ..." என்று அவன் தோளில் செல்லமாக ஒரு குத்து வைத்தாள் காவ்யா.
அதைப் பார்த்து மீனாட்சியும் அதியமானும் சிரித்தனர்.
"சரிப்பா... எல்லாம் நல்லபடியா நடந்தா அதைவிட சந்தோஷம் வேற என்ன இருக்கு?" என்றார் அதியமான்.
மீனாட்சியும், "ஆமாம்பா... நல்ல காரியம்தான்." என்று மனநிறைவுடன் தலையசைத்தார்.
அன்றைய நாளில் அகிலன் காவ்யா இருவரும் ஜோடி பறவைகள், காதலோடு கரைந்திருந்தனர்.
இனியன் வீட்டில்.. மதுரா சமையலறையில் ஊறுகாய் ஜாடியை மூடி வைத்துக் கொண்டிருந்தாள்.
தங்கள் அறைக்குள் மதுரா நுழைய, இனியன்,
"ஊறுகாய் எல்லாம் போட்டாச்சா?" என்று கேட்டான்.
"ஆச்சு..." என்றவள் கைகளைத் துணியில் துடைத்தபடி கதவை தாழிட்டு, அவனை தாண்டி செல்ல முனைந்தாள்.
எதுவும் பேசாமல் அவளைப் பார்த்துக் கொண்டிருந்த இனியன், திடீரென அவளைத் தன் கரங்களுக்குள் இழுத்து அணைத்துக் கொண்டான்.
அந்த அணைப்பில் அவசரமும் இல்லை. வேகமும் இல்லை.
வெறும் அன்பான தீண்டல் மட்டுமே. மதுராவும் எதிர்க்கவில்லை. அவனது மார்பில் முகம் புதைத்தபடியே சில நொடிகள் அப்படியே நின்றாள்.
இரவு நேரமென்பதால் இருவரும் படுக்கையில் அமர்ந்தனர்
மதுரா வழக்கம்போல் ஒரு பக்கம் திரும்பிப் படுத்துக் கொண்டாள். ஆனால் இனியனின் பார்வை முழுவதும் அவள் மீதே இருந்தது.
அதை உணர்ந்தவள் மெதுவாகத் திரும்பிப் பார்த்தாள். "ஏதாவது வேணுமா?" என்று கேட்டாள்.
இனியன் மெதுவாக, "நீ வேணும்... மதுரா" என்று கேட்க, அந்த ஒரு வார்த்தையில் மதுராவின் இதயம் வேகமாகத் துடித்தது.
அவள் மெதுவாக அவனருகே நெருங்கினாள். இனியன் தன் வலது கையால் அவளது கீழ் உதட்டை மெதுவாக வருடினான். அவள் கண்களை மூடிக் கொண்டாள்.
அடுத்த நொடி... அவளது இதழ்களில் மிகவும் மென்மையான ஒரு முத்தத்தைப் பதித்தான்.
சில நொடிகள் மட்டுமே... அதன்பிறகு தானாகவே விலகினான்.
மதுரா எழுந்து சேலையை அகற்ற முனைய, அப்போது அவளது கையைப் பிடித்த இனியன் மெதுவாகத் தடுத்தான்.
"நான் 'நீ வேணும்'ன்னு சொன்னது... .உடம்பை கேட்டு இல்ல." அவளது கண்களை நேராகப் பார்த்தான்.
"மனசை." மதுராவின் விழிகள் அவனை விட்டு விலகவில்லை.
"நீ எப்ப என்னை முழு மனசோட மன்னிக்கிறியோ.."
அவன் குரல் இன்னும் மென்மையாயிற்று.
"எப்ப உன்னோட விருப்பத்தால... உன்னை என்கிட்ட கொடுக்கணும்னு நினைக்கிறியோ..." அவளது நெற்றியில் முத்தமிட்டவன்,
"அப்பதான் நான் உன்னை முழுசா ஏத்துக்கறேன்." மதுராவின் கண்கள் கலங்கின.
இனியன் மெதுவாகச் சிரித்தான்.
"நான் உன்னை காதலிக்கிற மாதிரி..." என்று அவள் கன்னத்தை வருடியவன், "நீயும் என்னைக் காதலிக்கிறேன்னு ஒருநாள் உன் வாயால சொல்லணும்." சிறிது இடைவெளி... "அந்த நாளுக்காக நான் எவ்வளவு நாள் வேணும்னாலும் காத்திருப்பேன்." என்று கூறி மீண்டும் அவளை அணைத்துக் கொண்டான்.
அதற்குப் பிறகு எந்த எல்லையையும் மீறவில்லை.
அவளை அணைத்தபடியே கண்களை மூடினான்.
ஆனால்... மதுராவுக்கு மட்டும் உறக்கம் வரவில்லை. அவனது ஒவ்வொரு வார்த்தையும் அவள் மனதுக்குள் எதிரொலித்துக் கொண்டே இருந்தது. "உடம்பால இல்ல... மனசால நீ வேணும்..." அந்த வார்த்தைகள் அவளது இதயத்தை மெதுவாக உருக்கின.
இத்தனை நாள்... தன் அருகில் இருந்த மனிதன் ஒரு கணவன் என்றதை தாண்டி 'ஆண்' என்று மட்டுமே நினைத்திருந்தாள். ஆண் என்பதால் தான் தன்னை அடைந்து ஆசை தீர்க்க முனைகின்றான் என்று.
இன்று... முதன்முறையாக... அவளை மனதால் நேசிக்கும் ஒரு காதல்
கணவனாகத் தெரிந்தான். அவனது மார்பில் சாய்ந்தபடி படுத்திருந்த மதுராவின் இதயம்... அவள் அறியாமலே அவனை நோக்கி ஒரு அடி முன்னேறியது.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
மதுர ஜில்லா மச்சானே !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 62)
இனியனுக்குள்ள கொஞ்சம் கொஞ்சமா மதுரா எதிர்பார்த்த மாற்றம் வந்திடுச்சு. இப்பத்தான் உடலை தாண்டி மனசுன்னு ஒண்ணு இருக்குங்கிறதைப் பத்தியே யோசிக்க ஆரம்பிச்சிருக்கான்.
இனி, எல்லாமே நல்லபடியாவே நடக்கும் என்கிற நம்பிக்கை எங்களுக்கும் வந்திடுச்சு.
😀😀😀
CRVS (or) CRVS 2797
-
மதுர ஜில்லா... மச்சானே!-28
7 days ago
-
மதுர ஜில்லா... மச்சானே-43
3 weeks ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-67
3 weeks ago
-
மதுர ஜில்லா... மச்சானே-70 (முடிவுற்றது)
3 weeks ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-39
3 weeks ago
- 25 Forums
- 330 Topics
- 1,588 Posts
- 1 Online
- 420 Members
