Forum

Notifications
Clear all

வெளிச்சம் - 12

1 Posts
1 Users
0 Reactions
5 Views
(@arulmozhi-manavalan)
Posts: 22
Trusted Member
Topic starter
 
[#206]

அத்தியாயம் 12

 

திருமணத்திற்கு வந்தவர்கள் எல்லோரும் ஊருக்கு கிளம்பி விட சிவநேசன் குடும்பமும் விஸ்வநாதன் குடும்பமும் மட்டுமே அங்கு இருந்தார்கள். 

 

எல்லோரும் ஊருக்கு போய் விட்டதால், வீட்டைப் பார்க்க வெறுமையாக இருந்தது. "ரெண்டு நாளா நிறைந்து இருந்த வீடு, இப்பொழுது காலியாக இருக்குது" என்று வருடத்துடன் கூறிய சிவகாமி, "நாளைக்கு இவளும் போயிட்டானா? நாங்க மூணு பேரும் தான்" என்று சோகமானார். 

 

தாயின் கையை இறுக்கமாக பற்றிய சிவன்யாவிற்கும் கண்கள் கலங்கியது. மனைவியை முறைத்த சிவனேசன், "கல்யாணம் முடிந்து இப்ப தான் வீட்டுக்கு வந்திருக்கா. அதுக்குள்ள பிள்ளைய கண்கலங்க வைக்கிறியா? பொம்பள புள்ளைய பெத்தா, கட்டி கொடுத்து மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்ப தானே செய்யணும்!" என்று மனைவியை கண்டித்தார். 

 

"அது தெரியுங்க, திடீர்னு வீடு வேறுச்சுன்னு ஆனதால சொல்லிட்டேன்" என்று மகளின் கையை பிடித்துக் கொண்ட சிவகாமி, "அம்மா ஏதோ உணர்ச்சிவசப்பட்டு சொல்லிட்டேன்டா! முதலில் கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும், நீ சந்தோஷமாக வாழ்வதை பார்க்கும் போது நாங்க நிம்மதியா ஆயிடுவோம்" என்று சொல்லிவிட்டு இரவு சடங்கிற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பேச வேண்டும் என்று நினைத்து, அங்கு நளினி இருப்பதைக் கண்டு தயங்கினார். 

 

நாளை மகளை பிரிய வேண்டும் என்ற கவலையில் பேசிக் கொண்டிருக்கிறார் என்பதை புரிந்தவர், அடுத்து சிவகாமி தயங்குவதை கண்டு அவர் என்ன பேச நினைக்கிறார் என்பதை புரிந்து கொண்டு, "இரண்டு நாளா நீயும் சரியா தூங்கி வில்லை அல்லவா? போய் கொஞ்சம் தூங்கலாமே!" என்று மகளிடம் கேட்டார் விஸ்வநாதன்.

 

எப்படா நம்மள தூங்க போக சொல்லுவாங்க என்று நினைத்துக் கொண்டிருந்த நளினி, "ஆமா, எனக்கு தூக்கம் வருது. நாளைக்கு ஊருக்கு போகணுமே, அண்ணிகிட்ட கொஞ்ச நேரம் பேசலாம்னு நினைச்சேன். ஆனா என்னால முடியலை. நான் போய் தூங்குறேன், அண்ணி நாளை காலைல வந்து உங்க கிட்ட பேசுறேன்" என்று சொல்லிவிட்டு எல்லோருக்கும் குட் நைட் சொல்லிவிட்டு உறங்க சென்று விட்டாள். 

 

அவள் சென்றதும் விஸ்வநாதன் இரவு சடங்கை பற்றி பேச, "அப்பா, டிராவல் செய்தது எனக்கும் கொஞ்சம் ஓய்வு தேவை. ஊருக்கு போய் அதை பார்த்துக் கொள்ளலாம்" என்றான் தேவ். 

 

பெண்ணை பெற்றவர்களாக முதல் இரவு சம்பிரதாயம் தள்ளிப் போவது வருத்தமாக இருந்தாலும், கணவன் மனைவி உறவுக்குள் தலையிட விரும்பாத சிவகாமியும் சிவநேசனும், "அது உங்கள் இஷ்டம்" என்று சொல்லிவிட்டு, "எல்லோருக்குமே ஓய்வு அவசியம் தானே, போய் உறங்கலாமா?" என்று பொதுவாக கேட்டார் சிவநேசன். 

 

"ஆமாம்" என்று சோம்பல் முறித்தப்படி எழுந்த தேவ், எங்கு சென்று உறங்குவது என்று சுற்றும் முற்றும் பார்த்தான். 

அவன் எழுந்ததும், "சிவன்யா, மாப்பிள்ளையை உன் அறைக்கு அழைத்துச் சென்று, ஓய்வெடுக்க ஏற்பாடு செய்" என்று மகளை அவர்களது அறைக்கு அனுப்பி வைத்த சிவகாமி, "குடிப்பதற்கு சூடா ஏதாவது வேண்டுமா? மாப்பிள்ளை" என்று கேட்கவும் தவறவில்லை. 

 

"இல்லை அத்தை, வயிறு ஃபுல்லா இருக்கு. தூங்கி எழுந்தாலே போதும்" என்றதும், சிவன்யா அறையை நோக்கி நடந்தாள். அவளின் பின்னாலே சென்றான் தேவ். 

அவர்கள் உறங்கச் சென்ற சிறிது நேரத்திற்கு எல்லாம் மேகநாதன் வந்து விட்டான். அனைவரையும் பத்திரமாக அனுப்பிவிட்டதை கூற, விஸ்வநாதன் "எனக்கு ரொம்ப சந்தோஷம் மாப்பிள்ளை. எங்கள் குடும்பத்தையும் ரொம்ப சிறப்பா கவனிச்சுக்கிட்டீங்க. உங்களை உங்க அப்பா ரொம்ப நல்லா வளர்த்திருக்கிறார்" என்று சிவநேசனை பார்த்தார். 

 

அதற்குள் சிவகாமி சங்கருக்கு கொடுக்க வேண்டிய பலகாரங்களை கொடுத்து அனுப்பினார். சிறிது நேரம் எல்லோரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க, நாளை விஸ்வநாதன் பார்வதி நளினி மூவரும் ஊருக்கு செல்வதால், "நீங்களும் நாளைக்கு கிளம்ப வேண்டும் அல்லவா சம்மந்தி. ஆகையால் கொஞ்சம் போய் ஓய்வு எடுக்கலாமே!" என்றார் சிவநேசன். 

 

அனைவருக்குமே ஓய்வு தேவைப்பட வேறு எதுவும் கூறாமல், உறங்கலாம் என்று எழுந்தனர் விஸ்வநாதன் பார்வதி இருவரும். 

 

அவர்களுக்கு தேவையானவற்றை எடுத்துக் கொடுத்துவிட்டு, மேகநாதனையும் நல்ல தூங்கி ஓய்வெடுப்பா என்று அனுப்பினார் சிவகாமி. மகளிர் திருமணம் முடிந்த மகிழ்ச்சி சிவநேசன் சிவகாமி முகத்தில் தெளிவாக தெரிய, மகிழ்ச்சியாகவே கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு உறங்கினார்கள். 

 

அறைக்கு வந்ததும் "இவ்வளவு நாள் நான் உன்னுடன் பேசவில்லையே, அதற்கு என் மேல் ஏதும் வருத்தமா?" என்று மொட்டையாக ஆரம்பித்தான் தேவ். 

 

அவனுக்கு படுக்கை விரிப்பை சரிப்படுத்திக் கொண்டே, "அதெல்லாம் ஒன்றும் இல்லை" என்று சாதாரணமாக பதில் சொன்னாள் சிவன்யா.  

 

"முதலில் தங்கையின் திருமணம் மட்டும் தானே என்று, நான் பத்து நாட்கள் லீவு கேட்டு இருந்தேன். ஆனா அப்பா திடீர்னு எனக்கும் கல்யாணம்னு சொல்லிட்டாரு" என்று அவள் முகத்தைப் பார்த்தான். 

 

அவளும் மேலும் அவனே சொல்லட்டும் என்று அவன் முகத்தைப் பார்த்து அமர்ந்தாள். 

 

"எனக்கும், இப்பொழுது ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டு, குடும்பம் நடத்தும் எண்ணம் கொஞ்சம் கூட இல்லை. நான் எவ்வளவோ அப்பாவிடம் சொன்னேன். ஆனால் அவர் ஜாதகம் பொருத்தம் நல்லா பொருந்தி இருக்கு, இப்பொழுது கல்யாணத்தை விட்டால் இனி உனக்கு கல்யாணம் நடக்க ரொம்ப தாமதமாகும். அதனால கல்யாணம் பண்ணிக்கோ என்று ரொம்ப வற்புறுத்தினார். அதனாலதான் இந்த கல்யாணத்துக்கு வேண்டா வெறுப்பா தான் சம்பாதித்தேன்" என்று அவள் முகத்தை பார்த்தான். 

 

அவளுக்கு அவன் பேசியது வருத்தமாக இருந்தாலும், அதை அவள் முகத்தில் காண்பித்துக் கொள்ளவில்லை. அமைதியாகவே இருந்தாள். 

 

அவளது அமைதியை கண்டு, என்ன தோன்றியதோ? "எனக்கு உன்னை ஏற்றுக் கொள்வதற்கு சிறிது காலம் வேண்டும். அவசர அவசரமாக கல்யாணம் முடிஞ்சது போல, அவசரமாக வாழ்க்கையையும் தொடங்க வேண்டாம் என்று நினைக்கிறேன்" என்று அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான் தேவ் . 

 

அவளும் சரி என்பது போல் தலையாட்டி விட்டு, "எனக்கு தூக்கம் வருது, நீங்களும் தூங்குங்கள்" என்று அவனுக்கு முதுகு காட்டி படுத்துக்கொண்டாள். 

 

'என்ன இவள். பதில் ஏதும் சொல்லாமல் படுத்து விட்டாள்' என்று யோசித்துக் கொண்டு இருந்தான் தேவ். 

 

படுத்த சிவன்யாவிற்கோ அழுகை முட்டிக்கொண்டு வந்தது. அவன் முன்பு அழுது விடக்கூடாது என்று தான் உடனே படுத்து விட்டாள். ஆனால் அவன் பேசியது அவளுக்கு மிகவும் அழுத்தமாக இருந்தது. வேண்டா வெறுப்பாக திருமணம் செய்து கொண்டதாக கூறியதைக் கேட்டு. 

அவன் பேசியதை நினைத்து அழுது கொண்டே, எப்பொழுது உறங்கினோம் என்று தெரியாமல் உறங்கி விட்டாள் சிவன்யா. 

 

மறுநாள் காலை இனிமையாக விடிய, காலையில் எழுந்த சிவகாமி, அனைவருக்கும் தேவையானவற்றை செய்ய ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் அங்கு வந்த பார்வதி, "ஏன் அண்ணி காலையிலேயே எழுந்து இப்படி வேலை செய்கிறீர்கள்? கொஞ்ச நேரம் இன்னும் கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்திருக்கலாமே!" என்றார். 

 

"வழக்கமா எழும் நேரம் தான் அண்ணி" என்று கூறிய சிவகாமி அவர் குடிப்பதற்கு சூடாக காபி கலக்கி கொடுத்து, இருவரும் அமர்ந்து குடிக்க ஆரம்பித்தனர் பின்னர். 

 

ஆண்கள் ஒவ்வொருவராக எழுந்து வர, கடைசியாக வந்த நளினி அம்மாவின் தோளில் சாய்ந்தபடி உட்கார்ந்து கொண்டு, "இன்னும் அண்ணி வரவில்லையாமா?" என்றாள். 

 

அனைவருக்கும் தேவையானவற்றை செய்து கொடுத்த சிவகாமி, நளினிக்கும் சூடாக ஹார்லிக்ஸ் கலந்து கொடுத்தார். 

"அத்தைன்னா அத்தைதான். எனக்கு பிடிச்சத செஞ்சு கொடுப்பாங்க" என்று வாங்கி குடித்தபடி கூறினாள் நளினி. 

 

அதற்குள் வீட்டு வேலை செய்யும் பெண் வந்துவிட, காலை உணவாக என்ன வேண்டும் என்று கேட்டு அதை செய்யச் சொல்லி அனுப்பினார். அனைவரும் அமர்ந்து ஹாலில் பேசிக் கொண்டிருக்க, சிவன்யாவும் தேவ்வும் அங்கு அவர்களுடன் வந்து அமர்ந்தார்கள். 

 

காலையில் முதலில் எழுந்தது சிவன்யா தான். தேவ் எழுதுவதற்கு முன்பே எழுந்து குளித்துவிட்டு வர, அப்பொழுதுதான் சோம்பல் முறித்து எழுந்தான் தேவ். குளித்து இருக்கும் சிவன்யாவை பார்த்து "குட்மார்னிங் சிவன்யா" என்று சொல்லிவிட்டு, "நானும் சீக்கிரம் குளிச்சிட்டு வரேன், ரெண்டு பேரும் சேர்ந்தே போகலாம்" என்றான். 

 

அவளும் சரி என்று அவன் வரவிற்காக படுக்கையை சரி செய்துவிட்டு காத்திருந்தாள். தேவ் குளித்ததும், இருவரும் ஒன்றாகவே வெளியே வந்தார்கள். அங்கு அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதை கண்டு, தனது தந்தையின் அருகில் அமர்ந்தான் தேவ். மகளையும் மருமகனையும் பார்த்ததும் சிவகாமி எழுந்து அவர்களுக்கு குடிப்பதற்கு எடுக்கச் சென்றார்.  

 

அவரின் பின்னாடியே சென்ற சிவன்யாவும் தனக்குத் தேவையானவற்றை தானே கலக்கிக் கொண்டு, தேவ்விற்கு தாய் கொடுத்த காபியையும் எடுத்துவந்து, அவனுக்கு கொடுத்துவிட்டு, தன் தந்தையின் அருகில் அமர்ந்து கொண்டாள். 

 

இரவு தேவ் சொன்ன வார்த்தை அவள் மனதில் வருத்தத்தை உண்டு பண்ண, அது அவள் முகத்தில் தெளிவாக தெரிந்தது. தாய் தந்தை முன்பு கவலைப்பட கூடாது என்று நினைத்தாலும் அவள் முகத்தில் ஒரு சோகம் இருப்பதை கண்டு கொண்டார் சிவநேசன்.  

 

மகளின் மனதில் இருக்கும் குழப்பத்தை தனியாக பேசி, தெரிந்து, தீர்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு அவரின் அருகில் இருந்த அவளது கையை மென்மையாகி அழுத்தம் கொடுத்தார் சிவநேசன். 

 

தந்தை தன் கையில் அழுத்தியதும், ஏதோ ஒரு பாதுகாப்பு உணர்வு தோன்றியது போல் அவளுக்கு இருந்தது. தந்தையின் முகத்தை காண, அவர் கண்மூடி நான் இருக்கிறேன் என்பது போல் சொல்லவும், சிவன்யாவின் முகம் சுச்சு போட்ட விளக்கு போல் பிரகாசமாகியது. 

 

தந்தையின் பாதுகாப்பு மட்டும் அவளுக்கு முகத்தில் பிரகாசத்தை கொடுக்கவில்லை. அங்கு அமர்ந்து பேசிக் கொண்டிருந்த தேவ்வும் தான். ஆமாம், அவளிடம் விருப்பமில்லாத திருமணம் என்று பேசியவன், இப்பொழுது சிவகாமியிடம் கலகலப்பாக பேசிக்கொண்டு இருந்தான். அதுமட்டுமல்லாது மேகநாதனிடமும் உரிமையாக "மச்சான்" என்று சொல்லி பேசியதை கேட்டதும் சிவன்யாவிற்கு நிம்மதியானது. 'அவர் திருமணம் இவ்வளவு சீக்கிரமாக நடந்தது விருப்பமில்லை என்று சொல்லி இருப்பார்' என்று நினைத்து தன்னை தேற்றிக் கொண்டாள்.  

 

நளினியும் சிவன்யாவின் அருகில் வந்து அமர்ந்து ஏதேதோ பேசிக் கொண்டிருக்க, காலை உணவு தயாராகி விட்டது என்று வேலைக்கார பெண் வந்து சொன்னதும், சிவகாமி அனைவரையும் உணவு உண்ண அழைத்தார். இரு குடும்பமும் மகிழ்வாக பேசியபடி காலை உணவை உண்டார்கள். நளினி "நாங்க இன்னைக்கு சாயங்காலம் ஊருக்கு போகிறோம் அண்ணி" என்றாள் சோகமாக.  

 

அவளின் பாவமான முகத்தைக் கண்டு சிரிப்பு வந்து விட்டது சிவன்யாவிற்கு. "இப்ப எதற்கு மூஞ்சை எப்படி தூக்கி வைத்துக்கொண்டு இருக்கிறாய்? இன்னும் ரெண்டு நாள்ல நாங்களும் வந்துருவோம் இல்ல! ரொம்ப கவலையா இருந்துச்சுன்னா, நீ வேண்டுமானால் இங்கேயே இருந்துவிடு. அத்தையும் மாமாவும் மட்டும் ஊருக்கு போகட்டும்" என்றாள் சிவன்யா.

 

- தொடரும்..

 

- அருள்மொழி மணவாளன்..


 
Posted : July 24, 2026 6:30 pm

Scroll to Top