அயலா… அயலா…-5

அத்தியாயம்-5

  அன்று அக்ஷயா வீட்டிற்கு வந்ததும், வேகமாய் பெரிய சாக்லேட்டை விழுங்கிக் கொண்டிருந்தாள்.

  ஆதினி அதை கண்டு, “அக்ஷயா.. ஏது இவ்ளோ பெரிய சாக்லேட்?” என்று கேட்டாள்.

“சொல்ல மாட்டேன். சொன்னா நாளைக்கு இதே போல சாக்லேட் எனக்கு கிடைக்காது” என்று கூறினாள்.

ஆதினிக்கு இந்த பதில் ஏதோ சரியில்லை என்று உணர்த்த, “குழந்தைக்கு இவ்ளோ பெரிய சாக்லேட் நீங்க வாங்கி தந்திங்களா?” என்று அயனிடம் கேட்டு நிற்க அவனோ வாடகை பணத்தை தர வந்து பணத்தை நீட்டியபடி, நெற்றி சுருக்கி, “இல்லையே” என்று குழந்தை அருகே வந்தான்.

ஆதினி பணத்தை வாங்கிக் கொண்டு, அயனையும் மகளையும் கவனித்தாள்.

மகள் அருகே அயன் மண்டியிட்டு, “அக்ஷயா பாப்பாவுக்கு இந்த சாக்லேட் யார் தந்தா?” என்று கேட்க, “அயலா… அது சீக்ரேட்” என்று கூறினாள் அக்ஷயா.

இம்முறை ஆதினி தன் வேலைகளை அப்படியே விட்டுவிட்டு, அயன் தந்த பணத்தை கூட அங்கேயிருந்த ஷெல்பில் வைத்துவிட்டு அருகே வந்தாள்.

அயனோ ‘ஓ… நீ சொன்னா நான் நாளைக்கு இதை வாங்கி தரலாம்னு நினைச்சேன். யார் வாங்கி தந்தா? எந்தகடையில் கிடைக்கும்?” என்று குழந்தைத்தனமாக கேட்க, அக்ஷயாவோ ”எங்க பிடி சார் தந்தார். அவர் என்னை கிஸ் பண்ணினா நான் சமத்தா இருந்ததுக்கு இதை தந்தார்” என்று கூற, ஆதினி நெஞ்சை பிடித்து நின்றாள்.

“வாட்… கிஸ்ஸா?” என்று அயன் தெளிவாக கேட்க, “ஆமா அயலா.” என்றாள்.

அயலன் உடனடியாக கன்னத்தில் முத்தம் வைத்து, “இப்படியா?” என்று கேட்க, “இல்லை அயலா.. “லிப்ல.. அப்பறம் இங்க இங்க” என்று உடல்பாகங்களை சுட்டிக்காட்டி கூற, ஆதினி கைகள் நடுங்கியது. ஷெல்பில் இருந்த தலையாட்டி பொம்மை கீழே விழுந்து, ஆதினி முகத்தில் அடித்து அழவும், அக்ஷயா மிரண்டாள்.

அயனோ அக்ஷயாவை பார்த்து, “உனக்கு ஸ்கூல்ல குட்டச் பேட்டச் சொல்லி தந்திருக்காங்களா? மம்மியாவது சொல்லி தந்திருக்காங்களா” என்று கேட்க, குழந்தை திருதிருவேன முழித்தாள்.

ஆதினியோ ‘இவளுக்கு இதுக்கு முன்ன வரை சரியா பேசவே வராது. இப்ப தான் ரீசண்டா… சரியா சொல்லணும்னா நீங்க வந்தப்பிறகு நல்லா பேசறா. அதனால நான் எந்த நல்லது கெட்டதும் சொல்லித் தரலை.” என்று நெஞ்சு விம்ம அழுதாள்.

அயனோ ஆழமூச்செடுத்து, அக்ஷயா சாப்பிட்டுக் கொண்டிருந்த இனிப்பை வாங்கினான்.

“இந்த சாக்லேட் சாப்பிட வேண்டாம்.” என்று கூறினான்.

  “ஏன் அயலா… அந்த சார் நீங்க சாக்லேட் தந்தா நான் வாங்கிக்கறேன். அதே போல தானே நானும்… உன் பிடி சார் தானேனு சாக்கி தந்து கிஸ் பண்ணினார். ஆனா அயலா… நீ கன்னத்துல மட்டும் முத்தம் தருவ. அவர் ஏன் இங்கயெல்லாம் தந்தார்.?” என்றவளிடம் ஆதினி நெருங்க, அயன் அவளை தடுத்தான்.‌

“ப்ளீஸ்… குழந்தையிடம் யார் வேண்டுமென்றாலும் நெருங்கலாம் என்ற தப்பை நான் தான் செய்தேன். இதை நானே சரிப்பண்ணிடறேன். இதுக்காக என்னை அக்ஷயாவிடம் நெருங்க விடாம பண்ணிடாத” என்று கையெடுத்து கும்பிட்டு, அவளை அழைத்து பிடி சாரை பார்க்க சென்றான். அதுவும் பிரதாப்பின் வண்டியை முறுக்கிக்கொண்டு விரைந்தான்.‌

  ஆதினிக்கு இன்று மதியமே பள்ளி விட்டுவிட்டார்கள். அக்ஷயாவுமே விரைவில் வந்திருக்க, பிடி சார் மட்டும் பள்ளியில் இருப்பாரா? ஆனால் இங்கிருந்து சில பல தூரத்தில் தான் பிடி சார் இமான் வீடு இருந்தது.
     அதனால் அயன் இமான் வீட்டை தேடி தான் பறந்திருந்தான்.

   வரும் வழியில் எல்லாம், அக்ஷயாவிடம் குட்டச் பேட்டச் என்றதை விளக்கமாக கூறினான்.

   “நான் முத்தமிடுவது உன் கன்னத்துல அக்ஷயா… அதை தாண்டி உன்னை தவறாக யார் தொட்டாலும் அது தப்பு.” என்றதை விவரித்தான். கூடுதலாக காணொளி மூலமாக குட்டச் பேட்டச் வேறு மிக எளிமையாக காணவிட்டு அவளை பார்க்க வைத்தான்.

  இமான் வீடு வரவும் பாதி சாப்பிட்ட சாக்லேட்டை அவன் முன் வீசியெறிந்தான்.

இமானின் அம்மா அங்கே நிற்க, “என்ன தம்பி ஏன் இப்படி சாக்லேட்டை முகத்துல விட்டெறியறிங்க?” என்று வந்தார்.‌

“உங்க பையன் குழந்தைக்கு சாக்லேட் தந்து என்ன காரியம் செய்திருக்கான் தெரியுமா?” என்று ஆக்ரோஷமாக கேட்க, ஆதினி இல்லாமல் அயன் மட்டும் வந்திருக்க, “டேய்… என்ன காரியம் பண்ணிட்டேன். நீ எப்படி குழந்தைக்கு சாக்லேட் தந்தியோ அதே எண்ணத்துல தான் நானும் சா க்லேட் வாங்கி தந்தேன். அப்பா இல்லாத குழந்தை. ஏதோ பாவமா இருக்கவும் சாக்லேட் நீட்டினேன். ஏன் நீயும் அதே நோக்கத்துல தானே தந்திருப்ப” என்றான் பூடகமாக.

  அயன் இமானின் சட்டையை கொத்தாக பிடித்து, “நான் பிரதாப்போட நண்பன். எனக்கு எந்த தப்பான நோக்கமும் இல்லை.” என்றவன் இமான் அன்னையிடம்,  “உங்க பையன் இந்த சின்ன குழந்தையிடம் என்னென்ன வேலை பண்ணிருக்கான்” என்று அக்ஷயா வீட்டில் பேசியதை கூறி முடித்தான்.

“தம்பி.. என் பையனை தப்பா பேசாதிங்க.” என்று இமான் தாயார் மழலை பேசியதாக கூறியதை சொல்லியும் காதில் வாங்கவில்லை.

அயன் கண்கள் ஒரு நொடி இமானை மேலிருந்து கீழாக அளந்தன. அந்த பார்வையில் ஏதோ இயந்திர துல்லியம் இருந்தது. கால் சட்டையில் இருந்த போனை எடுத்தான்.
இமானின் உடலில் ஓடிய மின்சாரம் போல் அவனது விரல் தானாக போனில் அமர்ந்தது. விரலை அதில் அழுத்தி, ப்ரவுஸர் ஹ்ஸ்ட்ரியை எடுத்து இமான் அன்னையிடம் காட்டினான்.

    “உங்க பையன் போன் தானே… அவன் இதுக்கு முன்ன பார்த்த ஹ்ஸ்ட்ரி டீட்டெய்ல் இது. பாருங்க..  நல்லா பாருங்க.” என்றான். அதில் பெரும்பாலும் குழந்தையும் பெரியவர்களும் பாலியல் சீண்டல் செய்யும் விதமான வீடியோ கதைகளாக இருந்தது.

அதை பார்த்து இமான் தாயார் இதயத்தில் கை வைக்க, “சிறுவர்- சிறுமியர் மீது பாலியல் ஈர்ப்பு கொண்ட மனநிலை பீடோபைல் சொல்லுவாங்க. இது ஒரு கடுமையான, சட்டவிரோதமும் ஒழுக்க ரீதியாகவும் மிகப் பெரிய குற்றம். குழந்தை பாதுகாப்பு சட்டங்களில் மிகவும் கடுமையாக பார்க்கப்படுகிறது. ஒரு புகார் தர சொல்லட்டுமா?” என்று மிரட்டினான்.

இமான் தாயாரோ அக்ஷயா காலை பிடித்து, “அய்யோ… அப்படியெல்லாம் பண்ண வேண்டாம். இனி இமானை நான் கண்டிக்கறேன்.” என்றார்.

  இமானும், “சாரி… நான்… நான் இனி தப்பை யாரிடமும் செய்ய மாட்டேன்” என்று வாக்கு தந்தான்.

   “இதான்.. என்னோட கடைசி வார்னிங். இதை தவிர்த்து உன்னை என்‌ அக்ஷயா ஸ்கூல்ல கூட பார்க்க கூடாது. அப்படி பார்த்தா சாவடிச்சிடுவேன். ஒழுங்கு மரியாதையா உனக்கான வேலை தேடி நீயா போயிடு. இல்லை அசிங்கப்பட்டு அவமானப்பட்டு வேலையில கீழ்தரமானவன்னு முத்திரை பதியும். இப்ப நான் போலீஸுக்கு போகாததுக்கு காரணம் அக்ஷயா குட்டியை எந்த இடத்திலும் பேசும் பொருளாக நிற்க கூடாதுன்னு தான்” என்றான் அயன்.
  
  இமான் அதற்கும் தலையாட்டினான்.
“அக்ஷயா… இனி எவன் இப்படி சாக்லேட் வாங்கி தந்தாலும் டாய்ஸ் வாங்கி தந்தாலும் நீ வாங்கக்கூடாது. குட்டச் பேட்டச் தெரியும்ல. அந்த இடத்துலயிருந்து கையை உதறிட்டு நீ என்னிடம் வந்து சொல்லு. ஓகே” என்றான்‌ குழந்தை அயன் காலை கட்டிக்கொண்டு “சரி அயலா” என்றாள்.

  இருசக்கர வாகனத்தில் அக்ஷயாவை ஏற்றிக் கொண்டு வீடு  வந்து சேர்ந்தான் அயன்.

“அவனை அடிச்சி மிரட்டி வார்னிங் கொடுத்திருக்கேன். இனி அப்படி செய்ய மாட்டான். அதோட ஸ்கூல்ல இருந்தே ரிஸைன் பண்ணிடுவான். இனி பயப்படாத.” என்று கூறினான்.

  ஜமுனா செல்வமும் ஆதினி கலக்கமாய் வாசலை கண்டு நின்ற கோலத்தில் என்ன ஏதென வந்து விசாரிக்க, அவளும் குழந்தையிடம் இமான் செய்த செயலை கூறி அழுதிருந்தாள்.

“பிரதாப் இருந்தா என் குழந்தைக்கு இந்த நிலை இருக்குமா?” என்று வருந்தினாள்‌

ஜமுனாவோ, “கட்டையில போறவன்‌. குழந்தையிடம் என்ன காமத்தைடா தேடுவிங்க. கலிகாலம் ஆதினி.
  குழந்தையை இனி நாம தான் கூடவே வச்சி காப்பாத்தணும்.” என்று ஆறுதலுரைத்து இருக்க, அயன் வரவும் மூவரும் அயனுக்கு நன்றி நவில்ந்தனர்.

மயான அமைதியில் அவ்விடம் மூழ்க, அக்ஷயாவோ “அயலா… நீ காட்டின வீடியோவுல அப்பா அம்மாவை தவிர யார் தொட்டாலும் முத்தமிட்டாலும் நோ’ சொல்ல சொல்லியிருக்கு. நீ என்னை கன்னத்துல முத்தமிடற. அப்ப நீ எனக்கு யாரோவா…” என்று கேட்க, அயன் உடைந்து நின்றான்.

   அக்ஷயாவாகவே மீண்டும்  “அயலா… அப்பா தானே பேபிக்காக பைட் பண்ணுவார். அப்பா தானே பேபியை புரடெக்ட் ப்ணணுவதா சொல்லுவ. என்னை இப்ப புரடெக்ட் பண்ணியது நீ தான். அப்ப.. என்‌ அப்பா நீங்க தானே?” என்று கேட்டாள்.
  
  குழந்தைக்கு எது சரி எது தவறென்றதை காணொளியாக போட்டு காட்டினால் அவள் ஒன்றை அறிந்து கேள்விக் கேட்க அயன் திக்குமுக்காடினான்.

  ஆதினி குழந்தையிடம் “அக்ஷயா… என்ன பேசற?” என்று இழுக்க, குழந்தையின் மற்றொரு கையை பிடித்தபடி, ”உனக்கு நான் அப்பாவா தெரியறேன்னா நான் அப்பா தான். உனக்கு நான் பிரெண்ட் அயலாவா தெரிந்தா அயலா. நீ என்னை என்ன வேண்டுமென்றாலும் நினைச்சிக்கலாம்” என்று நெற்றியில் முத்தமிட்டான்.

ஜமுனாவோ அயலனை ஒரு மார்க்கமாக பார்வையிட, செல்வமோ, ஒரு புன்னகையுடன் கணிவாக பார்த்தார்.

ஆதினி மட்டும் சிலையாக நின்றாள்.

ஆதினி வாசலில் நின்று பேசியவர்கள், குழந்தையை அழைத்து வீட்டில் அவளது அறைக்குள் சென்று கதவை தாழிட்டு கொண்டாள்.

  ஜமுனாவை பார்த்து, “நான் சொன்னதில தப்பில்லை தானே ஆன்ட்டி” என்று அபிப்ராயம் கேட்டு முடித்தான்.

“அதில்லை தம்பி… என்னயிருந்தாலும் ஊர்ல அரசல் புரசலா பேசறது தான். ஆனா நாங்க அதை பெரிதா எடுத்துக்கலை. காரணம் உங்க மனசுல எந்தவிதமான சலனமும் இல்லை என்றதால தான். ஏதாவது மனசுல உறுத்தினா அடுத்த நிமிஷம் வீட்டை காலிப்பண்ணிடுங்க தம்பி.” என்று ஜமுனா செல்ல செல்வமோ, “நீங்க எதுவும் யோசிக்காதிங்க.” என்று ஆதினி வீட்டை காட்டி வேலையை பார்க்க கூறினார்.‌

அயனும் தான் பேசியது தவறா? எதுவும் தவறாக பேசியது போல தோன்றவில்லையே. ஆனால் ஆதினி கதவை அடைத்துவிட்டாள். ஜமுனா ஆன்ட்டி ஏதோ பூடகமாக பேசுகின்றார். ஏதோ செல்வம் அங்கிள் புரிதல் இருப்பதால் பிழைத்தேன்.

இந்த அக்ஷயாவுக்கு நான் பாதுகாவலனாக இருப்பதில் தவறென்ன. இமானை எல்லாம் அடித்து துவைத்து எடுத்திருக்க வேண்டும். ஆனால் லேசாக அடித்து வந்தது போல தோன்றியது‌. உயிரை உருவியிருக்க வேண்டுமோ? என்று ஆக்ரோஷம் உருவானது.
 
   ஆனால் இனி பள்ளியில் இருக்க மாட்டானென்று உறுதியாக தெரிந்தது.  ஆதினி அறையை கவனித்தான். ‘தி டோர் க்ளோஸ்டு’ என்பார்கள். அவளது கதவு மூடப்பட்டுள்ளது. அதை தட்ட தனக்கு எவ்வித உறவு உள்ளது? அதனால் வேடிக்கை பார்த்தவனாக அக்ஷயா வருகைக்கு காத்திருந்தான்.

-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top