அயலா… அயலா…-6

அத்தியாயம்-6

    அடுத்த நாள் ஆதினியே அக்ஷயாவை பள்ளிக்கூடம் அழைத்து சென்றாள். அயனும் ஒரே பள்ளிக்கூடம் என்பதால் மாலையில் அழைத்து வருவதால் விட்டுவிட்டான்.‌

  ஆதினி பள்ளிக்கு சென்ற தருணம், இமான் அலுவலகத்தில் அவனாகவே வேலை விட்டு நீங்குவதாக கூறி பணியிலிருந்து விலகினான்.‌

ஆதினி அவனை கடக்கும் போது, “உனக்கெல்லாம் கல்யாணமாகி குழந்தை பிறந்தா என்னடா பண்ணுவிங்க? அந்த குழந்தையை ஹாஸ்பிடல்ல பிறந்து கையில கொடுக்கறப்ப, இது நம்ம குழந்தை பிறந்த மேனில ரத்தமும் சதையுமா வந்திருக்குனு சந்தோஷமா தூக்குவியா? இல்லை… பிறந்த குழந்தையோட பார்ட்ஸ் ஆப் பாடி எப்ப வளரும், எப்ப தொடலாம்னு யோசிப்பியா?” என்று கேட்க இமானோ “சா..சாரி மேடம்” என்றான்.

  “தூ” என்று துப்பிவிட்டு ஆதினி செல்ல, இமான் அக்கம் பக்கம் சுற்றி பார்த்து வேகமாய் இடத்தை காலி செய்தான்.

அக்ஷயாவிடம் இமான் சார் செய்ததை வெளியே சொல்லாதே என்று கூறி அழைத்து வந்ததாலும்* குழந்தை அவளோ தனது சக தோழிகளை கண்டும் விளையாட்டுதனத்தில் மூழ்கினாள்.

   இன்று முழுவதும், அக்ஷயாவை யாராவது தொடுகின்றாரா? மடியில் அமர வைத்து கொஞ்சுகின்றாரா? இப்படியே பயந்து அடிக்கடி வந்து பார்வையிட்டாள்.

இதில் மாலை பள்ளி முடியும் நேரம் அவளாக குழந்தையை அவள் பாடம் நடத்தும் வகுப்பில் அமர வைத்து க்ரையான்ஸ் கொண்டு படம் வரைய வைத்தாள்.

  அக்ஷயாவின் மிஸ்ஸிடம் அயன் குழந்தையை பற்றி கேட்க, “ஆதினி மேடம் அவங்க குழந்தையை அவங்க கிளாஸ் நடத்தற இடத்துக்கு அழைச்சிட்டு போயிட்டாங்களே” என்று கூறினார்.

ஏனோ அவ்விடத்தில் அயன் தான் தவறு செய்தவனாக நின்றான்.

  வீட்டுக்கு வந்து செல்வத்திடம் கஷ்டத்துடன் உரைத்தான்.

“பாவம் ஒரு பக்கப் பழி ஒரு பக்கம் மாதிரி, இமானால என் கூட வர விடாம ஆதினி அக்ஷயாவை பிடிச்சி வச்சிக்கிட்டா” என்று வருந்தினான்.

செல்வமோ “இது தானே மனிதர்கள் பண்ற தவறே. அவங்களுக்கு என்ன நல்லவங்க கெட்டவங்க யார்னு ஸ்கேன் பண்ண தெரியுமா என்ன? நீ கவலைப்படாதே அயன். ஆதினி விரைவில் உன்னை புரிஞ்சிப்பா” என்று தேற்றினார்.

அயனும் ஆமோதிப்பாக அறையில் முடங்கினான்.

அக்ஷயா வரும்முன், அவளுக்கான பிடித்த உணவை செய்ய முயன்றான்.‌

பாஸ்தா செய்து அலங்கரித்து நிற்க, “அயலா.” என்று மகள் முதுகுபையோடு ஓடிவந்தவளை, “அக்ஷயா.. முதல்ல கை கால் கழுவிட்டு வா. பாலாத்தி வைக்கறேன்‌. இந்த சாண்ட்வெஜ் சாப்பிடு” என்று கடையில் வாங்கி வந்ததை எடுத்து வைத்தாள்.

அயனை கண்டும் அன்னையை கண்டும் குழந்தை விழித்து, அறைக்குள் சென்று உடை மாற்றி வந்து சாண்ட்வெஜ்ஜை சுவைத்தாள்.

அயனோ பாஸ்தாவை மூடிவைத்து, “அக்ஷயாவை நீயே கூட்டிட்டு போறதா இருந்தா ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே. நான் அங்க வந்து அவமானப்பட்டிருக்க மாட்டேன்” என்றான்.‌

ஆதினியோ ”நான் மறந்துட்டேன்” என்று பொய்யுரைத்தாள்.

அதற்கு அயனோ “பொய் சொல்றப்போ கண்கள் வலது பக்கம் பார்க்கும் ஆதினி.  உண்மை சொல்றப்போ இடது பக்கம் பார்க்கும்னு ஒரு பொதுவான நம்பிக்கை இருக்கு. அதோட முகத்தை பார்த்து பேச மாட்டாங்க. உதடு உலரும்.
  இப்ப நீ அப்படி தான் பண்ணற. உன் உதடு உலர்ந்த, வலது பக்கம் பார்த்து என் கண்ணை நேரா பார்க்காம பேசற” என்றான்.

ஆதினி வெடுக்கென அவனை முறைக்க, “நான் என் குழந்தையை எப்ப வேண்டுமென்றாலும் அழைச்சிட்டு போவேன். அதை உங்களிடம் சொல்லணும்னு எந்த அவசியமும் இல்லையே.” என்றாள்.

அயனோ விரக்தியான மென்னகையுடன், “கரெக்ட் ஆதினி. உன் குழந்தை… என்னிடம் சொல்லணும்னு எந்த அவசியமும் உனக்கு இல்லை. ஆனா குழந்தையை எப்பவும் நான் தானே அழைச்சிட்டு வீட்டுக்கு வந்து பாலாத்தி, ஸ்னாக்ஸ் தந்து விளையாட்டு காட்டி ஒரு கேர்டேக்கரா பார்த்துப்பேன். அங்க நான் போய் குழந்தையை கேட்டப்ப அந்த மேடம் அவங்க அம்மா வந்து அழைச்சிட்டு போயிட்டாங்கனு சொல்லறப்ப, எனக்கு எப்படி இருந்தது தெரியுமா?

  ஏதோ குழந்தையை நான் தப்பான நோக்கத்தோட பார்த்தது போல என்னை விரட்டற மாதிரி அசிங்கமா எனக்கு பீல் ஆச்சு” என்றான்.

“நான் அப்படி நினைக்கலை.” என்று உடனடியாக ஆதினி மறுத்தாள்.

  ”பின்ன… என்ன காரணம். அக்ஷயாவை என்னிடமிருந்து பிரிக்க வேற காரணம் இருக்கா?” என்றதும், “அவ உங்களை பிரதாப் இடத்துல வச்சி பார்க்கறா. அது எனக்கு பிடிக்கலை.” என்று அறைக்குள் முடங்கினாள்.

அயனுக்கு தற்போது ஆதினி பயப்படுவது புரிய துவங்கியது. ஒருவிதத்தில் தன்னை தவறாக நினைத்து ஒதுக்கவில்லை‌. தந்தை ஸ்தானத்தில் காணவும் அஞ்சுகின்றாளென்றதும் ஒரு நிம்மதி உண்டானது.

  ஆனால் உடனடியாக கதவை தட்டி அக்ஷயாவை பார்க்கவில்லை. அவனுக்கும் ஏதோவொன்று உள்ளுக்குள் வரிசையாக கேள்விகள் முளைத்திருக்க, அதற்கான பதிலை தேடிக்கொண்டிருந்தான்.‌

   இரண்டு நாட்கள் இப்படியே கழிய, அயன் பொருத்தான். ஆனால் அதுவோ ஒரு வாரம் இப்படியே தொடரவும், அயனால் பொருத்திருக்க முடியவில்லை.

ஆதினி அலுப்புடன் வருகின்றால், குழந்தைக்கு தேவையானதை தந்துவிட்டு, அறைக்குள்ளே மகளை வைத்து பாடம் சொல்லி தந்து மலைத்தாள். ஆதினியால் சோர்வை சமாளிக்க இயலவில்லை. அத்துடன் மகள் அக்ஷயா கேட்கும் கேள்விகளுக்கு பதில் தரவும் முடியவில்லை.

‘அயலா ஏன்மா என்னை கூப்பிட வரலை.’
‘அயலாவிடம் போய் விளையாடட்டுமா?’
‘அயலா தான் எப்பவும் பாடம் சொல்வி தருவார்’
‘ஏன்மா என்னை ரூம்லயே இருக்க சொல்லற?’
‘எனக்கு அயலாவிடம் போகணும்’ என்று அழாத குறையாக மகள் இதையே தினமும் கேட்க பொய்யாக மாறி மாறி காரணத்தை கூறி அறையில் தன்னுடன் வைத்துக் கொண்டாள்.

அப்படியே வெளியே வந்தாலும் கதவை வெளிப்புறம் தாழிட்டு சமையல் செய்து உணவை அறைக்கு சென்று சாப்பிடுகின்றாள்.

அயனுக்கு தேவையான உணவுகள் மட்டும் உணவு மேஜையில் பொறுப்பாக வைத்திருந்தாள்.

அன்று ஆதினி வீட்டிற்கு வரவும், அவளிடம் இதை பற்றி பேச காத்திருந்தான். உணவை கூட இன்று தொடவில்லை. அவளாக ஏன்‌ சாப்பிடவில்லை என்று கேட்டால் பேச்சு ஆரம்பிக்க வசதி என்று எண்ணினான்.

  ஆதினியோ அயன் சாப்பிடாமல் விட்டிருக்க, அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் குப்பையில் கொட்டினாள்.

  “ஒரு நிமிஷம்” என்றான்.‌

ஆதினி கால்கள் நின்றது.

“என்ன ஏன் அவாய்ட் பண்ணற ஆதினி?” என்றான்.‌

“நான் ஏன் உங்களை அவாய்ட் பண்ணும். நான் நானுண்டு என் வேலையுண்டுனு இருக்கேன் அயன்” என்றாள்.

அயனோ, “ஓ.. அப்படியா? எனக்கு அப்படி தெரியலை. இமான் மாதிரி என்னையும் நீ கீழ்த்தரமா நினைப்பது போல தெரியுது. அது எனக்கு வலிக்குது ஆதினி. உனக்கு என்னை பிடிக்காம போகலாம். ஆனா அக்ஷயாவை ஏன் என்னிடம் பழக விடாம தடுக்கற?
  அவ அப்பாவா என்னை பார்ப்பதா சொன்னது குற்றமா?

  அம்மா இல்லாத  ஒருவனுக்கு மனைவி அமைந்தா அவன் மனைவியை கூட அம்மாவா தான் பார்ப்பான். அப்படியிருக்க, அப்பா இல்லாத குழந்தை அக்ஷயா. அவளுக்கு என்‌ நட்பில் அப்பாவா பார்க்க விருப்பப்படறா. உனக்கு அது பொறுக்கலையா?” என்றான்.‌

  ஆதினியோ, “இங்க பாருங்க… அக்ஷயாவுக்கு அப்பாவா அம்மாவா நானே இருந்துப்பேன். என்னால அக்ஷயாவை தனியா வளர்க்க முடியும். அவளுக்கு உங்களை போல ஒருத்தர் அன்பா பார்த்து பேசி பழகி என்னைக்காவது பிரிந்தா மனசு வலிக்கும். அதுக்கு இப்பவே இப்படி பழகறது நல்லதுயில்லையா?

  பிரதாப் இறந்து பத்து மாசமாக போகுது. முன்ன என்னால அந்த துயரத்தை தாங்கயியலாத அளவில் துடிச்சேன். அக்ஷயாவை பார்த்துக்க முடியலை. இப்ப பிரதாப் இறப்பை ஏற்று சமுதாயத்தை எதிர்த்து வாழ கத்துக்கிட்டேன். இனி அக்ஷயாவை நானே பார்த்துப்பேன்.

உங்க நண்பனோட மரணத்தை நீங்களும் அக்சப்ட் பண்ணி உங்களுக்கான வாழ்க்கையை வாழ பாருங்க. நீங்களும் எத்தனை நாள் இங்க இருக்க முடியும்?” என்றாள்.

  அயனுக்கு வியப்பாக இருந்தது. இந்தளவு ஆதினி பிரதாப் மரணத்திலிருந்து மீண்டு வந்து பேசுவது, அக்ஷயா பேசிய ஒரே வார்த்தையால். அக்ஷயா தன்னை அப்பா என்ற ஸ்தானத்தில் வைத்து பார்த்ததில் ஆதினிக்குள் ஏற்பட்ட மாற்றம். தன்னை ஒதுக்கி விலகி நிறுத்தி, பிரதாப் இறப்பை ஏற்று பேசுகின்றாளென வியந்தான்.

அயனோ தளர்வாக ”பத்து மாசம் ஆகிடுச்சா? அக்ஷயா என்னோட பழகி பத்து மாசம் ஆகிடுச்சா?” என்று உதிர்த்தான்.

மீண்டும் விரக்தியாக ஆதினியிடம், “நீ பிரதாப் மரணத்தை ஏற்று பழக ஆரம்பிச்சிட்ட. நான் அக்ஷயாவை விட்டு வாழ தெரியாம முழிக்கறேன் ஆதினி. எனக்கொரு வழி சொல்லு?” என்று நின்றான்.

ஒருத்தரை மறக்க பத்து மாசமாவது மெனக்கெட்டு நம்ம கட்டாயத்துக்காகவாது மற்ற வேலையில் நம்மளை திணிக்கறோம். எனக்கு பிரதாப் மரணத்தை விட, அக்ஷயா என்னோட பழகியது தான் மனசுல இப்ப இருக்கு. எந்தவிதமான கால அவகாசம் கூட தராம, அக்ஷயாவை விட்டு பிரிந்து போனு சொல்லற. என்னால எப்படி முடியும். நான் பெறாத குழந்தையா தான் அவளை பார்க்கறேன். அப்படியிருக்க… நீ எனக்கு தர்ற தண்டனை ரொம்ப அதிகம் ஆதினி.” என்று கூறினான்.‌

  ஆதினிக்கு பகிரென்றது. இந்த கோணத்தில் யோசிக்கவேயில்லை. ஒருவர் இழப்பை ஈடுக்கட்ட ஒருவரை மனதில் புகுத்தி, அந்த உலகத்தையும் அழிக்க முயன்றதாக தான் ஆதினி நினைத்தாள். அயனின் சிறு உலகத்தை பிடித்துக் கொண்டு கதவை அடைப்பது போல தானே ஆகும்.
 
   ஆனால் அதை பார்த்தால் பிரதாப் இடத்தை அல்லவா அக்ஷயா அயனுக்கு தாரைவார்த்தாள்.

  இதே ரீதியில் போனால் சரிப்பட்டு வருமா?

   “இங்க பாருங்க… உங்களை அக்ஷயாவிடமிருந்து பிரிப்பது என்‌ நோக்கமில்லை. நீங்களும் ஒரு நாள் அவளை விட்டு போறது உறுதி. அதை அப்பறமா அவ மனசுல ஏமாற விடக்கூடாதுல.

அவளுக்கு பிரதாப் போல நீங்களும் ஒரு கட்டத்தில் இல்லை என்றதை தாங்க முடியாது. அதுக்கு இப்பவே தவிர்த்திட்டா… அவளுக்கு அம்மா மட்டும் என்ற எண்ணம் சரியா விதைக்கப்படும்.” என்றாள்.

  “பிரதாப் போல அக்ஷயாவை நான் பாதில விட்டுட்டு போக வரலை. அவளுக்கு நான் அப்பாவா எப்பவும் இருப்பேன்.” என்றான்‌ அயன். அவன் பேசி முடிக்க ஆதினி அதிர்ந்தவளாக என்ன விதத்தில் இதை எடுத்துக் கொள்வதென்று புரியாமல் நின்றாள். பாதில விட்டுட்டு போக மாட்டேன் என்றால், அப்பொழுது வாழ்நாள் முழுவதும் கூடவே நிற்பானா? அயனுக்கென தனி வாழ்க்கை இல்லாமல்?

-தொடரும்.

பிரவீணா தங்கராஜ்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top