அத்தியாயம்-12
சாமுண்டிஸ்வரி பேத்தியை குளிப்பாட்ட காலில் வைத்து வெந்நீரை ஊற்றவும், தவமலரோ கணவன் கதிரிடம், “ஏங்க தண்ணீ ரொம்ப சுடுதுங்க.. கை வச்சாலே பொத்துடும் போல இருக்கு. அத்தை அதுல போய் குழந்தைக்கு தலைக்கு ஊத்துது. கொஞ்சம் பச்ச தண்ணியை கலந்து ஊத்த சொல்லுங்க” என்று பயந்து பேச, இரண்டு நாளாக இதையே கூறியவளை முறைத்தபடி, வெளியே வந்தவன், அன்னையிடம் நேரிடையாக பேசாமல் கையை அலம்புவது போல வந்து சுடத்தண்ணியில் கையை விட்டவன் அலறினான்.
“எம்மா… தண்ணி கொதிக்குது. இதை போய் குழந்தைக்கு ஊத்தற” என்று பதறினான்.
“உன் பொண்டாட்டி சொல்லி கூட்டிட்டு வந்தாளா? ஏன்டா… உன்னை வளர்த்த எனக்கு என் பேத்தியை வளர்க்க தெரியாது. பதினெட்டு வயசு பிறந்ததும் உன் பொண்டாட்டி பெரிய மனுஷி ஆயிட்டாளா?” என்று கத்திவிட்டு, ”நீ தான் அய்யோ அம்மானு கத்துவ. உன்பொண்ணு குளிஞ்சிட்டு சுகமா தூங்கும். படுத்தே கிடந்தா முதுகு நோவாது. குழந்தைக்கு சுடசுட ஊத்தினா தான் மேல் வலியில்லாம சுகமா தூங்கும். இதெல்லாம் இவளுக்கு என்ன தெரியும். பேசாம பாலை கொடுத்தமா ரெஸ்ட் எடுத்தமானு இருக்க சொல்லு.” என்று அதட்டினார்.
சாமுண்டிஸ்வரி பேச்சுக்கு அடுத்து அவன் என்ன பேசுவான். குழந்தை சுடத்தண்ணி ஊத்தவும் வீறிட்டு அழுதது. தவமலருக்கு கண்ணீர் அரும்பியது.
ஆனால் சாமுண்டிஸ்வரி சொன்னது போல குளித்துக் கொண்டிருக்கும் பொழுதே குழந்தை சுகமாக உறங்கி வழிந்தது.
தினமும் குழந்தை குளித்து முடிக்கவே தவமலர் வாங்கி கொண்டு பால் கொடுத்திட, கதிரவன், “குழந்தைக்கு தோல் எல்லாம் ஒன்னும் ஆகலை. நான் இரண்டு மூன்று பேரிடம் கேட்டேன். அப்படி தான் சுடத்தண்ணி ஊத்துவாங்களாம் நீ கவலைப்படாத. எங்கம்மா நல்லா தான் பார்த்துக்கோம்.” என்று நெருக்கமாய் அமர்ந்தான்.
தவமலரோ “நீங்க பாட்டுக்கு பக்கத்துல வந்து படுக்கறிங்க. அத்தை அதுக்கும் திட்டும். ஏற்கனவே நர்ஸக்கா வேற சொல்லி அனுப்பிச்சு. இரண்டாவது குழந்தையாவது தள்ளி பெத்துக்கோ. பொசுக்குனு வயித்தை தள்ளிட்டு வந்து நிற்காதனு.
போங்க… அங்க..” என்று அவன் நெஞ்சில் கைவைத்து தள்ள முற்பட, “முன்ன விட அழகாயிருக்க மலரு. லேசா உடம்பு போட்டிருக்க” என்று கழுத்தில் முத்தமிட்டான்.
சாமுண்டிஸ்வரி கணக்கும் சத்தம் கேட்க பதறி விலகி, “மதியம் கருவாட்டு குழம்பே போதும்” என்று ஓடினான்.
தவமலருக்கு கணவனை கண்டு சிரிப்பு பொங்கியது.
மனம் நிறைவாக சிரித்திட, தலையில் கொட்டு விழுந்தது. சாமுண்டிஸ்வரி தான் நொறுக்கென கொட்டினார்.
“ஏன்டி.. ஒரு மாசமா சொல்லிட்டு இருக்கேன். என் பையன் எதிர்க்க குழந்தைக்கு பால் தந்தா துண்டு எடுத்து போட்டு கொடுன்னு. நீ பாட்டுக்கு சொல்லறதை கேட்கறதில்லை.
கண்ணுபடும்டி.. விவஸ்தை கெட்டவளே.
அந்த நர்ஸு பொம்பள எப்படி திட்டி அனுப்பிச்சு. அடுத்த குழந்தை உடனே வரக்கூடாதுனு. அறிவில்லை..” என்று கண்டிக்க, “அவர் தானே அத்தை பக்கத்துல வந்து உட்காருறார்.” என்றாள் தலையை தேய்த்துக்கொண்டு.
“ஆஹ்… அவன் தான பூனை மாதிரி சுத்தி சுத்தி வருவான். பிள்ளை பெத்துக்கறது நீ தானே. உனக்கு அறிவில்லை.” என்றார்.
“இனி கவனமா இருக்கேன் அத்தை” என்றாள்.
“ம்கூம்.. என்னத்த கவனமா இருப்பியோ” என்று சாமுண்டிஸ்வரி சென்றிட, குழந்தை உறங்க வைக்க தொட்டிலில் போட்டு தாலாட்டினாள்.
மதியம் போல கதிரவன் வந்தான். சற்று மெதுவாக… தயங்கியபடி, “அதுக்குள்ள வந்துட்டிங்க” என்று பாத்திரம் தேய்த்தவள் கதிரவனுக்கு பின்னால் இருந்தவரை கவனித்தாள். ஆவுடையப்பன் தான் தலைகுனிந்தபடி மகளை பார்க்க தயங்கி வந்தார்.
“பக்கத்து டவுன்ல இருந்தார். கூட்டிட்டு வந்தேன். சாப்பாடு போடு” என்று மட்டும் கூறினான்.
அவரோ லேசாக குளித்துவிட்டு கதிரவன் தந்த உடையை அணிந்தார். உடலெங்கும் அழுக்காய், போட்டிருந்த உடையும் கிழிசலாய் இருந்தவர் குளித்து முடித்து மாற்றுதுணி அணிந்து சாப்பிடும் போது “நல்லாயிருக்கியா தாயி” என்று வாய் திறந்தார் ஆவுடையப்பன்.
“எங்கப்பா போன.. ஏன் இவ்ளே நாளா யாரையும் பார்க்க வரலை. அங்க சித்தி தனியா லதாவையும் சுரேஷையும் வளர்க்குது தெரியுமா? எனக்கு பொண்ணு பிறந்திருக்கு அதுவாது தெரியுமா?” என்று கேட்டாள்.
தொட்டிலில் தூங்கிய குழந்தையை கவனித்தார். ஆனால் அழுக்கு கையோடு தூக்கவில்லை.
“மலரு… முதல்ல சாப்பாடு போடுடி.” என்று அதட்டினான்.
கதிரவன் ஆவுடையப்பனை காணும் நேரம் அவர் பிச்சை கேட்டு நின்றியிருந்தார். அதுவும் சாப்பிட்டு பலநாள் ஆனதாக… அதனால் முதலில் சாப்பாடு போடவே கூறினான்.
தவமலர் சாப்பாட்டை போட்டு விட்டு அன்னத்திற்கு அழைத்து பேசினாள்.
கணவரோடு தந்தையை ஊருக்கு அனுப்பி வைப்பதாக பேசினாள்.
சாமுண்டிஸ்வரியோ ஆவுடையப்பனை நேரில் சந்தித்தால் நாக்கை பிடுங்கும் விதமாக நாலு கேள்வி கேட்க இருந்தவரோ பிச்சைக்காரனை போல வந்து நின்றவரை கண்டு, பேச்சிழந்து போனார். கண்ணன் தான் ஏன் இப்படி போனிங்க. ஏதோ தீபாவளிக்கு வந்து நாங்க போனது எல்லா வீட்லயும் உள்ள பிரச்சனை தானே?” என்றார்.
எத்தனையோ வீட்டில் மருமகனுக்கு தீபாவளி சீர் செய்ய முடியாமல் பெண் வீட்டார்கள் அல்லல் படுவது உண்டு தான். அதற்கா வீட்டை வீட்டு ஓடிவிடுவது என்று கேட்டு அறிவுரை வழங்கினார்கள்.
தவமலர் எதுவும் சொல்லாமல் முட்டை பொரியலை அள்ளி வைத்தாள்.
அதிகம் பேசாமல் ஆவுடையப்பனும் இருக்க, தூங்கி எழுந்த குழந்தையை மட்டும் தந்தையிடம் நீட்டினாள்.
அவரோ சட்டை பேக்கெட்டை தடவிவிட்டு, குலுங்கி குலுங்கி அழுதார்.
இந்த தாத்தா பத்து பைசா கூட உனக்கு தர வக்கு இல்லாதவனா உன்னை பார்க்க வந்துட்டேன்” என்று அழுதார். கதிரவனும் கண்ணனும் சமாதானம் செய்து முடிக்க, தவமலரோ “ஏன்பா இப்படியெல்லாம் பேசற.” என்று துடித்தாள்.
அதற்கே சமாதானம் செய்து ஆவுடைய்ப்பனிடம் பேசி இனியாவது அன்னத்துடம், லதா சுரேஷ் குழந்தைகளுடனும் நல்லபடியாக வாழ அறிவுருத்தி கதிரவனே கொண்டா மலரின் ஊருக்கு சென்று விட வந்தான். மலர் குழந்தை பெற்ற உடம்பு என்பதால் இன்னமும் எங்கேயும் சாமுண்டிஸ்வரி அனுப்பவில்லை.
தந்தையிடம் தன்னிடம் உள்ள காசை சட்டை பையில் வைத்து, “செலவுக்கு வச்சிக்கோப்பா” என்றாள்.
ஆவுடையப்பனோ மகளது கையில் முகத்தை புதைத்து, நான் செய்த தப்புக்கு யாரிடம் மன்னிப்பு கேட்கணும்னு தெரியலை மலரு. ஆனா அந்த தப்பு என்னை வாழ விடமாட்டேங்குது. முடிஞ்சா இந்த அப்பனை மன்னிச்சிடு” என்று கண்ணீரால் மகளது கையை நனைத்தார்.
தவமலருக்கு அவர் சொல்ல வருவது புரிந்தும் எவ்வித வார்த்தையும் உதிர்க்காமல் நின்றாள். அவளுக்கு தான் அந்த விஷயம் தெரியுமே. அவள் குழந்தையாக இருந்த சமயத்தில் அவள் பார்க்க அன்னை ராசாத்தி மண்ணெண்ணெய் ஊற்றி தீப்பெட்டியை பற்ற வைக்க, முயன்றார்.
ஆனால் தீப்பெட்டி கீழே விழுந்து தண்ணி குடத்தில் நனைந்தது.
தவமலர் அழவும் நொடியில் ராசாத்திக்கு தான் செய்ய நினைத்த விபரீதம் புரிய தற்கொலை எண்ணத்தை மாற்றிடவே நினைத்தார். “அய்யோ… என்ன தப்பு பண்ண பார்த்தேன். என் குழந்தை அனாதையா போகுமோ. தப்பு தப்பு. நான் சாக மாட்டேன்” என்று புலம்பியவரை தான் ஆவுடையப்பன் அந்த நேர கோபத்தில் சண்டையை மனதில் வைத்து, பீடி பற்ற வைத்த தீப்பெட்டியை உரசி, ஜன்னல் வழியாக வீச, ராசாத்தி மேல் நெருப்பு பற்றி எரிந்தது.
அந்த வயதில் தவமலருக்கு தாயே தற்கொலை செய்துக்கொண்டதாக தான் நினைத்தாள். தந்தை ஜன்னல் வழியாக வீசிய தீக்குச்சி கண்ணில்படவில்லை.
ஆனால்… தவமலர் பத்தாவது படிக்கும் போது அன்னத்திடம் சண்டையிட்டு குடித்துவிட்டு உலறியதில், “உன்னையும் அந்த சிறுக்கி ராசாத்தியை எரிச்ச மாதிரி எரிக்கணும்டி. அன்னிக்கு அவ கடைசி நேரத்துல தீப்பெட்டி தண்ணில விழுந்து சாகற நினைப்பை தவிர்த்தா. நான் தான் ஜன்னல் வழியா தீக்குச்சி உரசி அவ மேல போட்டேன். அவ என் கையால செத்தா. நீயும் ஒருநாளைக்கு அது போல சாகப்போற பாரு” என்று பேசியதை கேட்டவளால், தந்தையின் முக்ததை பார்க்க பிடிக்கவில்லை.
எத்தனை அன்பாக தந்தையை பார்த்து வளர்ந்தவளுக்கு தந்தையின் கையால் தாய் இறந்த செய்தியால் அந்த வீட்டிலிருந்து வெளியே வரவே துடித்தாள். இன்று கதிரவன் மனைவியாக நன்றாக வாழ்ந்தாலும், தந்தை காட்டிய பாசம் ஒருபுறம் இருந்தாலும், தாயை கொன்றவர் என்ற பார்வையும் ஆவுடையப்பனை பார்க்க, ஆவுடையப்பனுக்கு யாருக்கும் தெரியாத தன் குற்றம் மகள் அறிந்து தான் மணமாகி இங்கே வந்துவிட்டாளென்று தீபாவளி அன்று புரியவும் நொறுங்கிவிட்டார்.
அவருக்கு ராசாத்தி இறந்தப்பின் கிடைத்த வாழ்வும் சொல்லிக்கொள்ளும் விதமாக இல்லை.
இதில் ராசாத்தியோ என் இறப்புக்கு யாரும் காரணமில்லை என்று போலீஸிடம் தெரிவித்திருக்க, இன்றுவரை குற்றவுணர்வில் மறுகியவர், மகள் முன்னும் நிமிர்ந்து பார்க்க மனமின்றி கண்காணாத இடமாக பரதேசியாக வாழ்ந்தார்.
இன்று தான் கதிரவன் மாமனாரை ஊரில் கொண்டு வந்து விட்டுவிட்டு, அன்னத்திடம் “கொஞ்சம் நல்லா பார்த்துக்கோங்க. டவுன்ல பிச்சையெடுத்துட்டு இருந்தார். மனசுல என்னத்தையோ போட்டுட்டு உழப்பறார். வர்றேன்” என்று சென்றான்.
அன்னமோ “எங்கயா போன.. என்னய்யா இப்படி வந்துயிருக்க.” என்று அழுதாலும், சுரேஷ் லதா தந்தையை கண்டு பயந்து நின்றார். அந்தளவு முகத்தில் தந்தையை தேட வேண்டியிருந்தது.
எப்படியோ வீட்டிற்கு வந்துவிட்டதாக அன்னம் மகிழ்ந்தார்.
இரண்டு வருடத்திற்கு பிறகு….
சாமுண்டிஸ்வரி “ஏன்டி… இரண்டு குழந்தையை தூக்கிட்டு இப்ப உங்க அப்பன் வீட்டுக்கு போகணுமா?” என்று அதட்டினார்.
தவமலரோ “அத்தை.. லதா வயசுக்கு வந்திருக்குனு சித்தி சொல்லுச்சு. உங்களுக்கே தெரியும். அப்பா… திரும்ப கிடைச்சி ஒரு வாரத்துல மறுபடியும் காணாம போயிடுச்சு. இந்த இரண்டு வருஷமா நாமளும் தேடறோம். அங்க பார்த்தோம் இங்க பார்த்தோம்னு சிலர் சொல்லறாங்க. நாம போனா ஆளேயில்லை.
அப்பா மறுபடியும் காணாம போனதுலயிருந்து சித்தி தானே வீட்டை கவனிக்குது. எனக்கு வேணுமின்னா அவங்க சித்தியா இருக்கலாம். லதாவும் சுரேஷும் என்னை வாய் நிறைய அக்கானு தானே சொல்லுதுங்க. அக்காவா இருந்துட்டு போகலைன்னா எப்படித்தை?” என்று இலகுவாக பேச கற்றறிந்தாள்.
“ம்கூம்… கல்யாணமான அப்ப உனக்கு பேச தெரியுமான்ற ரீதியில இருந்த. இப்ப வந்து பாருனு நிற்கற.
அந்த நர்ஸு பொண்ணு அவ்ளோ சொல்லியும் இரண்டாவது புள்ளைய பெத்துட்ட. இப்ப என்னையும் எதிர்த்து பேசற அளவுக்கு வளர்ந்துட்ட… எல்லாம் உன்னைய சொல்லக்கூடாது, என்னைய சொல்லணும்.” என்று மூன்று மாத கை குழந்தையான பேரன் மதிவாணனை தோளில் போட்டுவிட்டு, பேத்தி ரஞ்சிதாவை கையோடு இழுத்து சென்றார். தவமலருக்கு மூத்த குழந்தை ரஞ்சிதா பிறந்தப்பின் கொஞ்ச காலம் மட்டுமே கதிரவன் அருகே வராமல் இருந்தான். பிறகு வயசு கோளாறில் தவமலரை நெருங்க, அவளுமே கதிரவனை நெருங்க விட்டதன் விளைவு, மதிவாணன் பிறந்துவிட்டான்.
ரஞ்சிதா நன்றாக நடக்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டாள். ஓரளவு மழலை மொழியில் பேசவும் செய்வாள். சாமுண்டிஸ்வரியும் லதாவின் மஞ்சள் நீராட்டு விழாவுக்கு தான் கிளம்பியிருந்தார்.
வெளியே வந்ததும், பேத்தி ரஞ்சிதாவை தாத்தா கண்ணன் தூக்கி கொண்டார்.
தவமலரோ சேலையை நன்றாக கட்டிவிட்டு, அலங்காரம் முடித்து, கண்மையை வைக்க கண்ணாடியில் ஊற்று நோக்கி வைத்தாள்.
கதிரவனோ சட்டையை மாட்டியபடி வந்தவன், மாநிறத்தில் அவனை இழுக்கும் இடையை கிள்ளி வைக்க, துள்ளி குதித்தாள்.
“கையை வச்சிட்டு சும்மாயிருங்க. பேமிலி பிளான் எல்லாம் பண்ணியிருக்கு.” என்று கண்டித்தாள். அதான் பண்ணியாச்சுல” என்று கூறியவனை, “ஏய் மலரு… கதிரு” என்று சாமுண்டிஸ்வரி அழைப்பில் “வந்துட்டேன்மா” என்று ஓடினான்.
குடும்பமாய் டிராக்டரில் தான் ஊருக்கு செல்ல அமர்ந்தார்கள். இம்முறை கண்ணன் பேத்தியுடன் விளையாட, சாமுண்டிஸ்வரி பேரனுக்கு வெயில் படாமல் பாதுகாக்க, தவமலரோ வைகை ஆற்றங்கரை வந்ததும், “என்னங்க என்னங்க நிறுத்துங்க” என்று உத்தரவிட்டாள்.
”என்னடி” என்று நிறுத்திவிட்டு கேட்க, கொண்டு வந்த புதுக்குடத்தில், வைகை தண்ணியை குடத்துல பிடிச்சிட்டு போவோங்க. லதாவுக்கு மஞ்ச தண்ணி ஊத்தறப்ப இந்த வைகை தாயோட தண்ணியும் ஆசிர்வாதமா அமையும்” என்று கேட்க, “என்னமோ பண்ணு” என்று காத்திருந்தான்.
குடத்தை எடுத்துக்கொண்டு வைகை படிக்கட்டில் புதுச்சேலை கொஞ்சம் போல நகையும் பூவுமாக, நடந்த தவமலர், தண்ணீரில் தன் முகத்தை பார்த்தாள்.
வைகை ஆற்றில் அவளது முகமே அவளது நிறைவான வாழ்வை பறைச்சாற்ற, “நான் சந்தோஷமா இருக்கேன் வைகை தாயே. என் தங்கை பெரிய மனுஷி ஆகிட்டா… எங்கப்பா திரும்ப காணாம போனவர் இன்னமும் வரலை. பெத்தவங்க ஆசி முக்கியம். எனக்கு எங்கம்மா ராசாத்தி ஆசி கிடைக்கலை.
இப்ப லதாவுக்கு எங்கப்பாவோட ஆசி கிடைக்கலை. ஆனா எனக்கு அன்னையா இருந்த, உன்னோட தண்ணியை கொண்டு போறேன். அவளும் வாழ்க்கையில நல்லபடியா வாழ அருள்புரி” என்று தண்ணீரை நமஸ்கரித்து குடத்தில் நீரை நிரப்பினாள். அதற்குள் கதிரவன் கூடவே இறங்கி வந்து குடத்தை தூக்க உதவினான்.
தவமலரோ தண்ணீரை கையால் அள்ளி கதிரவன் மீது லேசாக தெளித்து விளையாட, கதிரவனோ குடத்தில் கையை விட்டு அந்த நீரை தவமலர் மீது தெளித்து சிரித்தான்.
“என்னடா விளையாட்டு வேண்டிகிடக்கு. என் பேரன் கண் முழிச்சிட்டான். வெயில் வேற படுது விரசா.. வீட்டுக்கு வண்டியை விடுடா.” என்று அதட்டவும் தவமலர் கதிரவன் இருவரும் டிராக்டரில் ஏறினார்கள்.
ஆவுடையப்பன் இல்லாத இடத்தில் அக்கா-மாமா என்று சபையில் நிற்கும் கடமை தவமலருக்கு இருக்கின்றதாக தவமலர் கதிரவனிடம் சொல்லி வைத்திருக்க, மையலிட்ட சிற்பம் தனக்கிட்ட கட்டளையை நிறைவேற்றும் சராசரி ஆணாக கதிரவன் தவமலரோடு பொறுப்பாக மாறினான்.
ஆவுடையப்பன் திரும்பி வருவாரா? இல்லையா என்ற பெரிய கேள்விக்குறி மனதை அரித்தாலும், தவமலர் வாழ்வில்… இனி எல்லாம் சுபமே!
~சுபம்~
-பிரவீணா தங்கராஜ்.
உண்மை சம்பவத்தின் அடிப்படையில் கற்பனை கலந்து புனையப்பட்ட கதை. கண்மணி இதழில் வெளியானது.
வாசிக்கும் அன்பான வாசகர்கள் உங்கள் பெயரை தளத்தில் Register login செய்து கருத்தை comments பகுதியில் கூறலாம்.
அல்லது
welcome corner பகுதியில் register login செய்வது எப்படி தரப்பட்டுள்ளது. மேலும் Novel Discussion (விமர்சனம் பகுதி)யில் விமர்சனம் எழுதலாம். முகநூலில் கதைக்கான குழுவில் ரிவ்யு அளிக்கலாம்.

சூப்பர். ..தவமலருக்கு கிடைத்த மாதிரி கணவர் குடும்பம் கிடைத்தால் எல்லா பெண்கள் சந்தோசமா இருப்பாங்க
Innum nirata thavamalar irukkanga… Ithe maari oru kudumbam kidaikuma na athu kelvikuri than…. Arumai sis super
பரவாயில்லை.. அம்புட்டு கஷ்டப்பட்ட பொண்ணு, இப்ப மாமனார் மாமியார் மெச்சும் மருமகளாவும், மணம் கொண்டவனே மயங்கும் மங்கையாவும் மாறி, ஊரார் மெச்சும் நல்லவொரு இல்லத்தரசியாவும் மாறிட்டாள் பாருங்களேன். சூப்பர்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Malar very bold girl. Super lovable.story sis. Well.narrayed sis. Exactly u have narrated the truth. In real life we can see so.many malar sis. Fantastic sis.