நின் பிரேமம் என் சிநேகம்-1


❤️நின் பிரேமம் என் சிநேகம்❤️

அத்தியாயம்-1

தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்
தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்
தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்
ஆடியிலே வெதை வெதைச்சோம் தங்கமே தங்கம்
ஐப்பசியில் களையெடுத்தோம் தங்கமே தங்கம்
கார்த்திகையில் கதிராச்சு தங்கமே தங்கம்
கார்த்திகையில் கதிராச்சு தங்கமே தங்கம்
கழனியெல்லாம் பொன்னாச்சு தங்கமே தங்கம்…

  பொங்கல் அதுவும், காலையிலேயே இந்த பாடலை டிவியில் ஒலிப்பரப்ப, அதை கேட்டவாறு, “பாட்டெல்லாம்.. அம்சமா சூழ்நிலைக்கு தகுந்தமாதிரி டிவில ஒடுது. இந்த அச்சு வெல்லத்தை வாங்க போனவனை காணோம்.” என்று வாசலில் எட்டியெட்டி பார்வையிட்டார் தீபா.

அச்சு வெல்லத்தை வாங்க சென்ற கௌசிக் இன்னமும் காணாமல் போக, வந்த கடுப்பை மறைத்து நின்றார்.

நல்ல நாள் அதுவுமாக அடுப்பில் பொங்கலை வைத்துவிட்டு அச்சுவெல்லம் வாங்குவது எல்லாம் தீபாவுக்கு பிடிக்காது. ஏற்கனவே பூஜைக்கு உண்டான பொருட்களும், காலையில் சமைக்க தேவையான பொருட்களும் வாங்கி வைத்திருக்க, அதை தான் எதிர்வீட்டிலிருந்து வந்த சிறுவன் இனிப்பு கட்டி என்று வாயில் எடுத்து போட்டுவிட்டான். என்ன தான் சிறுவன் என்றாலும்,  தெரியாமல் எச்சி வைத்திட, தீபாவுக்கு அதையே பொங்கலில் இடித்து நொறுக்கி போட மனமில்லை.

அதற்காக தான் கௌசிக்கை வாங்க அனுப்பினார்.
 
“அச்சுவெல்லத்தை வாங்கிட்டு வர சொன்னா… உங்க பையன் ஆளையே காணோம். நேரம் வேற ஆகுது. அடுப்புல பச்சரிசி சரியான அளவுக்கு வேகுது. இதை விட்டா குழைந்திடும்.
  கௌசிக்கு போன் போடுங்க. இல்லைன்னா.. எப்பவும் போல அந்த ஹ்ருதேஷ் வீட்டுக்கு போயிடுவான்.” என்று கணவர் செல்வராகவனிடம் எடுத்துரைத்தார்.

செல்வராகவனும் நல்லநாளில் மனைவியுடன் வாதம் நிகழ்த்தாமல், மகனுக்கு அலைப்பேசியில் அழைத்தார்.

மனைவி கூறியது போல கௌசிக்கிற்கு பெரும்பாலும் நாயகன் ஹ்ருதேஷ் முன்னால் வந்தால் உலகத்தையே மறந்திடுவான்‌.
  அந்தளவு நண்பர்கள் இணைப்பிரியாதவர்கள்.

  கௌசிக் கல்லூரில் காலத்தில் பார்டர் பாஸில் அரியர் வைத்திருப்பான். அதை பற்றி வருந்தப்படமாட்டான்.‌ ஆனால் ஹ்ருதேஷ் எண்பது மார்குக்கு குறைவென்றாலே கௌசிக் வாடும் ஜென்மம்.
 
  ஹ்ருதேஷ் கூட, “ஏன்டா உனக்கு எத்தனை அரியர். அதுக்கு ஃபீல் பண்ணறதில்லை. எனக்கு மார்க் எயிட்டி பிரசன்டேஜ்ல குறைந்தா, அந்த புரப்பஸரை போட்டு இந்த திட்டு திட்டற?” என்பான்.

கௌசிக்கோ “அதென்னவோ தெரில மச்சி. நான் ஹார்ட் வொர்க் பண்ணறதில்லை. அதனால மார்க் போனா பீலாக மாட்டேங்குது. நீ நல்லா படிக்கறவன் உனக்கு குறைந்த மனசு வலிக்குடா” என்பான்.‌

  ஹ்ருதேஷ் அப்பொழுது எல்லாம் சிரித்து கொள்வான், நண்பனின் அன்பை வென்றதில்‌.

  இந்த நட்பின் ஆழம் அறிந்ததாலோ என்னவோ தீபாவுக்கு தன் மகன் வீட்டில் இல்லையென்றாலும், இருந்தாலும், அவனை திட்டும் நேரம்‌, இடம் பெறும் பெயர் என்னவோ, ஹ்ருதேஷ்… ஹ்ருதேஷ்.. ஹ்ருதேஷ்..

  செல்வராகவன் போனில் அழைக்கவும், “சொல்லுங்கப்பா” என்றான் கௌசிக்.‌

“எங்கடா இருக்க? அச்சு வெல்லத்தை வாங்கிட்டியா இல்லையா.  இங்க உங்கம்மா புலம்பி தள்ளறா. அடுப்புல பச்சரிசி வெந்து கொதிக்குது. அங்க கடைக்கு போயிட்டு அப்படியே ஹ்ருதேஷ் வீட்டுக்கு போயிட்டியா என்ன?” என்று கேட்க, “அப்பா.. நான் வீட்டுக்கு தான் வந்துட்டியிருக்கேன். நான் எங்கயும் போகலை?” என்றான்.‌

“சீக்கிரம் வா” என்று அணைத்த செல்வராகவன் மனைவியிடம் “வந்துட்டுயிருக்கான்மா கடையில தான் லேட்டு போல, ஹ்ருதேஷ் வீட்டு பக்கமெல்லாம் போகலையாம்.” என்றார்.

  இங்கு கௌசிக்கோ, ஹ்ருதேஷ் வீட்டின் கேட்டில், அவனை பற்றி ஹ்ருதேஷ் தந்தை ராஜலிங்கத்திடம்  நண்பனை  கேட்க, “எங்கயோ அவசரமா வெளியே போனான். உன்னை பார்க்கலையா கௌசிக்” என்று கேட்டார்.

  “இல்லையே அங்கிள். ஓகே அங்கிள் ஹ்ருதேஷ் வந்தா சொல்லிடுங்க” என்று புறப்பட, ஹ்ருதேஷ் அன்னை செல்வராணியோ “கௌசிக் உள்ள வா கொஞ்ச நேரத்துல சாமி கும்பிட்டு பொங்கல் சாப்பிடலாம்” என்று அழைக்க, தன் வீட்டிலும் பொங்கலுக்கு அச்சு வெல்லம் வாங்க கூறியிருக்க, “பரவாயில்லை ஆன்ட்டி. அப்பறமா வர்றேன்‌.” என்று மின்னலாய் புறப்பட்டான்.

  ‘மச்சி இவ்ளோ காலையில எங்க போனான்? ஒரெட்டு பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்’ என ஹ்ருதேஷ் இல்லையென்றதும் சோர்வாய் தனது வீட்டிற்கு பறந்தான்.

   அன்னை தீபாவிடம் அச்சு வெல்லத்தை நீட்டவும், மடமடவென இடித்து போட்டு இனிப்பு பொங்கல் வைத்து சாமி கும்பிட்டார்கள்.

இந்த குடும்பத்தை பற்றி அறிமுகப்படுத்துவது என்றால், செல்வராகவகன்-தீபா தம்பதியினருக்கு, மூத்த மகன் கௌசிக், இரண்டாவது மகள் மிதிலா.

  மிதிலா பெங்களூரில் பேஷன் டிசைனிங் இரண்டாம் வருடம் படிக்கின்றாள். அவள் இன்னமும் அங்கிருந்து பொங்கல் லீவுக்கு வரவில்லை.
அதனால் வீடு தற்போது கௌசிக்கால் மட்டுமே அதிர்கின்றது. அவளும் வந்துவிட்டால் அண்ணன் தங்கை அட்டூழியம் கூடுதலாக அதிகரிக்கும். வீடே அல்லோலப்படும் விதமாக தெறிக்க விடுவார்கள்.

    பூஜையறையில் மூவரும் சாமி கும்பிடும் நேரம் மணி அடித்து செல்வராகவன் மனைவி உதவிப்புரிய, தீபாவோ தீபாராதனை செய்தார்.

வீட்டிற்கு வெளியே, ஹ்ருதேஷ் பைக் சத்தம் கேட்டதும், ஜன்னல் வழியாக கௌசிக் எட்டிப்பார்க்க, தீபா முறைத்ததும் ‘கடவுளே’ என்று வணங்கி தொட்டு கும்பிட்டான்.

பூஜையறையில் மகனை வசைப்பாடக் கூடாதென்று தான் நினைத்தார். ஆனால் கௌசிக் ஜன்னலில் தெரிந்த இடைவெளியில் ஹ்ருதேஷை காண முயலவும், “ஏன்டா… ஒரு நல்ல நாள் அதுவுமா, வீட்டு மனுஷங்களோட ஒன்னா இருந்து நிம்மதியா சாப்பிட்டு இருக்கலாம்ல. இன்னிக்கும் இவன் எப்ப வருவான்னு அலைப்பாய பார்ககற. அவனுக்காவது அறிவு வேண்டாம்.” என்று திட்டினார்.

ஹ்ருதேஷோ “டேய் கௌசிக்… வீட்டுக்கு வந்து தேடினதா அம்மா சொன்னாங்க. எதுக்குடா தேடின?” என்றதும் தீபா கூடுதலாக முறைத்து, “வெல்லம் வாங்க அனுப்பினா காலையிலயே இவன் வீட்டு வாசல்ல நின்னுயிருக்க.” என்று ஆரம்பிக்க, நைஸாக ஹ்ருதேஷை கண்டு, “அம்மா.. ஹ்ருதேஷுக்கு பொங்கல் கொடுங்க” என்றான்.

  “ஏ… இப்ப தான் நானும் சாமி கும்பிட்டேன்‌. அம்மா நீ வந்ததா சொல்லவும் வந்தேன். அம்மா வர்றப்ப டிபன் பாக்ஸில பொங்கல், வடை, பாயசம் கொடுத்துவிட்டாங்க. ஆன்ட்டி… இந்தாங்க” என்று கூற, “அட.. வடையா?” என்று செல்வராகவன் ஆசையாக வாங்கினார்.

“ஆன்ட்டியை வடை போட சொன்னேன். எங்க.. சக்கர பொங்கலும், இட்லி சாம்பார் வைக்கவே டைம் சரியா போச்சுன்னுட்டா” என்று குறைப்பட்டு வடையை சாம்பாருக்கு ஊற்றி ‘சாம்பார்வடை’யாக சாப்பிட ஆசைக்கொண்டார்.

  தீபாவுமே “எப்படி தான் உங்கம்மா எல்லாம் செய்யறாங்களோ, இந்தாப்பா எங்க வீட்டு பொங்கல்” என்று தட்டில் ஆவிபறக்க வைக்கவும், “தேங்க்யூ ஆன்ட்டி” என்றவன் ஸ்பூனால் சுவைக்க, கௌசிக்கோ அன்னையையும் நண்பனையும் பார்வையிட்டான்.

சற்று முன் வரை ஹ்ருதேஷை கரித்து கொட்டிய அன்னை வடை பாயாசம் என்றதும், அப்படியே பிளேட்டை மாற்றும் விதமாக நடந்ததில் வாய்பிளந்தான்.‌

  “ஆமா.. காலையிலேயே எங்க போன?” என்று கேட்க, “நம்ம சினிமால்-ல ஆக்டர் ப்ரனித் நடிச்ச படத்துக்கு டிக்கெட் சொல்லி வச்சி வாங்கியிருந்தேன். வேலை செய்யறவன் கொடுத்துட்டு போனான்.” என்று இரண்டு டிக்கெட்டை காட்டினான்.

  “ஏம்பா… ஹ்ருதேஷ்.. நடிகர் ப்ரனித் படத்துக்கு டிக்கெட்டே கிடைக்காதுனு பேசிட்டு இருந்தாங்க. எப்படி கிடைச்சது? வாங்கறதும் வாங்கின எங்களுக்கு எல்லாம் சேர்த்து வாங்கக்கூடாதா” என்று அங்கலாய்த்தார்.

“அப்படில்லாம் இல்லை ஆன்ட்டி. இன்னிக்கு உங்களுக்கு வேலை அதிகமா இருக்கும். அதனால தான் கௌசிக்கு மட்டும் எடுத்தேன். நீங்க வர்றதா சொல்லுங்க. அடுத்து நடிகன் அம்ரிஷ் படம் வெளிவருது. அப்ப கூட்டிட்டு போறேன்.” என்றான்.

  “ம்கூம்… அதென்னவோ உண்மை. எங்களுக்கு எல்லாம் நல்லநாள்னா வேலையே சரியாயிருக்கும்.
  அதோட சினிமால்-ல இன்னிக்கே வர்ற கூட்டம் எல்லாம் உங்களை மாதிரி இளவட்டமா இருப்பாங்க. கூச்சல் போட்டு கத்துவாங்க.” என்றதும், ஆளாளுக்கு சாப்பிட்டனர்.

   “டேய்… பத்துமணிக்கு ஷோ. இங்கயே பொங்கல் சாப்பிட போறியா?” என்று கேட்டதும் கௌசிக் வேகாய் சாப்பிட்டு கை அலம்பி பறக்க துடித்தனர்.

“டேய் கௌசிக்… நம்ம மிதிலா மதியம் இரண்டு மணிக்கு வர்றதா சொல்லியிருந்தா. பஸ் ஸ்டாண்ட் போய் அவளை அழைச்சிட்டு வரணும். அதுக்குள்ள வந்துடுவ தானே? மறந்துட மாட்டியே?” என்றதும் கௌசிக் தலையை தலையை ஆட்ட, ஹ்ருதேஷ் இதயம் ஒரு கணம் நின்று துடித்தது.

  “ஹ்ருதேஷ் என்ன சொல்லிட்டு நீ அப்படியே நிற்கற” என்று உலுக்கவும், சிறு புன்னகையை உதிர்த்து வண்டியை இயக்கினான்.

முன்னே கௌசிக் செல்லவும் ஹ்ருதேஷ் பின்னால் மெதுவாக வந்தான். அவன் நினைவுகள் சில தறிக்கெட்டு போனதால், மெதுவாக தான் பயணித்தான்.

இங்கே ‘சினிமால்’லில் கோலாகலமாக நடிகர் கட்அவுட்டிற்கு பாலபிஷேகம் நடைப்பெற்றது.

  ஆளாளுக்கு ஆர்ப்பாட்டத்துடன் விசிலடித்து மகிழ்ந்தார்கள்.

ஹ்ருதேஷ்-கௌசிக்கை தனியாக அழைத்துக் கொண்டு வந்து வேடிக்கை பார்த்தான்.

  “படம் முடிஞ்சி அவளை வேற கூப்பிட போகணும். பச்.. நான் நீயும் நானும் ஆம்பூர் பிரியாணி போலாம்னு பிளான் போட்டேன்.” என்று சலித்தான்.

  “இன்னிக்கு பொங்கல் பண்டிகை.  வீட்ல சமைச்சதை சாப்பிடு. எங்கம்மா இரண்டு மூனு பொரியல் வச்சிடுவாங்க. நான் பாட்டுக்கு ஹோட்டல்ல சாப்பிட்டு சாப்பாடு எல்லாம் காலியாகலை.. அவ்ளோ தான்‌.” என்று ஹ்ருதேஷ் அடக்கிவிட்டு திரும்ப, அங்கே ஒருவன் கட்அவுட்டிற்கு பால் பேக்கெட்டை எடுத்து செல்லும் நேரம் பால் பேக்கெட்டில் கத்தி பட்டு ஹ்ருதேஷ் முகத்தில் பால் தெளித்தது.

  சடுதியில் முகத்தில் வெண்ணிறத்தில் பால் தெளிக்க, “சாரி பாஸ் ஹீரோவுக்கு பாலபிஷேகம் ஊத்த எடுத்துட்டு போனேன்‌. உன்‌மேல பட்டுடுச்சு. சாரி சாரி.” என்றான் அந்த தேங்காய் மண்டையன்.

  ஹ்ருதேஷ் அமைதியாக போக சொல்லிவிட்டு, முகம் அலம்ப முயல, கௌசிக்கோ “அடிங்க.. கவனமா கொண்டு போக தெரியாது.” என்று வம்பிற்கு செல்ல முயன்றான்.‌

“கௌசிக்.. அவர் தான் சாரி கேட்டாச்சே. மரியாதையா வா” என்று ஹ்ருதேஷ் இழுத்து சென்றான்.‌

“என்னடா… அவன் சாரி கேட்டா விட்டுடுவியா?” என்று கௌசிக் அலுத்துக் கொள்ள, “சாரி கேட்டா விட்டுடணும். வேற என்ன செய்ய? அவன் சட்டையை பிடிச்சி சண்டை போட சொல்லறியா? படம் பார்க்கற மூடே போயிடும். நல்ல நாள்ல என்‌ மூடை ஸ்பாயில் பண்ண நான் விரும்பலை” என்று ரெஸ்ட் ரூமில் முகம் அலம்பினான்.

  கௌசிக்கோ “சட்டையில வேற பட்டுடுச்சு. சத்தம் அதிகமா கேட்குது. ஷோ டைம் போட்டாச்சு போல” என்றதும் ஹ்ருதேஷ் கர்ச்சீப்பால் முகத்தை துடைத்து வந்தான்.

அவர்கள் இருக்கையை தேடி அமர்ந்ததும், சத்தம் விண்ணை தொட்டது.

   படம் ஆரம்பித்ததும் ஹ்ருதேஷ் கௌசிக் கவனம் அதில் முழ்கினர்.

நடுவில் ஹ்ருதேஷ் சட்டை பிசுபிசுப்பாக இருக்கவும் அசௌகரியம் அடைந்தான். இடைவெளி போட்டதும் ஆளுக்கு ஒரு பப்ஸ் மட்டும் சாப்பிட்டனர்.

படம் ஆரம்பித்ததும் தெரியாமல் முடிவதும் தெரியாமல் கதை அவர்களை கட்டி இழுத்து செல்ல, சுபம் போடும் போது தான் சுயம் உணர்ந்தனர்.

  சினிமா முடிந்து வெளியே வந்த சமயம், கௌசிக் அன்னை தீபா இரண்டு முறை அழைத்திருப்பதாக காட்டியது‌.

  கூடுதலாக நாயகி மிதிலா மூன்று முறை அழைத்திருப்பதையும் காட்ட, “அச்சோ… அவ சேலம் பஸ் ஸ்டாப்குக்கு வந்துட்டா. மச்சா வேகமா வாடா” என்று பார்க்கிங்கில் பைக்கை உதைத்து கிளம்ப, கௌசிக்-ஹ்ருதேஷ் பைக் சீறிப்பாய்ந்து பேருந்து நிலையத்திற்கு பறந்தது.

மிதிலாவுக்கு விடுமுறையே அரிதாக கிடைக்கின்றது என்றாலும் வீட்டை பார்க்க வந்துவிட்டாள்.
கையில் லேஸ் பாக்கெட் வைத்து மென்றுக்கொண்டு, அங்கும் இங்கும் அண்ணன் கௌசிக்கை தேடினாள்.

   ஹ்ருதேஷ் போனை பேக்கெட்டில் வைத்தவன், “கௌசிக் உன் தங்கச்சி” என்று மிதிலாவை சுட்டிக்காட்டினான்.

  “ராட்சஸி வந்துட்டா.” என்று நெருங்கி வர, அவன் கையில் பையை வைத்து, “ஏன்டா லேட்டு?” என்றாள் அண்ணன்காரனை‌.

  “படத்துக்கு போயிட்டு வந்துட்டோம்ல, டைம் சரியா தானே இருக்கு” என்றதும், “நான் வந்து இருபது நிமிஷமாகுது.” என்றவள், ஹ்ருதேஷை பார்த்து, “அவர் சட்டையில என்ன கறை?” என்று கேட்டாள். என்ன தான் பால் தெளித்ததை கழுவி விட்டாலும், சட்டையில் பிசுபிசுப்பும் லேசான உலர்ந்த கறையும் காட்டியது.

“இதுவா… சினிமால்-ல ஆக்டர் ப்ரனித் படம் பார்க்க போனோம்‌. அங்க ஒரு மூதேவி பாலபிஷேகம் பண்ணறேன்னு பேக்கெட் கட் பண்ண, அது ஹ்ருதேஷ் மேல தெளிச்சிடுச்சு.” என்று முன்னே நடக்க, ‘ஓ… பாலபிஷேகம் எல்லாம்  ஹீரோவுக்கு ஊத்தியாச்சா?’ என்று கிசுகிசுப்பாய் ஹ்ருதேஷை பார்த்து சீண்ட, அவனோ முன்னால் கௌசிக் செல்ல, மிதிலா பேசுவதில் முறைக்க ஆரம்பித்தான்.
அவன் ஏதும் சொல்லாமல் முறைப்பதில், ‘பால் வடியற முகம்’ என்று மீண்டும் கௌசிக் காதில் விழாத அளவிற்கும் அவன் காணாத வகையிலும், ஹ்ருதேஷை இடித்து வம்பு செய்ய, “கௌசிக்… நான் கிளம்பறேன். அப்பறம் பார்ப்போம்” என்று ஹ்ருதேஷ் மிதிலாவை ஒதுக்குவது போல நண்பனிடம் சொல்லிவிட்டு கடந்தான்.

  கௌசிக்கும், இனி தங்கையை வீட்டில் விட்டுவிட்டு சாப்பிட்டு, குட்டி தூக்கம் போட்டுவிட வேண்டுமென்பதால், நண்பனை வழியனுப்பினான்.

மிதிலாவோ பல்லை கடித்து, ‘போடா… போ. எப்படியும் ஒரு நாள் காதல் பூகம்பம் உனக்குள்ளயும் வெடிக்க போகுது.’ என்று மனதோடு புலம்பினாள்.

 ஹ்ருதேஷோ அவனது பைக்கில் புறப்பட்டவன், ‘என்ன தைரியம் கௌசிக் இருக்கும் போதே வாயாடி இடிக்கறா. இவளை எல்லாம் யாரு இங்க வரணும்னு யார் கவலைப்பட்டாங்க. பேஷன்டிசைனிங் படிக்கற பொண்ணு கொஞ்சமாவது அறிவிருக்கா’ என்று அவளை மனதில் வறுத்துக்கொண்டு வீடு வந்தடைந்தான்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ். 
 

5 thoughts on “நின் பிரேமம் என் சிநேகம்-1”

  1. அடேயப்பா… அண்ணன் இருக்கும்போதே அவனோட நண்பனோட இம்புட்டு அரபு பறை யை கூட்டுறாளே இந்த மிதிலா…. ரொம்பவே தைரியம் தான்.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top