அத்தியாயம்-11
கதிரவன் பெரிதாக பராகிரமாக எந்தவொரு காரியத்தையும் இதுவரை செய்ததில்லை. ஆனால் முதல் முறை ஒரு விஷயம் ‘இவர் தான் அவரா?’ என்று பார்வையிட்டு வருவதே பெரிய விஷயமாக இருந்தது.
தவமலரிடமும் அன்னத்திடமும் நான் ஒருமுறை போலீஸிடம் பார்த்து பேசி வருகின்றேன் என்று வந்துவிட்டான்.
அரசாங்க மருத்துவமனையில் பிணத்தை கண்டா அடையாளம் காட்ட சென்றவனுக்கு குமட்டல் வயிற்றை பிரட்டியது.
லேசாக குமட்டியபடி, போலீஸோடு வந்து எட்டி பார்க்க, அவரில்லை என்றான். “அவரானு நல்லா பாருப்பா.” என்று போலீஸ் அழுத்தம் கூட்ட, “இல்லைங்க… அவர் இந்த அளவுக்கு நிறமில்லை.” என்று மறுத்தான்.
“அட ஆளு தண்ணீல ஊறியதில உப்பசமா தெரியறார். அதனால கூட நிறம் மாறியிருக்கும். சரியா பாருய்யா” என்று கூறினார்கள். லேசாக முகம் மாறியிருந்தது என்னவோ உண்மை தான் ஆனால் அது ஆவுடையப்பன் இல்லை என்று மறுத்தான்.
“இல்லை சார்… அவர் இந்தளவு உசரம் இல்லை. ஆளு என்னை விட கொஞ்சம் உயரம் கம்மி. இவர் நீட்டமா தெரியறார்.” என்று மறுத்தான். அதோடு கல்யாணத்தில் எடுத்த புகைப்படத்தை வேறு காட்டினான்.
“அப்படியா?” என்று வாங்கி பார்த்தனர் போலீஸும். கதிரவன் கூறியது போல அவனை விட உயரம் குறைவாக இருப்பார் ஆவுடையப்பன். இறந்த மனிதர் கதிரவன் உயரத்திற்கு இருந்ததும் போலீஸும் “சரி சரி.. அப்ப உன் மாமனாரை மறுபடியும் தேடணும். வேண்டிக்கோ தம்பி… வீட்டை விட்டு ஓடுற பெருசுங்க எல்லாம் இப்படி தான் என்னைக்காவது அனாதை பிணமா தான் கிடைப்பாங்க. சொந்தத்துக்கு கூட தெரியாமலே போகும்” என்று கூறி அனுப்ப, கதிரவன் வெளிறி போய் மாமனார் வீட்டுக்கு வந்தான்.
அங்கே அன்னம் ஆர்வமாய் பார்வையிட, “ஏதோ தகவல் கேட்டாங்க. சொல்லிட்டு வந்தேன்” என்று மட்டும் உரைத்தான்.
தவமலர் அதன்பின் அழைத்துக் கொண்டு புறப்படவும் அன்னம் மறுக்கவில்லை.
என்ன இந்த முறை ஒட்டுதலாக, “உடம்பை பார்த்துக்கோ… நல்லா சாப்பிடு. உங்கப்பா கிடைச்சதும் வளைக்காப்பை செய்ய வர்றோம்” என்று கூற ஆறுதலாய் அணைத்து விடையனுப்பினார்.
பேருந்தில் ஏறியதும் கதிரவன் மீது சாய்ந்துக்கொள்ள, “என்ன தைரியம் உனக்கு? சொல்லாம கொள்ளாம கிளம்பிட்ட, அங்க நான் எப்படி பதறினேனு தெரியுமா? தனியா நீ கிளம்பியதுக்கு எங்கம்மா வேற வாயுக்கு வந்தபடி திட்டினாங்க. அப்படியென்ன பாசம்” என்று சத்தமின்றி அதட்டினான்.
“என் பயம் நிஜமாயிடுச்சே.. அவரை காணோமே. அப்ப என் உள்மனசு சரியா தானே பதறியிருக்கு.
அவரிடம் நான் உண்டாயிருப்பதை சொன்னா சந்தோஷப்படுவார். ஆனா பேசவே இல்லைன்னா ஏதோ மனசுல கிடந்து தவிக்கறார்னு நினைச்சேன்.” என்றாள்.
“ம்கூம்” என்று கதிரவன் பேசவில்லை. இவளால் இன்று எங்கேயெல்லாம் அலைந்துவிட்டான்.
“எனக்கென்னவோ அப்பாவால அம்மா இறந்ததை நான் இத்தனை காலம் கேள்விக்கேட்டதில்லை. அன்னிக்கு கேட்டதும் சுருக்குனு நெஞ்சுல தச்சியிருக்கும். என் முகத்துல முழிக்காம ஒரெடியா போயிட்டாரோனு நினைக்கறேன்.” என்று கூற, “இருக்கலாம்… அதுக்காக அவரை தேடிட்டு இப்படி வயிற்று பிள்ளையா எங்கயாவது போகாத. என்னால தாங்க முடியாது ஆத்தா.
அதோட எங்கம்மாவுக்கு பதில் சொல்ல முடியலை. இந்த மாமியார் மருமக பிரச்சனை எல்லாம் உங்களுக்குள் வந்தா, நான் அப்படியே வயல் வரப்பு மாடுனு போயிடுவேன். வீட்டு படி எடுத்து வைக்க மாட்டேன். அதனால தேவையில்லாத சண்டைக்கு அச்சாரம் போட்டு விடாத.
எங்க வீட்ல உன்னை எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாம தான் கட்டிக்க சம்மதிச்சது. நீ பாட்டுக்கு ஏதாவது ஏழரையை இழுத்து வைக்காத. எங்கம்மா நல்லவங்க தான். ஆனா இப்படி வீட்ல சொல்லாம கொள்ளாம இந்த நிலையில் நீ போனா அடுத்து வீட்ல இருக்கற வேலையை உன் தலையில கட்டிடும்.
ஏதோ மைனர் பொண்ணை கட்டிக்கிட்டதுக்கு போலீஸ்ல என்னை சட்டத்தால ஜெயில்ல தள்ள இருந்தப்ப, நீ அழுது புரண்டு கையில கால்ல விழுந்து பேசியதுல, சின்ன பொண்ணுனு வுட்டுடுச்சு. இல்லைனு வை… இந்த வயசுல தான் எங்க அம்மா புள்ள பெத்தாங்க. ஆச்சி புள்ள பெத்தாங்கனு உன் முதுகெலும்பு உடைய வேலையை இழுத்து வைக்கும்.
அப்பறம் கட்டினவன் வந்து ஆதரவா பேசுவான்னு என் முகத்தை பார்க்காத.” என்று எச்சரிக்கையை விடுத்தான்.
இது போன்ற ஊரில் நடப்பது தானே… அதனால் கதிரவன் நடப்பை வெகு எதார்த்தமாக கூறினான்.
தவமலருக்கு என்ன புரிந்ததோ அவன் புஜத்தை இறுக்கமாக பற்றி கூடுதலாக தலையை சாய்ந்துக்கொண்டாள்.
கதிரவனோ பேருந்தில் யாராவது தங்களை கவனிக்கின்றனரா? என்று பார்வையிட, பெரும்பாலும் தவமலர் பிள்ளைதாச்சி என்பதால் அதை யாரும் தவறான கண்ணோட்டத்தில் காணவில்லை.
பத்து மணி அளவில் வீடு வந்து சேரவும், சாமுண்டிஸ்வரி மருமகளை கத்தி திட்டி தீர்த்தனர்.
பொழுது தாண்டி சென்று வந்ததால், நிற்க வைத்து சுற்றி போட்டு முடித்தார்.
“இந்தா… இப்ப புரிஞ்சுதா… உங்கப்பா போனு ஏன் எடுக்கலைனு… இனி வூட்டை வுட்டு தாண்டணும்னு நினைப்பு போகக்கூடாது. அந்தாளு வந்தா பேசு.. போலீஸ்ல தான் கண்டுப்பிடிக்க கேஸ் போட்டாச்சுல.. மருவாதையா.. புள்ளக்காரியா வீட்ல வெந்ததை திண்ணுட்டு சத்து பிடி” என்றார்.
இதற்கு மேல் பேச ஒன்றுமில்லையென சாமுண்டிஸ்வரி சென்றிட கதகரவன் மனைவியிடம் புரிதா’ என்று பார்வையால் கண்டித்து அறைக்கு வந்தான்.
கதிரவன் குளித்து முடித்து வந்து உறங்க, தவமலரோ அப்பா எங்க போயிருப்பார் என்ற வேதனையுடன் நேரம் தாண்டி உறங்கினாள்.
நாளும் கிழமையும் யாருக்காகவும் காத்திருக்கவில்லை.
அது பாட்டிற்கு யாரும் தடுக்க இயலாது நகர்ந்தது.
தவமலருக்கு ஏழாம் மாதம் நெருங்க வளைகாப்பு பற்றி பேச்சு சென்றது. சிவநேசன் அந்த நேரம் ஊர் கோவில் திருவிழாவிற்கு தனியாக வந்தார்.
ஆவுடையப்பன் கிடைத்துவிட்டால் வளைகாப்பு இந்நேரம் விமர்சனையாக இல்லாவிட்டாலும் ஏதோ நடத்திருப்பார். இன்று அதையும் எடுத்து செய்ய ஆளில்லை.
கதிரவன் மனம் தாளாமல், “வளைக்காப்பை நான் செய்யட்டா?” என்று கேட்க, தவமலரோ “ஒன்பதாம் மாசம் கூட வளைகாப்பு செய்யலாம்னு காயத்ரி அத்தை சொன்னாங்களே. அதுவரை அப்பாவுக்காக காத்திருப்போமேங்க” என்ற பதிலில் கதிரவன் அதன்பின் மொத்தமாக அப்பேச்சை ஆரம்பிக்கவில்லை.
என்னதான் புகுந்த வீட்டில் நன்றாக கவனித்து கொண்டாலும் தந்தை இல்லாதது வருத்தம் தந்தது.
அன்னமோ கணவர் இல்லாமல் வாழவும் சம்பாதிக்கவும் கற்றுக்கொண்டார்.
அதில் பாதி ஓய்ந்து போனார். சொல்லப்போனால்… கட்டெறும்பாக மாறினார்.
இப்படியே செல்ல, தந்தை இறந்துவிட்டாரோ என்று தவமலர் அஞ்சினாள்.
ஆனால் ஊரில் சிலர் தந்தையை பல்வேறு கோவிலில் பார்த்ததாக கூறினார்கள்.
அவரிடம் மகள் மாசமாக உள்ளதை கூட தெரிவித்ததாக கூறியதையும் சொல்ல, மகிழ்ந்தாள். அப்படிக்கூட தந்தை தன்னை காண வரவில்லை என்ற வலியும் இருந்தது.
சாமுண்டிஸ்வரி தவமலருக்கு ஒன்பதாம் மாதம் துவங்கவும் காயத்ரியை அழைத்து, தங்கள் வீட்டு ஆட்கள் சிலரையும் கூப்பிட்டு வளைகாப்பு வைத்தார். அன்னம் அன்று கூட வரமறுத்துவிட்டார்.
புருஷனே போனப்பிறகு மூத்த தாரத்துக்கு என்ன உறவு வேண்டிக்கிடக்கு? என்று எண்ணிவிட்டார்.
வளைகாப்பு என்று சென்றால் அதற்கு வேறு ஏதாவது செலவை தன் தலையில் கட்டிவிடுவாரோ என்ற அச்சம். இரண்டு காரணமும் அன்னத்தை தவமலரின் வளைகாப்புக்கு வரவிடவில்லை.
காயத்ரி சிவநேசன் இருவரும் தாய் தந்தை ஸ்தானத்தில் நின்று செய்தனர். ஏதோ தங்கள் சக்திக்கு சபையில் தட்டை நிறைத்தனர். அதுக்கூட அவர்களுக்கு ஒரு பையன் அவனும் வெளியூரில் வேலை பார்த்து மனைவி மக்களோடு இருக்க, இங்கே தனியாக இருவருக்கு செலவு குறைவு என்பதால் ஏதோ தவமலருக்காக செய்ய முடிந்தது.
வளைகாப்பு முடியவும் அம்மா வீட்டிற்கு செல்லும் பெண்கள் மத்தியில் தவமலர் கணவன் அருகே தனக்கு அந்த கொடுப்பினை இல்லை என்று புலம்பினாள்.
“இங்க பாரு.. இல்லாதவங்களை நினைச்சு புலம்பாத. உனக்கு எங்கம்மா எல்லாம் குறையில்லாம பண்ணுச்சுல. உங்கத்தை மாமா ஊர்ல இருந்து வந்தாங்கள்ல. அதை நினைச்சு சந்தோஷப்படு” என்றான்.
அவனுக்கு சற்று எரிச்சலாக தான் இருந்தது.
“நான் உண்டாயிருக்கேன்னு தெரிந்தும் எங்கப்பா என்னை தேடி வரலை.” என்றாள்.
‘அந்தாளு செத்துட்டதா நினைச்சிக்கோ” என்று தோளில் உள்ள துண்டை உதறி வெளியேறினான்.
அவனுக்கு தினம் தினம் இதே புராணம் எரிச்சலை கூட்டியது.
காயத்ரி தான் மீண்டும் சாமுண்டிஸ்வரியிடம் ‘பிரசவம் எல்லாம் அரசாங்க ஆஸ்பத்திரில பார்ப்பதால செலவு இருக்காது. ஆனாலும் எங்க வீட்டு பொண்ணை நீங்க நல்லா பார்த்துக்கறது சந்தோஷமுங்க.” என்று பாராட்டி நன்றியுரைத்தார்.
அடுத்த நாள் அவர்களும் புறப்பட்டுவிட்டார்கள்.
ஒன்பதாம் மாதம் குழந்தை வெளியே வர துடிக்க, அரசாங்க மருத்துவமனைக்கு டிராக்டரில் தான் அழைத்து சென்றான் கதிரவன்.
ஏற்கனவே லேசாக வலி வந்தாலே அழைத்து வர டாக்டரும் நர்ஸும் அறிவுறுத்தியிருக்க, அதன்படி வந்து சேர்ந்தாள் தவமலர்.
பலவிதமான வலியை கடந்து வந்தாலும் பிரசவ வலி அவளை படுத்தி எடுத்துவிட்டது.
தவமலரின் கூச்சலும் கத்தலும் அன்று அந்த ஆஸ்பிடல் கட்டிடத்தையே உலுக்கி எடுத்து மதியம் ஒரு மணியளவில், பெண் பிள்ளையை ஈன்றெடுத்தாள்.
சாமுண்டிஸ்வரிக்கு பெண் வாரிசு என்றதும் சிறிது சோகம். ஆனால் இந்த காலத்தில் பிள்ளை உண்டாகாமல் எத்தனையோ பேர் தவமிருக்க, தவமலர் திருமணமாகி பெண் குழந்தையை பெற்று எடுத்ததில் திருப்தியும் பட்டுக்கொண்டார்.
கதிரவனுக்கு ஆணோ பெண்ணோ தன் குழந்தை பிறந்த ஆனந்தம் ஒன்றே அவனுக்கு போதும்.
தவமலர் தான் கிழிந்த நாறாக வார்டில் படுத்திருந்தாள். ஏகப்பட்ட ரத்தம் வீணானதில், மயக்கத்தில் கிடந்தாள்.
அவள் இன்னும் பழைய நிலைக்கு வர, நாட்கள் எடுக்குமென நர்ஸும் கூறினார்.
டாக்டரோ “தலை பிரசவம் என்பது பொண்ணுங்களுக்கு மறுபிறப்பு சார். இதுல இந்த பொண்ணுக்கு பதினெட்டு வயசுல குழந்தை பிறந்திருக்கு. அந்த பொண்ணோட உடல் ரொம்ப பலவீனமா இருக்கு. நல்லா சாப்பாடு கொடுங்க. பத்திரமா பார்த்துக்கோங்க. பழம் காய்கறி சாப்பிட சொல்லுங்க” என்று பெரிய உணவு பட்டியலையே கூறினார்.
அவர்கள் தலை மறையவும், “ம்கூம்… நாங்க எல்லாம் இதெல்லாம் சாப்பிட்டு தான் உடலை வளர்த்தோமா. வீட்ல கூழு கஞ்சினு ஒழுங்கா குடிச்சாலே உடம்பு வலுவா மாறும்.” என்று கூற, தவமலர் எதற்கும் பதில் பேசாமல் படுத்து கிடந்தாள்.
அவள் அருகே அவளை போலவே ஒரு பெண் குழந்தை. ஆனால் கதிரவன் சாயலில்… என்று குழந்தையை வெறித்தாள்.
குழந்தைக்கு எழுந்து பால் புகட்டவும் தெரியாமல், தூக்கவும் தெரியாமல் தடுமாறியவளை சாமுண்டிஸ்வரி தான் திட்டி திட்டி தூங்க பழகினார். பால் குடிக்க எப்படி குழந்தையை படுக்க வைக்க வேண்டுமென்றும் கற்றுத் தந்தார்.
ஓரிருமுறை குழந்தையை நழுவ விட பார்த்து சாமுண்டிஸ்வரியிடம் திட்டு வாங்கியவள் அதன் பிறகு நன்றாக பிடிப்புடன் குழந்தையை தூக்க கற்றறிந்தாள்.
எப்படியோ ஆஸ்பிடலில் இருந்து வரும் பொழுது குழந்தையை தூக்கவும், பால் கொடுக்கவும் பழகியிருந்தாள்.
நர்ஸ் கனகவள்ளி தான் தவமலருக்கு ஏகப்பட்ட அறிவுரை தந்தார். சாமுண்டிஸ்வரி இல்லாத சமயமாக, “இதப்பாரும்மா.. டாக்டர் சொல்ல சொன்னது சொல்லியாச்சு. நல்லா சாப்பிடுனு. ஏதோ பதினெட்டு வயசு உனக்கும் வந்துடுச்சு. ஆனா உன்னை பார்த்தா இன்னமும் எனக்கு சின்ன புள்ளையா தான் தோணுது. உங்க அத்தை மாமா புருஷன் எல்லாம் நல்லா பார்த்துக்கறதை கவனிச்சேன்.
நீயும் புள்ளைய பெத்துட்ட, அதுக்காக உடம்பு வலுவாயிடுச்சுனு அர்த்தமில்லை. இந்தயிந்த வயசு இந்த இந்த விஷயத்துக்கு சரியான நேரம்னு சொல்லுவாங்க. உன்வயசு இப்ப புள்ளையை பெத்துக்கற வயசே கிடையாது. காலேஜ் படிக்கற வயசுடி உனக்கு.
அதைமீறி குடும்ப சூழல்னு குழந்தை புருஷன்னு இந்த உலகத்துல விழுந்துட்ட. புகுந்த வீடும் பார்த்துக்கறது சரி. அதுக்காக அடுத்த புள்ளையாவது லேட்டா பெத்துக்கோ. புருஷங்காரன் அண்ட வந்தா தள்ளி நிறுத்து. இல்லைனு வை. அடுத்த வருஷமே வயித்தை தள்ளிட்டு நிற்ப. கைக்கும் காலுக்கும் புள்ளைய வச்சிட்டு கஷ்டப்படுவ. ஏதோ சொல்ல நினைச்சேன். சொல்லிட்டேன் இந்தா… இதெல்லாம் குழந்தைக்கு அரசாங்கம் தர்ற இலவசம்.” என்று குழந்தை படுக்க மெத்தை, சத்துமாவு கஞ்சி பேக்கெட், தாய்க்கான ஊட்டச்சத்து மாவு, கொசுவலை, துண்டு, உலர்திராட்சைகள் என்று சிலதும் அதிலிருந்தது. அத்துடன் முதல் குழந்தை பெண் குழந்தையாக பிறந்திருக்க அதற்கும் பணம் தந்தனர்.
அதையும் தவமலரிடம் தந்தார் கனகவள்ளி. “ரொம்ப தேங்க்ஸ் சிஸ்டர்.” என்று நன்றியுரைத்து நடந்தாள்.
-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்

இன்றும் 18வயசில் கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கறாங்க கேக்கவே கஷ்டமா இருக்கு
Ippavum 16 vayasulaye kalyanam panravanga irukanga mm
எப்படியோ.. கஷ்டப்பட்டு ஒரு புள்ளையும் பெத்தாச்சு போங்க. அதுவே பெரிய விஷயம் தான்.
😌😌😌
CRVS (or) CRVS 2797
Super sis nice epi 👌😍 andha nurse romba nallavanga pa correct time la correct advice 👍👌