அத்தியாயம்-4
மிதிலா கொஞ்ச நேரம் ஓயாமல் அழுது தொலைத்து, அண்ணன் போனை தான் ஏற்றதால் இப்பொழுது இந்த விஷயத்தை எவ்வாறு கௌசிக்கிடம் கூறுவது? என்று அதற்கும் நொந்தாள்.
‘குரல் மாத்தி ஏன் பேசின?’ என்று கத்தினால் அவள் என்ன காரணம் கூறுவதென்று விழித்தாள்.
ஆனால் ஹ்ருதேஷ் போனிற்கு அழைத்து தன்னிலையை உரைத்துவிடுவதில், அவளுக்கு எந்த தயக்கமும் வரவில்லை.
அதனால் ஹ்ருதேஷிற்கு போனில் அழைத்திட, அவனோ அன்னை தந்தை வரன் பார்த்திருக்க, எரிச்சலில் சுற்றியவன், மிதிலா அழைப்பு என்றதும், “இவ வேற.” என்று கடுப்பில் துண்டித்தான்.
மிதிலாவோ மீண்டும் மீண்டும் அழைக்க, மூன்றாவது முறை அழைப்பை எடுத்தான்.
“மிதிலா.. திஸ் இஸ் தி லிமிட்” என்று கத்த துவங்க, மறுபுறம் மிதிலா தேம்புவது கேட்டது.
“ஏய்.. மிதிலா.. மிதிலா.. அழுவறியா? எதுக்கு அழுவற? பச்.. மிதிலா” என்றதும், அவளோ “ஏன் அழுவறாங்களா? ஏன் உனக்கு தெரியாதா? உனக்கு உங்கம்மா அப்பா பொண்ணு பார்க்கறாங்க. ஜாலியா வசதியான வீட்ல பொண்ணு எடுத்து, அவங்களே பிசினஸ் பார்க்க கூப்பிடறாங்க. அதை தெரிந்தும் கல்லு மாதிரி இருக்கணுமா? சொல்லுடா… கல்லு மாதிரி இருக்கணுமா?” என்று தேம்பவும், “உனக்கெப்படி தெரியும்?” என்றான்.
“ஆஹ்… என் துரதிர்ஷ்டம், உங்கம்மா கௌசிக்கு அண்ணா போன் போடவும், நீ தான் உங்கம்மா போன்ல வர்றியோனு பேச ஆசையா எடுத்தேன்.
ஆனா அவங்க என்றதும், மிமிக்கிரி பண்ணி, கௌசிக் மாதிரி பேசினேன்.
ஏதோ உனக்கு பொண்ணு பார்த்ததை சொன்னாங்க. அதுவும் நாலு ஜாதகமும் அமோகமா இருக்காம். இதுல அவங்க வீட்டு பிசினஸை நீ ஹாண்டில் பண்ண வத்தலை பாக்கு வச்சி கூப்பிடறாங்களாம். நீ மறுத்துட்டதா சொன்னாங்க.
ஏதாவது காதல் கீதல் இருக்கா என்னனு கௌசிக் அண்ணாவிடம் கேட்டாங்க.
அப்படியில்லைன்னா.. எங்கண்ணாவை உனக்கு அட்வைஸ் பண்ண சொல்லி கல்யாணம் செய்ய சம்மதிக்க வைக்கணுமாம்.
இதெல்லாம் கேட்டும் உசுரோட இருந்து உங்கம்மாவுக்கு கௌசிக் அண்ணா மாதிரி சரி ஆன்ட்டினு நான் பேசி தொலைச்சேன்.
என் நிலைமையை பார்த்தியா. நான் விரும்பிய உனக்கு இப்படில்லாம் நடப்பதை, கேட்கவா ஆசையா நீ பேசறதா நினைச்சு போன் எடுத்தேன்.
என் நெஞ்சில நெருப்பை அள்ளி கொட்டறிங்க?” என்று மூக்குறிந்து அழுதாள்.
“அறிவில்லை… கௌசிக் போனை உன்னை யார் எடுக்க சொன்னது? இதுல எங்கம்மானு தெரிந்தப்பிறகும் ஏன் கௌசிக் மாதிரி மிமிக்ரி பண்ணின? தப்பெல்லாம் நீ செய்துட்டு வக்கணையா கேள்விக் கேட்கற? லூசு லூசு” என்று திட்டினான்.
மிதிலாவோ அழுதவள், “ஆமாடா உனக்கு நான் லூசு தான். உன் பின்னால அலையிறேன்ல உன் கண்ணுக்கு லூசா தான் தெரிவேன்.” என்றாள்.
பெற்றவர்கள் மிதிலாவும் இம்சிக்க, “இப்ப எதுக்கு கால் செய்த? ஒப்பாரி வைக்கவா?” என்றான்.
மிதிலாவுக்கு “ம்கூம்.. அப்படியே வச்சிட்டாலும், உங்கம்மாவை பொறுத்தவரை அவங்க பேசியது எங்கண்ணாவிடம். நாளைக்கு கௌசிக் நேர்ல வந்து நிற்கறப்ப, என் பையனிடம் கல்யாண விஷயம் பேசினியா? அவன் யாரையாவது காதலிக்கறானானு கேட்டு அவன் முழிச்சா? அதுக்கு தான் உன்னிடம் சொல்லி தொலைக்கறேன்.
உன் பிரெண்டிடம் நீ என்னத்தை சொல்வியோ சொல்லிக்கோ.
ஆனா ஒன்னு ஹ்ருதேஷ்… நான் உன்னை விரும்பறேன். நீ என்னை விட்டு எவளையாவது கல்யாணம் பண்ண நினைச்ச அவ்ளோ தான். ஏன்டா இவ வார்த்தையை கேட்கலைனு பீல் பண்ணுவ” என்று எச்சரித்தாள்.
லேசான சிரிப்பு, அதை மறைத்து, “ஓ… என்ன பீல் பண்ண போறேன். போடி. கௌசிக்கிடம் எப்படி சொல்லிக்கணும்னு எனக்கு தெரியும். இனியாவது அவனுக்கு வர்ற காலை அட்டன் பண்ணாத. முக்கியமா நானோ எங்க வீட்லயிருந்தோ கால் பண்ணினா அட்டன் பண்ணவே கூடாது. புரிந்ததா?” என்று பாடம் எடுக்க, “உனக்கு என் வலி புரியவேயில்லைல, காதல் வலி என்னனு ஒருநாள் உணருவ. அப்ப தெரியும்” என்று வெடுக்கென கத்தரித்தாள் மிதிலா.
ஹ்ருதேஷோ ‘இப்பவே அந்த காதல் வலியை உணர்ந்துட்டேன். ஆனா உன்னிடம் என் காதலை சொல்ல முடியலை மிதிலா. நம்ம காதலால் கௌசிக்கோட நட்பு சிதைந்திடுமோனு பயமாயிருக்கு.
ஆனா இதுக்கொரு எண்டிங் இருக்கு. அந்த முடிவு நெருங்கற வரை, நான் தப்பிச்சிட்டே வர்றேன். விதி விட்ட வழி’ என்று மனமொடிந்து போனான்.
கொஞ்ச நாட்களாக மிதிலாவின் காதல் ஹ்ருதேஷை அதிகளவு பாதிக்கின்றது. அதை புறக்கணிக்க முயன்று தோற்கின்றான். நிச்சயம் மிதிலாவிடம் அவள் காதலை ஏற்றுக்கெள்வதாக கூறினால் சந்தோஷப்படுவாள்.
ஆனால் கௌசிக்..?
கௌசிக் நல்ல நண்பன். அவனுக்கு என்னை பிடிக்கும் பட்சத்தில் அவன் தங்கையை விரும்புவதாக கூறினால் ஏற்கமாட்டானா என்ன? என்று விபரீத எண்ணம் உதித்தது.
ஆசை பேராசையாக, உருவாக மிதிலாவை பற்றி யோசித்தான்.
மிதிலா அவன் மனதை வெகுவாக பாதித்து விட்டால் என்று புரிய துவங்க, இதற்கு என்னதான் முடிவு என்று தீர்வுக்கட்ட நினைத்தான்.
மிதிலா இங்கு வந்ததிலிருந்து ஹ்ருதேஷுடன் சந்திப்பும், பேசியும் அளவுக்கதிகமாக ஆனந்தப்பட்டு விட்டாள். இன்று செல்வராணி பேச்சில் முற்றிலும் இந்த ஆனந்தம் வடிந்துவிட்டது.
ஹ்ருதேஷ் வேறு இன்னமும் காதலிக்காததால், அவன் திருமணத்திற்கு சம்மதித்துவிடுவானா?’ என்று பயந்தாள்.
அழுகை அழுகையாக வரவும், அறைக்குள் கண்ணீரில் கரைந்தாள்.
ஹ்ருதேஷும் ‘சே.. லவ் பண்ணறதை மிதிலாவிடம் சொல்லாத எனக்கே இத்தனை வலிக்குதுன்னா. என்னை விரும்புவதை என்னிடமே சொன்ன மிதிலாவுக்கு எவ்ளோ வலிக்கும்’ என்று எண்ணியவன் அவளை காண வேண்டுமென்ற தவிப்பு அதிகமானது.
ஹ்ருதேஷ் நண்பனை காண சென்று அப்படியே மிதிலாவை பார்த்து வர முடிவெடுத்தான்.
மாலை நேரம் என்பதால் லேசாக தலைவாறி வெளிவர, செல்வராணியோ “எங்கடா பொழுது சாயற நேரத்துல போற” என்று கேட்மதும், “கௌசிக் கால் பண்ணினான்மா. என்னனு தெரியலை ஒரு எட்டு பார்த்துட்டு வர்றேன்.” என்றான்.
சொல்வராணிக்கோ பையன் காதலிச்சா, இந்நேரம் கௌசிக்கிடம் பேச போவதை வெளிப்படையாக பேச மாட்டான். ஆக பையன் காதலிக்கவில்லை. கௌசிக் பேச வரச்சொல்லி ஹ்ருதேஷிடம் ஏன் திருமணத்திற்கு மறுக்கின்றானென கேட்க செல்வதில் சந்தோஷம் கொண்டார்.
“டேய்... அப்படியே பொங்கலுக்கு வடை பாயாசம் தந்த பாக்ஸ் தூக்குசட்டி வாங்கிட்டு வந்துடு” என்று கூறவும், தலையாட்டி செருப்பை மாட்டினான்.
இருசக்கர வாகனம் இயக்கியபடி, கௌசிக்கை சந்திச்சு பேசலாம், அவனிடம் அம்மா இப்படி பேசியதை எப்படியோ சொல்லிடலாம். ஆனா மிதிலாவிடம் என்ன சமாதானம் செய்யறது.
‘நான் அவளை விரும்பறேன்னும் சொல்ல முடியாது.
வேறொருத்தியை கட்டிக்க போறேன்னு அர்த்தமில்லை, தனக்கு கல்யாணம் இப்பொழுது நட்ககாது என்றெல்லாம் கூற முடியுமா?’ என்றாலும் அவளை இந்த நேரம் நேரில் சந்திக்க மனம் ஆசைக்கொண்டது.
மிதிலா வீட்டிற்கு வந்ததும், கேட்டை திறக்கும் நேரம், ‘கௌசிக் வீடு, என் பிரெண்ட் வீடுனு எப்பவும் எப்படி வருவேன். இப்ப மிதிலாவை பார்க்கற பர்பஸ்காக மட்டும் வர்றப்ப, கஷ்டமாயிருக்கு. ஆன்ட்டி அங்கிள் இருப்பாங்க. மிதிலா இருக்கற வேதனையில் என்னை பார்ப்பாளா?’ என்று தயங்கி வரவும், “கௌசிக்… உன் பிரெண்ட்” என்று மிதிலா குரல். அவன் முகத்தை மலர வைத்தது.
‘எங்கயிருந்தோ நம்மளை இவ மட்டும் பார்த்துடறா’ என்றவன், ஹாலில் வர, அப்பொழுது தான் தூங்கி விழித்து எழுந்தவன், “என்ன மச்சி ஆச்சரியமா இருக்கு. நீயா வந்துட்ட” என்று வரவேற்க, “அது அது” என்று ஆரம்பிக்க “ஏய் மிதிலா அம்மா எங்க?” என்றான் கௌசிக்.
“விளக்கு பூஜைனு கோவிலுக்கு போயிருக்காங்க” என்றாள்.
“ஏ.. ஹ்ருதேஷுக்கு சேர்த்து டீ போடு.” என்று தங்கையிடம் கூறிவிட்டு, ஹாலில் இருந்த வாஷ்பேஷனில் முகமலம்பினான்.
ஹ்ருதேஷ் கண்கள் அடிக்கடி கிச்சனில் பார்வையிட்டது.
கௌசிக்கின் சட்டையையும், பூப்போட்ட சில்க் காட்டன் பாவாடையும் அணிந்து, சிகையை கொண்டையிட்டு க்ளிப் போட்டியிருக்க, யதார்த்தமான பெண்ணாக இருப்பினும் ஹ்ருதேஷ் மனதை களவாடினாள்.
“என்ன போன் கூட பண்ணாம இந்த நேரம் வந்துட்ட? ஆச்சரியமா இருக்கு மச்சி.” என்று கௌசிக் அருகே அமர, “மனசு சரியில்லை கௌசிக்.” என்றான் ஹ்ருதேஷ்.
“ஏன் மச்சி?” என்று என்று கௌசிக் நெற்றி சுருங்கி ஹ்ருதேஷ் பக்கத்தில் அமர, அவனோ “வீட்ல அம்மா அப்பா நாலு பொண்ணு போட்டோ கொண்டு வந்து, இதுல ஒன்னு கல்யாணம் பண்ணிக்க செலக்ட் பண்ணுனு சொல்லறாங்க” என்றதும், கௌசிக்கோ “ஏ.. சூப்பர் தானே.” என்று கௌசிக் ஆனந்தப்பட்டான்.
மிதிலா கை டீ வடிகட்டும் பொழுது எரிச்சலுடன் ஊற்ற அது கையில் சுடவும், “அம்மா” என்று கையை ஊதினாள்.
ஹ்ருதேஷ் வெடுக்கென திரும்பி பார்க்க, கௌசிக்கோ ”ஏ.. ஓழுங்கா கீழே சிந்தாம டீயை போடு” என்று ஹ்ருதேஷை கவனித்தான்.
“நீ சொல்லு மச்சி? யாரையாவது செலக்ட் பண்ணிட்டியா?” என்றான் ஆர்வமாக.
ஹ்ருதேஷோ, “ஏன்டா நான் என்ன சாதிச்சேன்னு இப்ப கல்யாணம். ஆப்ட்ரால் ஒரு வேலையை கூட நானா இன்னமும் தேர்வு செய்யலை. இதுல எவளோருத்தியை கல்யாணம் பண்ணிட்டு அவங்க பிசினஸை நான் பார்க்கணுமா? எதுவும் வேண்டாம்னு கத்திட்டேன். ஆக்சுவலி அம்மா உனக்கு போன் போட்டு என்னை கன்வின்ஸ் பண்ண சொன்னாங்க. நான் மியூட்ல போட்டு அவங்களிடம் தந்தேன். உன்கிட்ட பேசறதா நினைச்சு ‘கௌசிக் அவனுக்கு புத்திமதி செல்லுனு தனியா போன்ல பேசினாங்க. அதோட… லவ் ஏதாவது இருந்தா சொல்ல சொன்னாங்க” என்று மிதிலா கௌசிக் போனை எடுத்து பேசியதை எல்லாம் கூறாமல் கவனமாய் தவிர்த்து பேசினான் ஹ்ருதேஷ். மிதிலா டீக்கு சர்க்கரை சரியாக உள்ளதா என்று ஹ்ருதேஷுக்கு தரப்போகும் டீயில் சுவை பார்த்தாள்.
“நீ தான் இதுவரை யாரையும் காதலிக்கலையே.. ஆன்ட்டி சொல்வது போல யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோ. பட் வேலை மட்டும் நீ வேற தேடிக்கோ” என்று கௌசிக் அறிவுரையை அள்ளி வழங்க, மிதிலாவோ டீயை டொம்மென்று அங்கே வைத்து கௌசிக்கை முறைத்தாள். ஹ்ருதேஷிடம் பேசும் ஆர்வத்தில் தங்கை தன்னை முறைப்பதை அவன் எங்கே கண்டிருப்பான். ஆனால் ஹ்ருதேஷ் கவனித்து, டீயை எடுத்து பருகினான். மிதிலா சுவை பார்த்து நீட்டியதில் மனதில் ஏற்றான்.
“ஏன்டா…. ஏன்.? இப்ப எதுவும் பிடிக்கலை. சப்போஸ் அம்மா கேட்டா.. அட்வைஸ் பண்ணினேன், கேட்க மாட்டேங்கறான்னு சொல்லிடு. வேறொன்னுமில்லை… அப்பறம் அம்மா அன்னிக்கு தந்த வடை பாயசத்தோட டிபன் பாக்ஸை எல்லாம் கேட்டாங்க.” என்றான் ஹ்ருதேஷ்.
“ம்கூம்.. சொல்லறேன். அப்படியே லவ்வும் கிவ்வும் இல்லையேன்றதும் தெரிவிச்சிடறேன்.” என்று சிரித்தபடி கூறி உரைத்ததும் கௌசிக் சட்டையில் டீ சிந்தியது.
“அச்சோ… டீ மேல சிந்திடுச்சு. உடனே கழட்டி கறையை அலசலை. அம்மா வந்து தெலைச்சிடுவாங்க. மச்சி ஒரு நிமிஷம் இரு வந்துடறேன். மிதுலா… ஹ்ருதேஷ் வீட்டு டிபன் பாக்ஸ் எதுனு எடுத்து கொடு.” என்று அறைக்குள் சென்றான்.
டீ டம்ளரை சிங்கில் வைக்கும் விதமாக கிச்சன் வந்த ஹ்ருதேஷோ, “போதுமா.. உன் விளையாட்டு தனமான மிமிக்ரியால எப்படி வந்து பேச வேண்டியதா இருக்கு. இனி இந்த மாதிரி பண்ணாத.” என்று மிதுலாவிடம் கூறினான் ஹ்ருதேஷ். தற்போது திருமணம் வேண்டாமென்ற ஹ்ருதேஷ் பேச்சால் மிதுலா நிம்மதியடைத்து, தலையாட்டினாள்.
மிதுலா அமைதியாக டிபன் பாக்ஸை எடுத்து தர, “நீயேன் கோவிலுக்கு போகலை?” என்று கேட்டதும் மிதுலா தலை தாழ்த்தி, “வீட்டுக்கு தூரம்… தலைக்கு ஊத்தியிருக்கேன். அதனால கோவிலுக்கு போகலை.” என்றாள்.
ஹ்ருதேஷோ ஏன் கேட்டோமென்ற விதமாக டிபன் பாக்ஸை வாங்கிக் கொண்டு கௌசிக்கிடம் கூறிவிட்டு நடையை கட்டினான்.
-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்.

Rendum yennamo vilaiyaaduthunga…rightu…