நின் பிரேமம் என் சிநேகம்-3

அத்தியாயம்-3

மிதிலா காலையிலேயே குளித்து முடித்து, ப்ரி ஹாரில் அன்னையிடம் சொல்லிக்கொண்டு பள்ளி சிநேகிதியை காண புறப்பட்டாள்.

கௌசிக் வீட்டில் இருக்கவும், எப்படியும் இவன் குளிச்சிட்டு சாப்பிட்டுட்டு வர முக்கால் மணி நேரம் ஆகும். அதுக்குள்ள ஹ்ருதேஷை பார்த்துட்டு வந்துடணும். எப்பபாரு ஒட்டிக்கிட்டு’ என்று நழுவினாள்.

உண்மையில் அவளது தோழிகளை சந்திக்க மிதிலா செல்லவில்லை.

ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு கிரவுண்ட் நோக்கி சென்றாள்.

அங்கே ஹ்ருதேஷ் இல்லை என்றதும், ஏரிக்கரையில் அல்லது குளத்தாங்கரையில் இருப்பானென்று அங்கு வந்தாள்‌.

அவள் குளத்தாங்கரையில் கடக்கும் நேரம், ஹ்ருதேஷ் சிறுவர்களோடு மீன்‌பிடித்திருந்தான்.‌

ஸ்கூட்டி நிறுத்திவிட்டு வந்தவள், “இந்த பஞ்சுமிட்டாய் காரன் வேற தெருவுல சுத்திட்டு இருக்கான். பல் சொத்தை தான் ஆகும்னா யார் கேட்கா? ஐந்து ரூபா பத்து ரூபாக்கு வாட்ச் கட்டிவிட்டுட்டு” என்று புலம்பியபடி, தண்ணீரை தொட்டு தனது இடது கையில் காகம் எச்சம் துடைத்தது போல நடித்தாள்.

“எங்கக்கா பஞ்சுமிட்டாய் விற்குது?” என்று கேட்டான் சிறுவன் ஒருவன்.

“நம்ம மேலத்தெரு பக்கம்” என்றதும் இருந்த இரண்டு சிறுவர்களும் ஓட்டமெடுத்தனர்.

“அண்ணா.. இதோ வந்துடறோம்” என்று சிறுவர்கள் ஓட, “டேய் டேய்.. அவனெல்லாம் அப்பவே போயிருப்பான். இங்கயே இருங்க” என்று அதட்ட, குழந்தைகளுக்கு மீன்பிடிக்கும் ஆசையை விட கையில் பஞ்சுமிட்டாய் வாட்சை கட்டும் ஆசையில் ஓடியிருந்தார்கள்.

ஹ்ருதேஷ் மிதிலாவை முறைக்க, “வேண்டும்னே சின்ன பசங்ககிட்ட பொய் சொல்லி அனுப்பியிருக்க தானே?” என்று ஹ்ருதேஷ் ஆரம்பிக்க, “ஆமா வேண்டுமின்னு தான் அனுப்பினேன். நீ வேண்டுமின்னு.” என்று அருகே வர, தூண்டில் இழுப்படவும், அதில் கவனம் செலுத்தினான்.‌

ஏற்கனவே மீன் பிடித்து வைத்திருந்த பாத்திரத்தில் இந்த மீனையும்‌ போட முயல மீனோ துள்ளியது. ஹ்ருதேஷ் பிடிக்க அந்த மீன் மட்டும் வழுக்கி கொண்டு மீண்டும் குளத்திலேயே விழுந்தது.

மிதிலா சும்மாயில்லாமல் “தூண்டில் எல்லாம் நல்லா தான் போடுற. மீன் உன் கையிலயே விழுந்தும் கோட்டை விடறியே ஹ்ருத்.” என்று உச்சுக்கொட்டினாள்.

‘டபுள் மீனிங்கல வாயாடுறா’ என்று அமைதிக்காக்க, “இந்த மிதிலா மீன் எல்லாம் உன்னிடமிருந்து தப்பிச்சு நழுவ மாட்டேன். உன் கைக்குள்ளயே இருந்திடுவேன்.” என்று அவன் அருகே அமர்ந்து தோளில் சாய முயல, அவளை அடிக்க கை ஓங்கினான்.

பெண்ணை அடிப்பது சரியில்லை என்று இறக்கி, பல்லை கடித்து, “பெங்களூர் லைப் சர்க்கிள் ரொம்ப ஈஸியா உன்னை இப்படி பேச வைக்குதா? அறிவில்லை… ஆம்பள பையனிடம் என்ன பேசறதுனு யோசிக்க மாட்ட? அப்படியென்ன மயிறு காதல்?” என்றவன், “கௌசிக்கோட தங்கச்சி என்ற ஒரே காரணத்தால நிதானமா பேசி விலகி நிறுத்தறேன். இல்லைன்னு வை அசிங்கப்பட்டுயிருப்ப” என்று கர்ஜித்ததும், “என்னவோ சொல்லிக்கோ.. ஆனா தேடி வந்த காதலை உதறி தள்ளி என்னை கோட்டை விட்டுடாத. நீன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்.

உன்னை யாரு கௌசிக் தங்கச்சியா பார்க்க சொன்னது. நான் பிளஸ் டூ படிக்கறப்ப, நீ இந்த ஏரியாவுல சுத்திட்டு இருந்த பையன். எங்கண்ணா பிரெண்ட்னு எல்லாம் எனக்கு தெரியாது. உன்னை எங்கண்ணா வீட்டுக்கு கூட்டிட்டு வந்தப்ப பிறகு தான் நீயும் அவனும் பிரெண்டுனே எனக்கு தெரியும்.
ஏன் உனக்குமே அப்ப தானே நான் கௌசிக் தங்கச்சினு தெரிய வந்தது. அதுக்கு முன்ன… நான் எவளோ ஒருத்தி தானே.? அப்படியிருக்க ஆசைப்பட்டவனுக்கு லெட்டர் தந்தேன். காதல்னு பின்னாடி சுத்தறேன். இதுல என்ன தப்பு? ஏன்… ஆம்பள பசங்களுக்கு ஒரு பொண்ணை பிடிச்சிருந்தா பின்னாடியே போய் லவ் பண்ண வைப்பிங்களே. அதையே பொண்ணு நான் செய்தா அசிங்கமா இருக்கா?
காதலென்ற உணர்வுகள் ஒன்னு தானே. இதுல ஆம்பள பொம்பள என்ன வேண்டிகிடக்கு. உனக்கும் என்னை பிடிக்கற வரை வெயிட் பண்ணுவேன்.” என்றுரைத்திட, “அக்கா பஞ்சு மிட்டாய் காரனையே காணோம். எந்தப்பக்கம் போனாருக்கா?” என்று மூச்சு வாங்க கேட்டான் சிறுவன்.

“அவன் அப்பவே” என்று ஏதோ கூற வர, ஹ்ருதேஷ் சிறுவன் தலையில் தட்டி, “கண்டதை சாப்பிட்டு பல்லை ஸ்பாயில் பண்ணாத. தூண்டிலை பிடி” என்று அவனிடமே தந்துவிட்டு ஹ்ருதேஷ் புறப்பட, மிதிலாவே செல்பவனையே கண்டாள்.

‘இவரிடம் லவ்வை சொல்லறதுக்கு கௌசிக்கிட்டயே சொல்லியிருந்தா, அவனே கூட சேர்த்து வைச்சிருப்பான்.’ இந்த முசுடு இருக்கானே’ என்று நடந்தாள்.

ஹ்ருதேஷ் மிகவும் களைப்படைந்துவிட்டான்.
தன்னை நேசிக்கும் ஒருத்தியை விலகி நிறுத்தி பேசுவதற்கு, அவளை இழிவாக நடத்துவதற்கும் மனம் வரவில்லை. அதே நேரம் கௌசிக்கிற்கு தெரிந்தால் நட்பு கேள்விககுறியாக மாறும். அவளை தானும் நேசிக்கின்றோமோ என்று தாமதமாக புத்திக்கு உரைக்க, வீட்டிற்கு வந்தான்.‌

செல்வராணியோ ”ஏன்டா… மணி பன்னிரெண்டு ஆகுது. எங்க போன?” என்றார்.
“குளத்தங்கரை வரை போனேன். அங்க இருக்கற குட்டிஸோட மீன் பிடிச்சேன்.”

” குளத்தங்கரை போனியா? அதான் உம்முனு இருக்க? கண்ட கண்ட இடத்துக்கு போகாத காத்து கருப்பு வரும்னு சொன்னா கேட்கறியா. பகல் நேரத்துல மோகினி வருவா. நீ கௌசிக் வீட்டுக்கு போகலையா?” என்று அதட்டினார்.

செல்வராணி அம்மாவுக்கு ஹ்ருதேஷ் ஏதோ குழந்தை பையன் என்ற நினைப்பு. அவனை மிதிலா என்ற மோகினி சுற்றி சுற்றி வருவதை அறியாமல் பேசினார்.

“என்னை விட சின்னபசங்க எல்லாம் மீன் பிடிக்கறாங்க. மோகினி என்னை தான் பிடிக்குது. போம்மா” என்று டிவி ரிமோட்டை எடுக்க, “சீரியலை மாத்தாதடா. ரொம்ப நல்ல சீன் போகுது.” என்றவர், “மோகினி ஏன்டா குழந்தைகளை பிடிக்க போகுது. அது அதுக்கு ஏத்த அழகான பையனா உன்னை தான் பிடிக்கும்.” என்று கேலி செய்ய, மிதிலா பேசியதை எல்லாம் வைத்து ஹ்ருதேஷ் ‘அங்க மிதிலா என்ற மோகினி தான் இருக்கா. அவ ஏற்கனவே என்னை பிடிச்சி ஆட்டிட்டு இருக்கா’ என்று கூறமுடியாமல் தவித்தான்.

ராஜலிங்கமும் அருகே வந்தவர், என்னடா ஆச்சு. உம்முனு இருக்க. உங்கம்மா சொன்னாளா? நல்ல நல்ல வரன்‌ வருது முடிக்கலாமா?” என்று கேட்க, ஹ்ருதேஷ் அன்னை தந்தையை அதிரச்சியாக காண, “அவனிடம் இன்னும் பேசலைங்க” என்றார் செல்வராணி.

”ஹ்ருதேஷ் கையில் நான்கு பெண்ணின் புகைப்படம் தந்து, “இதெல்லாம் ஜாதகம் அமோகமா பொருந்தியிருக்கு. எல்லாமே வீட்டுக்கு ஒரே பொண்ணு. நல்ல வசதி. உனக்கு ஏதாவது பிடிச்சிருந்தா சொல்லு முடிச்சிடலாம்.” என்று குண்டைத்தூக்கி போட்டார்.

“இப்ப எதுக்கு கல்யாணம்? எனக்கு வயசே 24 தான் ஆகுது. இப்ப தான் இரண்டு மூன்று இடத்துல வேலைக்கு போய் எனக்கு பிடிக்கலைன்னு வேற ஜாப் தேடிட்டு இருக்கேன். எந்த நம்பிக்கையில கல்யாணம் பண்ணறிங்க. எனக்குனு ஒரு உத்தியோகம் வேண்டாமா?” என்று அதிர்ந்தாலும் பூசி மொழுகினான்.

“டேய்.. இதுல இரண்டு பொண்ணுங்க வீட்ல அவங்களே அவங்க தொழிலில் மாப்பிள்ளையா வர்றவனை உட்கார வைக்க ரெடியா இருக்காங்க. நீ ஏன்டா வெளிய வேலைக்கு போகணும்?” என்றார்.

ஹ்ருதேஷ் புரியாமல் தாய் தந்தையரை பார்த்து, “என்ன பேசறிங்க? பொண்ணும் தந்து வேலையும் தந்து என்னை அவங்க விலைக்கு வாங்கிப்பாங்களா?” என்றான் காட்டமாக.
“டேய் அப்படியில்லைடா. மாப்பிள்ளைக்கு வரதட்சணை செய்வாங்களே அது போல” என்று ஆரம்பிக்கவும், “அப்பா ப்ளீஸ்… எனக்கு வேலையும் தர வேண்டாம். பொண்ணும் வேண்டாம்.
நான் எனக்கு பிடிச்ச வேலையில் சேரணும். எனக்கு இப்ப எந்த கல்யாணமும் வேண்டாம்” என்று எல்லாம் புகைப்படத்தையும் தந்தை கையில் திணித்தான்.‌

ராஜலிங்கம் கோபமாக, செல்வராணியோ நான் பேசறேன் என்பதாக கூறி, “டேய்… எங்களுக்கு இருக்கறது ஒரே பையன். காலேஜ் முடிச்சிட்ட, கல்யாணம் பண்ணிட்டா எங்க கடமை முடியும். அதோட நல்ல வசதியான வீட்ல இருந்து பொண்ணுங்களோட வரன் தானா வருதுடா” என்று தோளில் கை வைத்து கூறினார்.‌

அன்னையை அவனருகே அமர்த்தி, “அம்மா… இத்தனை நாள் பொண்ணுங்களுக்கு வரன் கிடைக்கறது ரொம்ப கஷ்டமாயிருந்தது. ஆனா இப்ப எல்லாம் பசங்களுக்கு பொண்ணு கிடைக்காதுனு நீங்களா முடிவுக்கட்டிட்டிங்களா அம்மா. அதுவும் நீங்க பெத்த பையன் வொர்த் இல்லைன்னு.

அதெப்படிம்மா.. பொண்ணும் கட்டி தந்து, வேலையும் தருவாங்கனு நான் கல்யாணம் பண்ணிக்கறது? என் தன்மானம் அடமானம் வைக்கிற மாதிரி இருக்காது?
எனக்கு இதுல எந்த பொண்ணும் வேண்டாம். நான் முதல்ல வேலை தேடிக்கறேன். கொஞ்ச நாள் பேட்சுலர் லைப்பை வாழ விடுங்க” என்று தாடை பிடித்து அன்னையிடம் பேசியவன், தந்தை முறைப்பதை கூட பொருட்படுத்தாமல் சென்றான்.

‘அவனவன் காதலிச்சா வில்லங்கம் வரும்னு சொல்வாங்க. இங்க நான் காதலிக்கறதுக்கு முன்னவே வில்லங்கம் லைன் கட்டி வரும் போலயே.
இவளை வேற மறக்க முடியலை. அட்லீஸ்ட் மறக்கற அளவுக்கு மனசு இருந்தாலாவது வேற பொண்ணை பாருங்கனு வாய் வரும்.
ஆண்டவா… என் லைப்பை ஏன் இப்படி பந்தாடறா?’ என்று சொல்ல இயலாத வலியில் துடித்தான்.‌

செல்வராணியோ “இவன் என்னங்க இப்படி பேசிட்டு போறான்.” என்று கவலைக்கொள்ள, “அந்த பையன் கௌசிக்கிடம் கேட்டு, ஏதாவது ஏழரை இழுத்து வச்சியிருக்கானு கேட்டு தொலைடி. அப்படியில்லைன்னா… அந்த பையனை விட்டு கல்யாணத்துக்கு சம்மதிக்க வை.” என்று மாற்றுவழியை கூறினார்.

பெரும்பாலும் பெற்றவர்களால் மகன் மகளுடன் சில விஷயம் அறிய நேராவிட்டால், தோழன் தோழியிடம் அபிப்ராயம் கேட்டு, மகன் மனதில் என்ன உள்ளதென்று தெரிந்துக் கொள்ளலாம்.

சொல்வராணியோ ‘ம்ம் அதுவும் நல்ல ஐடியா” என்று உடனடியாக கௌசிக்கிற்கு அழைத்தார்.‌

அந்த நேரம் கௌசிக் நன்றாக சாப்பிட்டு அசதியில் உறங்கி வழிய, மிதிலா தான் அங்கிருந்தாள். ஹ்ருதேஷ் அம்மா’ என்று இருக்க, ஒருவேளை ஹ்ருதேஷ் தான் அழைத்திருப்பானென நினைத்தாள் மிதிலா.

சில நேரம் ஹ்ருதேஷ் அவனது அம்மா நம்பரிலிருந்தும் கௌசிக்கிடம் போசுவான். மிதிலா அண்ணன் போனை எடுத்து பார்ப்போமென நைஸாக எடுத்து அவளது அறைக்கு வந்து தொண்டையை செருமி அழைப்பை ஏற்றாள்.

“ஹலோ.. சொல்லுடா” என்று அண்ணனின் குரலில் மிமிக்கிரி வேறு செய்ய, செல்வராணியோ, “கௌசிக்… உன் பிரெண்ட் ரொம்ப பண்ணறான்டா. அவனை என்னனு கொஞ்சம் வந்துகேளேன்.” என்றார்.‌

மிதிலாவுக்கு ஒன்றும் விளங்காமல், “என்ன பண்ணறான் ஆன்ட்டி” என்று அண்ணன் குரலிலேயே கேட்டாள்.
“அதுவா… அவன் எங்களுக்கு ஒரு பையன். படிப்பு முடிஞ்சிடுச்சு. சரி ஒரு கல்யாணத்தை பண்ணிட்டுசெட்டில் பண்ணலாம்னு பொண்ணு பார்த்தோம்டா.” என்றதும், “என்னது.?” என்று மிதிலா அவளது குரலில் கத்திட, “ஆங்..?” என்று செல்வராணி விழிக்க, “ஒன்னுமில்லை ஆன்ட்டி இங்க தங்கச்சி.. கத்தினா. நீங்க சொல்லுங்க” என்று தன் பதட்டத்தை மறைத்து, மிதிலா பேச கூறினாள்.

தான் பேசுவது கௌசிக்கிடமென எண்ணி, “அதான்டா… நாலு பொண்ணா பார்த்தோம். நாலுமோ நல்ல வசதி. பொண்ணு கொடுத்து, பிசினஸ்ல ஒரு பகுதி வேலையும் தர்றாங்க. இவனிடம் சொன்னா… பொண்ணு போட்டோ கூட பார்க்காம எங்களிடம் தந்துட்டு, எந்த பொண்ணும் வேண்டாம். எவனிடமும் என் தன்மானத்தை மீறி வேலை பார்க்க மாட்டேன். எனக்கு நானே பிடிச்ச வேலை தேடி பார்த்துப்பேன். இப்ப கல்யாணம் வேண்டாம்னு குதிக்கறான்.
நீ கொஞ்சம் சொல்லுடா. அதுலயும் இரண்டு வீட்ல ஒரே பொண்ணுனு அவங்க பிசினஸை எடுத்து நடத்த சொல்லி வருது. இந்த காலத்துல இப்படி கிடைக்குமா? மூஞ்சி தூக்கிட்டு உள்ள போயிட்டான். நாங்க சொன்னதா அவனிடம் சொல்லாம நீயா பேசி, அவனை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைடா. நாங்க பெத்தவங்க சொன்னா கேட்க மாட்டான். அவனுக்கு நீ-ன்னா ரொம்ப பிடிக்கும். உன் பேச்சுக்கு அட்லீஸ்ட் கேட்பான்.” என்று கூற, மிதிலாவுக்கு நெஞ்சை அடைத்தது.

அவளாக மனதை கல்லாக்கி கொண்டு, “ஹ்ருத் கிட்ட பேசறேன் ஆன்ட்டி” என்று மெதுவாக உரைத்தாள்.

“சரிப்பா… சரிப்பா.. கௌசிக்.. அப்பறம் ஹ்ருதேஷ் ஏதும் லவ் கிவ்வு பண்ணலையே? பண்ணிருக்க மாட்டான். எதுக்கும் அப்படி ஏதாவது இருந்தா… அதெல்லாம் நமக்கு செட்டாகாதுடானு சொல்லுடா.” என்றவர், கிசுகிசுப்பு குரலில், ஹ்ருதேஷ் அப்பாவுக்கு அதெல்லாம் பிடிக்காது. வசதியை எதிர்பார்ப்பார்.” என்று செல்வராணி ஆசைப்பட்டதை, ராஜலிங்கம் ஆசையாக கூறிட, மிதிலா மௌனமானாள்.

“ச..சரிங்க ஆன்ட்டி. அவர் இப்ப வரை காதலிக்கலை.” என்று கூற, “அவரா..?” என்று கேட்க, சுதாரித்த மிதிலா.. ‘அவன்னு சொல்லறதுக்கு பதிலா அவர்னு சொல்லிட்டேன். நா..நான் ஹ்ருத்கிட்ட பேசறேன் ஆன்ட்டி” என்று கத்தரித்தாள் மிதிலா.

மிதிலாவுக்கு மனமெங்கும் பாறை ஏற்றிய உணர்வுடன், அண்ணன் போனை அவனுக்கு தெரியாமல் எடுத்த இடத்தில் வைத்துவிட்டாள்.

-தொடரும்
-பிரவீணா தங்கராஜ்.




2 thoughts on “நின் பிரேமம் என் சிநேகம்-3”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top