நின் பிரேமம் என் சிநேகம்-31

அத்தியாயம்-31

  தீபா கௌசிக் சென்றதும் செல்வராணி பணத்தை எடுத்து, “உங்கண்ணா கடை வச்சதுக்கு என் பையன் தான் பணத்தை தந்தானா?” என்று கேட்க, ஹ்ருதேஷ் கோபமாக நடந்துக்கொண்டதும், கௌசிக் செய்த செயலிலும் துவண்ட மிதிலா, இவர்கள் வேறு கேள்வி கேட்டு தொலைக்கின்றனர் என்று “ஆமா.” என்றாள்‌.

  “இவனுக்கு ஏது பணம்?” என்றதும்,  “தங்க அரைஞான் கொடி வச்சி பணத்தை தந்தார்.” என்றதும், செல்வராணியோ “தங்கம் விற்கற விலைக்கு அதை திருடி எடுத்து தந்திருக்கான்.” என்று பேச, “ப்ளீஸ்… எனக்கு உங்களோட வாதம் செய்ய முடியாது. ஏற்கனவே நொந்துட்டேன். ரொம்ப டயர்டா இருக்கு. என்னை விட்டுடுங்க” என்று அழாத குறையாக கும்பிட்டாள்.

செல்வராணியோ அவளை உட்கார வைத்து, கூட அமர்ந்தார்.

  “நான் இங்க இருக்கறது உங்களை தொந்தரவு செய்யறதுக்குயில்லை. உன்னை எனக்கு முதல்ல பிடிக்காது. உன்னை என்னென்னவோ ஏசி விட்டுயிருக்கேன்.

ஏன் இப்பவும் பிடிக்குமானு கேட்டா சந்தேகம் தான்‌. உன்னை கல்யாணம் செய்தப்ப, என் மகனை என்னிடமிருந்து மொத்தமா பிரிச்சிடுவியோனு பயந்தேன்.
  இப்பவும் அந்த பயமிருக்கு. ஆனா என் பையன் மேல நம்பிக்கை வந்துடுச்சு. எவ்ளோ பேசியும் என்னையும் உன்னையும் சரியா நகர்த்திட்டு பேறான்.
இந்நேரம் அவன் பொறுமை பறந்து வீட்டை விட்டு போங்கனு கத்தலை. அதுவரை சந்தோஷம் தான். 
  
  நான் ஏன் இன்னும் இங்க இருக்கேன் தெரியுமா?” என்று கேட்க “உங்க பையன் வீடு உரிமையா கூடவேயிருக்கிங்க” என்றாள்.

  “அதுவும் உண்மை தான்” என்று சிரித்தவர், “ஆனா அதுக்காக மட்டுமில்லை. என் பையனை காதலிச்சு, அவன் ஆசைக்கு இணங்கி, உன்னை இழந்து நின்று, கர்ப்பமாகி முழிக்கற.

   எதுலையும் சூதனமா இல்லையா.? இல்லை… என் பேரனுக்கு உலகத்தை பார்க்கற அவசரமோ?

   அவனும் வேலைக்கு சேர்ந்த புதுசு.
  இந்த நிலையில் நீங்க எப்படி வாழறிங்கனு தெரியலை. ஏனோதானோனு வாழ்ந்து, பணத்தை செலவழிச்சு உடலையும் கவனிக்காம போய், உன் வீட்ல என்‌ பையன் அவப்பெயரை வாங்க எனக்கு விருப்பமில்லை.

அதான் முதல்ல கொஞ்ச நாள் தூரயிருந்து கவனிச்சேன்.
அவன் வேலைக்கு போறான். நீ படிக்க போற. சமைக்கறதுக்கு பதிலா ஆர்டர் தந்து திண்ணுட்டு இருந்திங்க.

  அதெல்லாம் குழந்தைக்கு ஆரோக்கியமா இருக்குமா? இல்லை உங்களுக்கு தான் ஆரோக்கியமா இருக்குமா? எத்தனை காலத்துக்கு ஆர்டர் தந்து சாப்பிடறது?

அதான் உன்னை சமைச்சி சாப்பிட சொன்னேன். உன் ருசி எனக்கு தெரியாது.
  அதனால காலையிலையும் மதியமும் நீ சமைச்சதை ருசி பார்த்து வச்சிக்கிட்டேன்.‌

  நீ படிக்க போய் சோர்ந்து வர்றப்ப நைட் நான் சமைச்சி வச்சேன்.

நடுவுல படிப்பு முக்கியமானு கேட்டேன். முடியலைனா படிப்பை நிறுத்திட்டா கூட நீ வீட்ல ரெஸ்ட் எடுப்பனு நினைச்சேன். ஆனா நீ படிப்பும் பார்த்துப்பேன்னு வீம்பு பிடிச்ச. பிடிவாதமா இருந்த.

இங்க இருக்கறது நான் உன்னை கவனிச்சிக்க தான். உனக்கோ எங்க வீட்டு வாரிசுக்கோ எதுவும் ஆகாம கூடயிருந்து கவனிச்சிக்க மட்டும் தான் இருக்கேன். என்ன.. எனக்கு உன் புருஷன் கணக்கா குழஞ்சிட்டு பேசிட்டு பின்னாடி சுத்த வராது‌.

  நேத்து கூட ஐந்தாம் மாசம் வளையல் போட்டு விட்டா இந்த பொண்ணு அதுக்கும் மூஞ்சை தூக்குமானு யோசிச்சிட்டே வந்தேன். நல்லவேளை உங்கம்மா வரவும் அழகா வளையல் போட்டுக்கிட்ட.” என்றார்.

“நான் உங்களை அன்பா பார்த்துக்கலையே. பிறகு இந்தளவு என்னை பார்த்துக்க யோசித்திருக்கிங்க? உங்க பையன் உயிர் என் வயித்துல வளர்வதாலையா?” என்று கேட்டாள். லேசாக கண்ணை துடைத்து கேட்டாள்.

“நீ அன்பா பார்த்துக்கலையா? யார் சொன்னா?” என்று கேட்க, மிதிலா விழித்தாள்.‌

“அந்தா.. அது என்னது?” என்றார் சின்ன மெத்தையை காட்டி.

“சிங்கிள் காட்.. ஐ மீன் பெட்” என்றாள்.‌

“யாருக்கு வாங்கின?” என்றார் செல்வராணி.

“யாருக்குன்னா.. உங்களுக்கு தான்‌. வந்ததிலருந்து பாய்ல படுத்திங்க.  எந்திரிக்க கஷ்டப்படுவதை பார்த்தேன். சோ சிங்கிள் கார்ட் பெட் ஆர்டர் போட்டேன்‌.” என்றாள் மிதிலா.

“நான் சொல்லலை. என்‌ பையன் சொல்லலை. நீயா எனக்குனு செய்த. சமைச்சி போட்டுட்டு போறப்ப எனக்கு வசதியா எல்லாம் செய்துட்டு போவ. வந்ததும் நான் ஏதாவது பேசினா கூட என்னை நீ நேரிடையா கரிச்சுக் கொட்டுவ. இங்க நல்லவ மாதிரி பேசி என் பையனிடம் நாடகமாடாம, அவன் இருக்கறப்பவே பேசுவ.
  நீ நடிக்கலையே.
   அப்படியிருக்க.. ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்னு தெரியாதா. நான் உனக்காக தான் இருக்கேன்.‌ என் பேரப்புள்ளைக்காக தான் இருக்கேன். அப்பறம் தான் என் பையனுக்காக.
   இந்த இரண்டும் அடிச்சிட்டு பணத்தை மாறி மாறி தூக்கி போட்டு விளையாடுதுங்களே. இதுங்களை எப்படியும் என் பேரன் பார்த்துப்பான்.” என்று கூறினார்.

   மிதிலாவோ “பேரன் இல்லாம பேத்தியா இருந்தா என்னை கரிச்சி கொட்டுவிங்களா?” என்றாள் மிதிலா.

  செல்வராணியோ, “மாட்டேன்… சாமியா வளர்ப்பேன். ஏன்னா ஹ்ருதேஷுக்கு பிறவு ஒரு பெண் குழந்தை எனக்கு பிறந்து இருந்துச்சு. அப்பறம் எனக்கு கொடுப்பினை இல்லை அல்ப ஆயுசுல போயிடுச்சு‌. அதனால பொட்டப்பிள்ளை வந்தாலும் ஜம்முனு பார்த்துப்பேன்.” என்றதும் மிதிலா சிரித்தாள்.

  முதல் முறையாக மாமியாரும் மருமகளும், ஒன்றாக முறுவலிட்டனர்.‌

   “நான் ஒன்னும் அவ்ளோ நல்ல மருமக கிடையாது.” என்றாள்‌.

  “நானும் தான் நல்ல மாமியார் கிடையாது..” என்று செல்வராணி தோளைக் குலுக்கினார்.‌

   “சரி இந்தா.. பணத்தை ஒழுங்கா வை” என்றார்.

  மிதிலா அறைக்கு வந்தப்பொழுது,  ஹ்ருதேஷ் சீலிங்கை பார்த்தவாறு வெறித்திருந்தான்.

“ஹ்ருத் பீரோல வைக்கறேன்” என்று கூற, “ஏதாவது பேசிட போறேன். வாயை மூடிட்டு போடி” என்று கர்ஜித்தான்.‌ அந்த கர்ஜனை ஹால் வரை கேட்டது.

  அடிக்கடி நடக்கும் முகத்திருப்பல் சண்டை போல இதுவும் கடந்துவிடுமென மிதிலா நினைத்துக் கொண்டாள்.

  தீபா தான் பேருந்து ஏறியதும் போன் போட்டு பேச, “ஹ்ருதேஷ் உம்முனு இருக்கார்மா. உன் பையனுக்கு கிறுக்கா பிடிச்சியிருக்கு. அவன் பிரெண்டை தான் காதலிச்சேன். அவன் பிரெண்ட் நல்லவன் தானே. பிறகு என்னவாம். துரோகம் அதுயிதுனு. இன்னொரு முறை பேசினா சும்மாயிருக்க மாட்டேன். ஹ்ருதேஷ் என்னை கத்நதிட்டான் தெரியுமா” என்று கத்த கௌசிக் காதில் தெளிவாக விழுந்தது.

  எப்படியும் புருஷனும் பொண்டாட்டியும் சமாதானம் ஆவாங்க’ என்று கௌசிக் பெரிதாக நினைக்கவில்லை‌.

ஆனால் அன்றைய இரவு சாப்பிட வரக்கூறும் பொழுது “எனக்கு பசிக்கலை” என்று மறுத்ததும் தான் மிதிலா செல்வராணியை பார்க்க, “அவன் இரண்டு நாள் சாப்பிடாட்டியும் திடக்காத்திரமா இருப்பான். நீ அப்படியா? தலைசுத்தும் மயக்கம் வரும் குழந்தைக்கு சத்து சேரணும். நீ சாப்பிடு. வயித்துல பிள்ளையை வச்சியிருக்கறவங்க யாரும் குடும்ப சண்டை வந்தா சாப்பிடாம தவிர்க்கணும்னு எந்த ரூல்ஸும் இல்லை. நல்லா தெம்பா சாப்பிட்டு புருஷனோட சண்டை போடலாம்” என்று சாப்பிட வைத்தார்.

மிதிலாவும் ஹ்ருதேஷ் சாப்பிடாததை கண்டுக்கொள்ளாமல் விட்டாள்.

   அடுத்த நாள் விடியலில் எழுந்த ஹ்ருதேஷ் மடமடவென கிளம்பி அலுவலகம் விரைந்தான்.
  காலை டிபன் வேண்டாம் என்று மறுத்துவிட்டான். மதியம் உணவும் எடுத்துக்கக் கூறியும் மிதிலாவை முறைத்து விட்டு கடந்தான்‌.

  செல்வராணியோ ”அவளே பிள்ளைத்தாச்சி கஷ்டப்பட்டு செய்தா சாப்பிடாம போறடா” என்று கேட்க, நின்று பதிலளிக்காமல் அகன்றான்.‌

  மிதிலா நிதானமாக கல்லூரிக்கு கிளம்பினாள்.
  இப்பொழுது எல்லாம் நின்றுக்கொண்டே பாடம் கேட்பதற்கு பதிலாக, ஒரு சேரை போட்டு படிப்பை கவனிப்பாள்.

துணிக்கு அளவெடுத்து கவனம் செலுத்தும் போது மட்டும் எழுந்துக் கொள்வாள்.

  இதில் சீனியர் மட்டும் கேலி கிண்டல் செய்து அவளை காயப்படுத்த நினைத்தனர். மிதிலாவோ, “வாட்ஸ் யுவர் பிராப்ளம். இங்க நிறைய பேர் லிவ் இன் ரிலேஷன்ஷிப்ல இருக்கிங்க. அதெல்லாம் எனக்கு தெரியாதுனு நினைக்காதிங்க. என்னை சொல்லறதுக்கு முன்ன உங்க முதுகுல இருக்கற அழுக்கை பாருங்க.
  அப்பறம்.. இதெல்லாம் ஹ்ருதேஷ் காதுக்கு போகாத வரை நீங்க தப்பிக்கலாம். அவன் வந்தா அப்பறம் பேசற ஒருத்தரையும் சும்மா விடமாட்டான்.’ என்று எச்சரித்துயிருந்தாள்.

அடுத்தடுத்த நாளில் ஹ்ருதேஷ் தன்னிடம் அளந்து பேசுவது, வருத்தமும் கோபமும் கொண்டு பார்ப்பது என்று இருந்தான்.

  மிதிலா எது பேசினாலும், “சுயநலமா என் பிரெண்ட்ஷிப்பை கலைச்சிட்டியேடி” என்று முகம் காட்டுவான்.

  அதுவே மிதிலாவுக்கு வெறுப்பை காட்டுவதாக தெரிய அவளுமே சோர்ந்துவிட்டாள்.

   அதனால் ஹ்ருதேஷ் பேசாதது, அவனது தினசரி வேலை, ஒட்டம் என்று அது பாட்டிற்கு கடந்தது.

ஹ்ருதேஷ் பழங்கள் நட்ஸ் காய்கறி எல்லாம் வாங்கி வந்து நீட்டுவான்.
  செல்வராணி முன்பை விட நன்றாக கவனிப்பதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள, அலுவலக வேலையில் மூழ்கினான்.

    “கால் வலிக்கு… வீக்கமா இருக்கு ஹ்ருத்” என்று கூறினால், இரவில் கால் அமுக்கி விடுவான்.
 
  “ஹ்ருத்… இன்னிக்கு இப்ப இந்த சாட் சாப்பிடணும் போல இருக்கு லேசா பசிக்கு” என்றால் உடனடியாக நள்ளிரவை தாண்டினாலும் ஆர்டர் போட்டு வாங்குவான்.

“ஹ்ருத்… இங்க பாரு எல்லா டிரஸுமே பத்தலை” என்றதற்கு இலகுவாக அணிய, நைட்டி மெத்தட் ப்ராக் வாங்கி கொடுத்தான்.

  “முன்ன மாதிரி பேசமாட்டேங்கற ஹ்ருத்” என்றால் மட்டும், “என் நட்பை சிதைச்சிட்டேன்னு உன் மேல கோபம் வருது மிதிலா. எங்க அந்த கோபம் வெறுப்பா மாறிடுமோனு பயமாயிருக்கு.” என்று படுத்து விட்டான்.

  மிதிலாவுமே அதன்பிறகு அவனை தோன்டி துருவி, எதையும் பேசவில்லை. அவளுக்கும் லேசான பயம் கவ்வியது.
 
  நட்பை பிரித்தவளாகவே ஹ்ருதேஷ் பார்த்து தன் மீது வெறுப்பு விழுந்து விட்டால்? அதை தாங்கும் வல்லமை தற்போது கிடையாது.

  இப்படியே மாதங்கள் நகர, படிப்புக்கு சில நாட்கள் விடுப்பு எடுத்துவிட்டு, ஊருக்கு வர முடிவெடுத்தார்கள். ஏனென்றால் மிதிலாவுக்கு எட்டாம் மாதம் முடியும் தருவாயில் இருந்தாள்.

  ஹ்ருதேஷ் மிதிலா செல்வராணி மூவருமே சேலம் வந்தார்கள்.

நேராக ஹ்ருதேஷ் வீட்டுக்கு வந்து சேர்ந்ததும், தீபா-செல்வராகவன் இருவரும் மகளை காண வந்தார்கள்.
  
   “நாளைக்கு நம்ம வீட்டுக்கு எப்ப வருவ? நல்ல நேரம் பார்க்கணும்” என்று கூற, “நீ அங்க போனா… நான் அங்க வரமாட்டேன். இப்பவே சொல்லிடறேன். பிறகு அங்க போயிட்டு என்னை பார்க்க வா ஹ்ருத்னு கேட்காத” என்றான் ஹ்ருதேஷ்.
 
  தீபா மூலமாக ஹ்ருதேஷ் கௌசிக் நட்பு இன்னமும் விரிசலில் இருப்பதும், கௌசிக் பெங்களுரில் அன்று பணத்தை தந்ததும், ஹ்ருதேஷ் மகள் முகத்தில் விசியதை கேட்டறிந்ததில், ஹ்ருதேஷ் பேசியதை கேட்டு கோபம் வரவில்லை.

  “அத்தை இந்தயிந்த ஹாஸ்பிடல்ல எங்க கம்பெனி இன்ஸ்சூரன்ஸ் இருக்கு. மிதிலாவுக்கு எது பிடிக்குதோ, நல்ல ஹாஸ்பிடல்லோ அதுல செக்கப் பாருங்க.” என்று கார்ட்டை நீட்டினான். அதில் மிதிலா மனைவி என்ற பதவியில் இன்சூரன்ஸ் கார்ட் இருந்தது.

  “மாப்பிள்ளைக்கு இன்னமும் கோபம் போகலையா?” என்று செல்வராகவன் கேட்க, “வலிக்குது மாமா… கௌசிக் நட்பை முன்ன இழந்ததா நினைக்கலை. எப்ப பணத்தை தந்துட்டு போனானோ அப்ப நட்பை மொத்தமா இழந்துட்டோமோனா வலிக்கு.” என்று கவலைப்பட்டான்.

ராஜலிங்கமோ, “டேய்.. ஏதோ அடுத்த பஸ்ஸுக்கு போகணும்னு சொன்ன. பேசிட்டே இருக்க?” என்று நினைவுப்படுத்த, மிதிலாவை மனமேயில்லாமல் தன் வீட்டில் விட்டுவிட்டு  பெங்களூர் பறந்தான்.

  ஹ்ருதேஷ் இல்லாமல் தன் பிரசவ காலத்தை அவன் வீட்டில் கழிப்பதற்காக, அவனது அறையில் தங்கினாள். அம்மா அப்பா கூட மாப்பிள்ளை அப்படி தான் சொல்வார். நீ நம்ம வீட்டுக்கு வா” என்று தீபா வற்புறுத்த, “எனக்கே கௌசிக் அண்ணா முகம் காட்டினா, வரவர இவங்க நட்பை கெடுத்துட்டேனோனு கஷ்டமாயிருக்கும்மா. நான் இங்கயே இருக்கேன் விடு” என்றாள்.

  தங்கை தன் வீட்டுக்கு வராமல் அம்மா அப்பா மட்டும் வரவும், கௌசிக் குழம்ப, “உனக்கென்னடா… இப்ப சந்தோஷமா. நீ பண்ண வேலைக்கு அங்க மாப்பிள்ளை…‌ இல்லை.. உன் பிரெண்ட் ஹ்ருதேஷ், உன் தங்கையிடம் என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?    ‘நட்பை சிதைச்சிட்டேன்னு உன் மேல கோபம் வருது மிதிலா. எங்க அந்த கோபம் வெறுப்பா மாறிடுமோனு பயமாயிருக்கு.’ சொல்லியிருக்கார். சொன்னது போதாதுனு அவளோட பேசறதே இல்லையாம். இனி இங்க அவளா வரமாட்டா” என்று தீபா புலம்ப, கௌசிக் இப்பவரை ஹ்ருதேஷ் மிதிலா பேசிக்கறது இல்லையா? சண்டை போட்டா அடுத்து கட்டிப்பாளே’ என்று எண்ணியவன், ஹ்ருதேஷ் தங்கை மசக்கை என்றும் பாராமல் பணத்தை அவளிடம் வீசியது மனக்கண்ணில் வந்து மோதியது.

-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top