அத்தியாயம்-30
இதற்கு முன் வந்து தங்கிய பொழுது இருந்ததை விட வீடு முழுக்க தன் தங்கையின் கைவண்ணம் மிளிர்வதை கண்டான்.
‘எப்படி மாத்தி வச்சியிருக்கா? ஒருயிடமும் முன்ன இருந்த மாதிரி இல்லை. நம்ம வீட்லயே அவ முடிவு எடுப்பா. இங்கயும் ஹ்ருதேஷை முடிவெடுக்கவே விடமாட்டா போல.’ என்று ஹ்ருதேஷை பார்த்தான்.
காதலியை ஒளிந்து நின்று காணும் காதலனை போல, கள்ளப்பார்வை போல நண்பனை பார்க்க தயங்கி, கெத்து விடாமல் கௌசிக் பார்வையிட, ஹ்ருதேஷ் எல்லாம் நேர்பட பார்த்து தான் கூர்ந்தாராய்ந்தான்.
மதியம் போல செல்வராணி தீபா சமையல். முன்பு வேண்டா வெறுப்பாய் பேசுவார்கள். இன்றும் அப்படி தான். மிதிலாவை பற்றி புகார் வாசித்து பட்டியலை ரயில் போல ஒப்பித்தார்.
மிதிலாவோ அடிக்கடி ஹ்ருதேஷை பார்த்து முடிக்க, ‘இந்தம்மாவும் சும்மாயிருக்க மாட்டறாங்க’ என்றவன், “அம்மா… கொஞ்சம் குறை சொல்லறதை நிறுத்தறியா?” என்றான்.
“இப்படி தான்… உங்க பொண்ணை ஒன்னு சொல்லிட்டா உடனே மூக்கு வேர்க்க வந்துடுவான்.” என்று கூற, “அட தனியா போய் மிதிலாவை திட்டி புத்திமதி சொல்வார். நாங்க வர்றப்ப கூட கை ஓங்கி திட்டினார்.” என்றார்.
“எதுக்கு கை ஓங்கினான்?” என்று கேட்க, “அ..அது தெரியாது. வர்றப்ப கையை ஓங்கி மிதிலாவை அடிக்க வந்தவர் ஆனா அடிக்கலை.” என்று மட்டும் உரைத்திடவும், மகனை கவனித்தார்.
“அதை விடுங்க.. படிப்பெல்லாம் இப்ப உங்க பொண்ணுக்கு தேவையா? தினமும் நிற்க முடியலை நடக்க முடியலைனு போன்ல பிரெண்ட் கூட புலம்பறா, அதுக்கு உடம்பை கவனிச்சிட்டா நல்லதுல்ல? ஆனா அதை காதுல போடறது கிடையாது.” என்றார் செல்வராணி.
தீபாவோ என்னவென்று உரைப்பார். பேஷன் டிசைனிங் படிக்க அந்தளவு வாதம் செய்து சேர்ந்தாளே. சொல்லப் போனால் கௌசிக் அளவிற்கு இவளுக்கும் படிப்பு செலவு ஆனது. இதில் நடுநடுவே பேபரிக் க்ளாத் அதுயிது என பணத்தை கரைப்பாள்.
எதிர்காலத்தில் தனியாக தானே ஆடைவடிவமைப்பாளராக மாறி, பௌட்டிக் வைப்பதாக பேசுவாள். இவளிடம் வம்பு வளர்த்தால் சாப்பிடாமல் கூட மிதிலா நினைத்ததை சாதிக்கும் ரகமாயிற்றே.
ஏதோ செல்வராணி பேசவும் மறுத்து பேசாமல் கேட்டு கொண்டார்.
ஹ்ருதேஷ் கௌசிக்கிடம் பேச வரும் போது, கௌசிக் அவனாக “அம்மா நைட் வர்றேன்” என்று கிளம்பினான்.
“கௌசிக்.. எங்க போற? நானும் வர்றேன்டா” என்று ஹ்ருதேஷ் ஓடிவர, அவன் கைப்பிடித்திட உதறிவிட்டு வேகமாக சென்றான்.
“எங்கத்த போறான். என் மேல கோபம் போகலையா?” என்று தீபாவிடம் கேட்டான்.
“வீட்லயும் பேசறதை குறைச்சிட்டான். இங்க கூட கட்டாயப்படுத்தி தான் வந்தான். நான் என் இஷ்டத்துல கிளம்பிட்டா விட்டுடுங்கனு சொல்லி தான் துணைக்கு வந்தான்.” என்று கூறவும், ஹ்ருதேஷ் நண்பனாக எப்பொழுது கோபம் நீங்கி பேசுவானோ என்று தவித்தான்.
இரவு சாப்பிட தீபா அழைத்த போது கூட, நான் தியேட்டர்ல இருக்கேன். இங்க பக்கத்தில சாப்பிட்டேன். படம் பார்த்து வர லேட்டாகும்.” என்று மட்டும் சொல்லிவிட்டு துண்டித்தான்.
அன்றைய நாளில் இரண்டு படம் சினிமா தியேட்டரில் பார்த்து ஹ்ருதேஷிடம் பேசுவதை தவிர்க்க இப்படி திட்டம் தீட்டினான்.
ஹ்ருதேஷும் வாசலுக்கும் அறைக்கும் தவமிருந்தான்.
தீபா செல்வராணியுடன் வந்து கதை பேசினார். நடுநடுவே இப்படி பொசுக்குனு கல்யாணம் வச்சதுல சொந்த பந்தம் எல்லாம் நோண்டி நோண்டி கேட்குதுங்க. அப்படி கல்யாணம் செய்யணும், இப்படி செய்யணும்னு கனவெல்லாம் கண்டதாக இருவருமே சலித்து பேசி உறங்கினார்கள்.
மகன் வாசல் வரை வந்து செல்வதை கண்ட செல்வராணியோ, “ஏன்டா.. தூக்கம் வரலையா?” என்று கேட்க “இல்லைம்மா.” என்று ஹ்ருதேஷ் அறைக்கும் வாசலுக்கும் நடந்தான்.
“உன் பிரெண்ட் நைட் ஷோ முடிச்சிட்டு தான் வருவான். மூடிட்டு படு ஹ்ருத். அடிக்கடி என் தூக்கத்தை வேற கெடுக்கற.” என்று அரை உறக்கத்தில் மிதிலா வேறு திட்டினாள்.
கௌசிக் வரும் போது ஹ்ருதேஷ் கதவை திறந்து விட, “மொழி தெரியாத ஊர். எப்ப மொழியால சண்டை வந்து அடிச்சிப்பாங்கனு தெரியாது. நீ பாட்டுக்கு வெளியே ஊர் சுத்தற” என்று நண்பனை நிறுத்தி கேட்க, “என்னை நான் பார்த்துப்பேன். உன் காதலியை கண்ணுக்குள்ள வச்சி பார்த்துக்கோ. நட்பு மாதிரி காதலுக்கு துரோகம் பண்ணிடாத” என்று அன்னை தீபா அருகே சென்று படுத்துக் கொண்டான்.
“கௌசிக் உள்ள வந்து தூங்குடா.” என்று ஹ்ருதேஷ் கூப்பிட்டவனை கௌசிக் போர்வை போர்த்தி இமை மூடிட, ‘காதலுக்கு துரோகம் பண்ணிடாதேனா சொல்லறான்.’ என்று அறைக்குள் மிதிலா அருகே ஹ்ருதேஷ் சென்றான்.
கௌசிக் வந்துவிட்டான் என்றதும் ஹ்ருதேஷ் நிம்மதியாக தூங்கினான்.
அடுத்த நாள் டீ குடிக்க, தீபா செல்வராணி பேசிக் கொண்டு இருக்கவும், கௌசிக் அருகே அமர போக அவனோ எழ நினைக்கவும், மிதிலா அருகே சென்று அமர்ந்தான்.
‘நேத்து உங்கண்ணா ஏதோ காதலுக்கு துரோகம் பண்ணாதனு சொல்லறான். ஏன்டி.. உன்னை அடிக்க கை ஓங்கவும் அப்படி சொல்லிருப்பானோ?” என்று வினா தொடுக்க, “பக்கத்து வீட்டு பொண்ணு உன்னை ரூட் விடறதா அம்மாவிடம் சொல்லி அவளை எல்லாம் வளையல் போட கூப்பிடாதனு சொன்னேன். அப்ப அந்த லூசு அதை கேட்டுச்சு. அந்த பொண்ணு வந்ததும், உன்னையும் உத்து உத்து பார்த்தான். அதனால அப்படி சொல்லியிருக்கலாம். நீ என்னிடமே துள்ளி விளையாடிட்ட, அவளிடம் விளையாடாதனு சொல்லிருப்பான்.” என்று கிசுகிசுப்பாய் கூறினாள்.
“அடிங்க.. என்னை பாத்தா எப்படி தெரியுது உனக்கும் உங்கண்ணாவுக்கும்” என்றவன் அவளை கிள்ள வழி தேடினான். இடையில் கிள்ள பயந்து, மோதிரவிரலில் அழுத்தம் தந்து பிடிக்க, ”விடு ஹ்ருத் கையை. இங்க பாரு.. ஆல்ரெடி வீக்கமா இருக்கு” என்று மோதிர விரலை காட்டினாள்.
“ஏ… என்ன இது? இவ்ளோ டைட்டா போட்டிருக்க. கொஞ்சம் லூசான மோதிரத்தை போடலாம்ல” என்று கடிய, “ஹ்ருத்… கை கால் வீங்குதுடா” என்று கூறியதும் தான் அவளது கை கால்களை பார்த்தான்.
“எ…என்னாச்சு.” என்று கேட்க, “நீர்க் கோர்த்தா அப்படி தான்டா இருக்கும்” என்று செல்வராணி கூறினார்.
“இப்படி தான்… ஏதாவது பிராப்ளம்னு சொன்னா.. உடனே அப்படி தான் இருக்கும்னு ஒரே போடா போடறது.” என்று ஹ்ருதேஷ் காதை கடிக்க, “எங்கம்மா தான் ஒரே பிள்ளையை பெத்தாங்க. பேசாம நீ உங்கம்மாவிடம் கேளு.” என்று கூறிவிட, அவர்களும் “அது அப்படி தான்டி இருக்கும்.’ என்றார்.
டிவியில் படம் ஓடவும், கௌசிக் பார்த்துக்கொண்டிருக்க, ஹ்ருதேஷ் டிவி சேனலை மாற்றினான்.
“மா… அதையே வைங்க” என்று வீட்டு நினைவில் கூறினான் கௌசிக். தீபாவிடம் தான் ரிமோர்ட் இருந்ததாக எண்ணின்ன். கூறிவிட்ட பின்னோ ஹ்ருதேஷ் கையில் ரிமோர்ட் இருக்க, முகத்தை தூக்கி வைத்து போனில் சோஷியல் மீடியாவில் உலாவினான்.
“டேய் அதே படம் வச்சிட்டேன்.” என்று ஹ்ருதேஷ் கூற, “அம்மா… எப்ப கிளம்ப போற?” என்று சலித்தபடி தீபாவிடம் கேட்கவும், ”சாப்பிட்டு கிளம்பலாம்” என்றார்.
“ஏன் அத்த… இருந்துட்டு போகலாமே” என்று ஹ்ருதேஷ் கூற ”அவன் கடையை விட்டுட்டு வந்திருக்கான். இங்க வரவே மாட்டேன்னு சொன்னான். அப்பறம் கால் வேற பிசகிடுச்சுனு தான் துணைக்கு அவங்க அப்பா அதட்டி அனுப்பி விட்டார். நேத்தே கிளம்பலாம்னு தான் காலையில வந்தோம். மிதிலா தான் ஒரே அடம்.” என்றார்.
“சரிங்க அத்தை” என்று ஹ்ருதேஷ் கூறிவிட்டான்.
தீபாவோ “இப்ப படிப்பும் செக்கப்பும் இங்க பார்க்கறிங்க. நிற மாசம் ஆனா நம்மூர்ல பிரசவம் பார்க்கலாம். ஏன்னா.. எனக்கும் பக்கத்துல வீடு இருந்தா பார்த்துப்பேன். இங்க ஏதாவதுனா ஓட முடியாது.” என்றார்.
ஹ்ருதேஷ் யோசித்தவனாக மிதிலாவை பார்க்க, “எப்படியும் நைன்த் மந்த் காலேஜ்ல சொல்லிட்டு லீவு எடுக்கணும். எனக்கும் அங்கன்னா பெட்டர்.” என்றாள்.
ஹ்ருதேஷ் “சரிங்க அத்தை… ஆனா வளைகாப்பு எதுவும் வேண்டாம் அத்தை.
குழந்தை ஓன்பதாம் மாசம் பிறந்தா குறை மாசத்துல பிறந்ததா காட்டிப்போம். என்னால மிதிலா அசிங்கப்பட்டவரை போதும்” என்றதும் தீபா சம்மதமாய் தலையாட்டி கொண்டார்.
அவருக்கு விமர்சையாக செய்ய ஆசையிருந்தாலும், ஊர் வாயும் உறவுகள் வாயும் ஏதாவது பேசி காயப்படுத்தும் என்றதால் தலையாட்டி விட்டார்கள்.
”அம்மா… நீயும் சேலம் கிளம்பறதா இருந்தா போ. எனக்கு லீவு எதுவும் இல்லை.” என்றான்.
“நான் இப்ப போறேன். டிக்கெட் எடுனு உன்னை சொல்லலையே. எனக்கு எப்ப போகணும்னு எனக்கு தெரியும்.” என்று வெடுக்கென கூறினார்.
ஹ்ருதேஷ் மெதுவாக மிதிலாவை காண, அவளோ நெருப்பை விழுங்கியவளாக நின்றாள்.
மதியம் சாப்பிட ஹ்ருதேஷோ “கௌசிக்கு வைடி” என்று கூற, “கன்சீவா இருப்பது நான்டா” என்றதற்கு, குழம்பை முன்னே வைத்தான்.
தீபா பரிமாறினால் சாப்பிடுபவன், தங்கை குழம்பை ஊற்ற வந்தால் தட்டை தன் மடியில் வைத்துக் கொள்ள மிதிலா குழம்பு கரண்டியை நங்கென பாத்திரத்திலேயே விட்டாள்.
அடுத்து மூன்று மணி அளவில் புறப்படும் நேரம், தான் கொண்டு வந்த பையிலிருந்து, பணத்தை எடுத்து, ஹ்ருதேஷிடம் நீட்டினான்.
“நீ தந்த பணம். வட்டியும் சேர்த்தே வச்சிட்டேன்.” என்று கொடுக்க, “கௌசிக்… ஏன்டா இப்படி பண்ணற. நான் இப்ப பணத்நை கேட்டேனா?” என்றதற்கு, “யாரும் இன்னொரு முறை கேட்கற மாதிரி வச்சிக்க கூடாதுனு முடிவு பண்ணினேன்.
சண்டை வந்த அடுத்த நொடியே பணத்தை தர நினைச்சவன் தான். ஆனா என் கையாளாகாத தனத்தால பணத்தை புரட்ட முடியலை. உன் கல்யாணம் முடிஞ்சு உன் புதுபொண்டாட்டி கேட்டப்பவாது பணத்தை விட்டெறிந்து இருக்கணும். அப்பவும் என்னால புரட்ட முடியலை. அடுத்து குழந்தை வந்தப்பிறகு கொடுத்தா அசிங்கமா இருக்கும். அதான் அவசரமா கடனை வாங்கியாவது தந்துடலாம்னு முடிவு பண்ணிட்டேன்.
நீங்க தான் கர்ப்பம், கல்யாணம், வளைகாப்பு கூட இல்லாம குழந்தை வரவுனு பிசியா லைப்பை அமைச்சிக்கறிங்க. நான் பணத்தை தர்றதுல ஸ்லோ தான். துரோகத்தை தாங்கிட்டதுலயும் ஸ்லோ தான். இங்க வந்தது லக்கேஜை தூக்க மட்டுமில்லை… என் கடனை அடைக்கவும் தான் வந்தேன். அம்மா.. உன் பொண்ணு மாப்பிள்ளையிடம் சொல்விட்டு வாங்க. நான் ரோட்ல கேப் புக் பண்ணறேன்” என்று செல்வராணியிடம் கூட மரியாதைக்கு கூறாமல் நகர பார்க்க, அந்த பணத்தை மிதிலா பக்கம் விட்டெறிந்து, “அன்னைக்கே வாயை மூடுனு சொன்னேன். கேட்டியா?
நண்பனா இருந்தேன், எதிரியா மாத்திட்ட. பணத்தை கேட்டு எவனோ ஒருத்தனா மாத்திட்ட” என்று மிதிலாவை கத்தினான் ஹ்ருதேஷ்.
மிதிலாவோ பணக்கட்டு முகத்தில் விசிறியடிக்க பேயறைந்தது போல மாறி நின்றாள். ஏற்கனவே அண்ணன் பணத்தை தந்துவிட்டு பேசியதற்கு துவண்டவள் ஹ்ருதேஷ் பணத்தை வீசவும் தள்ளாடினாள்.
தீபாவோ, “என்னடா கௌசிக் இப்படி பண்ணிட்ட?” என்றார்.
“அம்மா.. வர்றியா இல்லையா?” என்று கேட்டான் கௌசிக்.
தீபாவோ கலங்கிய விழிகளோடு நின்ற மிதிலாவை கண்டு மீண்டும் பிரச்சனை செய்த மகனை ஒன்றும் செய்ய முடியாத நிலையில் ஹ்ருதேஷை காண, அவனோ இன்-செய்த சட்டையை எடுத்து விட்டு அறையில் படாரென கதவை அடைத்துக் கொண்டான்.
-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்
