நின் பிரேமம் என் சிநேகம்-32

அத்தியாயம்-32

  கௌசிக்கிற்கு தங்கை அவளது மாமியார் வீட்டில் இருந்து இப்பொழுது வருவாள் அப்பொழுது வருவாளென்று எதிர்நோக்கி அவள் வரமாட்டாள் என்றதும் தான் லேசாக புரிந்தது.

  அதிலும் ஹ்ருதேஷ் ஒரிருமுறை சேலம் வந்து மிதிலாவை பார்த்துவிட்டு சென்றதில், ‘கடை பக்கம் ஆளே வரலை. எப்பவும் கடைக்கு உள்ள வராட்டியும், தூரமா இருந்து பார்ப்பான்.
  வீட்டுக்காவது மாப்பிள்ளை முறுக்கோட வரலாமே. இவன் ஏன் வரலை’ என்று யோசித்தான்.

  இதில் ஹாஸ்பிடல் செக்கப் எல்லாம் தீபா தான் அழைத்து சென்றார்.
  குழந்தை பிறக்கும் பொழுது, பிறந்த பிறகும் தீபா அதிகமாக சென்று வர வேண்டியது இருக்குமென அறிந்து வைத்திருந்தார்.

  அன்று செக்கப் முடித்து தீபா வந்தவர், பேனை போட்டு கணவரிடம், “குழந்தையெல்லாம் நல்லா சத்து பிடிச்சு இருக்கு. இவளுமே நல்லா தான் எடை ஏறியிருக்கா. ஆனா மூஞ்சு… எப்பபாரு புருஷன் பக்கத்துல இல்லைனு வாடுது. அவராவது இவளிடம் தினம் பேசலாம்ல. நல்லா பேசி நாலு மாசத்துக்கு மேல ஆகுது.

  இவன் தான் நட்பு வேண்டாம் நண்பன் வேண்டாம்னு இருந்துட்டான்ல. அவராவது கட்டினவளை இத்தனை நாள் அன்பா பார்த்த மாதிரி இப்பவும் பார்த்துக்கலாம். எங்க… இப்பலாம் இவளிடமும் பேசாதது, இவளுக்கு ஒரு மாதிரி பித்து பிடிச்சு கிடக்கா.” என்று புலம்பினார்.

செல்வராகவனும், “புருஷன் பொண்டாட்டி சண்டையில நாம என்ன சமாதானம் செய்யறது?” என்றார்.

“ஆமா… அவளும் அப்படி தான் பேசிட்டு திரியறா. இங்க வந்தா காலடி கூட வைக்க மாட்டேனு மறுத்துட்டார். அவ அதுக்கு வேற இங்க வர்றதில்லை. நாளைப்பின்ன குழந்தை பிறந்த பிறகும் அங்க மாமியார் வீட்ல இருப்பாளா? இங்க வந்து தானே ஆகணும். இல்லை உங்க பொண்ணு வரமாட்டானு சொல்லிட்டு திரியப்போறாளா?” என்று தலையிலடித்து புலம்பி சென்றார்.

  கௌசிக் இதை கேட்டும் கேளாதவன் போல நகர்ந்தான்.

   மறுபுறம் ஹ்ருதேஷிற்கு வேலை பளு அதிகமானது. ஸ்ட்ரஸ் வரும் அளவிற்கு மனம் பாதித்தது.

  முதல் காரணம் மனைவியிடம் நேரம் செலவழிக்க இயலாத சூழல். அவளிடம் நன்றாக பேச முடியாத நிலை. நட்பும் காதலும் தன்னை தன்னிலை இழக்க வைத்த வலி.

இதில் கூடுதலாக வேலைசுமை. எல்லாவற்றையும் மனதில் போட்டு உழப்பினான்.

  செல்வராணி கூட மிதிலாவை நேரில் பார்க்க வாடா. நான் அவளை நல்லா பார்த்துக்காம கொடுமைப்படுத்தினா உனக்கு தெரியாதே” என்றார்.

அவனோ “நீ கொடுமைப்படுத்தனும்னு நினைச்சாளே அவ உன்னை கொடுமைப்படுத்துவா அம்மா. நீ ஜாக்கிரதையா இருந்துக்கோ” என்பான்.

தந்தை ராஜலிங்கம் அதற்கே சிரிப்பார்.

  இப்படியாக நாட்கள் நெருங்கும் சமயம் ஹ்ருதேஷ் பணிச்சுமைக்காரணமாக பெங்களூரில் இருக்க, வீட்டில் ராஜலிங்கமும் இல்லாத நேரமாக மிதிலா வயிற்றை பிடித்து “ஒரு மாதிரி பண்ணுது. லேசா விட்டு விட்டு வலிக்குது. மூச்சு வாங்குது.” என்று தரையில் அமர்ந்தாள்.
  
  “அய்யோ… இன்னிக்குனு பார்த்து உங்க மாமா போனை வீட்ல வச்சிட்டு போயிருக்கார். இரு.. பையனிடம் போன் பண்ணறேன்.” என்றார்.‌

அவனும் எடுக்காமல் போக, தீபாவுக்கு அழைத்தார்.

அன்று பார்த்து தீபாவும், செல்வராகவனும் குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டி, கோவிலுக்கு சென்றியிருந்ததால் அவர்களுமே போனை வீட்டில் மறந்து வைத்தனர்.
கடையில் பணியாளை இருக்க வைத்துவிட்டு வீட்டில் ரொட்டேஷனுக்கு தரும் பணத்தை, எடுக்க வந்த கௌசிக் அன்னை போன் அலறுவதை கண்டு எடுத்தான்.

“அம்மா கோவிலுக்கு போயிருக்காங்க. வந்ததும் கால் பண்ண சொல்லறேன்” என்றான் எந்திரனாக.

“எப்பா.. எப்பா… உன் தங்கச்சி மிதிலா பிரசவ வலியில துடிக்கறா.  இங்க ஹ்ருதேஷ் அப்பா எங்கயோ பேயிருக்கார். போன் வீட்ல வச்சிட்டார். நீயும் உங்க அம்மாவும் வாங்கப்பா. எனக்கு என்ன செய்யனு தெரியலை. கையும் ஓடலை காலும் ஓடலை.” என்றார்.‌

”எங்கம்மா இங்க இல்லை. சொன்னா புரியலையா?” என்றான்.

“தீபா இல்லையா.? அப்ப நீ வா. உன் தங்கச்சி ஹாஸ்பிடலில் அழைச்சிட்டு போக” என்றார்.

கௌசிக்கோ நேரம் காலமின்றி ”நான் வரமாட்டேன். நான் அவளுக்கு அண்ணன் இல்லை. அவ எனக்கு தங்கச்சி இல்லை.” என்றான்.‌

செல்வராணியோ இருந்த கோபத்தில், “எடுப்பட்டவனே… பிள்ளை துடிக்குது உனக்கு காதுல விழலை. இந்த நேரம் தான் கண்ட கருமத்தை பேசுவியா? வைடா போனை.” என்று கத்திவிட்டார்.‌

கௌசிக்கோ ‘ஆமா.. பிரசவவலி வந்தா அண்ணனுக்கு கால் பண்ணுனு சொல்வியிருப்பானா? ஏன் பிள்ளையோட அப்பனுக்கு போன் பண்ண வேண்டியது தானே?” என்று புலம்பிவிட்டு, தீபா போனிலிருந்து ஹ்ருதேஷிற்கு அழைத்தான்.‌

“அத்த..வேலையா இருக்கேன். அரைமணி நேரம் கழிச்சு கால் பண்ணறேன்” என்று ஹ்ருதேஷ் குரல் தர, “ஏய் உன் ஒய்ஃப்-கு பிரசவ வலினு உங்கம்மா சொன்னாங்க. உடனே வரத்தெரியாது. இங்க யாருமில்லை.” என்றான்.
 
  “இதை சொல்ல தான் போன்‌ போட்டியா? லூசாடா நீ. நான் இருக்கறது பெங்களூர்ல. இனிமே கிளம்பி வந்தாலும் அங்க வர போர் ஹவர்ஸாவது ஆகும். எங்கம்மா இல்லைன்னா நீ கூட போக வேண்டியது தானே. அந்தளவு ஈகோ இருக்குன்னா எனக்கு எதுக்கு கால் பண்ணின. என் குழந்தை எக்கேடு கெட்டு போகட்டும்னு விட்டு தொலை. வைடா போனை” என்று திட்டினான் ஹ்ருதேஷ்.

‘அம்மாவும் பையனும் போனை வைக்க சொல்லி திட்டறதுல ஒன்னு போல இருக்காங்க’ என்று கௌசிக் முனங்கினான்.

ஹ்ருதேஷ் கௌசிக்கை திட்டிவிட்டு அடுத்த நிமிடம் அன்னைக்கு அழைத்து, “அம்மா… நீங்களா ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போங்க. ஏற்கனவே செக்கப் போன இடம் தானே. ஆட்டோ கேப் புக் பண்ணிட்டு நேரத்தை கடத்தாம ஹாஸ்பிடல் கிளம்புங்க” என்று அறிவுறுத்நினான்.

   அவரிடம் பேசும் போதே, கதவை தட்டிவிட்டு கௌசிக் வந்தான்.

“உன் பிரெண்ட் கௌசிக் வந்துட்டான்டா.” என்றார் செல்வராணி.

“அவன் பார்த்துப்பான். நான் இங்க வேலை முடியவும் அங்க கிளம்பி வந்துடுவேன். அவளை பயப்படாம இருக்க சொல்லுங்க.” என்று தெம்பூட்டினான்.

“சரிப்பா” என்று துண்டித்தார் செல்வராணி. ஹ்ருதேஷ் உள்ளமோ மிதிலா துடித்த துடிப்பை அலைப்பேசி வழியாக கேட்டு அவனும் தவலியை அனுபவித்தான்.

  தன்னவளுக்கு பிரசவ வலி, உடனே செல்ல வேண்டுமென்றதால் மேலதிகாரியிடம்‌ சொல்லிவிட்டு கிளம்ப அதற்கான ஆயத்தங்களை பார்த்தான்.

“வலிக்குது அத்தை. அய்யோ முடியலை. எழுந்துக்க கஷ்டமாயிருக்கு. அம்மா… வலிக்கே.” என்று மிதிலா துடிக்க, அவளை கௌசிக் கையில் ஏந்தினான்.

“சும்மா கத்தாதே.. பயத்துல கீழே போட்டுட போறேன்.அப்பறம் அவன் வந்தா பதில் சொல்ல முடியாது.” என்றதற்கு, “நீ ஒன்னும் என்னை தூக்க வேண்டாம். கீழே இறக்கு. நான் நடந்து போவேன்” என்றாள் வீம்புடன்.

  “புருஷனுக்கும் பொண்டாட்டிக்கு நக்கல் மட்டும் எந்த சூழ்நிலையிலும் குறைச்சலில்லை‌” என்று காரில் அழைத்து வந்தான்.

  மிதிலா ஏற்கனவே சேலத்தில் செக்கப்பிற்கு வந்த ஹாஸ்பிடல் என்றதும், நர்ஸ் டாக்டர் அவளை சூழுந்தனர். இனி செல்வராணி பார்த்துக்க ஓடினார்.

கௌசிக் ஓரமாய் நின்றான்.‌ டாக்டர் நர்ஸ் என்று அவ்விடம் பரபரப்பாய் மாறவும், அம்மா அப்பா இல்லாத நேரமாக தான் வந்து தங்கைக்காக நிற்பதில் கடவுள் நிர்பந்திக்கப்படுவதாக எண்ணினான்.
அன்னை தீபாவின் போன் தன்னிடமிருக்க, தந்தைக்கு அழைத்து முடித்து நிலவரத்தை சொன்னான்.

“இங்க பாரு… மாப்பிள்ளையும் இல்லை… நாங்களும் இல்லை. ஒரு உயிர் பிறக்கறப்ப, அதுவும் தாய்மாமாவா இருந்துட்டு, இப்பவும் உன் ஈகோ பிடிச்சி தொங்கின, உன் பிரெண்ட் ஹ்ருதேஷ் உன்னை காலம் பூர மன்னிக்க மாட்டான். அவன் மன்னிச்சாலும், உன் தங்கச்சி மிதிலா உன்னை மன்னிக்க மாட்டா. நாங்களும் தான். அதனால அட்லீஸ்ட் பேஸிக் மனித நேயத்தோட அங்க இரு‌.” என்று கூற, “எனக்கு என்ன பண்ணணும்னு தெரியும். நீங்க சொல்ல வேண்டாம். அம்மாவும் நீங்களும் சீக்கிரம் வாங்க” என்று துண்டித்தான்.

  செல்வராணி கடவுளை வேண்டியபடி, லேபர் வார்டில் அமர்ந்திருக்க, கௌசிக் வரவும், “வரமாட்டேனு சொல்விட்டு ஏன்டா வந்த?” என்று பாய்ந்தார்.‌

“என்ன பிரச்சனை உங்களுக்கு? அப்ப வான்னு பதறி கூப்பிட்டு, இப்ப ஏன் வந்தனு இழுக்கறிங்க? உங்க பையன் இருந்தா நான் ஏன் வரப்போறேன். ரொம்ப முக்கியமான வேலையோ? பொண்டாட்டியை கூட பிரசவ நேரத்துல கவனிக்காம” என்று கோபமாய் ஆரம்பித்தான்.

    “என் பையனை கேள்வி கேட்கணும்னா அவன் வந்ததும் கண்ணை பார்த்து கேளுடா. அதை விட்டுட்டு என்கிட்ட வீம்பா பேசற.  மச்சான்னு அவனை பார்த்து பேச முடியுமா? அதான் உறவும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம்னு பணத்தை வீசிட்டு போனவன் தானே நீ.

இப்ப மட்டும் என்ன? தாய் மாமான் உறவு இழுக்குதோ?” என்றதும் கௌசிக்கிற்கு அப்படி தான் என்று சொல்ல முடியவில்லை.
  உண்மையில் மிதிலா மீதும், ஹ்ருதேஷ் மீதும் இருந்த கோபங்கள் எல்லாம் வரப்போகும் புது உயிருக்கு முன் தோற்றுவிட்டதாக தான் நினைத்தான்.

தங்கை மிதிலாவுக்கு பிரசவ வலியில் துடிக்கவும், அவளை தூக்கிய நிமிடம், தங்கை வயிற்றில் அசைந்து உருண்ட குழந்தையின் சேட்டையை உணர்ந்தானே.

  அந்த நிமிடமே இதயம் தாறுமாறாய் துடித்ததால் தான் கத்தாத கீழே போட்டுட போறேன் என்று பயந்தான்.
  ஆனாலும் குழந்தையின் அசைவுகள் அவன் உணர, அவன் மனமும் அசைந்துவிட்டது.
  தங்கையும் தங்கை குழந்தையும் நலமாக இருக்க ஆசைக்கொண்டான்.
  அதுவும் குழந்தையை காண பேராவல் கொண்டது மனம்.

ஹ்ருதேஷ் வந்துவிட்டால் குழந்தையை எல்லாம் ஆசை தீர்க்க பார்க்க முடியுமா? இப்பொழுதே பார்த்து ரசித்து குழந்தையோடு நிறைய புகைப்படம் எடுத்து சேமிக்க விரும்பினான்.‌

  அரை மணி நேரம் செல்வராணி ஏதேதோ திட்டி பேச, ஒன்னும் பாதியுமாக காதில் வாங்கினான்.

  ”உன்னால உன் தங்கச்சிகிட்ட அவன் பேசறதில்லை அது தெரியும். நட்பை சிதைச்சிட்டியேடினு உன்னை காதலிச்ச இதயம், வெறுக்க வச்சிடாதனு சொல்லிட்டு
உன் தங்கையிடம் அளவா தான் பேசறான். நீ வீசியெறிந்த பணத்தை அவன் உன் தங்கையிடமே தூக்கி போட்டுட்டு இப்பவரை தொடலை தெரியுமா?” என்று கூறிட, கௌசிக் அமைதியாக மாறினான்.

    லேபர் வார்டில் மிதிலா துடிப்பதை கேட்க, இவர் வேறு தன்னை திட்டுகின்றாரே என்று செவிடனாக இருக்க முயன்றான்.
செல்வராணிக்கு ஹ்ருதேஷ் போன் செய்தான்.

“அம்மா.. எங்கயிருக்கிங்க? ஹாஸ்பிடல்ல சேர்த்தியா? குழந்தை பிறந்துடுச்சா? நான் பஸ் ஏறிட்டேன்” என்றான்.

“உன்‌ பிரெண்ட் கௌசிக்.. இல்லை இல்லை.. உன்‌ மச்சான் கௌசிக் வந்தான். அவன் தங்கச்சியை தூக்கிட்டு ஹாஸ்பிடல்ல வந்து சேர்த்துட்டு கூட தான் இருக்கான். இன்னும் குழந்தை பிறக்கலை. அவ லேபர் வார்டுல குய்யோ முய்யோனு கத்தறா.
  நீ சீக்கிரம் வா. டேய் நேரா ஹாஸ்பிடலுக்கு வந்துடு.” என்றார்.

“சரிம்மா. என் பிரெண்ட் கௌசிக் வந்துட்டான்ல பார்த்துப்பான்” என்று வைத்தவனுக்கு கௌசிக் இருக்கவும் தான் நிம்மதி.

  ஹ்ருதேஷ் பேச்சை கேட்ட கௌசிக்கிற்கோ ஹ்ருதேஷ் பேச்சில் என்றைக்கும் மாற்றமில்லாமல் வந்த வார்த்தையில் கண்ணீர் வந்தது. ஆனால் கடினப்பட்டு தன்னை மாற்றிக்கொண்டான்.

ஆனால் அந்த கண்ணீரை கன்னத்தில் வரவைக்காமல் விடமாட்டேன்‌ ‘மாமா’ என்று மிதிலா குழந்தை சபதமெடுத்து பூமிக்கு வந்தான்.

   மிதிலா அலறலை தாண்டி குழந்தையின் அழுகை சத்தம் அமுதமாக செவியில் விழவும், “குழந்தை பிறந்துடுச்சா?” என்று செல்வராணியிடம் கேட்டான்.

“காது கேட்கலையா… எனக்கு குழந்தை அழற சத்தம் கேட்டுச்சு.” என்று முசுடுத்தனமாகவே பேசினார் செல்வராணி.

  ‘இவங்க இருக்கறப்ப குழந்தையை என்னை பார்க்க விடமாட்டாங்க. கௌசிக் இங்க இருந்து அசிங்கப்பட போற.’ என்றாலும் குழந்தை முகத்தை எட்டி நின்று பார்க்க நினைத்தான்.‌

  நர்ஸ் பெண்ணோ குழந்தையை துணியில் சுற்றி கொண்டு வர, செல்வராணி ஆசையாக வாங்கினார்.

கௌசிக் என்ன நினைத்தாலும் பரவாயில்லை என்று ஹ்ருதேஷ் அன்னை அருகே வந்து குழந்தையை பார்த்தான்.

நர்ஸ் பெண்ணோ “உங்க மருமகளுக்கு ஆம்பளை பிள்ளை பிறந்திருக்கு” என்று கொடுக்க, “என் ராசா… ஐய்யம்மைகிட்ட வாங்க” என்றார்.

  கண்கள் மூடியிருக்க, காது சிவந்திருக்க, மூக்கு குட்டியூண்டாக, உதடு இளஞ்சிவப்பில் கொட்டாவி விட்டு கைகாலை அசைத்து உடலை முறுக்கியது சிசு.

‘ஓ.எம்.ஜி.’ என்று ஆச்சரியமாக பார்வையிட, “என் பையன் ஹ்ருதேஷை அப்படியே உறிச்சு வச்சியிருக்கான்.” என்று கூற, கௌசிக் தலை தானாக ஆமென்று அசைந்தது.

“ஏலேய்.. இவனை பிடி. நான் இவன் ஆத்தாளை பார்த்துட்டு வர்றேன். இல்லைன்னு வை. உன்‌ பிரெண்ட் போனை போட்டா முதல்ல என் பொண்டாட்டி எப்படியிருக்கானு தான் கேட்பான்‌” என்று குழந்தையை தர, கௌசிக் ‘நா..நானா” என்றான்.

  “அந்தா.. சேர்ல உட்காரு. மடில வைக்கறேன்” என்று கூற, கௌசிக் அமர்ந்துக் கொண்டான். 

  அவன் மடியில் ஹ்ருதேஷ் குழந்தையை கொடுக்க, கௌசிக்கின் கண்கள் ஆனந்த கண்ணீரை பொழிந்தது.

செல்வராணி மிதிலாவை ஒரேட்டு பார்க்க சென்றார்.‌
“கடவுளே… ஆத்தாளையும் பிள்ளையும் நல்லபடியா தந்துட்ட. ” என்று இறைவனை வேண்டி மருமகளை சந்திக்க சென்றார்.

  இங்கு கௌசிக் தன்‌ மருமகனை கண்டு, உள்ளமெல்லாம் பூரிக்க, குழந்தையோடு ஒன்றினான்.‌

சில புகைப்படம் ப்ளாஷ்லைட் அணைத்துவிட்டு, மடியில் வைத்து புகைப்படம் எடுத்தான். பிறகு அந்த வழியில் சென்ற நர்ஸிடம் போனை தந்து ஒரு சில புகைப்படம் எடுக்க கூறினான்.
ஹ்ருதேஷ் வந்துவிட்டாலோ அல்லது மற்றவர் வந்துவிட்டாலோ தன்னிடமிருந்து குழந்தை அவர்கள் கைக்கு மாறிடுமேன நிறைய புகைப்படம் எடுத்து தள்ளினான்.‌

  அதை ஸ்டேடஸ் வேறு வைத்து விட்டப்பின்னே கை அடங்கியது.

‘என் கியூட் மாப்பிள்ளையுடன் முதல் செல்பி’ என்று ஸ்டேடஸை ஹ்ருதேஷ் பார்த்ததும், தன் குழந்தையை அவன் வைத்திருக்க ஆனந்தப்பட்டான். போன் போட்டோ அல்லது ஸ்டேடஸில் ஏதாவது கேட்டால் முருங்கை மரம் ஏறுவானென ஏதும் கேட்கவில்லை.

‘புள்ள பிறந்து ஸ்டேடஸ் வச்சா, உடனே கால் பண்ணறானா?’ என்று கௌசிக் நண்பனை வறுத்தான்.

பின்னர் குழந்தையுடன் தான் ஏதேதோ பேசி சிரித்து, பொழுது கழித்திட, தீபா செல்வராகவன் ராஜலிங்கம் என்று வந்து சேர்ந்தனர்.‌

“குழந்தையை கொடுடா” என்று தீபா பிடுங்க நினைக்க, “தொடாம அப்படியே பாருங்க. நான் தரமாட்டேன்” என்றான்.

  “பேரனை தூக்கி கொஞ்ச வேண்டாமா?” என்று செல்வராகவன் கேட்க, “வெளிய இருந்து அப்படியே வந்துட்டிங்க. குழந்தையை தரமுடியாது. அப்படியே கொஞ்சுங்க.” என்றான்.

  தீபாவோ “ஏன்டா.. இத்தனை நாள் தங்கச்சி உறவும் தங்கச்சி புருஷனும் கண்ணுக்கு தெரியலை. இந்த குட்டி மட்டும் கண்ணுக்கு தெரிதா?” என்று கேட்க “கம்முனு இருக்கிங்களா. குழந்தை தூங்கறான்.” என்றான்.

ராஜலிங்கம் வரவும் அவரிடம் வேறு வழியின்றி குழந்தையை தந்தான்.
இரண்டு நொடி கடந்திருக்காது செல்வராகவன் தீபாவிடம் இரண்டு இரண்டு நிமிடம் சென்று விட்டு, “என்கிட்ட கொடுங்க நீங்களே குழந்தையை வச்சிக்கிட்டு இருக்கிங்க” என்று அள்ளிக் கொண்டான்.

இதுவரை குழந்தையை தூக்கவே தெரியாதவன் லாவகமாக தங்கை மகனை அணைத்து நெஞ்சோடு இதமாக வைத்துக் கொண்டான்.
  செல்வராணியோ “மிதிலா நார்மல் வார்டுக்கு மாத்திட்டாங்க. குழந்தையை கேட்கறாங்க” என்று கூறி வந்து சேர, “குழந்தை தூங்கறான் என்னிடம் இருக்கட்டும்” என்றவனிடம் நர்ஸோ “சார்.. பீட் பண்ணிட்டப் பிறகு குழந்தையை தூக்கிக்கோங்க” என்றதும் தான் மிதிலாவிடம் அவனாக கொண்டு சென்று நீட்டினான்.

சோர்வுடன் குழந்தையை வாங்கியவள் கௌசிக்கை கண்டு குழந்தையை காண, “எவ்ளோ நேரம் ஆகும்? என்னை கூப்பிடு நான் வந்து குழந்தையை திரும்ப எடுத்துக்கறேன்” என்று கூற, மிதிலா பார்வை வாசலை ஏறிட்டு ஏமாற்றத்துடன் குழந்தையை காண, “ஹ்ருதேஷ் பஸ் ஏறிட்டான். ஆன் தி வேல இருக்கான்.‌ குழந்தை பிறந்தது தெரியப்படுத்திட்டேன். டிராவல் நேரம் ஆகும்ல வந்துட்டு இருப்பான்.” என்று தங்கை கேட்காமலே கூறினான் கௌசிக்.

தீபாவோ “டேய் வெளியே வந்தா தான் அவ பால் தர முடியும்” என்றதும் தான் அறையிலிருந்து வெளியேறினான்.

தீபாவும் செல்வராணியும் அறையில் இருக்க, குழந்தை பால் குடித்ததும் அவர்களே வைத்துக் கொள்வார்களோ என்று அடிக்கடி “முடிஞ்சுதா? குழந்தையை எடுத்துக்கவா?” என்று கதவுக்கு வெளியே கேட்டுக் கொண்டேயிருந்தான்.

  கால் மணி நேரம் கழித்து மிதிலா பாலை தந்துவிட்டு அசதியில் அவள் உறங்க, குழந்தையும் உறங்கியது. ஆனால் குழந்தை தாய்மாமாவான கௌசிக் மடியில் தான் உறங்கினான்.‌

    ஆளாளுக்கு கேட்டும், குழந்தை தூங்கறான்ல சத்தம் போடாதிங்க” என்று கடித்து குதறாத குறையில் விரட்டினான்.

  ஹ்ருதேஷ் பெற்றவர்களும் கௌசிக் தூக்கியதால் அவனிஷ்டத்திற்கு விட்டுவிட்டார்கள். தீபாவும் செல்வராகவனும் கூட அதற்கு மன்னிப்பு கோர, “அட ஹ்ருதேஷ் வந்தா குழந்தையை தூக்க முடியாதுனு இப்ப வச்சிட்டு இருக்கார். இருக்கட்டும்.. இனி நம்ம கூட தானே குழந்தை இருக்க போகுது.” என்று தேற்றிக் கொண்டார்கள்.

  மிதிலா லேசாக கண் விழித்த நேரம் கூட அண்ணன் தன் குழந்தையை பார்த்து கொள்ளவும் அசதியில் உறங்கினாள்.

  கௌசிக் குழந்தையின் கை விரலில் தன் ஆள்காட்டி விரலை கொடுத்திட, குழந்தை இறுக்கமாக பிடித்துக் கொண்டதும் அதையே பார்த்து மகிழ்ந்தான்.‌

  தன்னருகே நிழலாட, “குழந்தையெல்லாம் இப்ப தரமுடியாது. செல்ல குட்டி தூங்குறான்.” என்று நிமிராமலேயே கூற, எதிர்புறம் எவ்வித சத்தமின்றி நிற்கவும் விழி நிமிர்த்தினான். அங்கே ஷ்ருதேஷ் கௌசிக் கையிலிருந்த தனது உதிரத்தை கண்டு பேச்சு வராமல் பார்வையிட்டான்.‌

-தொடரும்.

பிரவீணா தங்கராஜ்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top