அத்தியாயம்-21
நள்ளிரவை தாண்டி, அறைக்கதவை உள்ளிருந்து பூட்டிய சத்தம் இன்னும் வீட்டுக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது போல கௌசிக்கின் காதுகளில் மோதியது. வெளியே யாரும் பேசவில்லை. அந்த அமைதி தான் அவனை அதிகமாக நெறித்தது.
அவனது அறையில் மெத்தையின் விளிம்பில் அமர்ந்து கொண்டான். கைகள் இன்னும் நடுங்கிக் கொண்டிருந்தன. இன்று காலையிலிருந்து சந்தித்த நிகழ்வுகள் எதுவும் உவப்பானதாக இல்லை.
கோபத்தின் சூடு உடலில் இருந்தாலும் மனசு மட்டும் மெதுவாக குளிர ஆரம்பித்தது. அந்த குளிர் தான் தற்போது வலிக்க ஆரம்பித்தது.
“நீ செத்து போ…” என்ற அந்த வார்த்தை மீண்டும் மீண்டும் மிதிலா கூறியதே தலையில் எதிரொலித்தது.
மிதிலாவுக்கு அண்ணன் என்ற பந்தத்தை தாண்டி ஹ்ருதேஷ் மீது ஈடுபாடா? என்ற கோபம் மீண்டும் முளைத்தது.
கௌசிக் கண்களை இறுக்க முடினான்.
அந்த ஒரு கணம் மிதிலாவின் முகம் நினைவுக்கு வந்தது. கோபம், பயம், துடிப்பு… எல்லாமே கலந்து இருந்த அந்த முகம். ஆனால் அந்த முகத்துக்கு அடியில் தெளிவான அமைதியில் மிதிலா இருந்தாள்.
யார் எப்படி பேசினாலும், நடந்துக்கொண்டாலும் தான் நேசித்த ஒருவனை விட்டு விலகாத உடும்பு பிடி கொண்ட மிதிலாவை கண்டான்.
“அண்ணா… எனக்கு இந்த பொம்மை தான் வேண்டும். அதுக்கு ஆல்டரா எந்த பொம்மையும் வேண்டாம்” என்ற அழுத்தமான பிடிவாத குணம் இன்றளவும் மிதிலாவிடம் இருக்கின்றது. இல்லையென்றால் தனியாக பேஷன் டிசைனிங் படிக்க போவேன் என்று பெற்றவர்களிடம் அடம் பிடித்து சேர்ந்திருப்பாளா?!
கௌசிக் திடீரென்று மூச்சை ஆழ இழுத்தான். மிதிலா பிடிவாதம் அறிந்தவனால் ஹ்ருதேஷிடம் இணையவும் மனமில்லை.
‘நண்பன் ஏமாற்றிவிட்டான்’ இந்த ஒன்று தான் அவன் மூளையில் பரவியிருந்தது. ‘நான் என்ன பண்ணினால் மிதிலா என் பேச்சை கேட்பாளென கைமுட்டியால் நெற்றியை தட்டி சிந்தித்தான்.
கோபத்தில் தள்ளிய ஹ்ருதேஷ் கண்டு நொடியும் தாமதம் செய்யாமல் தன்னை தாக்குகின்றாள். அந்தளவு அவன் மீதும் பித்தம் ஏறி நிற்கின்றாள். அதட்டினால் ஆபத்து தானோ?
‘சே’ என்று கௌசிக் தலையை குனித்தான். ஹ்ருதேஷ் மீதான பித்தம் தலைக்கேறியதால் தானே அவனிடம் அவளை இழந்து நிற்கின்றாள்.
இத்தனைக்கும் காரணம் ஹ்ருதேஷ் என்ற ஒரே நண்பன்.
எத்தனை வருட நட்பு?
பள்ளி முதல் கல்லூரி முதல் நாள் சண்டையில் அவனுக்காக நின்றவன் யார்?
அவன் தோல்வியில் உட்கார்ந்த போது அருகில் இருந்தவன் தான்.
கடை ஆரம்பிக்க பணம் தந்தவன் அவனே.
எல்லாமே ஹ்ருதேஷ் தான். கௌசிக்திற்கு மூச்சு கணத்தது.
நண்பனையும் தங்கையையும் இரண்டு முகங்கள் மனசுக்குள் நின்றது.
ஏனோ நட்பை விட, தங்கையை காதலிக்க தான் இதெல்லாம் செய்தான் என்ற எண்ணத்தால் ஹ்ருதேஷின் செய்கைக்கும் அவன் பக்கம் யோசிக்கவும் மனம் முரண்டியது.
அவள் பெரியவளா ஆகிட்டாளே… அந்த உண்மையை தான் அவன் ஏற்க மறுக்கிறானா? அவள் உலகம் அறியாதவள். அவன் மெதுவாக எழுந்து கதவருகே நடந்தான். கை கதவு கைப்பிடியில் நின்றது. திறக்க மனசு வரவில்லை. வெளியே போனால்… தங்கையை பார்க்க வேண்டி வரும். அவள் முகம் எப்படி இருக்கும்?
அழுதிருப்பாளா…? தன்னை வெறுத்திருப்பாளா? கௌசிக் கண்கள் எரிந்தது.
‘நான்… அதிகமா பேசிட்டேன். ஆனா ஒரு அண்ணனா அதான் சரியானது.’ என்ற பதிலே வந்து நின்றது.
கதவை திறந்து மெதுவாக ஹாலை வெறித்தான். சமையலறையில் பாத்திர சத்தம். அம்மா அழுத குரல் அடக்க முயற்சிகள் நடந்தது. அப்பாவின் தளர்ந்த நடை,
இந்த வீடு அவனது வீடு தானா? என்றளவு எல்லாமே வேறு மாதிரி தோற்றத்தை தந்தது.
மிதிலா சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தது.
‘அவனை தான் நான் யூஸ் பண்ணினேன்’
அவள் கண்களில் இருந்த உறுதி அது பொய்யாக தெரியவில்லை.
அவள் தான் முதலில் காதலித்திருக்கின்றாள்.
கௌசிக் சிந்தனை அங்கேயே நின்றது.
அண்ணனாக அவன் நிதானமாக யோசித்தான்.
மிதிலாவுக்கு அவளாக அவனது காதலனை தேர்வு செய்யும் உரிமை இருந்தாலும், மிதிலா பேசியது, ஹ்ருதேஷ் வீட்டில் அவளை கண்ட கோலம் என அவனை கொல்லாமல் குத்தியது.
நீண்ட நேரம் அப்படியே அமர்ந்திருந்தான். கோபத்தின் முழுதாக இறங்கி, சோர்வு மட்டும் தாக்கியது.
கண்கள் சிவந்திருந்தது. முகம் கடினமாய் இருந்தாலும் உள்ளே ஏதோ உடைந்திருந்தது. நண்பனே தன் தங்கையை காதலித்ததை அவனால் ஏற்க முடியவில்லை. அதுவும் ஒரே வீட்டில்… இத்தனை அமர்க்களம் ஆனப்பின், ஹ்ருதேஷ் வேண்டாமென்றதே கௌசிக் முடிவாக தோன்றியது. விரைவில் ஹ்ருதேஷ் கொடுத்த பணத்தை அவன் முகத்தில் விட்டெறிந்து, முற்றிலும் நட்பை உதறி தள்ள வேண்டும்.
மிதிலாவிடம் நயமாக கூறி ஹ்ருதேஷ் மனதில் இருந்து அகற்ற காய் நகர்த்த வேண்டும்’ என்று எண்ணுகையில், அறைக்கதவு திறந்த சத்தம் ஒலித்தது.
மிதிலா வெளியே வந்தவுடன், ஹாலில் அமர்ந்திருந்த பெற்றோர் அவளை பார்த்தார்கள். அவர்கள் கண்களில் பயமும் சோர்வும் கலந்திருந்தது.
“மிதிலா?” என்று கௌசிக் மெதுவாக கூப்பிட்டான்.
அவளோ இவனை அண்ணனாக, ஏன் மனிதனாக கூட பார்க்காமல் சாப்பாட்டை எடுத்து போட்டு சாப்பிட்டாள்.
“உன்னிடம் பேசணும்.” என்றான்.
மிதிலா அமைதியாக சாப்பிட, “அவன் உனக்கு வேண்டாம் மிதிலா. அவனோட பழகியதை, பேசியதை கெட்ட கனவா நினைச்சிக்கோ. அந்த நம்பிக்கை துரோகி வேண்டாம்.” என்றான்.
“ஏற்கனவே அடிச்சிட்டேன். திரும்ப கை நீட்ட வைக்காத. நீ அண்ணன் தான். அப்பா கிடையாது. அப்பாவே ஹ்ருதேஷை மறக்க சொன்னா உங்க வேலையை பாருங்கனு தான் சொல்வேன். சோ… உனக்கும் அதான் பதில்னு தெரிந்து என்னிடம் அட்வைஸ் பண்ணாத. உனக்கென்ன… அதான் உன் பிரெண்ட் ஹ்ருதேஷ், உன் சம்மதம் இல்லாம என்னை கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டான். உனக்கு அது வசதி தானே.” என்று முறைத்து கூறினாள்.
கௌசிக்கிற்கு இந்த பேச்சை எப்படி மறந்தேன். நானாக வாய்திறக்காமல் ஹ்ருதேஷ் இனி கல்யாணத்தை பற்றி இங்கே பேச வரமாட்டான். இவளை மட்டும் கல்லூரிக்கு செல்லாமல் பார்த்துக் கொண்டாலென்ன? என்ற திட்டம் போட்டான்.
மிதிலாவோ நாளைக்கு வேற காலேஜ் போகணும். இன்னிக்கு கிளம்பவும் முடியாது.’ என்று கை அலம்பி சென்றாள்.
தீபாவும் செல்வராகவனும் தான் மகன் மகளது சண்டை சச்சரவை கண்டு ஆடிப்போயிருந்தனர்.
என்னயிருந்தாலும் மகள் ஹ்ருதேஷுடன் உடலால் வாழ்ந்திருப்பதே அவர்களுக்கு பேரதிர்ச்சி.
தீபா தான் மெதுவாக மகளிடம் உறங்க சென்று, “எந்த தைரியத்திலடி ஹ்ருதேஷிடம் உன்னையே தந்துட்டு வந்து நிற்கற?” என்று அழுதபடி கேட்டார். அப்படி கேட்கும் பொழுதே கண்ணீர் அருவியாக கொட்டியது. ஹ்ருதேஷ் மறுத்துவிட்டால் இவளது வாழ்வு கேள்விக்குறி என்று சிந்திக்காமலா இருப்பாள்?
“அம்மா… ஹ்ருதேஷ் என்னை கைவிடமாட்டார்மா. அண்ணன் மட்டும் அவசரப்படாம இருந்தா, அவரா அவங்க வீட்ல பேசி காலேஜ் முடியவும் பொண்ணு கேட்க வந்திருப்பார்.” என்றாள் ஆணித்தரமாக.
தீபாவோ செல்வராணியை மனதில் வைத்து, “அவங்க அப்பா அம்மா இதுவரை இன்னமும் பேசலை. எனக்கென்னமோ செல்வராணி எல்லாம் உன்னை ஏற்றுக்க யோசிப்பாங்க. அவங்களுக்கு வசதி நகை நட்டு பணம் இதெல்லாம் பையன் மூலமா வரும்னு ஏங்கிட்டு இருந்தாங்க. நீ இப்ப அந்த கனவை உடைஞ்சிட்ட. ஹ்ருதேஷ் தம்பி வேண்டுமின்னா அதுக்கூட நீ இருந்ததை இந்த ஊர்ல சொல்லாம இருக்கலாம். ஆனா செல்வராணி ஊர்ல சொல்லி உன் மானத்தை வாங்கும். எந்த நொடியாவது நாங்க செத்துட்டா… ஏன் எதுக்குனு காரணம் தேடாத. உன் வாழ்க்கையில உனக்கு நல்லது செய்ய முடியாம, கெட்டதை பார்த்து கை தட்டவும் மனமில்லாம போனதாவே இருக்கட்டும்” என்று பேச பேச, மிதிலா மௌனமானாள்.
செல்வராகவணும், “இங்க பாரு மிதிலா… கௌசிக்கை விட உனக்கு செல்லம் தந்துட்டோம். படிப்பை தந்துட்டோம். இப்ப நீயா ஹ்ருதேஷை கேட்கற. என்ன நடக்குமோ அந்த ஆண்டவனுக்கு தான் வெளிச்சம். ஹ்ருதேஷ் கெட்டவன் கிடையாது.. அவன் ஏமாத்தமாட்டான் தான். ஆனா அதுக்காக நீ உன்னையே இழந்திருக்க கூடாது மிதிலா. அதுபெரிய தப்பு. எங்க வளர்ப்பை கேவலப்படுத்திட்ட.” என்றார் கலங்கியபடி. யார் தான் அவள் செய்த காரியத்திற்கு கொஞ்சுவார்கள். தவறென்று அவளுக்கும் தெரிகின்றது. என்ன செய்ய? தவறை செய்து விட்டு மாட்டிக்கொண்டு நிற்கின்றாள். இனி ஆகப்போவதை பார்க்கும் ரகம் மிதிலா.
மிதிலா யாருக்கும் பதில் தராமல் அவர்கள் சென்றதும் கல்யாணம் செய்ய வேறு வழியின்றி படுத்துறங்கினாள்.
—
இங்கே ஹ்ருதேஷ் வெளியே சாப்பிட்டுவிட்டு, அன்னையிடம் பேசாமல், அறைக்குள் வந்து சேர்ந்தான்.
ஹ்ருதேஷிடம் அறைக்கு வந்து, “சாப்பிடவா” என்று அழைத்தார்.
“வெளியவே சாப்பிட்டேன்” என்று பதில் தந்தான்.
“உங்கம்மா சாப்பிடலை.” என்றார் அவர்.
“ஒரு பொண்ணை அவதூறுற விதமா பேசினா எந்த பையனும் பெத்தவங்களை மதிக்க மாட்டான். அவங்க ஒன்னும் மிதிலாவை என்னவேன்னா பேசிட்டு போவாங்க. நான் திட்டினா மட்டும் என்னவாம். சாப்பிட்டா சாப்பிடட்டும். இல்லைன்னா போகட்டும். அவங்களை நீங்க பார்த்துக்கோங்க” என்றான்.
ராஜலிங்கமோ “என்னவோ போங்க” என்று சோறை எடுத்து போட்டு சாப்பிட்டார். செல்வராணியோ நான் ஏன்டா சாப்பிடாம பட்டினி கிடக்கணும்.’ என்ற வீராப்பில் அவரும் ராஜலிங்கத்துடன் சாப்பிட்டார். ஏதோ வேண்டாவெறுப்புடன் உணவை விழுங்கினார்.
“நாளைக்கு நான் அவனோட பெங்களூர் போறேன். இனி அவனை தனியா விடமாட்டேன்” என்று செல்வராணி பேச, ராஜலிங்கமோ ‘அவன் அங்க போனா உன்னிடம் பேச மாட்டான்.” என்றார்.
“பேச வேண்டாம். நான் போறது எந்த சிறுக்கியும் என் பையன் வீட்டை மிதிக்கக்கூடாதுன்ற காரணத்துக்காக” என்று கையை அலம்பி பாத்திரத்தை கிச்சனில் உருட்டினார்.
அன்றைய இரவு அமைதியில் கழிந்தது. செல்வராணி அழுது புலம்பினாலும் இன்றைய நாட்கள் அவருக்கு அதிர்ச்சியை பரிசளித்த நாளே.! ஆனால் உடம்பாய் மகனோடு பெங்களூர் செல்வதற்கு முடிவெடுத்து பெட்டியை கட்டினார்.
ராஜலிங்கம் மகன் அறைக்கு வந்து, “உங்கம்மா உன்னோட வருவேன்னு குதிக்கறா. நீ பேச மாட்டேன்னு சொல்லியும், பரவாயில்லைனு நிற்கறா. உங்க அம்மா பையன் சண்டையை நீங்களே பார்த்துக்கோங்க” என்றவர் பேச்சை அசட்டையாக கேட்டான்.
ராஜலிங்கம் மெதுவாக, “அவங்க வீட்ல என்னடா சொன்னாங்க?” என்று கேட்க, “கௌசிக் அவன் செத்தா தான் இந்த கல்யாணம் நடக்குமாம். அவன் உயிரோட இருக்கற வரை அவன் தங்கையை எனக்கு கட்டி வைக்க மாட்டானாம்.” என்று கூறினான்.
“மிதிலாவோட அப்பா அம்மா என்ன சொன்னாங்க?” என்று கேட்டார்.
“அவங்க ரொம்ப பயந்து இருக்காங்க. மிதிலாவும் நானும் ஒன்னா இருந்த விஷயம் ஊருக்கு தெரிந்தா அசிங்கமா பேசுவாங்க. தயவு செய்து மானத்தை வாங்காதனு கதறாத குறை. அம்மா ஏதாவது பேசிடுவாங்களோனு பறப்படறாங்க. நாளைப்பின்ன மிதிலாவை ஊர் தப்பா பேசும்னு நினைச்சி அழுவறாங்க. மத்தபடி கௌசிக் முன்னேற உதவியதால அவங்க என்னை மதிக்கறாங்க. தீபா ஆன்ட்டி தான் இது இந்த மாதிரி முடியும்னு தான் பயந்துட்டு, நீ இங்க வந்தாலே திட்டியது. கடைசில இப்படி காதலிக்கறோம்னு வந்து நிற்கறிங்களேனு புலம்பினாங்க.” என்றவன் சற்று தயங்கி “அப்பா அம்மா மிதிலாவோட நான் இருந்ததை யாரிடமாவது புரளி பேசுவாங்களா?” என்று பயந்து கேட்டான். என்னயிருந்தாலும் மிதிலாவை பற்றி பேசி இப்படி பரப்பினால் அவள் பெயர் கெடுமே.
“இங்கிருந்தா அந்த வேலை செய்ய வாய்ப்பிருக்கு. ஆனா அவளுக்கு இங்க இருந்து புரளி பேசறதை விட, உன்கூடவே இருக்கணும்னு நினைக்கறா.” என்று கூற, “நாளைக்கு நாலு நாலரைக்கு கிளம்புவேன். அப்பறம் விட்டுட்டு போயிட்டான்னு புலம்ப போறாங்க. சொல்லிடுங்க.” என்று அவர்களையும் அழைத்து சென்றிட தயக்கமில்லை என்று கூறிவிட்டான். தந்தை சொல்வது போல இங்கிருந்து தீபா ஆன்ட்டியிடம் மனதை பாதிக்கும் விதமாக பேசினால்?
தீபா ஆன்ட்டி வேறு ஆடுவார்களென எண்ணியதுக்கு மாறாக அவர்கள் பெண்ணை பெற்றவராக கெஞ்சுவதே மனம் ரணமாக உள்ளது.
இதே காதலிப்பதாக மட்டும் பேச்சு போயிருந்தால், அவர்களும் அன்னை போல கத்தி ஆர்ப்பாட்டம் செய்திருக்க வாய்ப்புண்டு. மிதிலாவோடு இணைந்தது அவர்களை பேசவிடாமல் நிறுத்தியுள்ளதென தெரியாதா?!
-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்
