நின் பிரேமம் என் சிநேகம்-20

அத்தியாயம்-20

    நீண்ட வாதம் முடிய, “இப்ப அழுது என்னை திட்டறதை விடுங்க. அங்க எனக்காக வந்து பொண்ணு கேளுங்க. அவளும் அவங்க வீட்ல என்ன மாதிரி திட்டு வாங்குவா. சோ ப்ளீஸ்… இந்த காதலை கல்யாணத்துல முடிச்சி வையுங்க. அம்மா ப்ளீஸ்” என்று கேட்க, சிகையை அள்ளி முடித்த செல்வராணியோ “டேய்… உனக்கு நம்ம சாதி சனத்துல, எண்பது சவரன் நூறு சவரன் நகைப்போட்டு பிசினஸையும் தர முன்ன வர்றாங்க. நீ என்னடான்னா, போயும் போயும் அவளை கட்டிக்க போறதா பிணாத்தற?
   அதான் அவளோட சந்தோஷமா இருந்துட்டல.. தலைமூழுகி தொலைடா.
  அவளை விட நல்லவளா ஒழுக்கமானவளா பணக்காரியா பார்ப்போம். அவங்க வீட்டு வளர்ப்பு சரியில்லை..” என்று அடுக்கும் நேரம், “அம்மா” என்று ஹ்ருதேஷ் ஆங்கார குரல் கர்ஜனையாக வந்தது.

“என்ன பேசறிங்க… மிதிலாவோட நான் ஒன்னா இருந்ததை தலை முழுக சொல்லறிங்க. அவளை விட ஒழுக்கமானவளா… அவ ஒழுக்கத்துக்கு என்ன குறைச்சலை கண்டீங்க?

  இங்க அவ தப்பு பண்ணினா… நானும் தான் தப்பு பண்ணிருக்கேன்.
  அவ ஒழுக்கம் கெட்டவன்னா.. நானும் ஒழுக்கம் கெட்டவன்.
  அவ வளர்ப்பு சரியில்லைன்னா.. உங்க வளர்ப்பும் சரியில்லை.” என்றவன் அவர்களை பார்த்து எழுந்துவிட்டான்.‌

அங்கும் இங்கும் நடந்தவன், “சே… உங்க மனசுல இவ்ளோ அழுக்கு இருக்கும்னு நான் நினைக்கலைம்மா. ஏதாவது செய்து கௌசிக் வீட்ல கொடுக்கறப்ப, என் நட்பை மதிக்கறிங்கனு நினைச்சேன். இப்ப தான் தெரியுது. நீங்க இஷ்டத்துக்கு செய்துட்டு அதை திங்க முடியாம தள்ளி விட்டியிருக்கிங்க.
 
   கௌசிக் கூட பழகியது உங்களுக்கு பிடிக்கலை. மிதிலாவை விரும்பறேன்னு தெரிந்தும் நெருப்பு மாதிரி வார்த்தை அள்ளி விசறிங்க. ஏன்மா இப்படி இருக்கிங்க. நீங்களும் பொண்ணு தானே?.” என்று வெளியேறினான். 

ராஜலிங்கம் தடுக்க, “நீங்களும் ஏதாவது பேசி காயப்படுத்துவிங்க. என்னை விடுங்க” என்று மாடிக்கு விரைந்தான்.

  ராஜலிங்கம் மகன் பின்னால் வந்தார்.
  “இங்க வந்து நின்னுட்ட… அங்க மிதிலா கூட வந்ததா சொன்ன. அவளை போய் பார்க்கலையா?” என்று கேட்டார்.

தந்தையை ஏறிட, “நீ எவளையோ காதலிக்கறியோனு எனக்கு சந்தேகம் இருந்தது. மிதிலாவா இருக்குமோனு ரீசண்டா தான் சந்தேகம் வந்துச்சு. நாங்க சின்ன வயசுல போட்ட அரைஞான் கயிறை வித்து பணத்தை கௌசிக்கு தந்திருந்த. உன் பெங்களூர் வீட்ல நீ கௌசிக் இருந்த பிக் வச்சியிருக்கலாம். ஆனா மிதிலாவும் இருக்கற ப்ரேம் இருந்துச்சு. ஏதாவது சந்தேகமா கேட்டு அதை பிடிச்சிக்கிட்டு சண்டை போடுவியோனு தான் சந்தேகத்தை மூட்டைக் கட்டிட்டேன்.” என்றவரை ஹ்ருதேஷ் மெதுவாக ஏறிட்டான்.

   “ஏதாவது கேட்டா தான் என்னோட பேசாம ஒதுக்கறியே. ரொம்ப வலிக்குடா. உன் அம்மாவுக்கு தினமும் போன் போட்டு பேசறப்ப என்னை பத்தி இரண்டு வார்த்தை கேட்க மாட்டியா… அப்பாவிடம் கொடுங்க பேசணும்னு சொல்வனு காத்திருப்பேன். பட்டு பட்டுனு போனை வச்சிடுவ.

  இப்பவும் பட்டுனு இங்க வந்து நிற்கற? நீ உங்க அம்மாவிடம் பேசியது எல்லாம் சரி தான்‌.” என்று தற்போது இவன் செய்த செயலை ஏற்றார்.

“ஆனா ரொம்ப தப்புடா… அந்த பொண்ணோட ஒன்னா இருந்தது.
  உனக்கு பிறகு ஒரு பெண் குழந்தை பிறந்து மூனு மாசத்துலயே இறந்துடுச்சு. அது இப்ப வளர்ந்து ஆளாகியிருந்து இந்த மாதிரி அவளிடம் எவனாவது ஒருத்தன் பிஹேவ் பண்ணிருந்தா ஒரு அப்பாவா என் நெஞ்சு வெடிச்சிருக்கும். ஏன் ஒரு அண்ணனா உனக்கு வலிச்சிருக்கும்.
  அங்க கௌசிக் அந்த மனநிலையில் என்ன வேண்ணா வார்த்தையை வீசலாம். ஆனா எல்லாத்தையும் கேட்டுக்கோ மன்னிப்பு கேளு. ஆனா அந்த பொண்ணை கைவிட்டுடாத. அப்படி கை கழுவினா அது பெரிய பாவம்டா.” என்று பேசியவரை புரியாமல் பார்த்தான். என்னடா அப்படி பார்க்கற?” என்று கேட்க, “இல்லை.. நீங்க தானே பெரிய இடமா பார்த்து நகைக்கும் பணத்துக்கும் ஆசைப்பட்டிங்க?” என்றான்.

ராஜலிங்கமோ லேசாய் புன்னகைத்து, “உனக்கு பெரிய பெரிய இடமா, வரன் பார்த்தது எல்லாம் நான் தான்‌. நீ எப்பவும் கஷ்டப்படாம இருக்கணும்னு யோசித்தேன். அதுக்காக உன் சுயமரியாதையை இழந்து கல்யாணம் செய்ய நான் பேசலையே. நீ வேலைக்கு போகணும்னு ஒத்தகாலில் நின்றப்ப சந்தோஷப்பட்டேன்டா.
  
  சம்பளம் வாங்கி முதல் முறை முழுப்பணத்தை என் பேங்க்ல போட்டப்ப பூரிப்பா இருந்துச்சு. சரி வசதியான இடமா பார்த்தா இன்னமும் சிறப்பா இருப்பனு நினைச்சேன். நீ காதலிப்பதா சந்தேகம் வரவும் நான் வரன் தேடுவதை கூட நிறுத்திட்டேன். உங்க அம்மா தான் புரோக்கரிடம் என் பையன் இவ்ளோ சம்பளம் வாங்கறான் அவ்ளோ சம்பளம் வாங்கறான். அதுக்கு ஏத்த பொண்ணா பாருங்கனு கலரு பணம், வசதி, நகைனு தேடினா. அவயிஷ்டம்னு விட்டுட்டேன். எப்படியும் நான் சொன்னா புத்திக்கு உரைக்குமா? நீ பேசிப்பனு நான் ஒதுங்கிட்டேன்.
   
  ஆனா இப்ப இந்த பொண்ணு மிதிலாவிடம் நீ பண்ணின வேலைக்கு ஒதுங்கினா தப்பு‌.
  உங்கம்மா வரலைன்னா ஒன்னும் குடி முழுகி போகாது. இப்ப நானும் வர்றது சரியா இருக்குமானு தெரியலை‌. முதல்ல நீ போய் கௌசிக்கிடம் பேசு. அவனிடம் மிதிலாவை கல்யாணம் செய்வதா தெரிவி. அவங்க அம்மா அப்பாவிடமும் தான். அதுக்கு பிறகு எங்களை கேட்டா வர்றோம்.” என்றார்.

ஹ்ருதேஷுக்கும் இதுவே சரியென்று தோன்றியது. கௌசிக் வீட்டில் தனியாக சென்று முதலில் பேசிவிடுவோமென்றதே. கௌசிக்கிடம் பேசி சரிப்படுத்தி அவர்கள் அம்மா அப்பாவின் சம்மதமும் கேட்க வேண்டும். தனது அன்னையே இப்படி பேசும் போது, அங்கே தீபா சொல்லவே வேண்டாம் அங்கே மிதிலா என்ன வார்த்தையில் வதைக்கின்றனரோ என்று பயந்து, “நான் பார்த்துட்டு வர்றேன்ப்பா” என்று ஓடினான்.

கீழே பைக் சாவி எடுக்கும் நேரம், செல்வராணி அழுதுக் கொண்டிருந்தானர். “நேத்து வந்தவ முக்கியமா போயிட்டாளடா‌.” என்று ஏதோ பேச, அவரை சட்டை செய்யாமல் புறப்பட்டான்.‌

  கௌசிக் வீட்டிற்கு வந்தப்பொழுது, அங்கே மயான அமைதி.

ஹ்ருதேஷ் பைக் சத்தம் கேட்டு, மிதிலா அவளது கதவை திறந்து வந்தாள். கௌசிக்கும் கதவை திறந்து வந்தான். ஹாலில் ஏற்கனவே தீபா செல்வராகவன் ஓய்ந்து போய் இருந்தார்கள். கௌசிக் மிதிலாவுடன் ஏற்பட்ட வாதங்களின் அயர்ச்சி என்று புரிந்தது.

  கௌசிக் மிதிலா வந்ததும் ஆக்ரோஷமாக அண்ணன் தங்கைக்கு மோதல்களும் வாதங்களும் நிகழ்ந்தது. சும்மாவே மிதிலா ஆடுவாள். இங்கே வந்ததும் சலங்கை கட்டாத குறை.

கௌசிக்கை வெளுத்து வாங்கினாள்‌. “ஏன்டா… நான் என்ன பெயர் தெரியாத எவனோ ஒருத்தனையா காதலிச்சேன்.
  உன் பிரெண்ட் ஹ்ருதேஷ், நல்லவன் என்று நல்லா தெரிந்து தானே அவனை லவ் பண்ணினேன். அதுக்கூட நானா தானே லவ் லெட்டர் தந்து இம்சை பண்ணினேன். ரீசண்டா தான் அவனே என் காதலை அக்சப்ட் பண்ணினான்.
  அப்படி என்ன துரோகம் பண்ணிட்டார். அவரை பார்த்து பச்ச துரோகம்னு கத்தின.
   பிரெண்டோட தங்கையை காதலிப்பது எல்லாம் எல்லா இடத்திலும் நடக்கறது தான். புதுசா துள்ளற‌. உனக்கு பிசினஸ் செய்ய பணம் தந்தப்ப இனிச்சதோ? உனக்குன்னு அவன் அங்கயிருந்து வந்து உதவினப்ப பல்லை பல்லை காட்டின. அவன் எத்தனை முறை நம்ம வீட்டுக்கு வந்தான். நீ தான் புதுப்பொண்டாட்டியை விட்டு பிரியாதவனா அவனை தேடி ஓடுவ. உனக்குனு அவன் நல்லதை தானே அமைச்சி தந்தான்” என்று மூச்சு வாங்க பேசவும், கௌசிக் இளக்காரமாக பார்த்தான்.

“நான் ஒன்னும் பிசினஸுக்கு பணத்தை வாங்கிட்டு உன்னை கூட்டி கொடுக்கலை. ஆனா அவன் உன்னை அப்படி தான் யூஸ் பண்ணிட்டான்.” என்று பேச, மிதிலா அண்ணன் என்றும் பாராமல் அறைந்தாள்.

”என்ன பேசற… அவன் என்னை யூஸ் பண்ணினானா? அவனை தான் நான் யூஸ் பண்ணினேன். விலகி விலகி போனவனை, நிறுத்தி முத்தம் கொடுத்து உசுப்பேத்தியது நான் தான். அவனில்லை.. அவன் என்னை கண்டா பத்தடிக்கு ஓடினவன்.
இப்பவும் அவன் ஒன்னும் உன்னை தேடியோ என்னை தேடியோ வந்து கெஞ்சற அவசியமில்லை. இத்தனை நாள் சந்தோஷமா இருந்தோம். இப்ப கை கழுவலாம்னு நினைச்சா என்ன‌ செய்வ?” என்றான்.

“தலைமுழுகினா நல்லது. அவனை ஒன்னும் நீ கட்டிக்க வேண்டியதில்லை.” என்றான் கௌசிக்.

“லூசு.. அவனை கட்டிக்கலைன்னா நான் யாரையும் கட்டிக்க மாட்டேன். இந்த விஷயத்துல முடிவு பண்ண வேண்டியது அவனும் அவங்க அப்பா அம்மாவும். நானும் நம்ம அப்பா அம்மாவும் நீயும் இல்லை.” என்று பேச, தீபாவுக்கு நெஞ்சுவலி வராத குறை. ஹ்ருதேஷ் பார்க்க வாட்டசாட்டமாக இருக்க, எங்கே இந்த காதல் என்ற பிரச்சனை வெடிக்குமென்று தான் அவனை தவிர்க்க கௌசிக்கிடம் ஏகவசனத்தில் திட்டி தீர்ப்பார்.
  ஆனால் ஹ்ருதேஷ் இங்கே வருவதை தவிர்ப்பான். கௌசிக் தான் வழிய சென்று பேசி தொலைப்பான்.
  அன்று பயந்தது போல இன்று மகள் காதல் வயப்பட்டு, கட்டில் வரை சென்றதை ஒரு தாயாக ஏற்க முடியாமல் அவஸ்தைப்படுகின்றார். இதில் மகளை அவன் ஏற்காவிட்டால் மகளது வாழ்வு? என்ற அச்சம் சுழட்டியது.

  செல்வராகவனோ மகள் பேசியதை கருத்தில் கொண்டு அவருமே பயந்தார். பெண்ணை பெற்றவர்கள் நெருப்பை மடியில் கட்டிய நிலையில் அவர் துடித்தார்.
  மகள் ஹ்ருதேஷிடம் அவளை இழந்தது ஊருக்கு தெரிந்தால் கண் காது மூக்கு வைத்து பேசுமே.
  ஏதாவது என்றால் ஹ்ருதேஷையும் மணக்காமல், வரனும் அல்லவா தடையாகும் என்று பயந்தார். இங்கு வந்ததிலிருந்து கௌசிக் தான் மிதிலாவுடன் மோதிக் கொண்டிருந்தான்.

  தீபா- செல்வராக் இருவருமே, “ஏன்டி இப்படியொரு காரியத்தை செய்ய துணிந்த. இனி உன் வாழ்க்கை என்ன நிலையில இருக்குமோ?’ என்று அழுதனர்.

அந்த நேரம் வந்த ஹ்ருதேஷிடம் “நீ ஏன் இங்க வந்த?” என்று செல்வராணி-ராஜலிங்கம் வந்திருக்கின்றனரா என்று ஆர்வமாக பார்த்தாள் மிதிலா.

கௌசிக்கோ “இங்க எதுக்குடா வந்த?” என்று கத்தினான்.

ஹ்ருதேஷோ கௌசிக்கையும் மிதிலாவையும் பார்த்து நடுவில் இருந்த செல்வராகவன்-தீபாவை கண்டு தலை கவிழ்ந்தான்.

   “இல்லை.. நீ தனியா சமாளிக்க..” என்றவன் பேச்சை நிறுத்தினான்.

“அதெல்லாம் மலையே முழுங்கி ஏப்பம் விடுவேன். நான் பார்த்துப்பேன். நீ கிளம்பு” என்று அதிகார தோணியில் மிதிலா பேச, ஹ்ருதேஷ் நண்பனை கண்டான்.
 
  செல்வராகவனிடம் வந்தவன், “அங்கிள் மிதிலாவும் நானும் விரும்பறோம்.” என்று ஆரம்பிக்க, “பச்.. ஹ்ருதேஷ்… அதெல்லாம் உன் பிரெண்ட் எல்லாம் புட்டு புட்டு விலாவரியா பேசிட்டான்.
  என்னத்த விளக்கணும்? நீயும் நானும் ஒன்னா இருந்ததை சொல்லி தானே உங்க வீட்ல போட்டு தந்தான். அப்படியிருக்க இங்க தம்பட்டம் அடிக்காமல இருப்பான்? அப்பா அம்மாவுக்கு எல்லாம் தெரியும்.” என்று அழுதாள்.

அவளை தள்ளி நிறுத்திவிட்டு “அங்கிள்… ஆன்ட்டி… நான் மிதிலாவை ஏமாத்தணும்னு நினைக்கலை. கௌசிக்கு துரோகம் செய்யணும்னும் நினைக்கலை. இரண்டு பக்கமும் நெருப்புல தான் நடந்தேன். மிதிலா காதலிக்கறேன்னு நின்றப்ப, அவளை தங்கச்சியா பார்க்க முடியலை.” என்று பயந்து விவரிக்க, கௌசிக்கோ “என்னடா நடிக்கற. தங்கச்சியா பார்க்க வேண்டியவளை நாசம் பண்ணிட்டு இங்க வந்து நல்லவனா வேஷம் கட்டறியா? உன்னை நண்பன்னு வீட்ல விட்டதுக்கு புத்தியை காட்டிட்டல்ல” என்று பிடித்து வாசல் பக்கம் தள்ளி விட்டான்.

ஹ்ருதேஷ் கதவில் மோதி கீழே விழுந்தான். விழுந்த வேகம் நெற்றியில் ரத்தம் வழிந்தது.

மிதிலாவோ கௌசிக்கை தள்ளி விட்டு, “உன் நண்பன்ற சாப்டர் எப்போவோ முடிந்துச்சு. இது என் ஹ்ருதேஷ். தள்ளி விடற வேலை வச்ச அவ்ளோ தான்.” என்றவள் ஹ்ருதேஷை தூக்கி நிறுத்தினாள்.

  “தம்பி அவளோட ஒன்னா இருந்ததை ஊர்ல சொல்லாதிங்க. எங்க மானம் மரியாதை போயிடும்.” என்று தீபா கைகூப்பினார்.

  செல்வராகவனோ “அவ படிப்பு கூட முடிக்காத சின்ன பொண்ணு. அவ வாழ்க்கையை கெடுத்திடாதிங்க” என்றார்.

  தீபாவோ “கௌசிக் உங்களை பேசியதையும் தள்ளி விட்டதையும் மனசுல வச்சிட்டு அவளை ஏதும் கெட்டவளா பேச வச்சிடாதிங்க.” என்று காலில் விழாத குறையாக பேச, பெண்ணை பெற்றவராக செல்வராகவனோ, “தயவு செய்து பிரச்சனை பண்ணாம போங்க தம்பி. முடிந்தா அவளை நேர்ல சந்திப்பதை தவிர்த்திடுங்க. உங்க கால்ல வேண்டுமின்னா விழறேன்.” என்று ஹ்ருதேஷ் பக்கம் செல்ல மிதிலாவோ “அப்பா.. என்ன பண்ணறிங்க” என்று அதட்டினாள்.

“சும்மாயிரும்மா…” என்று மகளிடம் கூறியவர் “நீங்க கௌசிக்கு பணம் தந்து அவனை நல்ல நிலையில நிறுத்தியது எல்லாம் நண்பனுக்கு உதவியதா இருக்கலாம். ஆனா ஊர்ல அப்படி பேசமாட்டாங்க.” என்று குலுங்கி அழுதார்.

“அங்கிள் நான் அவளை கைவிட போறதில்லையே. அவளை கல்யாணம் பண்ணிப்பேன்.” என்றான் ஹ்ருதேஷ்.

கௌசிக்கோ “நான் உயிரோட இருக்கற வரை உனக்கு என் தங்கையை கட்டி தரமாட்டேன்.” என்றான்.

“உன்னை ஒன்னும் கட்டிக்க கேட்டு அவன் நிற்கலை. என்னை கல்யாணம் பண்ண தான் கேட்கறார். உனக்கு அவர் என்னை கல்யாணம் பண்ண பிடிக்கலைன்னா… அப்ப நீ செத்து போ” என்றாள் மிதிலா.

ஹ்ருதேஷோ அவளை அறைந்து, ”அவன் சம்மதிக்காம உன் கழுத்துல தாலி கட்ட மாட்டேன். கௌசிக்… உன்‌ சம்மதம் இல்லாம எங்க கல்யாணம் நடக்காதுடா.” என்று ஹ்ருதேஷ் பேச, அவனோ கோபமாக தங்கையை கண்டு அறைக்குள் தாழிட்டான்.

“நீங்க இப்ப போங்க” என்று செல்வராகவன் தீபா கையெடுத்து கும்பிட, ஹ்ருதேஷும் மிதிலா வீட்டிலிருந்து புறப்பட்டான்.

-தொடரும்.

பிரவீணா தங்கராஜ்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top