அத்தியாயம்-22
பூனையை மடியில் கட்டியதாக ஹ்ருதேஷ் அன்னை செல்வராணி அவனுடன் பெங்களூர் வந்தார்.
பேருந்தில் பக்கத்தில் இருந்தாலும் அன்னையிடம் முகம் திருப்பி பேசவில்லை.
மிதிலாவை என்னென்ன வார்த்தை அள்ளி வீசிவிட்டார்?
பேருந்தில் ஏறி அமைதியாக கண் மூடிக் கொண்டான். அதோடு இறங்கும்வரை எந்த சத்தத்திற்கு கண் திறக்காமல் வந்தான்.
இரண்டு மூன்று முறை தாகமெடுக்க செல்வராணி தண்ணி பாட்டிலை கொண்டு வர மறந்து, பஸ்ஸில் இருந்த நீரை தான் பருகினார்.
பெங்களூர் இறங்கியதும், ஆங்கிலத்தில் பேசி வீட்டிற்கு கால் டாக்சி பிடித்தான்.
மகன் இங்கிலிஷ் பேசி முதல்முறை கேட்க அவனை தான் ஆச்சரியமாக பார்த்தார்.
வீட்டிற்கு வந்ததும், நேற்றைய குப்பையை கவனித்தார்.
ஒரே ஊறுகாய் பாட்டில் எண்ணெய் கவர் கண்ணாடி சில், உடைந்த ப்ரேம் துண்டுகள் என்றுயிருந்தது.
மட்கும் குப்பை மட்காத குப்பையினை வெளியே வைத்து விட்டு முகம் அலம்பி அலுவலகம் செல்வதற்கு ஆயத்தமானான்.
மெத்தையில் மிதிலா சுடிதார் துப்பட்டா என்றிருந்தது. இங்கிருந்தே கல்லூரிக்கு செல்ல துணிக் கொண்டு வந்திருந்தாள். ஆனால் ஊருக்கு கிளம்பவும் அணிந்த உடையை மட்டும் அலசி பால்கனியில் காயப்போட்டிருந்தாள்.
அன்று மகனது வீட்டிற்கு வந்தப்போது பெண் வாடை இல்லாத வீடாக காட்சியளித்தது.
இன்று மகனது மெத்தையில் ஹேர்பேண்ட், முடி, பால்கனியில் மிதிலா சுடிதார், கிச்சனில் அவளது உடைந்த வளையல்கள், ஹாலில் துப்பட்டா, என்று மிதிலா மகனோடு எந்தளவு புழங்கியிருந்தை சொல்லாமல் சொல்லியது.
ஹ்ருதேஷ் அவன் பாட்டிற்கு அலுவலகம் செல்ல தயாராகி பையை மாட்டினான்.
“சாப்பிடாம போற?” என்று கேட்டார்.
அதற்கும் வாய்திறக்காமல் சென்றான். ‘இவன் செய்தது தப்பா? இல்லை.. நான் செய்யறது தப்பா.? என்னை தண்டிக்கறான்.’ என்று வீட்டின் மூலை முடுக்கெல்லாம் ஆராய்ந்தார்.
சற்று மேலிருந்த இழுவை எல்லாம் இழுக்க கடினமாக இருந்தது. அதை வலுக்கட்டாயமாக லாக்கர் சாவி கொண்டு தேடி கப்போர்டை திறக்க, அதில் மாதவிடாய் பேட், காண்டம், அவளது இரவு உடைகள் புத்தகம் இருந்தது.
”சண்டாளி… என் பையனோட தாலிக்கட்டாம குடும்பமே நடத்தியிருக்கா.” என்று வாய்விட்டு புலம்பினார்.
சிறிது நேரத்தில் காலிங் பெல் அழைக்க, சாப்பாடு வந்து நீட்டினான் ஒருவன்.
ஆர்டர் டெலிவெரி ஆனதாக போனில் கூறியிருக்க வேண்டும். மறுபக்கம் ஹ்ருதேஷ் தான் இதை ஏற்பாடு செய்திருக்க வேண்டுமென செல்வராணி முடிவெடுத்தார்.
ஆர்டர் வந்த உணவை சாப்பிட்டு, கதவை தாழிட்டு குளிக்க ஆரம்பித்தார். குளியலறை கண்ணாடியிலும் ஸ்டிக்கர் பொட்டு, மிதிலாவை வறுத்தபடி குளித்து வந்தார். நன்றாக உறங்கி எழுந்த போது மதியம் தாண்ட, ஹ்ருதேஷ் மினிமீல்ஸ் உணவு ஆர்டர் தந்து காலையில் வந்ததை போல அனுப்பிவிட்டான்.
‘ம்கூம்… இப்படி வீடு தேடி சோறு வந்தா எவனுக்கா அம்மா நினைப்பு வரும். தனியா வாழ்ந்துட்டு சோறை ஆர்டர் பண்ணிக்கலாம்னு தோணும். போதாதுக்கு தாலி கூட இல்லாம வாழறதுக்கு மிதிலா இருக்கா. இவன் என் சொல் பேச்சை கேட்பானா?’ என்று வந்த முதல் நாளே புரிந்துக் கொண்டார். ஆனால் புலம்பிக்கொண்டே நடமாடினார்.
ஹ்ருதேஷ் வந்ததும் வராததும் மிதிலா உடையை எல்லாம் மடித்து வைத்தான். அவளது படிப்பு சம்பந்தப்பட்ட பேகில் திணித்தான்.
ஹ்ருதேஷ் அலுவலகம் வந்ததும் மிதிலா போனும் சரியாக வந்தது.
“என்ன?” என்றான் முசுடு போல.
“நான் அங்கிருந்து கிளம்பறப்ப என் டிரஸ் என் பேக் எல்லாம் அப்படியப்படியே வச்சிட்டு வந்துட்டேன். ஈவினிங் வந்து எடுத்துக்கவா?” என்று கேட்டாள்.
“என் கூட எங்கம்மா வந்துயிருக்காங்க. நீ வீட்டுக்கு எல்லாம் வர வேண்டாம். எப்பவும் சாப்பிடற ஹோட்டலுக்கு வா. அங்க தர்றேன்.” என்று முடித்து விட்டான். அதோடு அன்னை எப்ப திரும்புவாங்கனு தெரியாது. போன் பேசலைன்னா அதுக்கு வேற ஆடாத.” என்று கடிந்துவிட்டான்.
மிதிலாவும் ஈவினிங் வாங்கிக்கொள்வதாக கூறினாள்.
“சேலத்திலருந்து கிளம்பிட்டியா? என்று ஹ்ருதேஷ் கேட்க, “இல்லை… இங்க கௌசிக் என்னை படிக்கவே போக வேண்டாம்னு ஓவரா கத்தினான். அவனிடம் உன் வேலையை பாருனு திட்டிட்டேன்.
நாளை மறுநாள் கடைத்திறந்து நூறாவது நாள், என்பதால சலுகையா போட்டு துண்டு சீட்டு ஒட்டி வச்சியிருக்கான். எப்படியும் அவனுக்கு வேலை இருக்கு. நான் கிளம்பி ஹாஸ்டல் வந்துடுவேன். அம்மா அப்பா தான் ரொம்ப உடைஞ்சி போயிட்டாங்க. என்னிடம் என்ன சொல்லி அட்வைஸ் பண்ணறதுனு கூட தெரியாம இருக்காங்க. ஆனா அப்பா அம்மாவுக்கு எல்லாம் உன்னை கட்டிக்க எந்த தடையும் இருப்பதா தெரியலை. நாம ஒன்னா இருந்ததால இப்படி நடந்துக்கிட்டேனேனு கவலை இருக்கு” என்றாள்.
ஹ்ருதேஷிற்கு கொஞ்சம் அவசரம் காட்டாமல் இருந்திருக்கலாம். ஆனால் உடலால் இணைந்தது இருவர் தப்பு.
“சரி.. எனக்கு வேலையிருக்கு. வைக்கறேன்” என்று ஹ்ருதேஷ் துண்டித்து விட்டான்.
கௌசிக் பக்கத்தில் இருந்தாலாவது தினமும் மன்னிப்பு கேட்டு காதலுக்கு சம்மதம் வாங்கலாம். அவன் அங்கே நான் இங்கே என்று யாரிடம் சம்மதம் வாங்குவது? மிகவும் வேகமாக சென்றதால் தங்கள் காதலுக்கு இந்த தடை தேவை தானோ? என்று தெளிவானான்.
மாலை அலுவலகம் விட்டு செல்லும் போது, மிதிலா ஹோட்டல் வாசலில் நின்றுயிருக்க, வீட்டிற்கு வந்து உடனடியாக அவளது பை, உடையை மடித்து வைத்தான். அன்னையிடம் சொல்லாமல் கொள்ளாமல், வெளியேறி அவளிடம் தந்தாள்.
“உங்கம்மா டிரஸை எரிக்கலை?” என்றா நக்கலாக கேட்டாள்.
“லாஸ்ட் டைம் ஏதோ பத்த வச்சி நெருப்பு பிடிச்சதா அலார்ட் வந்து செக்கியூரிட்டி வந்து கத்தினான். அதனால நெருப்பு வைக்க யோசித்து இருக்க மாட்டாங்க. ஆனா உன்னோட கத்திரிக்கோலால டிசைனா கிழிச்சி விட்டுட்டாங்க. சாரி… டிரஸை கொதறி வச்சிட்டாங்க” என்று தர, மிதிலாவோ “என்ன தைரியம் அவங்களுக்கு?” என்று கோபமானாள்.
“நல்ல வேளை புக் எல்லாம் சரியா பார்க்காததால அது அப்படியே இருக்கு.” என்றான்.
“உங்கம்மாவுக்கு குரங்கு கை” என்றாள்.
“வீட்டையே அலசிட்டாங்க. நான் வீட்டுக்குள்ள நுழையறப்ப ‘பையன் இருக்கற வீட்ல நேப்கின். கண்ட கருமாந்திரம் இருக்குனு கத்தினாங்க. காண்டம் நேப்கின் எல்லாம் குப்பையில இருந்தது.
காண்டம் பாக்ஸ் ஆல்ரெடி காலியானது. நேப்கின்… ஒபன் பண்ணாதது. நீ யூஸ் பண்ணுவனு எடுத்துட்டு வந்துட்டேன்.” என்றான்.
“இனி அங்க வந்தா அவங்க இருப்பாங்களா?” என்று கேட்க, “ஆமா… போன் மட்டும் பேசு. அதுக்கூட முக்கியமான விஷயமா இருந்தா. என்னால அவங்களுக்கும் உனக்கும் நடுவுல மாட்டிக்கிட்டு இருக்க முடியாது” என்றான்.
“நான் போறேன் பை. உன் அம்மாவை தாலாட்டு பாட சொல்லு” என்று கிளம்பினாள்.
ஹ்ருதேஷ் சிரித்தபடி வீட்டுக்கு வந்த நேரம், “எங்கடா போன? குப்பையில இருந்ததை எல்லாம் அவளிடம் தந்துட்டு வர போனியா? கண்ட கருமம் எல்லாம் இருக்கு. உன்னை வேலைக்கு அனுப்பினேனா? இல்லை அவளிடம் கொஞ்சி குலாவ அனுப்பினேனா?” என்று கத்த, கதவை தாழிட்டு அறைக்குள் படுத்துவிட்டான். இதோடு இரவு உணவை ஆர்ட்ர் செய்து சாப்பிட வேண்டும் அப்பொழுது வெளியே தலைகாட்டினால் போதுமென முடிவெடுத்தான்.
செல்வராணி புலம்பி புலம்பி ஓய்ந்து அமைதியாக கதவை திறந்து உணவை அவர்கள் பக்கம் நகர்த்தி விட்டு அவன் சிவனேனென சாப்பிட்டான்.
“உங்கப்பா அங்க சாப்பிட்டுயிருப்பாரோ என்னவோ, ஏன்டா இந்த வேலையும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம். நாம நம்ம ஊருக்கு போயிடலாம்” என்று கூற, ஹ்ருதேஷ் அன்னையிடம் பேசாமல் தவிர்த்தான்.
அந்த சிறுக்கிக்கா பெத்த அம்மாவை ஒதுக்கற. என்னிடமே பேச மாட்டேங்கற.. இருக்கட்டும்.. நான் உயிரோட இருக்கற வரை அவளை இந்த வீட்ல அடியெடுத்து வைக்க விடமாட்டேன். என் பையனுக்கு இல்லாதும் பொல்லாததும் சொல்லி தந்து கமுக்கமா இருந்திருக்கா? நல்ல குடும்பத்து பொண்ணா அவ?” என்று சதா சர்வ நேரமும் புலம்பினார்.
ஹ்ருதேஷ் நீங்களா பேசி புலம்பி ஓயும் வரை நான் அமைதியா தான் இருப்பேன் என்று மௌனம் என்ற ஆயுதத்தை ஏந்தினான்.
இப்படியே பத்து நாட்கள் ஓட, வெளி உணவு செல்வராணிக்கு ஒத்துக்கொள்ளவில்லை. லேசாக ஜீரண கோளாறு வந்தது. அதன்பின் வீட்டிலேயே சமைக்க மளிகை பொருட்களை வாங்க இக்கட்டை தந்தார்.
ஹ்ருதேஷுக்கு “உங்களுக்கு தான் சாப்பாடு ஒத்துக்கலையே கிளம்புங்க” என்று கூட கூறிவிட்டான்.
இன்டக்ஸ் ஸ்டவ் வாங்கி அதிலேயே சமைக்க ஆரம்பித்தார் செல்வராணி.
மறுபுறம் கௌசிக் நூறாவது நாளை விழாவாக சிறப்பித்தான். என்னவொரு கவலை ஹ்ருதேஷ் கூடயில்லை.
பணம் தேவைப்பட்ட போது அவன் இருந்தான். மனம் சோர்ந்த பொழுதும் அவன் இருந்தான். இன்று கௌசிக்கே நண்பனை வரவிடாமல் செய்த விதியை எண்ணி நொந்தான்.
வீடே உயிர்ப்பில்லாமல் இருந்தது. இத்தனைக்கும் மிதிலா ஹாஸ்டலுக்கு வந்துவிட்டாள். ஆனாலும் மிதிலா வீட்டில் மூவருமே நடைப்பிணமாக இருந்தனர்.
தீபாவோ “ஹ்ருதேஷுக்கே கட்டி வச்சிடலாம் கௌசிக். ஏன் பிரச்சனை பண்ணற?” என்று கூறிவிட்டார்கள்.
மனதின் வலி முற்றிலும் ஆறாமல் அவனால் திருமணம் பற்றி மிதிலாவிடம் பேச முடியாது.
” அவளை வேண்டுமின்னா நான் பார்க்கற பையனிடம் தாலிக் கட்டிக்க சொல்லுங்க. இப்பவே பையனை தேடறேன்” என்பான்.
செல்வராகவனோ ‘முதல்ல ஹ்ருதேஷிடம் வாங்கிய கடனை அடைச்சிட்டு பேசுடா. அவன் உழைப்பில வாழ்ந்துட்டு இருக்கோம்” என்று ஒரே வரியில் கௌசிக் பொருளாதாரம் உரைத்திட, கௌசிக் அதன்பின்னே அமைதியானான்.
மிதிலாவின் நலனை பற்றி பேச்சு வாக்கில் கேட்டுக் கொள்வான்.
ஹ்ருதேஷ் அன்னை செல்வராணி ஹ்ருதேஷ் வீட்டில் இருப்பதையும் அறிந்ததால், எப்படியும் அவர்கள் அவளை விரட்டுவார்களென தெரிந்ததால், ஹ்ருதேஷிடம் வாங்கிய பணத்தை மட்டும் புரட்டி கடனை அடமானம் செய்ய முடிவெடுத்து அயராது உழைத்தான்.
முன்பு எல்லாம் ஒன்பது மணிக்கே கடையை சாற்றும் பழக்கமுடையவன், பதினொன்று வரை திறந்து வைத்திருந்தான்.
நேரில் சந்தித்து பேசும் சந்தர்ப்பங்கள் எல்லாமே எல்லாருக்கும் குறைந்தது. எல்லாமே போனில் தான் தங்கள் நலனை கேட்டு விஷயத்தை அறிந்தவராக காலம் அதன் சுழற்சியில் பயணித்திட வைத்தது.
அப்படியான தருணத்தில் தான் மிதிலாவிற்கு அன்றைய நாள் கதிகலங்கும் நாளாக அமைந்தது.
-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்
