தகிக்கும் நிலவொன்று-26
அத்தியாயம்-26
நகரின் மையப்பகுதியில் இருந்த அந்த காபி ஷாப்பில், ஜன்னல் ஓர மேசையில் அமர்ந்து கடிகாரத்தை பார்த்துக் கொண்டிருந்தான் யதுநந்தன்.
ருத்ரனுக்கு போன் செய்து தனியாக பேச வேண்டுமென அழைத்து வரச் சொல்லி நிமிடங்கள் கடந்திருந்தது.
சரியாக யதுநந்தன் வந்து பதினைந்து நிமிடங்கள் கழித்துதான் ருத்ரன் உள்ளே வந்தான்.
கூலிங் கிளாஸை கழற்றி மேசையின் மீது வைத்தவன், எந்தவித மரியாதையும் இல்லாமல் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தான்.
"எதுக்கு பார்க்கணும்னு சொன்ன? என்ன விஷயம்? எனக்கு நிறைய கேஸ்கள் இருக்கு." என்று வந்ததும் வராததும் தான் ஒரு பிசியான மனிதன் என்ற ரீதியில் சீன் போட்டான்.
யதுநந்தன் அமைதியாக அவனைப் பார்த்தான்.
"எனக்கும் கோர்ட்டுல வாதாட நிறைய கேஸ்கள் இருக்கு. அதுக்கான ரெஃபரன்ஸ் பார்க்கணும். சும்மா உன்னை காபி குடிக்க கூப்பிடலை. அதுவும் உனக்கு தெரியும்."
இருவரின் குரலிலும் திமிர் மட்டும் பஞ்சமின்றி இருந்தது.
ருத்ரன் புருவம் உயர்த்தினான்.
"சரி... இப்ப என்ன? ஷ்ரத்தா ஏதாவது சொல்லி அனுப்பினாளா? என்னவாம்?" என்றான். யதுநந்தன் காண வந்தால் ஷ்ரத்தா தான் காரணமாக இருக்குமென்ற எண்ணம்.
"ஷ்ரத்தா என்னை அனுப்பலை. நான் தான் வந்தேன். நான் வந்தது ஷ்ரத்தாவுக்கே தெரியாது." என்றதும் அந்த பதிலில் ருத்ரனின் உட்கார்ந்த விதமே மாறியது.
"எனக்கு சத்ரியன் விஷயமா சிலது உன்னோட பேசணும்." என்ற அந்த பெயர் ஒலித்தவுடன் ருத்ரனின் முகம் இறுகியது.
"என்ன பேசணும்? எங்கப்பாவை கொன்றவனைப் பத்தி உனக்கென்ன தெரிஞ்சுக்கணும்?" என்று கோபமாய் கேட்டான் ருத்ரன்.
யதுநந்தன் லேசாக சிரித்தான்.
"எனக்கு உங்கப்பாவை கொன்ற கிங்பின்னைப் பற்றி தெரிஞ்சுக்க ஆசையில்லை. அவன் கிங்பின்னா இருந்தப்ப கொலைகாரன் தான். அது எனக்கு தேவையில்லாத சேப்டர்." என்று சிறிது இடைவெளி விட்டான்.
"எனக்கு ஷ்ரத்தாவோட வாழ்க்கையோட கனெக்ட் ஆனதுக்கு அப்புறம் இருந்த சத்ரியன் பற்றி தான் தெரிஞ்சுக்கணும்." என்றான்.
"அதுவும் செத்துப் போனவன் தானே? அப்ப அதுவும் தேவையில்லாத சேப்டர் தானே?" என்று ருத்ரன் உதட்டளவில் சிரித்தான்.
"மே பி... ஆனா எனக்கு தேவையானது ஷ்ரத்தா. அவளை புரிஞ்சுக்கணும்னா... சத்ரியனையும் புரிஞ்சுக்கணும்." என்றான்.
ருத்ரன் அவனை உற்றுப் பார்த்தான். "ஏய்... கொஞ்சம் வெளிப்படையா பேசலாமா?" என்று எரிச்சலாக கேட்டான் யதுநந்தன்.
ருத்ரன் சிரித்தான். "நான் வெளிப்படையாதான் பேசுறேன். ஷ்ரத்தாவை விரும்புறேன்னு நேரா அவளிடமே சொல்லிட்டேன். நீ தான்... நண்பன், வக்கீல், திவாகர் சாரோட ஜூனியர், ஷ்ரத்தாவுக்கு உதவுறவன்... இப்படின்னு ஒவ்வொரு முகமூடியும் போட்டுட்டு அவளை இம்பிரஸ் பண்ண ட்ரை பண்ணற." லேசாக நக்கலாக சிரித்து பார்வையிட்டான்.
"ஆனாலும் ஒண்ணும் வேலைக்கு ஆகலை." என்று கேலியுடன் ருத்ரன் பேச பேச, யதுநந்தனின் முகம் இறுகியது.
"நான் முகமூடி போடலை. ஒரு பொண்ணோட கணவன் இறந்திருக்கான்னு நினைச்சேன். அந்த நினைவிலிருந்து வெளியே வர ஷ்ரத்தாவுக்கு நேரம் தேவைப்படும்னு கொடுத்தேன். உன்னை மாதிரி தினமும் லவ் பண்ணறேன்னு இம்சை பண்ணலை." என்று விவரித்தான்.
"நீ டைம் கொடு மேன். நான் ஏன் டைம் கொடுக்கணும்?" என்று தோளைக் குலுக்கியவன்,
"சீ... என்ன பேசணும்னு வந்தியோ அதை கேளு. இல்லனா நான் கிளம்புறேன். எனக்கான நேரம் எனக்கு முக்கியம்" என்று ருத்ரன் அநியாயத்துக்கு பந்தா காட்டினான். அதற்கு முக்கிய காரணம், என்னவோ அவளுக்காக அன்னிக்கு என்னை அடிச்ச, இன்னிக்கு அவளிடம் காதலை சொல்லி, குழந்தையிடமும் நெருங்கியதில் அதிருப்தியுடன் வந்திருப்பதாக கெத்து காட்டினான்.
யதுநந்தன் ஆழமாக மூச்சை இழுத்தான். "சத்ரியன் உயிரோட இருக்கானா... இல்லையா? எனக்கு அது க்ளியரா தெரிந்தாகணும்." என்று கூற ருத்ரன் ஒரு நொடி அமைதியாக அவனைப் பார்த்தான்.
"ஷ்ரத்தாவிடம் காதலை சொல்லிட்ட... ஆனா இன்னும் மனசுக்குள்ள அவன் உயிரோட இருக்கானோன்னு சந்தேகம் விடாம துரத்துதா?" என்று ருத்ரன் கேட்டதும் யதுநந்தன் மெதுவாக தலையசைத்தான்.
"எஸ்.. அதனால சில குழப்பங்களை சேர்ந்து பேசலாம்னு தான் உன்னை கூப்பிட்டேன். ஏன்னா சத்ரியனை பத்தி எங்க யாரிடம் கேட்டாலும் ருத்ரன் சாரிடம் கேளுங்க. அவர் தான் சத்ரியன் கேஸை இன்னும் விடாம டீட்டெயில் கலெக்ட் பண்ணிட்டு இருப்பதா சொல்லறாங்க." என்றதும் நாற்காலியில் நேராக அமர்ந்தான்.
இதற்கு நடுவில் ஆர்டர் செய்தவை வரவும் அதை வைத்துவிட்டு வெயிட்டர் சென்றான்.
யதுநந்தனோ "முதல் விஷயம்... திவாகர் சாரை கொன்றது சத்ரியன் இல்லை." என்றான்.
ருத்ரனோ "ம்ம் திவாகரை கொன்றது சத்ரியன் இல்லை. திவாகர் இறந்ததுக்கு காரணம் ஷ்ரத்தாவோட மெடிக்கல் சீட்.
நிர்மல் காசு கொடுத்து வாங்க நினைச்ச சீட் ஷ்ரத்தாவுக்கு போகவும், ஆதிகேசவ் திவாகரை விபத்து மாதிரி ஏற்பாடு செய்து கொன்றான். அதுக்கு அப்புறம் ஷ்ரத்தாவையும் போட்டு தள்ள பிளான். ஆனா... நடுவுல நம்ம வில்லன் வந்துட்டான். ஷ்ரத்தா காலேஜ் ஜாயின் ஆகிட்டா. அதுக்கப்புறம் நிர்மல் கோபத்துல ஷ்ரத்தாவை சுட முயற்சி பண்ணான். அந்த புல்லட்டை வாங்கினதும் நம்ம வில்லன் தான்.
மே பி... அந்த இன்சிடென்ட்டுக்குப் பிறகு தான்... வில்லனை வெறுத்த ஹீரோயின்... அவனை காதலிக்க ஆரம்பிச்சிருக்கலாம்." என்று ருத்ரன் புட்டு புட்டு விவரித்தான். இதெல்லாம் நான் சேகரித்த விஷயம் மூலம் துல்லியமாக கணித்தது என்ற கர்வம் அவன் முகத்தில் ஒளிர்ந்தது.
யதுநந்தன் உடனே மறுக்காமல் ஆமோதித்தான்.. "எஸ்... இதை ஷ்ரத்தாவே என்கிட்ட சொல்லியிருக்கா. 'நீ ஏன் உங்க அப்பாவை கொன்ற சத்ரியனை காதலிச்ச?'ன்னு கேட்டப்ப இதே காரணத்தை சொன்னா." என்றதும் ருத்ரன் அதிருப்தியானான். தானாக சேகரித்தா விஷயத்தை காட்டிலும், எனக்கு ஷ்ரத்தா அவள் வார்த்தையில் தன்னிடம் பகிர்ந்தது என்ற மிதப்பு யதுநந்தனிடம் கூடுதலாக இருந்தது.
ருத்ரனோ "நெக்ஸ்ட்." என்றான் அந்த கடுப்பில்...
யதுநந்தன் தொடர்ந்தான்.
"இரண்டு மூன்று முறை கவனிச்சேன். ஷ்ரத்தா சத்ரியனை கொன்றதுக்காக தண்டனை வாங்கிட்டா. ஆனா சில நேரம் பேசுறப்ப... அவன் உயிரோட இருக்கற மாதிரி பேசுவா. லாஸ்ட்டா... திவாகர் சாரோட போட்டோவுக்கு மாலை போட்டது மாதிரி, சத்ரியன் போட்டோக்கு மாலை போட போனேன். ஆனா அவ விடலை." என்றான்.
ருத்ரன் உடனே, "வளைகாப்புல கார்த்திகா வளையல் போட்டப்பவும்... பூ, குங்குமம் போட்டு ஆசி வழங்கவும் கூட ஷ்ரத்தா எதையும் தடுக்கலை. இதைப் பற்றி நான் அவளிடம் கேட்டப்ப... பலத்த அமைதிதான் பதில்." என்று கூறினான்.
இருவரும் சில நொடிகள் அமைதியாக இருந்தனர்.
"இன்னொரு விஷயம்..." யதுநந்தன் மீண்டும் பேச ஆரம்பித்தான்.
"சத்ரியனை கொன்றதா சொன்ன மோட்டிவ்... சத்ரியன் குழந்தையை அழிக்க சொன்னார்னு. பட் ஷ்ரத்தாவிடம் குழந்தைக்கு பெயர் ஏதாவது நீயும் சத்ரியனும் பேசி வச்சியிருக்கிங்களானு கேட்டேன்.
அவ அதுக்கு தனக்கு முதல் அபார்ஷன் ஆனப்ப, சத்ரியன் ரொம்ப உடைஞ்சுட்டார்னு அவளே என்னிடம் சொன்னா. அப்படின்னா சத்ரியனை கொல்ல இருந்த, அந்த மோட்டிவ் உடைஞ்சு போகுது.
ஒண்ணு... சத்ரியனை வேற காரணத்துக்காக ஷ்ரத்தா கொன்றிருக்கணும். இல்ல... கொன்றதா நாடகம் ஆடி தப்பிக்க வச்சிருக்கணும்." என்றதும், ருத்ரன் தலையசைத்தான்.
இம்முறை ருத்ரனும், "நானும் அதே இடத்துல தான் நிக்கறேன். இன்னொரு லிங்க் இருக்கு. நிரோஷ். அவன் தான் ஷ்ரத்தாவை நமக்கு முன்னாடி காதலிச்சவன். அவன் ஷ்ரத்தாவுக்கு வந்த உணவை அவன் சாப்பிட்டு புட் பாய்ஸன்ல ஹாஸ்பிடல்ல சேர்ந்தப்ப, சத்ரியன் ஷ்ரத்தா அவனை பார்க்க வந்திருக்காங்க.
ஸ்டெல்லானு ஒரு நர்ஸ் அவனை சந்திச்சதுக்கப்புறம் ஆதிகேசவ், நிர்மல் ரெண்டு பேரும் இறந்துட்டாங்க. பிகாஸ் அதுவரை ஷ்ரத்தா சத்ரியனை விரும்பலை. தன் அப்பா திவாகரை யார் கொன்றானு குழப்பத்துல இருந்திருக்கா.
அதுக்கப்புறம் ஸ்டெல்லா என்ற நர்ஸ் சத்ரியனை சந்திச்சிருக்கா. அவளால தான் திவாகர் மரணத்தோட உண்மை சத்ரியனுக்கு தெரிஞ்சிருக்கு அதனால தான் அவங்களை நம்ம வில்லன் போட்டு தள்ளியிருக்கான்.
அதனால தான் ஹீரோயின் வில்லனை கொண்டாட ஆரம்பிச்சிட்டா.
பிறகு ஸ்டெல்லாவோட குழந்தை ஐரீன் காணாம போயிருக்கு. சத்ரியனிடம் ஸ்டெல்லா உதவி கேட்டுயிருக்காங்க. சத்ரியன் யோகேஷ் மூலமா அது என்னனு பார்க்க சொல்லியிருக்கான்.
அது தென்கிழக்கு ஆசியா தீவுகளில் வோர்ட் லெவல் நெட்வொர்க் மூலமாக குழந்தை கடத்தல் செய்யற கேங்னு தெரிய வந்திருக்கு.
இங்க சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தானு கிங்பின்னா இருக்கற நம்ம வில்லனுக்கு பெரிய இடத்துல நுழையவும் தயக்கம் இருந்திருக்கு. தொட்டா கன்னி வெடில கால் வச்ச மாதிரினு தவிர்க்க பார்த்திருக்கான்.
பட்.... ஷ்ரத்தா கேட்டதால... சத்ரியன் அந்த குழந்தையை தேட போயிருக்கான்.
யாரோ ஒருத்தர் கேட்டதுக்காக என்றால், சத்ரியன் துரும்பை கூட அசைத்திருப்பானா என்பது சந்தேகம், அதோட உயிரை பணயம் வைக்கிற முட்டாள் இல்ல. ஸ்டெல்லா சொன்ன தகவலுக்கு பணத்தை வேண்டுமின்னா வாறி வழங்கியிருப்பான். ஆனா அங்க யாரோ கேட்கலை... ஷ்ரத்தா கேட்டிருக்கா.. ஐரீனை காப்பாத்த சொல்லி
நம்மளை லவ் பண்ணற பொண்ணு ஏதாவது வேண்டுமின்னு பார்த்தாலே அதை கொண்டு வர கை பரபரக்கும். இதுல வாயை திறந்து ஷ்ரத்தா கேட்டா சத்ரியன் விடுவானா...?" என்றதும் அந்த பேச்சில் யதுநந்தன் அமைதியாகி விட்டான்.
"மே பி... ஐரீனை காப்பாத்தணும்னு நினைச்சு போயிருக்கலாம். ஆனா அவன் கை வச்சது கண்ணிவெடி குரூப்ல. அந்த குரூப் அவனை துரத்த ஆரம்பிச்சிருக்கலாம்... ஒரு வருஷம் பிளான் பண்ணி ஐரீனை மீட்டிருக்கலாம். ஏன்னா... ஐரீன் காணாம போன தேதிக்கு சில நாளில் யோகேஷ் வந்து ஏரியா ஸ்டேஷன்ல கேஸை பத்தி விசாரிச்சியிருக்கான்.
அதோட.. சத்ரியன் இறந்ததா சொல்லப்பட்ட தேதியில ஸ்டெல்லா காணாம போன தேதி. கிட்டத்தட்ட ஒரே டைம் லைன்ல இருக்கு.
என்னோட கெஸ்... ஐரீன் கிடைச்சிருக்கணும். ஸ்டெல்லாவோட குழந்தையை ஒப்படைச்சி சேர்த்திருக்கணும்.
ஏன்னா... ஒரு தடவை சத்ரியனை ஷ்ர்ததாவிடம் அசிங்கமா திட்டினப்ப... ஷ்ரத்தா எமோஷனலா 'ஐரீன் ஸ்டெல்லாவை சந்திச்சா அவனை கடவுளா கும்பிடுவாங்க'ன்னு பெருமையா சொன்னா... அதோட... நூற்றி இருபத்தாறு குழந்தைன்னு வேற வாயை விட்டா." என்று ருத்ரன் பேசி முடிக்க, யதுநந்தனின் கண்கள் சுருங்கின.
"அப்படின்னா... சத்ரியன் ஐரீனை மட்டுமில்லாம நூற்றி இருபத்தாறு குழந்தைகளை காப்பாத்தியிருக்கானு சொல்ல வர்றியா?" என்றான் யதுநந்தன்.
"வாய்ப்பு இருக்கு.. ஏன்னா... சத்ரியனை வரலாற்றில் அவன் கிங்பின்னா இருந்த காரணத்தில் நிலமோசடி, கள்ளக்கடத்தல், பவுடர் பிசினஸ், கள்ளப்பணம், யார் நாட்டை ஆளனும் என்ற கருத்து சொல்லற பவர், எல்லாமே இருந்தும், குழந்தைகளை வச்சி பிசினஸ் பண்ணியதா எந்த கேஸும் இல்லை. எல்லாமே கொலைகளும், பணம் பலம் அதிகார பலம், இதெல்லாம் தான் அதிகப்படியா இருந்தது. சத்ரியனிடம் வந்த பெண்கள் கூட மாடலிங் கேர்ஸ்னு கேள்விப்பட்டேன்.." என்று ருத்ரன் ஆழமாக மூச்சை விட்டான்.
"அதோட.. அதுக்கு ஆதாரம் இல்லை. நம்ம கேஸ் ரெக்கார்ட்ல சத்ரியன் இறந்திருக்கான்.
ஆனா அந்த 126 குழந்தை மீட்கப்பட்டதாக ஒரு ரெக்கார்டும் இல்லை. ஏன் அந்த குழந்தைகளை வைத்து பிசினஸ் பண்ணின குரூப் பற்றியும் எந்த டாக்குமெண்டும் இல்லை. எல்லாமே... இல்லீகலா கலெக்ட் பண்ணியது மட்டுமே. ஒரு கோர்வையா பார்த்தா, எல்லா கணக்கும் சரியா வருது. ஆனா... ஆதாரம் மட்டும் எதுக்கும் இல்லை. அதுவும் அந்த தீவு ஆட்கள் முலமா எந்த தகவல் சேகரித்தாலும் அடுத்தடுத்து என்னோட வேலைகள் அதிகரிக்கு. என் மேலதிகாரி நெல்சன் கூட, உயிரை காப்பாத்திக்க, அந்த ஆட்கள் குழந்தைக்கறியை திங்கற குரூப். நம்ம டிப்பார்மெண்ட் என்றில்ல, எந்த காவலதிகாரியும் அங்க விசாரணை, கைதுனு ஏன் அந்த பேச்சை கூட பேச மாட்டாங்கனு அட்வைஸ் பண்ணறார்." என்றுரைக்க,
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
முதல் முறையாக ருத்ரனுக்கும் யதுநந்தனுக்கும் இடையே, ஒரே பெண்ணை காதலிப்பதாக இருக்கும் மனவெறுப்பை காட்டிலும், ஒரே புதிரை தீர்க்க முயற்சிக்கும் இரண்டு மனிதர்களின் அமைதி நிலவியது.
ருத்ரனே "சோ சத்ரியனை பத்தி வேற டீட்டெயில் கிடைக்கலை." என்றான்.
"அப்ப... சத்ரியன் உயிரோட இருக்கானா இல்லையானு ஷ்ரத்தா மட்டும் தான் சொல்ல முடியும். இல்லையா?" என்றான் யதுநந்தன்.
"சரியா சொல்ல தெரியலை. ஏன்னா.. ஷ்ரத்தா சில நேரம் குழம்பறா. சில நேரம் திடமா சொல்லறா. அடிக்கடி அந்த வினோத்தை ஹரிணியை பார்க்கணும்னு விரும்பறா. அந்த ஹரிணி.. சத்ரியனால கெடுக்கப்பட்ட பொண்ணுனு என்பதால தான் வினோத்தும் ஞத்ரகயன் இறப்புக்கு ஷ்ரத்தாவுக்கு உதவியதா ஆதாரம் சொல்லியிருக்கான்.
அப்படியிருக்க.... அவளை ஷ்ரத்தா பார்க்க விரும்புவது, வினோத்தை கேட்பது சந்தேகமா இருக்கு. சத்ரியனையும் இப்பவரை காதலிச்சிட்டு அவங்களோடவும் பேசறது... சரியா புரிப்படலை. ஆனா அவங்களுக்கு சத்ரியனை தெரிய வாய்ப்பிருக்கலாம். வினோத் சத்ரியனோட விசுவாசி. பட் காதலியை சீரழிச்சதுக்கு ஆதரவா நிற்க மாட்டான். காம்பிளிக்கேட்டா இருக்கு.
ஆனா வினோத்தும் ஆளையே காணோம். இந்த ஹரிணியாவது அடிக்கடி வரைந்தா அங்கங்க டிராயிங் ஸ்டால்ல நடத்தற எல்லா இடத்திலும் இருக்கா. வினோத் தலை தெரிலை.
சத்ரியன் உயிரோட இருந்தா ஷ்ரத்தா விடுதலை ஆனதும், வந்து பார்த்திருக்கலாம். ஆனா எனக்கு தெரிந்து ஷ்ரத்தாவிடம் அப்படியொரு சந்திப்பு நிகழ்ந்த மாதிரியும் தெரியலை. சோ.. சத்ரியன் இறந்திருக்கலாம்னு ஒரு கெஸ் இருக்கு.
ஏன்னா.. ஷ்ரத்தா கண்ணீரோட நின்றால் சத்ரியனுக்கு தாங்காதுல... ஓடிவந்திருப்பான்" என்று கேலி போல சொன்னாலும் அதில் உண்மை இருந்தது.
-தெடரும்..
-பிரவீணா தங்கராஜ்
நெக்ஸ்ட் ஒரு ட்விஸ்ட்கு காத்திருக்கவும். 🫣
தகிக்கும் நிலவொன்று.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 26)
ருத்ரன் கெஸ் பண்ணது வரைக்கும் சரி தான், ஆனால் அப்படியும் சத்ரியன் விஷயத்துல வந்து ஒரு இடத்துல ட்ராப் ஆகிடுச்சே. அவன் உயிரோட இருக்கிறானா, இல்லையா..?
ஷ்ரத்தா சத்ரியனை கொன்னாளா,
இல்லையா ? சத்ரியன் திரும்ப வருவானா, இல்லையா ?
இப்படி விடைத்தெரியா பல கேள்விகள். பதில் சொல்பவர் தான் யாரோ ?
😊😊😊
CRVS (or) CRVS 2797
Rudhra ne neraiya vishyatha correct ah than find out panni iruku ah even andha 126 kuzhandhai kaga than Chathriyan ah Shardha shoot pannathu ku pinnadi iruku ah reason utpada but Chathriyan uyir oda irukan ah illaya nu avan ah thana velipaduthatha varaikum yaru ah la yum.avolo sikkiram kandupidi ka mudiyathu da just avan uyir oda irundha Shardha ah va azha vida matan nu nenachi avan illa nu mudivu pannidathiga yen na avan ava azhugai ah stop pannura category illa athuku karanam ah na ma van potu thalluravan .
-
தகிக்கும் நிலவொன்று-50 (முடிவுற்றது)
2 weeks ago
-
தகிக்கும் நிலவொன்று-49
2 weeks ago
-
தகிக்கும் நிலவொன்று-48
2 weeks ago
-
தகிக்கும் நிலவொன்று-47
2 weeks ago
-
தகிக்கும் நிலவொன்று-46
2 weeks ago
Currently viewing this topic 1 guest.
- 25 Forums
- 325 Topics
- 1,577 Posts
- 2 Online
- 420 Members
