உறவில் உதயமாகி உயிரில் உருகுகிறேன் - 1
உதயம் 💏 1💏
"முடியாது. முடியாது. முடியாது. என்னால முடியவே முடியாது ." என நானும் எவ்வளவோ காரணங்களை சொல்லி அம்மாவை சமாதானம் செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தேன்.
எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. எல்லா பெண்களுக்கும் வரக்கூடிய நிலை தான். ஆனால் நான் இன்னும் இதற்கு தயாராக இல்லை என எனக்கு தோன்றியது.
எனக்கு இன்னும் சில காலம் தேவைப்பட்டது. ஆனால் என் நிலையை யாரும் புரிந்து கொள்ளவில்லை. என் தந்தை எனக்கு திருமணம் செய்து வைப்பதில் உறுதியாக இருக்கிறார்.
எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. திருமணம் என்று சொன்னவுடன் மனது படபடக்கிறது. ஏதோ இனம் புரியாத பயம் மனதில் குடி பெயர்கிறது. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். எல்லா காரணங்களும் திருமணம் என்பதே வேண்டாம் என என்னிடம் அறிவுரை கூறுவது போல் இருக்கிறது.
இதற்கு காரணம் நான் கண்ட காட்சிகளாக கூட இருக்கலாம்.
இதுவரை நான் பார்த்ததில் அதிகபட்ச தம்பதிகள் திருமணத்தை ஒரு கேடாக தான் நினைக்கின்றனர்.
தான் ஏன் திருமணம் செய்தோம் என வருந்துகின்றனர். இந்த வருத்தத்தில் ஏன் வாழவேண்டும்?
ஒரு சில காரணங்களால் திருமணத்தின் மீது நாட்டம் இல்லாமல் இருக்கிறது என் மனம்.
"இன்னும் எவ்வளவு நாள் இப்படியே சொல்லிக்கிட்டு இருப்ப. இப்பவே 24 வயசு ஆயிடுச்சு. இனிமே போனா உன்னை அரை கிழவின்னு தான் சொல்லுவாங்க" என என்னை சமாதானம் செய்ய முயற்சித்தார்.
" பரவாயில்ல. ஆனா எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம். இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும்."
"இன்னும் கொஞ்சம்... இன்னும் கொஞ்சம்... இன்னும் கொஞ்சம்... இன்னும் எத்தனை கொஞ்சம் நாள் கேட்க போற"
"அம்மா ப்ளீஸ்...." நான் கெஞ்ச தொடங்கினேன்.
எனது பிபிஏ படிப்பு முடிந்தவுடன் எனக்கு திருமணம் செய்ய நினைத்தனர் ஆனால் நான் மறுத்து விட்டு இரண்டு வருட அனுமதியில் எம்பிஏ படிக்க கோரினேன். ஒரு வாரத்திற்குப் பிறகு அதற்கு அனுமதியையும் பெற்றேன். என் எம்பிஏ முடிந்ததும் வேலைக்கு செல்ல வேண்டும் என அடம் பிடித்தேன். அதற்காக உண்ணாவிரதமும் இருந்தேன். நமக்கு இருக்கும் வசதிக்கு நீ ஏன் வேலைக்கு போக வேண்டும் என கேட்க,என் தன்னம்பிக்கையை வளர்க்க என கோரியும் அனுமதிக்கவில்லை. இருந்தாலும் என்னை பெற்றோர்களை இணங்க வைக்க பெரு முயற்சி செய்து வெற்றியும் பெற்றேன்.
ஆனால் இந்த முறையில் தப்பிப்பதற்கு காரணம் எதுவும் பிடிபடவில்லை. அப்படி பிடிபட்டாலும் அது ஆணித்தரமாகவும் இல்லை. இத்தனை வருடம் என் பாட்டி மாமா வீட்டில் இருந்தார்கள். அதனால் கூட என் அப்பாவை நான் எளிதாக இத்தனை வருடம் திருமணத்திற்காக சமாதானம் செய்து வைத்திருந்தேன்.
ஆனால் இப்போது என் பாட்டியை சமாதானம் செய்வது கடினம். பிடித்த முயலுக்கு மூன்று கால் என நம்பும் பழக்கம் கொண்டவர்.
வீட்டு பெரியவர்களை சமாதானம் செய்வது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை.
தமிழ் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் முந்திய தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் கடமை தமக்கு இருப்பதாக நம்பிக்கை கொண்டிருக்கும் எனது பாட்டியை சமாதானம் செய்வது முடியாத காரியமும் கூட.
அவரிடம் என்னால் பேசவும் முடியாது. ஏதாவது பேசினால் பெரியவர்களை எதிர்த்து பேசும் பழக்கத்தை உனக்கு யார் கற்றுக்கொடுத்தார்கள். இது தமிழர்களுக்கு அழகல்ல என ஆரம்பித்து விடுவார்.
இல்லையெனில் படித்த திமிரை காட்டுகிறாயா இதற்கு தான் பெண்களை படிக்க விடுவதில்லை என படிப்பின் மேல் ஒரு பழியை போட்டு விடுவார்கள். எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. ஏன் எல்லோரும் படிப்பை காரணம் காட்டுகிறார்கள்.
என் நுனி நாக்கின் உச்சரிப்பில் ஆங்கிலமும் என் உடை அலங்காரங்களில் அந்நிய தோற்றம் இருந்தாலும் கூட என் மனதில் நான் இன்னும் இந்திய பெண்ணாகவும் தமிழ் கலாச்சாரம் பண்பாடு பாரம்பரியம் நிறைந்த பெண்ணாகவே இருக்கின்றேன்.
ஆங்கில கலாச்சாரத்தில் ஒன்றிரண்டை ஏற்றுக் கொண்ட போதிலும் எனது தமிழ் கலாச்சாரத்தை ஒருநாளும் விட்டு தந்தது இல்லை.
தமிழ்பெண்ணாகவே வாழ விரும்புகின்றேன். அந்நிய கலாச்சாரங்களை விட தமிழ் கலாச்சாரமே எனக்குப் பிடித்தது.
ஆனால் திருமணத்தை பற்றி நினைக்கும் போது தான் என்னால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. என் மனதில் உள்ள பயத்தை என் பெற்றோர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.
இதில் மட்டுமல்ல பல விஷயங்களில் உதாரணமாக ஒரு நிகழ்ச்சியை உங்களிடம் கூற விரும்புகிறேன். கடந்த வாரம் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி ஒன்றை என் அம்மாவும் நானும் பார்க்க நேர்ந்தது. அது குழந்தைகளுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் ஆன நிகழ்ச்சி.
குழந்தையை பெற்றோர்கள் எவ்வளவு தூரம் புரிந்து வைத்துள்ளனர் என்பதை ஆராயக்கூடிய நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியில் பெற்றோரிடம் சில கேள்விகளை கேட்டனர். உங்கள் குழந்தைக்கு பிடித்த நிறம்... பிடித்த திரைப்படம்... பிடித்த உணவு எது அம்மா பிடிக்குமா அப்பா பிடிக்குமா போன்ற கேள்விகள் கேட்கப்பட்டது.
விளையாட்டாக என் அம்மாவிடம் 'எனக்கு பிடித்த நிறம் எது?' என்று கேட்டேன். உடனே பிங்க் என பதிலை முன்வைத்தார். இதுவரை எனக்கு பிங்க் நிறத்தின் மீது நாட்டம் இருந்ததாக எனக்குத் தோன்றவில்லை.
கறுப்பு நிறமே எனக்கு மிகவும் பிடிக்கும். பலவண்ண நிறங்களுக்கு முன்னால் கறுப்பையே எனக்கு பிடித்த வண்ணமாக நான் கருதுவேன். நீல நிற வானத்தின் அழகைவிட இருண்ட வானத்தின் அழகையே நான் ரசிக்க விரும்புவேன்.
எவ்வளவுதான் கருப்பு நிறத்தை விரும்பினாலும் கருப்பு நிறத்தில் உடைகளையும் அணிகலன்களையும் அணிய முடியாமல் போயிற்று.
மூடநம்பிக்கையில் குடிகொண்டிருக்கும் தமிழ் கலாச்சாரத்தை கொண்ட எனது குடும்பம் என்னை கருப்பு நிறத்தை வாங்க அனுமதி கொடுத்தது இல்லை.
நான் தமிழ் கலாச்சாரத்தை குறை சொல்லவில்லை. ஏனென்றால் அதற்குப் பின்னால் இருக்கும் காரணத்தை நான் அறிந்திருந்தேன். ஆனால் அதை ஏற்க என் குடும்பம் மறுத்தது.
நாம் மனிதர்கள் விதவிதமான கலாச்சாரங்களையும் சடங்குகளையும் மூட நம்பிக்கைகளையும் பின்பற்றி வருகிறோம். அத்தனை கலாச்சாரங்களுக்கு பின்னும் ஒரு காரணம் உண்டு என்பதை யாரும் உணர்வதில்லை.
அந்தக் காரணங்களை சில பெரியவர்கள் மறந்துவிடுகின்றனர். அவர்கள் கறுப்பை மறுப்பதற்கும் காரணம் உண்டு.
கருப்பு நிறம் சூரிய கதிர்கள் உள்வாங்கி நம் உடலுக்கு உஷ்ணத்தைத் தருகிறது. இதனாலேயே கறுப்பை அணிய வேண்டாமென தமிழ் கலாச்சாரம் நம்மை பரிந்துரை செய்தது.
இந்த காரணங்களை மறந்துபோன பெரியவர்கள் அதை அபசகுணத்தின் நிறம், துக்கத்தின் நிறம் என வாங்க விடுவதில்லை.
எனக்கு பிடித்த தோழி யார்? என்ற கேள்வியை அம்மாவின் முன்வைத்தேன்.
நீண்ட யோசனைக்குப்பின் 'மாயா' எனக் கூறினாள். மாயா என் தோழி. ஆனால் எனக்கு நெருக்கமான தோழி அல்ல. எனக்கு மிகவும் பிடித்தமான நெருக்கமான தோழி சரண்யா.
இதை நான் பலமுறை என் தாயிடம் பகிர்ந்துள்ளேன். ஆனால் என் தாய் மறந்து விட்டாள். எப்படி மறந்தாள்?
என் தோழியை பற்றி எவ்வளவோ சொல்லி இருக்கிறேன். நான் இதுவரை அவரிடம் பகிர்ந்ததை கேட்கவில்லையா? கேட்க விரும்பவில்லையா? இல்லை, என்னை பற்றி சிந்திக்க நினைவில் வைக்க நேரமில்லையா?
இதை பற்றி யோசிக்கும் போது என் கண்ணில் நீர் சுரந்தது.
அதற்கு மேல் கேள்வி கேட்டு என்னையே நான் காயப்படுத்த விரும்பவில்லை. இருப்பினும் இறுதியாக ஒரு கேள்வி கேட்கவே நான் விரும்பினேன்.
எனக்கு அம்மா பிடிக்குமா? அப்பா பிடிக்குமா?
"அப்பா" என்றாள், மகிழ்ச்சியோடு.
என் கண்களில் நீர் வரப்போவதை உணர்ந்து என் அறைக்கு சென்றுவிட்டேன்.
என்னை பற்றிய எளிமையான விஷயங்களை கூட புரிந்து கொள்ளவில்லை. எல்லா பெண் குழந்தைகளுக்கும் அவர்கள் அப்பா தான் ஹீரோ. எனக்கும் கூட. நான் பருவமடையும் முன் வரை என்னுடன் மட்டுமே அதிக நேரம் செலவிடுவார்.
எவ்வளவு தான் அப்பா பாசத்தை கொடுத்தாலும் அது தாயின் பாசத்திற்கு கால் தூசுக்கு கூட ஈடாகாது.
உயிரையே பணயம் வைத்து உயிர் கொடுத்த தாய்க்கு நிகராக இந்த உலகத்தில் யாரும் இல்லை.
எனக்கு தெரியும் என் வீட்டில் எல்லோரும் என்னிடம் மீது அளவுகடந்த அன்பை வைத்துள்ளனர் என.
அம்மாவும் என் மீது மிகுந்த பாசத்தை வைத்திருக்கிறார்.ஆனால் என்னை புரிந்து கொள்ள அவருக்கு நேரமில்லை என்று என்னை சமாதானம் செய்து கொள்வதைத் தவிர வேறு வழி எனக்குத் தெரியவில்லை.
இதை ஏன் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் என யோசிக்கலாம். அதற்குக் காரணம் இருக்கிறது.
24. ஆம் முழுதாக 24 வருடங்களில் என்னை என் தாய் புரிந்து கொள்ளவில்லையெனில் எங்கிருந்தோ வந்த ஒருவன் எப்படி என்னை புரிந்து கொள்வான்.
இந்த கேள்வி திருமணத்தின் மீது ஒரு பயத்தை ஏற்படுத்துகிறது. அவநம்பிக்கையையும் கூட.
ஒருவேளை அவனும் என்னை புரிந்து கொள்ளவில்லையெனில் என்ன செய்வது? எப்படி வாழ்வது? என பலவிதமான கேள்விகள் என்னுள் ஆட்பரிகின்றன.
கைகள் நடுங்குகின்றன.இதயம் அதன் அதிகபட்ச வேகத்தை காட்டுகிறது. என்ன செய்வது என்று தெரியாமல் என் மனம் முழிக்க,
"போதும் தியா. உனக்கு ரொம்ப டைம் கொடுத்துட்டேன். இனிமேல் கிடையாது. படிக்கணும்னு சொன்ன படிக்க வச்சோம். வேலைக்கு போனுன்னு சொன்னா சரி சின்ன பொண்ணு ஆசைப்பட்டன்னு வேலைக்கு போ ன்னு சொன்னேன். இனிமேல் எதுவும் இல்லை.
இது வரைக்கும் நீ சொன்னதெல்லாம் நான் கேட்டேன். இனிமேல் நான் சொல்றதை நீ கேளு. உனக்கு ஒரு கல்யாணம் பண்ணிக் கொடுத்தா எனக்கு இருக்கிற கடமை முடிந்து போய் விடும். நானும் எந்த கவலையும் இல்லாம சந்தோஷமா இருப்பேன்.
அந்த சந்தோஷத்தை எனக்கு கொடு." என்று என் அப்பா அவரின் கடமை பற்றி பேச ஆரம்பித்துவிட்டார்.
"ஆனா டேட் உங்க கடமைக்காக..." என நான் பேச ஆரம்பிக்கும் போதே என் பாட்டி இடைமறித்தாள்.
"என்னடி அப்பாவை எதிர்த்து பேசுறியா. உனக்கு இவ்வளவு தைரியம் யாருடி கொடுத்தா. வீட்டு பெரியவங்கள எதுத்து பேசுற..."
"இல்ல பாட்டி நான் எதிர்த்து பேசல. நான்..."
"ஓஓஓ... என் கூட வாதம் பண்றியா.. என்னடா பிள்ளையை வளர்த்து இருக்கா. உனக்கு நான் இதைத்தான் சொல்லிக் கொடுத்தேனே. பிஸினஸ் பிஸினஸ் ன்னு சொல்லிக்கிட்டு இருந்தா மட்டும் போதாது. வீட்டையும் பாத்துக்கணும்.
ஒரு மரியாதை தெரியாம வளர்த்திருக்க. எப்படி எதிர்த்து பேசுறான் பாரு. இதுக்குத்தான் அன்னைக்கே சொன்னேன். படிச்சது போதும் காலேஜ் அனுப்பாத கெட்டு போய்டுவான்னு கொஞ்சமாவது கேட்டியா. என் பொண்ணு அப்படி எல்லாம் இல்லைன்னு சொன்ன.
பொம்பள புள்ளைங்கள படிக்க வச்சா இப்படித்தான்." என ஆரம்பித்து வைத்தார் குற்றப்பத்திரிகையை.
"பாட்டி இது அப்படி இல்ல.."
"போதும் தியா பெரியவங்க முன்னாடி எப்படி இருக்கணுமோ அப்படி இரு ரூமுக்கு போ" என அப்பா கூறினார்.
"பட் டாட்..."
"ரூமுக்கு போ னு சொன்னேன்." அவரது கண்கள் கோபத்தில் சிவந்து இருந்தன. அதற்கு மேல் அவர்களிடம் வாதிடவும் நான் விரும்பவில்லை. அறைக்குச் சென்றேன்.
என்ன செய்வது என்றே புரிய வில்லை. அமைதியாக கட்டிலில் அமர்ந்தேன். அருகிலிருந்த டேபிளின் மீது இருந்தந்த ஜாடியில் இருந்த நீரை டம்ளரில் ஊற்றி அதை பருகினேன்.
பெருமூச்சுவிட்டு டம்ளரை டேபிளின் மீது வைக்கும் போது பிரேமின் உள்ளே சிவப்பு நிற டாப் கருப்பு நிற ஜீன்ஸ் போட்டுக்கொண்டு நடக்கவிருக்கும் எதையும் அறியாமல் சிரித்துக் கொண்டிருந்த அந்த தியாவை பார்த்தேன். புன்முறுவல் செய்தேன்.
இந்த பிரேமை கையில் எடுத்து, "சிரி தியா சிரி. அனேகமாக இதுதான் உன் கடைசி சிரிப்பா கூட இருக்கலாம்." என மனக் குழப்பத்திலும் நானே என் ஃபோட்டோ விடம் பேசிக்கொண்டிருந்தேன்.
போட்டோ பிரேமை மேஜை மீது வைத்துவிட்டு சாய்ந்து உட்கார, என் தந்தையின் சொற்கள் என் காதில் மீண்டும் மீண்டும் வந்தன. கடமை சந்தோஷம் என அவர் சாதாரணமாக கூறிவிட்டார். தனது கடமை என்று அவரது கடமைக்காக எவனோ ஒருவனுக்கு என்னை திருமணம் செய்து வைத்து விடுவார்.
கடைசியில் சிக்கப் போவது நான் தானே. அவர்கள் புரிந்து கொள்வார்கள் என எனக்குத் தோன்றவில்லை.
ஒரு குட்டித்தூக்கம் என் மனதிற்கு அமைதியை தரும் என நினைத்து மெதுவாக என் கண்களை மூடினேன். என்னால் முடியவில்லை. பல்வேறு எண்ணங்கள் அலை மோதிக் கொண்டன. என் மனதின் எண்ணங்களை விட அதிகமாக துடித்தது என் இதயம்.
தூக்கம் மிரண்டு போய் நின்றது தூக்கம் என்னை தழுவ மறுத்ததா இல்லை என்னை தண்டிகிறதா என்று புரியவில்லை.
மேஜை மீது இருந்த அலைபேசி ஒலித்தது. சரண்யா வாக இருக்க வேண்டும் என நினைத்தேன்.
திரையும் அவள் பெயரையே பிரதிபலித்தது. அவளின் பெயர் எனக்கு சிறிது இதம் அளித்தது.
அவளின் பெயரே இதமளிக்கும் போது அவள் பேச்சு நிச்சயம் மன அமைதியை தரும் என நம்புகிறேன்.
அலைபேசிக்கு அனுமதி அளித்து என் காதில் வைத்து,
" ஹலோ தியா... எங்க இருக்க?"
" வீட்ல."
" என்னாச்சு? போன்ல வாய்ஸே சரி இல்லையே. ஏதாவது பிரச்சனையா?"
என் குரலிலேயே எனக்கு ஏதோ பிரச்சனை என்று கணித்து விட்டாள்.
என்னைப் பற்றி என்னைவிட அதிகம் தெரிந்தவள். என்னை புரிந்து கொண்ட ஒரே ஜீவன். அவளால் மட்டுமே எனது மன குழப்பத்தை தீர்த்து வைக்க முடியும்.
" என் கல்யாணத்தைப் பற்றி பேசுறாங்க. எனக்கு இப்போ கல்யாணத்துல இன்ட்ரஸ்ட் இல்ல. யாருமே என்ன புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க."
" சரி அத பத்தி எதுவும் நினைக்காத. நாலு மணிக்கு மாலுக்கு வா. அங்க வச்சு பேசிக்கலாம்."
"ம்ம்.."
" இப்பதானே சொன்னேன். எதையும் நினைக்காத."
" நான் எதைப் பற்றியும் நினைக்கல.
" That's my தியா."
சரண்யா சொன்னது போல நான் எதைப் பற்றியும் யோசிக்க விரும்பவில்லை. என் மனதை திசை திருப்ப ரஹ்மான் இசையில் வைரமுத்துவின் வரிகளில் ஆழ்ந்தேன்.
- 25 Forums
- 330 Topics
- 1,589 Posts
- 1 Online
- 420 Members
