Forum

நயனமே நான் தானடி-10
 
Notifications
Clear all

நயனமே நான் தானடி-10

2 Posts
2 Users
0 Reactions
23 Views
(@praveena-thangaraj)
Posts: 323
Member Admin
Topic starter
 
[#428]

அத்தியாயம்-10

 

  ராஜ்குமாரின் காதலை நேத்ரா மறுத்து பேசி சென்றதும் தேவா, ராஜ்குமாரை வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டான். ஆனால் வரும் வழியெல்லாம் மயான அமைதி. 

    தேவாவும் அங்கு தானே சற்று தொலைவில் இருந்தாலும் நேத்ரா ராஜ்குமார் பேசியதை கேட்டிருந்தான். இதில் ராஜ்குமாருக்காக பேசவந்து நீங்க காதலிப்பிங்களா என்று வினாவை தன் பக்கம் திருப்ப ஆடிவிட்டான். 

 

   அதனால் ராஜ்குமாரிடம் எதுவும் கேட்கவில்லை. 

 

  ராஜ்குமாரும் முதலில் போல பிதற்றவோ, அரற்றவோ இல்லை‌. 

   நாலைந்து நாட்களுக்கு பிறகு, "என்னை ஏன் தேவா நேத்ராவுக்கு பிடிக்காம போச்சு? என்ன காரணம்?  கண்ணு தெரியாதவன் என்பதால இருக்கலாம்னு என்னால யோசிக்க முடியலை. ஏன்னா அவளுக்குமே கண்ணு தெரியாது‌. அப்படியிருக்க, என் வசதியை வச்சி நானும் அவளும் நல்லா வாழ்ந்திருக்கலாமே! பிறகு எதுக்கு மறுத்துட்டா?'' என்று வினாவினான்.

 

  தேவாவோ பதிலை கூறாமல் மற்றொரு கேள்வியை முன் வைத்தான். "ஏன் சார் அந்த பொண்ணு நேத்ரா சொன்னது போல அவங்களுக்கும் கண்ணு தெரியலை என்பது, உங்க காதலுக்கு பிளஸா பார்க்கறிங்களா? அதனால அவங்க காதலை ஏற்பாங்கனு நினைச்சிட்டிங்களா?" என்றான்.‌

 

  ராஜ்குமார் தடுமாறியவனாக, "சேசே நான் அப்படி நினைக்கலை. ஆனா மறுக்காம ஏற்று இருக்கலாமே? ஏன்.. எனக்கு புரியலை." என்றான். 

 

   "உங்க எதிர்ல தான் அந்த பொண்ணு போல்டா பேசுது சார். சில நேரம் அவங்க தடுமாறுறாங்க. ஆர்ஜேவா இருப்பதால நிறைய நண்பர்களை பெற்று இருக்காங்க. அதனால் உதவிக்கு என்றதும் பலரும் ஓடி வர்றாங்க. அது அவங்களுக்கு பிளஸ். இருக்குற இடமும் சூழலும் பழகிய இடமென்பதால் ஓரளவு மேனேஜ் பண்ணறாங்க. பொதுயிடத்துல ஆட்டோமெடிக்கா அவங்க வழிநடத்தற தலைமையில் சரியா இருக்க முயற்சி பண்ணறாங்க. அதர்வைஸ் காதல் கல்யாணத்துக்கு பிட் இல்லைனு நினைக்கலாம். 

  இது தப்பில்லை சார். பயம்... உங்களுக்கு விபத்து நேரவும் வந்துச்சே.. அதே பயம் தான். ஆனா அவங்களுக்கு உள்ளுக்குள் ஒரு மூலையில் இருக்கு. 

  தனக்கு எப்படி உலகத்தில் வாழ கத்துக்கிட்டாங்க. ஆனா தன் துணையா வர்றவரையும் அதே போல ஏற்க அவங்களுக்கு பயம்.

 

  இதுல காதல் எட்டிகூட பார்க்காது சார். 

 

அதோட அவங்க கேட்டது உண்மை. இதே ராஜ்குமார் இதுக்கு முன்ன கண்ணு தெரியாத பெண் மேல காதல் வசப்படுவாரா?" என்றான் தேவா.‌

 

  ராஜ்குமாருக்கு சட்டென மறுத்து பேச முடியவில்லை‌‌. அதன்பின் அந்த பேச்சை தேவாவும் எடுக்கவில்லை. ராஜ்குமாரும் எடுக்கவில்லை. 

 

  நாட்கள் இயல்பாக சென்றாலும் ஒரு வெறுமை ராஜ்குமார் வாழ்வில் மீண்டும் தோற்றியது போல இருந்தது. 

 

   என் மீதி வாழ்க்கை நேத்ராவிடம் அமையும் என்று ஆசையாக இருந்தால் எல்லா கனவு கோட்டையும் தரைமட்டமானதாக ராஜ்குமார் கலங்கினான். 

 

   நேத்ராவுக்கு மீண்டும் போன் போட்டு பேசவும் மனமில்லை. காதலை கூறி ஒரு மாதத்திற்கு மேலாக அவளிடம் பேச்சு வார்த்தை எதுவும் இல்லை. இதில் சங்கவிக்கு மீண்டும் ஒரு பரீட்சைக்கு தேவா உதவி செய்து விட்டு வந்தான். அதற்கெல்லாம் ராஜ்குமாரின் அனுமதி வாங்கி சென்றியிருந்தான். அப்பொழுது கூட நேத்ராவை பற்றி கேட்கவில்லை‌. 

 

  அவளது வானவில் புரோகிராம் மட்டும் கேட்பான். முன்பிருந்த துள்ளல் லேசாக குறைந்திருந்தது. 

 

இதற்கிடையே முன்பு போல சந்திரா சசிகுமார் வேறு தினமும் போன் போட்டு நலம் விசாரிக்க ஆச்சரியப்பட்டான். 

 

   சசிகுமார் மாமா பேசுவது எதார்த்தமானது. சந்திரா அத்தையும் நலன் விசாரிப்பது தான் வித்தியாசமாக இருந்தது. 

 

    அதற்கான காரணம் என்னவாக இருக்கும்? ஏதேனும் சொத்தை எதிர்பார்க்கின்றனரா? என்று தான் எண்ணத் தோன்றியது‌. ஆனால் அதிகம் யோசிக்கவிடாமல் சந்திராவே ராஜ்குமாரை தேடி சசிகுமாரோட சென்னைக்கு வந்தார். 

 

  ராஜ்குமாரிடம் உடல்நலத்தை விசாரித்து கொண்டு பிசினஸை கேட்க, "பிசினஸ் எதுவும் பார்க்கலை மாமா. முன்ன மாதிரினா சக்சஸா செய்ய முடியும். இப்ப நிறைய தடுமாற்றம். லாட்ஜ் வருமானத்தில் பாதி பாதி எடுத்துக்கறதே போதும் மாமா." என்றான். 

 

அந்த நேரம் சந்திராவோ, "ராஜ்குமார்... சஞ்சனா இப்ப எல்லாம் சரியா சாப்பிடறதில்லை‌. அவளுக்குனு மாப்பிள்ளை பார்த்தா... அவ உங்களை தான் கல்யாணம் செய்வேன்னு அடம் பிடிக்கிறா. 

  முன்ன நாங்களா தான் அவளுக்கு ஆசைக்காட்டினோம்‌. சஞ்சனாவை உங்களுக்கு கல்யாணம் கட்டிக் கொடுக்கலாம்னு நானும் உங்கமாமாவும் அவளிடம் பேசுவோம்‌. அதை அவ அடிமனசுல ஆழமா பதிய வச்சிட்டா. 

  இடையில் உங்களுக்கு பார்வை பறிப்போனதும், உங்களுக்கு மகளை கட்டித்தர வேண்டாம்னு முடிவு செய்தேன்‌ அதனால தான் உங்களை பார்க்கவோ, உங்க நலத்தை பற்றி விசாரிக்கவோ செய்யலை. 

 

  ஆனா கண்ணு போனாலும் எனக்கு ராஜ் அத்தானா தான் வேண்டும்னு சஞ்சனா பிடிவாதம் பிடிக்கறா. இரண்டு வாரம் முன்ன தற்கொலை செய்துக்க மலை உச்சி வரை போயிட்டா. ஆனா அங்கிருந்த பாரஸ்ட் ஆபிஸர் அவளை திட்டி அவர் வண்டில வந்து வீட்ல விட்டுட்டு போனார். போறப்ப தற்கொலை பண்ணிக்க போனதால உங்க பொண்ணு மேல கேஸ் கூட போட முடியும். ஏதோ சின்ன பொண்ணு என்பதால புத்திமதி சொல்லி கூட்டிட்டு வந்தேன்னு வீட்ல விட்டுட்டு போனாங்க. 

  வீட்டுக்கு வந்தப்பிறகு ஒரேயிடத்துல உட்கார்ந்து பிரம்ம பிடிச்ச மாதிரி இருக்கா‌. 

   ஏன்டி இப்படியிருக்கனு கேட்டதுக்கு, 'அத்தானுக்கு கண்ணு போனா என்ன? என்னை அவருக்கு கல்யாணம் செய்து வைக்க மாட்டிங்களா? தேவா அண்ணா மாதிரி கூடயிருந்து நான் பார்த்துப்பேன். சின்ன வயசுலயிருந்து ஆசைக்காட்டிட்டு, விபத்துல கண்ணு போனதும், என் காதலை குழித்தோண்டி புதைக்காதிங்க, அத்தானோட சேர்த்து வைங்கனு கெஞ்சறா. 

   தப்பு தான் ராஜ்குமார்... நீ சோனாலினு ஒரு பொண்ணை விரும்பினதா கேள்விப்பட்டதும், என் மக நினைப்பு இல்லாம எவளையோ காதலிக்கறவனுக்கு கண்ணு போனதால், கவலைப்படணுமா?னு உங்களை பார்க்க வரலை‌. இப்ப என் மக, 'அத்தான் காதலிச்சவங்க விட்டுட்டு போன மாதிரி என்னால விடமுடியாதுனு சேர்த்து வையுங்க'னு கெஞ்சறா. நாங்க எவ்வளவோ எடுத்து சொல்லியும் விபரீதமா முடிவெடுப்பாளோனு பயமாயிருக்கு. நீங்க‌ அவளை ஏத்துக்குங்க. இல்லைன்னா.. ஒரு முறை அவளை வந்து பாருங்க." என்று அழுதார். 

 

  சந்திரா அத்தை பேசியதை கேட்டவனோ சிலை போல மாறினான். 

 

  இந்த காதல் எத்தனை விசித்திரம். நான் ஒருத்தியை நேசிக்க, அவளை என்னை நேசிக்க வைக்காதா. இது தான் விதியா? கண்ணை பறித்தும் காதலில் இன்னமும் குருடனாக அலையவைக்கின்றதே என்று திகைத்தான். 

 

தன் கையில் அத்தையின் கண்ணீர் துளியை கண்டான். 

  தோளில் மாமா சசிகுமாரின் கைகள். 

   "உறவுகள் உறுதுணையாக இருக்க வேண்டிய நேரத்தில் உன்னை அம்போனு விட்டுட்டு போயிட்டேன். என்‌ மக இன்னமும் உன்னை நேசிக்கறா.

   அவளுக்கு பெரிய இடத்துல கல்யாணம் ஆகணும். நல்ல வசதி வாய்ப்போட, வாழணுமென்ற பேராசை எல்லாம் போயிடுச்சு. அவ உயிரோட எங்களோட இருந்தா போதுமென்ற அளவுக்கு என்‌ மனநிலை வந்துடுச்சு. நீ தான் ராஜ் அவளிடம் பேசணும்" என்று அழுதார். 

சசிகுமார் மாமா அழுது உருகுவதை முதல் முறை தன் கைகளில் நீர்த்துளிப்பட்டு தெறிக்க அறியவும் கலங்கினான் ராஜ்குமார். 

 

   "மாமா... நான் வந்து என்ன சொல்லறது?" என்று குழம்பினான்.‌

 

  அப்படியிப்படி என்றவனை ராஜ்குமாரை அழைத்து கொடைக்கானல் சென்றனர். 

 

   அங்கே சஞ்சனா மௌனமாய் இருக்க, ராஜ்குமாரை அழைத்து வந்து விட்டுவிட்டு "சஞ்சனா எதிர்ல இருக்கா ராஜ் பேசு. நாங்க வெளியே இருக்கோம். தேவா தம்பி நீங்களும் வாங்க" என்று கூப்பிட, "சார் பேசிட்டு கூப்பிடுங்க" என்று அகன்றான். 

 

  "என்ன சஞ்சனா பைத்தியக்காரத்தனம் பண்ணிட்டு இருக்க?" என்றான் ராஜ்குமார். 

 

  "நான் என்ன பைத்தியக்காரத்தனம் செய்தேன் அத்தான். 

  உங்களை நினைவு தெரிந்த காலத்திலருந்து விரும்பறேன். 

  அத்தானிடம் பேசுனு போன்ல என்னை முதல்ல திணிச்சப்ப, ஒவ்வொரு முறையும்  நடுங்கியபடி வாங்கி பேசுவேன். படிப்பை தவிர ஏதாவது பேசுவிங்களா... மாட்டிங்க. 

 

  நேர்ல வருவிங்க, பிரெண்ட்ஸோட ஊர்சுத்த போயிடுவிங்க. வரவு செலவு எல்லாம் அப்பா காட்ட துடிச்சப்ப, 'இதெல்லாம் எதுக்கு மாமா. நீங்க தானே'னு சொல்விங்க.

   எந்த நம்பிக்கையில மாமா நீங்க வருமானத்தை பற்றி கேட்கலை. ஆனா வீட்ல அம்மா எப்பவும், நம்ம பொண்ணை கல்யாணம் செய்ய நினைச்சிருக்கலாம். எதுக்கு உங்களிடம் கணக்கு வழக்கு கேட்கணும்னு விட்டுயிருப்பார். இதுக்கு போய் ஒவ்வொரு முறையும் ராஜ்குமார் இப்படியெல்லாம் இருக்கக்கூடாது பொறுப்பில்லைனு பேசாதிங்கனு சொல்வாங்க.

 

சில நேரம் தெரிந்தவங்க, உண்மையிலேயே சொந்தத்துக்குள் கல்யாணம் செய்ய போறார். அதான் மாப்பிள்ளை லாட்ஜை இவர் எடுத்து பார்க்கறார்னு பேசுவாங்க. 

 

நீங்க வந்துட்டு போற சில நாட்கள் என் வாழ்க்கையில எப்படியிருக்கும் தெரியுமா? நீங்க இங்கயே இருக்க கூடாதானு ஏங்குவேன். 

உங்களுக்கு ஏன் அத்தான் என்னை பிடிக்கலை? அந்த சோனாலியை விட எந்த விதத்தில் என் காதல் தரம் தாழ்ந்துடுச்சு. 

  உங்களுக்கு பார்வை போச்சுனு விட்டுட்டு ஓடினவளை நினைக்கறிங்க. பார்வை போனாலும் நீங்க தான் வேண்டும்னு அம்மாவிடம் அடியும்திட்டும் வாங்கி, தற்கொலை வரை போயிட்டேன். என்னை பிடிக்கலை‌யா." என்று தேம்பவும் ராஜ்குமார் மனமோ வெவ்வேறு விதமான உணர்வுக்குள் சென்று வந்தான்.‌

 

  ஆனால் எதிரேயிருப்பவளுக்கு ஆறுதல் சொல்ல வேண்டும். அல்லது அவளது மனதை தேற்ற வேண்டுமென்பதற்காக, "இங்க பாரு... என் மனசுல சோனாலி இல்லை. அவ எப்ப என்னை விட்டு போனாலோ அப்பவே என் மனசுல இருந்தும் போயிட்டா." என்றதும் "அப்பறம் ஏன் அத்தான் என்னை வெறுக்கறிங்க" என்று கட்டிப்பிடித்து அழத்துவங்க, ஆண்டாண்டு காலமாக பெண்களின் புனிதமான கண்ணீர் என்னும் ஆயுதம் அவன் இதயத்தை சுட்டது. 

 

  தன் மீது சஞ்சனா சாய்ந்து அழவும், "சஞ்சனா ப்ளீஸ்.. சஞ்சனா.. தள்ளி நில்லு ப்ளிஸ்" என்று இவன் பின்னால் நகர்ந்திட முயன்றளவு கெஞ்சினான்.‌

 

தன்னை வேண்டாமென சென்ற காதலை எண்ணி வருந்துகின்றோம். தான் மட்டுமே வேண்டுமென இங்கொருத்தி உயிரை துறக்க சென்று வந்துள்ளதை எண்ணி சிறிது யோசித்தான். 

 

தனக்கு ஏற்பட்ட காதல் தோல்வியை இவளுக்கும் பரிசளிப்பதா? என்று ஒருமனம் கேள்வியும் எழுப்பியது. 

 

  "சஞ்சனா... நான் உன்னை ஏற்றுக்கிட்டா நீ நிறைய கஷ்டப்படணும்." என்றான். 

 

  "அத்தான்... நீங்க கிடைக்கலைன்னு சாகறதுக்கு பதிலா, உங்களோட சேர்ந்து கஷ்டப்பட நான் தயார்." என்று பேசியவளை முதல் முறை சஞ்சனா சிறுபெண் என்றதை தாண்டி, அவளது பருவமெய்திய வதனத்தை மனக்கண்ணில் கொண்டு வந்து பார்த்தான். 

  தன்னை காதலிப்பதாக அவள் பிடிவாதம் பிடிக்கும் செயல் காட்சியாக விரிந்தது. 

 

  ஒரு பக்கம் மனம் முகம் தெரியாத நேத்ராவை விரும்பியதை எண்ணியது. 

 

   அதை கூறிடவும் தயக்கம் பிறக்க, "எனக்கு இரண்டு நாள் டைம் கொடு சஞ்சனா. நம்மளை பத்தி யோசிக்கணும். கண் தெரியாத என்னை கல்யாணம் செய்து உன்னையும் இக்கட்டில் தள்ள மனசில்லை." என்றான்.

 

  "யோசிங்க... ஆனா பதில் எனக்கு சாதகமா சொல்லுங்க. எனக்கு உங்களை மணக்க எந்த கஷ்டமும் இல்லை. இப்ப தேவா இருக்கற இடத்துல நான் இருப்பேன் அத்தான். எப்பவும் உங்க கைகளை பிடிச்சிட்டு உங்களோடவே உங்களுக்காகவே." என்று கூற, நிதானித்தான். 

 

   அவளது கைவிரலை விடுவித்து, "யோசிக்கறேன் சஞ்சனா.. டைம் கொடு. அத்தை மாமாவை பயமுறுத்தாத." என்று கூறியவன் "தேவா" என்று அழைத்தான். 

 

  தேவா வந்ததும் ராஜ்குமார் அவர்களுக்கான தனியறைக்கு சென்றார்கள். 

 

"என்ன சார் முடிவெடுக்க போறிங்க?" என்றான். 

 

"தெரியலை தேவா. நான் சோனாலியை விரும்பினேன். அது உள்ளமும் உடலும் பிடிச்சிருந்ததுனு நினைச்சேன்.  சந்தர்ப்பம் சூழ்நிலை ஒரு விபத்தில சோனாலி என்னை போல குருடனை மணக்க விரும்பலைனு தெரிந்துக்கிட்டேன். 

   நேத்ராவோட உடலோ முக அழகோ எதுவும் தெரியாது‌ அவ பேசினா என் உள்ளத்தில் இதமா இருந்தது. நேத்ரா போல ஒருத்தி உள்ளத்துக்கு மருந்தா கூடவே இருக்க விரும்பினேன். நேத்ராவுக்கு என் காதல் புரியலை. புரியலையா.. இல்லை... அது காதலேயில்லையா?  இந்த குழப்பத்துக்கு மத்தியில சஞ்சனா என்னை அப்பவும் இப்பவும் விரும்புவதா சொல்லறா.  என்னை விட சின்ன பொண்ணு சரியான முடிவு எடுக்க தெரியாம ஈர்ப்பை இப்பவும் காதல்னு நினைக்கறாளா? என்னால எந்த முடிவும் எடு

க்க முடியலை. ஆனா ஒன்னு என்னால எந்த உயிரும் போகக்கூடாது." என்றான் ராஜ்குமார். 

 

-தொடரும். 

 

 

 

 

 

 

 


 
Posted : November 6, 2026 7:17 am
(@crvs2797)
Posts: 245
Reputable Member
 

நயனமே நான் தானடி..!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 10)

இதுவொரு ஃபுட் செயின் மாதிரி
லைஃப் செயின். எப்பவுமே நாம விரும்புறவங்க நம்மை விரும்ப மாட்டாங்க, நம்மை விரும்புறவங்களை வேணுமின்னா நாம கட்டிக்கலாம்.

ஆனால், உண்மையாவே சஞ்சனா ராஜ்குமாரை விரும்பித்தான் கல்யாணம் கட்டிக்கப் நினைக்கிறாளா ? உள்குத்து எதுவும் இல்லையே...?

😴😴😴
CRVS (or) CRVS2797


 
Posted : November 6, 2026 3:43 pm

Scroll to Top