Forum

மௌஹபத் முதல் நிக்கா...
 
Notifications
Clear all

மௌஹபத் முதல் நிக்காஹ் வரை-22

3 Posts
3 Users
0 Reactions
8 Views
(@praveena-thangaraj)
Posts: 319
Member Admin
Topic starter
 
[#423]

அத்தியாயம்-22

தியானா பிரணவை அணைத்துக்கொண்டு அவனுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த அதே நேரத்தில், சற்றுத் தொலைவில் நின்றிருந்த நஸீரின் முகம் கோபத்தில் இறுகியது.

தன்னுடைய மகள் இன்னொரு ஆணை இப்படி அணைத்துக் கொண்டு நிற்பாள் என்று அவர் கனவில்கூட நினைத்துப் பார்த்ததில்லை. மகளைப் பற்றித் தான் வைத்திருந்த நம்பிக்கை ஒரே நொடியில் உடைந்துவிட்டதைப் போல உணர்ந்தார்.

வேகமாக அவர்களை நோக்கி நடந்தவர், பிரணவின் தோளில் முகம் புதைத்துக் கதறிக்கொண்டிருந்த தியானாவைப் பார்த்ததும் ஆத்திரத்துடன் அவளைப் பெயர் சொல்லி அழைத்தார்.

"தியானா!" அந்தக் குரலில் இருந்த கடுமையில் தியானா பதறியடித்துப் பிரணவிடமிருந்து விலகினாள்.

தலைநிமிர்ந்து பார்த்தவளுக்கு, அங்கே கோபத்துடன் நின்றுகொண்டிருந்த தந்தையைப் பார்த்ததும் உயிரே உறைந்துவிட்டது.

"வாப்பா... நீங்க எப்போ வந்தீங்க?"

"நான் எப்போ வந்தா உனக்கென்ன? இங்கே என்ன நடந்துக்கிட்டு இருக்கு?"

"வாப்பா, அது வந்து..."

"வாயை மூடு. வீட்டுக்குப் போய் பேசிக்கலாம். இப்போ என் கூட வா!"  நஸீரின் குரல் உயர்ந்தது.

தியானா பதற்றத்துடன் பிரணவைத் திரும்பிப் பார்த்தாள். தாயை இழந்த துயரத்தில் அவன் ஏற்கெனவே உடைந்து போயிருந்தான். இந்த நேரத்தில் தன்னால் அவனுக்கு மேலும் ஏதாவது பிரச்சினை வந்துவிடக்கூடாது என்று நினைத்தவள், எதுவும் பேசாமல் தந்தையுடன் செல்லத் திரும்பினாள்.

ஆனால், அடுத்த நொடியே நஸீர் அவளுடைய கையைப் பிடித்து இழுத்துச் சென்றார்.

"வாப்பா... வலிக்குது!"

"வலிக்குதா? இப்போ உனக்கு வலிக்குதா? நீ செஞ்சதைப் பார்த்த எனக்கு எப்படி இருக்கும்னு யோசிச்சியா? நெஞ்சு வலி வராத குறை" என்று அவருடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவளுடைய இதயத்தைத் தாக்கின.

தியானா மீண்டும் ஒருமுறை பிரணவைத் திரும்பிப் பார்த்தாள்.

அவனோ தன்னுடைய துயரத்திலிருந்து இன்னும் மீள முடியாமல் அங்கேயே நின்றுக் கொண்டிருந்தான். நடந்ததைப் புரிந்துகொள்ளக்கூட அவனுக்கு நேரம் தேவைப்பட்டது.

தியானாவின் கண்களில் தெரிந்த கலக்கத்தைப் பார்த்தபோதும், அவளிடம் ஏதாவது பேச வேண்டும் என்று பிரணவ் நினைத்தான். ஆனால், தொண்டையில் சிக்கியிருந்த சோகமும் மனதில் இருந்த வெறுமையும் அவனை அசையவிடவில்லை.

அவள் அவனிடமிருந்து விலகிச் சென்றுக் கொண்டிருந்தாள்.

அவனுடைய தாயை இழந்த துயரத்தில் அவனுக்கு ஆறுதல் சொல்ல வந்தவள், இப்போது அவளது தந்தையின் கோபத்திற்கு ஆளாகி அழுதபடி அழைத்துச் செல்லப்படுகிறாள்.

அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

தியானா தன் பார்வையிலிருந்து மறைந்ததும், பிரணவ் மெல்லத் தலைகுனிந்தான்.

ஏற்கெனவே வாழ்க்கை தன்னிடமிருந்து எல்லாவற்றையும் பறித்துக் கொண்டிருப்பதைப் போல உணர்ந்துக் கொண்டிருந்தவனுக்கு, இப்போது அவளுடைய நிலைமையை நினைத்ததும் மனம் மேலும் வலித்தது.

ஆனால், அவனுக்காக அழுதுக் கொண்டிருந்த தியானாவை நினைத்து வருந்துவதற்குக்கூட அவனிடம் தெம்பில்லை.

அவனுடைய உலகமே சிதைந்துவிட்டது. 

நஸீர் வீட்டிற்கு வந்ததிலிருந்து அவரது கோபம் குறையவே இல்லை.

கதவைத் திறந்து உள்ளே நுழைந்தவர், தியானாவைத் திரும்பிப் பார்க்காமலேயே, "ஃபாத்திமா" என்று உரக்க அழைத்தார்.

சமையலறையில் இருந்த ஃபாத்திமா பதற்றத்துடன் வெளியே வந்தார்.

"என்னங்க? என்ன ஆச்சு?

"உன் பொண்ணு என்ன பண்ணியிருக்கான்னு உனக்குத் தெரியுமா?" நஸீரின் குரலில் இருந்த ஆத்திரத்தைக் கேட்டதும் ஃபாத்திமா திகைத்தார். அவருக்குப் பின்னால் கண்ணீருடன் நின்றுக் கொண்டிருந்த மகளைப் பார்த்தார்.

"தியானா, என்னம்மா ஆச்சு?" தியானா எதுவும் பேசாமல் தலைகுனிந்து நின்றாள்.

"என்ன ஆச்சுன்னு கேட்கிறேன்! ஏன் இப்படி அழுதுட்டு இருக்க?" அதற்குள் நஸீர் கோபத்துடன் நடந்ததைச் சொல்லத் தொடங்கினார்.

"உன் பொண்ணு வேலை பார்க்கிற ஹோட்டல்ல, வேலை செய்யறவனல, நடுரேட்ல அணைச்சுக்கிட்டு நிக்கிறா. என் கண்ணால பார்த்தேன். இவளை  நம்பி வேலைக்கு அனுப்புறோம். இவ அங்கே என்ன செஞ்சுட்டு இருக்கா பாரு" அதிர்ச்சியில் ஃபாத்திமா மகளையே பார்த்தார்.

"தியானா... இது உண்மையா" அவளுடைய கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

"உம்மா..."

"என்னம்மா நடந்தது?" என்றார்.

"உம்மா.. அவரோட அம்மா இறந்துட்டாங்க, உம்மா. அவரால ஊருக்குப் போகக்கூட முடியலை. அந்தத் துக்கத்துல அழுதுட்டு இருந்தார். என்னால அவரை அப்படியே விட்டுட்டு வர முடியலை." தியானா சொன்னதைக் கேட்ட ஃபாத்திமாவின் முகத்தில் ஒரு நொடி பரிதாபம் தோன்றியது. ஆனால் அவன் அம்மா இறந்தால் இவளுக்கு என்ன? அவனுக்கும் இவளுக்கும் என்ன உறவு? என்ற எண்ணவோட்டம் ஓடியது. 

ஆனால், நஸீரோ அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.

"அதுக்காக ஒரு ஆம்பளையை அணைச்சுக்கணுமா? ஆறுதல் சொல்ல வேற வழியே இல்லையா? முதல்ல நீ அவனை எந்த உரிமையில் அணைச்ச?" 

"வாப்பா, நான் எந்தத் தப்பும் பண்ணலை" தியானாவின் குரல் உயர்ந்தது.

அவள் இத்தனை நாட்களாகத் தன்னுடைய காதலை மனதிற்குள் பூட்டி வைத்திருந்தாள். இப்போது அதை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அவளுக்குத் தோன்றியது.

எவ்வளவு காலம்தான் தன் மனதிற்கு எதிராக வாழ்வது?

தன்னுடைய காதலைப் பெற்றோரிடம் சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது.

"வாப்பா நான் அவரை விரும்புறேன் வாப்பா" என்றாள்.

இந்த வார்த்தைகளைக் கேட்டதும் அறையில் நிலவிய சத்தம் சட்டென்று அடங்கியது.

நஸீர் அதிர்ச்சியுடன் மகளைப் பார்த்தார். ஃபாத்திமாவின் கண்கள் விரிந்தன. அறையின் ஓரத்தில் நின்றுக் கொண்டிருந்த சஹ்ராவும் தன்னுடைய அக்காவைப் பார்த்து விழித்தாள்.

"என்ன சொன்ன?" என்று நஸீர் கேட்டார்.

தியானா கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மீண்டும் சொன்னாள்.

"நான் பிரணவை விரும்புறேன், வாப்பா" என்றாள்.

"தியானா" என்று ஃபாத்திமா பதற்றத்துடன் அழைத்தார்.

ஆனால், இப்போது தியானாவால் அமைதியாக இருக்க முடியவில்லை.

"எத்தனை நாளைக்கு என்னோட மனசுல இருக்கிறதை மறைச்சுக்கிட்டு வாழ முடியும் உம்மா...  நான் அவரைக் காதலிக்கிறேன். அவர் என்னை எவ்வளவு நேசிக்கிறார்னு உங்களுக்குத் தெரியாது!" என்றாள்.

" தியானா நீ ஒரு இந்து பையனை நேசிக்கறியா? அவன் வேற மதம். நீ வேற மதம். இதெல்லாம் உனக்குத் தெரியாதா?" என்றார். 

"தெரியும், வாப்பா! எல்லாமே தெரியும். அதனாலதான் இத்தனை நாள் அவரை விலகிப் போகச் சொன்னேன். அவரைக் காதலிக்கக் கூடாதுன்னு என்னையே நான் எவ்வளவு கஷ்டப்படுத்திக்கிட்டேன் தெரியுமா?" அவளுடைய குரல் தழுதழுத்தது.

"ஆனா, என்னால முடியலை. அவரை மறக்க முடியலை"

ஃபாத்திமா மகளின் முகத்தைப் பார்த்தார். அவளுடைய கண்களில் தெரிந்த காதலும் தவிப்பும் அவரை நிலைகுலையச் செய்தன.

"தியானா, காதலிக்கிறது தப்புன்னு நாங்க சொல்லலைம்மா. ஆனா, வாழ்க்கை முழுக்கச் சேர்ந்து வாழ முடியுமா என்பதையும் யோசிக்கணும்.

"அதைத்தான் நான் உங்களிடம் சொல்ல வர்றேன், உம்மா...நாங்க சேர்ந்து வாழணும். அதுக்கு நீங்கதான் எங்களைச் சேர்த்து வைக்கணும்" அவளுடைய வார்த்தைகளில் இருந்த உறுதியைக் கேட்டதும் நஸீரின் கோபம் மேலும் அதிகரித்தது.

"என்ன? நாங்க உன்னை அவனோட சேர்த்து வைக்கணுமா? உனக்குப் பைத்தியம் பிடிச்சிருக்கா?”"

"வாப்பா, ஏன் இப்படி பேசுறீங்க?"

"நான் இப்படித்தான் பேசுவேன். நீ என்ன நினைச்சுட்டு இருக்க? அவன் உனக்காக என்ன வேணும்னாலும் செய்யத் தயாரா இருந்தா, நீயும் அவனும் வாழ்க்கை முழுக்கச் சந்தோஷமா வாழ்ந்துட முடியுமா?" தியானா கண்ணீருடன் தலையசைத்தாள்.

"அவர் எனக்காகத் தன்னை மாத்திக்கிட்டு இருக்கார், வாப்பா!"

"என்ன மாற்றிக்கிட்டான்" என்று கேட்டார்.

"அவருக்கு அசைவ உணவு சமைக்கவே பிடிக்காது. அதுக்காகத் தனக்கு எவ்வளவு சம்பளம் அதிகமா கொடுத்தாலும் அந்தப் பிரிவுக்குப் போக மாட்டேன்னு சொல்லியிருக்கார். ஆனா, என்னோட காதலுக்காக இல்ல... என்னைப் புரிஞ்சுக்கணும்னு நினைச்சு, இப்போ அங்கே வேலை செய்ய ஆரம்பிச்சிருக்கார்!"  அவள் பேசப்பேச, அவளுடைய கண்களில் பெருமையும் காதலும் கலந்து மின்னின.

"அதுமட்டுமில்லை, வாப்பா. நான் அவரை வேண்டாம்னு சொல்லிட்ட பிறகும், எனக்காக ஐந்து நேரமும் தொழுகை கத்துக்கிட்டு இருக்கார். தொழுகையைப் பத்தித் தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்படுறார். என்னோட நம்பிக்கைகளைப் புரிஞ்சுக்கணும்னு நினைக்கிறார். இவ்வளவு தூரம் என்னை நேசிக்கிற ஒருத்தரை நான் எப்படி மறக்க முடியும்?"

நஸ்ரின் முகம் இறுகியது. "அவன் உன்னைத் திருமணம் செய்துக்கணும்னு ஆசைப்படுறதுக்காகத் தொழுகை கத்துக்கிட்டா, அதனால எல்லாம் சரியாகிடுமா? தொழுகைன்னா என்னன்னு அவனுக்குத் தெரியுமா? மதத்தைப் புரிஞ்சுக்கிறது வேற, ஒருத்திக்காக ஏதோ கத்துக்கிறது வேற!"

"அவர் கல்யாணம் செய்வதற்காக நடிக்கலை, வாப்பா!”

"அவன் என்ன காரணத்தால் காதலிக்கறான்னு உனக்கு எப்படித் தெரியும்?"

“ஏன்னா, நான் அவரை வேண்டாம்னு சொல்லிட்டேன்! அப்பவும் அவர் என்னை வற்புறுத்தலை. என்னோட நம்பிக்கையைப் புரிஞ்சுக்க முயற்சி செய்கிறார். அவரோட காதல் உண்மையானது!" தியானாவின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவளுடைய மனதிலிருந்து வெளிவந்தன.

அவள் யாருக்காகவும் இவ்வளவு உறுதியாகப் பேசியதில்லை. ஆனால், பிரணவைப் பற்றிப் பேசும்போது மட்டும் அவளுடைய மனதில் இருந்த பயத்தைவிட அவன் மீதான காதல் பெரிதாகத் தெரிந்தது.

"நீ என்ன சொன்னாலும் என்னால இதை ஏத்துக்க முடியாது!"  என்று நஸீர் திட்டவட்டமாகச் சொன்னார்.

தியானா அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்தாள்.

"வாப்பா..."

"அவன் வேற மதத்தைச் சேர்ந்தவன். உன்னோட வாழ்க்கை எப்படி அமையும்? உன் குடும்பம் என்ன ஆகும்? நாளைக்கு உங்களுக்குக் குழந்தை பிறந்தா என்ன செய்வீங்க? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் உன்னிடம் பதில் இருக்கா? வேண்டாம்னா வேண்டாம் நாமளே நம்ம நாட்டில் வாழ முடியாம இச்க வேலைக்கு வந்தவங்க. இதுல வேற நாடு வேற மதம் இதெல்லாம் நடக்காதது." அவள் சில நொடிகள் அமைதியாக நின்றாள்.

இந்தக் கேள்விகளுக்கான எல்லாப் பதில்களும் அவளிடம் இல்லை என்பது உண்மைதான். ஆனால், அதற்காகத் தன்னுடைய காதலைக் கைவிடவும் அவளால் முடியவில்லை. இந்த நிலையில் பிரணவ் தனக்காக பேசவும் வரமுடியாது. அப்படியிருக்க முதலில் தந்தையிடம் இந்த வாதம் ஆறப்போட வேண்டி, அமைதியானாள். 

 மகள் அமைதியாகவும் நஸீர் அவள் தன் பேச்சை கேட்டுவிட்டதாக எண்ணினார்.

-தொடரும். 


 
Posted : October 30, 2026 11:22 am
(@guna-sundari)
Posts: 188
Estimable Member
 

Super diya. U took very bold decision.very intresting sis.


 
Posted : October 30, 2026 12:54 pm
(@crvs2797)
Posts: 242
Reputable Member
 

மொஹபத் முதல், நிக்காஹ் வரை!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 22)

இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு தெரிஞ்சிருக்க வேண்டியது, அவளோட கிரகம் காதலை சொல்ல நினைச்ச நாளே, சொல்ல நினைக்குறதுக்கு முன்னாடியே தெரிஞ்சிடுச்சு. இனி காதல்ல ஜெயிச்சு ஒண்ணு சேருர வரைக்கும் ஒரு போராட்டம்ன்னா
ஜெயிச்ச பிறகும் சர்வைவ் ஆக அது இன்னொரு போராட்டம் தான் போல.

😴😴😴
CRVS (or) CRVS2797


 
Posted : October 30, 2026 2:27 pm

Scroll to Top