Forum

மொஹபத் முதல் நிக்கா...
 
Notifications
Clear all

மொஹபத் முதல் நிக்காஹ் வரை-10

3 Posts
3 Users
0 Reactions
51 Views
(@praveena-thangaraj)
Posts: 265
Member Admin
Topic starter
 
[#336]

அத்தியாயம்-10

"அண்ணா... இவங்களை அவங்க சொல்லுற இடத்துல விட்டுடுங்க. அதுக்கான திர்ஹம்." என்று பிரணவ் டாக்ஸி டிரைவரிடம் பணத்தை நீட்டினான். "பிரணவ் நான் தந்துப்பேன்" என்றவளிடம் "பரவாயில்லைங்க" என்றான்.‌

பிறகு ஒரு நொடி தயங்கி,
"அண்ணா... இது என் போன் நம்பர். போன்ல பேசறேன்."
என்று சொல்லி, தன்னுடைய எண்ணை டிரைவரிடம் கொடுத்துவிட்டு தியானாவை நோக்கிப் பார்த்தான்.

"சரிங்க தம்பி." என்று டிரைவர் எண்ணைக் குறித்துக் கொண்டார். தமிழ் தெரிந்த மனிதர், அதுவும் காரோட்டி என்பதால் அவர் எண்ணையும் குறித்து கொண்டான்.

தியானாவை பார்த்தபடி பிரணவ், "வர்றேன் தியானா." என்று மட்டும் சொல்லிவிட்டு கீழே இறங்கினான்.

அவன் நேரமோ என்னவோ லிப்ட் வேலை செய்யாமல் இருந்தது. 'இன்னைக்கு நேரமே சரியில்லையே...' என்று மனதிற்குள் சலித்துக் கொண்டவன், படிக்கட்டில் மெதுவாக ஏறினான்.

தியானா சற்று முன்வரை அருகில்தான் இருந்தாள். அவளிடம் பேச வேண்டியதை பேசியிருக்கலாம். ஆனால்...
மனமோ முன்னால் செல்லாமல் ஏதோ தயங்கி, 'என்ன பேசுறது?' என்று சிந்தித்து, நேற்று இரவு அவள் எழுதிய கதையைப் படித்ததை நேரில் சொல்ல முடியாமலே போனது.

'கதை ரொம்ப நல்லா இருந்தது தியானா...' என்று நேராகச் சொல்ல வேண்டும் என்று ஆசையாக நினைத்திருந்தான்.
ஆனால் அவளுக்குத் தான் அந்த அனானிமஸ் கமெண்ட் தன்னுடையது என்று தெரியுமா? அவள் அந்த "லவ் யூ பேபி" என்று பதில் போட்டது சாதாரண வாசகருக்கானதா?
இல்லை... தன்னை மனதில் வைத்துத்தானா? அவளுடைய பார்வைக்கு என்ன அர்த்தம்? இது காதலா? நட்பா? இல்லை... தான் மட்டும் தேவையில்லாமல் கற்பனை செய்து கொள்கிறோமோ? என்று அவனுடைய மனம் ஆயிரம் கேள்விகளை எழுப்பியது.

அதிலும் ஒரு கேள்வி மட்டும் அவனைத் தொடர்ந்து துரத்தியது. 'அவள் முஸ்லிம் பெண்... நான் இந்து மதம். அப்படியே இந்தக் காதல் உருவானால், செட்டாகுமா?' அந்த எண்ணமே வந்ததும் அவனுக்குள் ஒரு குற்ற உணர்வு எழுந்தது.

'வேலைக்காக வெளிநாட்டுக்கு வந்த இடம் இது. குடும்பம் தன்னை நம்பி அனுப்பியிருக்க. இங்க வந்து என்ன காதல் கீதல்னு மனசை அலைக்கழிச்சிட்டு இருக்கேன்.' என்று தன்னைத்தானே கடிந்துகொண்டான்.

'ஏன் தான் இந்த ஆசை எல்லாம் வருதோ...' மனசாட்சியே அவனைப் பார்த்து கேள்வி கேட்டது. அதற்குப் பதில் சொல்ல முடியாமல், தலைகுனிந்தபடி கதவை திறந்தான்.

அறைக்கு வந்ததும் முகம் அலம்பி, உடை மாற்றிக்கொண்டு கட்டிலின் ஓரத்தில் சோர்வாக அமர்ந்தான்.

கையில் இருந்த கைபேசியை மேசை மீது வைத்துவிட்டு, சில நொடிகள் கண்களை மூடியிருந்தான்.

அப்போது... டிங்! என்ற ஒலியெழுப்பி திரை ஒளிர்ந்தது.
தியானா... அந்த ஒரு பெயரைப் பார்த்ததும் சில நிமிடங்களுக்கு முன்பு இருந்த மனநிலை முழுவதும் மாறிப்போனது. எல்லாவற்றையும் மறந்துப்போனான்.

"பிரணவ்..." என்ற ஒரு வார்த்தை மட்டுமே அவளிடமிருந்து வந்திருந்தது.

அதற்கே அவன் முகத்தில் புன்னகை மலர்ந்தது. உடனே அவசரமாய் பதில் தட்டச்சு செய்தான்.

"சாரி தியானா... டிரைவர் இருக்கவும் பேச முடியலை. நான் உங்ககிட்ட நிறைய பேச நினைச்சேன். முடியலை. கதை செமையா இருந்தது." என்று அனுப்பினான்.‌
சில நொடிகளில் மறுப்புறம் இருந்தும் பதில் வந்தது.

"கதை படிச்சீங்களா? என்ன கதை? நேத்து நான் அனுப்பியதா? எப்போ படிச்சீங்க?" என்று பதில் அனுப்பியிருக்க அதை வாசித்து பிரணவ் சிரித்தான்.

"வாசிச்சேன். கதைக்கு கீழே கமெண்ட்ஸ் கூட போட்டேனே. அனானிமஸா போயிடுச்சு. அக்ரிமெண்ட் மேரேஜ் கதை... நீங்க கூட ரிப்ளை பண்ணியிருந்தீங்க." என்று அனுப்ப, அந்த மெசேஜை படித்த தியானா சில நொடிகள் அப்படியே நின்றாள்.

'ஓ... அந்தக் கதையா?'
அவள் தலையில் கை வைத்துக் கொண்டாள். கூடுதலாக 'அப்பாடா!' என்று உள்ளுக்குள் நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

அதற்குள் அடுத்த மெசேஜ்.
"உங்க பெயரை காட்டலையே?" என்றாள்.

"சொன்னேனே... அனானிமஸ் கமெண்ட்ஸா போயிடுச்சு. நேத்து நைட் அனுப்பினேன். நீங்க கூட 'பேபி... லவ் யூ'ன்னு போட்டிருந்தீங்க." அதைப் படித்ததும் தியானா உதட்டை கடித்து நெற்றியில் கை வைத்தாள்.

"சாரி சாரி... எல்லார்கிட்டயும் பேபி, பட்டூஸ், தங்கம், மச்சி, லவ் யூ கைஸ் இப்படியே ரிப்ளை பண்ணிப் பழகிட்டேன். அதான் அப்படி. தப்பா எடுத்துக்காதீங்க. அங்க கதை எழுதுறவங்களுக்கு வாசகர்களோட அப்படித்தான் கனெக்ட் ஆகணும்னு சொல்வாங்க." என்று அவசரமாய் அனுப்பினாள்.

பிரணவ் அதற்கு ஏமாற்றத்துடன் பதில் அனுப்பினான்.

"புரியுது." அதன்பிறகு தியானா மேலும் விளக்கினாள்.

"முதல்ல நானும் அப்படி செல்லம் கொஞ்சிப் பேச மாட்டேன்னு சொன்னேன். ஆனா நான் புனைப்பெயர்ல எழுதுறதால பயப்பட வேண்டாம். வாசகர்களோட நெருக்கமா பேசினா அவங்க நம்ம கதையைத் தேடி தேடிப் படிப்பாங்கன்னு அந்த மேடம் சொல்லுவாங்க. அதனால கொஞ்சம் கொஞ்சமா பழகிடுச்சு." பிரணவ் அந்த மெசேஜை அமைதியாகப் படித்தான்.

அவனுக்குள் இருந்த கொஞ்ச நஞ்ச எதிர்பார்ப்பும்  அடங்கியது. ஆனால் அவளைப் பற்றிய ஆர்வம் மட்டும் குறையவில்லை.
"ஓகே... ஓகே. கதை செம. நைட் தூங்கவே இல்லை தெரியுமா?"
என்று அனுப்பினான்.

தியானா உடனே பதில் கொடுத்தாள். "அட... எல்லாரும் அதைத்தான் சொல்வாங்க. கதை படிக்கிறவங்க ஆர்வமே அப்படித்தான். ட்விஸ்ட் அண்ட் டர்ன் இருந்தாலோ, ரொமான்ஸா எழுதினாலோ, கதையை முடிச்சுட்டுத்தான் வேற வேலையைப் பார்ப்பாங்க." அதை அனுப்பியதும், தியானாவை வெளியிலிருந்து குரல் அழைத்தது.

"தியானா..." என்றார் அவரது அன்னை பாத்திமா.

"என்ன உம்மா?" என்று குரல் தந்தாள்.

"அடுப்புல சாயா வச்சிருக்கேன்ல பாரு. போனை வச்சிட்டு வீட்டைக் கூட்டும்மா." என்றார்.

"இதோ உம்மா... பெருக்கறேன்."
என்று சொல்லிவிட்டு அவசரமாக கைபேசியை வைத்தாள்.

"ஹோட்டல்ல இருந்து ஒரு சாவி கேட்டாங்க. அதைப் பத்தி சொல்லிட்டு இருந்தேன். ரூம் சாவி மாறியிருந்தா என்னை தானே உம்மா கேப்பாங்க." என்றாள். தான் பேசுவதற்கு உம்மா ஏதாவது தவறாக எடுத்து போனை பறித்துவிட்டாள். அழகான பொய்யை அலங்கரித்தாள்.

"யா அல்லாஹ்... காலையில இருந்து முட்டி வலி தியானா. பெருக்கிட்டு சொல்லு. கொஞ்ச நேரம் படுத்து பார்க்கணும்." என்று வலியோடு போராடி படுத்தார்.

"சரிம்மா." என்று சொல்லிவிட்டு தியானா உடனே வீட்டைச் சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்.

அவளுடைய கை வேகமாக வேலை செய்தாலும், மனம் மட்டும் இன்னும் கைபேசியிலேயே இருந்தது.

சில நேரம் கழித்து மீண்டும் கைபேசியை எடுத்தபோது, பிரணவிடமிருந்து மெசேஜ்.

"ரொமான்ஸ் கதைன்னா... நீங்க இப்ப எழுதியிருந்தது போலவா?" அதற்குப் பிறகு வந்த அடுத்த வரியைப் பார்த்ததும் தியானா கண்களைப் பெரிதாக்கினாள்.

"ஆமா... ரொமான்ஸ் கதைக்கு எப்படி மத்தது? அனுபவம் இல்லாம காதல், முத்தம், கணவன் மனைவி சீன் எல்லாமா எழுதுறீங்க?" அவளிடமிருந்து பதில் வராததால் பிரணவ் பதற்றமடைந்திருக்க வேண்டும்.

"அடச்சே..." என்று நெற்றியைப் பிடித்தான்.
'தப்பா கேட்டுட்டேனா?'
'போச்சு... தப்பாத்தான் கேட்டுட்டேன் போல.' என்று மனதுக்குள் புலம்பினான்.

அதற்குள் தியானா வீட்டில் வேலையை முடித்துக் கொண்டிருந்தது அவனுக்கு தெரியாதே.

தியானாவோ தங்கச்சி சஹ்ராவுக்கு நொறுக்குத்தீனி எடுத்துக் கொடுத்தாள். பாலை காய்ச்சி ஊற்றிக் கொடுத்தாள். பாத்திரங்களை விளக்கி வைத்தாள். வீட்டைச் சுத்தம் செய்தாள். கூடவே பதில் செய்தி எப்படி அனுப்ப என்று சிந்தித்தாள்.

கதவைச் சரியாகப் பூட்டிவிட்டு மீண்டும் கைபேசியை எடுத்தபோது, திரையில் பிரணவிடமிருந்து தொடர்ந்து வந்திருந்த மெசேஜ்களைப் பார்த்ததும் அவளுக்குச் சிரிப்பு வந்தது.

"சாரி சாரி... தப்பா கேட்டுட்டேனா?"

"தியானா பேசுங்க."

"தியானா..."

"தியா... ஏதாவது திட்டறதா இருந்தா திட்டு."

"தப்பா எடுத்துக்காதீங்க."

"பேசு தியா..." அவள் சிரித்தபடி தலையசைத்தாள்.

'என்ன ஒரு பயந்தாங்கொள்ளி...' என்று நினைத்தவள், மெசேஜ் அனுப்பாமல் நேராக அவனுடைய எண்ணுக்கு அழைப்பை தொடுத்தாள்.

பிரணவின் கைபேசி ஒலித்ததும் அவன் திடுக்கிட்டு அதை எடுத்தான்.

தியானா Calling... "அய்யோ.. போன் பண்ணி திட்டப்போறாளா." என்று மனதுக்குள் சொன்னவன் உடனே அழைப்பை ஏற்றான்.

"ஹலோ..."
"ஹலோ பிரணவ்."
"சாரி தியானா... நான் தப்பா பேசலை. கதை, கவிதை எல்லாம் எப்படி எழுதுறீங்கன்னு தெரிஞ்சிக்கற கியூரியாசிட்டியில கேட்டேன்." என்றதும் தியானா சிரித்தாள்.

"ஹலோ... கூல். அதெல்லாம் சினிமால பார்த்ததும், புக்ஸ்ல படிச்சதையும் வச்சும், கொஞ்சம் கற்பனையிலயும் எழுதுறது. காதல் அனுபவமெல்லாம் எனக்கு சுத்தமா இல்லை. தமிழில் அகநானூறு சொல்லாத காதல் கதையா? இல்லை கணவன் மனைவி ஊடலா கூடலா" என்றதும் தான் பிரணவின் முகத்தில் மீண்டும் புன்னகை.

"அப்படியா?"

"ம்ம்ம். அதையும் தாண்டி சில இடங்களை நான் எழுதித் தந்துடுவேன்.

என்னோட சைட் அட்மின் மேடம் இருக்காங்க. அவங்க சில நேரம் ரொமான்ஸ், லவ் சீன்ஸ் எல்லாம் எடிட்டிங்கில் சேர்ப்பாங்க. அதுக்குன்னு ஒரு குழுவே இருக்கு. அவங்க ரொமான்ஸ் டிபார்ட்மெண்ட். மத்தபடி கதை என்னோடது. நீங்க சொன்ன அதீத ரொமான்ஸ் அவங்க எழுதுவாங்க. சிலர் மட்டும் அதையும் அவங்களே எழுதுவாங்க." என்றாள்.

"ஓ.. கோபமில்லையே?" என்றான்.

"இல்லை." சிறிது அமைதிக்குப் பிறகு தியானா சிரித்தபடி,
"நீங்க நேத்து நைட் முழுக்க வாசிச்சதே பெரிய விஷயம். ஆமா... அதனாலதான் காலையில லேட்டா வந்தீங்களா? மேனேஜர் ஸ்டாஃப்ஸ் ஆக்டிவிட்டீஸ்ல உங்க நேம்ல லேட் கம்மர்னு போட்டிருந்தார்." என்றதும் பிரணவ் முகம் சுளித்தான்.

"ஆமா... இன்னிக்கு லேட். குளிச்சிட்டு கிளம்பவும் கூடுதலா நேரமாச்சு. சூர்யா என்னை எழுப்பாம ஓடிட்டான். அவனையும் திட்டக்கூடாது. அவன் நான் எப்பவும் போல எழுப்புவேன்னு இருந்திருக்கான். கடைசில நேரமாகவும் அவன் குளிக்காம கொள்ளாம ஓடிட்டான்.
ஆனா எனக்கு சமையல் செய்யுற இடம் சுத்தமா இருக்கணும். அதுக்காக குளிச்சு, ரெடியாயிட்டு தான் கிளம்பினேன். சமையல் செய்யறப்ப க்ளினா தான் செய்வேன்.
இன்னிக்கு லேட் கம்மர்னு பிளாக் மார்க் போட்டுட்டாங்க. அதான் கவலையா இருக்கு." என்று கவலைக்கொண்டான்.

தியானா சிரித்தாள். "சாரிப்பா... இனிமேல் நேரத்துக்கு எழுந்துக்கோங்க. ஒரு நாவல் படிக்கறதுக்காக வேலைக்கு லேட் ஆகக்கூடாது." என்றாள்.‌

"சரிங்க மேடம்." என்றான்.

"எஸ் வேலை முக்கியம் பிரணவ்." அவள் சாதாரணமாகச் சொன்ன அந்த வார்த்தை அவனுக்குள் ஏதோ ஒரு விதமாகப் பதிந்தது.

"சரி..." என்றான் அமைதியாக.

அப்போது வெளியிலிருந்து சஹ்ராவின் குரல் கேட்டது.
"தியானா அக்கா..." என்று அழைக்க,
"என்னடி?" என்றாள். நிம்மதியா ஒரு போன் பேச விடமாட்டா.' என்று முனங்க பிரணவ் மென்னகைத்தான்.

"வாப்பா வந்துட்டார். நீ என்ன பண்ணற? ரூமை லாக் பண்ணிட்டு இருக்கியா? கால் பண்ணினா பிசின்னு வருதாம்!" என்றதும் நாக்கை கடித்து
தியானாவின் முகம் உடனே மாறியது.

"ஆங்... பிரணவ்!"
"ம்ம்ம்"
"வாப்பா வந்துட்டார். நான் அப்புறம் பேசறேன். அவருக்குத் தெரிஞ்சா மாட்டிப்பேன். பை!" என்று அவசரமாக அழைப்பைத் துண்டித்தாள்.

பிரணவ் சிரித்தபடி கைபேசியைப் பார்த்தான்.
'மாட்டிப்பேன்னு சொல்றா... அப்ப என்னோட பேசறது அவருக்கு தெரியாது. தெரிந்தா என்ன? மேபீ... தியானா என்னை நேசிப்பதா இருந்தா இப்படி தானே மெயின்டெயின் பண்ணுவா?' என்று தனக்குள் முணுமுணுத்தான்.

அங்கே தியானா ஏற்கனவே பிரணவின் எண்ணை ஒரு பெண் பெயரில் சேமித்து வைத்திருந்தாள். அதனால் அவசரமாக கதவைத் திறந்து வெளியே வந்தாள்.

"வாப்பா..." நஸீர் அவளைப் பார்த்தார்.
"என்ன தியானா? உம்மாவுக்கு என்னாச்சு? மேலுக்கு முடியலையா?" என்று கேட்டார்.

"முட்டி வலின்னு சொன்னாங்க வாப்பா." என்று பயந்தாள். ஏன் அழைப்பை எடுக்கவில்லை. ஏன் கதவை தாழிட்டாய் என்று கேட்டால் அவ்வளவு தான். அதிலும் போனை வாங்கி பார்த்தால் போச்சு' என்று பயந்திட "ம்ம்ம்... இவளுக்கு வேற இந்தத் தலைவலி, முட்டிவலி வேற அடிக்கடி வந்துடுது." என்று சலித்துக்கொண்டே அறைக்குள் சென்றார்.

தியானா ஆழமாக மூச்சை விட்டாள்.
'அல்ஹம்துலில்லாஹ்...' என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்.

வாப்பாவிடம் எதுவும் தெரியாமல் தப்பித்த நிம்மதி.
சிறிது நேரத்தில் அவருக்காக எடுத்து வைத்திருந்த சிற்றுண்டியை சஹ்ராவிடம் கொடுத்து, "வாப்பாகிட்ட கொடு." என்று அனுப்பிவிட்டு, இரவு சமையலுக்குத் தேவையான பொருட்களை எடுத்தாள்.

அன்று இரவு வீட்டில் சமைக்க தியானா முடிவு செய்தாள். அன்னைக்கு வேறு மூட்டுவலி என்பதால், சப்பாத்தியும் குருமாவும் செய்தாள்.
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை போட்டு தாளித்தாள்.
அதன் வாசனை சமையலறை முழுவதும் பரவியது.
நறுக்கிய பெரிய வெங்காயத்தைப் போட்டு வதக்கினாள்.
பிறகு இஞ்சி-பூண்டு விழுது.
பச்சை மிளகாய், தக்காளி, புதினா, கொத்தமல்லி.
ஒவ்வொன்றாகச் சேர்க்கச் சேர்க்க, சமையலறை முழுவதும் மணம் பரவியது.
தியானா குருமாவுக்கு தேவையான மசாலாவோடு நன்றாக சமைத்தாள்.

அருகில் வைத்திருந்த வெங்காயம், பூண்டு, இஞ்சி, புதினா என்று எல்லாம் சமையல் மேடையின் மேல் பரவிக் கிடந்தது.
அதைப் பார்த்தபோது திடீரென்று பிரணவின் குரல் நினைவுக்கு வந்தது.

'எனக்கு சமைக்கற இடம் சுத்தமா இருக்கணும்.'
தியானா ஒரு நொடி அப்படியே நின்றாள். பிறகு தன்னாலேயே சிரித்தாள்.

"என்ன ஒரு சுத்தம்" என்று மெதுவாக முணுமுணுத்தாள்.
அந்த நேரம் கதவு ஓரத்திலிருந்து சஹ்ரா எட்டிப் பார்த்தாள்.

"என்ன அக்கா... தனியா சிரிக்கிற?" தியானா உடனே முகத்தை மாற்றிக்கொண்டாள்.

"ஒ..ஓன்னுமில்லை."
"யார்கிட்ட போன்ல பேசின?" என்றாள்.

"யாருமில்லை."
"அப்புறம் ஏன் சிரிச்ச?" என்று தங்கை விடாமல் கேட்டதும்,
"சமையல் நல்லா வருது. அதான். சந்தோஷத்துல சிரிச்சேன் சஹ்ரா" என்று சமாளித்தாள்.

சஹ்ரா சந்தேகமாக அவளைப் பார்த்தாள்.
"ம்ம்ம்ம்..." என்று இழுத்தவள், அடுத்த நொடி சமையலறைக்குள் வந்து ஒரு பாத்திரத்தை எடுத்தாள்.

"நான் உதவி பண்றேன்." என்றவளிடம் "நீ போய் படி. உனக்கு நாளைக்கு ப்ராஜெக்ட் இல்லையா?" என்று மறுத்தாள் தியானா.

"அக்கா..."
"போ சஹ்ரா."
"சரி..." என்று சென்றுவிட்டாள்.
தியானா மீண்டும் அடுப்பை நோக்கித் திரும்பினாள்.

ஆனால் இப்போது அவளுடைய மனம் முழுவதும் சமையலில் இல்லை. பிரணவின் குரல் மட்டும் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்தது.

"வேலை முக்கியம் பிரணவ்."
என்று தான் சொன்ன வார்த்தையை நினைத்தவளுக்கு மீண்டும் சிரிப்பு வந்தது.
'நானே இப்ப என்ன பண்ணிட்டு இருக்கேன்?'என்று தன்னையே கேட்டுக்கொண்டாள்.
அவள் மெதுவாகத் தலையசைத்தாள். தன் மனமும் செயலும் தன் கட்டுப்பாட்டில் இல்லை என்றதை தியானா அப்பொழுதே உணர்ந்தாள்.‌

"யா அல்லாஹ்..." என்று முணுமுணுத்தவள், பாத்திரத்தில் கொதித்துக் கொண்டிருந்த குருமாவை மெதுவாகக் இறக்கினாள்.

பாத்திரத்தை மூடி வைத்துவிட்டு சப்பாத்தியை உருட்டியபடி, தன் எண்ணம் செல்வது சரி தானா? தனக்கு பிரணவை பிடித்திருக்கின்றதா? நான் அவனை காதலிக்கின்றேனா? என்று எண்ணியதும், அப்படியே சிலையாக மாறினாள்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.


 
Posted : August 27, 2026 11:19 am
(@crvs2797)
Posts: 188
Estimable Member
 

மொஹபத் முதல், நிக்காஹ் வரை!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 10)

அடிப்பாவி..! என்ன தான் புனைப் பெயர்ல கதை எழுதினாலும், வாசகர்களுக்கு வேணுமின்னா உன்னைத் தெரியாமல் இருக்கலாம், ஆனா உனக்குத் தெரியும் தானே நீ தான் அந்த எழுத்தாளர்ன்னு, அப்புறம் எதுக்கு பொத்தாம் பொதுவா எல்லாருக்கும் ஐ லவ் யூ பேபி'ன்னு மெஸேஜ் போடணும். வர, வர, எதுக்கு, யாருக்கு, என்னத்துக்கு
ஐ லவ் யூ போடணும்ங்கிற விவஸ்தையே இல்லாமப் போயிடுச்சு போங்க. இதெல்லாம் டூ மச்சா தெரியலையா..?

ஆனால், இந்த தியானா இப்படி வீட்டுக்குத் தெரியாமல், இப்படி பண்றதெல்லாம் சரி தானா ?
அதுவும் அத்தனை கட்டுப்பாடுகள் நிறைந்த குடும்பத்துல இருந்துக்கிட்டு,..? இவ கதை எழுதுறது கூட வீட்டுக்குத் தெரியாது போலவே..? அதெப்படி சட்டுன்னு பிரணவ்க்கு தூக்கி கொடுத்து கதையை படிக்கச் சொல்றாள்...? ஒருவேளை, அதிகமான கட்டுப்பாடுகளே இப்படி கட்டுத்தறியை மீறிக்கிட்டு போகச் சொல்லுதோ...?

ம்.... இந்த காதல் ஏதோ பெரிய வில்லங்கத்துல போய் முடியும் போலயிருக்கே

😴😴😴
CRVS (or) CRVS2797


 
Posted : August 27, 2026 1:19 pm
(@guna-sundari)
Posts: 138
Estimable Member
 

Hindu Muslim live story starts. Very intresting sis.


 
Posted : August 27, 2026 6:56 pm

Scroll to Top