Forum

மொஹபத் முதல் நிக்கா...
 
Notifications
Clear all

மொஹபத் முதல் நிக்காஹ் வரை-9

3 Posts
3 Users
0 Reactions
28 Views
(@praveena-thangaraj)
Posts: 265
Member Admin
Topic starter
 
[#334]

அத்தியாயம்-9

சூர்யாவோடு பேசி முடித்த பிறகு, பிரணவ் மீண்டும் கைபேசியை எடுத்தான்.

தியானா அனுப்பியிருந்த அந்த நாவல் பக்கத்தை இன்னொரு முறை பார்த்தான்.

'ஒரு அத்தியாயம் மட்டும் படிச்சுட்டு தூங்கிடலாம்.' என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டவன், அடுத்த நொடியே கதைக்குள் மூழ்கிப் போனான்.

பன்னிரண்டாம் வகுப்பு மாணவன், மறுநாள் பொதுத்தேர்வு எழுதப் போகிறவன் போல புத்தகத்தைப் மனப்பாடம் செய்வது போல படித்தான்.

ஒரு அத்தியாயம் முடிந்ததும் அடுத்தது. அடுத்தது முடிந்ததும் அதற்கடுத்தது. நேரம் எப்படிப் போனது என்பதே அவனுக்குத் தெரியவில்லை.

கதையின் நாயகன் ஒரு வசதியான குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன். நாயகியோ வாழ்க்கையில் பல கஷ்டங்களைச் சந்தித்த ஏழைப் பெண். ஒரு வருடம் மட்டுமே சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஒப்பந்தத் திருமணம் அவர்களுக்குள் நடக்கிறது. அந்த ஒரு வருடத்தில் பணத்திற்காக திருமணத்தை ஏற்றுக்கொண்ட நாயகி, நாயகனிடம் இருந்து அவமானத்தையும் அலட்சியத்தையும் எதிர்கொள்கிறாள்.

அந்த ஒப்பந்தம் முடிந்து அவள் அவனை விட்டு விலகிச் சென்ற பிறகுதான், அவள் கர்ப்பமாக இருப்பது தெரியவருகிறது.

குழந்தையைப் பற்றி நாயகனுக்குத் தெரியாமல், தனியாகப் பெற்றெடுத்து வளர்க்கிறாள்.

பல வருடங்களுக்குப் பிறகு விதி அவர்களை மீண்டும் சந்திக்க வைக்கிறது. அவள் மீண்டும் அவனுக்குக் கீழ் வேலைக்கு வருகிறாள்.

குழந்தையுடன் பழகத் தொடங்கும் நாயகன், அந்தக் குழந்தை தன்னுடையது என்பதை அறியாமல் அவனுக்குள் ஒரு பாசம் உருவாகிறது.

பிறகு உண்மை தெரியவருகிறது. அதற்குப் பிறகு பழைய காயங்கள், தவறான புரிதல்கள், கோபம், குற்ற உணர்வு என்று இருவருடைய வாழ்க்கையும் மீண்டும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைகிறது.

கடைசியில்... ஒருவரை ஒருவர் உண்மையாகப் புரிந்துகொண்டு, காதலை ஏற்றுக்கொண்டு, குழந்தையுடன் சேர்ந்து புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள்.

'சுபம்.'  தியாநாவல்ஸ் என்று கடைசி வரியைப் படித்ததும் பிரணவ் சில நொடிகள் திரையைப் பார்த்துக்கொண்டே இருந்தான்.

கதை முடிந்துவிட்டது. ஆனால் அவனுக்குள் ஏதோ ஒன்று இன்னும் முடியாமல் இருந்தது

தியானாவின் எழுத்து அவனை எதிர்பார்த்ததைவிட அதிகமாக ஈர்த்திருந்தது.

'இவளுக்குள்ள இவ்வளவு கதை இருக்கா?' என்று நினைத்தவன், மீண்டும் ஆரம்பத்திலிருந்து சில முக்கியமான பகுதிகளைத் திரும்பிப் பார்த்தான்.

கதாபாத்திரங்களின் மனநிலையை அவள் எழுதிய விதம் அவனுக்குப் பிடித்திருந்தது. குறிப்பாக நாயகி எவ்வளவு கஷ்டப்பட்டாலும், தன்னுடைய மரியாதையை விட்டுக் கொடுக்காமல் வாழ முயல்வது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.

அவன் கைபேசியைப் பார்த்தான்.

3:27 AM. 'அடச்சே..' என்று மெதுவாக முணுமுணுத்தான்.

இவ்வளவு நேரமாகப் படித்திருக்கிறோம் என்பதே அப்போதுதான் அவனுக்குப் புரிந்தது.

தியானாவுக்கு உடனே ஒரு மெசேஜ் அனுப்ப வேண்டும் போல இருந்தது.

‘நாவல் ரொம்ப நல்லா இருக்கு.' என்று எழுதினான். அதைப் பார்த்ததும் அழித்தான். மீண்டும் எழுதினான். 'இரவெல்லாம் கதை படிச்சேன். சூப்பர் தியானா' என்று எழுதி அதையும் அழித்தான்.

இப்போது நேரத்தைப் பார்த்தான். 'இந்த நேரத்துல அனுப்பினா அவ வீட்டுல மாட்டிக்கிட்டா? அவளுக்கே பிரச்சனை ஆயிடுமே.' என்று நினைத்தவன், நேரடியாக மெசேஜ் அனுப்பாமல், கதையின் கமெண்ட்ஸ் பகுதியில் தன்னுடைய கருத்தை பதிவு செய்ய முடிவு செய்தான். 

அவன் விரல்களில் வார்த்தைகள் வேகமாக வந்தன.

ஒரு வாசகராக அவளைப் பாராட்டும் விதமாக நீண்ட விமர்சனத்தை எழுதியவன், இறுதியில் அந்த நாவலைப் பற்றி மனதாரப் பாராட்டி முடித்தான்.

அனுப்பிவிட்டு கைபேசியை அருகில் வைத்தான். 'தியா இதைப் படிச்சா சந்தோஷப்படுவாளா?' என்ற எண்ணத்தோடு கண்களை மூடியவன், அடுத்த சில நொடிகளிலேயே உறங்கிப் போனான்.

காலை வழக்கம்போல எழுந்து கிளம்ப வேண்டிய நேரம்.

ஆனால் அந்த நாள் பிரணவின் கண்கள் திறக்கவே இல்லை. சூர்யாவும் பிரணவே எழவில்லை என்று அவனுமே உறங்கினான். நேரம் கடந்த பிறகு அவன் எழுந்து கைபேசியைப் பார்த்ததும் கண்கள் பெரிதானது.

"டேய் பிரணவ்!" என்று அவனை உலுக்கினான்.

"ம்ம்ம்ம... சொல்லு சூர்யா" என்றான் உறக்கத்தில்.

"எழுந்திருடா!" என்று பதற்றமானான்.

"தூக்கம் வருது சூர்யா..." என்று புலம்பினான் பிரணவ்.

"தூக்கம் வருதா? மணி பாரு!" பிரணவ் சோம்பலாகக் கண்களைத் திறந்து நேரத்தைப் பார்த்தான்.

அடுத்த நொடியே படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தான் பிரணவ்..

"அய்யய்யோ! இன்னும் பத்து நிமிஷத்துல கிளம்பலேன்னா நம்மளோட கதை முடிஞ்சிடும். ஹோட்டலுக்கு லேட்டாகிடும்." என்று புலம்பினான்.

"நைட்டெல்லாம் கதை படிச்சேன்.' அதுக்கு இப்படியா ஆகணும்" என்று முனங்க, "என்னடா முனங்கற?" என்று சூர்யா கேட்க, 

"ஒன்னுமில்லை! நீயாவது என்னை எழுப்பியிருக்கலாமே!" என்று பிரணவ் கேட்டான். 

"நான் எழுப்பினா நீ எழுந்திருப்பியா? அதோட நானுமே கொஞ்ச நேரம் முன்ன தான் எழுந்தேன்." என்று போர்வையை மடித்து வைத்தனர். 

பிரணவ் அவசரமாக எழுந்தான். இருவரும் பல் துலக்கிக் கொண்டே பேசினர்.

சூர்யா சட்டையை எடுத்துப் போட்டுக்கொண்டான்.

பிரணவ் குளியலறைக்குள் ஓடினான். ''டேய், குளிக்க போறியா?" என்று சூர்யா கேட்டான்.

"ஆமா."

"இப்போவா? டைம் இல்லடா!" என்று பெர்ப்யூமை அடித்து சூர்யா கிளம்பினான்.

"குளிக்காம நான் கிளம்ப மாட்டேன்." என்றான் பிரணவ். 

"ஏசி ஹோட்டல். யாருக்கும் தெரியாது. பெர்ஃப்யூம் அடிச்சா போதும்!" என்று சூர்யா கூறுவதை கேட்கவில்லை.

"நீ போ. நான் வந்துடறேன்" என்று சொல்லிவிட்டு பிரணவ் குளிக்க ஓடினான். அவனுக்கு சமைக்கும்முன் குளித்து இருக்க வேண்டும். 

அவசரமாகத் தயாராகி கீழே வந்தபோது, நேரம் ஏற்கனவே கடந்துவிட்டது.

ஹோட்டல் சென்றடைந்ததும், கிச்சன் வாசலில் நின்றிருந்த செஃப் கடிகாரத்தைப் பார்த்தார்.

அவருடைய முகத்தில் இருந்த அதிருப்தி பிரணவுக்குப் புரிந்தது.

"லேட்."  ஒரே வார்த்தை.

"சாரி செஃப்." என்று தலைகுனிந்தான் பிரணவ்.

அதற்குமேல் எதுவும் பேசாமல் செஃப் திரும்பிச் சென்றார்.

ஆனால் அந்த ஒரு பார்வையே பிரணவின் மனதில் நாள் முழுவதும் இருந்தது.

'நேத்து வேலையைப் பற்றி அவ்வளவு சொல்லிட்டு... இன்னைக்கு நானே லேட்.' என்று நினைத்தவன் தன்னைத்தானே கடிந்துகொண்டான்.

அன்று முழுவதும் அவனுடைய கைப்பக்குவத்தில் எந்தத் தவறும் இல்லை. காய்கறி நறுக்குவது முதல் சாஸ் தயாரிப்பது வரை, அலங்கரித்து தட்டில் வைப்பது என்று ஒவ்வொன்றையும் கவனமாகச் செய்தான்.

பிளேட்டிங் செய்யும்போது கூட இரண்டு முறை சரிபார்த்தான்.

அவனுக்குள் இருந்த பதட்டம் சமையலில் மட்டும் வெளிப்படவில்லை.

இடையிடையே கைபேசியை எடுத்துப் பார்த்தான்.

‘தியா என் கமெண்ட்டைப் பார்த்திருப்பாளா?’

'ஏதாவது பதில் போட்டிருப்பாளா?’ என்ற எண்ணம். ஒரு சிறிய இடைவெளி கிடைத்ததும் கைபேசியைத் திறந்தான்.

அவனுடைய கமெண்ட்டுக்கு பதில் வந்திருந்தது.

“தேங்க்யூ நட்பே... நைட் கண் விழித்து வாசித்ததா சொன்னிங்க. லவ் யூ பேபி... என் கதை உங்களுக்கு பிடிச்சது ரொம்ப சந்தோஷம் பேபி.” பிரணவின் கண்கள் அந்த வரிகளிலேயே நின்றுவிட்டன.

லவ் யூ பேபி. அந்த இரண்டு வார்த்தைகள்தான் அவன் மனதைத் தூக்கிப் போட்டது.

‘நான் தான்னு தெரிஞ்சுதான் இப்படி சொன்னாளா? ஆனா நட்பேனு அனுப்பியிருக்கா. லவ் யூ பேபினும் அனுப்பிருக்காளே.' அவனுடைய இதயம் வேகமாகத் துடித்தது.

  செஃப் வந்து ரோந்து செல்வதை போல கவனிக்கவும் அவசரமாக போனை பேக்கெட்டில் வைத்தான். 

  பெரும்பாலும் போனை சமைக்குமிடத்தில் வைத்திருக்க கூடாது. 

   லாக்கரில் வைத்துவிட்டு தான் வரவேண்டும். பிரணவ் இன்று மறந்து போய் பேண்ட் பேக்கெட்டில் வைத்திருக்க பயந்தான். இடைவெளி வரும் பொழுது போனை லாக்கரில் வைத்துவிட வேண்டுமென 'லவ் யூ பேபி' என்ற வார்த்தைக்குள்ளே சிக்கிக் கொண்டிருந்தான். 

மதியம் போல சமையல் செய்வதிலிருந்து ஸ்டாப் பேட்ஜ் வரிசையில் இடைவெளி வரவும், அவனது பேட்ஜ் ஆட்களுக்கான நேரத்தில் அவசரமாக தன் லாக்கர் பக்கம் சென்றான். பேனை வைக்கும் முன் கைகள் தானாக அவளது கதைக்கு தான் எழுதிய கருத்து பகுதியில் உள்ள மற்றவருடையதை கவனிக்க நேரிட்டது. 

அவள் தனக்கு மட்டும் அவ்வாறு லவ் யூ பேபியை போடவில்லை. கதைக்கான கருத்து வந்ததில் பெரும்பாலும் லவ் யூ வார்த்தை இருந்தது. இதில் முத்த ஸ்மைலி கூட போட்டிருந்தாள். பிரணவிற்கு சிறு ஏமாற்றம் பிறந்தது. 'இல்ல... நான்னு தெரிந்து இவ பேசலை. இது எல்லா வாசகர்களுக்கும் அவள் அன்பா சொல்ற வார்த்தையா இருக்கே.' என்று அடுத்த நொடியே தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டான்.

ஆனால் மனம் கேட்டுக் கொள்ளவில்லை. மாலை நேரம் நெருங்க நெருங்க, அவனுக்குள் ஒரு எதிர்பார்ப்பு உருவாகத் தொடங்கியது. இன்று தியானாவை பார்க்க வேண்டும். அவள் முகத்தைப் பார்த்தாலே போதும். நேற்று இரவு அவளுடைய கதையைப் படித்ததை அவளிடம் சொல்ல வேண்டும். அவளை பாராட்ட வேண்டுமென்று நினைத்தான்.

பிரணவ்' என்ற குரலில் திடுக்கிட்டு தன் போனை லாக்கரில் வைத்துவிட்டு அவசரமாய் கையுறையும், தலைக்கு தலை முடி உணவில் கலக்காமல் இருக்க தலைக்கும் தலைக்கவசயுறை அணிந்துக் கொண்டான். 

  சமைக்கும் பொழுது தியானா நினைவை விரட்ட முடியவில்லை. ஏதோ அவளிடம் பேச கிடைத்த வாய்ப்பை விடப்பிடிக்காமல், அவளை இந்த நிமிடம் சந்திக்க வேண்டுமென்ற எண்ணம் உதித்தது. ஆனால் பிரணவ் அவ்வாறு வேலையை வகட்டு செல்ல இயலாதே. 

மாலை ஷிப்ட் முடிவதற்குள் பிரணவ் கடிகாரத்தைப் பலமுறை பார்த்துவிட்டான்.

இம்முறை அவன் வேலையை முடிப்பதில் எந்தத் தாமதமும் செய்யவில்லை.

சமையலறையைச் சுத்தப்படுத்தி, தன்னுடைய பொருட்களை எடுத்துக்கொண்டு வெளியே வந்தான்.

கிச்சன்ப்புறம் இருந்த வழியாக டாக்ஸி நிறுத்தத்தை நோக்கி நடந்தபோது, அவன் பார்வை தானாகவே அந்தப் பழக்கமான இடத்தைத் தேடியது.

அங்கே தியானா நின்றிருந்தாள்.

வழக்கம்போல ஹிஜாப் தலையைச் சுற்றி அழகாக அமைந்திருந்தது.

அவளுடைய முகத்தில் அமைதியான புன்னகை.

 ஆனால் அவனைப் பார்த்ததும் அந்தப் புன்னகை சற்று அதிகமாக மலர்ந்தது.

பிரணவின் நடை வேகம் குறைந்தது. 'தினம் தினம் அவளை பார்க்கறப்ப ஏதோ பண்ணுது. என்னவோ செய்யுது.  இப்பவும் படபடனு வருதே' என்றவாறு 'என் கமெண்ட்டைப் பார்த்ததாக ஏதாவது கேட்பாளோ? என்று அவனுக்குள் ஆயிரம் கேள்விகள்.

தியானாவும் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள். நேற்று இரவு முதல் அவள் மனதில் இருந்த அந்த ஒரே கேள்விக்கு இன்று பதில் கிடைத்தது போல இருந்தது.

அவள் கண்கள் அவனைத் தேடி நின்றிருந்ததை உணர்ந்ததும், உடனே பார்வையைத் தாழ்த்திக்கொண்டாள்.

பிரணவின் உதட்டில் மெதுவான புன்னகை. அவளருகே வந்து நின்றான்.

"ஹாய்..." தியானா மெதுவாகத் தலைநிமிர்ந்தாள்.

"ஹாய்..." அவ்வளவுதான். ஆனால் இருவருடைய மனதிலும் அந்த ஒரு வார்த்தை மட்டும் போதுமானதாக இருந்தது. நேற்று வரை பேசுவதற்கு நிறைய யோசித்து வைத்திருந்த இரண்டு பேரும்,. இன்று அந்த பார்வை பரகமாற்றத்தை தாண்டி, ஒருவருடைய மனதுக்குள் நுழைய முயன்றனர்.

"என்ன தம்பி டாக்ஸியா?" என்று டிரைவர் டாக்ஸியை முன்ன வைத்து கேட்டதும் தான் அவர் முன்பு முதல் முதலில் சந்தித்த நபரென்றே அறிந்தான். 

  இம்முறை, "தியானா..டாக்ஸில போகலாமா? தெரிந்த டிரைவர். முதல் முதலா இங்க வந்தப்ப பார்த்தவர்." என்று கேட்க தியானா தலையாட்டினாள். 

  "என்ன சார்.. வேலையெல்லாம் எப்படி போகுது." என்று டிரைவர் கேட்க, "ரொம்ப நல்லா போகுதுண்ணா. நீங்க எப்படியிருக்கிங்க. இந்த வழியா தான் வருவிங்களா?" என்று கேட்டான். 

  "ஆமா தம்பி. ரெகுலரா கேப் பேசியிருக்காங்க. அதான் இந்த ரூட்." என்றார். 

  "ஆங்... தியானா." என்று அவனே தடுமாறி ஆரம்பிக்கும் போது, டிரைவரோ "பேமிலி இங்க அழைச்சிப்பிங்களா தம்பி" என்று கேட்க "இல்லைங்கண்ணா அம்மாவுக்கு ஊரை தாண்டி வரப்பிடிக்காது." என்றவன் தியாவை பார்வையிட, அவளோ புது மனிதர் முன் பேசுவதற்கு தயங்கினாள். அதை பிரணவும் புரிந்துக் கொண்டான்.

டிரைவரும் பிரணவ் ஒரு முஸ்லீம் பெண்ணுடன் வருவதை கண்டு, அடிக்கடி மார்க்கமாய் தான் பார்த்தார். 

-தொடரும். 

-பிரவீணா தங்கராஜ்.

 


 
Posted : August 26, 2026 7:46 am
(@guna-sundari)
Posts: 138
Estimable Member
 

Wow super super. Chef manners and responsibilities narrated very well sis.very intresting sis.


 
Posted : August 26, 2026 11:16 am
(@crvs2797)
Posts: 188
Estimable Member
 

மொஹபத் முதல், நிக்காஹ் வரை!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 9)

அடப்பாவி...! ஒரேயொரு கதையை படிச்சு முடிச்சிட்டு, இப்படி ஓவர் பர்ஃபார்மன்ஸ் பண்றதோட ஒரேயடியா கவுந்தடிச்சு விழுந்திட்டானே...? இதுல 'ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருசம் காத்திருந்தேன்' என்கிற மாதிரி தியானா சொன்ன 'லவ் யூ பேபி'ங்கிற ஒரு வார்த்தையை பிடிச்சிட்டு இந்தளவுக்கு உருகிப்போக வேண்டாம்.
அவ இவனுக்கு மட்டும் சொல்லலைத்தானே...? இவன்
அவ கிட்ட அப்படி என்ன எதிர்பார்க்கிறான்..? அவ காதலை சொன்னாள் இவன் அக்சப்ட் பண்ணிடுவானோ ?

😴😴😴
CRVS (or) CRVS2797


 
Posted : August 26, 2026 1:33 pm

Scroll to Top