Forum

தகிக்கும் நிலவொன்று...
 
Notifications
Clear all

தகிக்கும் நிலவொன்று-48

9 Posts
9 Users
4 Reactions
207 Views
(@praveena-thangaraj)
Posts: 265
Member Admin
Topic starter
 
[#335]

அத்தியாயம்-48

மாலை நேரம் வீட்டின் முன் அடுத்தடுத்து சில கார்கள் வந்து நின்றன.

சத்ரியன் காரிலிருந்து இறங்கியதும், அவனுடன் வந்த ஆட்கள் பெரிய பெரிய பைகளையும் பெட்டிகளையும் ஒன்றன்பின் ஒன்றாக இறக்க ஆரம்பித்தனர்.

சில நிமிடங்களில் வீட்டின் ஹாலே ஒரு சிறிய பொம்மைக் கடை போல மாறியது.

பெரிய பலூன்கள், சாக்லேட் பாக்ஸ்கள், பல்வேறு வகையான விளையாட்டுப் பொருட்கள் என்று ராயன் தூரத்தில் நின்றபடியே அவற்றைப் பார்த்தான்.

அவனது சின்னஞ்சிறிய கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன.

"வாவ் டேடி." என்று வாயை திறந்து பார்த்தவன், உடனே ஓடிவந்து ஒரு பெரிய பலூனை தொட்டுப் பார்த்தான்.

"டேடி... இதெல்லாம் எங்களுக்கா?" என்றவனது முகத்தில் இருந்த சந்தோஷத்தை பார்த்த சத்ரியனின் உதட்டில் மெல்லிய சிரிப்பு தோன்றியது.

"உங்களுக்கு பிடிச்சதெல்லாம் எடுத்துக்க." அந்த ஒரு வார்த்தை போதும்.

ராயன் அங்கே இருந்த ஒவ்வொரு பொருளையும் ஆராய ஆரம்பித்தான்.

அதே நேரத்தில், தியாவுக்காக தனியாக கொண்டு வரப்பட்ட பொருட்கள் ஹாலின் இன்னொரு பக்கத்தில் அடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன.

ஒரு பெரிய கரடி பொம்மை. வெள்ளை நிற முயல் பொம்மை, மிக்கி மவுஸ், அவள் கார்ட்டூனில் அடிக்கடி பார்த்துக் கொண்டிருக்கும் சிறிய பொம்மைகள், சில பேசும் பொம்மைகள், சில இசை எழுப்பும் பொம்மைகள்.

அதோடு வண்ண வண்ணமான சாக்லேட்டுகளும். தியா அவற்றைப் பார்த்ததும் கண்கள் முழுவதும் சந்தோஷமாக மாறியது.

"டேடி!" என்று ஓடிவந்தாள். சத்ரியன் அவளை நோக்கித் திரும்பினான்.

"இந்த கார்ட்டூன் எல்லாம் என்னோட பேவரிட்!" அவள் ஒவ்வொன்றாக சுட்டிக் காட்டினாள்.

"இது... இதுவும்... இதுவும்..." அவளது உற்சாகத்தை பார்த்த சத்ரியன் எதுவும் பேசாமல் தலையசைத்தான். "தேங்க்யூ டேடி..." என்று சொல்லிவிட்டு அவன் கன்னத்தில் முத்தமிடுவதற்காக அருகில் வந்தாள்.

ஆனால் அவன் ஏற்கனவே திரும்பி அறையை நோக்கி நடந்துவிட்டான்.

தியாவின் முகத்தில் இருந்த சந்தோஷம் ஒரு நொடி மங்கியது. அவள் அவன் பின்னால் பார்த்துக் கொண்டிருந்தாள். அடுத்த நொடியே அந்த சின்ன கால்கள் மீண்டும் அவனை நோக்கி ஓடின.

சத்ரியன் அறைக்குள் சென்று கதவை முழுவதுமாக மூடுவதற்குள் தியா உள்ளே வந்துவிட்டாள்.

அவன் நாற்காலியில் அமர்ந்து தலையில் கை வைத்தபடி சில நொடிகள் கண்களை மூடியிருந்தான்.

அவனது விரல்கள் நெற்றியை அழுத்திக் கொண்டிருந்தன.

"டேடி..." தியாவின் குரல் மெதுவாக கேட்டது. சத்ரியன் கண்களைத் திறக்கவில்லை.

"என்ன?" அவள் அருகில் வந்து அவன் தலையை பார்த்தாள்.

"தலைவலிக்கா?" அவன் பதில் சொல்லவில்லை. தியா உடனே அவனை அணைத்துக் கொண்டாள்.

"அம்மாவுக்கும் அடிக்கடி தலைவலி பிடிக்கும்." சத்ரியனின் கண்கள் மெதுவாக திறந்தன. "அப்போ..." அவள் அவனது மார்பில் முகத்தை வைத்துக் கொண்டு சொன்னாள். "அம்மா அழுவாங்க. அப்போ கையில உங்க போட்டோ இருக்கும்." சத்ரியனின் உடல் ஒரு நொடி இறுகியது.

தியா தொடர்ந்து பேசினாள். "நான் அப்போ ஹக் பண்ணுவேன். கிஸ் தருவேன். அம்மா சிரிச்சிட்டே என் கன்னத்துல முத்தம் தருவாங்க." என்று சொல்லிவிட்டு அவள் சத்ரியனின் கன்னத்தில் மெதுவாக முத்தமிட்டாள்.

அந்த முத்தம் சத்ரியனை எதிர்பாராத விதமாக அமைதியாக்கியது. அவன் சில நொடிகள் அந்த குழந்தையை பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் இல்லாத நேரங்களில், ஷ்ரத்தா தன்னை நினைத்து அழுதிருக்கிறாள். அந்த நேரங்களில் இந்த குழந்தை அவளை அணைத்திருக்கின்றாள்.

அவளது கண்ணீரை துடைத்திருக்கின்றாள். அவளுக்கு ஆறுதலாக இருந்திருக்கின்றாள்.

இன்று அதே குழந்தை தன்னையும் அணைத்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கின்றாள். அந்த உணர்வு அவனுக்குள் எங்கோ சென்று குத்தியது.

ஆனால் அதை வெளியில் காட்ட அவனுக்கு பழக்கமில்லை. "ஓகே..." என்று மெதுவாக அவளை விலக்க முயன்றான்.

"ஓகே... ஓகே.. கீழே இறங்கு. என்னை விடு." என்று சொன்னபடி அவளை மெதுவாக தன்னிடமிருந்து பிரித்தான்.

தியா கீழே இறங்கினாள். ஆனால் அவளது முகத்தில் சோகமில்லை. சத்ரியன் கத்தாமல் பேசியதே அவளுக்கு போதுமானதாக இருந்தது.

அவள் சிரித்தாள். "டேடி..." என்று மீண்டும் அழைத்தாள். சத்ரியன் அவளை பார்த்தான்.

அறைக்குள் வேறு யாரும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டான்.

பிறகு மெதுவாக அவளை உற்றுப் பார்த்தான். முதல் முறையாக அந்த குழந்தையை அவன் கவனமாக பார்க்க ஆரம்பித்தான்.

அவளது கண்கள், அந்த சிறிய மூக்கு, உதடுகள், நெற்றியின் வடிவம், முடி ஒவ்வொன்றாக அவனது பார்வை நகர்ந்தது.

ஹரிணிக்கு இருந்தது சுருள் முடி. ஆனால்... தியாவின் முடி அப்படியில்லை. அவளது முகத்தில் கூட எங்கும் ஹரிணியின் சாயல் தெரியவில்லை. அவன் மெதுவாக எச்சிலை விழுங்கினான்.

மீண்டும் ஒருமுறை அவளது முகத்தை பார்த்தான்.

இல்லை. எங்கும் ஹரிணி சாயல் இல்லை. அந்த நிமிடத்தில்தான் அவனது மார்புக்குள் இருந்த இறுக்கம் சற்றே தளர்ந்தது.

அவன் அறியாமலேயே ஒரு பெருமூச்சை வெளியேற்றினான். தியா அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.

"டேடி..." அவன் பார்வை அவளை சந்தித்தது.

"நீ வெளியே போ. தம்பிக்கூட விளையாடு. டேடி... அப்புறம்..." என்று சொல்லிவிட்டு மீண்டும் கண்களை மூடினான்.

அந்த வார்த்தையை தன் வாயாலேயே 'டேடி' என்று சொல்லியதை உணர்ந்ததும் அவனுக்குள் ஏதோ ஒரு சங்கடம்.

"வெளியே போயேன்." என்று சற்று கடுமையாக சொன்னான்.

தியா சிரித்தாள். அவளுக்கு அவனது குரலில் இருந்த கடுமை புரியவில்லை. அவளுக்கு தெரிந்தது ஒன்றுதான். அவன் தன்னை முன்பு போல விரட்டவில்லை.
அதுவே அவளுக்கு போதுமானதாக இருந்தது.

"ஓகே டேடி." என்று சொல்லிவிட்டு கதவை நோக்கி ஓடினாள்.

கதவு மூடப்பட்டதும் சத்ரியன் மட்டும் தனியாக இருந்தான்.

சில நொடிகள் அவன் எதுவும் செய்யாமல் அப்படியே அமர்ந்திருந்தான்.

பிறகு தன் கன்னத்தை மெதுவாக தொட்டுப் பார்த்தான். அங்கே இன்னும் அந்த குழந்தையின் முத்தத்தின் வெப்பம் இருந்தது. அவன் கண்களை மூடினான். "டேடி..." அந்த ஒரு வார்த்தை மீண்டும் சத்ரியன் காதுக்குள் ஒலித்தது.

அவனது முகத்தில் வழக்கமான கடினம் திரும்பி வந்தாலும், இந்த முறை, அந்த கடினத்தின் அடியில், ஒரு சிறிய இடத்தில் மட்டும், பாசம் ஏற்கனவே வேர்விட ஆரம்பித்திருந்தது.

சத்ரியன் அறையிலிருந்து தியா திரும்பிய சில நிமிடங்களிலேயே, தீபா, நந்திதா, லட்சுமி மூவரும் கவனித்திருந்தனர்.

ஆனால் சில நிமிடங்களுக்குப் பிறகு தியா மட்டும் அமைதியாக வெளியே வந்து பொம்மைகளுடன் விளையாட ஆரம்பித்ததும், மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

அவர்களது முகத்தில் நிம்மதி இல்லை. பயம் மட்டும் இருந்தது. "மேம் வரட்டும்..." என்று லட்சுமி மெதுவாக சொன்னாள்.

"பாஸ் ஏதாவது சொல்லிட்டாரோ?" என்று நந்திதா சந்தேகமாக கேட்டாள்.

"தியா அழுதுகிட்டு வெளியே வந்திருந்தா நமக்கே தெரிஞ்சிருக்கும்..." என்றாள் தீபா.

ஆனால் தியா அழவில்லை. முகம் வாடவும் இல்லை. மாறாக அவள் புதிதாக வந்திருந்த பொம்மைகளை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

சில நேரம் கழித்து ஷ்ரத்தா மருத்துவமனையிலிருந்து திரும்பி வந்தாள். வழக்கம்போல மேலே செல்லும் முன் குழந்தைகளைப் பார்த்தாள்.

தியா புதிய பொம்மைகளுக்கு நடுவே அமர்ந்திருப்பதை பார்த்ததும் அவளது பார்வை ஒரு நொடி நின்றது.

"இவ்வளவு டாய்ஸ் எல்லாம் புதுசா இருக்கு?" என்று கேட்டாள்.

தீபா, நந்திதா, லட்சுமி மூவரும் ஒரே நேரத்தில் ஒருவரை ஒருவர் பார்த்தனர். "என்ன ஆச்சு?" என்று ஷ்ரத்தா புருவத்தை சுருக்கினாள்.

நந்திதா மெதுவாக, "மேம்... பாஸ் வந்ததும் தியா அவங்க ரூமுக்குப் போனாங்க. அதனால..." என்று பீடிகை போட, "என்ன?" என்று ஷ்ரத்தா உடனே கேட்டாள்.

"அவர் ஏதாவது சொல்லிட்டாரா... தியா அழுதுட்டு வருதா...ன்னு பயந்தோம்." ஷ்ரத்தா தியாவை பார்த்தாள்.

குழந்தையோ சந்தோஷமாக ஒரு பெரிய கரடி பொம்மையை கட்டிக்கொண்டு இருந்தாள்.

"அழுதாளா?" "இல்ல மேம்."

"சத்ரியன் கத்தினாரா?" என்று கேட்டாள்.

"இல்ல மேம்."

"அப்புறம் ஏன் பதட்டம்?" என்றாள்.

"உள்ள போயிட்டு வந்தா. அவர் திட்டினாரா இல்லையானு தெரியலை மேம்." சிறிது நேரம் அமைதியாக இருந்த ஷ்ரத்தா,

"சரி... நான் பார்த்துக்கறேன்." என்று சொல்லிவிட்டு மேலே சென்றாள்.

சத்ரியன் அப்போது குளித்து முடித்திருந்தான்.

வழக்கம்போல மருத்துவமனையிலிருந்து வந்ததும் குளித்து உடை மாற்றுவது ஷ்ரத்தாவின் பழக்கமும் கூட. அதனால் அவளும் குளித்து முடித்து அறைக்குள் வந்தபோது, சத்ரியன் அலமாரி அருகே நின்று சட்டையை மாற்றிக் கொண்டிருந்தான்.

ஷ்ரத்தா அவனை சில நொடிகள் பார்த்தாள்.

பிறகு இயல்பாக,

"சத்ரியா..."

"ம்ம்ம்?"

"தியாவை ஏதாவது சொன்னியா?" என்றாள். சத்ரியன் திரும்பிப் பார்த்தான்.

அவனது முகத்தில் எரிச்சலோ கோபமோ இல்லை.

"இல்ல. அவ உன் ரூமுக்குப் வந்ததா தீபா நந்திதா லட்சுமி சொன்னாங்க" என்றாள்.

"ஆமா வந்தா." என்றான். ஷ்ரத்தாவின் ஸ்டாப் கொக்கியை அவன் மாட்டி விட்டபடி அவளருகே நெருக்கமாய் நின்றான்.

"அப்போ?" சத்ரியன் அவள் சட்டையின் பட்டனை மாட்டிக்கொண்டே பெருமூச்சு விட்டான்.

"என்னத்த சொல்ல?" அவன் குரலில் இருந்த சலிப்பு ஷ்ரத்தாவுக்கு சிரிப்பை வரவழைத்தது. ''ஆசிரமத்துல இருந்த பல குழந்தைகள்ல ஒருத்தியா தான் அவ இன்னும் என் கண்ணுக்குத் தெரியுறா." சிறிது இடைவெளிக்குப் பிறகு,

"ஆனா..." அவன் வார்த்தையை தேடுவது போல நின்றான். "என்னை அடிக்கடி 'டேடி'ன்னு ஓட்டிக்கிட்டே இருக்கா." அந்த வார்த்தையை சொல்லும்போதே அவனது முகத்தில் ஒரு சிறிய சங்கடம் தோன்றியது.

"அதுவும்... இப்படி..." என்று சொல்லிவிட்டு தோள்களை சற்றே குலுக்கினான். அவனது செயலில் கோபம் இல்லை. வெறுப்பும் இல்லை.

மாறாக... என்ன செய்வதென்று தெரியாத ஒரு மனிதனின் தடுமாற்றம் மட்டுமே இருந்தது.

ஷ்ரத்தா அமைதியாக அவனை பார்த்தாள். அவள் எதிர்பார்த்தது வேறு.

தியாவை சத்ரியன் ஏதாவது கடுமையாக பேசியிருப்பான் என்று நினைத்திருந்தாள்.

ஆனால் அவன் அவளைப் பற்றி குறை சொன்னாலும். அவளை காயப்படுத்தவில்லை. அதுவே அவளுக்கு போதுமானதாக இருந்தது.

அப்போது சத்ரியன் திடீரென்று, "அந்த பொண்ணுக்கு..." என்று சொல்லிவிட்டு நின்றான்.

ஷ்ரத்தா அவனை பார்த்தாள். "அந்த பொண்ணு இல்லை. தியா..‌ நம்ம பொண்ணு" என்றாள்.

"சரி.. தியாவுக்கு அந்த ஃபேஸ் கட் இல்ல." அவனது குரலில் ஒரு விதமான நிம்மதி.

"தேங்க் காட்." என்று பெருமூச்சு விட்டான். ஷ்ரத்தாவின் முகத்தில் மெதுவாக ஒரு புன்னகை மலர்ந்தது.

அவன் ஏன் அந்த முகத்தை இவ்வளவு கவனமாக பார்த்தான் என்பதை அவள் புரிந்துகொண்டாள்.

ஹரிணியின் சாயலைத் தேடியிருக்கிறான். கிடைக்கவில்லை. அதனால் தான் அவன் நிம்மதி அடைந்திருக்கிறான்.

ஆனால்... அந்த தேடலுக்கிடையில் தியாவை அவன் முதன்முறையாக உண்மையான குழந்தையாகவும் பார்த்திருக்கிறான். அவளது கண்கள், அவளது சிரிப்பு, அவள் அழைக்கும் "டேடி" அவற்றில் எதுவுமே அவனை கோபப்படுத்தவில்லை.

மாறாக அவனுக்குள் ஏதோ ஒன்றை அசைத்திருக்கிறது. ஷ்ரத்தாவின் புன்னகை இன்னும் சற்றே விரிந்தது.

"என்ன?" என்று சத்ரியன் அவளை பார்த்தான். "ஒன்னுமில்லை." என்று மழுப்பினாள்.

"எதுக்கு சிரிக்கற?" என்றான்.
"சும்மாதான்." அவள் திரும்பிச் செல்ல முயன்றாள்.

"ஷ்ரத்தா..." என்றவன் அழைத்தான். அவள் திரும்பிப் பார்த்தாள்.

சத்ரியன் சில நொடிகள் அவளை பார்த்துவிட்டு, நான் இல்லாதப்ப என்‌ போட்டோவை வச்சி அழுதியாம். தியா சொன்னா." என்று கட்டிக்கொண்டான்.‌

அவனில்லாத நேரம் ஷ்ரத்தா துவண்டிருப்பாளென்று அவனுக்கு தெரியும். ஆனால் சின்ன பெண் அவள் கூறும் அளவிற்கு தன்னை ஷ்ரத்தா தேடியதை எண்ணி அவளை கட்டிக் கொண்டான்.

அந்த அணைப்பில் காதல் காமம் இரண்டை தாண்டி நேசம் வெளிப்பட்டது.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.


 
Posted : August 27, 2026 6:29 am
Aishu Selva, Karthi1206, Padma and 1 people reacted
(@kothaihari)
Posts: 125
Estimable Member
 

சூப்பர். .. செம


 
Posted : August 27, 2026 7:37 am
(@guna-sundari)
Posts: 138
Estimable Member
 

Chatriyian started to accepting diya. Cute girl won her dad's love. Kingpin for out side the world. But in home sharadha is don to control this kingpin. He loves her very much. Very intresting sis.


 
Posted : August 27, 2026 7:41 am
(@kalidevi)
Posts: 140
Estimable Member
 

Puriya vai shradha chathriyan thadumatrathuku nee than oru vali sollanum avanuku etho onu edikuthu atha puriya vacha ethupan diya va . Kandipa shradha una ninachi evlo thuvandu poi irupa nu antha kolanthai sonnathum tha puritha unaku nee irukiya illaya nu avaluke doubt vanthuduchi oru time la 


 
Posted : August 27, 2026 8:00 am
(@crvs2797)
Posts: 188
Estimable Member
 

தகிக்கும் நிலவொன்று.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 48)

அடேய்.. கூறுகெட்டவனே..! தியா முகத்துல நீ உன் முகத்தை தேடினால், உன் முகம் கிடைக்கப் போகுது. அதை விட்டு நீ எதுக்கு ஹரிணி முகத்தை தேடுற..?
இது அவன் குழந்தை தானே, அதுல சந்தேகமில்லையே...
அப்புறம் ரிஷி மூலம் எல்லாம் தேடுறானோ...? கடவுளே...
முடியலைப்பா இவனோட.

😐😐😐
CRVS (or) CRVS 2797


 
Posted : August 27, 2026 8:00 am
(@ambikahashini)
Posts: 47
Eminent Member
 

Super sis 


 
Posted : August 27, 2026 8:45 am
(@subhakumar85)
Posts: 112
Estimable Member
 

He started accepting her slowly


 
Posted : August 27, 2026 9:07 am
(@aishu-selva)
Posts: 31
Eminent Member
 

Super 


 
Posted : August 27, 2026 2:13 pm
(@kavi-bharathi-arunkumar)
Posts: 126
Estimable Member
 

Chathriya diya unnoda kuzhanthai apadi mattum nenachi paru da 


 
Posted : August 27, 2026 7:03 pm

Scroll to Top