Forum

மதுர ஜில்லா மச்சானே...
 
Notifications
Clear all

மதுர ஜில்லா மச்சானே-68

9 Posts
9 Users
10 Reactions
157 Views
(@praveena-thangaraj)
Posts: 265
Member Admin
Topic starter
 
[#316]

அத்தியாயம்-68

ஒரு வாரத்திற்கு முன் எப்பவும் போல காவ்யா தங்கள் தொழிற்சாலையில் வேலை செய்தவருக்கு சம்பளம் தரவும், அனைவரும் பெற்றுக் கொண்டார்கள். காவ்யாவோ பார்ட்னர்ஸ் என்ற முறையில் இரண்டு ஷேரை பிரித்தவள், மூன்றாவது பங்காக மதுராவிடம் நீட்டினாள். 

  மதுரா திகைக்க, "என்ன பார்க்கற நானும் இனியன் மச்சானும் இங்கிருக்கற இடத்துல சரிபாதியா பணத்தை ஷேர் பண்ணி ஆரம்பிச்சது. அவர் இங்கிருக்கற வெளிவேலையை பார்த்துக்கறார். நான் அங்க அமெரிக்க பையரிடம் பார்த்துக்கறேன். இதுக்கு நடுவுல உணவு தயாரிப்புல உன் பங்கு இருக்கு. அதுக்கான சம்பளம். இதை நீ எப்படி வேண்டுமென்றாலும் செலவு செய்யலாம். இது நீ சம்பாரிச்சது." என்று நீட்டவும் கட்டுக்கட்டாக பணத்தை வைத்து மதுரா ஆச்சரியமானாள். 

  இந்த பணம் தனக்கு கிடைக்குமென்று எல்லாம், அவள் யோசித்து இனியன் பின்னால் அமர்ந்து இங்கு வந்து, இழுத்து போட்டு வேலை செய்யவில்லை. அட ருசி பார்த்து அளவெல்லாம் தெரிந்துக்க நம்மளை கூப்பிடறாங்க. அதோட இனியனுக்கு காவ்யா இருப்பதால, என்னை கூடவே வச்சிட்டு சுத்தறார்' என்று தான் மதுரா நினைத்தாள். 

  ஆனால் காவ்யாவோ இனியனிடம் கூட கலந்து ஆலோசிக்காமல் தான் இதை முடிவெடுத்து தந்தாள். இனியனிடம் காலையில் தெரிவிக்க, "உன் இஷ்டம் மதுரா.. இதை எதிர்பார்த்து அவ செய்யலை. ஆனா அவளுக்கு இது தன்னம்பிக்கையை தரும்." என்று கூறினான்.

இனியன் ஆல்திபெஸ்ட் பார்ட்னர்." என்று கைகுலுக்கி சென்றான். மதுராவுக்கோ இனியனிடம் காதலை சொல்ல அத்தனை தயக்கம் இருந்தது.

 இதுங்களோ காதலை முறித்துக் கொண்டு எப்படி தான் நடமாடுகின்றனரோ. உண்மையில் காதலை கூட மறைந்து நடமாடிவிடலாம் போல. ஆனால் காதலை நெஞ்சில் சுமந்து தான் நடமாட முடியவில்லை. இனியனை கண்டு சொல்ல முடியாத அவஸ்தை மதுராவை ஞானி ஆக்காத குறை.

  'இது எனக்கு இவ்ளோ கஷ்டமாயிருக்கு. காதலிக்கறேன்னு சொல்ல முடியலை' என்று தவித்தாள்.

அன்று காலை விடியும் முன்பே சில வீதிகளில் விழித்திருக்கும் சத்தம். தெருவோரக் கடைகளில் பொருட்களை அடுக்கும் ஓசை. வண்ணத் துணிகளை தொங்கவிடும் ஆட்களின் பரபரப்பு இருந்தது. 

கோவிலைச் சுற்றிய வீதிகளில் கட்டப்பட்டிருந்த தோரணங்கள்.

காற்றில் அசைந்தாடும் வாழைமரங்கள் என்று ஊர்காரர்கள் பேசிக்கொண்டிருந்தனர். 

இனியன் வீட்டு வாசலில் மதுராவும் பெரிய வண்ணக் கோலம் போட்டிருந்தாள். 

கோவிலுக்குச் செல்ல புத்தாடை அணிந்து தயாராகினார்கள். 

  இளைய தலைமுறைகளும் எங்குப் பார்த்தாலும் வட்டமடிப்பார்கள். எழிலரசன் வீட்டிலே இல்லை. அவன் ஊரில் தான் நண்பர்களோடு வட்டமடித்திருந்தான். இதில் அடிக்கடி நிலானியை அங்க பார்த்தேன், இங்க பார்த்தேன் என்று மதுரா அண்ணியிடம் தகவல் வேறு தந்தான். எப்பொழுதும் அவளும் தங்கையும் தான் ஜோடி போட்டு சுத்துவது. இப்பொழுது புகுந்த வீட்டில் வேலையும் இருந்திட, அதை முடித்து தான் செல்ல வேண்டும்.

ஊரில் இருந்து அங்காளி பங்காளி என்று அறிந்தவர் தெரிந்தவர் வந்து பங்கு கொண்டிருக்க, ராஜாராமும் அமெரிக்காவிலிருந்து வந்திருந்தார். அவரை அழைத்துக் கொண்டு அதியமான் தங்கள் ஊரை சுற்றினார்கள். 

கோவிலைச் சுற்றியிருந்த கடைகளில் கூட்டம் அதிகரித்திருந்தது.

மல்லிகைப்பூவின் மணமும், சாம்பிராணியின் மணமும், தெருவோர உணவுக் கடைகளில் இருந்து வந்த மசாலா வாசனையும் ஒன்றோடு ஒன்று கலந்து காற்றில் பரவிக் கொண்டிருந்தது. அகிலனோ பஞ்சாய்தது வேலைகளை பார்த்து, மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் வழிதடத்தை உருவாக்கி மோரும் அன்னதானமும் வழங்கிக்கொண்டிருந்தனர்.

ஒருபக்கம் பஞ்சுமிட்டாய். இன்னொரு பக்கம் கரும்புச்சாறு, அடுத்த கடையில் முறுக்கு, சீடை, அதிரசம்.

குழந்தைகளுக்காக வண்ண வண்ண பொம்மைகள், பலூன்கள், விசில்.

கையில் சுழற்றிக் கொண்டே செல்லும் ஒளி பொம்மைகள் இத்யாதி எல்லாமே ஒவ்வொரு கடைக்காரரும், 'வாங்கம்மா... வாங்க தம்பி...' என்று அழைத்துக் கொண்டிருந்தார்கள்.      

    காவ்யாவோ அகிலனிடம் 'இது வேண்டும் அது வேண்டுமென' பர்ஸிற்கு வேட்டு வைத்துக் கொண்டிருந்தாள்‌.

சிறுவர்கள் ஒரு கடையிலிருந்து இன்னொரு கடைக்கு ஓடிக் கொண்டு தந்தையின் பணத்திற்கு வேட்டு வைத்தாலும், தந்தைமார்களுக்கு அதில் அத்தனை சந்தோஷம் உருவாகுமே அதே நிலை தான் அகிலனுக்கும். 

இதில் காவ்யா வளையல்கள் பார்த்துக் கொண்டிருக்க, கூட்ட நெரிசலில் அவளை தவறவிடாமல் பார்த்துக் கொண்டு வளையலும் வாங்கித்தந்தான். 

இங்கு சேலை கட்ட பழக வேண்டுமென, தினமும் இரவில், அவளுக்கு சேலை அணிவித்து கட்ட பழகினான். அதை அன்றைய இரவிலேயே கழட்டவும் செய்திடுவான் என்பது தனிக்கதை. 

  'டேய் அகி.. நீ சேலை கட்ட கத்துக்கறேன்னு யூடுயூப்ல எவ எவளோ சேலை கட்டுற வீடியோவா பார்த்துட்டு இருக்க. பேட் பாய். இதுக்கே நான் கட்ட கத்துக்கணும் போலயே." என்று கேலி செய்தாள் காவ்யா. 

அந்தளவு ஹிஸ்ட்ரி முழுக்க சேலை கட்டுவது எப்படி என்று குவித்திருந்தான். 

"நீயா அந்த பொறாமையில சேலை கட்டக்கத்துக்கிட்டல்ல.. அதான் மேட்டர்" என்று சிரிப்பான். 

'ஹிஸ்ட்ரியை அழிடா." என்று அவன் போனை வாங்கி பாஸ்வோர்ட் பேட்டர்ன் போட்டு, அவசரமாய் அவளே அழித்தும் முடித்தாள். 

'நான் சேலை கட்டக்கத்துக்கிட்டேன். பட்.. பட்.. எப்ப கட்டணும்னாலும். நீ ஹெல்ப் பண்ணணும். ஓகே வாடா." என்று கேட்க, "சரிடி.. உதவிடுவோம்" என்று இடையில் சின்ன அழுத்தம் தருவான் அகிலன்.

இன்றும் அப்படி தான் காவ்யா சேலை கட்டி நடமாடினாள். 

இதில் நிலானி போன்ற இளம் பெண்கள் தாவாணி அணிந்த பருவ சிட்டான குமரிகள் நடமாட, அத்தை மகன் மாமன் மகள் என்ற பார்வை பரிமாற்றம் தூள் பறக்கும்.

இதில் உரிமை போராட்டமாக இதை வாங்கி தா. அதை வாங்கி தா' என்று கேட்டு வாங்கும் பொழுது அதில் தனி சந்தோஷம் கிட்டும். அது திருமணமாக விட்டாலும் அல்லது திருமணமாகி வேறொரு இடத்தில் வாக்கப்பட்டிருந்தாலும், எங்க அத்தை பையன் மாமன் மகன் வாங்கி தருவது என்ற பெருமை பேசிக் கொள்வார்கள். கிட்டதட்ட அண்ணன் வாங்கி தந்தால் எப்படி ஆனந்தமோ அதே விகிதம் ஆனால் உறவுமுறைக்கொன்று தனி அழகு அதில் கலந்திருக்கும். 

  நிலானிக்கும் அப்படியொரு வாய்ப்பு அமைந்தது. கூட்டத்தில் அவள் வைத்த பூ கீழே விழுந்துவிட, கீழே விழுந்ததை எடுக்க கூடாதென்று, இளையமதியிடம் பூவை கேட்டு நின்றாள். 

  "உங்கப்பாவை காணோம்‌ அவரிடம் போய் கேளு. நானே உங்கக்காவை காணோம்னு யோசிச்சுட்டு இருக்கேன்." என்று கடிந்தார்.‌

  எழிலரசனோ இப்பேச்சை கேட்டவனாக நிலானியிடம் மூன்று மொழம் பூவை வாங்கி நீட்டினான். 

  முதலில் வாங்க மறுத்து நின்றாள். "ஏ அத்தை மவளே.. இதை வாங்கிட்டா நீ என்னை நினைக்கறேன்னு அர்த்தமில்லை. இது அத்தை மக மாமன் மகன் என்ற அழகான பந்தம். தயவு செய்து ப்யூச்சர்ல கட்டி வஞ்சிடுவாங்கனு பயந்துட்டு நிற்காத. என் மனசுல இப்ப எதுவும் இல்லை. உன்னை பிடிக்கும். என்னாலயோ எங்க குடும்பத்தாலையோ, நீ உன் வாழ்க்கையை தப்பா முடிவெடுக்காத. இது என்ற அத்தை மவளுக்கு உரிமையா வாங்கித்தர்றது." என்று கூறி நீட்டினான். 

"நிசமா.. ஏதாவது வில்லங்கத்தோட நீ தரலையே?" என்று கேட்டாள். 

"அம்மா சத்தியமா இல்லை தாயே. வாங்கிக்கோ.. உன்னை பிடிக்கும். மதுரா அண்ணியை பிடிக்கும். அது மாதிரி. சப்போஸ்... உன்னை விரும்பினா.. இதே போல ரோஸா பூவை வாங்கிட்டு வந்து நீட்டறேன். அப்ப கத்து கூச்சல் போடா. நாலு திட்டு திட்டு. இப்ப பாவாடை தாவணி கட்டிட்டு பூ இல்லாம என்ற அத்த மக நின்னா நல்லாயிருக்காது." என்றான். 

நிலானியோ மல்லியை வாங்கி தலையில் சூடியபடி, "ரோஸா பூ தந்து நீ நீட்டினா, திட்டமாட்டேன்னு நினைக்காத. கத்தி கூச்சல் போட வாய்ப்புண்டு" என்றாள். 

எழிலரசனோ லேசான சிரிப்புடன் அவ்விடம் நகர்ந்தான். அவன் இந்த வருடம் படிப்பு முடிந்ததும் அடுத்து இனியன் அண்ணனின் பேச்சை கேட்டவனாக அமெரிக்கா சென்று மேற்படிப்பை படிக்க போவதால் நிலானி மனதில் தான் இன்னும் சண்டைக்காரனாக இருந்து செல்ல பிடிக்காமல் சமரசம் செய்துக் கொண்டான். அதை தான் சில நாட்களாக மறைமுகமாக உறவுமுறையின் உன்னதத்துடன் உரிமையாக பேசுகின்றான்.

நாளை யாருக்கு யாரோ என்று முடிவடைவது நாளை தானே. அதுவரை இந்த பந்தம் உயரியது அல்லவா. 

அந்த தெளிவில் அவன் இருந்தான். 

  "எங்கடா போன?" என்று வேல்விழி வந்து கேட்டதும், "இங்க தான்மா இருந்தேன். நான் என்ன சின்ன பையனா.. தொலைந்து போக. அதெல்லாம் விழா முடியறவரை என்னை தேடாதிங்கம்மா. மதுரா அண்ணி.. அத்தை உங்களை அங்க தேடினாங்க" என்றான். 

"அதுசரி" என்று வேல்விழி அங்கலாய்த்திட, மீனாட்சி அம்மன் கோவிலின் கோபுரத்தைப் பார்த்தவாறு,  அந்தப் பிரம்மாண்டம் மனதை நிறைத்தார். 

கோபுரத்தில் வரிசையாக நிற்கும் எண்ணற்ற சிலைகள்.

ஒவ்வொரு சிலையையும் தனித்தனியாக பார்த்துக்கொண்டே நிற்கும் பக்தர்கள் நிறைந்திருந்தனர். 

கையில் குழந்தையைத் தூக்கிக்கொண்டு,

"அம்மனை பார்த்தாச்சா?" என்று கேட்கும் பெற்றோரை கண்டு வேல்விழி பார்வை மதுராவை ஏறிட்டது. மதுரா அன்னையை தேடியபடி கூட்டத்தை பார்வையிட்டாள்.

கூட்டத்துக்குள் தொலைந்துவிடாமல் இனியன் மதுராவின் கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டான்.

கோவில் மணியோசை கேட்கும் ஒவ்வொரு முறையும் மதுரா நெஞ்சில் ஒரு அமைதி.

அதன்பின் மீண்டும் அதே பரபரப்பு. இந்த சித்திரைத் திருவிழா ஒரு நாள் கொண்டாட்டமல்ல. ஒவ்வொரு நாளுக்கும் ஒரு கதை உண்டு. அந்த நாட்கள் முடியும் முன் இனியனிடம் தன் மனதை திறக்க நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள். 

   அவனிடம் பேச 'நா'உலர்ந்தது. ஏதாவது பேசவே அஞ்சினாள். மேடையில் முதல் முறை ஏறி பேசும் குழந்தை போல அத்தனை தயக்கம் மதுராவுக்கு. 

மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நடந்தது. அம்மன் அரசியாக முடிசூடும் நாள். அன்று மதுரை மக்கள் தங்களுடைய வீட்டில் ஒரு பெண்ணுக்கு திருமணம் நடப்பதைப் போலவே அந்த நிகழ்வை எதிர்பார்ப்பார்கள்.

புதிய ஆடை, பூ, பழங்கள்.பிரசாதம், எல்லாமே தயாராக இருக்கும். அம்மன் பட்டாபிஷேகம் பார்த்துட்டு தான் வீட்டுக்கு திரும்பணும்.' என்று சொல்லிக் கொண்டு குடும்பம் குடும்பமாக கோவிலை நோக்கி நகர்ந்தார்கள்.  

  இன்றும் இனியனிடம் காதலை தெரிவிக்காமல் வீடு திரும்பியதில் மதுரா முகம் வாடியது.

அவளை சுற்றி அம்மா அப்பா தங்கை என்று விழாவில் இருந்தனர். அதே போல வீட்டில் அத்தை மாமா எழிலரசன் என்று நடமாடிக்கொண்டே இருந்தனர். 

தனியாக ஒரு நிமிடம் கூட பேச முடியவில்லை. இதில் வீதிக்கு வீதி பாட்டு சத்தம். காதலை பகிர்வது இத்தனை கடினமா? என்று தான் மலைத்தபடி உறங்கினாள்.

அடுத்தடுத்த நாளில் மீனாட்சி அம்மன் திக் விஜயம். மதுரை நகரமே அந்த நிகழ்வுக்காக காத்திருக்கும். வீதிகளில் பக்தர்கள் கூட்டம் பெருகும். அலங்கரிக்கப்பட்ட வாகனங்கள் நகரும். நாதஸ்வரமும் தவில் ஓசையும் வீதியையே நிரப்பும்.

திக் விஜயத்திற்காக அலங்கரிக்கப்பட்டிருந்த மீனாட்சி அம்மன், அன்றைய தினம் மதுரையின் அரசியாகவே காட்சியளித்தாள்.

பச்சை நிற பட்டாடை அவளது மேனியில் பசுமையான வசந்தத்தைப் போலப் படர்ந்திருந்தது. இடையைச் சுற்றி அணிவிக்கப்பட்டிருந்த பொன்னாடையும், மார்பில் அடுக்கடுக்காகத் தொங்கிய முத்து மாலைகளும், கழுத்தை நிறைத்த நகைகளும் அவளது கம்பீரத்தை இன்னும் கூட்டின.

நெற்றியின் நடுவில் மின்னிய குங்குமமும், அதற்கு மேலே இட்டிருந்த திருநீறும் அவளது முகத்திற்கு ஒரு தனி தெய்வீக ஒளியைக் கொடுத்திருந்தது. வளைந்த புருவங்களுக்கு நடுவே பதிந்திருந்த கண்கள்... அவை வெறும் அழகான கண்கள் அல்ல. மதுரையை ஆள வந்த அரசியின் கண்கள்.

மீனாட்சி அம்மனின் நீண்ட விழிகள் ஒரு பக்கம் கருணையைப் பொழிந்தாலும், மறுபக்கம் எதிர்த்து நிற்பவர்களைப் பணிய வைக்கும் வீரத்தைப் பேசின.

காதுகளில் ஆடிய பெரிய குண்டலங்கள் ஒவ்வொரு அசைவுக்கும் ஒளியைச் சிதறடித்தன. மூக்குத்தியின் சிறிய மினுக்கல் கூட அவளது முகத்தின் அழகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருந்தது. உதடுகளில் மெல்லிய புன்னகை. அந்தப் புன்னகையில் பெண்ணின் நாணமும் இருந்தது; பேரரசியின் அதிகாரமும் இருந்தது.

தலையில் சூட்டப்பட்டிருந்த கிரீடம் அவள் ஒரு அலங்கரிக்கப்பட்ட பெண் மட்டுமல்ல என்பதை நினைவூட்டியது.

அவள் மதுரையின் மீனாட்சி.கையில் ஏந்தியிருந்த வேலும், போருக்குப் புறப்பட்ட வீராங்கனையைப் போன்ற தோற்றத்தைக் கொடுத்தது. பட்டு, பொன், முத்து, மலர் என எத்தனை அலங்காரங்கள் அவளைச் சூழ்ந்திருந்தாலும், பார்வையை முதலில் ஈர்த்தது அவளது முகத்தில் தெரிந்த அந்தக் கம்பீரம்தான்.

அவள் வீதியில் எழுந்தருளிய அந்தக் கணத்தில், பக்தர்கள் கூட்டம் தன்னிச்சையாக கைகளைக் கூப்பியது.

ஒரு பக்கம், "மீனாட்சி அம்மன் அருள்புரிவாள்..." என்று பக்தர்கள் முழங்க, மற்றொரு பக்கம் குழந்தைகள் கூட்டத்தில் தங்களுக்குத் தெரிந்தவர்களைத் தேடிக் கொண்டிருப்பார்கள்.

வெயில் கொளுத்தினாலும் கூட்டம் குறையாது.

தண்ணீர் பாக்கெட்டுகளை வாங்கிக் குடித்துக் கொண்டே மக்கள் காத்திருப்பார்கள்.

அம்மன் புறப்பாடு வரும்போது மட்டும்... அந்தக் கூட்டத்துக்குள் ஒரு இறை பக்திகுண்டான மின்சாரம் பாய்ந்தது போல இருக்கும்.

அனைவருடைய பார்வையும் ஒரே திசையில் திரும்பும்.

கைகள் தானாக கூப்பிடும். மனதுக்குள் வேண்டுதல்கள் ஓடும்.

வேல்விழியோ "மதுராவுக்கு குழந்தை பாக்கியம் அமைய வேண்டும்." என்று வேண்டினார். 

மீனாட்சியோ "தூரிகாவுக்கு நல்லபடியா நல்ல வரன் அமைந்து திருமணம் நடக்க வேண்டும்." என்று வேண்டினார்.‌ அகிலனை பற்றி கவலையை காவ்யா வந்தப்பின் விட்டுவிட்டார். இனி அந்த ஜோடி ஒருவருக்கு ஒருவர் புரிதலுடன் வாழுமென்று அன்னைக்கு தெரியாதா!

அருளாளன் அதியமான் எல்லாம் மகன்களின் தொழில் வளர வேண்டும். என்று வேண்டினார்கள். 

அகிலனோ "குடும்பத்தில் இருந்த பிரச்சனை முற்றிலும் தீர வேண்டும்." என்று வேண்டினான். 

ஒவ்வொருவருக்கும் ஒரு வேண்டுதல் நெஞ்சில் குடியிருந்தது.  

மதுராவுக்கு இனியனிடம் தன் எண்ணத்தை வெளியிட தைரியம் வேண்டி அம்மனிடம் நின்றாள். 

காவ்யாவுக்கு வேண்டுதல் எதுவும் இல்லை. அவளுக்கு இதெல்லாம் புதிது. 'நல்லதே நினைத்தால் நல்லதே நடக்கும்' என்ற கோட்பாட்டு பேசுபவள். மீனாட்சிக்காக பக்தியுடன் வேண்டுவாள் அவ்வளவே. 

  காவ்யா வந்து மதுராவிடம், "என்ன லவ் சொல்லிட்டியா இல்லையா?" என்றாள். 

இனியனை கண்டு உதடு பிதுங்கி இல்லை என்றாள். 

  "இந்த கோவில் பங்ஷன் முடியற வரை டைம். அதுக்கு பிறகும் சொல்லாம உள்ளுக்குள்ள தவிச்ச. அப்பறம் நானே இனியன் மச்சானிடம் உன் லவ்வை சொல்லிடுவேன்" என்று மிரட்டினாள்.

  "தூரிகா மாதிரி மிரட்டற. அவளும் இப்படி தான். அகிலன் மச்சானிட." என்றவள் வாயை மூடினாள். 

"ம்கூம்.. முழுசா சொல்லு. அகிலன் மச்சானிடம் சொல்ல சொல்லி நீ சொல்லாம இப்ப என் அகி ஆகிட்டார்." என்றாள் காவ்யா. 

மதுராவோ "அய்யோ காவ்யா." என்று சிணுங்க, "இனியன் உன்‌ ஹஸ்பெண்ட் தான். எவளும் கொத்திட்டு போக முடியாது. ஆனா அதுக்காக காதலை சொல்லணுமானு இல்லை. 

  ஆனா உன் காதலை அவன் ஆசையா எதிர்பார்க்கறான் தானே. அப்பறம் என்ன.? கல்யாண நாள் வேற நாளைக்கு. நாளைக்காவது சொல்லு" என்று கூற மதுரா உம்மென்று சரியென்று தலையாட்டினாள். 

அன்று இரவு வீடு திரும்பிய பொழுது அகிலன் கூட காவ்யாவிடம், "மதுராவை என்ன மிரட்டிட்டு இருந்த?" என்று கேட்க, "பார்டா... அத்த மகளை மிரட்டினா எங்கிருந்தாலும் பார்ப்பிங்க போல. பெருசா ஒன்னுமில்லை.. இனியனை காதலிக்கறதை சொல்ல தயங்கிட்டு சுத்தறா. நாளைக்குள்ள சொல்ல சொல்லி மிரட்டினேன்." என்று முடித்தாள்.‌

அகிலனோ 'அவளா இனியனிடம் சொல்ல வாய்ப்பில்ல.' என்று கூறிவிட்டு, மனைவியை கண்டு, "உங்கப்பா ஏதோ வீடு வாங்கறதா சொன்னார். வீடெல்லாம் பார்த்தியா?" என்று கேட்க "திருவிழா முடியவும் பார்க்கலாம்." என்று நெருங்க, "ஒய். உங்கப்பாவை கவனி. என்னையே உரசிட்டு இருக்க" என்று சந்தடி சாக்கில் அவளது புஜத்தை வலிக்காமல் கிள்ளி சென்றான். 

"அகி" என்று சிணுங்கியவள் தனியாக படுத்தாள். தந்தையுடன் பேசிக் கொண்டே உறங்க தான் அகிலன் சென்றுவிட்டானே. திருவிழா முடியும் வரை தந்தையுடன் இருப்பதாக கூறிவிட்டான். 

 

-தொடரும்.

பிரவீணா தங்கராஜ். 

 

 


 
Posted : August 18, 2026 1:13 pm
(@crvs2797)
Posts: 188
Estimable Member
 

மதுர ஜில்லா மச்சானே !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 68)

அடி போடி.. கல்யாணமே ஆகிடுச்சு, இதுல இன்னும் காதலை சொல்ல முடியலையாம் நல்ல கூத்தா இல்ல இருக்குது. நீ இப்படியே முழிச்சிட்டே இரு மதுரா. ஆனால், இனியன் எங்கேயும் ஓடிப் போயிட மாட்டான், அவன் தான் உன்னையே சுத்டி சுத்தி வரான் தானே ?

பரவாயில்லை எழிலரசன், ரொம்ப ஜென்டிலா நிலானி கிட்ட பிடிச்சிருக்கு என்கிறதையும் சொல்லிட்டான், இதையே சாக்கா வைச்சு தொந்தரவும் தர மாட்டேன் என்கிறதையும் சொல்லிட்டான்...
இவனும் நல்ல பையன் தான் போல.

😀😀😀
CRVS (or) CRVS 2797


 
Posted : August 18, 2026 1:54 pm
(@padma)
Posts: 26
Eminent Member
 

Nice


 
Posted : August 18, 2026 2:51 pm
(@kothaihari)
Posts: 125
Estimable Member
 

Nice


 
Posted : August 18, 2026 5:41 pm
(@karthi1206)
Posts: 69
Trusted Member
 

Superb epi.. lovely narration 😍😍


 
Posted : August 18, 2026 6:25 pm
(@guna-sundari)
Posts: 138
Estimable Member
 

Wow fantastic narration of chitirai festival sis. Especially the narration of goddess meenakshi. While reading it meenakshi came to my home. Excellent narration sis. Really our festival be like this. Every year we celebrate in a biggest manner. Meenakshi is  a member of each and every family in madurai. Exhil good thought process. Madura open ur heart to ur husband. Very intresting sis.


 
Posted : August 18, 2026 6:47 pm
(@kalidevi)
Posts: 140
Estimable Member
 

Ippadiye thayangiyr irukatha kavya sonna mari Akilan kitta sollama iruntha kavya thukitu poita ipo iniyan kitta sollalana yarum thukitu po matanga iniyan una kotha poran


 
Posted : August 18, 2026 7:19 pm
(@kavi-bharathi-arunkumar)
Posts: 127
Estimable Member
 

Thiruvizha oda aatam.pattam kondattam chumma kalla kattuthu .


 
Posted : August 18, 2026 9:52 pm
(@narmadha)
Posts: 6
Active Member
 

Super ♥️


 
Posted : August 19, 2026 6:54 am

Scroll to Top