மதுர ஜில்லா மச்சானே-65
அத்தியாயம்-65
முதல் நாளே மகா அக்ரோ பிரைவேட் லிமிடெட் வளாகம் பரபரப்பாக இருந்தது.
பெரிய லாரிகள் ஒன்றன்பின் ஒன்றாக உள்ளே நுழைந்தன. மஞ்சள் மூட்டைகள், மிளகாய், வற்றல், மல்லி, மிளகு, சீரகம்., சோம்பு, உளுந்து, கடலைப்பருப்பு என்று மூட்டை மூட்டையாக பொருட்கள் இறங்கிக் கொண்டிருந்தன.
அவ்வளவு பெரிய அளவில் பொருட்கள் குவிந்து கிடப்பதை பார்த்த காவ்யாவோ, கண்களை பெரிதாக விரித்தபடி சுற்றிலும் பார்த்தாள்.
இவ்வளவு பெரிய பிசினஸா என்று அப்பொழுது தான் மலைத்தாள். இதை எப்படி சமாளிக்க போகின்றோமோ என்று தனக்குத்தானே முணுமுணுத்தவள், உடனே அகிலனுக்கு அழைத்தாள்.
இரண்டாவது ரிங்கில் எடுத்துவிட்டவனிடம், "அகி..." என்றாள்.
"சொல்லு காவ்யா." என்றான்.
"பெருசா பிசினஸ் ஆரம்பிச்சுட்டேன்ப்பா... ஆனா இவ்வளவு மூட்டை மூட்டையா பொருள் வந்திறங்கவும் பயமாயிருக்கு. நான் எல்லாத்தையும் சரியா பண்ணுவேனா? இனியன் வேற இன்னும் வரல. முதல் முறை அரைக்கறப்பவே உனக்கென்ன தெரியும்னு மனசாட்சி கிண்டலடிக்கு" என்று தன்னிலையை கூற அகிலன் சிரித்தான்.
"ஏய்... அதெல்லாம் போகப் போக பழகிடும். பயப்படாம செய். இனியன் வந்துட்டா அவன்கிட்ட கேளு." என்று தைரியம் தந்தான்.
"அப்புறம்..." என்று இழுத்துவிட
"என்ன?" என்றாள் காவ்யா.
"இனியன்னு பேர் சொல்லி கூப்பிடாத. மச்சான்னு கூப்பிடு. யாராவது கேட்டா, 'தம்பி பொண்டாட்டி அண்ணனை பேர் சொல்லி கூப்பிடுறாளே'ன்னு பேசுவாங்க. அது நல்லாயிருக்காது. நான் உனக்கு பலமுறை சொல்லிட்டேன்." என்றதும்
காவ்யா சிணுங்கினாள்.
"மதுராவை நான் சின்ன வயசுல இருந்தே பேர் சொல்லிதான் கூப்பிடுவேன். அதுல இந்த ஊர்க்காரங்க யாரும் தப்பா நினைக்க மாட்டாங்க. ஆனா உனக்கு வேற வழியில்லை. ஒவ்வொருத்தரிடமும் நீ அவனோட ஜூனியர் சீனியர்னு சொல்லி புரிய வைக்க முடியாது." என்று அழுத்தமாய் உரைத்தான்.
"ஓகே மச்சான்..." என்று வேண்டுமென்றே அழுத்திக் கூறினாள்.
"ஆ..ங் அப்படித்தான்." என்று சிரித்தான்.
"அகி." என்று மீண்டும் இழுத்தாள்.
"இப்ப ஒரு லேடி வந்து, 'மேடம்... மிளகாய்த்தூளுக்கு என்ன அளவு? இட்லி பொடிக்கு என்ன ரேஷியோ?'ன்னு கேட்கிறாங்க. எனக்கு ஒன்றுமே தெரியல. போன் பேசிட்டு வர்றேன்னு அனுப்பிட்டேன்.
பாஸ்தா, லசானியா, கார்லிக் பிரெட் எல்லாம் சொல்லுவேன். இந்த மசாலா விஷயமே தெரியலப்பா." அவள் புலம்பிக் கொண்டிருக்கும்போதே அலுவலக அறைக்குள் நுழைந்த இனியன்,
"என்னாச்சு? எதுக்கு இவ்வளவு டென்ஷனா போன் பேசிட்டு இருக்க?" என்றான்.
காவ்யா திரும்பிப் பார்த்தாள்.
"டென்ஷனா? நான் பேசுறது அவ்வளவு சத்தமாவா வெளியே கேட்குது?" என்று பதட்டமாய் கேட்டாள்.
"பேச்சுல இல்ல... நான் வர்றப்பவே பார்த்தேன். உன் முகமே டென்ஷனா இருக்கு." என்றான் இனியன்.
அதை போனில் கேட்ட அகிலன், "இனியா வந்துட்டானா? போனை அவன்கிட்ட கொடு. நான் பேசுறேன்." என்றான் அகிலன் போனில்.
இனியனிடம் "அகி பேசுறாரு..." என்று போனை நீட்டினாள். போனை வாங்கிய இனியன் சிரித்தான். 'அகிலன்... 'அகி'யாம்.' என்று வியந்தபடி வாங்கினான்.
"சொல்லு அகிலா." என்று இனியன் பேச, அகிலனோ "இனியா... உன் பிரெண்டுக்கு எந்த மசாலாவுக்கு என்ன பொருள் தேவை, எந்தளவு தேவைனு தெரியலையாம்.
பிசினஸ் பீப்பிள்கிட்ட பேச தெரியும். பாஸ்தா, லசானியா, மெக்ஸிகன் ரைஸ் எல்லாம் செய்வா. ஆனா நம்ம ஊர் மசாலா பக்கம் போனதே இல்லை. அதுலயும் இப்ப மூட்டை மூட்டையா பொருட்கள் வந்திறங்கவும் ஏதாவது சொதப்பிடுவேனோனு பயப்படறா." என்றதும் இனியன் சிரித்தான்.
"புரியுது... இவளிடம் பிசினஸ் பேசறப்பவே மீடியாரேட்டர், பையரிடம் தான் இவளை பேச வைக்கணும், இந்த மசாலா அளவு பதம் எல்லாமா எந்தவிகிதம் சேர்க்கறதுனு அம்மாவிடமோ மதுராவிடமோ கேட்டுக் கால்குலேட் பண்ணிக்கறேன்." என்றான்.
"தேங்க்ஸ் டா." என்று அகிலன் கூற சில நொடிகள் அமைதி.
"வேற ஏதாவது பேசணும்னு காவ்யாகிட்ட கேட்டு சொல்லு." என்று அகிலன் போனை வைக்கும் முன் மனைவியிடம் அபிப்பிராயம் கேட்க இனியன் புன்னகையுடன் காவ்யாவைப் பார்த்தான்.
"காவ்யா... உன் அகி, 'வேற ஏதாவது பேசணுமாம்'ன்னு கேக்கறான்." என்றதும் அகிலனோ 'அகினு' கொஞ்சி பேசறதை இனியன் கவனிச்சிருக்கான். அய்யோ என்று அகிலன் வெட்கத்துடன் நினைக்க, காவ்யாவுமே இனியன் அகி என்றதை நோட் செய்து கேலி செய்வதை அறிந்து, "வேற... வேற ஒன்னுமில்லை மச்சான். மச்சான்னு சொல்லிட்டதா சொல்லிடுங்க." என்றாள்.
போன் வைத்ததும், இனியன் கைகளை கட்டிக்கொண்டு அவளைப் பார்த்தான்.
"என்ன பார்க்கறீங்க மச்சான்" என்றாள் காவ்யா.
"ஒன்னுமில்லை. என்னை மச்சான்னு கூப்பிடுனு குச்சி வச்சி விரட்டறானா.. உன்னோட அகி." என்று கேட்க, "நீ..ங்க பெரியவராம். அவரை விட மாசத்துல பெரியவர், நானே இனியன் என்று சொல்லியிருக்கேன். யாரிடமாவது சொல்லறப்ப அவன் இவன்னு பேசியிருக்கேன். ஆனா 'டா' போட்டு பேசியதில்லை. அதனால என்னை உங்களை கூப்பிடறப்ப 'டா' போடக்கூடாதுனா சொல்லிட்டார். அதோட இங்க வந்து பிசினஸ் பண்ணினறதா சொல்லவும், ஊர்க்காரங்க யாராவது இனியன்னு நீ கூப்பிட்டு அதை கேட்க நேர்ந்தா என்னயிது தம்பி பொண்டாட்டி அண்ணனை பெயர் சொல்லுதுனு ஒரு மாதிரி பேசுவாங்களாம். அதனால பெயர் சொல்லியும் கூப்பிடாதனு டியூஷன் எடுக்காத குறை.
ரியலி... இந்த அகிலன் பாசக்காரன். தேங்க்ஸ் மச்சான்.. இந்த அகியை எனக்கு கண்ணுல காட்டியதுக்கு." என்று உணர்ச்சிபூர்வமாய் உரைத்தாள்.
இனியன் புன்னகையோடு தனது மொபைலை எடுத்து மதுராவுக்கு அழைத்தான்.
"மதுரா..." என்று கூப்பிட,
"ஆங்... சொல்லுங்க." என்றாள்.
"கொஞ்சம் ரெடியா இரு. ஒரு உதவி வேணும்.அங்க தான் வர்றேன்." என்றான்.
"எ... என்ன உதவி?" என்றாள் மதுரவாணி.
"ரெடியா இரு. வந்து சொல்றேன்." என்றவன் சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தான்.
வீட்டிலோ மதுரா போனைப் பார்த்தபடியே நின்றாள்.
"இப்பத்தான் 'உன்னை விட்டுப் போகவே மனசில்லை'ன்னு சொல்லி சமையல் செய்ய விடாம பின்னாடியே நின்னாரு. அத்தை வந்ததும் சிரிச்சுட்டு பின்னந்தலையை கோதிட்டு போனாரு. இப்ப திரும்ப ரெடியா இருக்க சொல்றாரு... இவர் மனசுல என்னதான் இருக்கு?" என்று முணுமுணுத்தாள்.
அவள் திரும்பியவுடன் கதவோரத்தில் சாய்ந்து நின்றிருந்த இனியனைப் பார்த்து திடுக்கிட்டாள்.
"எப்ப வந்தீங்க?" என்றாள்.
"இப்பத்தான் போலாமா?" என்று கூப்பிட, "எ... எங்க? நான் சமைக்கணும்."என்றாள்.
"அய்யோ... சமையலை அம்மா பார்த்துக்குவாங்க. என் கூட வா." என்று அவசரப்படுத்தினான்.
"நான் இன்னும் தலை கூட வாரல... சேலை மாத்தணும்" இனியன் அவளை ரசித்தான்.
"தலை வாரலையா? இரண்டு காதோரமா கொஞ்சம் முடி எடுத்து பின்னி, மிச்சத்தை ஃப்ரீ ஹேரா விட்டிருக்க. ரொம்ப அழகா இருக்கு." என்று நெற்றியில் விழுந்திருந்த ஒரு முடிக்கற்றையை மெதுவாக காதோரம் ஒதுக்கி வைத்தான்.
மதுராவின் இதயம் தடுமாறியது.
"சேலை." என்று அவளது இடுப்பில் சொருகியிருந்த முந்தானையை சற்று நேர்த்தியாக இழுத்துவிட்டான்.
"எந்த சேலையிலும் நீ அம்சமா இருக்க" என்றான்.
"என்ன பண்ணறீங்க? இது கிச்சன். அத்தை... மாமா... உங்க தம்பி யாராவது வந்துடுவாங்க." என்று எட்டி நிறுத்த பார்த்தாள்.
"என் தம்பி காலேஜ் போயிட்டான். அம்மா, அப்பா நம்மளை இப்படி பார்த்தா சந்தோஷப்படுவாங்க. அவங்க கோவில்ல நமக்காக தொட்டில் கட்டினாங்க." என்றான்.
அவள் அவன் சட்டையைப் பிடித்து சற்று தள்ளினாள்.
"அது... அவங்க கட்டின தொட்டில்..." அந்த ஒரு வார்த்தையில் இனியனின் முகத்தில் ஒரு நொடி வலி தோன்றியது.
அதை மறைத்தவன் மெதுவாக,
"என்னோட கம்பெனிக்கு வா. காவ்யாவுக்கு குழப்பம். எந்த மசாலாவுக்கு என்ன சேர்க்கணும்னு தெரியல." என்றான்.
"அத்தையை கூட்டிட்டு போங்க." என்று மறுத்தாள்.
"மது..உஉஉஉ." அவன் மெதுவாக அவள் கையைப் பிடித்தான்.
"என் தொழில்ல முதல் முறையா செய்யப் போற வேலை இது. அம்மாவை விட நீ முக்கியம்."
மதுரா அவனைப் பார்த்தாள்.
"'மகா' அக்ரோ... அந்த பேர்ல இருக்குற முதல் எழுத்து யாரோடது தெரியும் தானே?"
அவள் கண்கள் விரிந்தன. மதுராவாணியில் 'ம' என்றல்லவா கூறியிருந்தான்.
அவளை யோசிக்க விடாமல் கையைப் பிடித்தபடி வெளியே அழைத்துச் சென்றான்.
பைக்கில்... மதுரா ஒருபக்கம் கால்போட்டு அமர்ந்திருந்தாள்.
இனியன் அவளது வலது கையை எடுத்து தன் தோளில் வைத்தான்.
"இப்படி பிடிச்சுக்கோ." என்று வைத்தான். ''போற வழியில எல்லாரும் பார்ப்பாங்க." என்று கையை எடுத்தாள்.
"என் பொண்டாட்டிதான் என் தோள்ல கை வைக்கறா. வேற யாருமில்லையே." அவள் வெட்கத்துடன் கையை எடுக்க முயன்றாள்.
இனியன் வேண்டுமென்றே வலது கையை ஹேண்டிலில் இருந்து எடுத்தான்.
"அச்சோ... வண்டியை கையை விட்டு ஓட்டாதீங்க!"
"அப்ப நீ உன் இடது கையில் என் இடுப்பை பிடிச்சுக்கோ. வலது கை தோளில் வை" என்றான்.
"நான் வைக்க மாட்டேன்" என்று மதுரா மறுக்க "அப்படின்னா இப்படியே வருவேன்." என்றான். கையை விட்டு பைக்கில் ஓட்ட, எதிரே அரசு பேருந்து ஒன்று வந்தது. "இனியன் மச்சான்... ப்ளீஸ்... வண்டியை பிடிங்க." பயத்தில் கண்களை மூடிக்கொண்டாள் மதுரவாணி.
சில நொடிகள் கழித்து கண்களைத் திறந்தபோது, இனியன் இரண்டு கைகளாலும் நன்றாக ஹேண்டிலைப் பிடித்தே ஓட்டிக் கொண்டிருந்தான். மதுரா அவனை முறைத்தாள். இனியன் குறும்பாகச் சிரித்தான்.
மதுரா மெதுவாக அவன் இடுப்பைச் சுற்றி கையை போட்டுக் கொண்டாள்.
அதற்காகத்தான் அவன் செய்த நாடகம் என்பதை புரிந்து கொண்டாலும்... அந்த அணைப்பை விலக்க மனம் வரவில்லை. நேற்றிரவு அவன் அணைப்பில் தன்னை அறியாமலே அமைதி கண்டவளால், இன்று பகலில் மட்டும் அவனை விலக்கி நிற்க முடியவில்லை. அவள் மனம் மெதுவாக அவனை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்திருந்தது.
அதை உணர்ந்த இனியனின் உதட்டோரத்தில் திருப்தியான புன்னகை மலர்ந்தது.
மகா அக்ரோ பிரைவேட் லிமிடெட். உள்ளே நுழைந்தவுடன் காவ்யா ஓடிவந்தாள்..
"காவ்யா... மதுராகிட்ட எல்லா அளவையும் கேட்டுக்கோ. அதை நம்ம புரொடக்ஷனுக்கு ஏத்த மாதிரி நீ கால்குலேட் பண்ணிக்கோ... ஏய் கால்குலேட் பண்ணிப்பியா.. இல்லை அகிலனுக்கு கால் பண்ணி கேட்பியா?" என்றான் கிண்டல் தோணியில்.
"மச்சான்.. அதெல்லாம் கெட்டிக்காரி நான். உங்க வேலையை பாருங்க." என்று அதட்டிவிட்டாள்.
"மதுரா... நீ வீட்டுல அரைக்கற மசாலா, ஊறுகாய், வத்தல், வடகம் எல்லாமே சூப்பர்னு எனக்கு தெரியும். உன் பக்குவம் இங்க நமக்கு ரொம்ப யூஸாகும். காவ்யாவிடம் நீ அளவெல்லாம் சொல்லு."என்று சொல்லிவிட்டு கணக்கு பார்க்கும் இடத்துக்கு சென்றான்.
காவ்யாவும் நோட்டுப் புத்தகத்தை எடுத்தாள்.
"மதுரா... பத்து பேருக்கு சாம்பார் பொடி எப்படி? ரசம் பொடி எப்படி? மிளகாய்த்தூள்? இட்லி பொடி? ஒவ்வொன்னும் சொல்லு. நான் அதுக்கு ஏத்த மாதிரி நாங்க எத்தனை பேக்கேட் செய்யணுமோ, அந்த அளவுக்கு கால்குலேட் பண்ணிக்கறேன்" என்று காவ்யா கூற, மதுரா அமைதியாக ஒவ்வொரு பொருளின் அளவையும் சொல்ல ஆரம்பித்தாள்.
அளவெல்லாம் மதுரா கூற கூற காவ்யா தனி தனியாக குறிப்பெடுத்துக் கொண்டாள். இதில் மதுராவோ "இது நைசா அரைக்கணும்... இது கொரகொரப்பா இருந்தாதான் டேஸ்ட். இந்த மிளகாய்க்கு இந்த அளவு தனியா. வெந்தயம் அதிகமா போடக்கூடாது. கசக்கும்." என்று கூற காவ்யா அனைத்தையும் கவனமாக எழுதிக் கொண்டாள்.
சிறிது நேரத்தில், "சூப்பர் மதுரா... இப்போ இதை நான் கிலோ கணக்குல கன்வர்ட் பண்ணிக்கறேன்."என்றாள். அனைத்தையும் சொல்லிவிட்டு மதுரா இயல்பாக இனியனைத் தேடினாள்.
இப்போதுதான் அவள் கவனித்தாள்.. அவன் தன்னை இங்கே கொண்டு வந்துவிட்டு, ஒரு வார்த்தையும் சொல்லாமல் தூரத்தில் நின்று வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.
ஆனால் அவன் பார்வை மட்டும் அவ்வப்போது அவளைத் தேடி வந்து கொண்டேயிருந்தது.
அந்த பார்வையை உணர்ந்த மதுராவின் உதடுகளில், அறியாமலேயே ஒரு மென்மையான புன்னகை மலர்ந்தது.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
மதுர ஜில்லா மச்சானே !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 65)
அடேயப்பா... ? எப்படி இருந்த இனியன் எப்படி மாறிட்டான்..?
ஓரத்துல இருந்தாலும் அவன் பார்வை எல்லாமே மதுரா மேலத்தான் இருக்கு. அதுலயும் ஒரே லவ்ஸ் அண்ட் ரொமான்ஸ் தான் தெரியுது, போறப்போக்கைப் பார்த்தால் காத்து வாக்குல ஒரு காதல்'ன்னு டைட்டிலையே வாங்கிடுவான் போல. தவிர, இனியன் போற ஸ்பீடைப் பார்த்தால் அகிலனையே பீட் பண்ணிடுவான் போலயிருக்கு.
பட்.. இந்த இனியனை ரொம்பவே பிடிச்சிருக்கு.
😀😀😀
CRVS (or) CRVS 2797
-
மதுர ஜில்லா... மச்சானே!-28
7 days ago
-
மதுர ஜில்லா... மச்சானே-43
3 weeks ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-67
3 weeks ago
-
மதுர ஜில்லா... மச்சானே-70 (முடிவுற்றது)
3 weeks ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-39
3 weeks ago
- 25 Forums
- 330 Topics
- 1,589 Posts
- 1 Online
- 420 Members
