தகிக்கும் நிலவொன்று-35
அத்தியாயம்-35
ருத்ரன் அங்கேயே நின்றிருந்தான். ஷ்ரத்தா சென்ற திசையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவள் சொன்ன ஒரு வார்த்தை மட்டும் காதுக்குள் திரும்பத் திரும்ப ஒலித்தது.
'செத்துப் போயிடலாம்னு கூட சில நேரம் தோணுது.' என்றவளது பேச்சை கேட்டு, 'ச்சே..." என்று தலையை அழுத்திப் பிடித்தான்.
அப்போது யதுநந்தன் அவன் முன் வந்து நின்றான்.
"போதுமாடா..." என்றான் அழுத்தமான குரலில். இம்முறை மரியாதை எல்லாம் தரவில்லை. அந்தளவு யதுநந்தனும் ஷ்ரத்தா பேசியதால் ருத்ரன் மீது கோபமாக இருந்தான்.
ருத்ரன் புரியாமல் அவனைப் பார்த்தான்.
"என் மேல என்ன கோபம்?" என்று புரியாது விழித்தான்.
"சத்ரின் உயிரோட இருக்கானா... இல்லையான்னு கேட்டு கேட்டு...
இங்க ஒருத்தி உயிரோட நடைப்பிணமா மாறிட்டா. அது கூட உனக்கு புரியல." ருத்ரனின் முகம் இறுகியது.
"நான்..நான் என்ன பண்ணேன்?" என்றான் ருத்ரன்.
"என்ன பண்ணலையா? சாவு பயம்னு தெரிஞ்சும் வெளியே நடமாடுறா ஷ்ரத்தா.. ராயன் மட்டும் இல்ல... இப்ப தியாவும் இருக்கா. இரண்டு குழந்தைகளை விட்டுட்டு கூட சாகணும்னு பேசுறா. அதுக்கு அர்த்தம் என்ன தெரியுமா?அவ விரக்தியோட வாழறா." யதுநந்தனின் குரல் இன்னும் கடினமானது.
"ஒரு பக்கம் கண்ணுக்கு தெரியாத எதிரி. ஸ்டீபனோட ஆட்கள் அவளை கொல்ல துரத்துறாங்க.மறுபக்கம்... நீ கண்ணுக்கு தெரிஞ்சு 'காதலிக்கிறேன்'ன்னு சொல்லி அவ மனசை தினமும் காயப்படுத்துற. நிஜமாவே ட்ரெயினிங் முடிச்சு வந்த போலீஸ்தானா நீ?ஒரு பெண்ணை எப்படி நடத்தணும்னு கூட தெரியல." என்று திட்டினான்.
ருத்ரனுக்கும் கோபம் வந்தது. "ஏய்... நான் என்னடா பண்ணேன்? நான் காதலிக்கிறேன்னு சொன்னேன்.
அதுக்கு அப்புறம் அவளை தொந்தரவு பண்ணல. அவ பின்னாடி சுத்துறதே அவ பாதுகாப்புக்காகத்தான்." ஒரு நொடி நிறுத்தியவன்,
"இவதான்... சத்ரியனை கண்மூடித்தனமா காதலிச்சுட்டு இருக்கா. அவன் என்ன பெரிய யோக்கியனா? தனக்கு கீழ வேலை பார்த்த வினோத்தோட காதலியான ஹரிணியையே மேட்டர் பண்ணி குழந்தையை தந்திருக்கான். அவனை போய் உருகி உருகி இவ காதலிக்கறா. இவ காதலுக்கு கொஞ்சமும் தகுதியில்லாதவன் அந்த சத்ரியன்." என்று பேசினான்.
யதுநந்தனோ "வார்த்தையை அளந்து பேசு. ஹரிணி ஒரு வாய் பேசமுடியாத ஊமை.
வினோத் சத்ரியனிடம் அறிமுகப்படுத்த அன்னிக்கு கூட்டிட்டு வந்திருக்கான்.
சத்ரியன் தினம் ஒருத்தியோட வாழறவன். அதனால அவளை வினோத் அழைச்சிட்டு வந்த பெண்ணுனு நினைச்சு தப்பா நடந்திருக்கான்.
மேபீ... வினோத் காதலின்னா அவன் தப்பா நடந்திருக்கவே மாட்டான்.
ஓகே.. அப்படின்னாலும் அது பெரிய தப்புன்னே வச்சிக்கோ.. யாரும் அதை நியாயப்படுத்த முடியாது. ஆனா.. அதுக்கப்புறம் என்ன நடந்துச்சுன்னு உனக்கு தெரியாது." ருத்ரன் அமைதியாக நின்றான்.
யதுநந்தனோ "அதுக்காகத்தான் வினோத் பழி வாங்க முயற்சி பண்ணான். சத்ரியன் அவனை சுட்டான். ஷ்ரத்தாவால தான் வினோத் உயிர் பிழைச்சான்.
பிறகு ஹரிணியோட சேர்ந்து வாழ ஆரம்பிச்சான்.
அதுக்கு முன்ன இருந்த அந்த இரண்டு வருஷ இடைவெளியில்தான் தியா பிறந்திருக்கா. இதை எல்லாம்...
ஷ்ரத்தாவே அழுதபடி சிங்கப்பூர்ல சொன்னா." ருத்ரன் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான்.
"நீ ஷ்ரத்தாவை தினமும் காயப்படுத்துற ருத்ரன். காதல் ஒன்னும் காயப்படுத்தி வாங்க முடியாது.
நான் காதலிக்கிறேன் நீயும் காதலினு சொல்லி அழுத்தம் தர்றதுயில்லை காதல். நீ காதலிக்காவிட்டாலும் நான் காதலிப்பேன்னு நிற்கறது."
யதுநந்தன் தலைகோதி, "சிங்கப்பூர்ல ஷ்ரத்தாவை கொல்ல இரண்டு பேர் வந்துட்டாங்க. ஒருத்தன் தப்பிச்சான். இன்னொருத்தன்
'ஸ்டீபன்' என்ற பெயரை சொல்லிட்டு அவனும் தப்பிச்சிட்டான். நானே அங்க வந்தவங்க இங்க வர எவ்ளோ நேரமாகும்னு பயந்துட்டு இருக்கேன்.
அவ திவாகர் சார் வீட்ல இல்லாம இப்ப சத்ரியன் பங்களாவுக்கு போனதும் அந்த காரணத்துக்காக தான். அப்படி தனியாயிருக்கறவ போல்டா இருக்கணும். ஆனா அவ துவண்டுட்டு வர்றா." என்று இடிந்து போய் நின்றான்.
ருத்ரனுக்கோ ஸ்டீபன் என்ற அந்த பெயர் கேட்டதும் சிந்தனை மாறியது.
"ஸ்டீபனா?" என்று உச்சரிந்து கேட்க, "ஆமாம். அந்த பேரை கேட்டப்ப... ஐரின் காணாம போன விஷயத்தோட சம்பந்தம் இருக்கும்னு ஷ்ரத்தா சொன்னா.
முடிஞ்சா... அந்த ஸ்டீபனை பத்தி ஏதாவது துப்பு எடு. அதுதான் இப்ப முக்கியம்." அதைச் சொல்லிவிட்டு யதுநந்தன் தனது காரை நோக்கி நடந்தான்.
ருத்ரன் மட்டும் அங்கேயே நின்றிருந்தான். "ஸ்டீபன்..."என்று மெதுவாக முணுமுணுத்தான். அந்த பெயர்... ஏற்கனவே ஒருமுறை அவன் காதில் விழுந்திருந்தது.
அப்போது கமிஷனர் நெல்சனிடம் கேட்டிருந்தான்.
அவரோ 'உன் வேலையை மட்டும் பார் ருத்ரன்.
அது நாம நுழைய முடியாத கோட்டை. சத்ரியனே தேடி போய் இப்ப அவனே இல்லையென்ற வரை போன இடம்' என்று அவர் பேச்சையே முடித்திருந்தார்.
அதன்பிறகு அந்த விசாரணையை தொடரவே முடியவில்லை. ஆனால்...
இப்போது நிலைமை வேறு. ஆறு மாதங்களுக்கு முன்பே புதிய கமிஷனர் பொறுப்பேற்றிருந்தார். 'அவர்கிட்ட கேட்டா ஏதாவது தகவல் கிடைக்குமா? தன்னை இந்த வழக்கில் விசாரிக்க அனுமதி அளித்து, ஏதாவது உதவுவாரா?' என்று யோசித்தபடியே வீட்டிற்கு திரும்பினான்.
வீட்டிற்குள் நுழைந்ததும் கீர்த்தனா அவன் முகத்தைப் பார்த்தே ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்தார்.
"என்னப்பா ஒரே அமைதியா இருக்க?" ருத்ரன் மெதுவாக அமர்ந்தான்.
ஷூ சாக்ஸை கழட்டி வைத்து சட்டை பட்டனை திறந்தவாறு, "அம்மா எனக்கு ஒரு உதவி செய்வீங்களா?" என்றான்.
"சொல்லுப்பா." என்றார்.
"ஷ்ரத்தாவை ஒருதடவை பார்த்து பேசிட்டு வர்றீங்களா?" என்றான். கீர்த்தனா அதை கேட்டு புருவம் சுருக்கினார்.
"எதுக்கு?" என்று கடுகடுப்பாக கேட்க, ருத்ரன் அவள் மனநிலை அவள் சொன்ன வார்த்தைகள் அனைத்தையும் கூற அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த கீர்த்தனா,
"சத்ரியனுக்கு பொண்ணு இருக்கா? அந்தக் குழந்தையையும் ஷ்ரத்தா வளர்க்கிறாளா? அட.. அவனுக்காக இந்த பொண்ணு அவ வாழ்க்கையை வீணாக்குவா போலயே." என்று பொறும, ருத்ரன் மெதுவாக
"அம்மா... அவன் நல்லவனா கெட்டவனா அது வேற விஷயம். ஆனா...
தியா மட்டும் எந்தத் தப்பும் பண்ணல. அதோட சத்ரியனோட குழந்தைனு தெரிந்தும் விட்டுட்டு வருவாளா?" என்று குழப்பத்தில் இருந்தான்.
கீர்த்தனா ஆழமாக மூச்சை இழுத்தார்.
"சரி... நானே போய் பார்த்துட்டு வர்றேன்' என்றார். தனக்கும் அவளிடம் பேசவேண்டியது இருந்தது.' என்பதை மனதில் நினைத்தார்.
ருத்ரனின் முகத்தில் பல நாட்களுக்குப் பிறகு சிறிய நிம்மதி தோன்றியது.
சூரியன் மறையும் மாலை நேரம்.
சத்ரியனின் பங்களாவை சுற்றியிருந்த உயரமான மரங்கள், அந்த இடம் முழுவதையும் குளிர்ச்சியாக வைத்திருந்தன.
ஒரு ஆட்டோ மெதுவாக அந்த தெருவுக்குள் நுழைந்தது.
உள்ளே அமர்ந்திருந்த கீர்த்தனா, ஜன்னல் வழியாக வெளியே பார்த்தார்.
ருத்ரன் கொடுத்த முகவரியை பலமுறை பார்த்து உறுதி செய்த பிறகே இங்கே வந்திருந்தார்.
"இந்த தெரு தானா? இந்த வீடா...?" என்று தனக்குத்தானே முணுமுணுத்தார்.
ஆனால்.. அந்த தெருவை நெருங்குவதற்குள் ஆட்டோவை இரண்டு கருப்பு நிற எஸ்யூவி வாகனங்கள் வழிமறித்தன.
அடுத்த நொடிகருப்பு பேண்ட், வெள்ளை சட்டை, கருப்பு ஓவர்கோட் அணிந்த நான்கு பாதுகாப்பு வீரர்கள் வேகமாக வந்து நின்றனர்.
"யாரைப் பார்க்கணும்?" ஒருவன் மரியாதையாக கேட்டான்.
கீர்த்தனா சற்றே திகைத்தார். "நான் ஷ்ரத்தாவைப் பார்க்க வந்திருக்கேன்." என்றார்.உங்க பேர்?" என்று கேட்க,
"கீர்த்தனா."
"அப்பாயின்ட்மென்ட் இருக்கா மேம்?" என்று கேட்க
"இல்லப்பா... சொல்லிட்டு வரல."
அவன் உடனே வயர்லெஸில் ஏதோ பேசினான்.
மற்றொருவன் ஆட்டோவின் உள்ளேயும், வெளியேயும் ஒருமுறை பார்வையிட்டான். வாகனத்தின் அடிப்பகுதியை அண்டர் வெஹிக்கிள் ஸ்கேனர் வைத்து சோதித்தான்.
அதன் பிறகு தான் "சாரி மேம். ஆட்டோ உள்ளே அனுமதி இல்லை. நீங்க மட்டும் உள்ள போங்க." என்று வழிவிட்டனர்.
ஆட்டோவிற்கு பணம் தந்து இறங்கி, இன்னும் கொஞ்சம் தூரம் உள்ளே வந்தார்.
அங்கே... முதல் கேட்.உயரமான இரும்புக் கதவு. அதன் இருபுறமும் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வீரர்கள்.
மீண்டும் விசாரணை துவங்கியது. "யாரைப் பார்க்க வந்திருக்கீங்க?" என்றதும்,
"ஷ்ரத்தா மேமை. பார்க்க வந்திருக்காங்க. மேடம் அனுமதி வழங்கியாச்சு" என்று பாடிகார்ட் கீர்த்தனா பேசும் முன் உரைத்தான்.
அந்த பெரிய இரும்புக் கேட் மெதுவாக திறந்தது.
அந்த நொடி கீர்த்தனாவின் கண்கள் வியப்பில் விரிந்தன.
சினிமாகளிலும், நாடகத்திலும் கண்ட பங்களாவை விட பெரிதாக இருந்தது.
கீர்த்தனா இன்று தான் இது போன்ற வீட்டையே கண்ணால் காண வாய் பிளந்து நடந்து வந்தார்
அவ்வளவு பெரிய வளாகம். இருபுறமும் செம்மையாக வெட்டப்பட்ட புல்வெளி. நடுவே நீரூற்று. வெளிநாட்டு அலங்கார மரங்கள். ஒவ்வொரு மூலையிலும் பாதுகாப்பு கேமராக்கள்.
சிறிது தூரத்திற்கு ஒருவராக பாதுகாப்பு வீரர்கள். அவர்கள் இயர்பீஸ் போட்ட பாடிகார்ட்கள் மெதுவாக ரோந்து சென்றனர்.
'செத்து போனவனோட வீட்டுக்கு இவ்வளவு பாதுகாப்பா?' என்று மனதிற்குள் நினைத்தார்.
'உயிரோட இருந்திருந்தா... எப்படியிருக்கும்... என்றவரின் எண்ணமோ 'தன் கணவனை கொன்றவனின் வீடு' என்று உறுத்தியது.
ஹாலை நெருங்கும் போது, இரண்டு பாதுகாப்பு வீரர்கள்.
ஒருவர் கதவை திறந்தார். வாங்க மேம்." என்று மரியாதையாக அழைத்துச் சென்றார்.
உள்ளே காலடி வைத்த கீர்த்தனா ஒரு நொடி அப்படியே நின்றுவிட்டார்.
அது வீடாகவே தெரியவில்லை. ஐந்து நட்சத்திர ஹோட்டல் லாபியை விட பிரம்மாண்டமாக இருந்தது. உயரமான மேற்கூரை.
பளிங்குக் கற்கள். மிகப்பெரிய கண்ணாடி ஜன்னல்கள். அழகான ஓவியங்கள். விலை உயர்ந்த சோபாக்கள். முழு வீடும் ஏசியின் குளிரில் சிலிர்த்துக் கொண்டிருந்தது.
"இவ்வளவு பெரிய வீட்ல... மனுஷங்க இருக்காங்களா." என்று மெதுவாக முணுமுணுத்தார்.
அவரை ஹாலில் இருந்த சோபாவில் அமர வைத்தனர்.
அமர முயன்றபோது... அருகில் இருந்த கண்ணாடி தடுப்பை தெரியாமல் அதில் லேசாக மோதினார்.
"அச்சோ கண்ணாடி உடைந்திடுச்சா."என்று தடுமாறியவரை, "அது புல்லட் ப்ரூம் கண்ணாடி மேம். எளிதில் உடையாது. நீங்க பார்த்து உட்காருங்க மேம்..." என்று ஒரு பெண் பிடித்து நிறுத்தினாள்.
"பரவாயில்லம்மா..." என்று சங்கடமாக சிரித்தார்.
சில நிமிடங்கள்...
அமைதியாக அமர்ந்திருந்தார்.
கடிகாரத்தைப் பார்த்தார். கீர்த்தனா இங்கு வந்து பத்து நிமிடங்கள் தான் ஆகியிருந்தது.
ஆனால் அவருக்கு ஏதோ ஒரு மணி நேரமாக தனியாக அமர்ந்திருப்பது போல தோன்றியது. அப்போது...
வெள்ளை கையுறைகள் அணிந்த ஒரு பெண் டிராலியை தள்ளிக் கொண்டு வந்தாள்
அதில் குளிர்ந்த பழச்சாறு, பழச்சாலட், குக்கீஸ். சிறிய கேக், உலர் பழங்கள், மினரல் வாட்டர். எல்லாம் அழகாக அடுக்கப்பட்டிருந்தது.
"மேம்.. ஜூஸ் எடுத்துக்கோங்க." என்றாள்.
கீர்த்தனா உடனே மறுப்பாய் கையை அசைத்தார்.
"வேண்டாம்மா... தண்ணி மட்டும் போதும்." என்றதும். அந்த பெண் சங்கடமாக சிரித்தாள்.
"மேம்...நீங்க வெறும் தண்ணி மட்டும் குடிச்சீங்கன்னு தெரிஞ்சா... ஷ்ரத்தா மேம் எங்களைதான் திட்டுவாங்க." என்றதும் கீர்த்தனா ஆச்சரியமாக பார்த்தார்.
"இன்டர்காம்லேயே... 'அவங்க எனக்கு அம்மா மாதிரி... நல்லா பார்த்துக்கோங்க. இதோ வந்துடுறேன்...'ன்னு சொல்லிட்டாங்க." என்றதும் அந்த வார்த்தை கீர்த்தனாவின் மனதை லேசாக தொட்டது.
"சரிம்மா. இப்ப தண்ணி போதும். அப்பறம் சாப்பிட நானே எடுத்துக்கறேன்." என்று கண்ணாடி கோப்பையை எடுத்தார்.
அந்த நேரம் மாடிப்படியில் இருந்து காலடி சத்தம் கேட்டது. கீர்த்தனா இயல்பாகவே திரும்பிப் பார்த்தார்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
-
தகிக்கும் நிலவொன்று.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 35)இப்ப மட்டும் ருத்ரன் கேட்டவுடனே புது கமிஷ்னர் ஸ்டீபனை கண்டு பிடிக்க பர்மிஷன் கொடுத்திடுவாரா என்ன ?
இப்பவும் திருடன் பெருசா, போலீஸ் பெருசான்னு கேட்டால்
திருடன் தான் பெருசுங்கிற நிஜத்தை, நிதர்சனத்தை ஒத்துக்கிட்டே ஆகணும் தானே ?😢😢😢
CRVS (or) CRVS 2797
-
தகிக்கும் நிலவொன்று-50 (முடிவுற்றது)
2 weeks ago
-
தகிக்கும் நிலவொன்று-49
2 weeks ago
-
தகிக்கும் நிலவொன்று-48
2 weeks ago
-
தகிக்கும் நிலவொன்று-47
2 weeks ago
-
தகிக்கும் நிலவொன்று-46
2 weeks ago
- 25 Forums
- 330 Topics
- 1,589 Posts
- 2 Online
- 420 Members
