Forum

தகிக்கும் நிலவொன்று...
 
Notifications
Clear all

தகிக்கும் நிலவொன்று-34

8 Posts
8 Users
3 Reactions
187 Views
(@praveena-thangaraj)
Posts: 265
Member Admin
Topic starter
 
[#304]

அத்தியாயம்-34

சத்ரியனின் பங்களாவிற்குள் தீபா ஓட்டி வந்த கார் நுழைந்தது. 

பல நாட்களாக மூடியிருந்த இரும்பு கேட் மெதுவாக திறக்க, உள்ளே வரிசையாக நின்றிருந்த பாதுகாப்பு வீரர்கள் அனைவரும் மரியாதையாக நிமிர்ந்து நின்றனர்.

"ஷ்ரத்தா மேம் திரும்ப வந்துட்டாங்க." என்ற தகவல் கணநேரத்தில் பங்களா முழுவதும் பரவியது.

கார் நின்றதும் வீட்டு வேலைக்காரர்கள் முதல் சமையல்காரர்கள் வரை அனைவரும் வாசலுக்கு ஓடி வந்தனர்.

"வாங்க மேம்... எப்படி இருக்கீங்க மேம்..." என்றபடி ஒவ்வொருவரும் கண்கலங்க வரவேற்றனர்.

அவர்களின் முகத்தில் தங்கள் ராணி மீண்டும் வீட்டிற்கு வந்துவிட்டார் என்ற மகிழ்ச்சி தெரிந்தது. எத்தனை நாள் வெறும் கட்டிடத்தில் வேலை செய்வது? கட்டிடத்தின் உரிமையாளர் வரவும், அத்தனை மகிழ்ச்சி. 

ராயனைக் கண்டதும் அனைவரின் முகமும் கூடுதலாக மலர்ந்தது.

"சத்ரியன் பாஸோட குழந்தை. நம்ம சின்ன பாஸ். எவ்வளவு வளர்ந்துட்டாரு..." என்று ஒருவர் தூக்கிக் கொள்ள முயல, ராயன் சிரித்தபடி நழுவி ஓடிவிட்டான்.

அப்போது அங்கிருந்தவர்கள் தியாவைக் கவனித்தனர்.

"மேம்... இந்த குழந்தை...?" என்று ஷ்ரத்தாவுக்கு நன்கு அறிந்த பாடிகார்ட் தயக்கமாக கேட்டனர்.

ஷ்ரத்தா மெதுவாக தியாவின் தோளில் கை வைத்தாள்.

"இவளும் இனிமே இந்த வீட்டுப் பொண்ணுதான். உங்க பாஸோட பொண்ணு" என்றதும் அதற்கு மேல் யாரும் எதுவும் கேட்கவில்லை.

அந்த ஒரு வார்த்தையே போதுமானதாக இருந்தது. "ஓகேமேம்.." என்று அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

சில நொடிகள் கழித்து, அந்த பங்களாவின் பாதுகாப்புத் தலைவன் வந்து நின்றான்.

"மேம்." ஷ்ரத்தாவின் முகம் கடினமானது. "இன்னயிலயிருந்து பாதுகாப்பை இரட்டிப்பாக்குங்க. இந்த வீட்டை சுற்றி இருபத்திநாலு மணி நேரமும் கண்காணிப்பு இருக்கணும். யாரையும் முழுசா நம்பாதீங்க.

இந்த இரண்டு குழந்தைகளுக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது." என்று தெளிவாக எடுத்துரைத்தாள். 

"யெஸ் மேம் கண்டிப்பா பாதுகாப்பை பலப்படுத்துவோம்." என்றவன் உடனே உத்தரவை நிறைவேற்ற ஓடினான்.

அதற்குள் ராயனும் தியாவும் பங்களாவை முழுவதும் சுற்ற ஆரம்பித்துவிட்டனர்.

தோட்டத்தில் இருந்த நீரூற்றை பார்த்து ஆச்சரியப்பட்டான் ராயன். வண்ணத்துப்பூச்சியை துரத்தினாள் தியா. 

சில நேரத்தில்... இருவரும் சேர்ந்து ஓடிப்பிடித்து நீச்சல் தொட்டியை சுற்றி விளையாட ஆரம்பித்தனர்.

அவர்களின் சிரிப்பு அந்த வீட்டில் பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஒலித்தது.

அந்த காட்சியை பார்த்த ஷ்ரத்தாவின் கண்களில் அறியாமலே கண்ணீர் மின்னியது.

மெதுவாக அவள் தனது அறைக்குள் நுழைந்தாள். கதவை லேசாக சாத்திவிட்டு ஜன்னல் அருகே வந்து நின்றாள்.

கீழே ராயனும் தியாவும், தோட்டம் முழுவதும் ஓடிக்கொண்டிருந்தனர்.

அவர்களை பார்த்தபடியே நின்றவளின் இதழில், மெல்லிய புன்னகை பிறந்தது.

அந்த நேரம் பின்னால் இரண்டு வலிமையான கரங்கள் அவளை அணைத்தன.

"பார்க்க ரொம்ப அழகாயிருக்குல." என்று சத்ரியனின் குரல்.

ஷ்ரத்தாவின் இதயம் அதிவேகமாக துடித்தது.

சத்ரியன் தாடை அவளது தோளில் உரசியது. "நம்ம குழந்தை இப்படியே ஓடியாடி விளையாடுறத... அதுக்கு பின்னாடி பாதுகாப்புக்கு பத்து பாடிகார்ட் சுத்துறத.. பார்க்க செமையா இருக்கு" அவன் மெதுவாக அவளது சங்குக் கழுத்தில் இதழ் பதித்தான்.

ஷ்ரத்தாவுக்கு மனமெங்கும் உற்சாகம் பொங்கியது.

"இன்னொரு பொண்ணு பெத்துப்போமாடி..." என்றவன் பேச்சில் வெட்கத்தில் கண்களை மூடிய ஷ்ரத்தா.

"சொல்லு ஷ்ரத்தா.  பொண்ணு பெத்துப்போமா?" என்றான்.

"ஒன்னுயில்ல... இரண்டு கூட பெத்துக்கலாம்..." என்று திரும்பினாள்.

அடுத்த நொடி அவள் முகம் உறைந்தது. அங்கே யாருமே இல்லை. காற்று மட்டும்... திரையை அசைத்துக் கொண்டிருந்தது.

"ச... சத்ரியா..." என்ற குரலோடு அவள் அப்படியே தரையில் மண்டியிட்டு உடைந்து அழுதாள்.

எவ்வளவு நேரம் கடந்ததோ தெரியவில்லை. மெல்ல எழுந்து அறையை சுற்றிப் பார்த்தாள்.

கட்டிலின் அருகில் சத்ரியன் நின்றிருந்தான். கருப்பு பேண்ட் மட்டும் அணிந்திருந்தான். மேலே சட்டை எதுவும் அணியவில்லை. 

செதுக்கி வைத்த உடற்கட்டில், வயிற்றில் தையல் போட்டிருந்த நீண்ட வடு தெளிவாக தெரிந்தது.

ஒரு கையில் மது கண்ணாடி. மற்றொரு கையில் சிகரெட். அவன் அமைதியாக அறைக்குள் நடந்தான். ஷ்ரத்தா பதறி அவன் அருகே ஓடினாள்.

"சத்ரியா... குழந்தைகள் இருக்காங்க... இப்பவும் குடிப்பீங்களா.? என்று அவன் கையில் இருந்த கண்ணாடியை தட்டிவிட முயன்றாள்.

அவளது கை வெறுமனே காற்றை மட்டுமே தொட்டது.

"ஸ்மோக் பண்ணாதீங்க... உங்களுக்கு உடம்பு இன்னும் சரியாகல..." என்று அவன் சிகரெட்டை பிடுங்க முயன்றாள்.

அதுவும் வெறுமை. அவள் மட்டும் தனியாக பேசிக்கொண்டிருந்தாள்.

அந்த நேரம் "மேம்..." என்று நந்திதா உள்ளே வந்தாள். ஷ்ரத்தா திரும்பிப் பார்த்தாள்.

"யார்கிட்ட பேசுறீங்க மேம்...?" என்ற நந்திதாவின் கேள்வி, ஷ்ரத்தாவை நிஜ உலகிற்கு இழுத்து வந்தது.

அறை முழுவதும் அவள் மட்டுமே இருந்தாள். சத்ரியன் இல்லை. ஆனால் அவளுக்கு அவன் ம்டடுமே அவ்வறையில் சுழல்வதாக தோன்றியது. ஷ்ரத்தாவின் கண்களில் மீண்டும் கண்ணீர் பெருகியது.

அதை கவனித்த தீபா. நந்திதாவை வெளியே செல்லுமாறு கண்களால் சைகை செய்தாள். நந்திதா அமைதியாக வெளியேறினாள்.

தீபா மட்டும் ஷ்ரத்தா அருகில் வந்து நின்றாள்.

"மேம்.. இந்த வீட்டுக்குள்ளயே இருந்தா.. இந்த நினைவுகள் இன்னும் உங்களை வதைக்கும். காலேஜ் போகலாமா...?" என்றாள். 

ஷ்ரத்தா மெதுவாக கண்ணீரை துடைத்தாள். ஜன்னல் வழியாக, வெளியில் விளையாடும் இரண்டு குழந்தைகளையும் பார்த்தாள்.

அவர்களுக்காக தான் மீண்டு நிற்க வேண்டும். அவள் மெதுவாக தலையசைத்தாள்.

"ஆமா.. காலேஜிக்கு போறேன்." என்று தலையாட்டினாள். 

  தீபாவுக்கு சிங்கப்பூரில் நடந்த களோபரம் யாரோ கொலை செய்ய முயன்றது எல்லாம் தெரியாதே. அதனால் கல்லூரிக்கு அழைத்திருந்தாள் 

வெள்ளை நிற சுடிதாரில் கழுத்தில் ஸ்டெதஸ்கோப் தொங்க, நான்காம் ஆண்டு ஆரம்பிக்கும் சமயம், கிளினிக்கல் போஸ்டிங்கிற்காக மருத்துவக் கல்லூரிக்குள் நுழைந்தாள் ஷ்ரத்தா.

இனி புத்தகங்கள் மட்டும் இல்லை. மருத்துவமனை வார்டுகள்... நோயாளிகளின் கேஸ் ஹிஸ்டரி, டாக்டர்களுடன் ரவுண்ட்ஸ். கிளினிக்கல் போஸ்டிங்குகள் என்று ஒவ்வொரு நாளும், ஒரு மருத்துவராக அவளை வடிவமைக்கப் போகும் நாட்கள் தொடங்கியிருந்தன. நிச்சயம் பாதுகாப்பு என்பது கேள்விக்குறி தானா.

இதயத்தில் சத்ரியன் என்ற ஒரு பேஷண்டை தாங்கிய டாக்டராக, பணியில் இறங்கினாள். 

மறுபுறம், நீதிமன்ற வளாகம் வழக்கம்போல் பரபரப்பாக இருந்தது. ஒரு வழக்கை வெற்றிகரமாக முடித்துவிட்டு, கோப்புகளை உதவியாளரிடம் கொடுத்துவிட்டு வெளியே வந்தான் யதுநந்தன்.

அதே நேரத்தில் வேறு ஒரு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு வந்திருந்த ருத்ரன், திரும்பிச் செல்லும் வழியில் அவனை எதிர்கொண்டான்.

"என்ன லாயர் சார்... ஒரு வாரத்துல இரண்டு ஹியரிங் மிஸ் பண்ணிட்டீங்களாமே?" என்று புருவம் உயர்த்திக் கேட்டான்.

யதுநந்தன் லேசாக சிரித்தான்.

"பரவாயில்லை இன்ஸ்பெக்டர். ஒரு கேஸ் மிஸ் ஆனா இன்னொரு நாள் வாதாடலாம். ஆனா... ஒரு உயிர் போயிட்டா திருப்பி கொண்டு வர முடியாது." என்று பீடிகை போட, ருத்ரன் சற்றே குழம்பினான்.

"என்ன சொல்றிங்க?" என்றான் ருத்ரன்

"ஷ்ரத்தாவோட சிங்கப்பூர் போனேன்ல.. அப்ப அவ உயிரை  காப்பாத்தினேன். அதனால கொஞ்சம் வேலையை மிஸ் பண்ணினேன். அதுல எனக்கு எந்த வருத்தமும் இல்லை." என்றான்.‌

"என்னது... ஷ்ரத்தாவை காப்பாத்தினீங்களா?"

அவன் குரலே மாறியது.

யதுநந்தன் சிங்கப்பூரில் நடந்த சம்பவங்களை சுருக்கமாகச் சொன்னான். ஹரிணியின் இறுதி சடங்கிற்கு சென்று தியாவை அழைத்து வந்தது.

அதற்கிடையில் ஷ்ரத்தாவை குறிவைத்து நடந்த கொலை முயற்சி என்று, தான் எப்படி அவளை காப்பாற்றினான் என்பதுவரை அனைத்தையும் கூறினான்.

அதை கேட்ட ருத்ரனின் முகம் இறுகிப் போனது.

"ஸ்டீபன்.. கேங்கா? ஓ மை காட்.. அங்கயே அவளை கொல்ல முயற்சி பண்ணாங்களா?" என்று அதிர்ச்சியாக கேட்டான்

"ஆமாம்." என்றான். 

"அப்போ... இப்ப அவ எங்க இருக்கா?" என்று கேட்க, 

"சத்ரியன் பங்களாவுக்கு திரும்பி போயிருக்கா. பாதுகாப்புக்காக." என்றதும், 

ருத்ரன் ஒரு நிமிடம் நிம்மதி அடைந்தான்.

ஆனால் அடுத்த நொடியே ஏதோ நினைத்து திடுக்கிட்டான்.

"இல்ல..." அவன் தலையை வேகமாக ஆட்டினான்.

"காலையில மெடிக்கல் காலேஜ் வாசல்ல அவளை பார்த்தேனே..." என்றான் ருத்ரன். 

யதுநந்தன் அதிர்ச்சியாக அவனைப் பார்த்தான்.

"கிளினிக்கல் போஸ்டிங்குக்கு வந்திருந்தா. ஷிட்" என்று  திட்டிக் கொண்ட ருத்ரன்,

"அங்க கொல்ல முயற்சி நடந்திருக்குது. இங்க கிளினிக்கல் போஸ்டிங்க்னா பேஷண்ட் பார்க்க ஹாஸ்பிட்டல் முழுக்க சுத்துவாளே. எப்படி அவளை வெளியே அனுப்பினாங்க? அந்த மூன்று பாடிகார்ட்ஸ்என்று பதற்றமாகக் கேட்டான்.

யதுநந்தனும் முகம் மாறினான்.

இருவரும் ஒரே நேரத்தில் தங்கள் வாகனங்களை நோக்கி ஓடினர்.

மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்து தான் வாகனத்தை நிறுத்தினார்கள். 

தீபா, ஷ்ரத்தாவுக்கு அருகிலேயே பாதுகாப்பாக நின்றிருந்தாள்.

கிளினிக்கல் போஸ்டிங் முடிந்து அடுத்த வார்டை நோக்கி நடந்து கொண்டிருந்தாள் ஷ்ரத்தா.

அந்த நேரத்தில் எதிரெதிராக ஓடிவந்தனர் ருத்ரனும், யதுநந்தனும். இருவரும் ஒரே நேரத்தில் அவள் முன் நின்றனர்.

"உன்னை யாரு காலேஜுக்கு வர சொன்னது?" என்று ருத்ரன் கிட்டத்தட்ட கத்தினான்.

யதுநந்தனும் அதே கோபத்தோடு, "ஷ்ரத்தா... சிங்கப்பூர்ல என்ன நடந்துச்சுன்னு மறந்துட்டீங்களா? உயிருக்கு ஆபத்து இருக்கும்போது படிப்பு அவ்வளவு முக்கியமா?" என்று கேட்டான்.

ஷ்ரத்தா அமைதியாக இருவரையும் பார்த்தாள். 'எவ்வளவு நாளுக்கு உயிருக்கு பயந்து வீட்டுக்குள்ளேயே இருக்கணும்?" அவள் குரலில் விரக்தி மட்டுமே இருந்தது.

"இந்த மெடிக்கல் சீட்... எங்க அப்பாவோட உயிர் தான் விலை. அவர் கனவுக்காகத்தான் நான் இன்னும் படிக்கிறேன். அதை பாதியில விட்டுட்டு எப்படி வீட்டுல உட்கார முடியும்?" என்றதும் சில நொடிகள் அமைதியாக இருந்தவள்.

மெதுவாக ருத்ரனைப் பார்த்தாள். "அதோட... நான் இப்படி வெளியே வந்தா... உங்க கணக்குப்படி... சத்ரியன் உயிரோட இருந்தா... எனக்காக வருவான்ல? நீங்க அதை தானே எதிர்பார்க்கறிங்க. முன்ன சத்ரியன் உயிரோட இருக்கானா இல்லையானு என்னை குடைந்து குடைந்து கேட்டிங்களே. எனக்கு ஒன்னுன்னா வருவான். உயிரோட இருந்தா வருவான்" என்று பதிலளிக்க. 

   ருத்ரனின் கோபத்தை வெடிக்க வைத்தது. "அறிவிருக்காடி உனக்கு? அவன் எப்பவோ செத்துட்டான்.

கடலுக்குள்ள விழுந்தவன் இன்னேரம் சுறா மீனுக்கு இரையாயிருப்பான். இன்னும் அவனையே நினைச்சுட்டு இருக்கியா?" அவன் குரல் மருத்துவமனை வழித்தடத்தையே அதிர வைத்தது. ஆனால் ஷ்ரத்தாவின் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை.

யதுநந்தன் மெதுவாக முன்னே வந்தான்.

"ஷ்ரத்தா... ஏன் இப்படி பேசறீங்க? உங்களை நம்பி இரண்டு குழந்தைகள் இருக்காங்க.‌ அவங்களை நினைச்சாவது." என்றதும் அவள் சிரித்தாள்.

அது சிரிப்பு இல்லை. வலியின் வெளிப்பாடு. "பங்களாவுக்குள்ள நடக்கற ஒவ்வொரு அடியிலும்... சத்ரியன் நினைவு தான். ஒவ்வொரு ரூம்லயும்... ஒவ்வொரு மூலையிலும்... அவன் இருக்கிற மாதிரி தோணுது. அதைவிட...

செத்துப் போயிடலாம்னு கூட சில நேரம் தோணுது யது." என்றாள்.

இருவரும் அதிர்ச்சியாக அவளைப் பார்த்தனர். ஷ்ரத்தாவோ கண்ணீரை துடைத்துவிட்டு, "உங்க வேலையை பாருங்க." என்று சொல்லிவிட்டு தீபாவை அழைத்துக் கொண்டு நடந்து சென்றாள்.

தீபாவும் கவலையுடன் அவளைப் பின்தொடர்ந்தாள்.

அவர்கள் இருவரும் கண்களுக்கு மறைந்த பிறகும்.

ருத்ரனும் யதுநந்தனும் அங்கேயே நின்றிருந்தனர்.

"லேடி பாடிகார்ட்ஸை மட்டும் நம்பி... இப்படி உயிரைப் பற்றிய பயமே இல்லாம வெளியே வர்றாளே... கடவுளே..."

என்று ருத்ரன் தலையைப் பிடித்தான்.

யதுநந்தன் ஆழமாக மூச்சை இழுத்தான்.

"அவ உயிரோட இருக்க ஆசைப்பட்டு வெளியே வரல ருத்ரன். விரக்தியில நடமாடுறா. யாராவது வந்து சாகடிச்சிட்டா கூட பரவாயில்லன்னு நினைக்கிற அளவுக்கு அவ மனசு உடைஞ்சிருக்கு." அந்த வார்த்தைகள் ருத்ரனின் உள்ளத்தை பலமாகத் தாக்கின

முதல் முறையாக ஷ்ரத்தாவை பாதுகாப்பது மட்டுமல்ல...

அவளுக்கு வாழ வேண்டும் என்ற எண்ணத்தையும் திரும்பக் கொடுக்க வேண்டும்

என்பது அவனுக்குப் புரிய ஆரம்பித்தது.

-தொடரும். 

-பிரவீணா தங்கராஜ்.

 


 
Posted : August 13, 2026 7:12 am
(@crvs2797)
Posts: 188
Estimable Member
 

தகிக்கும் நிலவொன்று.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 34)

ஷ்ரத்தா சொல்றது உண்மை தான், என்ன தான் பிள்ளைகளுக்காக, கொண்ட கடமைக்காக வாழ நினைச்சாலும், நாம நேசிச்சவங்களை இழந்துட்டு, அந்த நினைவுகளோட மட்டும் வாழ நினைக்கிறது, நரகத்தை விட கொடுமையானது தான். ஷ்ரத்தாவும் இப்ப அப்படியொரு வாழ்க்கையைத்தான் வாழ்ந்திட்டிருக்காள் பாவம்.

😢😢😢
CRVS (or) CRVS 2797


 
Posted : August 13, 2026 8:34 am
(@ambikahashini)
Posts: 47
Eminent Member
 

Nice 👌 sis 


 
Posted : August 13, 2026 9:28 am
(@guna-sundari)
Posts: 138
Estimable Member
 

Omg sharadha pavam. Chatriyian romance so cute. Pls come back chatriyian..kingpin never die. So definitely chatriyian will come and protect his family. Very intresting sis.


 
Posted : August 13, 2026 9:39 am
(@kothaihari)
Posts: 125
Estimable Member
 

சத்ரியன் அவள் கிட்ட வந்துட்டாலே போதும்


 
Posted : August 13, 2026 9:48 am
(@kalidevi)
Posts: 140
Estimable Member
 

shradha voda nilamai romba kastam intha mari manasula ninavugala sumathutu pasangalukaga vazhra vazhkai evlo kodumai theriuma easy ah sollidalam antha edathula iruthu anupavikira vali kandipa mudiyathu


 
Posted : August 13, 2026 10:37 am
(@aishu-selva)
Posts: 31
Eminent Member
 

சத்ரியன் வந்தால் அருமையாக இருக்கும்


 
Posted : August 13, 2026 10:45 am
(@kavi-bharathi-arunkumar)
Posts: 127
Estimable Member
 

Shardha ku ippo ellathaiyum vida Chathriyan venum avan oda presence mattum than aval ah vazha vaikum illa na ipadi than savu kooda vandhu aval ah kootitu pogatha nu nenaika vaikum .


 
Posted : August 13, 2026 4:51 pm

Scroll to Top