தகிக்கும் நிலவொன்று-29
அத்தியாயம்-29
ஹரிணியின் வீட்டின் முன்பு கார் வந்து நின்றது. கார் நின்றும், ஷ்ரத்தா மட்டும் இறங்கவில்லை.
கைப்பைக்குள் இருந்த அந்த மூன்று கடிதங்களையும் இறுகப் பற்றியபடி, கண்களை மூடி அப்படியே சாய்ந்து அமர்ந்திருந்தாள்.
அவளது மூச்சு கூட சீராக இல்லை. அருகில் அமர்ந்திருந்த தியா, ராயன் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்த யதுநந்தன், ஷ்ரத்தாவை சில நொடிகள் அமைதியாகவே கவனித்தான்.
பிறகு "ஷ்ரத்தா..." என்று மெதுவாக அவளை தீண்டி அழைத்தான்.
அவள் அசையவில்லை. அவன் மெதுவாக அவளது தோளைத் தொட்டான். "ஷ்ரத்தா... வீடு வந்துடுச்சு." என்று அந்த மென் தீண்டலில் தான் அவள் கண்களைத் திறந்தாள்.
சுற்றிலும் பார்வையை ஓட்டியவள், ஒரு நொடி எங்கே இருக்கிறோம் என்பதே புரியாமல் இருந்தாள்.
"ஹரிணி வீடு." என்று யதுநந்தன் மெதுவாக கூறினான். அப்போதுதான் நினைவு திரும்பியது.
அவள் மடியில் ராயன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். மறுபுறம் தியா, கார் ஜன்னலில் தலை சாய்த்தபடி அமைதியாக தூங்கிக் கொண்டிருந்தாள்.
அந்த காட்சியை பார்த்தவுடன் ஷ்ரத்தாவின் நெஞ்சு ஏதோ செய்தது. மெதுவாக கதவைத் திறந்து கீழே இறங்கினாள்.
ராயனை தூக்க குனிந்தாள். ஆனால் உடம்பு ஒத்துழைக்கவில்லை. கைகள் நடுங்கின. அதை கவனித்த யதுநந்தன், "நான் தூக்கிக்கறேன்." என்று கூறி ராயனை தனது தோளில் சாய்த்துக் கொண்டான்.
ஷ்ரத்தா மெதுவாக தியாவை நோக்கி குனிந்தாள். குழந்தையை மார்போடு அணைத்தபடி தூக்கிக் கொண்டாள். அந்த நேரம் தூக்கக் கலக்கத்தில், "அம்மா..." என்று தியா முனகினாள்.
அந்த ஒரு வார்த்தை ஷ்ரத்தாவின் இதயத்தை நேராக குத்தியது. ராயன் அம்மா என்று தான் அழைப்பான். ஆனால் தியா அழைப்பில் ஏக்கமும் கலந்திருப்பதை ஷ்ரத்தாவால் உணர முடிந்தது. குழந்தையை இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.
அவளது கண்களில் மீண்டும் கண்ணீர் வழிந்தது. எதுவும் பேசாமல் மூவரும் வீட்டிற்குள் சென்றனர்.
வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்ற யதுநந்தன், ராயனை மெதுவாக மெத்தையில் படுக்க வைத்தான்.
தியா இன்னும் ஷ்ரத்தாவின் தோளிலேயே உறங்கிக் கொண்டிருந்தாள். அவளையும் அருகிலிருந்த மெத்தையில் படுக்க வைத்தாள்.
இரண்டு குழந்தைகளும் அருகருகே உறங்கிக் கொண்டிருந்தனர். அவர்களை சில நொடிகள் பார்த்துக் கொண்டிருந்த யதுநந்தன், "நான் பக்கத்து ரூம்ல இருக்கேன் ஷ்ரத்தா..." என்றான்.
ஷ்ரத்தா விட்டு செல்லாதீர்கள் என்று பயத்துடன் நிற்க, "உனக்கு கொஞ்சம் தனிமை தேவைப்படலாம். அதர்வைஸ் நான் இங்க பக்கத்துல தான் இருப்பேன்" என்று கூறிவிட்டு வெளியே செல்ல முயன்றான்.
ஷ்ரத்தா அவனை பார்த்தாள். தான் சொல்லாமலேயே, தன் மனநிலையை புரிந்து கொண்டு நடந்து கொள்கிறான். அவளுக்காக எதையும் திணிக்கவில்லை. கேள்விகளால் ருத்ரன் போல காயப்படுத்தவும் இல்லை.
ஒரு கணம் அவனை பார்த்து நன்றி சொல்ல வேண்டும் போல தோன்றியது.
ஆனால் இருக்கும் நிலைக்கு வார்த்தைகள் வரவில்லை. யதுநந்தனும் எதுவும் எதிர்பார்க்காமல் வெளியே சென்றான்.
ராயன், தியாவின் அருகில் திரும்பி படுத்து, தூக்கத்திலேயே அவளது கையை பிடித்துக் கொண்டான்.
அந்த காட்சியை பார்த்த ஷ்ரத்தா மெதுவாக புன்னகைக்க முயன்றாள். ஆனால் அந்த புன்னகை பாதியிலேயே கரைந்து போனது.
'ஆண் குழந்தைக்கு அம்மா சாயலும்... பெண் குழந்தைக்கு அப்பா சாயலும்...இருக்கும் என்பார்கள்.' ஏனோ மனதிற்குள் தோன்றியது. மெதுவாக தியாவின் முகத்தை உற்றுப் பார்த்தாள்.
அந்த புருவம், அந்த கண்கள், அந்த மூக்கு, ஏதோ.. ஏதோ மிகவும் பரிச்சயமான முகம். அவளது இதயம் வேகமாக துடித்தது.
"இல்ல..." என்று தலையை பலமாக அசைத்தாள். வேகமாக வாஷ்பேசினுக்குச் சென்று முகத்தில் தண்ணீர் அடித்துக் கொண்டாள். மூச்சை சீராக்க முயன்றாள்.
அப்போது கதவு மெதுவாக தட்டப்பட்டது.
"ஷ்ரத்தா..." என்று யதுநந்தனின் குரல். "உள்ள வாங்க யதுசார்" என்றதும் கதவைத் திறந்து உள்ளே வந்தவன்,
கையில் ஒரு தண்ணீர் பாட்டிலை நீட்டினான். "தண்ணி தேவைப்படும்னு தோணுச்சு." என்று நீட்டவும், அதை வாங்கியவள் அமைதியாக குடித்தாள்.
அந்த நேரம் மெத்தையின் மீது கிடந்த மூன்று கடிதங்கள் யதுநந்தனின் பார்வையில் பட்டது.
'My Husband.'
'Precious Shratha.'
மூன்றாவது கடிதம் மட்டும் ஏற்கனவே திறக்கப்பட்டிருந்தது.
அதை வாசிக்காமல் யதுநந்தன் அமைதியாக பார்வையை திருப்பிக் கொண்டான். அந்த சிறிய செயல் கூட ஷ்ரத்தாவுக்கு மரியாதையாக தோன்றியது.
அவசரமாக அந்தக் கடிதங்களை கைப்பைக்குள் வைத்தாள். யதுநந்தன் எதுவும் கேட்கவில்லை.
"நான் வெளியே இருக்கேன்." என்று மட்டும் கூறிவிட்டு கதவை மூடிச் சென்றான்.
அவன் சென்ற பிறகுதான் ஷ்ரத்தா மெதுவாக தனது கடிதத்தை எடுத்தாள். அவள் கைகள் நடுங்கின. கடிதத்தின் உரையை திறந்தாள்.
அதில் ஆங்கிலத்தில் ஹரிணியின் கையெழுத்து. அவள் மெதுவாக வாசிக்க ஆரம்பித்தாள்.
*Precious Shratha*
வினோத் கூட இருந்தவரைக்கும் இந்தக் கடிதம் உனக்குத் தேவையில்லைன்னு நினைச்சேன். ஆனா அவர் உன் வளைகாப்பு நாளிலிருந்து காணாமல் போனதுக்குப் பிறகு தினமும் காத்திருந்தேன்.
அவர் திரும்பி வருவார்னு நம்பினேன். ராயன் பிறந்த பிறகு அவர் மொத்தமா வரலை... நாளாக நாளாக... அவர் உயிரோட இருக்காரா இல்லையானு பயம்தான் அதிகமாயிடுச்சு.
முன்ன வினோத் ஒரு நாள் வந்து கல்யாணம் பண்ணிக்கலாமானு கேட்ட மாதிரி வருவான்னு எதிர்பார்த்து ஏமாந்தேன்.
இதற்கிடையில் யாரோ சிலர் என்னைத் தொடர்ந்து கண்காணிக்க ஆரம்பிச்சாங்க.
இரண்டு முறை... 'அவன் எங்கே? அவன் உயிரோட இருக்கானா?' ன்னு கேட்டாங்க. இந்த அவன் யாருனு உனக்கு தனியா வரையறுத்து சொல்ல தேவையில்லை. அவனே தான்.
தினமும் வந்து என்னை சித்திரவதை செய்தாங்க. ஒவ்வொருத்தன் ஒவ்வொரு நாள்னு நான் சீரழிய விரும்பலை. அந்த பயத்தோட வாழவோ மூச்சு விடவோ முடியலை. நான் பேச முடியாதவ. யார்கிட்டயும் உதவி கேட்கவும் செய்யலை. உதவி யார் செய்வா?
அதனால... நான் ஒரு முடிவு எடுத்துட்டேன். நான் இல்லாத நிலை வந்தா... தியாவை மட்டும் பார்த்துக்கோ. உன்னால முடிஞ்சா... அவளை உன்னோட கூட்டிட்டு போ. முடியலன்னா... அதே ஆசிரமத்துல விட்டுடு. அங்க அவளை நல்லா பார்த்துப்பாங்க. உன்னாலதான் வினோத் உயிரோட இருந்தார்னு எனக்கு தெரியும். அதுக்கு நான் எப்பவும் நன்றிக்கடன் பட்டிருப்பேன். நான் வாழ்ந்த வாழ்க்கை போதும் ஷ்ரத்தா. இனி முடியலை அவ்வளவு வரை வாசித்தவளின் பார்வை மங்கியது.
கண்ணீர் துளிகள்... கடிதத்தின் மீது விழுந்தன. அவள் மெதுவாக கண்களை மூடிக் கொண்டாள்.
அடுத்ததாக My Husband என்று எழுதப்பட்டிருந்த உறையை எடுத்தாள். அதைப் பிரிக்கவே அவளுக்கு மனம் வரவில்லை.
"ஒருவேளை.. வினோத் அண்ணா உயிரோட இருந்தா.. இந்த லெட்டரை நான் படிக்கிறதே தப்பு' என்ற குற்றவுணர்வு நெஞ்சை அழுத்தியது.
ஆனால் ஹரிணி ஏதோ காரணத்துக்காகவே இதை விட்டுச் சென்றிருக்கிறாள். தனக்கு அதில் ஏதேனும் துருப்பு கிட்டுமா என வாசித்தால் தான் தெரியும். அதனால் அதை வாசிக்காமல் விடவும் முடியவில்லை. நடுங்கும் கைகளால் உறையை திறந்தாள்.
உள்ளே இருந்த மடித்த காகிதத்தை மெதுவாக விரித்தாள்.
அதில்... "Dear Vinoth... என்னை தேடி தேடி வந்து காதலிச்சியேடா... அப்பவே... நீ யாருக்காக வேலை செய்யற, என்ன வேலை செய்றேன்னு ஒரு வார்த்தை சொல்லியிருந்தா நான் உன்னை காதலிச்சிருக்கவே மாட்டேன். ஆனா... காதல் அப்படி இல்லையே, யார்மேல... எப்ப... எப்படி வரும்னு அதுக்கே தெரியாது.
பேச முடியாத என்னை... ஒரு குறையா கூட நினைக்காம, நான் சொல்லாம இருக்குற ஒவ்வொரு உணர்வையும் புரிஞ்சிக்கிட்டு, என்னை காதலிச்ச முதல் மனிதன் நீ தான்.
அதனால தான் உன்னை வெறுக்கவும் முடியல... விட்டு போகவும் முடியல." என்றதும்
ஷ்ரத்தாவின் கண்கள் கலங்கின. அவள் தொடர்ந்து வாசித்தாள்.
"நடுவுல நடந்த சில சம்பவங்கள் என்னோட வாழ்க்கையை... என்னால திரும்பி கூட பார்க்க முடியாத அளவுக்கு மாற்றிடுச்சு. அதுக்கு காரணம் நீதான் வினோத். உன்னை நான் குறை சொல்லலை. ஆனா... நீ அன்னிக்கு என்னை அங்க கூட்டிட்டு போகாம இருந்திருந்தா, என் வாழ்க்கை வேற மாதிரி இருந்திருக்கும்." என்ற போது சத்ரியனோடு அவளுக்கான கசப்பான சூழலை எண்ணி உதட்டை கடித்தாள் ஷ்ரத்தா.
மீண்டும் வாசித்திட பிரித்தாள் "நீ திரும்பி இரண்டு வருடம் கழிச்சு சந்திக்க வந்தப்ப தியா விஷயத்தை சொல்லணும்னு நினைச்சேன் வினோத்.
முடியல. ஒவ்வொரு தடவையும்... வார்த்தை தொண்டைக்குள்ளயே நின்னு போயிடுச்சு." என்றதும் ஷ்ரத்தா அறியாமலே தியாவை திரும்பிப் பார்த்தாள்.
அந்த சிறுமி இன்னும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.
ஹரிணி தொடர்ந்திருந்தாள் "தியா... அவ என்ன பாவம் செய்தா.? இல்ல... எனக்கான தண்டனையா...? இன்னைக்கு வரைக்கும் எனக்கே தெரியல.
அவளை கருவில் இருந்தப்ப அழிக்க என்னால முடியல.
அதே நேரம்... கூடவே வச்சு வளர்க்கவும் முடியல வினோத்.
அவ முகத்தை பார்க்கும் ஒவ்வொரு நிமிஷமும்... நான் மறக்க நினைக்கிற அந்த இருண்ட நாள் ஞாபகம் வந்துடுது. அதனால தான் அவளை ஆசிரமத்துல விட்டேன்."
ஷ்ரத்தாவின் கண்ணீர் கடிதத்தின் மீது சொட்டியது.
"வினோத் நீ குண்டடி பட்டு சிகிச்சை முடிச்சி, கட்டுப் போட்டுக்கிட்டு... என்னை தேடி வந்தப்ப கூட, உன்னை தள்ளி நிறுத்தியது, உன்னை வெறுத்ததால இல்ல.
என்னோட உண்மையை சொல்ல தைரியம் இல்லாததால.
நீ கல்யாணம் பண்ணிக்கலாமானு கேட்டப்ப...
நான் சம்மதிச்சதும்... என் வாழ்க்கையை புதுசா ஆரம்பிக்கணும்னு நினைச்சதால இல்ல. உன் காதலை அவமதிக்க மனசு வரல." என்றதும், ஷ்ரத்தா மெதுவாக உதட்டை கடித்தாள்.
ஹரிணி-வினோத்தின் அமைதியான காதல். இப்போது தான் ஷ்ரத்தாவுக்கு முழுமையாக புரிய ஆரம்பித்தது.
"இப்போ... மறுபடியும் நீ... அவனுக்காக போறேன்னு சொன்னதும்... கோபம் வந்துச்சு.
ஆனா... நீ சொன்ன காரணம் கேட்டதும்... உன் மேல இருந்த கோபம் குறைஞ்சிடுச்சு. நரகத்துக்குள்ள போறது... யாராலயும் முடியாத விஷயம். அதை அந்த 'ராவணன்' செய்யறான். எனக்கு 'அவன்' செய்த தவறை விட, இப்ப அவன் செய்த விஷயம் பெருசா தோனியதால தான் உன்னோட வந்து உதவினேன். 'அவனுக்கு பேவரா' எந்த பொண்ணும் செய்ய மாட்டா.
அவளோட காதலியை காப்பாற்ற.. நான் கெடுக்கப்பட்டதை கோர்ட்ல சொன்னேன்." அந்த வரியை வாசித்ததும்...
ஷ்ரத்தாவின் மூச்சு நின்றது.
'எத்தகைய கடினமான விஷயம். இதை ஹரிணி செய்திருப்பது அசாத்தியம் தான்.' என்று அவளது உதடுகள் மெதுவாக முணுமுணுத்தன.
அவள் வேகமாக மீதமிருந்த வரிகளை வாசித்தாள்.
"அவனை தேடி என்னிடம் கேட்டு வந்தவங்க...
இன்னைக்கும்... 'அவன் உயிரோட இருக்கானா.?'ன்னு தான் கேக்கறாங்க. நான் எவ்வளவோ 'எனக்கு தெரியாது'ன்னு சொன்னாலும்... நம்பவே மாட்டேங்கறாங்க.
நான் பொய் சொல்றேன்னு நினைச்சு... தினமும் தினமும் என்னை சிதைத்து சித்ரவதை பண்ண ஆரம்பிச்சுட்டாங்க.
இனிமேலும் வாழ என்னால முடியாது. நீ உயிரோட இருந்தாலும் சரி... இல்லாட்டியும் சரி... என்னை மன்னிச்சிடு. அடுத்த ஜென்மத்துல...
ஒரு சாதாரண பொண்ணா பிறந்து... உன்னை நல்ல சூழ்நிலையில சந்திச்சு...
உன்னோட மட்டும் வாழணும்.
I miss you... I love you... Forever.. -Harini" என்று கடிதம் முடிந்தது.
ஷ்ரத்தாவின் கைகள் நடுங்கின.
மெதுவாக அந்தக் கடிதத்தை மடித்து வைத்தாள்.
"ஹரிணியின் இறப்பு விபத்து இல்ல... ஹரிணி... வந்தவர்களிடம் தன் கற்பை பறிக்கொடுத்து வாழ்வதை விட, சாவதே மேலென இறந்துள்ளாள்.' என்று புரிய துவண்டாள். இன்னும் எத்தனை பேரை இழந்து தான் தவிக்க வேண்டுமென கண்ணீரில் கரைந்தாள்.
அழுகை கரைத்து நிமிர்ந்த போது, ஷ்ரத்தா மனதில் ஒரே கேள்வி மட்டும் சுழன்றது.
'அவன் உயிரோட இருக்கானா?'
அந்தக் கேள்வியை...
ஹரிணியிடம் யார் கேட்டார்கள்? ஏன் கேட்டார்கள்?
அதற்கு ஹரிணியால் பதில் சொல்ல முடியவில்லையா.?
அல்லது... அவளுக்கே உண்மை தெரியவில்லையா? என்று நினைக்க நினைக்க அறை முழுவதும் அமைதியோடு ஷ்ரத்தா தலைவிண்ணென்று வலித்தது
இதில் தியா கண்ணை கசக்கி 'அம்மா' என்று எழவும் ஷ்ரத்தாவின் மனதிற்குள் புதிய புயல் ஒன்று உருவாகத் தொடங்கியிருந்தது.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
தகிக்கும் நிலவொன்று.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 29)
உண்மையிலயே, ஹரிணியோட நிலைமை யாருக்குமே வரக் கூடாது, தனக்கான வாழ்க்கையை வாழவும் முடியாமல், சாகவும் முடியாமல் செத்து செத்து பிழைச்சிருக்காள். அதுவும் வினோத் காதலை துறக்கவும் முடியாமல், விலக்கி வைக்கவும் முடியாமல், மறைக்கவும் முடியாமல் ரொம்பவே தவிச்சிருக்காள், தனிச்சிருக்காள். அது மட்டும் இல்லாமல் நிதைக்கும் சத்ரியனை கேட்டு வந்தவங்களால செக்ஸூவல் ஹாரஸ்மெண்ட் வேற அனுபவிச்சிருக்காள். சித்ரவதை தாங்க முடியாமல் சூசைட் வேற பண்ணியிருக்காள்.
இதெல்லாம் யாரால, சத்ரியனாலத்தான். அவன் வாழ்ந்தானோ இல்லையோ, ஆனால் அவனால மத்தவங்க வாழவே இல்லைன்னுத் தெரியுது. அந்தவகையில சத்ரியன் உயிரோட இல்லாமல் இருக்கிறதே நல்லதோன்னுத் தோணுது.
ஏன்னா, ஹரிணிக்கு வாய் தான்
இல்லை, ஆனால் சத்ரியனுக்கு
கண்ணும் வாயும் இருந்ததுத் தானே. அவனாலத்தானே இத்தனை கஷ்டம், ஆனா அவனுக்கு மட்டும் ரெண்டு புள்ளைங்க...? என்னவொரு முரண்பாடு டா ?
😊😊😊
CRVS (or) CRVS 2797
Harini oda life kodumai nu ore varthai la kooda solla mudiyala andha alavuku kastam mattumae irundhu iruku ava life ennaiku Chathriyan nu oruthan ah meet pannalo annaiku mattum illa ma athuku appuram yae irunda nall ah than irundhu iruku tho ippo vum avan ah ketu aval ah thinam.oruthan vandhu sexual harassment panni irukan ava last ah ipadi naragatha anubavaikirathu saavu yae mel nu decide pannita avaluku vinoth oda kadhal kedaichum atha aval ah la accept pannavum mudiyama avoid pannavum mudiyama athuvum avaluku kastam than kuduthu iruku really iva rombha pavam than.pa
-
தகிக்கும் நிலவொன்று-50 (முடிவுற்றது)
2 weeks ago
-
தகிக்கும் நிலவொன்று-49
2 weeks ago
-
தகிக்கும் நிலவொன்று-48
2 weeks ago
-
தகிக்கும் நிலவொன்று-47
2 weeks ago
-
தகிக்கும் நிலவொன்று-46
2 weeks ago
- 25 Forums
- 330 Topics
- 1,588 Posts
- 1 Online
- 420 Members
