மதுர ஜில்லா... மச்சானே!-56
அத்தியாயம்-56
இனியன் மாடியில் இருந்து கீழே இறங்கியபோது அவன் முகத்தில் சில நிமிடங்களுக்கு முன் இருந்த சந்தோஷத்தின் சுவடு கூட இல்லை.
மதுராவிடம் சொல்ல வேண்டும் என்று அவ்வளவு ஆர்வமாக ஓடி வந்திருந்தான். வங்கிக் கடன் ஒப்புதலாகி விட்டது. இன்னும் ஒரு வாரத்தில் பணம் கைக்கு வந்துவிடும். அதன் பிறகு தான் கனவு கண்ட தொழில் தொடங்கப் போகிறது.
அதை முதலில் அவளிடம் சொல்ல வேண்டும் என்ற குழந்தைத்தனமான மகிழ்ச்சி.
ஆனால் அவளின் ஒரு வார்த்தை கூட கிடைக்கவில்லை. 'மன்னிச்சிட்டேன்.' என்று கூட அவள் சொல்லவில்லை.
'நான் கீழே போகணும். எந்திரிங்க...' அந்த ஒரு வாக்கியமே காதுக்குள் திரும்பத் திரும்ப ஒலித்தது.
அறைக்குள் வந்து கதவில் சாய்ந்தவன், ஹேங்கரில் இருந்த சட்டையை மீண்டும் எடுத்து அணிந்தான். கண்ணாடி முன் நின்று தன் முகத்தைப் பார்த்தான்.
'இன்னும் என்னிடம் பயப்படுறா' என்று சுணங்க, 'பயப்படாம எப்படி இருப்பா...? நீ பண்ணது அப்படி.' என்றது மனசாட்சி. ஆழமாக மூச்சை இழுத்தவன், கண்ணாடியில் தெரிந்த தன் முகத்தை வெறித்துப் பார்த்தான்.
'அவளை மன்னிக்கச் சொல்லறதுக்கு எனக்கு என்ன தகுதி இருக்கு...' அந்த எண்ணமே அவனை சோர்வடையச் செய்தது.
சில நிமிடங்களில் கீழே இறங்கினான். சமையலறை முழுவதும் உளுந்தபருப்பின் வறுத்த மணம் பரவியிருந்தது.
மிக்சியில் மிளகாய், மல்லி, என்று இட்லி பொடி அரைத்திட உளுந்தை வறுத்துக் கொண்டிருந்தாள் மதுரா.
அவளது முகம் அமைதியாக இருந்தாலும்... மனம் மட்டும் அமைதியாக இல்லை.
'உண்மையாவே மச்சான் மாறிட்டாரா...? அன்னைக்கு...
வெத்து பத்திரத்தையே என் கண்ணு முன்னாடி கிழிச்சு போட்டாரு... இப்போ மன்னிப்பும் கேட்டுட்டாரு...
குழந்தை போனதுக்குப் பிறகு ஒரே ஒரு வேளை சாப்பிட்டு அவருக்கு அவரே தண்டனை கொடுத்துக்கிட்டாரு... சிலதை மறந்து அவரா நடமாடி என்னோட பேசிட்டு இருக்கார்.
இன்னைக்கு பிசினஸ் ஆரம்பிக்கப் போறேன்னு சந்தோஷமா சொல்ல வந்தாரு...
இதெல்லாம் நடிப்பா...?' என்றவள் மிக்சியின் சுவிட்சை போடாமல் நின்றாள்.
வேல்விழியோ 'அம்மாடி என்ன யோசனை" என்று கேட்க, "ஒன்னுமில்லை அத்தை" என்று சுவிட்சை போட்டு அரைக்க ஆரம்பித்தாள்.
'இல்ல... அவரு நடிக்கற மாதிரி தெரியல... ஆனா...
நான் நம்பிட்ட பிறகு, மறுபடியும் பழைய மாதிரி ஆயிட்டா.?' அந்த எண்ணம் வந்தவுடன் உடலே நடுங்கியது.
"மதுரா..." வேல்விழியின் குரல் கேட்டதும் திடுக்கிட்டு திரும்பினாள்.
"என்னத்தை அவ்வளவு யோசிச்சிட்டு அரைக்கற...?"
"ஒ..ஒன்னுமில்லை அத்தை.. இட்லி பொடி" என்றார்
'அப்படியா.. அதெல்லாம் அரைப்பட்டிருக்கும். ரொம்ப நேரமா மிக்சி சுத்துது பாரு' என்றதும் அணைத்து விட்டாள்.
வேல்விழி மதுராவை ஒரு கணம் கவனித்தார்.
"இனியன் எங்க... வெளியே போயிட்டானா? தூரிகாவை கூட்டிட்டு வர" என்றதும் அங்கும் இங்கும் பார்த்து "தெரியல அத்தை..." என்றாள்.
வேல்விழி எதுவும் பேசாமல் வெளியே சென்றார்.
மதுரா மட்டும் மீண்டும் இட்லிபொடியை வேறு டப்பாவிற்கு மாற்றி வைத்தாள்.
அதே நேரம்... கல்லூரி வளாகத்தின் மாலை வேளை.
காலேஜ் மூடவும் மாணவர்கள் கூட்டம் கலைந்து சென்றனர். பஸ் ஸ்டாபின் ஒரு மூலையில் வசந்த் அமர்ந்திருந்தான். அவனுக்கு எதிரே பிரபு இருந்தான்.
"டேய்... பிரபு சரக்கடிப்பியா? இன்னிக்கு நம்ம முருகனோட ட்ரீட் இருக்கு வாயேன்" என்று இழுத்து ''அண்ணா அண்ணா இல்லண்ணா வீட்ல திட்டுவாங்க" என்றான்.
"டேய் குடிப்ப தானே" என்று கேட்க தலையாட்டவும் சரி அப்ப படத்துக்கு போயிட்டு சாப்பிட்டு தண்ணி அடிக்கலாம்." என்றனர்.
"என்ன விஷேஷம்னா?" என்று கேட்டவனிடம், "முருகன் ட்ரீட்டா." என்று கூறினார்கள்.
சினிமா தியேட்டரில் டிக்கெட் எடுத்து படம் பார்த்தனர். ஏன் எதற்கு என்று தெரியாமல் வசந்தும் அவன் கூட்டாளி முருகன் அழைக்க வேறு வழியின்றி சென்றான் பிரபு.
நடுவே இடைவெளியில் சிகரேட் பற்ற வைத்து, "ஆமா நிலானி என்ற புள்ளைய லவ் பண்ணறியாமே" என்று கேட்க வெட்கப்பட்டான்.
"ஆமா அண்ணா." என்றான் பிரபு.
"எப்படிடா பிடிச்ச?" என்றதும், பிரபுவோ "அட பெரிசா ஒன்னும் பண்ணலை அண்ணா. அதுக்கு நம்ம சீனியர் எழிலரசன் அண்ணவை பிடிக்காது போல எப்ப பாரு கிளாஸுக்கு வந்துட்டு முனங்கும். ஒரு நாள் என்ன முனங்கறனு பேசினேன். ஒன்னுமில்லைனு திரும்பிக்கிச்சு. அப்பறம் அடிக்கடி பேசுவேன். காலேஜ் சேர்ந்ததும் உம்முனு சுத்தற ஏன்னு கேட்க பேசவே பேசாது. கொஞ்ச நாள்ல லவ் பண்ணறேன்னு சொன்னேன். அது அன்னிக்கு கம்முனு போயிடுச்சு. அப்பறம் உம்முனு சுத்துச்சு. ஒரு நாள் திரும்ப போய் ஏன் என்னை லவ் பண்ண மாட்டேங்கறனு கேட்க என்னை பிடிக்கலையானு கேட்க, நாளைக்கு யோசிச்சு சொல்லறேன்னு போயிடுச்சு. அப்பறம் அதுவா அடுத்த இரண்டாவது நாள் லவ் பண்ணறேன்னு சொல்லுச்சு." என்று கூற தியேட்டரில் படம் போடவும் படம் பார்க்க ஓடினார்கள்.
மீண்டும் இரவு பரோட்டா கடையில் பரோட்டாவை பிச்சி திண்று, குடிக்க மது பான கடைக்கு வந்தனர். "இன்னிக்கு வரலைனு வீட்ல சொல்லிட்டியா" என்று வசந்த் கேட்க, "ஆங் சொல்லிட்டேன் அண்ணா. பிரெண்ட்ஸ் வீட்ல தங்கிட்டு நாளைக்கு வர்றேன்னு சொல்லிட்டேன்." என்றான்.
முருகனோ சரக்கை ஊற்றி கொடுத்து, "ஏன்டா.. அந்த காதலிக்கற பிள்ளை நாளைப்பின்ன உன்னை கழட்டி விட்டா என்ன பண்ணுவ?" என்று கேட்க, பிரபுவோ அந்த பயம் இருந்துச்சுனா அதான் உடனே போய் நானா ரெஜிஸ்டர் மேரேஜிக்கு தேவையானதை எல்லாம் ரெடி பண்ணி, அவளிடம் கையெழுத்து வாங்கி வச்சிருக்கேன். பக்காவா ரெஜிஸ்டர் மேரேஜ் ஆனதாக சீல் எல்லாம் பண்ணிருக்கேன். நிலானி கூட சட்டபூர்வமா கல்யாணமாகிடுச்சுனு நம்பறா. இனி கழுட்டி விடமுடியாதுல" என்றான். உடனே வசந்த் முருகன் தலை தூக்கினான்.
முருகனோ "ஏன்டா இதெல்லாம் பக்காவா பண்ணிருக்க. மூளைக்காரன் டா. ஆனா எவ்வளவு நாளைக்கு இப்படியே பார்த்துட்டு பேசிட்டு சுத்தப்போற." என்றான்.
"அண்ணே.. அவ படிக்கணும். நானும் படிக்கணும். முதல் வருஷமில்ல" என்றான்
அதை கேட்டு வசந்த் சிரித்தான்.
"அடடா... பெரிய தியாகி. அதான்டா அவன் நடுவுல பூந்துட பார்க்கான்" என்று கூறவும் பிரபு "யாரு அண்ணா?" என்று கேட்டான்.
"அதான்டா.. எழிலரசன். அவ பெரிய மாமன் மகன். அவனுக்கு தான் வீட்ல கட்டி தர்ற மாதிரி பேசியிருக்காங்களாம்." என்று கூற, "ஆமா அண்ணா... நிலானி கூட சொல்லுச்சு." என்றான்.
"அப்போ பயப்படாம இருக்க" என்று கூறினான் வசந்த்.
பிரபு அமைதியாக இருந்தான்.
முருகனோ இன்னும் அருகே நெருங்கினான். "டேய்... நேத்து அவ வீட்டுல கல்யாணம் பண்ணுவதா பேசிக்கறாங்க." என்றதும் பிரபு அதிர்ச்சியாக அவனைப் பார்த்தான்.
"என்ன அண்ணா சொல்லற.?" என்று போதை தலைக்கு ஏறி கேட்டான்
"ஊர்ல பேசிக்கிறாங்கடா..." என்று முருகன் கூற,
"பொய்யா சொல்லாத." என்றான்.
"நம்பலையா...? அவ அக்காவை எப்படி அவசரமா கட்டி வச்சாங்க... அதே மாதிரி இவளையும் எழிலரசனுக்கு கட்டி வச்சிட பிளான்" என்றதும்
பிரபுவின் முகம் சுருங்கியது.
"அப்படியெல்லாம் நடக்காது..."
"நடக்காதுன்னு யார் சொன்னா...?" வசந்த் வார்த்தையை நிறுத்தினான்.
"அவன் நிலானி பின்னாடியே சுத்துறான்னு காலேஜ்ல பேசிக்கிறாங்க. தெரியும்ல" என்றதும் பிரபுவின் புருவம் சுருங்கியது.
"எங்க போனாலும் அவன் பார்வை நிலானி மேலதானாமே." பிரபு சற்று யோசித்து பார்த்தான்.
சில நாட்களாக எழிலரசன் தான் நிலானியை அழைத்து வந்தான்.(மதுரா ஹாஸ்பிடல்ல இருந்தப்ப)
அதை பற்றி கேட்டதற்கு அக்காவுக்கு அபார்ஷன் ஆகிடுச்சு. வீட்ல நான் மட்டும் சமைச்சேன். அப்ப தான் இங்க கொண்டு வர உதவினார். எனக்கு பயமாயிருக்கு பிரபு. அப்பா அம்மா அவருக்கு என்னை கட்டி வச்சா நான் வாழ மாட்டேன்.' என்று நிலானி சொன்னதை நினைத்து பார்த்தான்.
அந்த நேரமெல்லாம் நிலானி தோழிகளோடு நடந்து சென்றால்
எதிர்புறம் இருந்து எழிலரசனும் நண்பர்களோடு வரும் போது நிலானியை கவனித்தான்
அதை வசந்த்தும் கவனித்திருந்தான்.
"இன்னும் கொஞ்ச நாள் போனா... உன் காதலையும் பிரிச்சிடுவாங்க.. அவளை வேற எழிலரசனுக்கு கட்டி வச்சிடுவாங்க." என்றதும்
பிரபு கோபமாக எழுந்தான்.
மாலை சூரியன் மேற்கே சாய்ந்து, மதுரை வானம் மஞ்சள் நிறத்தில் கரைந்து கொண்டிருந்தது.
நிலானியின் வீட்டில் அந்த நேரம் அமைதி நிலவியது.
வீட்டு வாசலில் துளசி மாடம் அருகே அமர்ந்திருந்த இளையமதி, காய்கறி நறுக்கிக் கொண்டிருந்தார்.
கல்யாணசுந்தரம் மாலை ஆனதால் வீட்டின் முன் கோழிகளை பிடித்து அடைத்தார்.
வீட்டுக்குள் இருந்த நிலானி, மறுநாள் கல்லூரிக்கு தேவையான குறிப்புகளை எடுத்துக் கொண்டு படித்துக் கொண்டிருந்தாள்.
அப்போது... வீட்டு வாசலில் தடுமாறியபடி பிரபு வந்து நின்றான்.
"நி... நிலானி..." என்று குடிபோதையில் உளறிய குரல் கத்தினான்..
இளையமதி திரும்பிப் பார்த்ததும் அதிர்ந்தார். "யாருப்பா நீ?" என்று எழுந்து நின்றார்.
பிரபு சுவரைப் பிடித்தபடி சிரித்தான். "அத்தை... நா... நான் பிரபு... நிலானியை... காதலிக்கிறேன். அவளை... வரச் சொல்லுங்க. பேசிட்டு போகணும்" என்று வார்த்தைகள் எல்லாம் தடுமாறின.
அந்த நேரம் கல்யாணசுந்தரம் வேகமாக வந்தார். "யாருடா நீ?என்ன குடிச்சிட்டு வந்து என் வீட்டுல நின்னு உளறுற?" என்று கர்ஜித்தார்.
அவரது சத்தம் கேட்டு உள்ளிருந்து நிலானியும் வெளியே வந்தாள்.
வாசலில் நின்றிருந்த பிரபுவின் கோலத்தைப் பார்த்தவளுக்கு உடம்பே நடுங்கியது.
கண்கள் சிவந்து. சட்டை கசங்கிப் போய் குடிபோதையில் தடுமாறியபடி நின்றான்.
அவளைப் பார்த்ததும் "நிலானி... நாம காதலிப்பதை உங்க வீட்ல சொல்லு. அப்ப தான் உனக்கு வேற எவனையும் கட்டி வைக்க மாட்டாங்க." என்று குழறலாக பேசினான்.
"பிரபு தயவு செய்து போ." என்று நிலானி கூற, "என் வீட்டுல நான் சொல்லிக்கறேன். நீ என்னோட வந்துடு. உனக்கு தான் இங்க இருக்கறதே பிடிக்கலைனு சொன்ன" என்று கைநீட்டினான்.
நிலானி பயத்தில் இரண்டு அடி பின்னோக்கி நகர்ந்தாள்.
அக்கம் பக்கத்து வீடுகளில் இருந்தவர்கள் நாடகம் பார்ப்பதால் இங்கே இந்த அக்கப்போரை வந்து எட்டிப் பார்த்திடாமல் போனார்கள்.
அதுவும் ஊருக்கு சற்று தள்ளி தான் தனி வீடு அமைந்திருக்கும்.
கல்யாணசுந்தரத்திற்கு அப்படியும் கூட அவமானமாகிப் போனது.
"நிலானி என்னதிது. அய்யோ... காதலா... காலேஜ் போயே கொஞ்ச நாள் தானடி ஆகுது.
டேய்... முதல்ல வெளியே போடா. என் பொண்ணு பேரை சொல்லிட்டு இங்க நிக்காத." என்று தள்ளினார்.
ஆனால் குடிபோதையில் இருந்த பிரபு மீண்டும் முன்னே வந்தான்.
"நான் அவளை லவ் பண்ணுறேன்... அவளும் என்னை... என்று சொல்லி முடிப்பதற்குள் கல்யாணசுந்தரத்தின் காலால் அவனை எட்டி உதைத்தார்.
ஒரு நொடி தடுமாறிய பிரபு மீண்டும் சிரித்தான்.
"அடிச்சா... காதல் போயிடாதுங்க..." என்று மீண்டும் உளறினான். இதில் நிலானியோ அப்பா... அவனை எதுக்கு எட்டி உதைக்கறிங்க." என்று வந்தாள். இளையமதி மகளை பிடித்து இழுத்துக் கொண்டார்.
"அம்மா.. அவனிடம் போக சொல்லறேன் என்னை விடு" என்று கையை உதறி, "பிரபு முதல்ல வீட்டுக்கு போ. எதுனாலும் நார்மலா இருக்கறப்ப பேசுடா" என்று கூற, 'என் பொண்டாட்டி சொல்லறதை நான் கேட்டுக்கறேன்" என்று சமாதானப்படுத்தியதாக சென்றான்.
பிரபுவும் தடுமாறியபடி அங்கிருந்து சென்றான்.
வாசல் கதவை மூடியதும், இளையமதி கதறி அழ ஆரம்பித்தார்.
"அய்யோ... என் வயிற்றுல பிறந்தவளை... நல்ல இடத்துல கட்டிக்கொடுக்கணும்னு நினைச்சேன்... இப்ப குடிகாரன் வீட்டுக்கு வந்து இப்படி அவமானப்படுத்திட்டு போறானே..." என்று மார்பில் அடித்துக் கொண்டார்.
நிலானியும் கண்ணீரோடு நின்றாள். இந்த பிரபு இன்று ஏன் இப்படி குடித்துவிட்டு வந்து தொந்தரவு செய்கின்றான். இப்படி செய்ய மாட்டானே.' என்று எதையும் யோசிக்க இயலாத நிலையில் அன்னை தந்தை முன் நின்றாள்.
கல்யாணசுந்தரம் கோபமாக ஒருத்தி வாழ்க்கையை நாங்களே பாழாக்கிட்டோமேனு கவலையில இருக்கோம். இதுல நீ வேற குடிக்காரனை காதலிச்சிட்டு சுத்தற. நாளையிலிருந்து காலேஜும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம் வீட்டுலயே இரு." என்றார்.
"அப்பா..." என்று நிலானி அதிர்ச்சியடைந்தாள்.
"இன்னும் ஒரு வார்த்தை பேசாத. படிக்க அனுப்பினா... இப்படிதான் ஊர் மேய போவாங்களா?" என்று கடுமையாகக் கூறிவிட்டு உள்ளே சென்றார்.
அந்த இரவு முழுவதும் அந்த வீட்டில் யாருக்கும் நிம்மதியாக உறக்கம் வரவில்லை.
மதுராவிடம் சொல்லவும் மனமின்றி யாரிடமும் பகிராமல் மறைக்க முயன்றனர்.
மறுநாள் அதிகாலை கல்லூரிக்கு செல்ல தயாரான தூரிகா வழக்கம்போல் இனியனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்.
அதே நேரம் நிலானி வீடு கூடுதலாக அமைதியாக இருந்தது.
கல்லூரிக்கு செல்ல புத்தகப்பையை எடுத்தவளை கல்யாணசுந்தரம் தடுத்தார்.
"எங்கயும் போகக்கூடாது. இன்னைக்கு வீட்டுலயே இரு." என்றார்.
நிலானி அழுகையை அடக்கிக் கொண்டு அறைக்குள் சென்றாள்.
சில நிமிடங்களில் பிரபு அங்கே வந்திருந்தான். கண் விழிந்ததும் அவனிடம் கல்யாண சுந்தரம் எட்டி மிதித்ததை வீடியோவாக எடுத்ததை முருகன் போட்டு காட்ட, 'நேற்று நடந்ததை ஒன்னும் பாதியுமாக நினைவில் இருந்தவனுக்கு அந்த வீடியோ எரிச்சலை தந்தது. நேராக முகம் கூட கழுவாமல் அப்படியே நிலானி வீட்டிற்கு வந்துவிட்டான்.
கல்யாணசுந்தரரிடம் "என் நிலானியை அனுப்புங்க. அவ என் பொண்டாட்டி' அதுயிதென உளற, நிலானியோ செய்வதறியாது நின்றாள்.
அவள் காதலித்தால் அதற்காக இப்படி வந்து நின்றால் என்ன செய்வதென்றும், அதை எப்படி கையாள வேண்டுமென தெரியாமல் முழித்தாள்.
"இப்ப எதுக்கு இப்படி பண்ணற பிரபு. படிக்க வேண்டாமா? இதென்ன புதுசா நடந்துக்கற" என்று அனுப்ப முயன்றாள். அவனோ 'உங்கப்பா எட்டி மிதிச்சிட்டார். நீயும் காலேஜ் வரலை. அப்படியே வந்தாலும் எழிலரசனுக்கு உன்னை கட்டி கொடுப்பாங்களா. அப்ப நான் என்ன பண்ணறது. இல்லை.. நமக்கு ரெஜிஸ்டர் மேரேஜ் ஆகிடுச்சு தெரியும்ல.. நீ எங்க வீட்டுக்கு தான் வரணும்" என்று வசந்த் முருகன் இருவரின் போதனை இங்கே சரியாக பேசினான்.
இளையமதி ரெஜிஸ்டர் மேரேஜ் என்றதெல்லாம் கேட்டு மனம் தாளாமல், கைப்பேசியை எடுத்தார்.
முதலில் யாருக்கு அழைப்பது என்று யோசித்தவர். இறுதியில் மீனாட்சியின் எண்ணை அழுத்தினார்.
"மதினி..." என்று குரல் உடைந்தது. அந்த பக்கம் மீனாட்சி பதறினார்.
"என்ன மதினி? என்னாச்சு?" என்று கேட்டார்.
"நிலானி... நிலானியால பெரிய பிரச்சனை..." என்று அழுதபடியே பேச ஆரம்பித்தார்.
அந்த நேரம் அருகில் இருந்த அதியமானும் திரும்பிப் பார்த்தார்.
"என்னம்மா? தங்கச்சி ஏன் அழற" என்று கேட்டார்.
மீனாட்சி போனை ஸ்பீக்கரில் போட்டார். இளையமதியின் அழுகை மட்டும் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது. இதில் பிரபுவும் கல்யாண சுந்தரமும் கத்துவது பின்னால் கேட்டது.
"இந்த நிலானியை எவனோ ஒருத்தன் காதலிப்பதா வந்திருக்கான். கல்யாணம் பண்ணிட்டேன்... என் கூட அனுப்புனு நிற்கறான். இந்த கழுதை காதலிச்சுருக்கும் போல. அய்யோ.. அகிலன் இல்லையா அண்ணா. நீங்களாவது உடனே வாங்களேன்" என்று அழுதார்.
அந்த நேரம் இனியன் வரவும், இனியனிடம் அதியமான் விஷயத்தை சொல்ல, "சரி சிரி சித்தப்பா பதட்டப்படாம போகலாம். தூரிகா நீ வீட்ல இரும்மா காலேஜ் போக வேண்டாம்." என்று கூறி சித்தப்பாவை அழைத்து நிலானி வீட்டிற்கு சென்றான்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்
ரெஜிஸ்டர் பண்ணி வாசிங்க
மதுர ஜில்லா மச்சானே !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 56)
படிச்சு டிகிரி பட்டம் வாங்குறாங்களோ இல்லையோ, ஆனால் காதலிச்சு ஓடுகாலிங்கிற பட்டம் வாங்க துணிஞ்சிடுறாங்க.
மெச்சூர்ட் இல்லாமல் காதலிச்சு, அதுவும் ஒரு டிகிரியை கூட வாங்காமல் என்னத்தை வீட்டை விட்டு ஓடி கல்யாணம் பண்ணி வாழ்ந்து கிழிக்கப்போறாங்களோ தெரியலை. இதுல ஒரு குழந்தை பிறந்திட்டால் நிச்சயமா ஏத்துப்பாங்க என்கிற குருட்டு நம்பிக்கை வேற. ஏத்துக்கலைன்னா என்ன பண்ணுவாங்களாம்..? ஏன் தான் பெத்தவங்க கனவுகளையும் சிதைச்சு, தங்களோட லட்சியப் பாதையையும் விட்டு விலகி, கஷ்டத்தை இவங்களே விலை கொடுத்து வாங்கிக்கிறாங்களோ தெரியலை போங்க. வாழ்க்கை எப்பவும் ஒரே மாதிரி இருக்கிறதில்லை, இருக்க விடறதும் இல்லை, இதை ஏன் புரிஞ்சிக்க மாட்டேங்குறாங்களோ தெரியலைப் போங்க.
அடேயப்பா ! இந்த இனியன் அநியாயத்துக்கு நல்லவனாயிட்டு வரானே. எங்களுக்கு இந்த இனியனை ரொம்பவே பிடிச்சிருக்கு அந்த அகிலனை விட.
😀😀😀
CRVS (or) CRVS 2797
-
மதுர ஜில்லா... மச்சானே!-28
7 days ago
-
மதுர ஜில்லா... மச்சானே-43
3 weeks ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-67
3 weeks ago
-
மதுர ஜில்லா... மச்சானே-70 (முடிவுற்றது)
3 weeks ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-39
3 weeks ago
- 25 Forums
- 330 Topics
- 1,589 Posts
- 1 Online
- 420 Members
