Forum

மையலிட்ட சிற்பமே-2
 
Notifications
Clear all

மையலிட்ட சிற்பமே-2

1 Posts
1 Users
1 Reactions
246 Views
(@praveena-thangaraj)
Posts: 180
Member Admin
Topic starter
 
[#2]

அத்தியாயம்-2

  அன்னம் முதுகில் போட்டு இழுத்து வர, குடத்தை தூக்கிக்கொண்டு கண்ணீரோடு தவமலர் அடுப்படியில் வைத்தாள்.

  "ஒரு வாரத்துல கல்யாணம் பண்ணிட்டு ஜம்முனு போகலாம்னு உன் தாய்மாமனிடம் நீயா போய் கல்யாணம் பண்ணி வைக்க கேட்டிருக்க. அங்க உன்னை தாலி கட்டி கட்டிக்க போறவன், இரண்டு மாசம் கொஞ்சி குலாவி, சலிச்சு போய், வரதட்சனையும் இல்லை, சோறும் ஆக்க வரலை, அதுயிதுனு காரணம் சொல்லி, மறுபடியும் வாழாவெட்டியா வந்து நிற்ப. அதுக்கெதுக்குடி கல்யாணம். ஊரை கூட்டி செலவு தான்.
   இங்க வேலை ஏவுறேன்னு தானே ஓடப்பார்க்க? அங்க மாட்டை வளர்க்கணும், விவசாயத்துக்கு கூடமாட ஒத்தாசையா இருக்கணும். அப்ப மட்டும் வேலை இருக்காதா? அடியேய்... இங்க கஷ்டப்பட்டாவது பதினென்னாவதும் பனிரெண்டாவதும் படிச்சிருக்கலாம். கல்யாணம் பண்றதால அதுவும் போச்சு" என்று புலம்பினார்.

திருமணம் அடுத்த வாரம் இருக்க, அழகான வார்த்தையால் வாழ்த்து தெரிவித்த அன்னத்தை கண்டு மனம் நொந்தாள். பிறகு எப்படியும் இதுபோல வாழ்த்தை தான் அன்னம் உரைப்பார் என்று அறிந்தது தானே. எண்ணம் போல் வாழ்வு. அன்னத்திற்கு தவமலர் திருமணமாகி சென்றுவிட்டால் எல்லா வேலையும் அவர் தலையில் விழுமென்ற கசப்பு.

   கண்ணீரை துடைத்து இரவுக்கு சோறு பொங்க அரிசியை கழுவினாள் தவமலர்.

  ஆவுடையப்பன் இரவு தான் வந்தார். லதா சுரேஷிற்கு படிக்க எழுத என்று நேரம் கழியவும் தவமலர் புத்தகத்தை ஏக்கமாய் பார்த்து முடித்தாள்.
    
  அன்னம் சொன்னது போல இங்கே அடி உதை வாங்கினாலாவது பள்ளி படிப்பை முடித்திருக்கலாம்.   
   அங்கு சென்றும் இதே நிலைமை வந்தால் என் செய்வது என்று விட்டத்தை பாத்தாள்.   

   தன் அன்னை ராசாத்தி நெருப்பில் புழு போல துடித்து துவண்டதை எண்ணினாள். இப்பொழுதும் உடல் தூக்கி வாறி போட்டது.

தலையெழுத்து என்று ஒன்று இருந்தால் நாம் என்ன செய்ய முடியும்?
   முன்பெல்லாம் தாய் இறந்ததிற்கு காரணம் தெரியாது. ஆனால் காரணம் தெரிந்தப்பின் தந்தையோடு இருப்பதை அறவே வெறுக்கின்றாள்.
  முன்பு தாய்மாமா அழைத்த பொழுதே கூட சென்றியிருக்கலாமோ? அந்த நேரம் அப்பா மீது அன்பு இருந்தது. இப்பொழுது கூட அந்த அன்பு மாறவில்லை. அவளிடம் அன்போடு தான் இன்னமும் அவரும் இருக்கின்றார்.

சொல்லப்போனால் ஏதேனும் திண்பண்டம் வாங்கி வந்து அதை இவளுக்கு தராமல் லதா சுரேஷே சாப்பிடுவதால், தனியாக ஒளித்து மறைத்து வாங்கி தருவார்.
மகள் என்ற அந்த அன்பெல்லாம் இன்னும் உண்டு ஆவுடையப்பனுக்கு.
 
   ஏதேதோ எண்ணங்கள் ஊர்வலத்தில் நாட்களை கடத்த, திருமண நாளும் வந்தது.
 
    மஞ்சள் நீராட்டு விழாவில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள பெண்ணாக தான் தவமலர் தோற்றம் இருந்தது.
  ஒல்லியாக ஒடிசலாக, குச்சிக்கு பிறந்த வீட்டு சேலை அணிவித்து, கனகாம்பரம் மல்லிப்பூ சூடி கிராமத்திற்கே உரிய திருமணமாக காட்சித்தெரிய, வந்தவர்களில் வெத்தலை பாக்கு சுண்ணாம்பு என்று கதையளக்க, சிறுவர் சிறுமிகள் ஓடிப்பிடித்து விளையாட, "அதெல்லாம் தவமலர் சீலை கட்டினா பெரிய பொம்பள கணக்கா இருக்கா" என்று வயதில் மூத்தவர் சேலை கட்டிய பெண் என்றாலே சொல்லும் வார்த்தையை ஆரம்பிக்க, "எக்கா... அவ அம்ம ராசாத்தி மாதிரி இருக்கா. அவ கண்ணாலத்துல இப்படி தான் இருப்பா. அப்படியே அம்மா சாயலு" என்று கண்ணீர் வடிக்க, ஒரு கூட்டமோ அன்னை இல்லாத பெண்ணாக, ராசாத்தி இப்பொழுது தான் இறந்தது போல பேச ஆரம்பித்தனர். அதை கேட்டபடி உச்சுக் கொட்டவும் சிலர்.

"மக கல்யாணத்தை பார்க்க கொடுப்பினை இல்லை பார்றேன். மண்ணெண்ணெய் ஊத்தி கொளுத்திக்கிட்டா." என்று பேச, ராசாத்தி இறப்பை பற்றி அறியாத கூட்டமோ திகில் கதை கேட்பது போல கன்னத்தில் கை வைத்து சுவாரசியமாக கேட்டார்கள்.

"அட தவமலருக்கு அப்ப சின்னப்பிள்ளை விவரம் பட்டும் படாமலும் தெரியற வயசு, அம்போனு விட்டுட்டு போயிட்டா. எல்லாம் இந்தா அந்த சிறுக்கி தான் மயக்கியது. ஆவுடையப்பனும் இப்படி தூரோகம் பண்ணுவான்னு ராசாத்தி கனவா கண்டா."

"ம்கூம்... இப்ப மட்டும் தவமலரு சின்னப்புள்ள தான்" என்று பேசினார்கள்

அதெல்லாம் செவிக்கு எட்டாத தூரத்தில் கதிரவன் மணமகன் ஸ்தானத்தில் அமர்ந்து கொண்டான். தவமலருக்கு திருமண சேலையை வழங்கியிருக்க, காயத்ரி கூறியதை அச்சு பிசகாது அதை நமஸ்கரித்து வாங்கி தவமலர் மணமகள் அறைக்கு சென்றியிருக்க, இந்த இடைப்பட்ட நேரத்தில் நிறைய கதைகள் பேசினார்கள்.

தவமலருக்கு கல்யாண சேலை அணிந்து பயத்துடன் நடந்து வந்தாள். கண்களில் மிரட்சி, பின்னாடி வரும் தாய்மாமன் சிவநேசனின் மனைவி காயத்ரி "சபைக்கு வணக்கம் வச்சிட்டு மாப்பிள்ளை பக்கத்துல உட்காரு" என்று கூறவும் நடுக்கத்துடன் புதிதாக இந்த கூட்டத்தை கண்டு நடுங்கி மேடையில் வணக்கமிட்டாள்.

   ஒல்லியாக ஒடிசலாக மாநிறம் இருந்தாலும் தவமலர் லட்சணமாக இருந்தாள். என்ன கொஞ்சம் சிரித்திருக்கலாம்.
  அதை கதிரவன் தாய் சாமுண்டிஸ்வரி தான் குறையாக உரைத்தார்.

"கொஞ்சம் சிரிச்சாப்ல நிற்க சொல்லுமா புள்ளைய" என்றதும் காயத்ரி தவமலரிடம், "மலரே சிரி" என்றதும் "பயமாயிருக்கு அத்தை. சொந்தபந்தம்னு கூட்டம் அதிகமா இருக்கு." என்றாள்.

"ஏற்கனவே 18 வயசாகலை. இதுல உம்முனு வச்சிட்டு உட்கார்ந்த. ஏதோ வேண்டாத கல்யாணம்னு நினைப்பாங்க. லேசா சிரி" என்றார்.

  "யாராவது பல்லை பல்லை காட்டறேன்னு திட்டிட்டா?" என்று அன்னம் சொன்னதால் தெளிவுப்படுத்த கேட்டாள் தவமலர்.

"ம்கூம்.... உங்க சித்திக்காரி சொன்னாளா? அதெல்லாம் லேசா சிரிக்கலாம்" என்று அறிவுறுத்தினார் காயத்ரி.

  லேசான அச்சம் நீங்கி புன்னகைத்தாள் தவமலர்.
கதிரவனுக்கு அந்த புன்னகையே போதை ஏற்றியிருக்க வேண்டும்.

  ரோஜாமாலையை நன்றாக கழுத்துக்கு பின் நகர்த்தி மாப்பிள்ளை முறுக்குடன் அமர்ந்தான்.

   கதிரவனிடம் சின்னப்புள்ள சித்திக்கு பயந்து அவங்க தாய்மாமா விரசா கல்யாணம் பண்ண ஆசைப்படறான். அந்தப்புள்ளைக்கும் உன்னை பிடிச்சிருக்காம். 17 வயசு... இரண்டு மாசத்துல 18 ஆகிடும்" என்று பூசி மொழுகி சொல்லியிருந்தனர்.

ஓரளவு கதிரவன் எதிர்பார்ப்புக்கு குறைவின்றி தவமலர் இருக்க திருமண வயசில் இரண்டு மாதம் தானே குறைச்சல் என்றதை கூட பார்த்துக்கலாம்' என்ற மிதப்பில் இருந்தான். ஊரில் யாரும் போலீஸிடம் சென்று புகார் தரமாட்டார்கள் என்ற எண்ணம்.

அவரவர் வாழ்க்கை அவரவர் பார்ப்பதற்கே சரியாக இருக்கும். அடுத்தவர் வாழ்க்கையில் அதுவும் இதுபோன்ற சமூக சீர்த்திருத்த வேலையை எல்லாம் இழுத்து வைத்து கொள்ள யாரும் முன் வராத பட்சத்தில் தவமலர் கதிரவன் மணமக்களாக மேடையில் சேரில் அமர்ந்திருந்தனர். ஆனால் தவமலருக்கு பதினெட்டு வயதை தொட ஆறு மாசம் உண்டு.
 
  இரண்டு மூன்று பேர் வயதில் மூத்தவர் பேசி முடித்து தாலி எடுத்து கொடுக்க கதிரவன் தவமலர் கழுத்தில் கட்டினான்.

   இருவர் மீதும் பூதூவல் பொழிய, கதிரவனை ஏறெடுத்தும் பாராது கலக்கமாய் இருந்தாள்.

  திலகம் வைக்க தாடை தொட்டு முகத்தை நிமிர்த்த, உம்மென்ற கலக்கமான முகத்துடன் கதிரவனை கண்டான்.

  ஏனோ அந்த நொடி ஆறுதலுக்காக கைகளை பற்றிட, தவமலரோ கதிரவனின் தீண்டலில் மயங்கி சரிந்தாள்.

  கதிரவன் அவள் கையை பற்றியதும் சில்லிட்டு இருக்க, மயங்கவும் சுதாரித்து தோளை பிடித்து அங்கிருந்த மணமக்கள் சேரில் அமர வைத்தான்.
  இரண்டு பக்கம் யானை போல இருக்க, அதில் தலைசாய்த்து தோதாக வைத்திட அதற்குள் சிவநேசன், காயத்ரி அருகில் வந்தனர்.
  "ஏம்புள்ள தவமலரு... மலரே.. ஒழுங்கா சாப்பிட்டா தானே. மயங்கி சரிந்துக்கிடக்கா" என்று குரல், "என்னத்துக்கு மயங்கணும்." என்ற குரலுடன், "மாப்பிள்ளைய பார்த்து மலரு மயங்கிட்டாப்ள" என்று ஆண்களில் சிலர் சிரிக்கவும், கதிரவனோ "காத்துயில்ல அந்த பேனை ஸ்பீடா வையுங்க" என்றார்.

''விளக்கு அமர்ந்திடுமே" என்று அந்தபக்கம் இருந்தவர்களிடமிருந்து பதில் வர, "பரவாயில்ல மதினி, புள்ள பயந்துகிடக்கு பேனை போடுங்க" என்று காயத்ரி தான் கூறினார்.

  தண்ணீர் தெளித்து குளிர்பானம் தந்து ''இப்ப எப்படியிருக்கு?'' என்று கதிரவன் கேட்க, அவன் பேசி கேட்டதும் பயந்தவளாக தலையாட்டினாள்.

  கூல் டிரிங்க்ஸ் வேறு மூடி திருகி தர, தொண்டையை நனைத்து கதிரவனிடம் திருப்பி தந்தாள்.

  முதல் முறை தான் மயங்கி விழவும், ஒரு அன்பான கைகள் தாங்குகிறது. தனக்கு என்ன ஆனதோ என்று பதட்டம்.
  உரிமையாக ஜூஸ் வேறு நீட்ட, இந்த அன்பெல்லாம் தவமலருக்கு புதிதாக இருந்தது. கூடுதலாக மனம் நிறைவடைந்தாள்.

   சில பல போட்டோ எடுத்து முடித்து பால் பழம் எல்லாம் தர, கதிரவன் தவமலரை குடிக்க, சாப்பிட வைத்தே சுவைத்தான்.

  லேசான தெளிவு தவமலர் முகத்தில் தெரிய, கதிரவன் முகம் மலர்ந்தது.

கதிரவன் கிசுகிசுப்பாய் "மறுக்கா கையை பிடிச்சா மயங்கிட மாட்டியே" என்றதும் தவமலர் கண்கள் திகைக்க, "உங்க அத்தை தாய்மாமா சிரிக்க சொல்லறாங்க" என்று சுட்டிக்காட்ட, தவமலரோ அவனையும் தாய்மாமனையும் பார்த்து முடித்தாள்.

   கதிரவன் தீண்டல் தான் தன்னை பதட்டமடைய வைத்து மயக்கப்படுத்தியதை அறிந்ததில் சிறு ஆனந்தம்.

  காதல் அரும்பும் நடுத்தர வயதென்பதால், இதெல்லாம் தவமலருக்கு பொக்கிஷ நினைவுகள்.

     திருமணத்திற்கு வந்தவர்களில் யார் கண்பட்டதோ, ராசாத்தியின் செயின் தவமலருக்கு போடாததும், வாடகை நகை மட்டுமே அணிந்திருப்பதை ராசாத்தி வீட்டின் ஆட்கள் கூற, தாய்மாமனான சிவநேசன் அதன்பிறகே அன்னத்திடம் கேட்டான்.
 
  "அதெல்லாம் என்னைக்கோ அடமானத்துல போயிடுச்சு" என்று சாவதனமாக உரைத்தாள்.
  ஒரே வார்த்தையில் இப்படி சொல்லவும் சிவநேசனோ "ஏம்மா முதல்லயே சொல்ல என்னவாம். நான் மாப்பிள்ளை வீட்ல அதை சொல்லிருப்பேன்ல" என்றார்.

"இந்தா... நீ என்கிட்ட பேசாத. என்னவோ நான் மூத்த தாரத்து பொண்ணை கொடுமைப்படுத்துவதா பேசி மாப்பிள்ளை வீட்ல கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கியிருக்க. பாவம் பார்த்து கட்டிக்கிட்டாங்க. ஆனா என்னை ஏதோ வில்லிய கணக்கா பார்க்கறாங்க. நான் ஒன்னு சொன்னா காதுல வாங்காம போகுது அந்தம்மா" என்று கதிரவனின் தாயார் சாமுண்டிஸ்வரியை வேறு குறை கூறினார்.

சாமுண்டிஸ்வரி பொண்ணு பார்க்க சென்ற சமயம் அன்னம் பட்டும் படாமலும் பேசினார்.
அன்று சிவநேசன் கூட இருந்தது காயத்ரி வரவில்லை.
  அன்று முகம் திருப்பிக் கொண்டதில் காயத்ரி திருமண காரியத்தை எடுத்து நடத்தவும் அன்னத்தை நிஜமாகவே சாமுண்டிஸ்வரி ஒதுக்கிவிட்டார்.
  அதை தான் அன்னம் சபையில் சாமுண்டிஸ்வரியிடம் குறைவாக பேசிக் காட்டின்ர்.

  சிவநேசனோ ஆவுடையப்பனிடம் வந்தவர், "என் அக்கா உனக்கு என்னல கெடுதல் செஞ்சுச்சு. அதோட நகையை தானே அது பெத்த பிள்ளைக்கு சேரணும். அதை போய் அடமானம் வச்சியிருக்க? என் அக்காவே வேண்டாம்னு தானே போன. நகை மட்டும் வேணுமோ?'' என்று பொரிந்தார்.
 
  "இங்காரு... நகை இல்லை. அவசரத்துக்கு அடமானம் வச்சேன். பிறகு மீட்டிடுவேனு நம்பினேன். அது முழுகிடுச்சு. நீ பத்து பைசா இல்லாம தானே கல்யாணம் பண்ணுவதா பேச சொன்னது. அந்த நகையை இப்ப வந்து கேட்கற" என்றார்.

சிவநேசனுக்கு மனுஷனா நீ என்ற ரீதியில் வாதம் நிகழ, கதிரவனோ "சித்தப்பா... ஒத்த நகையில் என்னவாகப் போகுது. விடுங்க விடுங்க.. எப்ப சௌரியமே அப்ப பண்ணறதா இருந்தா பண்ணுங்க. இப்ப எதுவும் வேண்டாம். கவ்யாணத்துக்கு வந்தவங்களை கவனியுங்க. முடிஞ்சதை பேசி என்ன செய்ய?" என்றான்.

சாமுண்டிஸ்வரிக்கும் சேர்த்தே உரைத்த பதில் என்றாலும் சாமுண்டிஸ்வரிக்கு கோபம் வந்தது.

சற்று முன் வரை அந்த கோபம் இல்லை. தவமலரை பார்த்து 'ஆளு தான் கருவாடு கணக்கா இருக்கா' என்று பொருமியவருக்கு மகன் தாலி கட்டி பொஞ்சாதி பக்கம் சாய்வதாக செல்ல கணவர் கண்ணனை தேடி நகர்ந்தார்.

  அவரும் "விடும்மா இதெல்லாம் இப்ப பேசி சரிப்பண்ண முடியாது. சிவநேசனிடம் பேசிப்போம்" என்று முடித்துவிட்டார்.

  கதிரவன் அவர்களை விலக்கிவிட்டு தவமலரை காண, அவளோ அழுதிடும் நிலையில் உதடு துடிக்க நின்றிருந்தாள்.

"ஏம்புள்ள இப்ப எதுக்கு விசனப்படற?' அழுறதை நிறுத்து" என்றதும் அமைதியானாள்.

   ஆனால் திருமணம் ஆனா அன்றே மாமியார் முகம் திருப்பி சென்றதை அவளுமே கவனித்தாள். காயத்ரி வேறு ''உங்க ஐயனும் சித்தியும் உனக்கு நல்லது செய்யவே விடமாட்டாங்க போல. இப்ப சம்பந்திம்மா வேற முகத்தை திருப்பிட்டு போறாங்க. என்னனு சமாதானம் செய்யறதோ" என்று சுட்டிக் காட்டியதையும் கண்டாள்.

-தொடரும்
-பிரவீணா தங்கராஜ்

https://onlinetamilnovels.com/%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%87-2/


 
Posted : June 8, 2026 3:54 pm

Scroll to Top